PDA

View Full Version : தமிழ்த்திரையுலக இயக்குனர்கள் அலசல்rajeshkrv
14-02-2004, 09:05 AM
முத்திரை பதித்த இயக்குனர்கள் பற்றி இங்கே அலசலாமே

எல்.வி.பிரசாத் - இவர் இயக்குனர்களின் முன்னோடி
இவர் இயக்கிய இருவர் உள்ளம் இன்றும் பேசப்படும் படம்

இவருக்கு பின் பல இயக்குனர்கள் வந்தனர்

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், பாலசந்தர்
இவர்கள் மூவரும் பாத்திரங்களை படைப்பதில் வல்லவர்களாயினர்

பல இயக்குனர்கள் பற்றி அலசுங்கள்

தமிழ்
14-02-2004, 11:33 AM
எனக்குத்தெரிந்து பாலசந்தர் பிறகு பாரதி ராஜா பிறகு பாக்யராஜ் பிறகு
கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, சங்கர்.
இதில் நிறைய பேர் விட்டு போயிருக்கலாம்.

மன்மதன்
15-02-2004, 11:07 AM
ஒவ்வொருத்தரையும் தனித்தனியா அலசுங்க..அப்பத்தான் சுவார்ஸ்யமா இருக்கும்..

poo
15-02-2004, 03:37 PM
ஒவ்வொருத்தரையும் தனித்தனியா அலசுங்க..அப்பத்தான் சுவார்ஸ்யமா இருக்கும்..

அப்படின்னா.. முதல்ல "மூத்தவங்க நேரம்"...

என் ரேஞ்சுக்கு அலசல் வர இன்னும் பலநாள் ஆகலாம்...மன்மதன்!!

இளசு
15-02-2004, 10:19 PM
இந்தப்பதிவை இங்கே மாற்றியுள்ளேன் குருகுருவே.

இதையொட்டி ராம்பால் அவர்கள் ஆரம்பித்த ஒரு நல்ல இழை இங்கே..

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1174

rajeshkrv
16-02-2004, 12:16 PM
என்னை என்றும் கவர்ந்தவர் திரு.பாலசந்தர்
பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் அவரது கதைக்கு நட்சத்திரங்களை தேர்வு செய்வதாகட்டும், சிறிய இசையமைப்பாளராயினும் அவரிடம் வேலை வாங்கும் திறனாகட்டும், பாத்திர படைப்பாகட்டும் அவருக்கு நிகர் அவரே

தெய்வத்தாய், பூஜைக்கு வந்த மலர், சர்வர் சுந்தரம், நீலவானம்
போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதி
பின் நீர்க்குமிழி மூலம் இயக்குனராகிய இந்த மனிதர்
இயக்கிய படங்கள் அத்தனையும் முத்துக்கள்

எதிர்நீச்சல் மூலம் திரையுலகில் பலரை எதிர் நீச்சல் போட செய்தவர்
ஆம் நாகேஷ், ஜெயந்தி, வி.குமார், வாலி என பட்டியல் நீளும்

பூவா தலையா - வரலக்ஷ்மியும்,ஜெய்சங்கரும் போடும் ஜெண்டில் மேன் சபதம் இன்றும் மறக்கமுடியாத ஒன்று.

தாமரை நெஞ்சம் - தோழிகள் இருவர் ஒருவரை காதலிக்க ஒருவர் தியாகம் செய்ய ஆழமான கதை.

நவக்கிரகம்: குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையின்றி இருந்தால் என்னாகும் என்பதை பற்றி அழகாக சொல்லியிருப்பார்

புன்னகை - கதை - காட்சி என இந்த படம் ஒரு அழகு கவிதை. நேர்மையின் விலை என்ன என்பதற்கு சாட்சி

மேஜர் சந்திரகாந்த் - தங்கைக்காக அண்ணன் ஒருவனை பழிவாங்க ஒரு மேஜர் அதற்கு உதவ என கதை சூடு பிடிக்கும்

நாணல்: தப்பிய கைதிகள் நால்வர் வீட்டினில் புகுந்தால் அது தான் கதை

வெள்ளி விழா: நட்பு- காதல் பற்றி அப்பொழுதே சொன்ன படம்

சொல்லத்தான் நினைக்கிறேன்: சொல்ல நினைத்தும் சொல்லாமல் போன காதலை பற்றி சொல்லும் கதை

மரோசரித்ரா.. காதலர்கள் மொழி, இனம் இவற்றிற்கு அப்பார்பட்டவர்கள் என்பதை தத்ரூபமாக சொன்ன படம்

நிழல் நிஜமாகிறது: ஆணின் நிலையும் பெண்ணின் நிலையும் அதாவது மன நிலை பற்றி சொன்ன படம் .. அனுமந்து காரெக்டர் கூட மனசில் நிற்கிறது என்றால் அது மிகையில்லை

அக்னிசாட்சி: பெண் மென்மையானவள் ஆனால் அவளுக்குள் ஒரு புயல் இருக்கிறது என்பதை சரிதாவின் கண்களால் சொல்லிய படம்

அவள் ஒரு தொடர்கதை- குடும்பத்தை தாங்கும் பெண் தன்னை பற்றி சிந்திக்க நேரமற்று அவள் வாழ்வு ஒரு தொடர்கதையாகும் கதை.

அவர்கள்: கணவனால் கொடுமை படுத்தப்பட்ட ஒரு பெண் அவனை விட்டு பிரிந்து வாழும் கதை.

சிந்து பைரவி: ஆஹா ஒரு கலைஞனின் வாழ்வில் பெண்ணினால் ஏற்படும் மாற்றம் பற்றி சொல்லும் படம்

தண்ணீர் தண்ணீர்- தண்ணீர் கஷ்டம் பற்றி அன்றே இவர் எடுத்த இந்த படம் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை

அச்சமில்லை அச்சமில்லை: கொள்கையோடு வாழ்ந்த ஆசிரியன் அரசியலில் சேர்ந்து கொள்கைகளை மறந்து விடுகையில் அவனை கொல்கிறாள் அவனது மனைவி என புதிய கோனத்தில் சொன்ன படம்

கல்யாண அகதிகள்: ஆண்களால் பாதிக்கபட்ட பெண்கள் சேர்ந்து வாழும் விடுதியில் வாழவேண்டிய பெண் வர கதை சுவாரசியம்

மனதில் உறுதி வேண்டும்: பெண்ணின் மனப்போராட்டம் பற்றிய அழகான கதை

புது புது அர்த்தங்கள்: காதலித்து மனமுடித்த கணவன் பாடகன் என்ற காரணத்தால் அவன் மீது வீண் சந்தேகம் கொள்ளும் மனைவி அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் காலச்சுவடுகள்

அழகன்: மூன்று பெண்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்ளும் ஒரு ஆணின் கதை..

வானமே எல்லை: வாழ்கேயே வேண்டாம் என முடிவெடுக்கும் இளைஞர்கள் வாழவேண்டும் என சொல்லும் கதை

கல்கி- ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட இரு பெண்களைன் துயரத்தை போக்க அதே ஆணிடம் தன் மானத்தை பனயம் வைத்து அவனை வெல்லும் கதை.

இவரது அறிமுகங்களும் பாத்திரங்க்ள் பற்றியும் நாளை

இக்பால்
16-02-2004, 03:41 PM
ராஜேஷ் தம்பி....இவ்வளவு விபரங்கள் சொல்லி பயமுறுத்துகிறீர்களே...
நன்றியுடன் பாராட்டுக்களும். எனக்கு பீம்சிங் பற்றி சொல்ல ஆசை.
முயற்சி செய்கிறேன்.-அன்புடன் அண்ணா.

இளசு
16-02-2004, 06:17 PM
அருமை அருமை குருகுருவே!

முதல் பாகமே இந்தப்போடா அடேயப்பா!

நடிகர்திலகத்தின் எதிரொலி இல்லையே....

puppy
16-02-2004, 07:52 PM
ராஜ்

நல்ல தொரு பதிவு.......கொடுங்க...தெரிஞ்சுக்கிறோம்.....KBன் ரசிகை நான்

rajeshkrv
17-02-2004, 08:46 AM
நன்றி இளசு, இக்பால் அவர்களே

நான் சொல்லமலே எதிரொலிக்கும் என எதிர்பார்த்தேன் எதிரொலித்துவிட்டது

பாலச்சந்தரின் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர்

நாகேஷ்,ஜெமினி,கமல், ரஜினி, ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர்,சிவகுமார்,ஜெய்கணேஷ்,
ஜெயசுதா,ஸ்ரீவித்யா,சுஜாதா,ஜெயந்தி,சரிதா,செளகார் ஜானகி, லீலாவதி,லக்ஷ்மி
ஜெயப்பிரதா என அடுக்கி கொண்டே போகலாம்

அதிலும் குறிப்பாக கமல், நாகேஷ், ரஜினி, சிவகுமார்
சுஜாதா, சரிதா, லக்ஷ்மி,ஜெயந்தி இவர்கள் அடைந்த நிலை நான் சொல்ல வேண்டியதில்லை.

இன்றும் சுஜாதாவிற்கு நிகராக வசனம் பேச ஆளில்லை (dialogue delivery) என்பது என் தாழ்மையான கருத்து.

நிழல் நிஜமாகிறது - சுமித்ராவிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டுவந்தது.

தாமரை நெஞ்சம் - சரோஜாதேவியின் நடிப்புக்கு தீனி போட்டது.

47 நாட்கள் - ஜெயப்பிரதாவின் அழகும் திறமையும் சேர்ந்து வெளிப்பட்டது

அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, நூல்வேலி சுஜாதாவின் நடிப்பிற்கு சான்று.

ஜெயந்தி - எதிர் நீச்சல், புன்னகை, இருகோடுகள் யாரும் மறந்திருக்க முடியாது.

