PDA

View Full Version : பிரபலங்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள்மன்மதன்
31-03-2004, 10:10 AM
பிரபலங்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
நாமே ஒரு பிரபலம்தான்..இருந்தாலும் நம்ம மன்றத்தினருக்காக நம் வாழ்க்கையில் சந்தித்த பிரபலங்களையும் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே..

பல வருடங்களுக்கு முன் நடந்தது இது..

வடகரையில் இருந்த ஒரு குடும்ப நண்பர் திருமணத்திற்கு எங்க குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம். அப்ப எனக்கு 10 வயதுதான்.. அந்த திருமணத்திற்கு பாடகர் மனோ அவர்கள் அவர் குழுவினருடன் கச்சேரி பண்ணுவதற்கு வந்திருந்தார். அப்போ அவர் நல்ல புகழ்ழில் இருந்தார்..அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.. அவர்களை யாரும் தொந்தரவு செய்யவேணாம் என்று சொல்லிவிட்டனர்.

சினிமாவில் பாட்டு பாடற மனோ வந்திருக்கிறார். போய் ஆட்டொகிராப் வாங்கி வா என்று என் அண்ணன் என்னிடம் சொன்னான். சரி என்று நான் நேராக அந்த அறைக்கு சென்று அங்கே இருந்த ஒருவரிடம் ஆட்டொ கிராப் கேட்டேன். அவர் ஏன் என்னிடம் கேட்கிறாய் அதோ மனோ இருக்கிறார் அவரிடம் கேள் என்றார். நானும் அவரிடம் சென்றேன் . அவர் ஆட்டொகிராப் போட்டுவிட்டு அப்புறம் ' தம்பி நான் உண்மையில் மனோ கிடையாது , அதோ இருக்கிறாரே அவர்தான் மனோ..' என்று இன்னொருத்தரிடம் அனுப்பினார்.. இப்படியே எல்லொரிடமும் ஆட்டொகிராப் வாங்கி வந்து கடைசியில் நான் முதலில் கேட்டவரிடம் வந்து இதில் யார்தான் மனோ என்று கேட்டேன்.. எல்லோரும் பயங்கரமாக சிரித்து விட்டனர். நான் முதலும் கடைசியிலும் கேட்டதுதான் மனோ.. நம்மிடம் யார்தான் ஆட்டொகிராப் கேட்க போகிறார்கள் என எல்லோரும் ஆட்டோகிராப் போட்டுவிட்டனர்.. கடைசியா மனோ சொன்னார்.. என்னை அடையாளம் தெரியாமலேயே ஆட்டொகிராப் கேட்கிறியா என்று.. நான் சொன்னேன்..'அட உங்க ஆட்டொகிராப் யாருக்கு வேணும், என் அண்ணந்தான் அனுப்பிவச்சான்னு'

அப்ப உனக்கு என்னை பிடிக்காதான்னு கேட்டார்.
உங்க பாடல் பிடிக்ககும்னேன்..
பக்கத்தில் இருந்த புகைப்படகாரரை கூப்பிட்டு என்னுடன் நின்று ஒரு போட்டோ எடுத்து கொடுத்தார்..'என்னை இனி எப்பவும் மறக்கமாட்டே'ன்னு சொன்னார்..

சிங்காரவேலன் படம் பார்த்துட்டு அவருக்கு போன் பண்ணி இனி எங்கே பார்த்தாலும் உங்களை அடையாளம் கண்டு பிடித்துடுவேன்னு (முன்னாடி நடந்த சம்பவங்களை ஞாபகபடுத்தி விட்டுத்தான்) சொன்னேன்.. ஒரே சிரிப்புதான் போங்க..

இளசு
31-03-2004, 10:22 PM
நல்ல தொடர்..சுவையான சம்பவத்துடன் ஆரம்பம்..

பாராட்டுகள் மன்மதன்..

பிரபலங்களை சந்தித்தவர்கள் ஏராளம் இருப்பீங்களே.... வாங்க எல்லாரும்..

மன்மதன்
01-04-2004, 04:48 AM
நன்றி இளசு.. நேரம் கிடைக்கும் போது நானும் தொடர்கிறேன்..

rajeshkrv
01-04-2004, 09:59 AM
பிரபலங்களுடன் சுவாரஸ்யமான அனுபவம் .. நல்ல தலைப்பு
பல பிரபலங்களுடன் உரையாடியிருந்தாலும்
திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் உரையாடுவது என்பது ஒரு வித இன்பமே.

சனிக்கிழமை தோறும் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் மாலை அவருடன் உரையாடுவது உண்டு.

முதலில் அவரை சந்தித்ததும் அங்கே தான். காக்னிஸண்ட் அங்கே தான் இருந்தது. மதியம் ஜுஸ் குடிக்க செல்லும் போது இவர் அங்கே இருப்பார்.
முதலில் தயக்கமாக இருக்கும் பேச பின் ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் சென்றேன் அறிமுகப்படலம் முடிந்து பேச ஆரம்பித்தேன்..

பெரும்பாலும் பாடல்களை பற்றியே உரையாடல் இருந்தாலும் சில நேரம் வேறு தலைப்புக்களை பற்றியிம் பேசியிருக்கிறோம்.
ஆனாலும் நான் விவாதித்தது அவருக்கு தமிழில்
சரியான தீனி கிடைக்கவில்லை என்றும் கன்னடத்தில் தான் நிறைய கிடைத்தது என்றும் கூறினேன் அதை அவரும் ஒப்புக்கொண்டார்.

பின் என் பெயர் இடம்பெறும் வகையில் ஒரு கவிதை எழுதி கொடுத்தார்.

நல்ல நண்பராக இருக்கிறார்.
அவரது பன்மொழித்திறனும் நம்மை வியக்க வைக்கும்.

இதை விட இனிமையான அனுபவம் திருமதி- பிசுசீலா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தது
அந்த முதல் சந்திப்பு பற்றி அடுத்த பகுதியில்

மன்மதன்
01-04-2004, 10:33 AM
இதைதான் எதிர்பார்த்தேன் ராஜேஸ் .. உங்களின் அனுவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தொடருங்கள் .. காத்திருக்கிறோம்..

karikaalan
01-04-2004, 11:55 AM
நல்ல பதிவு. இது போன்ற நினைவுகள் எப்போதும் அசைபோடத் தகுந்தவை. வாழ்த்துக்கள் வாய்த்தவர்களுக்கு.

===கரிகாலன்

இளந்தமிழ்ச்செல்வன்
17-09-2004, 06:16 PM
என்ன நண்பர்களே மிக ஆவலுடன் இப்பகுதிக்கு வந்தேன் ஆனால் இருவர் மட்டும்தானா?

மற்றவர்கள் தொடருங்கள்.

பரஞ்சோதி
17-09-2004, 09:17 PM
நான் பொதுவாக பிரபலங்களை சந்திக்க நேர்ந்தால் தூர இருந்தே ரசிப்பேன், அருகில் போய் பேச பயம். எங்கே அவர்கள் அளவிற்கு என்னுடைய அனுபவமும், அறிவும் இருக்காதே என்ற எண்ணம்.

இப்போ எல்லாம் அப்படி இல்லை, என்னை ரொம்பவே திருத்திக் கொண்டேன், இருந்தால் இசாக் திருமண விழாவில் கவிக்கோ அவர்களையும், அண்ணன் அறிவுமதியையும் தூர இருந்தே ரசித்தேன், அருகில் சென்று பேசவில்லை.

இனிமேல் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை.

என்னுடைய வாழ்நாளில் சிறந்த சந்திப்பு, வாரியார் சுவாமிகளிடம் வாங்கிய கையெழுத்தும், காஞ்சி பெரியவரிடம் வாங்கிய எலுமிச்சை பழமும் மறக்க முடியாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை தொடும் தொலைவில் நின்று மெய்மறந்து ரசித்தது.

இளந்தமிழ்ச்செல்வன்
18-09-2004, 12:04 AM
வாங்க பரஞ்சோதி. தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

தஞ்சை தமிழன்
18-09-2004, 06:44 AM
நல்ல தொடர். அனைவரின் அனுபவங்களுமே சில சிறப்புக்களுடன் இருக்கும்.

தொடங்கிய மன்மதனுக்கும் தொடர்ந்த நண்பர்களுக்கும் நன்றி.

thempavani
19-09-2004, 06:04 AM
உண்மையில் பிரபலமானவர்களை சந்திக்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது... நான் பள்ளியில் படிக்கும் போது..(1989) பள்ளி மாணவ(வி)ர் தலைவியாய் இருந்ததால் ... எங்கள் ஊர் வழியாய் சென்ற முன்னாள் பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்களுக்கு சந்தண மாலையிடும் வாய்ப்பு கிடைத்தது...
அப்பப்பா அருமையான அனுபவம்... அப்போது.. திருமதி சோனியா காந்தி அவர்களும் வந்திருந்தார்...

அதே ஆண்டு.. எங்கள் பாட்டி இறந்த சமயம்... சாத்தான்குளத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த தற்போதைய தமிழக முதல்வர்.. எங்கள் சித்தப்பாவைப் (மதுரையில் அவர்கள் கட்சியில் ஏதொ ஒரு பொறுப்பு வகித்தார்.)பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்கி எங்கள் அப்பாவிடம் துக்கம் விசாரித்துவிட்டுப் போனதும் அப்போதெல்லாம் சந்தோசமாய் இருந்தது...

