PDA

View Full Version : நாய்களுடன் உண்டான உறவு.......



Nanban
01-04-2004, 06:53 PM
தன் எல்லை
முகர்ந்து
ஒரு கால் தூக்கி
மூத்திரம் பெய்து
தன் எல்லை
குறித்துச் செல்லும்
நாய்களைக் கண்டு தா‎ன்
எனது பயம்
தன்‎னைக் காட்டிக் கொள்ளும். . . . . . . .

தெருவுக்குத் தெரு
நாய்கள். . . .

எனது பயங்கள் மட்டும்
பயணம் செய்யும் பாதையெல்லாம்
வீழ்ந்து கிடக்கிறது. . .

முள்ளை
முள்ளால் எடுக்கும்
தர்மம்?

வாங்கிக் கொண்டேன் -
ஒரு வாட்டசாட்டமான நாய்....

உர்ரென்ற உறுமலுடன்,
கழுத்துப் பட்டையை
இறுகப் பிடித்து
இழுத்துச் செல்கிறது -
என் பத்திரம் பொருட்டு.....

இப்பொழுதெல்லாம் -
திடுக்கிட்ட ஒரு பயத்துடன்
பவ்யம் காட்டி
பெருமூச்செறிந்து நிற்கும்
பழைய தெருநாய்களை
எப்பொழுதாவது
பார்க்கும் பொழுது
பல்லிளிக்கத் தோன்றுகிறது -
சினேகமாக.....

இளசு
01-04-2004, 10:17 PM
வருக வருக நண்பன் அவர்களே...

மூர்த்தி
01-04-2004, 11:33 PM
ஆகா...நன்றியுடைய தோழனுக்கு கவி பாடிய நண்பனே...வாழ்த்துக்கள்.

பாரதி
02-04-2004, 12:26 AM
நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் நண்பனை வாழ்த்தி வரவேற்கிறேன். தொடர்ந்து வர வேண்டும்;கவிதைகள் பல தரவேண்டும்.

பயம் சினேகமாகி விட்டதா...? பாராட்டுக்கள் நண்பரே.

kavitha
02-04-2004, 03:03 AM
வாருங்கள் நண்பரே! நலமா?



முள்ளை
முள்ளால் எடுக்கும்
தர்மம்?

வாங்கிக் கொண்டேன் -
ஒரு வாட்டசாட்டமான நாய்....

அருமையான வரிகள்...
"அதைச்செய்யாதே! இதைச்செய்யாதே " என்று அறிவுரை மட்டும் கூறி செல்பவர்களுக்கு
மத்தியில் 'என்னைப்போல் நட! ' என்ற முன்னோடிக்கான இறுமாப்பு நடை, தீர்வை சொன்ன பாங்கு.. மிக அழகு!

துபாயில் வாக்கிங் போக ஆரம்பித்து விட்டீர்களா?

இக்பால்
02-04-2004, 11:08 AM
நண்பர் நண்பன் ... என்ன இப்படி எழுதி இருக்கிறீர்கள்?
உண்மையில் மனதில் நாய்களைத்தான் நினைத்தீர்கள்!?
அப்படி இருந்தால் ஒரு நல்ல கவிதை தான்.
பாராட்டுக்கள்.-அன்புடன் இக்பால்.

karikaalan
02-04-2004, 01:51 PM
நண்பன்ஜி

சிலசமயம் நம்முடன் கூடவரும் தோழன், தெருவில் இருப்பவர்களைக் கண்டதும் வாலைச் சுருட்டிக்கொண்டு, ஒரு விதமாக சத்தம் போடும். ரொம்பவுமே எரிச்சலாக இருக்கும். அவ்வாறு தங்களது தோழனுக்கு நேராவிருக்க!

===கரிகாலன்

Nanban
02-04-2004, 05:27 PM
இளசு, மூர்த்தி, பாரதி, கவிதா, இக்பால், கரிகாலன் - அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

ஆனால், கவிதையை நான் நினைத்து எழுதியது ஒன்று - எல்லோரும் வாசித்திருக்கும் விதம் வேறு என்றே புலப்படுகிறது. நான் எழுதியது நாய்களைப் பற்றியது அல்ல. நண்பர் இக்பால் மட்டும் ஏதோ புரிந்தவராக இருந்தாலும், மற்றவர்களின் கருத்தினால் திசை திருப்பப்பட்டார் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் - நாய்கள் என்ற சொல்லை மனிதர்கள் என்று மாற்றி படித்துப் பாருங்கள், நன்றாகப் புரியும் - ஒரு பெண்ணின் நிலை சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது என்று....!!!

sara
02-04-2004, 07:49 PM
கழுத்துப் பட்டையை
இறுகப் பிடித்து
இழுத்துச் செல்கிறது -
என் பத்திரம் பொருட்டு.....


அருமையாய் கோடி காட்டியிருக்கிறீர்கள். நாய் விரட்ட மட்டுமே நாய் வாங்கினாளா? நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

kavitha
05-04-2004, 06:45 AM
அதானே பார்த்தேன்.. அத்தனை எளிதாக புரிந்து விடக்கூடியதா நண்பரின் கவிதை!
நீங்கள் கோடிட்ட பிறகு புரிந்தது போல் உள்ளது.

தெருவிற்கு தெரு பின் தொடரும் அல்லது ஈவ் டீசிங் செய்து விடுவார்களோ என்று நினைக்கும் பெண்களின்
பயத்தினை பற்றிய கவிதையா இது!