செளகார் ஜானகி - இவரது இயல்பிலேயே இருந்த நடிப்பை பாலசந்தர் பட்டை தீட்டினார் என்றால் மிகையில்லை அதனால் தான் தன் சொந்த படமான காவியத்தலைவியை இயக்கும் பொறுப்பை
பாலசந்தருக்கு அளித்தார்

ஸ்ரீவித்யா - அபூர்வ ராகங்களில் பைரவி பாத்திரம் நம் மனக்கண் முன் நிற்பது இவராலே

கமல் - அரங்கேற்றத்தில் அரங்கேறி பாலசந்தரின் செல்ல பிள்ளையானவர்
உன்னால் முடியும் தம்பியை யார் மறக்க முடியும்
காதல் மன்னனும் காதல் இளவரசனும் இணைந்த படமாயிற்றே

ரஜினி - அபூர்வராகங்களில் திறந்தது திரையுலகக் கதவு.. பின் ஏறு முகம் தான்
நினைத்தாலே இனிக்கும் -

நாகேஷ், ஜெமினி, ஜெய்சங்கர் இந்த மூவரும் பாலசந்தரின் ஆஸ்தான நாயகர்கள் ஆம்
மூவரும் சிவன், பிரம்மா விஷ்ணு போல்
நாகேஷ் - நீர்க்குமிழி, பூவா தலையா, எதிர்நீச்சல், நவக்கிரகம் என எத்தனை பாத்திரங்கள் ..
ஜெமினி - இருகோடுகளில் file life மறக்க முடியுமா, நான் அவனில்லை, பூவா தலையா , புன்னகை
ஜெய்சங்கர் - நூற்றுக்கு நூறு, பூவா தலையா என இவர் பங்குக்கு
சிவகுமார் - அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், சிந்து பைரவி


இவர்கள் தவிர சிறு பாத்திரங்கள் செய்த பலர் உள்ளனர்

நாளை இவருடன் பனிபுரிந்த இசையமைப்பாளர்கள் பற்றி பார்ப்போம்

பரஞ்சோதி
17-02-2004, 05:08 PM
இயக்குனர் பாலசந்தர் பெரியதிரையில் மட்டுமா புரட்சி செய்தார், சின்னத்திரையிலும் புரட்சி செய்தார், அவரது திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். நன்றி நண்பர் ராஜேஷ்.

இளசு
17-02-2004, 10:27 PM
அருமை முழுமை அலசல்

கவிதாலயா அலுவலகத்தில் பார்த்தால் கண்டிப்பாய் பிரதி எடுத்துக்கொள்வார்கள்..

நன்றி குருகுருவே..தொடருங்கள்!

Manavan
18-02-2004, 06:57 AM
எனக்கு கேபியின் படங்களில் மிகவும் பிடித்தவை சிலவே...
நூல் வேலி: அந்த சிறுமி மன நோயாளியாக பொம்மையை குத்துவதும், சுஜாதா மன்னிக்கும் மனப்பான்மையுடன் நடமாடுவதும், சரிதா தியாகம் செய்வதும், சரத் முள்ளில் பரபரப்புவதும் அபாரம்.
லிஸ்டில் தப்பிய ஒரு பெரிய படம்: வறுமையின் நிறம் சிகப்பு. கமலின் கம்யூனிச பார்வைக்கு வடிகாலிட்ட படம். கமல்-ஸ்ரீதேவி ஜோடி வெற்றாட்டம் போடாமல் mature தொடர்ப்புக்கும் தகுந்தவர்கள் என்று விடலைகளுக்கு நிருபீத்த படம். பாரதியார் பாடல்கள் நிறைந்து, இளைஞர்களின் வேலையில்லா பிரச்சனையை அடிகோளிட்ட படம்.
பாராளுமன்றம் முன்னால் அந்த பாட்டு, அனந்து (கேபி யின் உதவியாளர்- நிழல் நிஜமாகிறது அனந்து அல்ல, வேரோருவர்) வின் சிந்தனை விஸ்தாரத்தை காண்பித்தது. அனந்து இறந்ததற்க்குபின் பாலச்சந்தர் சோபிக்கவில்லை...

சீர் தூக்கி பார்க்கையில் மரோ சரித்திரா விடவும், வானமே எல்லை விடவும் ( சில முட்டாள்களை வழிக்கு கொணறும் படம்) வறுமையின் நிறம் சிகப்பெ சிறந்த இளைஞர் பிரச்சனை பற்றி கேபி எடுத்த படமென்பேன். என் கருத்து.

rajeshkrv
19-02-2004, 11:52 AM
சில விடுபட்ட படங்களும், நடிக நடிகையரும்

வறுமை நிறம் சிகப்பு
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அருமை..
அந்த ஓவியர் கதாப்பாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் நம் மனசில் நிற்கும்
கமல்-ஸ்ரீதேவியின் மெருகேறிய நடிப்பு ..
என்றுமே மனதை விட்டு அகலாத நினைப்பு

ஜாதி மல்லி

குஷ்புவை சொந்த குரலில் பேச வைத்து
முகேஷ் - குஷ்பு
மத்தன் - பர்த்தமீஸ் தமாஷ்

வினீத்-யுவராணி
ULM - ILU மறக்கமுடியுமா

காந்திசிலையின் முன் மோதிரம் தேடுதல் என
ஒரு நல்ல படம்.. சொல்ல பாலச்சந்தரால் மட்டும் முடியும்

சரிதா- நாயகியருக்கான இலக்கணத்தை உடைத்தெறிந்து முக பாவங்களாலும்
நடிப்பலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இவரது குரல் இவருக்கு +.

மிரள மிரள பார்க்கும் அக்னி சாட்சியாகட்டும்
கள்ளம் கபடமற்ற கல்யாண அகதிகள் ஆகட்டும்
பொங்கும் அச்சமில்லை அச்சமில்லையாகட்டும்
பயப்படும் நூல்வேலி ஆகட்டும்
என்ன வேண்டும் .. எப்படி வேண்டும்
அதை உடனே நடிப்பில் தருபவர் சரிதா..

இசையமைப்பாளர்கள்

முதலில் வி.குமார்

வி.குமார் - இவர் திரைக்கு முன் வர காரணாயிருந்தவர் பாலசந்தர்..
அதுவும் மேஜர் சந்திரகாந்த் படத்திற்கு எம்.எஸ்.வி தான் இசையமைப்பாளர் என ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்ய , குமார் இருந்தால் தான் தான் படத்தை இயக்குவேன் இல்லை என்றால் வேறு ஒருவரை பார்த்துகொள்ளுங்கள் என்று கூறிய ஒரு உன்னத மனிதர்.

இவர் சான்ஸ் வாங்கி கொடுத்தாலும் காலி பாத்திரமாக இருந்தால் பாலசந்தரின் மானம் தானே போகும் .. கிடைத்ததை தக்க வைத்துக்கொள்ள குமாரிடம் சரக்கு இருந்தது.. மெலோடி இருந்தது. பண்பு இருந்தது..

நீர்குமிழி - ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சுரதாவின் வரிகளுக்கு சீர்காழி குரல் கொடுக்க நாகேஷ் நடிக்க
பாலசந்தர் - குமார் ஜோடி உருவானது..

கன்னி நதி ஓரம் என சுசீலாவும்
டி.எம்.எஸ்ஸம் பாட அழகான காதல் பாடல்
ஆலங்குடி சோமுவின் பாடல்

நீரில் நீந்திடும் மீனினமே - குரல் சுசீலா


இவர்கள் இருவரும்(பாலுவும், குமாரும்) பணியாற்றிய படங்களின் பாடல்கள் அனைத்தும் வெற்றி.

இந்த கூட்டணியில் சேர்கிறார் வாலி

எதிர் நீச்சல் : மூவரும் கோலோச்சிய காலம் அது.
தாமரை கன்னங்கள் - மதுரக்குரலோன் பி.பி.ஸ்ரீனிவாஸ் - சுசீலா பாடிய அழகான பாடல்

பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த பாடல் பற்றி கூற அதற்கு அவர் பாலசந்தரை பாராட்டினார். அழகாக படம்பிடித்ததற்காக.

அடுத்தாத்து அம்புஜத்தே பார்த்தேளா ? வாலியின் கேலி வரிகளை டி.எம்.எஸ் - சுசீலா பிராமன மனம் கமழ பாடியிருக்கும் விதம் பிரமாதம்
எப்போ இருந்தது இப்போ வரத்துக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு ஹம் என சுசீலா இடித்துக்கொள்ளும் அழகே அழகு..

பின் இருகோடுகள் - புன்னகை மன்னன்
பூ விழி கண்ணன் என்ற போட்டி பாடல் மறக்கமுடியாத பாடல் வாலியின் வரிகள்
சுசீலா- ஜமுனாராணி குரல்களில் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா டி.எம்.எஸ்...

மேஜர் சந்திரகாந்த-
ஒரு நாள் யாரோ - சுசீலாவின் குரலில் மனதை மயக்கும் பாடல்

நேற்று நீ சின்ன பப்பா -

கல்யாண சாப்பாடு போடவா

வெள்ளிவிழா -
இதில் எப்பவும் மெலோடி பாடும் சுசீலாவை சத்தம் போட்டுத்தான் பாடுவேன் என பாட வைத்தார்
சத்தமாக பாடும் எல்.ஆர்.ஈஸ்வரியை
காதோடுதான் நான் பாடுவேன் என பாட வைத்தார்

இவரது இசையில் எம்.எஸ்.விஸ்வனாதனை பாட வைத்தார் "உனக்கென்ன குறைச்சல்"

ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி

நவக்கிரகம்:
உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது
சுசீலாவின் குரலோடு எஸ்.பி.பியின் ஹம்மிங்கும் கேட்க இனிமை

நூற்றுக்கு நூறு

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும் சுசீலாவின் குரலில் துள்ளல்

இன்றும் புதுவருடப்பாடல் இது தான்.