அப்புறம் .... கல்லூரியில் படிக்கும் போது.. என் அபிமானத் தலைவி .. திருமதி கிரன் பேடி அவர்களோடு சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு ... வாழ்வின் முத்தான நிமிடங்கள்...

இளந்தமிழ்ச்செல்வன்
19-09-2004, 07:17 AM
தேம்பாவணி 4 பிரபலங்களை சந்தித்ததை மூன்றே பத்திகளில் முடித்துவிட்டீரே.

கிரண்பேடியுடன் தங்கள் சந்திப்பில் அவர் கூறிய செய்திகள் இருந்தால் கூறலாமே..?

gragavan
29-09-2004, 07:45 AM
பிரபலங்கள் என்றதும் நினைத்துப் பார்க்கிறேன். நான் சந்தித்திருக்கும் பிரபலங்கள் நால்வருமே திரைப்படத்துறையோடு தொடர்புடையவர்கள். இந்த நான்கு சந்திப்புகளில் ஒன்று மட்டுமே சென்று பார்த்தது. மற்ற சந்திப்புகளெல்லாம் தற்செயலானவை.

முதலில் சந்தித்தது...இல்லை....பார்த்தது நடிகர் திலகத்தைத்தான். தூத்துக்குடி புதுக்கிராமம் தெருவில் இருந்த பொழுது. சின்ன வயது எனக்கு. எந்த வகுப்பு என்று கூட நினைவில்லை. தேர்தல் நேரமென்று நினைவு. எந்தக் கட்சிக்காக என்றும் நினைவில்லை. சிவாஜி பிரச்சாரத்திற்கு வருகிறார் என்று அறிவிப்புகள். எல்லோருக்கும் ஆவல். மதிய நேரம். வாசலில் நின்றிருந்தேன். என்னுடைய மாமா வீடு அது. வாசலில் ஒரு திண்ணை உண்டு. இப்பொழுது அந்த வீடு பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. அந்தத் திண்ணையில் நின்று கொண்டிருந்த வேளையில் நடிகர் திலகம் வந்தார். திறந்த வேனில் நின்று கொண்டு கையை அசைத்துக் கொண்டு வந்தார். நானும் அவரைப் பார்த்து கையசைத்தேன். அவர் என் பக்கம் திரும்பி ஒரு சின்ன புன்னகையில் நட்பைக் காட்டினார். அவ்வளவுதான். வேன் முன்னேறிப் போய்விட்டது. அவரது முகம் கூட சரியாகப் பதியாத வயது. ஆனால் நிகழ்ச்சி அப்படியே நேற்று நடந்தது போல நெஞ்சில் இருக்கிறது. நினைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் ஜில்லென்றிருக்கும்.

சந்தித்த அடுத்த பிரபலம்.....மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.

மகிழ்ச்சியுடன்,
கோ.இராகவன்

மன்மதன்
29-09-2004, 08:18 AM
தேம்பாம், இராகவனின் பிரபல சந்திப்பு சுவாரஷ்யமாக இருந்தது.. தொடருங்கள் இராகவன் உங்கள் மெல்லிசை சந்திப்பை.
அன்புடன்
மன்மதன்

gragavan
04-10-2004, 05:34 AM
மெல்லிசை மன்னரைச் சந்தித்தது ஒரு இனிய அனுபவம். பள்ளிப்பருவத்தில் சந்தித்தது. ஆண்டு நினைவிலில்லை. ஆனால் கோடை விடுமுறையில் என்பது நினைவிருக்கிறது. சென்னை சென்றிருந்த பொழுது, மெல்லிசை மன்னரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலை என்னுடைய மாமாவிடம் கூறினேன். அவரும் அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார். எம்எஸ்வியின் இல்லத் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து என்னைப் பேசச் சொன்னார். தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த எனக்கு பெரிய ஊரான சென்னையின் வழக்கங்கள் பிடிபடவில்லை. தொலைபேசியில் பேசியும் வழக்கமில்லை. என்னுடைய மாமாவின் மகள், என்னைவிட நான்கைந்து வருடங்கள் இளையவள், சென்னையிலேயே வளர்ந்தவள், தொலைபேசியில் எண்களைச் சுழற்றி மெல்லிசை மன்னரின் உதவியாளருடன் பேசி பார்க்கும் நேரத்தையும் முடிவு செய்து விட்டாள். நானும், அவளும், அவளுடைய தம்பியும் ஒரு ஆட்டோவில் சென்றோம். சாந்தோமில் இருந்தது அவரது வீடு. சற்று நேரம் காத்திருந்தோம். மெல்லிசை மன்னர் வந்தார். நலம் விசாரிப்பு முதலில். அப்புறம் சில கேள்விகள். அதற்கு மெல்லிசை மன்னரின் பதில்கள். என்னென்ன கேள்விகள் கேட்டேனென்ற நினைவில்லை. பிறகு கொண்டு சென்றிருந்த என்னுடைய கவிதையைக் காட்டினேன். வசனகவிதை போல இருக்கு என்றால். குப்பை என்றால் என் மனம் நோகுமென்று அப்படிச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு முதல்நாள்தான் இராஜபார்ட் ரங்கதுரை படம் பார்த்திருந்தோம். அப்படத்தின் பாடல்களைப் பற்றி ஏதேதோ கேட்டேன். ஒரு அழகான கிருஷ்ணன் படம் அன்பளிப்பாகக் கொடுத்தோம். உங்கள் presence போதும் present எதற்கு என்றார். பிறகு அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அந்தப் புகைப்படத்தைக் கூடத் தொலைத்து விட்டேன். வெட்கம். வெட்கம்.

வருத்தத்துடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
04-10-2004, 07:10 AM
அருமையான சந்திப்பு அண்ணா.

புகைப்படம் தானே தொலைத்தீர்கள், நினைவுகளையும் இனிய அனுபவத்தையும் தொலைக்கவில்லையே, ஏன் கவலைப்படுகிறீங்க.

இளந்தமிழ்ச்செல்வன்
04-10-2004, 10:51 AM
நல்ல சந்திப்புதான். அடுத்து ஏதும் கொடுங்க நண்பர் கோ.இராகவன் அவர்களே.

மன்மதன்
04-10-2004, 11:03 AM
மெல்லிசையான சந்திப்புதான்.. சுவாரஷ்யமாக இருந்தது.. தொடர்ந்து எழுதுங்க நண்பர்களே..
அன்புடன்
மன்மதன்

gragavan
04-10-2004, 12:33 PM
அருமையான சந்திப்பு அண்ணா.

புகைப்படம் தானே தொலைத்தீர்கள், நினைவுகளையும் இனிய அனுபவத்தையும் தொலைக்கவில்லையே, ஏன் கவலைப்படுகிறீங்க.

அதுல தம்பி. என்னோட அந்த வயசுல எடுத்த படங்கள்னு எதுவுமில்லை. அந்தப் படந்தான் இருந்தது. இப்போ அதுவும் எங்க போச்சோ? அதுவுமில்லாம அந்தப் படத்துல நாங் கொஞ்சம் செவேர்னு இருப்பேன். :-) இப்போ பெங்களூரு வந்தப்புறம் தொலி கருத்துப் போச்சி.

வெட்கத்துடன்,
கோ.இராகவன்

gragavan
04-10-2004, 12:38 PM
நல்ல சந்திப்புதான். அடுத்து ஏதும் கொடுங்க நண்பர் கோ.இராகவன் அவர்களே.


மெல்லிசையான சந்திப்புதான்.. சுவாரஷ்யமாக இருந்தது.. தொடர்ந்து எழுதுங்க நண்பர்களே..
அன்புடன்
மன்மதன்

நன்றி. நன்றி. அடுத்து டி.ராஜேந்தரச் சொல்லவா? வரிசையில வர்ரேன். டி.ஆரச் சொல்லீட்டு ஜெயசுதா-வப் பாத்ததப் பத்திச் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Nanban
04-10-2004, 07:59 PM
பிரபலங்களோடு நட்பு ரீதியாக உறவு ரீதியாக அல்லாமல், பழக்கமாக அல்லாமல், தற்செயலாக நிகழ்ந்த சந்திப்புகள் ஏராளம். அவர்களுடைய பழக்கவழக்கங்களை அருகிலிருந்து பார்க்கும் வழக்கமும் கிடைத்தது. எத்தனை பேரை அப்படிச் சந்தித்தோம் என்பதை பழைய நினைவுகளுக்கிடையில் தேடித் தான் பார்க்க வேண்டும்.

பொதுவாக பிரபலங்களைக் கண்டு பிரமித்துப் போய்விடும் வழக்கம் இல்லை என்றாலும், சில சந்திப்புகள் சுவராஸ்யமானவை - குறிப்பாக அவர்களுடைய பழகும் தன்மை, மற்ற பண்புகள்....

