PDA

View Full Version : அழைப்புஇளசு
22-03-2004, 10:07 PM
அழைப்பு


தங்கைக்கும் தம்பிக்கும்


சொல்லிக்கொடுத்தால் மறந்துவிடும்..
நேரிடையாய் செய்துகாட்டினால் நினைவிருக்கும்
நீயும் கலந்து செய்துபார்த்தால் மட்டுமே
கற்றுக்கொடுக்கும்....


அப்படி கற்றுக்கொடுக்க காத்திருக்கேன்...
என்னில் எரியும் தழலை
அணைவதற்குள் உன்னில்
உன்னால் பின்னர் பலரில்
ஏற்றிவைக்கக் கனன்றிருக்கேன்...

ஆதாரங்கள் சொல்லி பின்னர்
சிகரங்கள் சுட்டி
ஏறமுடியும் உன்னால் என்ற
நம்பிக்கையும்
வழுக்கிவந்தால் வாஞ்சை காட்டி
மீண்டும் அனுப்பி வைக்கும் பொறுமையுமாய்
உனக்காக காத்திருக்கேன்...

உன்னை ஒரு மாணவராய் எண்ணாமல்
சகமனிதனாய் எண்ணி
குறை களைய இருவரும் சரிசமம் என்றபடி
வளர்த்து வளர்ந்துவிட
வழி பார்த்து காத்திருக்கேன்...

பரஸ்பர மரியாதை நம் மதம்..
என்னால் எப்போதும் ஊக்கம், ஆதரவு
என் கருத்து தவறென்று நீருபண
வாதம் செய்ய எப்போதும் உரிமை உனக்குண்டு..

உன் குடங்களை நிரப்ப நீரில்லை என்னிடம்..
உன் மனவன மரங்களை
ஆலக்கால சுவாலையாக்க
அக்னிக்குஞ்சு உண்டு கைவசம்..

இதோ பார்...இது என்ன..?
ஒரு பதிலுக்குள் கட்டுப்படு..
சரி.. ஏன் அது என்றாய்?
உன் பதிலுக்கு நியாயம் சொல்லு..
இதைப்பற்றி பொதுவாய் இன்னும் சொல்வேன்..அறி..
இன்று கற்றலில் என்ன சிறப்பாய் செய்தாய்?
இன்னும் எதை செப்பனிட எத்தனிப்பாய்?

தவறு, அவமானம்...
இந்த வார்த்தைகள் இங்கே அந்நியம்..
அவசரமில்லாமல் மீண்டும் சொல்ல
அண்ணன் இருக்கையில் ஏன் சஞ்சலம்?

கற்றல் என்பது வாழ்நாள் அனுபவம்..
கற்கும் கனல் உன்னில் எரிவதே முக்கியம்...
அவ்வளவுதான்.. அதிக பட்ச சிறப்பாய் இதைக்
கற்றுவிட்டேன் என்பவன் கல்லறைக்குச் சமம்..

கற்றல், செதுக்கல், செப்பனிடல்...
உயிருள்ளவரை உடன் வரும் தவம்..
கற்றலுக்கு உச்சவரம்பு என்பதே இல்லை
உணர்ந்தவன் வசமே இன்னும் உயர்வுகள் வரும்..


விரிவுரையாய்க் கேட்டால் ஐந்தே சதம்..
விரித்த புத்தகம் வழியே பத்து சதம்..
படம் காட்டி பேசும் உத்திகளில் முப்பது..
கலந்துரையாடல், விவாதங்களில் நாற்பது, ஐம்பது..


மூளையில் எற்றிக்கொள்ளும் விகிதம் இவ்வளவுதான்
இம்முறைகளில்...

கற்பித்தலே கற்றலின் மேலான மார்க்கம்..
சொல்ல வந்ததில் என்னுள் தங்குவது
குறைந்தபட்சம் எண்பது சதம்...

இப்போது புரிந்ததா
என் அழைப்பின் சுயநலம்..
அறிந்த உன்னை அழைக்கிறேன்..
வளர்த்து வளர்ந்துவிட
வழி பார்த்து காத்திருக்கேன்...