ஆனாலும் வேதனையாகத்தானிருக்கிறது நண்பரே! முள்ளை கையால்
எடுக்க முடியாததைக்குறித்து!
ஏனெனில் இதுவும் முள்(நாய்)தானே!


முள்ளை முள்ளாள்
எடுப்பதற்காய்
நானும் வாங்கினேன்
ஒரு நாய்!

என் பயத்தினை
விரட்டுவதற்காய்
என்னை வேக வேகமாய்
இழுத்து சென்றது
தெரு நாய்களை
பார்க்கும்போதெல்லாம்

நானில்லாத சமயங்களில்
தெரு மாநாடு நடத்தியது
என் வாசத்தை
முகர்ந்தவைகளா என்று அறிய!

அவைகளுடன் சினேகம்
வளர்த்து கொண்டது
என் வீட்டை
அண்டாதிருக்க!

நான் போட்ட
கறிச்சோறை தின்றுவிட்டு
மீண்டும் ஓடிவிட்டது
அடுத்த தெருவை
மோப்பம் பிடிக்க!

இக்பால்
05-04-2004, 06:54 AM
தங்கச்சி... அருமையான கவிதை.

இன்னும் நிறையக் கொடுங்கள்.

நாய் நாய்தான் என்கிறீர்கள். ஒரு நல்ல நாய் இருக்காதா?

-அன்புடன் அண்ணா.

kavitha
05-04-2004, 07:07 AM
அதன் இயல்பான குணம் அது தான் அண்ணா!

நான் மனிதனை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

இக்பால்
05-04-2004, 07:25 AM
மனிதர்கள்தான் நிறைய இருக்கிறார்களே தங்கை. :)

kavitha
05-04-2004, 08:42 AM
:)

Nanban
05-04-2004, 07:53 PM
பாராட்டுகள் கவிதா....

மிக அழகிய நயமான கவிதைக்கு....

இளசு
05-04-2004, 09:54 PM
பாராட்டுகள் கவிதா...

kavitha
06-04-2004, 06:00 AM
மிக அழகிய நயமான கவிதைக்கு....
ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே! நீங்கள் இப்படி சொல்வது!
ஏதோ மனத்துளியில் ஒன்றை சிதறவிட்டேன். அவ்வளவே!

இளசு அண்ணாவின் பாராட்டு மேலும் ஊக்குவிக்கிறது.
இன்னும் நிறைய எழுத தூண்டுகிறது...விரைவில் உங்களோடு பயணிக்க வருகிறேன்.

எழுத்துப் பிழைத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.-இக்பால். :)

Nanban
06-04-2004, 05:03 PM
அருமையான கவிதை எழுதிவிட்டு, பாராட்டுகளுக்கு தன்னடக்கம் காட்டும் உங்கள் பாங்கு மேன்மையானதே......

என்றாலும் நன்றாக இருப்பதை, நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால், வாசிப்பதற்கு
அர்த்தமில்லாமல் போய்விடும் அல்லவா? பாராட்டுவது எனது கடமை.

எழுத்துப்பிழைத் திருத்தம், வரிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.-இக்பால்.

kavitha
07-04-2004, 03:44 AM
மீண்டும் பாராட்டிய நண்பன் அவர்களுக்கும், பிழை திருத்திய இக்பால் அண்ணா அவர்களுக்கும். நன்றி!

ஜோஸ்
07-04-2004, 04:06 AM
நண்பனுக்கும், கவிதாவிற்கு வாழ்த்துக்கள்

சமுதாய அவலத்தைக் கோடிட்டுக் காட்டியதற்காக....

இக்பால்
07-04-2004, 08:03 AM
உங்களுக்கும் நன்றி தங்கை. :) -அன்புடன் அண்ணா.

அக்னி
01-06-2007, 11:23 PM
அருமையான கருத்துப் பகிர்வுகள் கவிதைகளினூடே...

நன்றி நண்பன்...
நன்றி கவிதா...

சாம்பவி
10-11-2007, 05:55 PM
முள்ளை
முள்ளால் எடுக்கும்
தர்மம்?

வாங்கிக் கொண்டேன் -
ஒரு வாட்டசாட்டமான நாய்....

உர்ரென்ற உறுமலுடன்,
கழுத்துப் பட்டையை
இறுகப் பிடித்து
இழுத்துச் செல்கிறது -
என் பத்திரம் பொருட்டு.....




பிள்ளையார் பிடிக்கப் போய்
குரங்காகிப் போனதுவோ..... !

நாய்களிடமிருந்து காக்க வேண்டி
நாய் வாங்க...
தானே நாயாகிப் போனோமோ
நாங்கள்.... !

அலையில் இருந்து
உலையில் விழுந்து
துடி துடிக்கும்
மீன்கள்.... !



இப்பொழுதெல்லாம் -
திடுக்கிட்ட ஒரு பயத்துடன்
பவ்யம் காட்டி
பெருமூச்செறிந்து நிற்கும்
பழைய தெருநாய்களை
எப்பொழுதாவது
பார்க்கும் பொழுது
பல்லிளிக்கத் தோன்றுகிறது -
சினேகமாக.....

அவலத்தின் எல்லை.... !
அதட்டிக் கேட்க
அந்த பாரதியும் இல்லை... !

.

அமரன்
10-11-2007, 06:00 PM
அட இப்பதானே புதுக்கவிதைகள் பகுதிக்கு நகர்த்தினேன்..
அதற்குள் ஒரு கவி விமர்சிப்பா...சபாஷ்..