அரங்கேற்றம்

மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது

கவியரசரின் வரியில் சுசீலாவின் குரலில்
பாடல்கள் அருமை

நாணல் :

குயில் கூவி துயிலெழுப்ப - சூலமங்கலம்

என்னதான் பாடுவது - சுசீலா

விண்ணுக்கு மேலாடை - டி.எம்.எஸ் - சுசீலா

என பாலசந்தருக்கு இவர் கொடுத்த பாடல்கள் பிரமாதம் அற்புதம் ஆனந்தம்

பின் இவர் பல படங்களுக்கு இசையமைத்தார்

தஞ்சை தமிழன்
20-02-2004, 08:17 AM
கே.பா வின் படங்கள் மிகவும் நன்றாகத்தான் இருக்கும்.

ருத்ரையா போன்ற சில படங்களே எடுத்தாலும் தனது பெயரை பதித்து சென்றவர்களை பற்றி தாருங்களேன்,

rajeshkrv
26-02-2004, 09:20 AM
பாலசந்தர் - எம்.எஸ்.விஸ்வநாதன்

வி.குமாரைத் தவிர பாலசந்தருக்கு அதிக படங்கள் இசையமைத்தது எம்.எஸ்.வி

பாலசந்தர் திரைக்கதை எழுதிய படங்களான
தெய்வத்தாய், பூஜைக்கு வந்த மலர் , சர்வர் சுந்தரம் , நீலவானம் ஆகிய படங்களுக்கு எம்.எஸ்.வி - ராமமூர்த்தி தான் இசையமைப்பாளர்கள்
ஆக ஏற்கனவே பரிச்சயபட்ட எம்.எஸ்.வி பாலசந்தர் ஒரு நிலையை அடைந்த போது தமிழ் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளராயிருந்தார். முதலில் காலத்தின் கட்டாயமாக இருந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆனது. அவர்களுக்கும்
ஆத்மார்த்த நட்பும் உருவானது.

இந்த கூட்டணியில் உருவான முத்துக்கள் ஏராளம்

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே - சுசீலாவின் குரலில் தண்ணீர் தண்ணீர் பாடலை மறக்க முடியுமா

ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
வாணிஜெயராமின் குரலில் அற்புத பாடல்

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
லாவில் கவியரசர் கோட்டை கட்டிய பட்டின பிரவேசப்பாடலை நாமும் அதை பாடிய பாலுவும் மறக்க முடியாது

தெய்வம் தந்த வீடு - அவள் ஒரு தொடர்கதை
ஏசுதாஸின் குரலில் இந்த பாடல் எவ்வளவு
நெஞ்சங்களை வருடியது

ஆடுமடி தொட்டில் இனி - சுசீலாவின் குரலில் அழகான பாடல்

கண்ணிலே என்ன உண்டு - ஜானகியின் குரலில் சோகம் தொனிக்கும் பாடல்

கடவுள் அமைத்து வைத்த மேடை - பாலு, சதனின் சத்தங்களுடன் பாடிய அந்த திருமணப்பாடலை மறக்க முடியுமா

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல் மெட்டுக்கு பாட்டா பாட்டுக்கு மெட்டா என்ற கேள்விக்கு விடை இரண்டுமே என நிரூபித்த
பாடல்.

நானா பாடுவது நானா - நூல்வேலியில் சுஜாதாவுக்கு வாணிஜெயராமின் பாடல் அழகு

அதே படத்தில் பாலமுரளி அவர்கள் பாடிய
மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே நம் மனத்தில் விளையாடும் ஒன்று.

காற்றுக்கென்ன வேலி , இப்படி ஓர் தாலாட்டு
பாடவோ என ஜானகியின் குரலில் அவர்கள் படத்தின் பாடல்கள் பிரமாதம்
பாலுவின் ஜுனியர் .. பாடலும் அந்த பொம்மையின் குரலும் சுஜாதாவின் சிரிப்பும் மறக்க முடியாத ஒன்று.

கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல -அக்னிசாட்சியில் வாலியின் வரிகளும்
பாலுவின் குரலும் சரிதா பேசும் " நான் உன்னை நேசிக்கிறேன் " மனக்கண் முன் தோன்றினால் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை

நினைத்தாலே இனிக்கும்
இந்த படத்தை நினைத்தாலே இனிக்கும்
பாடல்களை நினைத்தாலே இனிக்கும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
நினைத்தாலே இனிக்கும்
பாரதி கண்ணம்மா
நம்ம ஊரு சிங்காரி
சிவசம்போ

ஆடி வெள்ளி தேடி உன்னை போட்ட மூன்று முடிச்சை இன்றும் அவிழ்க்கமுடியவில்லை

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - சுசீலாவின் குரலில் காவியத்தலைவி படைத்தது ஒரு காவியம்


47- நாட்கள்
மான் கண்ட சொர்கங்கள் பாலுவின் குரலில்
ரீங்காரமிடும் பாடல்

rajeshkrv
01-03-2004, 11:57 AM
விடுபட்ட சில படங்கள்
பாலசந்தர் - எம்.எஸ்.வி

பாமா விஜயம் - வரவு எட்டணா செலவு பத்தணா என பாலய்யா பாட குழந்தைகள் கூட சேர்ந்து பாட
ஆஹா

அதுவும் பாமா வருவதற்காக மேஜர் - சவுகார்,
முத்துராமன் - காஞ்சனா
நாகேஷ் -ஜெயந்தி
அடிக்கும் கூத்து அபாரம்

ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவனி வீதியிலே என
சுசீலா, ஈஸ்வரி, சூலமங்கலம் பாடுவது அழகான பாடல்

இளசு
02-03-2004, 08:52 PM
உங்கள் முழுமை என்னை அசரவைக்கிறது குருகுருவே....

எப்படி இதெல்லாம்....?

வியந்தபடி.... உங்கள் சிஷ்யன்.

rajeshkrv
05-03-2004, 09:38 AM
நன்றி இளசு அவர்களே
எல்லாம் தங்கள் ஆசிர்வாதம்

பாலசந்தருடன் அடுத்து பணிபுரிந்தவர்
திரு.வி.எஸ். நரசிம்மன் அவர்கள்

ஆவாரம்பூவு ஆரேழு நாளா என சுசீலாவும் பாலுவும் பாடும் பாடலை மறக்கமுடியுமா
வைரமுத்துவின் செவந்திப்பூவும் சிவப்பாச்சு வார்த்தை- கற்பனை அருமை

அதே போல்
கல்யாண அகதிகள் நாங்கள் என சுசீலா பாடும் பாடலும்
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தான் என சுசீலா ,
ராஜ்சீதாராமனுடன் பாடுவது அழகு. இந்த பாடலில் அன்றைய தொலைக்காட்சியில் இடம்பெற்ற எதிரொலி, ஒளியும் ஒலியும் என அசத்தியிருப்பார் வைரமுத்து.

பாலசந்தர் இது வரை இயக்கிய படங்களின் தொகுப்பை பார்ப்போம் அதன் பின் இளையராஜா - பாலசந்தர் கூட்டணிக்கு வருவோம்

1. நீர்க்குமிழி - 1965
2. நாணல் - 1965
3. மேஜர் சந்திரகாந்த் - 1966
4. பாமா விஜயம் - 1967
5. அனுபவி ராஜா அனுபவி - 1967
6. தாமரை நெஞ்சம் -1968
7. எதிர் நீச்சல் - 1968
8. சட்டேகலபு சட்டேயா- தெலுங்கு - 1969
9. பூவா தலையா -1969
10. இரு கோடுகள் - 1969
11. பத்தாம் பசலி - 1970
12. நவக்கிரகம் - 1970
13. காவியத்தலைவி - 1970
14. எதிரொலி - 1970
15. புன்னகை - 1971
16. நூற்றுக்கு நூறு - 1971
17. நான்கு சுவர்கள் - 1971
18. பொம்மா பொருசா - 1971 தெலுங்கு(பூவா தலையா)
19. வெள்ளி விழா - 1972
20. கண்ணா நலமா - 1972
21. சொல்லத்தான் நினைக்கிறேன் - 1973
22. லொக்ராம் மராளி - 1973
23. அரங்கேற்றம்- 1973
24. நான் அவனில்லை - 1974
25. கோட்டி வித்யாலு குடி கொரகே - 1974 தெலுங்கு
26. அவள் ஒரு தொடர்கதை - 1974
27. அவள் ஒரு தொடர்கதா- 1974 மலையாளம்
28. ஆயினா - அவள் ஒரு தொடர்கதை - ஹிந்தி - 1974
29.அபூர்வ ராகங்கள் -1975
30. மூன்று முடிச்சு - 1976
31. மன்மத லீலை - 1976
32. அந்துலேனி கதா - அவள் ஒரு தொடர்கதை - தெலுங்கு - 1976
33. பட்டின பிரவேசம் - 1977
34. ஒக தல்லி கதா - தெலுங்கு - 1977
35. மீட்டி மீட்டி பாத்தேன் - ஹிந்தி - 1977
36. அவர்கள் - 1977
37. தப்புத்தாளங்கள் - 1978
38. தப்பிதா தாளா - 1978 - கன்னடா
39. நிழல் நிஜமாகிறது - 1978
40. மரோசரித்ரா - 1978 - தெலுங்கு
41. இதி கத காது - இது கதையல்ல - தெலுங்கு - 1978
42. நூல்வேலி - 1979
43. நினைத்தாலே இனிக்கும் - 1979
44. குப்பேடு மனசு - 1979 தெலுங்கு
45. இதோ சரிதா - 1979
46. ஆனந்தமய்ன அனுபவம் - 1979 தெலுங்கு
47. வருமையின் நிறம் சிவப்பு
48. தொலிக்கோதி கூசிந்தி-1980 தெலுங்கு
49. திரகள் எழுதிய கவிதா - 1980 மலையாளம்
50.ஆடவள்ளு மீகு ஜோரால்லு - 1981 தெலுங்கு
51. ஏக் துஜே கேலியே - 1981 - ஹிந்தி
52. 47 நாட்கள் - 1981
53. தில்லு முல்லு - 1981
54. தண்ணீர் தண்ணீர் -1981
55. எங்க ஊரு கண்ணகி - 1981
56. அகாலி ராஜ்ஜியம் - வருமை நிறம் சிவப்பு - தெலுங்கு - 1981
57. ப்யாரா தரானா - 1982 ஹிந்தி
58. அக்னி சாட்சி - 1982
59. ஜரா சி ஜிந்தகி - 1983 ஹிந்தி
60. பொய்க்கால் குதிரை - 1983
61. கோகிலம்மா - 1983 தெலுங்கு
62. பென்கி அல்லி அரளித ஹவு - கன்னடா 1983
63. ஏக் நயி பஹேலி -1984 ஹிந்தி
64. லவ் லவ் லவ் - 1984
65. இரடு ரேகலு - இரு கோடுகள் - கன்னடா - 1984
66. அச்சமில்லை அச்சமில்லை - 1984
67. சிந்துபைரவி - 1984
68. முகில மல்லிகே - 1985 கன்னடா
69. கல்யாண அகதிகள் -1985
70. சுந்தர ஸ்வப்னகளு - கன்னடா 1986
71.புன்னகை மன்னன் - 1986
72. மனதில் உறுதி வேண்டும் - 1987
73. ருத்ர வீணா - 1988 தெலுங்கு உ.மு.தம்பி
74. உன்னால் முடியும் தம்பி- 1988
75. புதுப்புது அர்த்தங்கள் -1989
76.ஒரு வீடு இரு வாசல் -1990
77.அழகன் 1991
72. வானமே எல்லை -1992
73. ஜாதி மல்லி - 1992
74.கல்கி - 1996
75. பார்த்தாலே பரவசம் - 2001