முதலில் இந்த சந்திப்புகள் (..!?) நிகழ்ந்ததற்கான பின்னணியை விளக்கி விடுகிறேன்... 1987 ஜனவரி முதல் 1989 ஜூலை மாதம் வரை சென்னையின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உதவி பொறியாளராக வேலை பார்த்த சமயம் அது. அப்பொழுது மொத்தமே மூன்று ஹோட்டல்கள் தான் பிரபலம். மற்றவை எல்லாம் அதற்குப் பின்னால் வந்தவை தான்...

முதல் பிரபலம் - ஜாக்கி ஷெராப்.....

எப்பொழுது வந்தாலும், எங்கள் ஹோட்டலில் தான் தங்குவார். மிகவும் எளிமையான மனிதர். பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், நடுநிசி வேளையில், சாப்பிடுவதற்காக வருவார் - எங்கே தெரியுமா? kitchenக்கே.... சமையல் அறை என்றால், சின்னதாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள் - அது இரண்டு மூன்று டென்னிஸ் மைதானம் போல இருக்கும். நேராக, செப்களிடமிருந்தே அவர்கள் தங்களுக்கென சமைக்கும் அந்த சாப்பாட்டில் இருந்து பங்கு வாங்கி சாப்பிடுவார். மிக சாதாரண சாப்பாடாகத் தான் இருக்கும் - அதனால் அவரை ஹோட்டலில் எல்லோருக்கும் பிடிக்கும்.

ஒரு நாள், மதிய நேரமிருக்கும்.. திடீரென்று கட்டுப்பாட்டு அறையில், தீ பிடித்ததற்கான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியது. எந்த பகுதியில் தீ பிடித்தது என்பதை பார்த்துக் கொண்டு, அந்த தளத்தை நோக்கி ஒடினோம்.. லிப்ட்டை உபயோகிக்கக் கூடாது என்பதால், மூச்சிரைக்க மாடிப்படிகள் வழியாக....

அந்தத் தளத்தை அடைந்ததும், எந்த அறை வாசலில் LED விளக்கு ஒளிர்கிறது என்று பார்த்து கதவைத் தட்டினோம் -

திறந்தது ஜாக்கி ஷெராப்......

பரஞ்சோதி
04-10-2004, 08:03 PM
வாங்க நண்பன், உங்கள் அனுபவங்கள் கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

ஜாக்கி ஷேராப் அவர்களோடு கிடைத்த அனுபவத்தை முழுவதும் சொல்வதை கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

மன்மதன்
05-10-2004, 07:38 AM
நல்ல சந்திப்புதான். அடுத்து ஏதும் கொடுங்க நண்பர் கோ.இராகவன் அவர்களே.


மெல்லிசையான சந்திப்புதான்.. சுவாரஷ்யமாக இருந்தது.. தொடர்ந்து எழுதுங்க நண்பர்களே..
அன்புடன்
மன்மதன்

நன்றி. நன்றி. அடுத்து டி.ராஜேந்தரச் சொல்லவா? வரிசையில வர்ரேன். டி.ஆரச் சொல்லீட்டு ஜெயசுதா-வப் பாத்ததப் பத்திச் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

ஆவலுடன் காத்திருக்கிறோம்.. சொல்லுங்க இராகவன்.
அன்புடன்
மன்மதன்

gragavan
05-10-2004, 07:39 AM
நல்லா விருவிருன்னு போகுது உங்க அனுபவம். சும்மா சொல்லலை. நல்லாவே எழுதீருக்கீங்க. என்னடாது ஜாக்கி ஷெராப் ரூமுக்குள்ள பொகையா தீயா? கும்முட்டி அடுப்புல அப்பளத்த சுட்டாரா என்ன?

ஆவலுடன்,
கோ.இராகவன்

மன்மதன்
05-10-2004, 07:40 AM
மிக சுவாரஷ்யமாக இருக்கிறது நண்பன் - ஜாக்கி ஷெராப் சந்திப்பு..

முற்றுப்புள்ளி வைக்காம , கமா போட்டிருந்ததால் தொடரும் என்ற ஆவலில்..

அன்புடன்
மன்மதன்

Nanban
05-10-2004, 08:36 PM
கதவைத் திறந்ததும் 'என்ன?' என்று கேட்டவரிடம் 'உங்கள் அறையில் இருந்த ஸ்மோக் டிடக்டர் எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது. பார்க்க வேண்டும்' என்று ஆங்கிலத்தில் சொன்னேன். (அன்று முதல் இன்று வரையிலும் ஹிந்தி ஒரு வார்த்தை கூட தெரியாது.)

நான் கூறியதைக் கேட்டதும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை - எங்களை அறையினுள் விட்டார். பின்னர் படுக்கையில் போய் தொப்பென்று விழுந்தார். உள்ளே நுழைந்ததும் மேஜையின் மீது சூடான ஆவி பறக்கும் உணவு வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுதே புரிந்து விட்டது - இது தவறான எச்சரிக்கை என்று. அதற்குக் காரணம் - அறையினுள் நுழையும் foyer எனப்படும் ஒரு குறுகிய இடத்தில், தாழந்த உயரத்தில் டிடெக்டர் பொருத்தப்பட்டிருப்பது தான்.

ஸ்மோக் டிடெக்டரை கழற்றி மாட்டி விட்டு, அவரிடம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தால், 'No ...Tell me where the fire is...? என்று கேட்டதும் தர்ம சங்கடமாகிவிட்டது. தவறான எச்சரிக்கையானாலும், அதை தங்கியிருப்பவர்களிடம் சொல்லுவது கூடாது என்பது ஒரு விதி.

தயக்கத்துடன் நாங்கள் நின்றிருப்பதைப் பார்த்து சட்டென்று இறுக்கம் தளர்ந்து சிரித்துக் கொண்டே சொன்னார் - 'You know, where the fire is?' மீண்டும் உரக்க சிரிக்க ஆரம்பித்துவிட்டார். 'There is a fire.... ' நிறுத்தி நிதானமாக எங்களைப் பார்த்து சொன்னார் '.....in my head....'. இப்பொழுது சிரிக்கவில்லை. இப்பொழுது இதற்கு எப்படி react செய்வது என்று தெரியவில்லை.

சட்டென்று இறுக்கம் தளர்ந்து மீண்டும் தன் பழைய நிலைக்கு வந்தவராகப் பேசத் தொடங்கினார். 'Alright - leave it - Give me a bidi.... ' சரளமாக அவர் பேசத் தொடங்கியதும் திகைத்துப் போனேன். பீடியா...? 'நான் சிகரெட் தருகிறேன்' என்றேன். 'இல்லை. வேண்டாம். பீடி கொடு' என்றார். என்னுடன் வந்திருந்த நபர் சத்தம் இல்லாமல் ஒரு கட்டு பீடியை எடுத்துக் கொடுக்க அதிலிருந்து இரண்டு, மூன்று பீடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு திருப்பித் தந்தார்.

இது தான் முதல் பிரபல அனுபவம். ஆனால், பலவற்றை சிந்திக்க வைத்த அனுபவம்.......

அடுத்தது ரஜினி....

பரஞ்சோதி
05-10-2004, 08:42 PM
நண்பரே!

ஜாக்கி சொக்கலால் பீடி பிடித்த அனுபவம் அருமை. ஆமாம் நீங்க சிகரெட் பிடிப்பீர்களா?

இந்த அனுபவத்தில் வேலை செய்யும் நேர்த்தியையும் சொன்னது அருமை. ஆமாம் எந்த நிலையிலும் நம்முடைய தவறுகளை அடுத்தவர்களிடம் காட்டிக் கொள்ளக்கூடாது, அதுவும் நிறுவனம் என்றால் அதை காப்பாற்றுவது வேலை செய்யும் நம்முடைய தலையாய கடமை. நல்ல பாடம் கிடைத்த மகிழ்ச்சி, பாராட்டுகள்.

அப்புறம் தலைவர் பற்றிய அனுபவத்தை சொல்லுங்களேன்..

இளந்தமிழ்ச்செல்வன்
05-10-2004, 09:54 PM
நண்பரே உங்கள் அனுபவத்தை அழகாய் ஆவலூட்டும் வகையில் கூறியுளீர்கள். சுவாரஸ்யமாக இருந்தது. மேலும் காத்திருக்கிறோம்.

மன்மதன்
06-10-2004, 05:27 AM
அருமை அருமை. ஜாக்கி ஷெராபுடன் நண்பன் சந்திப்பு அருமை.. எழுத்து நடை மிக அருமை. அடுத்தது ரஜினியுடன்.. காத்திருக்கிறோம் நண்பன்...
அன்புடன்
மன்மதன்

gragavan
06-10-2004, 01:39 PM
நாங்கூட ஜாக்கி ஷெரா·பு உள்ள கும்முட்டி அடுப்பி வெச்சி ரொட்டி சுட்டுகிட்டு இருந்திருப்பாரு. இல்லைன்ன புஸ்ஸ¤ புஸ்ஸ¤ன்னு சிகரெட்டு பொகயா ஊதிருப்பாருன்னு நெனச்சேன். நல்ல சந்திப்பு. ரஜினியைச் சந்தித்தீர்களா? எப்படி?

ஆவலுடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
06-10-2004, 02:25 PM
நாங்கூட ஜாக்கி ஷெராபு உள்ள கும்முட்டி அடுப்பி வெச்சி ரொட்டி சுட்டுகிட்டு இருந்திருப்பாரு. இல்லைன்ன புஸ்ஸ புஸ்ஸன்னு சிகரெட்டு பொகயா ஊதிருப்பாருன்னு நெனச்சேன். நல்ல சந்திப்பு. ரஜினியைச் சந்தித்தீர்களா? எப்படி?

ஆவலுடன்,
கோ.இராகவன்

இராகவன் அண்ணா,

நீங்க ஜெயசுதாவை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்லவே இல்லையே. அப்படியே அடுக்கு மொழி டி.ஆர்.

Nanban
06-10-2004, 08:52 PM
நாங்கூட ஜாக்கி ஷெராபு உள்ள கும்முட்டி அடுப்பி வெச்சி ரொட்டி சுட்டுகிட்டு இருந்திருப்பாரு.


இது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சாத்தியமில்லை என்றாலும், சிலர் இதைச் செய்யத்தான் செய்தார்கள். கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் உதவுவதற்காக, ரஷ்யா, தன் பொறியாளர்களை அனுப்பி வைக்கும். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் மாதக்கணக்கில் அறை எடுத்து கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றபடிக்கு உணவு வகைகளுக்கு DA தொகையை கையில் கொடுத்து விடுவார்கள் போல இருக்கிறது - டாலர்களில். அதை அவர்கள் செலவு செய்யாமல், மிச்சப்படுத்தி ஊருக்கு எடுத்துச் செல்ல படும் பாடு இருக்கிறேதே - பார்த்தால் தான் நம்ப முடியும். அப்பொழுது ரஷ்யா ராக்கெட்டல்லாம் விடுதறதுனால, பெரிய பணக்கார நாடாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அவர்கள் மிக குறைந்த அளவிலே உணவு பொருட்கள் வாங்குவார்கள். கொண்டு போய் கொடுக்கும் ரூம் சர்வீஸ் பையன்களுக்கு ஒரு பைசா டிப்ஸ் கொடுக்க மாட்டார்கள். டீ, காபி எல்லாம் அவர்களே போட்டுக் கொள்வார்கள். முதலில் நிர்வாகம் தடுத்தாலும், பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். பிறகு...? ஒரு தளம் முழுக்க அல்லவா வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். மேலும், இந்திய அரசு வேறு அவர்கள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. சிறு சிறு சமையல்களை அவர்களே செய்து கொள்ளுவார்கள்.

ஆக, கும்முட்டி அடுப்பு மூட்டி சமைப்பதெல்லாம் - ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சாத்தியப்படாது என்று நினைக்காதீர்கள். இந்தியா மட்டுமல்ல - பிற வெளிநாடுகளில் கூட ஹோட்டல்களில் சமைப்பதென்பது சாத்தியமான விஷயமே....

இந்தியா விஞ்ஞானிகள் தங்களுடைய துணைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான, தன் அமெரிக்காவில் இருக்கும் கொரு என்ற இடத்திற்குப் போவார்கள். அங்கு போகும் பொழுது, தங்களுக்குத் தேவையான பருப்பு, அரிசி என மஞ்ச மாசாலா சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போவார்கள்.... எடை அதிகமாகி விடும் பொழுது, கொஞ்சம் பொருட்களை துணைக்கோள் உள்ளேயே போட்டு அனுப்பி விடுவார்களாம். பின்னர் அங்கே போய், துணைக்கோளின் 'பாக்கிங்'கைப் பிரிக்கும் பொழுது, அந்த பொருட்களை எல்லாம் எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்களாம்... கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, உங்களால்? எல்லாம் கொடுக்கப்படும் DAவை டாலர்களில் மிச்சப்படுத்தத் தான்....

(எனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா... என் மனைவியும் தென் அமெரிக்கா போய் வந்தவர் தான்... )

ஒரு கொசுறு....

இந்த கொருவிலிருந்து ஒரு இருபது நிமிடப் பயணத்தில் இருக்கிறது - ஒரு சிறைச்சாலை - உலகப் புகழ் பெற்றது - ஆம். 'பாப்பியோன்' என்ற சிறைக்கைதி, இருபத்தாறு வருடங்களாக, விடுதலைக்காகப் போராடிய சிறைக்கைதி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை.... அந்த தீவின் மயான அமைதியே ஆளைக் கொன்றுவிடும் என்று பின்னர் என் மனைவி என்னிடம் தெரிவித்தார்...

பரஞ்சோதி
06-10-2004, 09:11 PM
நன்றி நண்பரே!

ரஷ்யாக்காரர்கள் DA சேகரித்து சென்றதில் தப்பே இல்லை, காரணம் அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி நிலை காரணம்.

ஆனால் நம்மவர்கள் இருக்கிறார்களே பச்சை தண்ணீரில் வெண்ணை எடுக்கக் கூடியவர்கள். எங்கள் கம்பெனியில் கூட தேவைக்கு அதிகமாகவே சம்பளம் கொடுத்து, அதற்கு மேல் சாப்பாட்டுக்கு என்று கொடுக்கும் பணத்தை, சரியாக அரை வயிற்றுக்கூட சாப்பிடாமல், டாலர்களாக மாற்றுகிறார்கள். மனுசன் சம்பாதிப்பது வாழ்வதற்காக, அப்படி வாழ உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும், அதற்காகவாவது சாப்பிட வேண்டாம், எல்லாவற்றையும் சொன்னால் வெட்கம் தான். அதிலும் அதிக படித்தவர்கள் செய்கிற செய்கை, சொல்லவே வேண்டாம்.

சரி நம்ம விசயத்திற்கு வருகிறேன். இப்பதிவால் நிறைய விசயங்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. துணைக்கோள் செய்தி படித்து ஆச்சரியப்பட்டேன்.

கொரு தீவு அருமையான இடமாக தோன்றுகிறது, இனிமேல் யாராவது சேட்டை செய்தால் கொரு தீவுக்கு அனுப்பிவிடுவேன் என்று சொல்ல வேண்டியது தான் பாக்கி.

"பாப்பியோன்" பற்றி வேறு தகவல் தெரிந்தாலும் தலைப்பு சம்பந்தம் இல்லை என்றாலும் சொல்லுங்கள். தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

gragavan
07-10-2004, 07:13 AM
இராகவன் அண்ணா,

நீங்க ஜெயசுதாவை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்லவே இல்லையே. அப்படியே அடுக்கு மொழி டி.ஆர்.அடுக்கு மொழி டி.ஆர். அவர் சந்திப்பும் ரொம்பக் கொஞ்ச நேரந்தான். தியாகராய நகரில் பாண்டி பஜாரில் ஏதோ பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். மாலை வேளை. இருட்டியிருந்தது. வீதியெங்கும் விளக்குகள் பொருத்தியிந்தது. பழைய இராஜகுமாரி தியேட்டர் பக்கதில் நிறைய பூக்கடைகள் உண்டு. அந்தப்பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தட்டுப்பட்டது ஒரு ஜீப். முன் சீட்டில் டிரைவர் தவிர இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் யாரோ பேசிக்கொண்டிருந்தார். நன்றாகப் பார்த்தபின் தெரிந்தது அது டி.ஆர் என்று. அடடே! டி.ஆர் என்று அருகில் சென்று வணக்கம் சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். கையில் ஆட்டோகிராப் வாங்க எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் சின்னதான டெலிபோன் புக் இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தைப் புரட்டி ஆட்டோகிராப் கேட்டேன். அன்புடன் டி.ஆர் என்று உருண்டை உருண்டையாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஏதாவது பேச வேண்டுமே என்று "எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டேன். கேட்டது தவறென்று உடனே புரிந்தது. அவரது கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. கன்னச் சதை லேசாக உதறத் துவங்கியது. தொண்டைக் குழி மேலும் கீழும் குதித்தது. குழறலாய் உடைந்த சொல்லில் பதில் வந்தது. "நல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேம்ப்பா!" அவரது கண்கள் நிரம்பியிருந்தாலும் இன்னும் உடைப்பெடுக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றா தெரியவில்லை. ஒரு மாதிரியான முள்மேல் நிற்கும் உணர்ச்சி. "ரொம்ப நன்றி. வர்ரேங்க" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். இதை வீட்டிலும் நண்பர்களிடத்திலும் சொன்னேன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். எப்படியோ நினைவில் நின்ற சந்திப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
07-10-2004, 07:54 AM
நண்பனின் ஜாக்கி ஷெராப்பின் சந்திப்பில் நிறைய விஷயங்கள் கிடைத்தது..

