PDA

View Full Version : கவலைகள்..



rambal
01-04-2003, 08:24 AM
என் ஆயுளை நானே
கிழித்துக் கொண்டிருக்கிறேன்...
ஒரு நாள்
கிழிப்பதற்கு நாட்காட்டி இருக்கும்...
நான் இருக்க மாட்டேன்...
பின்பு நாட்காட்டியைக் கிழிப்பது யார்?
இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...

இந்த அழுக்கு பூமியைக் குளிப்பாட்ட வேண்டும்...
அன்று மனிதர்களை எல்லாம்
வானிற்கு அழித்துச்செல்லும்
சுற்றுலா தினமாக்கிவிடுவேன்...
அவர்கள் திரும்பி வரும் பொழுது
பூமி பளிச்சென்று இருக்கும்..
ஆனால், அவர்கள் சுற்றுலாவிற்கு வர மறுத்தால்?
இதைப் பற்றிய கவலைதான் எனக்கு...

பூக்களையும் பட்டாம்பூச்சிகளையும்
அழைத்து விருந்து கொடுக்க வேண்டும்..
நான் அவ்வப் பொழுது மகிழ்ச்சியாக
இருப்பதற்கு துணை செய்வதால்...
விருந்து பிடிக்கவில்லையென்றால்?
இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...

இப்படி என் கவலைகள்
நீண்டு கொண்டே போவதால்
ஒரு நாள் நான் கவலையை மறக்கவேண்டும்...
அப்படி மறக்க முடியவில்லையென்றால்?
இதைப் பற்றிய கவலைதான் எனக்கு...

இராசகுமாரன்
01-04-2003, 09:01 AM
ராம்பால்,

நன்றாக கவலைப்படுகிறீர்கள்.
பாராட்டுக்குரிய அழகிய வரிகள்.

ஆங்கில வார்த்தைகளை (கேலண்டர்)
தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

rambal
01-04-2003, 09:19 AM
நன்றி ராஜகுமாரன் அவர்களே..
நாட்காட்டி என திருத்திவிட்டேன்...
அடுத்த கவிதையில் இருந்து ஆங்கிலம் கலக்காமல் பார்த்துக் கொள்கிறேன்..

பொன்னியின் செல்வன்
01-04-2003, 10:08 AM
எப்போதும் கவலைப் படும் ஒருவரின் எதிரே ஒருநாள் கடவுள் தோன்றி அவருடைய ஒவ்வொரு கவலைகளையும் கேட்டு தீர்த்து வைத்தாராம். கடைசியில் ஒரு கவலையைக் கேட்டு கடவுளே திகைத்து போனாராம். அது, ''எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டால் எதை நினைத்து கவலைப் படுவது" என்பதாம்.
நண்பரின் கவலை அப்படித்தானோ?----நல்ல கவிதை: வாழ்த்துக்கள்.


---பொன்னியின் செல்வன்

anushajasmin
01-04-2003, 10:41 AM
நண்பரின் கவலைகள் மிக மென்மையான கவிதை.... தலைவரின் அங்கீகாரமும்
பொன்னியின் செல்வனின் கருத்தும் கவிதையை மேலும் அழகாய் காட்டுகிறது

aren
01-04-2003, 12:36 PM
ராம்பால் அவர்களே, இப்படி எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டால் என்ன செய்வது. வாழ்க்கையே இப்படியென்றால் .............. கொஞ்சம் கஷ்டம்தான். என்னையும் கவலைப்பட வைத்துவிட்டது.

கவிதை அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
01-04-2003, 07:18 PM
கவலை மறக்க கவிதை உண்டு
கவிதை பதிக்க மன்றம் உண்டு
படித்து ரசிக்க நண்பர் உண்டு
பறக்கும் கவலை உன்னைக் கண்டு....

Narathar
02-04-2003, 05:48 AM
நன்றாக கவலைப்படுகிறீர்கள்.
பாராட்டுக்குரிய அழகிய வரிகள்.


அவர் நன்றாக கவலைப்படுவதால் தான் நன்றாக கவிதையும் வருகிறது
கவலைதீர்ந்துவிட்டால் கவியூற்றும் வற்றிவிடுமாம்!!!!!! :lol: :lol:

Nanban
04-11-2003, 07:16 PM
கவலைப்பட வேண்டும் -நன்றாக
கவலையே நம்மைக் கண்டு
கவலைப்பட வேண்டும்.....

காதலிக்கும் காலத்தில்
கல்யாணம் ஆகுமா என்ற கவலை.....

கல்யாணம் ஆனபின்னே
கல்வி கற்கும் குழந்தைகள்
வேண்டுமென்ற கவலை......

கற்று வரும் குழந்தைகளைக் கண்டு
கல்வியை வாங்கித்
தர முடியுமா என்ற கவலை.....

கொடுத்த காசுக்கு
கிடைத்த கல்விக்கு
காசு பணம் சம்பாதிக்க
வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை.......

கற்ற குழந்தைக்கோ கவலை -
காதலிக்க நான் அனுமதிப்பேனா என்ற கவலை......

ஆஹா!!!

கவலையிலே ஒரு காலச் சக்கரம்
சுழன்று வந்து நின்றதே!!!

இனி எனக்குக் கவலையில்லை -
என் கவலைகளயும் சேர்த்து
கவலைப்பட
எனக்கொரு மகனுண்டு!!!

முத்து
04-11-2003, 08:43 PM
இனி எனக்குக் கவலையில்லை -
என் கவலைகளயும் சேர்த்து
கவலைப்பட
எனக்கொரு மகனுண்டு!!!


அருமை நண்பன் அவர்களே .. நன்றி ..
கவலைப்பட வைக்காத மகனிருந்தால் கவலையேது ... !

இளசு
05-11-2003, 12:00 AM
நண்பன் வடித்த வாழ்க்கை வட்டம்...
சிந்தனைச் சுழலை தூண்டி விட்டது....

rambal
14-11-2003, 05:54 AM
எதிர்பார்க்கவில்லை..
நீண்ட நாள் கழித்து இந்தக் கவிதைக்கு பதில் கவிதையை நண்பன்
எழுதுவார் என்று...
நன்றி நண்பன் அவர்களே...

Nanban
10-01-2004, 10:47 AM
நன்றி ராம்பால், இளசு, முத்து........

kavitha
11-01-2004, 04:48 AM
நல்ல கவ(வி)லை(தை)!
கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது... செயலில் இறங்குங்கள்,
சுபம் உண்டாகட்டும்.படைப்புகள் தொடரட்டும்.