மற்றவை அவர் இயக்கிய தொடர்கள் என சேர்த்து 100ஐ எட்டும்..

rajeshkrv
09-03-2004, 11:34 AM
பொய்க்கால் குதிரை:
வாலி மற்றும் சார்லி அறிமுகமான படம்

வாலியின் நடிப்பு அபாரம். அதுவும் பெட் கட்டுபவராக தூள் கிளப்பியிருப்பார்

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என
எஸ்.பி.பியின் குரலில் அழகான பாடல் எம்.எஸ்.வி இசையில்பாலசந்தர் - இளையராஜா

சிந்துபைரவி - மறக்க முடியுமா இந்த படத்தின் பாடல்களை
சித்ராவிற்கு தேசிய விருது வாங்கித்தந்த
படமாயிற்றே.

வைரமுத்துவின் வரிகளுக்கு குரலால்
உயிர்கொடுத்தவர் யேசுதாஸ்
நடிப்பால் உயிர் கொடுத்தவர்கள் சிவகுமார், சுலக்ஷனா,சுஹாசினி.
பூமாலை வாங்கி வந்தான் என பாமாலை பாடுவது அழகு

மனதில் உறுதி வேண்டும்..
பெண்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும் என்று வலியுறுத்த வந்த படம்

வாலியின் வரிகள் அனைத்தும் அபாரம்

கண்ணா வருவாயா என கெஞ்சும் யேசுதாஸ் - சித்ரா

மனதில் உறுதி வேண்டும் என கர்ஜிக்கும்
யேசுதாஸ்

கண்ணின் மணியே என ஏங்கும் சித்ரா என அற்புத பாடல்கள்

வங்காள கடலே என கற்பனை பாடல்

புன்னகை மன்னன்

கமல் மின்னிய பாத்திரம் ..
சாகத்துனிந்தவனை வாழவைத்து
வாழ நினைக்கியில் சாகடிக்கும் முடிவு..

இசை அபாரம்
சிங்களத்து சின்னக்குயில் என சின்னக்குயிலும்
பாலுவும் பாட அற்புதம்

தீம் தீம் த என ஜெயசந்திரனும் வாணிஜெயராமும் பாடும் பாடலில் ரேவதியின் நடன வெறி பளிச்சிடும்

ஏ.ஆர்.ரகுமான் கனினியில் பதிவு செய்த இசை அந்த கமல்-ரேவதி நடன இசை.

நடிப்பு அனைவரும் முத்திரை பதித்த நடிப்பு
ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் , கமல், ரேவதி என பட்டை தீட்டிய வைரங்கள்

உன்னால் முடியும் தம்பி:

மானிட சேவை துரோகமா

இதழில் கதை எழுதும் நேரமிது

நஞ்சை உண்டு புஞ்சை உண்டு

உன்னால் முடியும் தம்பி தம்பி
ஜாதி பிரச்சனை பற்றியும் உண்டு
இசை பற்றியும் உண்டு

புதுப்புது அர்த்தங்கள்
இசைக்கலைஞனின் வாழ்வின் நிகழும் சம்பவங்கள்
பாடல்கள் பக்க பலம்
கேளடி கண்மனி
கல்யாண மாலை
குருவாயூரப்பா என வாலி வார்த்தைகளால் கோலமிட
இசையராஜா இசையால் தாலாட்ட
ரகுமான், சித்தாரா, கீதா, ஜெய்சித்ரா நடிப்பின்
மின்ன ஒரு நல்ல படம்

அடுத்து பாலசந்தர் - மரகதமணி கூட்டணி பற்றி பார்ப்போம்

இளசு
09-03-2004, 08:04 PM
உங்கள் மேலான வியப்பு இன்னும் இன்னும் கூடியபடியே...


குருகுருவே சரணம்..

poo
10-03-2004, 04:42 PM
ஒட்டி பாதுக்காக்கப்பட வேண்டிய பதிவு!!

பாராட்டுக்கள் நண்பரே!

rajeshkrv
12-03-2004, 02:20 AM
அடுத்து பாலசந்தர் - மரகதமணி கூட்டணி பற்றி பார்ப்போம்

பாலசந்தர் மரகதமணி கூட்டணியில் வந்த முதல் படம் அழகன்
கோவை செழியனின் தயாரிப்பில் மம்முட்டி பானுப்பிரியா,கீதா, மதுபாலா நடித்த படம்

பெயருக்கேற்ப அழகான படம்

ஒரு ஹோட்டல் முதலாளியின் ரசணையும் அறிவும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற முறையை மாற்றி யோசிக்க வைத்த படம்

தூர்தர்ஷனின் இசையை கூட பாடல் வடிவில் யோசிக்க பாலச்ந்தரால் மட்டுமே முடியும்

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா என பாலுவும் சங்கீதாவும் பாடும் பாடல் அழகு

பானுப்பிரியா நடனம் செய்துகொண்டே கோபப்படும் இடம் அழகுக்கவிதை

மழையும் நீயே வெயிலும் நீயே பாடலும் அருமை

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி - தந்தை
பரீட்சையில் வெற்றி பற்ற சந்தோஷத்தில் குழந்தைகள் பாடுவது

மேடை நாடகமாக கோழி கூவும் நேரமாச்சு என மலேசியா வாசுதேவனும் சித்ராவும் பாட
பானுப்பிரியாவும் கெளதமும் ஆட நல்ல பதம்.

வானமே எல்லை
இளைஞர்கள் அவசரமாக எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது என உணர்த்தும் படம்

பப்லு, ஆனந்தபாபு,கெளதம்,ரம்யா, மதுபாலா என ஐவரும் அழகாக நடித்த படம்..

சாக வேண்டும் என்று நினைத்தவர்களையே வாழவேண்டும் என்று ஆசைப்பட வைக்கும் கதை..
அதுவும் கெளதம் இறந்துவிட்டதாக நினைக்க அவர்களிடம் அவனது தந்தை ராஜேஷ் கேட்கும் கேள்விகள் அபாரம்

சோகம் இனி இலை
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
நீ ஆண்டவனா
நாடோடி மன்னர்களே

என அமர்க்களப்படுத்தும் பாடல்கள்

ஜாதிமல்லி..

குஷ்பூவின் நடிப்புத்திறமைக்கு தீனி போட்ட படம்
முகேஷ் - குஷ்பூ நடிப்பு அபாரம்

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்

என நல்ல பாடல்களை கொண்ட படம்

ஆக எந்த இசையமைப்பாளரிடமும் அழகான , கதைக்கேற்ப பாடல்களை வாங்கும் திறமை பாலசந்தரிடம் உண்டு..

இளசு
13-03-2004, 08:22 PM
போட்டுப்பின்னி பூ வச்சு அசத்தறீங்க குருகுருவே

அழகன் படத்தில் மரகதமணி அசத்தியது உண்மை,,

rajeshkrv
15-03-2004, 11:18 AM
கல்கி, பார்த்தாலே பரவசம் என நம்மை பரவசப்படுத்திக்கொண்டே இருப்பவர்
பாலசந்தர்.

சின்னத்திரையிலும் அவர் சளைத்தவர் அல்ல
கை அளவு மனசு,
பிரேமி, ஜன்னல், அண்ணி, சஹானா என தோரணம் கட்டி கொண்டே போகிறார்

இந்த கலையுலக வித்தகரை வணங்கி போற்றுவோம்

அடுத்து நண்பர் ஒருவர் கேட்டதற்கு இணங்கி
திரு.ஏ.பீம்சிங் பற்றி பார்போம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில்
1924 15 - ஜுலை மாதம் பிறந்தவர்

ஒரு தெலுங்கு பத்திரிக்கையில் சேர்ந்து பின்
கிருஷ்ணன் - பஞ்சு அவர்களிடம் படத்தொகுப்புத்துறையில் சேர்ந்தார்
பின்னர் அவர் "பா" வரிசை இயக்குனர் ஆனார்
அனைத்து முன்னனி நடிகர் நடிகையரையும் இயக்கிய பெருமை இவருக்கு உண்டு.

குடும்ப படங்களையே பெரிதாக தந்தார்
இவரது இயக்கத்தில் பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும என பா " மாலைகள்" பல உண்டு..