இராகவனின் டி.ஆர் சந்திப்பில் ஒரு சோகம் இழையோடியது.. பாவம் டி.ஆர். யாரும் அவரிடம் இதுவரை 'எப்படி இருக்கிங்கன்னு' கேட்டதில்லையா??
அன்புடன்
மன்மதன்

rajeshkrv
07-10-2004, 08:10 AM
ராமமூர்த்தி.டி.கே இவரை சுசீலா இணையதளத்தின் திறப்புவிழாவிற்கு அழைக்க சென்றபோது தான் முதன் முதலில் சந்தித்தேன்..
மிகவும் எளிமையான மனிதர்
அவரும் எம்.எஸ்.வியும் சேர்ந்திருந்த காலத்தை பற்றி பேசினார்
டி.எம்.எஸ்,சுசீலா பற்றி நிறைய பேசினார்

அவருக்கு மிகவும் பிடித்த பாடலான வசந்த காலம் வருமோ பாடல் அவரிடம் இல்லை
எங்களிடம் இருந்தால் கொண்டுவந்து தர சொன்னார்

இ.இசாக்
07-10-2004, 06:36 PM
எல்லாரும் சிறப்பாக பதிவு செய்கிறார்கள்
பிரபல சந்திப்புகளை
பாராட்டுகள்

இளந்தமிழ்ச்செல்வன்
08-10-2004, 12:26 AM
நண்பனின் ஹோட்டல் சமாச்சாரங்கள் உண்மையே. மனிதன் எங்கிருந்தாலும் மனிதனே. ஒரு சில மனிதர்கள் நிறுவனத்தின் கவுரவத்திற்காக எதையும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வகையில் சிறப்பாக செய்வார்கள். சிலர் ஒவ்வொரு விஷயத்திலும் (போக்குவரத்து, சாப்பாடு, தங்கும் விடுதி உட்பட) சேமிப்பார்கள்.

உள்ளூரிலேயே முதல் வகுப்பு பதிவு செய்து கடைசியில் இஅத்து செய்து சாதரண வகுப்பில் பயணிக்கும் பெரிய மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.

நண்பனின் மற்ற தகவல்களுக்கு நன்றி.

கோ. இராகவனின் டி.ஆர். சந்திப்பு உணர்ச்சிமயம். சில நொடிகளில் எப்படிங்க பெரிய மனிதர்களை உனர்ச்சி வசப்பட வைக்கிறிங்க..?

இளந்தமிழ்ச்செல்வன்
08-10-2004, 12:30 AM
இராஜேஸ் அவர்களின் சந்திப்புகள் நிறைய இருக்கும் என்றே தோன்றுகிறது. நிறைய கொடுங்கள் இராஜேஸ், காத்திருக்கிறோம்.

gragavan
11-10-2004, 01:41 PM
கோ. இராகவனின் டி.ஆர். சந்திப்பு உணர்ச்சிமயம். சில நொடிகளில் எப்படிங்க பெரிய மனிதர்களை உனர்ச்சி வசப்பட வைக்கிறிங்க..?அதயேங் கேக்குறீங்க இளந்தமிழு. கேட்டப்புறந்தான் ஏண்டா கேட்டோம்னு ஆயிருச்சி. இன்னைக்கு வரைக்கும் அந்த கேள்வி அவர ஏன் அவ்வளவு பாதிச்சதுன்னு தெரியலை. என்ன சோகமோ பாவம்.

அடுத்து ஜெயசுதாவுக்கு வருவம். சென்னையை ஓரளவுக்குத் தெரிந்தவர்களுக்கு கிராண்ட் ஸ்வீட்ஸ் தெரிந்திருக்கும். கோட்டூருக்கும் அடையாருக்கும் இடையில் காந்தி நகரில் முழுவதும் பெண்களை வைத்தே நடத்தப்படும் இனிப்பகம் அது. அங்கு இனிப்பு உறைப்பு வகைகள் எல்லாம் கிடைக்கும். சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்த இனிப்பகம் இன்று நிறைய வளர்ந்துள்ளது.

வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பதால் சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு ஏதாவது வாங்கி வருவது என்பது வழக்கம். அங்கு மற்றொரு சிறப்பம்சம் கொசுறு. ஆமாம். ஏதேனும் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்தால் ஒரு சீட்டு தருவார்கள். அந்தச் சீட்டைக் காட்டினால் தொன்னையில் ஏதேனும் நல்ல தின்பண்டம் தருவார்கள். நெய்யொழுகும் சர்க்கரைப் பொங்கலோ, கருவேப்பிலை கமகமக்கும் புளியோதரையோ, ஏலம் போட்ட பாயாசமோ, இஞ்சி இட்ட தயிர்ச்சோறோ....ஏதோ ஒன்று சுவையாகத் தருவார்கள். அதற்கே ஒரு கூட்டம் போகும். கேட்டால் ஒரு பிளாஸ்டிக் பை தருவார்கள். அதில் தொன்னையை வைத்து வீட்டுக்கும் கொண்டு செல்லலாம். அனைத்துப் பண்டங்களும் நெய்யில்தான் தயாராகின்றன. இப்பொழுது மற்ற இனிப்பு வகைகளுடன் காரப்பணியாரமும் போடுகிறார்கள். நன்றாக இருக்கிறது.

அந்தக் கடையில் ஒரு முறை மாலைவேளையில் இனிப்புகள் வாங்கச் சென்றேன். ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தேன். மிகவும் வெளிர் நிற சுடிதார் அணிந்து கொண்டு வந்திருந்தார் ஜெயசுதா. மிகவும் மெல்லிய அலங்காரம் அவரை அழகாகக் காட்டியது. என்னுடைய பெங்காலி நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்திருந்த பொழுது டிவியில் பாக்தாத் பேரழகி ஓடிக்கொண்டிருந்தது. அதில் வந்த ஜெயசுதாவைப் பார்த்து தென்னிந்தியப் பெண்கள் அழகானவர்கள் என்று அவன் பாராட்டியது நினைவிற்கு வந்தது. அடுத்த காட்சியிலேயே சிலம்பமெடுத்து சண்டை போடும் பெண் ஜெயலலிதா என்று தெரிந்து மிரண்டு போனான் அந்த நண்பன். இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

சரி. நாம் சந்திப்பிற்கு வருவோம். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவரிடம் வணக்கம் சொன்னேன். உரையாடல் ஆங்கிலத்தில் இருந்தது. அவருடைய ஆங்கிலமும் எளிமையாக பிசிறில்லாமல் இருந்தது. படித்தவராக இருக்க வேண்டும். அவருடைய படங்கள் பலவற்றைப் பார்த்திருப்பதாகச் சொன்னேன். அவரது முகத்தில் அது மலர்ச்சியைக் கொடுத்தது. அபூர்வ ராகங்கள் படத்தைக் குறிப்பிட்டு அதில் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததைப் பாராட்டினேன். அதை பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டார். அந்நேரம் நினைவுக்கு வந்த படங்களைப் பற்றிச் சொன்னேன். பிறகு அவர் என்னைப் பற்றிக் கேட்டார். கடைசியாக அவரிடம் ஆட்டோகிராப் கேட்டேன். கையில் ஒரு புத்தகமும் இல்லை. பர்ஸில் துழவி வங்கி ஸ்டேட்மெண்ட் தாளின் பின்பக்கத்தைக் காட்டினேன். "Jesus Saves" என்று எழுதிக் கையொப்பமிட்டார். அவரைச் சந்திப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்தான் பத்திரிக்கையில் அவர் மதம் மாறியது தெரிந்திருந்தது. ஆகையால் அவருடைய கையொப்பம் எனக்கு வியப்பளிக்கவில்லை.

இன்னொரு ஆச்சரியம் இரண்டு நாட்களுக்கு முன்பு (9-10-2004). பெங்களூரில் ஒரு பிரபலத்தைச் சந்தித்தேன். மிகவும் வியப்பான சந்திப்பு அது. அது பற்றி அடுத்த முறை சொல்கிறேன்.

மர்மத்துடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
11-10-2004, 08:41 PM
இராகவன் அண்ணா, உங்கள் சந்திப்புகள் ஒவ்வொன்றும் ஒருவிதம், அத்தனையும் இனிமையானவை.

அடுத்த நபர் யார் என்று அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

இளந்தமிழ்ச்செல்வன்
12-10-2004, 06:30 PM
நல்ல வேளை கோ. இராகவன் அவர் பாட்டுக்கு அடுக்கு மொழியில் அவுத்து உட்டிருந்தா பாவம் நீங்க. தப்பிச்சீங்க.

ஜெய சுதாவுடனான இனிப்பான சந்திப்பு இனிப்பு கடையிலேயெ நடந்தது பார்த்திபன் கவிதை போல இருந்தது.

அடுத்து யார்?

ஆவலுடன்

gragavan
13-10-2004, 09:41 AM
நல்ல வேளை கோ. இராகவன் அவர் பாட்டுக்கு அடுக்கு மொழியில் அவுத்து உட்டிருந்தா பாவம் நீங்க. தப்பிச்சீங்க.