Mano.G.
22-03-2004, 11:02 PM
அழைப்பு

விரிவுரையாய்க் கேட்டால் ஐந்தே சதம்..
விரித்த புத்தகம் வழியே பத்து சதம்..
படம் காட்டி பேசும் உத்திகளில் முப்பது..
கலந்துரையாடல், விவாதங்களில் நாற்பது, ஐம்பது..


மூளையில் எற்றிக்கொள்ளும் விகிதம் இவ்வளவுதான்
இம்முறைகளில்...

கற்பித்தலே கற்றலின் மேலான மார்க்கம்..சொல்ல வந்ததில் என்னுள் தங்குவது
குறைந்தபட்சம் எண்பது சதம்...

இப்போது புரிந்ததா
என் அழைப்பின் சுயநலம்..
அறிந்த உன்னை அழைக்கிறேன்..
வளர்த்து வளர்ந்துவிட
வழி பார்த்து காத்திருக்கேன்...


கற்றலின் தத்துவத்தை தந்த இளசுவே
வாழ்க , உன் அண்மைய படைப்புக்களில்
ஒரு புது வேகத்தை கண்டேன்
ஏதோ என்னால் முடிந்தது இதுதான்
என்று சொல்லாமல் கற்பித்தலினால்
ஒரு உத்வேகத்தையும் சேர்த்துக்
கொடுக்கின்றாயே
அதை அப்படியே பிடித்துக்கொள்
நானும் வருகிரேன் உன்னோடு.

மனோ.ஜி

பாரதி
23-03-2004, 12:32 AM
தம்பி தங்கைகளை பாடம் கற்க அழைக்கும் அண்ணனின் அழகே தனிதான்..!!

kavitha
23-03-2004, 07:21 AM
நல்லது அண்ணா, விவாதிப்போம்.. விடை தேடுவோம். கற்போம்! கற்பிப்போம்!

இக்பால்
23-03-2004, 02:34 PM
:)

poo
23-03-2004, 03:04 PM
உன்போலொரு ஆசான் எனக்கிருந்தால்
உலகத்தை வசப்படுத்துவேன்....

உள்ளுக்குள் வேகத்தை உருவாக்கும் வரிகள்...

வாழ்த்துக்களும்.. பாராட்டுக்களும் அண்ணா..

நிலா
23-03-2004, 03:15 PM
மிக அருமை தலை!
இப்படி ஒரு அண்ணன் கிடைக்க இந்தத்தம்பி,தங்கைகள் என்னதவம் செய்தனரோ!

நன்றி அண்ணா!

karikaalan
23-03-2004, 03:54 PM
அதென்னவோ சரிதான் இளவல்ஜி. ஒரு பொருளைப் பற்றி அடுத்தவரிடம் விவரிக்கவேண்டும் எனும்போதுதான் அப்பொருளின் மெய்ப்பொருள் நமக்கே விளங்குகிறது.

வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கள் சேவையை.

===கரிகாலன்

இளசு
25-03-2004, 10:21 PM
கருத்து தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி

ஒரு நல்லாசிரியனின் பண்பாக இதை எழுதினேன்..
நான் அவனில்லை... :)


அழகென்ற விருந்தை பரிமாறும்போது பசியாறினேன்..
---கவியரசு திரைப்பாடல்

கற்பிப்பதாய் எண்ணி கர்வியிருந்தேன் -
உண்மையில் கற்றுக்கொண்டிருந்தேன்..
--இது புதுக்கவிதை!

sara
02-04-2004, 08:05 PM
உங்கள் 'பெரியண்ணா' கவிதை படித்துவிட்டு இதை படிக்கிறேன். அந்தப் 'பெரியண்ணா' இதுபோல் முன்வந்தால் எத்தனை 'தம்பி/தங்கைகள்' மேலெழுவார்கள்!!!

பாராட்டுக்கள் இளசு அவர்களே!