இவர் குணச்சித்திர நடிகை சுகுமாரியின் கணவர் என்பது குறிப்பிடதக்கது

இவர் இயக்கிய மொத்த படங்கள் பற்றி நாளை பார்ப்போம்

பாரதி
15-03-2004, 05:35 PM
திரைப்படத்துறை பற்றிய விசயங்களை நுனி விரலில் வைத்திருக்கிறீர்களா ராஜேஷ்? பீம்சிங் விபரம் இதுவரை நான் அறியாததுதான். மேலும் கொடுங்கள்.

rajeshkrv
16-03-2004, 11:14 AM
பீம்சிங் இயக்கிய படங்கள்

1. அம்மையப்பன் -1954
2. ராஜா ராணி - 1956
3. நானே ராஜா - 1956
4. திருமணம் - 1958
5. பதி பக்தி - 1958
6. சகோதரி - 1958
7. பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் - 1959
8. பொன்னு விளையும் பூமி - 1959
9. பாகப்பிரிவினை - 1959
10. பெற்ற மனம் -1960
11. படிக்காத மேதை - 1960
12. மாவூரு அம்மாயி -1960
13. களத்தூர் கண்ணம்மா - 1960
14. ஆயி பிர்ஸே பாகர் - 1960
15.பாவமன்னிப்பு -1961
16. பாசமலர் - 1961
17. பாலும் பழமும் - 1961
18. செந்தாமரை -1962
19. ராக்கி - 1962
20. பவித்ர பிரேமா - 1962
21. பார்த்தால் பசி தீரும் - 1962
22. படித்தால் மட்டும் போதுமா- 1962
23. மைன் சுப் ரஹங்கி - 1962
24. பந்த பாசம் - 1962
25. பார் மகளே பார் - 1963
26. பூஜா கே ப்ஹல் -1964
27. பச்சை விளக்கு - 1964
28. பழனி - 1965
29. காந்தான் - 1965
30. பாலாடை - 1967
31. மெஹர்பான் - 1967
32. சாது ஔர் ஷைத்தான் - 1968
33. கெளரி - 1968
34. ஆத்மி - 1968
35. மனிஷின்சின மகுவா - 1969
36. பாயி பஹன் - 1969
37. பாதுகாப்பு - 1970
38. ஒரு குடும்பம் - 1970
39. கோபி - 1970
40. சப் கா சாத்தி - 1972
41. மா இண்டி ஜோதி - 1972
42. ஜோரு கா குலாம் - 1972
43. லோபர் - 1973
44. நயா தின் நயி ராத் - 1974
45. பாத பூஜை - 1974
46. சில நேரங்களில் சில மனிதர்கள் - 1975
47. ராகம் - 1975
48. பாக்யஷாலலு - 1975
49. கணவன் மனைவி - 1976
50. சிரஞ்சீவி - 1976
51. பங்காரு மனுஷி - 1976
52. அமானத் - 1977
53. யாரோன் கா யார் - 1977
54. சினேகம் - 1977
55. நிறைகுடம் - 1977
56. நீ வாழ வேண்டும் - 1977
57. எவரு தேவுடு - 1977
58. வம்சஜோதி - 1978
59. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - 1978
60. மிஸ்ஹிஹ சரிதம் - 1978
61. மாதொலி - 1978
62. கருணாமயுடு - 1978
63. கருணை உள்ளம் - 1978
64. கை பிடித்தவள் - 1978
65. இறைவன் கொடுத்த வரம் - 1978

மறைவு : 16- ஜனவரி -1978

இளசு
16-03-2004, 10:40 PM
பிரமிப்பே ..உன் இன்னொரு பெயர் ராஜ்-ஆ?

rajeshkrv
17-03-2004, 12:19 PM
இவரின் சிறந்த படங்கள் என்று எடுத்துக்கொண்டால்

வரிசையாக

பாலும் பழமும்
பாசமலர்
பாவமன்னிப்பு
படித்தால் மட்டும் போதுமா
சில நேரங்களில் சில மனிதர்கள்

பாலும் பழமும் - சாந்தி என்ற நர்ஸ் பாத்திரத்தில் சரோஜாதேவி நடித்தார் என்பதை விட வாழ்ந்தார்
என்றால்
மிகையில்லை

பாடல்கள் அனைத்தும் இனிமை அருமை

ஆலயமனியின் ஓசையை சுசீலாவின் குரலில் கேட்கும் பொழுது சுகம்

நான் பேச நினைப்பதெல்லாம் ஆதர்ஸ தம்பதியர் இப்படித்தான் இருப்பார்களோ என நம்மை சிந்திக்க வைக்கும் பாடல் காட்சி

காதல் சிறகை காற்றினில் விரித்து என சுசீலா பாட பிரிவின் துயரம் என்ன என்பதை நமக்கு உணர்த்தும்

இந்த நாடகம் அந்த மேடையில் என சுசீலா கெஞ்ச


பாலும் பழமும் கைகளில் ஏந்தி - கணவன் மனைவிக்கு பனிவிடை செய்யும் காட்சி அழகு

போனால் போகட்டும் போடா - கவியரசரின் தத்துவ முத்து

பாடல்கள் வாங்குவதில் பாலசந்தருக்கு சளைத்தவர் அல்ல பீம்சிங்.

படத்தில் இடம்பெறாத தென்றல் வரும் தூது வரும் பாடலும் மனதில் நின்ற பாடலே

மெல்லிசை மன்னர்களின் இசை சிறப்பாக அமைந்த படம்

அதுவும் ஆலயமணியின் ஓசையில் பிஸ்மில்லா கானின் ஷெனாய் ஆஹா என்னவென்று சொல்வதம்மா!!

நாளை பாசமலரைத் தொடுப்போம்
ராஜ்

rajeshkrv
18-03-2004, 12:19 PM
பாசமலர் - 1961 ..
சிவாஜி- ஜெமினி- சாவித்திரி நடித்த காவியம் என்றால்
மிகையில்லை

அண்ணன் - தங்கை பாசத்திற்கு இன்றும் எடுத்துக்காட்டாய் கூறுவது இந்த படத்தை தான்

ஏழையான சிவாஜி நன்றாய் உழைத்து ஒரு மில்லையே உருவாக்கி அதில் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறார்

மில்லில் வேலை செய்யும் ஜெமினியும் தன் தங்கை சாவித்திரியும் காதலிக்க அதை முதலில் சிவாஜி எதிர்த்தாலும்
தங்கையின் நலன் கருதி மனம் மாறுகிறார்.

இருவருக்கும் திருமணம் செய்துவைத்த பின்
எம்.என்.ராஜத்தை தான் திருமணம் செய்து கொள்கிறார் சிவாஜி
ஆனாலும் அவருக்கு எப்பொழுதும் தங்கையின் வாழ்வில் தான் நாட்டம்

ஒரு சமயத்தில் அனைத்து சொத்துக்களையும் தங்கையின் பெயருக்கு மாற்றிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

பாடல்கள் அனைத்தும் தேன்

அதிலும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலுக்கு இணையான பாடல் இன்றளவும் வரவில்லை

வைரமுத்து இந்த பாட்டை கேட்க காத்திருப்பாராம் அதிலும் யாருக்காக என்றால் சிவாஜிக்காக அல்ல, சாவித்திரிக்காக அல்ல, டி.எம்.எஸ்ஸக்காக அல்ல, நடுவில் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக என்று சுசீலா
விசும்புவாரே அதற்காகவாம் என்ன அழகான ரசணை..

கண்ணதாசனின் வரியும், மெல்லிசை மன்னர்களின் இசையும் , சுசீலா- டி.எம்.எஸ் குரல்களும், நடிகர் திலகம் நடிகையர் திலகம் இருவரின் நடிப்பும் இந்த பாடலுக்கு உயிரூட்டின..


யார் யார் யார் இவள் யாரோ என பி.பி.ஸ்ரீனிவாஸம்,
சுசீலாவும் கொஞ்சுவது அழகுக் காதல் பாடல்

மயங்குகிறாள் ஒரு மாது என்று நாணத்தோடு பாட யாரால் முடியும் சுசீலாவை தவிர

எங்களுக்கும் காலம் வரும் - உழைப்பை அருமையாக சொன்ன பாடல் சுசீலா, டி.எம்.எஸ் குரல்களில் இனிமை

வாராயோ தோழி வாராயோ என் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இன்றும் ஒலிக்கும் மங்கலப்பாடல்
ஆடுவது சுகுமாரி (இங்கே தான் காதல் அரும்பியதோ)

எம்.என்.ராஜம்(ஜமுனாராணி) பாடும் பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் என்ற பாடலுக்கு மயங்காதார் மனம் யாவும் மயங்கும்

இயக்கம் கன கச்சிதம்
பாடல்கள் - தேன் தோரணம் காரணம் பீம்சிங்- மெல்லிசை மன்னர்கள்

பாசமலர் மறக்கமுடியாத படம்

நாளை பாவமன்னிப்பு கேட்போம்ராஜ்

இளசு
18-03-2004, 11:01 PM
சிஷ்யன் என்ற நிலை தாண்டி
தொண்டரடிப்பொடி ஆகிக்கொண்டிருக்கிறேன்.....

sujataa37
19-03-2004, 02:18 AM
ராஜ்,

உங்கள் தொகுப்பையும் கருத்துக்களையும் படிக்கும்போது அந்த படங்களின் இயக்குனர்களே அறியாத சிறப்புகள் பல வெளிப்படுகின்றன. தானாக இல்லாத அழகு உங்கள் எழுத்தால் வருகிறது.

இளசு உங்களை கோவில் கட்டி கும்பிடாத குறையாக இருப்பதில் சற்றும் தவறு இல்லை.

நீங்கள் கோர்க்கும்போது இரண்டு முத்துக்கள் சிந்திவிட்டனவோ என்று தோன்றுகிறது.