அது உண்மைதான. இல்லீனா நான் துண்டக் காணம் துணியக் காணம்னு பாண்டி பஜாருல ஓட வேண்டியிருந்திருக்கும். இன்னும் சொல்லப்போன அவருக்கு அந்த வாய்ப்ப நான் குடுக்கலையே! உடனே சுதாரிச்சிக்கிட்டு ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்துட்டேனெ!ஜெய சுதாவுடனான இனிப்பான சந்திப்பு இனிப்பு கடையிலேயெ நடந்தது பார்த்திபன் கவிதை போல இருந்தது.
ஆமாம். இனிப்புக் கடையில் இனிய சந்திப்பு. :-)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
13-10-2004, 09:42 AM
அடுத்த சந்திப்பு யாரோடன்னு சொல்லவா! நான் சொல்ல உங்களுக்க அவா அல்லவா!
அக்டோபரு ஒம்பதாந் தேதி சனிக்கெழம காலைல பெங்களூரு இந்திரா நகருல இருக்குற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குப் போனேன். ஒரு ஒம்பதர இருக்கும். உள்ள போயி பாஸ்புக்க குடுத்துட்டு நின்னுக்கிட்டிருந்தேன். உள்ள வரிவைய நாற்காலி போட்டிருக்கும். நிக்காம சொகுசா உக்காந்துக்கிறத்தான். வாடிக்கையாளர் சேவையாம். இங்க பெங்களூர்ல ரயில்வே டிக்கட்டு எடுக்குற எடத்துலயும் வரிசைல நிக்க முடியாது. வரிசைல உக்காந்துக்கலாம். நல்ல வசதி.

சரி. கதைக்கு வருவம். அந்த வரிசைல கூட்டமில்ல. அங்கொருத்தரு இங்கொருத்தருன்னு உக்காந்திருந்தாங்க. அதுல ஒரு அம்மா, வயசானவங்க, கூட மக வயசுப் பொண்ணோட உக்காந்திருந்தாங்க. அவங்களப் பாத்ததுமே எனக்குச் சந்தேகம். இவங்க அவங்களா? அவங்க எங்க இங்க வந்தாங்க? போய்க் கேட்டுருவமான்னு யோசிச்சேன். எப்பிடிக் கேக்குறது. அவங்க இல்லைன்னா என்ன நெனப்பாங்க. சரின்னு பேங்கு வேலய முடிச்சிட்டு அவங்ககிட்ட போனேன். நீங்க அவங்கதான்னு கேட்டேன். அவங்க மொகத்துல மலர்ச்சி. ஆமாம்னு சொன்னதும் எனக்கும் சந்தோசம்.

அட அவங்க யாருன்னு சொல்லலையே! க்ளூ குடுக்குறேன். கண்டுபிடிங்க. கண்டுபிடிச்சதும் அவங்ககிட்ட என்ன பேசுனேன்னு சொல்றேன்.

அவங்க ஒரு பின்னனிப் பாடகி. ஆதி மனிதன் காதலுக்கு அடுத்த காதலுக்குப் பாடிய பாடகி. கண்டுபிடிச்சிருப்பீங்களே!

புதிருடன்,
கோ.இராகவன்

பாரதி
13-10-2004, 10:18 AM
பிரபல சந்திப்புகளை சுவையுடன் தந்து கொண்டிருக்கும் நண்பருக்கும், இராகவனுக்கும் நன்றி. க்ளூ கொடுக்குறீங்க... சரி... கதயச் சொல்லுங்க இராகவன்.

தஞ்சை தமிழன்
13-10-2004, 10:31 AM
ஜிக்கி?

மன்மதன்
13-10-2004, 10:38 AM
ஜெயசுதாவுக்கு அப்புறம் ஜிக்கி..கலக்கலா தொடரும் இராகவனுக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
13-10-2004, 11:00 AM
ஜிக்கி?

கண்டிப்பாக இருக்காது, காரணம் அவர்கள் சமீபத்தில் தான் இறைவனடி சேர்ந்தார்கள். :oops: :cry:

gragavan
13-10-2004, 01:08 PM
ஜிக்கி?

கண்டிப்பாக இருக்காது, காரணம் அவர்கள் சமீபத்தில் தான் இறைவனடி சேர்ந்தார்கள். :oops: :cry:கரெக்ட் தம்பி. அதான் அவுங்க பாடுன பாட்டயும் சொல்லீருக்கேனே! அதுவும் நல்ல பாட்டுதானே! அவங்க பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.

புதிருடன்,
கோ.இராகவன்

தஞ்சை தமிழன்
13-10-2004, 01:34 PM
ராஜேஸ்வரி என்பது சரியா?

நான் சிரித்தால் தீபாவளி பாடியவர்தானே?

பரஞ்சோதி
13-10-2004, 01:39 PM
ஜமுனா ராணி என்பது சரியா?

சும்மா கும்சா பதில் தான்

gragavan
14-10-2004, 04:39 AM
ராஜேஸ்வரி என்பது சரியா?

நான் சிரித்தால் தீபாவளி பாடியவர்தானே?இல்லை தமிழன். இல்லை. அவங்க வேற. இவங்க வேற.

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
14-10-2004, 04:40 AM
ஜமுனா ராணி என்பது சரியா?

சும்மா கும்சா பதில் தான்தம்பி.
நீ அவரஞ்சிக் கம்பி.
எவருக்கும் அஞ்சா வம்பி.
உனக்கு முன்னே யாரும் குதிப்பாரோ எம்பி.
எந்தப் புதிரும் போடுவேன் உன்னை நம்பி.
நீ சொன்னது சரியே. சரியே. சரியே.

சரி. ஒரு வழியாக் கண்டுபிடிச்சாச்சு. பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகி ஜமுனாராணிதான் அவங்க. ரொம்ப வயசாத் தெரிஞ்சாங்க. நானு அவங்களக் கண்டு பிடிச்சதுல அவுங்களுக்கு ரொம்பச் சந்தோசம். எப்பிடிக் கண்டுபிடிச்சேன்னு ஆச்சிரியமாக் கேட்டாங்க. டிவில பாத்துருக்கேன்னு சொன்னேன். அவுங்க மருமகளோட வந்திருந்தாங்க. இப்ப இங்க வந்துட்டாங்களாம். கச்சேரின்னு கூப்புட்டா சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் போறாங்களாம். அவங்க பதிமூனு பதினாலு வயசுல பாடவந்தாங்களாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாப்பது அஞ்சுல. அவங்க பாட வந்தே அறுவது வருசம் ஆயிப்போச்சு. அவுங்க தாய்மொழி தெலுங்காம். இருந்தும் உச்சரிப்பு நல்லாயிருந்துச்சேன்னு கேட்டேன். சென்னையில பொறந்து வளந்ததால தமிழு நல்ல பழக்கமாம். பேச்சுவாக்குல சுசீலா, ஜானகி, லீலா மாதிரிப் பாடகிகள நெனவு வச்சிருந்து சொன்னாங்க. அப்புறம் அவங்க பாட்டுகள் செலதச் சொல்லி நல்லா பாடியிருந்தாங்கன்னு சொன்னேன். அவங்க அத ரொம்பச் சந்தோசமா கேட்டுக்கிட்டாங்க. இன்னைக்குப் பாட்டுகளப் பத்திப் பேசுனோம். உச்சரிப்பு பத்தி கொஞ்சம் வருத்தமாச் சொன்னாங்க.

இந்த வாட்டியும் கையில ஆட்டோகிராபு வாங்க எந்தப் புத்தகமும் இல்ல. டெலிபோன் பில்லு கட்டுன ரசீது இருந்திச்சி. அதுல பின்னாடி வாழ்த்திக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாங்க. இங்லீசுல போட்டுக் குடுத்தாங்க. அப்புறம் அவங்களுக்கு நன்றி சொல்லீட்டு பொறப்பட்டுட்டேன். அம்புட்டுதேங்.

அன்புடன்,
கோ.இராகவன்

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2004, 05:55 PM
மன்றத்தின் பிரபலத்தை காணும் ஆவலில் சென்னை சென்று இருந்தேன். ஆனால் தலைமைச் செயலகம் சாலையில் முதல்வர் பொம்மை போல் அவரின் வாகனத்தில் செல்ல நானும் என் வாகனத்தில் எதிர்புறம் சென்று கொண்டிருந்தேன்.

உடனே நம்ம இராகவன் நினைவுதான் வந்தது. அவராயிருந்தால் எப்படியேனும் எதிலேனும் கையொப்பம் வாங்கியிருப்பார். நாம்...

இரவு இருப்பு வண்டி நிலையத்தில் பரவை பாட்டியைப் போல் ஒருவரை (அவராகவும் இருக்கலாம்) பார்த்தேன். மிகவும் சோர்வாக இருந்ததால் வண்டியை விட்டு இறங்கவே இல்லை.

பரஞ்சோதி
06-11-2004, 06:58 AM
ஜமுனா ராணி என்பது சரியா?

சும்மா கும்சா பதில் தான்தம்பி.
நீ அவரஞ்சிக் கம்பி.
எவருக்கும் அஞ்சா வம்பி.
உனக்கு முன்னே யாரும் குதிப்பாரோ எம்பி.
எந்தப் புதிரும் போடுவேன் உன்னை நம்பி.
நீ சொன்னது சரியே. சரியே. சரியே.