பாலும் பழமும் படத்தில் "என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்". கதையின் முக்கியமான கட்டத்தில் காட்சி அமைப்பில் சொல்வதைவிட பாடலில் இன்னும் சிறப்பாக சொல்லமுடியும் என்று அடிக்கடி நிரூபித்தவர் பீம்சிங். இந்த பாடலில் கவிஞர், மெல்லிசைமன்னர்கள், நடிகர், நடிகை, இயக்குனர் எல்லோரும் போட்டிபோட்டு அமைத்தார்களோ என்று தோன்றும்.

பாசமலரில் "மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்". படத்துக்கு அடித்தளம். ஒரு பாடலில் அந்த பாசப்பிணைப்பை அழுத்தமாக சொல்லியதால் பின்னால் வரும் சோகத்தில் அரங்கையே மொத்தமாக அழவைக்க முடிகிறது.

அந்த காலகட்டத்தில் பல பேர் நெஞ்சைத்தொட்ட படங்கள் எடுத்தார்கள். பீம்சிங்கின் படங்கள் நெஞ்சைத்தொட்டதோடு மட்டுமல்லாமல் நெஞ்சில் ஆழப்பதிந்துவிட்டன.

பாலசந்தர் படங்களில் ஒரு cerebral element இருக்கும். அதனால், பல இடங்களில் வார்த்தை ஜாலங்களும், சாதாரண ரசனைக்கு முரண்பாடான காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரத்தன்மைகளும் நிறைந்திருக்கும். பீம்சிங்கிற்கு அது தேவைப்படாது. உணர்ச்சிகளை அஸ்திரங்களாய் பயன்படுத்தி நம் இதயத்துக்குள் பாய்ந்துவிடுவார்.

ஒரு திருப்பதி உவமாணத்தில் சொல்வதென்றால் -

பாலசந்தர் ஸ்பெஷல் தரிசனம் - போகிறவன் கையில் நூறு ரூபாய் தேவைப்படும்.

பீம்சிங்கோ தர்மதரிசனம் - சும்மா உள்ளே போய் பாமரனும் சரணடையலாம்.

rajeshkrv
22-03-2004, 10:21 AM
பாவமன்னிப்பு
புத்தா பிக்சர்ஸ் தயாரித்து 1961ஆம் ஆண்டு வெளிவந்த படம். வெற்றிகரமாக ஓடிய படம்.

படத்திற்கு பக்க பலம் நடிகர்களும், பாடல்களும்..

மத நல்லினக்கத்தை அன்றே சொன்னது இந்த படம்

சிவாஜி எம்.ஆர்.ராதாவின் மகன் ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவனை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட அவனை வளர்க்கிறார் நாகைய்யா ..

முஸ்லிமாக வள்ர்கிறான் -
எல்லோரும் கொண்டாடுவோம் என்ற ரமலான் வாழ்த்துப்பாடலை நாகூர் ஹனீபாவுடன் செளந்தரராஜன் பாடுவது அழகு

டி.எஸ்.பாலய்யாவின் மகளான தேவிகா பாதிரியார் ஜேம்ஸ் - எஸ்.வி.சுப்பைய்யாவிடம் வளர்கிறாள்.

அவளுக்கும் சிவாஜிக்கும் காதல் - தொடர்வது பாடல் - பாலிருக்கும் பழமிருக்கும் சுசீலாவும் எம்.எஸ்.வியும் குழையும் பாடல்

ஊரில் உள்ளவர்களுக்கு உதவுவது சிவாஜியின் வேலை படிக்கொண்டே சைக்கிளில் பயணம் செய்வார் - வந்த நாள் முதல் இந்த நாள் வரை டி.எம்.எஸ் குரலில் கேட்க உற்சாகம் பிறக்கும் ..
முதலில் இந்த பாடலை பாட டி.ஏ.மோத்தியைத்தான் நினைத்திருந்தார் எம்.எஸ்.வி ஆனால் டி.எம்.எஸ்ஸிடம் சொல்ல அவரும் பாட அதுவே இறுதியானது.

எதனை கண்டான் மதங்களை படைத்தான் - இது தான் கண்ணதாசன் எழுதியது . பின் பல காரணங்களுக்காக பணந்தனை படைத்தானாக மாற்றப்பட்டது.
இரண்டு வடிவிலுமே பாடல் ரெக்கார்டில் உள்ளது.
பாடலின் முடிவில் சாவித்திரியை தற்கொலையிலிருந்து மீட்பார்.

சாவித்திரி தன் கதையை சொல்ல
எம்.ஆர்.ராதாவின் மகனான ஜெமினி அவளை காதிலித்த கதையை சொல்ல
காலங்களில் அவள் வசந்தம் என ஸ்ரீனிவாஸ் ஆரம்பிக்க காதுகளுக்கு குளிர்ச்சி . பி.பி.ஸ்ரீனிவாஸ் புகழின் உச்சிக்கு எட்டியது இந்த பாடல் மூலம் தான்

சாவித்திரியும் தேவிகாவும் நண்பர்களாக , தேவிகாவின் காதல் பற்றி சாவித்திரி கிண்டல் செய்ய பாடல் - அத்தான் என்னத்தான் - சுசீலாவின் இனிய குரலில் லதாமங்கேஷ்கரே பொறாமைப்பட்ட பாடல்

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் செளந்தரராஜனின் குரலில் நம்மை கலங்கடிக்கும் பாடல்

இன்னொரு பாடல் சாய வேட்டி தலையில் கட்டி என்ற பிரபலம் ஆகாத பாடல் - டி.எம்.எஸ், ஜமுனாராணி குரல்களில்.

இதில் ஆண்-பெண் என சேர்ந்து காதல் பாடல்களே இல்லை ..

பாத்திரப்படைப்பை பற்றி சொல்லவேண்டுமானால்
எம்.ஆர்.ராதா தான் முதலில் .. என்ன ஒரு மிடுக்கு ..
வாய்யா ஜேம்சு என்று சொல்லும் தோரணை ஆஹா ..
பின் சிவாஜி அந்த ரஹீம் பாத்திரத்தில் அழகாக தன்னை பொருத்திக்கொள்ள இவராலே முடியும்
பின் சுப்பைய்யா - பாதர் ஜேம்ஸாகவும் தேவிகாவின் வளர்ப்பு தந்தையாகவும் நல்ல தேர்வு
ஜெமினி - காதல் பின் அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்குதல் என தன் பாத்திரத்தின் அளவு தெரிந்து நடித்திருப்பார்
சாவித்திரி - கனமான பாத்திரம் இல்லை என்றாலும் இதிலும் தான் நடிப்பில் கனம் என்று நிரூபித்திருப்பார்
தேவிகாவும் அளவான நடிப்பை வழங்கியிருப்பார்

கதை - திரைக்கதை அதை சொல்லும் விதம் இவை பீம்சிங்கின் திறமை அதனால் நட்சத்திரத் திருவிழாக இருந்தாலும் அழகான இயக்கம்

நாளை படித்தால் மட்டும் போதுமா


ராஜ்

இளசு
22-03-2004, 10:20 PM
மிக அருமை குருகுருவே

ஹீரோ (நாயகன்) = இவனைப்போல் இருக்க மாட்டோமா என ஏங்குவது..
ஆனால் அவனைப்போல் ஆகவே முடியாதது..

ரஹீம்.. என் ஹீரோ..

rajeshkrv
23-03-2004, 12:23 PM
படித்தால் மட்டும் போதுமா..(1962)
சிவாஜி, பாலாஜி, சாவித்திரி,ராஜசுலோசனா,கண்ணாம்பா,ரங்காராவ் இவர்களின் அற்புத நடிப்பில்
வெளிவந்த படம் படித்தால் மட்டும் போதுமா...

இதில் படிப்பறிவு கம்மியான தம்பி பாத்திரம் ஏற்றது சிவாஜி
படித்த அண்ணன் பாத்திரம் ஏற்றவர் பாலாஜி

இருவரும் நண்பர்கள் போல் பழகுகிறார்கள்
அப்படியே பாடலிலும் அவர்களது அன்பின் வெளிப்பாடு .

பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை - என பி.பி.ஸ்ரீனிவாஸம் செளந்தரராஜனும் பாட
சிவாஜியும் பாலாஜியும் யதார்த்தமாக நடித்திருப்பார்கள்

இந்த பாடல் ஒலிப்பதிவை கேட்ட சிவாஜி
"விஸ்வ நாதா ஸ்ரீனிவாஸன் செளந்தரராஜனை சாப்பிட்டு விட்டான் அவனை கூப்பிட்டு பாடவை இல்லேனா ஸ்ரீனிவாஸன் குரலுக்கு நான் வாயசைத்துவிடுவேன் " என்று சொன்னாராம் - திரு.பி.பிஸ்ரீனிவாஸடன் உரையாடிய போது அவரே சொன்னது.
மெல்லிசை மன்னரும் பல தொலைக்காட்சியில்
கூறியதுண்டு

உண்மையில் இந்த பாடலில் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு படி மேலே போகிறார்.

சிவாஜி பாலாஜிக்காக பெண் பார்க்க, பாலாஜி சிவாஜிக்காக பெண் பார்க்கிறார்

பாலாஜி சாவித்திரியை பார்த்ததும் மனதை பறிகொடுத்து ஒரு சதி திட்டம் தீட்டுகிறார்

இரு இடத்திற்கும் சிவாஜி எழுதுவது போல் கடிதம் எழுதி ..
சாவித்திரியை மணமுடிக்கிறார், சிவாஜி ராஜசுலோசணாவை மணக்கிறார்.

ராஜசுலோசணாவிற்கு சிவாஜி மீது கோபம் . தன்னை ஏமாற்றி மணம் செய்து கொண்டார் என்று.

சாவித்திரியும் பாலாஜியும் அன்னியோன்யமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்

அந்த பிரியத்தின் வெளிப்பாடு தான் மாயவனாதனின் இந்த பாடல்
தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க என்று சுசீலாவின் குரலில் மயங்காதார் மனம் யாவும் மயங்கும்

அங்கே ராஜசுலோசணா சிவாஜியை அவமதிக்க சிவாஜி சாட்டையால் விளாசி தள்ள பின் அமைதியடைந்து நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை என்று தன் நிலையை நொந்து பாடுவது கவிதை - செளந்தரராஜனால் மட்டுமே முடிந்த ஒன்று ..

இறுதியில் பாலாஜியின் சதி வெளியே வர
இருவருக்கும் சண்டை வலுக்க
இறுதியில் பாலாஜி இறக்க
சிவாஜி காரணம் என்று காவல்துறை அவரை கைது செய்ய சாவித்திரி சாட்சி சொல்லி அவரை மீட்கிறார்.

கதையின் முடிச்சு என்னவோ சிறியது தான் ஆனால் அதை சொன்ன விதம் பீம்சிங்கை பாராட்ட சொல்கிறது.

மெல்லிசை மன்னர்களின் இசையும் பலமே

நான் பொல்லாதவன் என்று இருவரும் பாடுவது நேர்த்தி..


நாளை பார்த்தால் பசி தீரும்
ராஜ்

rajeshkrv
25-03-2004, 08:45 AM
பார்த்தால் பசி தீரும் - 1962

ஏ.வி.எம்மின் தயாரிப்பில் ஜெமினி,சிவாஜி,சாவித்திரி,சரோஜாதேவி,செளகார் ஜானகி என நட்சத்திர பட்டாளமே நடித்த படம்.

சிவாஜி- ஜெமினி நண்பர்கள் பட்டாளத்தில் வேலை செய்பவர்கள்.

போரில் இருவரும் ஒதுங்கி ஒரு மலைவாழ் மக்களின் இருப்பிடத்தில் தஞ்சம் புக அங்கே
ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் காதல் மலர்கிறது.

அவனோ தமிழன் அவளோ காஷ்மீரி அதுவும் மலைவாழ் பெண் அவள் பேசும் பாஷை இவனுக்கு புரியாமல் இவள் பேசுவது அவனுக்கு புரியாமல் ஒரே தமாஷ் தான்

இவன் அவளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க அனா ஆவன்னா இன ஈயன்னா என ஜெமினி சொல்ல அதை சாவித்திரி கிளிப்பிள்ளை போல் சொல்ல
பின் ஏ.எல்.ராகவனும் சுசீலாவும் பாடுவது இன்றளவும் மறக்க முடியாத பாடல்
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ - பாடலும் அதன் இசையும் அருமை..

பணி அழைப்பின் காரணமாக ஜெமினி சாவித்திரியை பிறிய பின் கதை சென்னையை நோக்கி செல்கிறது

அங்கே ஜெமினி- செளகார், செளகாரின் தங்கையாக சரோஜாதேவி , ஜெமினியின் மகனாக கமல்ஹாசன் (என்ன தேஜஸ்)..

சரோஜாதேவி - பருவப்பெண் . இளமையின் விளைவாக பாடல் - பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் - சுசீலாவின் குழைவில் பாடல் தேவகானம்.

சாவித்திரி தன் தந்தையை இழந்து மகன் கமல்ஹாசனுடன்(இரு வேடம்) சென்னைக்கு வர அங்கே அவர்களை சிவாஜி பார்க்க ...
சிவாஜிக்கு அதிர்ச்சி .. காரணம் சிவாஜிக்கு ஜெமினிக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரியும். அவர்களை தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து தங்க வைக்கிறார்

சிவாஜி ஜெமினியின் நண்பன் என்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர அங்கே நான்கு கண்கள் மோதின.. ஆம் சரோவும் சிவாஜியும் காதலிக்க ..

கொடியசைந்ததும் காற்று வந்ததா என்று கவிஞரின் வார்த்தை விளையாட்டை பாடலில் காணலாம் - சுசீலா, டி.எம்.எஸ் குரல்களில் பாடல் நம்மை மயக்கும்

தன் நிலையை நினைத்து சாவித்திரி பாட
அன்று ஊமைப்பெண்ணல்லோ என்று சோகப்பாடல் ஒலிக்கிறது..

சரோஜாதேவி - சிவாஜி காதல் நாடகத்தில் இன்னொரு பாடல்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ குறிப்பாக இந்த பாடலில் சரோஜாதேவியின் முகபாவங்கள் அபாரம். சுசீலா கெ()ஞ்சுவது அழகு.

சிவாஜி வீட்டில் சாவித்திரியை பார்க்க சந்தேகம் ஆரம்பம் தொடர்ச்சி சோகம் ..
சோகம் என்றால் டி.எம்.எஸ் பாடல் இல்லாமலா
உள்ளம் என்பது ஆமை என்ற பாடல் சிவாஜிக்கே உறிய சோகப்பாடல்

கமலை தூங்கவைக்க சிவாஜி பாடுவதாக அமைந்த பிள்ளைக்கு தந்தை ஒருவன் என்ற பாடல் பல தந்தையருக்கு உகந்த பாடல்

உடல் நலமின்றி இருக்கும் செளகார் சாவித்திரியையும் ஜெமினியை சேர்த்து வைக்க
சிவாஜி - சரோஜாதேவி ஜோடி இணைகிறது

படம் இனிதே முடிகிறது.

பீம்சிங்கின் புகழில் இந்த படத்திற்கு பெரும் பங்கு உண்டு..

நாளை அவர் 70'களில் இயக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் பற்றி பார்ப்போம்

ராஜ்

இளசு
25-03-2004, 11:33 PM
தொடரும் குருகுருவின் பிரமாண்ட, சிரத்தையான இந்தத் தொடர்பதிவுக்கு
என் சிரந்தாழ்ந்த வந்தனமும், நன்றியும்...

மூர்த்தி
26-03-2004, 01:18 AM
எவ்வளவு புதிய விஷயங்கள்.மிகவும் நன்றி ராஜேஷ்.வயதை 27ஆக இருந்தாலும் பழமையை மறக்காத தங்களின் பாங்கு அருமை.

rajeshkrv
29-03-2004, 12:13 PM
சில நேரங்களில் சில மனிதர்கள்(1975)-

ஏ.பீம்சிங் இயக்கத்தில் மைல்கல் என்று இந்த படத்தை சொல்லலாம்

எழுத்துலக பிதாமகர் - திரு.ஜெயகாந்தனின் கதை தான் சில நேரங்களில் சில மனிதர்கள் படமானது.

ஜெயகாந்தனின் கதைகள் இதற்கு முன்னரே படமாக வந்திருந்தன (உன்னை போல் ஒருவன் , யாருக்காக அழுதான்).

ஆனால் 60'களில் குடும்ப கதைகளின் இயக்குனரான பீம்சிங்க் ஜெயகாந்தனின் கதைகள் மீது கொண்ட மோகத்தால் சில
நேரங்களில் சில மனிதர்களை இயக்க முன்வந்தார். அதை திறம்பட செய்தார்.
திரைக்கதையும், நல்ல இயக்கமும் ஜெயகாந்தனின் கதைக்கு உயிரூட்டியது என்றால்
மிகையில்லை.

சில நேரங்களில் சில மனிதர்கள் முதலில் நாவலாக வெளிவந்தது. 1972'ல் சாகித்ய
அகாடமி விருது பெற்றது.
ஒரு கதாசிரியன் கங்காவின் கதையை எழுதுகிறான்.


தந்தையில்லா கங்கா ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தை சேர்ந்தவள்.
ஒரு மழை நாள் இரவில் பஸ்ஸக்காக
காத்திருக்க அவளை ஒருவன் காரில் வந்து அழைத்து கற்பழித்துவிடுகிறான்.
இந்த காட்சியை அந்த எழுத்தாளன் பார்க்கிறான். இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதமே பாராட்டிற்குரியது.
ஒரு கார் வரும் இவள் உள்ளே செல்வாள் என்ன பேசினாள் என அருகில் இருக்கும் எழுத்தாளனுக்கு கூட கேட்காது. உள்ளே சென்றவுடன் இது என் வீட்டிற்கு செல்லும் பாதை அல்ல என்று சொல்வாள் அவ்வளவு தான்..
அவளை வெளியே தள்ளிவிட்டு கார் சென்றுவிடுகிறது.

அந்த எழுத்தாளன் கங்காவை தொடர்கிறான்

அவள் அண்ணன் அவளை ஒதுக்கிவிட அவள் தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள்.

நன்றாக படித்து பட்டம் பெற்று வேலைக்கும் செல்கிறாள்.இவளுக்கு உதவுகிறார் இவளது தாய்வழி மாமன் காரணம் இவள் மேல் ஒரு கண். இவளோ தன்னை கற்பழித்தவனுடனே
நட்பு கொள்கிறாள் அவனை பழி வாங்க.

தாய் மகளுக்கு இடையே நடக்கும் அந்த மெளன போராட்டம் அபாரம்
சுந்தரிபாய் என்னமாய் நடித்திருப்பார்.. ஆஹாலக்ஷ்மி ஓரிடத்தில் தாயை பார்த்து எல்லம் சம்பிரதாய்ப்படி நடக்கனும்னு சொல்றியே நீ மட்டும் என்ன அப்பா செத்தவுடன் மொட்டை போட்டுண்டு நார்முடி புடவை உடுத்திக்கலியே என்று சொல்ல அடுத்த நாள் காலையில் அதே கோலத்தில் சுந்தரி பாய் நிற்க
லக்ஷ்மி கண் கலங்க அதற்கு சுந்தரி பாய் அடி அசடே நல்லத யார் சொன்னாலும் கேட்கலாம் என்று கூறும் இடம் அபாரம்..

மெல்லிசை மன்னரின் இசையில்
நாகேஷக்கு (எழுத்தாளர்) அவரே பாடுவது
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
என்ற பாடலில் தான் எவ்வளவு அர்த்தம்.