சரி. ஒரு வழியாக் கண்டுபிடிச்சாச்சு. பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகி ஜமுனாராணிதான் அவங்க. ரொம்ப வயசாத் தெரிஞ்சாங்க. நானு அவங்களக் கண்டு பிடிச்சதுல அவுங்களுக்கு ரொம்பச் சந்தோசம். எப்பிடிக் கண்டுபிடிச்சேன்னு ஆச்சிரியமாக் கேட்டாங்க. டிவில பாத்துருக்கேன்னு சொன்னேன். அவுங்க மருமகளோட வந்திருந்தாங்க. இப்ப இங்க வந்துட்டாங்களாம். கச்சேரின்னு கூப்புட்டா சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் போறாங்களாம். அவங்க பதிமூனு பதினாலு வயசுல பாடவந்தாங்களாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாப்பது அஞ்சுல. அவங்க பாட வந்தே அறுவது வருசம் ஆயிப்போச்சு. அவுங்க தாய்மொழி தெலுங்காம். இருந்தும் உச்சரிப்பு நல்லாயிருந்துச்சேன்னு கேட்டேன். சென்னையில பொறந்து வளந்ததால தமிழு நல்ல பழக்கமாம். பேச்சுவாக்குல சுசீலா, ஜானகி, லீலா மாதிரிப் பாடகிகள நெனவு வச்சிருந்து சொன்னாங்க. அப்புறம் அவங்க பாட்டுகள் செலதச் சொல்லி நல்லா பாடியிருந்தாங்கன்னு சொன்னேன். அவங்க அத ரொம்பச் சந்தோசமா கேட்டுக்கிட்டாங்க. இன்னைக்குப் பாட்டுகளப் பத்திப் பேசுனோம். உச்சரிப்பு பத்தி கொஞ்சம் வருத்தமாச் சொன்னாங்க.

இந்த வாட்டியும் கையில ஆட்டோகிராபு வாங்க எந்தப் புத்தகமும் இல்ல. டெலிபோன் பில்லு கட்டுன ரசீது இருந்திச்சி. அதுல பின்னாடி வாழ்த்திக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாங்க. இங்லீசுல போட்டுக் குடுத்தாங்க. அப்புறம் அவங்களுக்கு நன்றி சொல்லீட்டு பொறப்பட்டுட்டேன். அம்புட்டுதேங்.

அன்புடன்,
கோ.இராகவன்

உங்கள் சந்திப்பு அருமை, அதிலும் அவரை கண்டுபிடித்து, அவரது பாடல்கள் பற்றி பேசியது வியப்பானது.

தொடரட்டும் உங்கள் சந்திப்புகள்.

பரஞ்சோதி
06-11-2004, 07:00 AM
மன்றத்தின் பிரபலத்தை காணும் ஆவலில் சென்னை சென்று இருந்தேன்.

இரவு இருப்பு வண்டி நிலையத்தில் பரவை பாட்டியைப் போல் ஒருவரை (அவராகவும் இருக்கலாம்) பார்த்தேன். மிகவும் சோர்வாக இருந்ததால் வண்டியை விட்டு இறங்கவே இல்லை.

யார் அந்த பிரபலம்? தலை தானே?

அய்யா இளந்தமிழரே!

பரவை பாட்டியாக இல்லாமல் அழகு ஐஸ்ஸாக இருந்தால் நைஸாக இறங்கி ஆட்டோகிராப் வாங்கி இருப்பீங்களா இல்லையா?

அமரன்
30-05-2008, 05:01 PM
சுவாரசியமான சந்திப்புகளின் கோர்வை. படிக்க படிக்க பல்வகை உணர்வுகளை தந்தது
நான் சந்தித்த பிரபல்யங்கள் பலருக்கு பரிச்சியமில்லாதவர்கள்.
பிரபலங்களுடனான உங்கள் சந்திப்புகளையும் சுவைக்கத் தாருங்களேன்.

Narathar
30-05-2008, 08:02 PM
இந்தத்திரியை இன்றுதான் பார்க்க முடிந்தத்து...... எங்கே நம்மவர்கள் வெறும் வாழ்த்துத்திரிகளையல்லவா உயிரூட்டுகின்றார்கள்?? இல்லையா அமரன்?? நாராயணா!!!!!

நான் இருப்பது ஊடகத்துறை என்பதால் பல பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்புக்கள் தானகவே அமைந்தன...
பலதர்ப்பட்டவர்களை சந்த்தித்திருக்கின்றேன்.. சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கட் வீரர்கள், பாடக பாடகிகள், அரசியல்வாதிகள் என்று என் பட்டியல் நீளும்.. ( பெருமைக்காக சொல்லவில்லை என் தொழில் அப்படி )

முதலில் என்னை பெரு வியப்பிலாழ்த்திய ஒரு அரசியல் வாதியின் சந்திப்பைப்பற்றி இங்கு குறிப்பிட ஆசைப்படுகின்றேன்....

அவர் முன்னாள் ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா. இலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டவர். பிறகு ஒரு பிரச்சணையில் மட்டிக்கொண்டு இப்போது அரசியலை விட்டே தூரமாக இருக்கின்ரார். அது என்ன பிரச்சணை என்பதை இங்குள்ள இலங்கை உறுப்பினர்கள் அறிவார்கள். அதைப்பற்றி நான் இங்கு பேச வரவில்லை. அலிசாஹிர் மௌலானா என்ற தனிப்பட்ட மனிதரைப்பற்ரித்தான் இங்கு சொல்லப்போகின்றேன்....

அவர் ஒரு முறை அவரது ஊடக செயலாளர் மூலம் என்னை அவரது கொழும்பு வீட்டில் நடைபெரப்போகும் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். ஆனால் அரசியல் வாதிகள் நடத்தும் அந்த விருந்தில் கலந்து கொள்ள நான் விரும்பவில்லை.. அந்த நேரத்தில் நான் அலிஸாஹிர் மௌலானா அவர்களை அவ்வளவாக அறிந்திருக்கவும் இல்லை... அதனால் அந்த விருந்துக்கு செல்வதை தவிர்த்தேன்....

சில நாட்களுக்கு பிறகு எனக்கொறு தொலைபேசி அழைப்பு வந்தது மறு முனையில் ஆளும் கட்சி உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா... ஏன் விருந்துக்கு வரவில்லை என்று அன்பாக கேட்டார். அவரது பணிவு அவரது மனம்நோக பதில் சொல்லக்கூடாது என்று எனக்கு சொல்லியது...

"இல்லை அரசியல் வாதிகளோடு தனிப்பட்ட நட்பு வைத்திருக்க கூடாது என்பது எமது நிறுவன விதி.. அது தான் வர முடியவில்லை" என்று சமாளித்தேன்...

பரவாயில்லை... உங்களது நிகழ்ச்சிகளை எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிகப்பிடிக்கும்..நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம் என்றார்...

நான் வர முடியாமைக்கு எனது மனவருத்ததை சம்பிரதாயமாக தெரிவித்துக்கொண்டேன்.. அது வரையில் அவரை நான் ஒரு சாதரண அரசியல் வாதியாகத்தான் பார்த்தேன்.. ஆனால் ஆசர்யம் அவர்,

"நீங்கள் தான் வந்து என்ன சந்திக்கக்கூடாது நான் வந்து சந்திக்கலாமல்லவா? " என்றார்..

நானும் சும்மா சம்பிரதாயத்துக்கு சொல்கிறார் என்று "ஓஹ் கட்டாயமாக வரலாம் என்ரேன்" அவ்வளவு பெரிய அரசியல் வாதி நம்மை எங்கே பார்க்க வரப்போகின்றார் என்ற நினைப்பில்...

ஆனால் எனது நினைப்பை பொய்யாக்கிய அவர், சில நாட்களின் பின்னர் ஒரு சாதாரண ரசிகரைப்போன்று தனது குடுமப்த்தோடு எனது அலுவலகம் வந்து "ரிஸப்ஷன்" பெண்ணிடம் சொல்லி என்னை கூப்பிட்டார்....

நான் சென்று பார்த்தால் எனக்கு இனிய அதிர்ச்சி... ஆளும் தரப்பின் அரசியல் பிரமுகர் அதுவும் பதவியில் இருக்கும் போது சாதரண அறிவிப்பளரான என்னை சந்திப்பதற்காக அதுவும் எனது அலுவலக லொபியில் காத்திருக்கின்றார்.

அதுதான் எங்கள் முதல் சந்திப்பு.. அவரது பேச்சில் அவர் எவ்வளவு தூரம் கலையை நேசிக்கின்றார் என்பதை புரிந்து கொண்டேன்... எனது நிகழ்ச்சியைப்பற்ரி அவர் பேசுகையில் அவர் எனது நிகழ்ச்சியை தவறது கேட்பவர் என்பது புரிந்தது... எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

சில நிமிடங்கள் கதைத்தபின் அன்போடு விடைபெற்றுச்சென்றார். அதன் பின்னர் தொலை பேசியில் நாங்கள் பேசிக்கொண்டாலும் ஓரிரு தடவைக்குமேல் நாங்கள் சந்த்தித்துக்கொள்ளவில்லை... அவரும் என்னோடிருக்கும் நட்பை பயன் படுத்தி அரசியல் இலாபம் தேட முனையவும் இல்லை.. அதனால் அவர் மீதிருந்த மரியாதை எனக்கு இன்னுமின்னும் கூடியது...

அரசியல் பிரச்சணைகளை தவிர்த்து பார்க்கும் பொழுது இன்று கூட அவரைப்பற்றிய நல்லெண்ணம் என்னிடம் அப்படியேதான் இருக்கின்றது. ஆனல் இப்போது அவர் என்னோடு தொடர்பில் இல்லை. நானும் ஊர் ஊராக சுற்றுவதால் அவரை நீண்டகாலம் தொடர்பு கொள்ளவும் கிடைக்கவில்லை... அவர் இலங்கை அரசியல் சாகடையில் சிக்கி தனது பதவியை இராஜினாமாச்செய்துவிட்டு இப்பொது சொந்த வாழ்க்கையில் ஈடு பட்டுள்ளர்....

எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு இனிமையான அரசியல் வாதியாக நான் அவரை பார்க்கின்றேன்... அவர் நல்ல மனதுக்கு எங்கிருந்தாலும் அவர் நன்றாக இருப்பார்.

அடுத்து நான் சொல்லப்போகும் பிரபலம் சமிந்த வாஸ் ( இலங்கை கிரிக்கட் அணி வேகப்பந்து வீச்சாளர் )

அமரன்
30-05-2008, 08:15 PM
நாரா..
இந்த திரியை இன்றுதான் யுனிக்கோட்டுக்கு மாற்றினேன். உங்களையும், தாமரை அண்ணாவையும், ஆதியையும் இலைமறை காயாக இருக்கும் இன்னும் சிலரையும் குறிவைத்தே தீபத்தை தூண்டினேன்.. முதலாவதாக வெளிச்சத்தில் அகப்பட்ட உங்களுக்கு நன்றி.. சுவையான சம்பவத்தை சுவைக்கக் கொடுத்தமைக்கு விஷேட நன்றி.. (நன்றியிலும் ஸ்பெஷல், சாதான்னு இருக்குங்கோ)

Narathar
30-05-2008, 08:30 PM
நன்றியிலும் ஸ்பெஷல், சாதான்னு இருக்குங்கோ

அதாவது சாத நன்றின்னா... சும்ம பாராட்டுவது.. ஸ்பெஷல் என்றால் இ-பணம் தந்து பாராட்டுவது இல்லையா அமரன்???

சரி எனக்கெவ்வளவு சன்மானம்???? ( இப்படியாவது மலரை பீட் பன்னலாம் என்றுதான் ஹீ ஹீ ););)

mukilan
10-07-2008, 07:46 PM
சுவையான திரியை ஆரம்பித்த மன்மிக்கும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கட்கும் நன்றி.

நான் சந்தித்த திரைப்படம் சாராத பிரபலங்கள் என்றால் சைலேந்திரபாபு I.P.Sம், எம்.எஸ். சுவாமிநாதனும். சைலேந்திரபாபு இ.கா.ப. அவர்களும் வேளாண்மைப் பட்டதாரிதான். கடலூர் மாவட்ட தலைமைக் காவல் அதிகாரியாக இருக்கையில் நான் அவரை சில முறை சந்திததுண்டு. எல்லாமே அலுவல் ரீதியாகத்தான் (விழாக்களுக்கு அழைக்கப் போயிருக்கிறேன். இந்திய அரசு ஆட்சிப்பணி போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்ய அவர் எங்களுக்கு அறிவுரை வழங்குவது உண்டு)

எம். எஸ். சுவாமிநாதனை கனடாவில் எங்கள் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள். நான் மட்டுமே எங்கள் துறையில் தமிழன் என்பதாலோ என்னவோ அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு எளிதாகக் கிட்டியது. அவருடன் இந்திய வேளாண்மையின் நிலை குறித்தும், அவர் தலைவராக இருக்கும் இந்திய விவசாயிகள் அமைப்பு பற்றியும் விவாதிக்க முடிந்தது. சர்வதேச அளவில் மிகப்பெரும் விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தலைவர் என பெரிய பதவிகளை வகித்த அவர் மிக எளிமையான மனிதர். பிரச்சினைகளைக் களைய நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறார். ஆனால் அரசியல்...??

எனக்குத் தெரிந்த மற்ற பிரபலங்கள் எல்லாம் திரைப்படத்துறையினர்தான்.நான் சென்னை சாலிகிராமத்தில்(விருகம்பக்கம் சாலிகிராமம் பார்டருங்கோ) பள்ளியில் படிக்கையில் என்னுடன் படித்த சில மாணவர்கள் அப்பொழுது குழந்தை நட்சத்திரமாக இருந்தார்கள். மாஸ்டர்.சுரேஸ், மாஸ்டர். டிங்கு, பேபி சோனியா(டிங்குவின் அக்கா).நான் கிராமத்தில் இருந்து முதன் முதலாக சென்னைக்கு சென்றிருந்ததால் யாரிடமும் பேசுவதற்குக் கூட தயக்கம் காட்டுவேன்.ஆண்பாவம் திரைப்படத் தயாரிப்பாளரின் மகன் எங்கள் வீட்டிற்குப் பக்கம், என் வகுப்பும் கூட. அவனுடன் தான் முதன் முதலில் பழக ஆரம்பித்தேன்.எங்களது பெயர்களும் அடுத்தடுத்து இருப்பதாலோ என்னவோ எங்கள் நட்பும் அடுத்தடுத்து வளர்ந்தது. அப்பொழுது இயக்குனர் சீமான், சைமன் அங்கிள் என்றே எங்களால் அழைக்கப்பட்டார். சீமான் மற்றும் பாண்டியராஜன் அவர்கள் வீட்டில் அடிக்கடி சந்தித்து கதை பற்றி விவாதிப்பார்கள். சீமான் அவர்களுடன் தினமும் அரட்டையடித்து பொழுது போக்கிய காலங்கள் உண்டு. இப்பொழுது போல கருப்பு சட்டை அணிவதில்லை. வெள்ளை முழுக்கைச் சட்டை மற்றும் அப்பொழுதைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு அணிவார்.

அதற்குப் பின் 2002 - 2004ம் ஆண்டு கால கட்டங்களில் நண்பர்களுடன் வீடெடுத்து அதே சாலிகிராமத்தில் தங்கி இருந்தேன். மயில்சாமி, நாசர், இளவரசு போன்ற நடிகர்கள் அவ்வப்பொழுது நான் உண்வருந்தும் அதே உணவகத்தில் மாலை நேரங்களில் சிறு சிற்றுண்டி உண்ண என்னெதிரே கூட அமர்ந்ததுண்டு. அவர்களுடன் பேசவேண்டும் என்ற எண்ணம் ஏனோ தோன்றவே இல்லை.

மலேசியா வாசுதேவன் எங்கள் வீடு இருந்த தெருவின் முக்கில் உள்ள வீட்டுக்காரர். தினமும் காலையில் சுவற்றில் உள்ள பிள்ளையாரைப் பூஜை செய்வார். முதலில் தயக்கத்தோடு பார்த்தாலும் பின்னர் தினமும் பார்த்து சினேகமுடன் பேசிக்கொள்ளும் நபர்களானோம்.அவரிடமே வெட்டி வேரு வாசம் என்று பாடிக் காட்டியதுமுண்டு.

பாடகி மகதி.. அவரது தந்தையோ தாயோ தங்களது மகதி இசைப்பள்ளியின் மூலம் அங்கே உள்ள மற்ற குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுத்ததுண்டு.அப்போது செல் போன்கள் கட்டணம் விண்ணைத் தொடுவதாக இருந்த காலகட்டம். வரும் அழைப்புகளுக்கு கூட அதிகம் கட்டணம் செலுத்த வேண்டும். நான் அடிக்கடி செல்லும் பொது தொலைபேசி மையம் ஒன்று உண்டு. அதில் ஒளிநகலும் எடுத்து கொடுப்பர்கள். அந்தக் கடையில் வேலை செய்த பையன் எனக்கு நன்கு பழக்கமென்பதால் நான் அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன். எனக்கு நகல் எடுக்க வெண்டியவற்றை அவனிடம் கொடுத்து விட்டு நகல் எடுத்து வைக்குமாறு கூறிவிட்டுச் சென்று விடுவேன்.பின்னர் மாலை திரும்புகையில் எடுத்துக் கொள்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் வாங்கி வந்து விட்டு வெளியேறி என் இரு சக்கர வாகனத்தை அடைவதற்குள் மகதியும், அந்தப் பையனும் வந்து விட்டர்கள். என்னவென்று விசாரித்தால் அந்தப்பையன் என்னிடம் அண்ணா உங்கள் புத்தகத்தில் இவர்களின் ஓட்டுனர் உரிமம் உள்ளதா எனக்கேட்டான். பின்னர்தான் தெரிந்தது நகலெடுக்க கொடுத்த ஓட்டுனர் உரிமத்தை பையன் தவறாக என் புத்தகத்தில் வைத்தது. உடனே எடுத்துக் கொடுத்தேன் நன்றி சொல்லி சென்றார்கள். பின்னர் எங்கே கண்டாலும் புன்னகைப்பார் மகதி.

இவ்வளவுதான் பிரபலங்களோடு என் அனுபவம்.

அறிஞர்
10-07-2008, 07:58 PM
பிரபலங்களுடன் பழகிய நம் பிரபலங்களின் வரிகள் அருமை...
அடுத்து தொடரப்போவது யாரு???

aren
11-07-2008, 03:23 AM
வாவ்!!! அருமையான சந்திப்புகள். தொடருங்கள்.