வாணி ஜெயராமின் வேறு இடம் தேடிப்போவாளோ என்ற பாடலும் அருமை.

லக்ஷ்மியின் நடிப்பு உன்னதமான நடிப்பு.
அதேபோல் சுந்தரிபாய், ஒய்.ஜி.பி, ஸ்ரீகாந்த ஆகியோரின் நடிப்பு அபாரம்.

படத்திற்கும், லக்ஷ்மிக்கும் தேசிய விருது
கிடைத்தது

அடுத்து இயக்குனர் ஸ்ரீதர் பற்றி பார்ப்போம்.

ராஜ்

rajeshkrv
01-04-2004, 09:49 AM
இயக்குனர் ஸ்ரீதர்.
சி.வி.ஸ்ரீதர் ..

தமிழ் திரைப்பட வரலாற்றில் இந்த பெயருக்கு தனி இடம் உண்டு..

கதாசிரியராக தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்த இவர் பின் முத்திரை இயக்குனராக விசுவரூபம் எடுத்தார்.

வசனங்களுக்கு முக்கியத்துவமும், காட்சியமைப்பும் இவரது பலம் என்றால் அது மிகையில்லை.

இசையமைப்பாளர்களிடம் பாடல் வாங்குவதில் இவரது பாங்கே அலாதி. இசையின் மீது உள்ள மோகம் தான் அதற்கு காரணமோ என்னவோ..

கதாசிரியராக எதிர்பாராதது மற்றும் சில படங்களுக்கு
கதை வசனம் எழுதினார்.

பின் நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து அமரதீபம் தயாரித்தார். இதில் தேன் உண்ணும் வண்டு பாடலை ஏ.எம்.ராஜாவுடன் பாட முதிலில் தேர்வானவர் லீலா.
லீலாவின் தகப்பனார் ஏற்படுத்திய பிரச்சனையால் ஏ.எம்.ராஜா இருக்க லீலா நீக்கப்பட்டார் , சுசீலா பாடினார். பாடல் எவ்வளவு பிரபலமடைந்தது என்று நான் சொல்ல தேவையில்லை.

அப்பொழுது முதல் ஏ.எம்.ராஜாவுடன் நல்ல நட்பு உண்டானது ஸ்ரீதருக்கு.

ஆனாலும் இயக்குனராக அவர் அறிமுகமானது
கல்யாணப்பரிசு படம் மூலம் தான்
1958'ல் வெளிவந்த வீனஸ் பிக்சர்ஸின் கல்யாணப்பரிசு இன்றளவும் நிலைத்து நிற்கும் படம்.

இந்த படம் ஆரம்பிக்கும்போது ஜெமினி உடல் நலம் சரியில்லாமல் போக அவர் குணமாகும் வரை காத்திருந்து படத்தை முடித்தார்கள்.

இந்த படம் வெளியானதும் ஸ்ரீதரின் பெயரும் புகழும் உயர்ந்தது. நட்சத்திர இயக்குனராக மின்னினார்.

பின் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றியடைந்தன.

ஒரு கட்டத்தில் தானே சொந்தமாக கம்பெனி(சித்ராலயா பிலிம்ஸ்)
உருவாக்கி படங்களை தயாரித்து இயக்கினார்.

இப்படி மெல்ல மெல்ல தன்னையும் வளர்த்து
சினிமாவின் தரத்தையும் உயர்த்தினார்.

இவர் இயக்கிய படங்களில் சில
கல்யாணப்பரிசு
தேன் நிலவு
விடி வெள்ளி
காதலிக்க நேரமில்லை
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சிருக்கும் வரை
கலைக்கோயில்
போலீஸ்காரன் மகள்
சுமை தாங்கி

பின் எழுபதுகளில்
உரிமைக்குரல்
உழைக்கும் கரங்கள்

அதன் பின்
இளமை ஊஞ்சல் ஆடுகிறது
தென்றலே என்னை தொடு என பல.

ஆனால் காலம் அவரை முடமாக்கியது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இப்பொழுது தள்ளு வண்டியில் நடமாடும் இந்த மாபெரும் இயக்குனர் காலம் உள்ள வரை சினிமா உள்ள வரை மக்கள் மனதில் ன் நீங்கா இடம் பெறுவார்

இந்த முத்துமாலையில் சிலவற்றை பற்றி பார்ப்போம்

1958- கல்யாணப்பரிசு.
முக்கோண காதல் கதை.
அக்கா, தங்கை இருவருமே ஒருவரை காதலிக்க
அக்காவிற்காக தங்கை தன் காதலை தியாகம் செய்கிறாள். அக்காவோ இறக்க, சரோஜாதேவியோ வேறு இடத்திற்கு வேலைக்கு செல்ல அவள் நாகேஸ்வரராவை மணக்க அவளது கல்யாணப்பரிசாக அவளது அக்காவின் குழந்தையை கொடுத்துவிட்டு செல்கிறார் ஜெமினி. சோகமான முடிவென்றாலும் சொல்ல வந்ததை தைரியமாக சொல்லியிருப்பார் ஸ்ரீதர்.

இந்த படம் தான் சரோஜாதேவிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

அந்த அழகிய கண்களும் பாந்த முகமுமாக நம் முன்னே இன்னமும் உலா வருகிறார் வசந்தி என்ற அந்த பாத்திரத்தில். இதன் பின் அவர் அடைந்த புகழ் நாம் அறிந்ததே.

ஜெமினி - சொல்ல தேவையில்லை யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
அவருக்கே உரிய அந்த குறும்பு காதல்/பாடல்களில் நன்றாய் இருக்கும்.

விஜயகுமாரியின் பங்கும் அளவானது.

திரு. ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக உருவெடுத்தது இந்த படத்தில் தான்.
அவரிடம் இருந்த இசைத்திறன் ஊற்றாக வெளிவந்தது. வரிகளால் உடன் பங்களித்தவர்
திரு. ப()ட்டுக்கோட்டையார்..

இன்றும் காதல் தோல்வி என்றால் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது

ஆம் காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் - ஏ.எம்.ராஜாவின் குரலிலும்
காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி என சுசீலாவின் குரலிலும் நெஞ்சை வருடும் கானம்

காதிலித்த நாட்களில் ஜெமினி காத்திருக்க சரோ தாமதமாக வர
வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ என்ற அழகான பாடல் சைக்கிளின் ஓசைக்கேற்ப இசையமைப்பு, ஏ.எம்.ராஜா - சுசீலா குரல்களில் இனிமை. அதுவும் சுசீலா பாடும் "பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ" என்று பாடுவது அதற்கு அபிநய சரஸ்வதியின் அபிநயம் அழகு.

ஆசையினாலே மனம் - ராஜாவும், சுசீலாவும் பாடுவது குறும்பு - அதுவும் ராஜா சொல்லும் oh i see, i'm sorry குறும்புக் கவிதை.

உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீ ஆட
சுசீலா பாட இன்றும் தீபாவளி என்றால் இந்த பாடல் தான்..

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா என்ற பட்டுக்கோட்டையின் வரிகள் அற்புதம்

ஜிக்கியின் துள்ளாத மனமும் துள்ளும் - ஆஹா
சோர்ந்த பயிரும் இந்த பாடல் கேட்டால் தோகை விரித்தே மகிழ்ந்திடும்..

கல்யாணப்பரிசு திரையுலகப்பரிசு
ஆம் ஸ்ரீதர், ஏ.எம்.ராஜா, சரோஜாதேவி என பலரும் மின்னிய ஒரு காவியம்..

நாளை நெஞ்சம் மறப்பதில்லை பற்றி பார்ப்போம்

ராஜ்

இளசு
01-04-2004, 10:19 PM
மிக உயர்ந்த தரத்தை எட்டிவிட்டது இப்பதிவு...
குருகுருவே

நெஞ்சிருக்கும்வரை - உம்மை
நெஞ்சம் மறப்பதில்லை..

சேரன்கயல்
02-04-2004, 12:29 AM
பிரமிப்பே ..உன் இன்னொரு பெயர் ராஜ்-ஆ?

சரியான சந்தேகம் இனிய இளசு...
திரைப்படங்கள் பற்றிய தரவுகளை நம் ராஜ் விரல் நுனியில் வைத்திருப்பார் போல...
(பிலிம் நியூஸ் ஆனந்தனின் சொந்தக்காரரோ :wink: )

rajeshkrv
02-04-2004, 11:58 AM
ஒரு முக்கிய பகுதியை மறந்துவிட்டேன் மன்னிக்கவும்

அந்த பைரவன் என்னும் எழுத்தாளர் - பாத்திரத்தில் சிரிக்க வைத்த டணால் தங்கவேலு - எம்.சரோஜா பற்றி சொல்ல மறந்து விட்டேன்

மன்னார் அண்ட் கம்பெனி என்று ...அந்த புகழ் பெற்ற வசனமாகட்டும்
பைரவன் சேவை நாட்டுக்கு தேவைன்னு சொன்னேன்
தட்னான் பாரு என்று அவர் கூற
உடனே சரோஜா உங்களையா என்று கேட்க
என்னை ஏன் தட்ரான் கையை தட்டுனான் என்று சமாளிக்க
Timing என்பார்களே அது இது தான்

நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும்
தங்கவேலின் timing'க்கு நிகர் அவரே

கதையோடு ஒட்டி வரும் நகைச்சுவை காட்சிகள் சுவாரஸ்யமானது

இதை மறந்ததற்கு மன்னிக்கவும்

இளசு, சேரன்கயல் உங்கள் பாராட்டிற்கு நன்றி

பிலிம் நியூஸ் ஆனந்தன் - இமயமலை
நான் மடு என்று கூட சொல்லி கொள்ள தகுதியற்றவன்

ராஜ்

இக்பால்
02-04-2004, 12:10 PM
ராஜ் தம்பி... அபூர்வமான தகவல்கள் அருமை. தொடருங்கள்.
-அன்புடன் அண்ணா.

rajeshkrv
06-04-2004, 12:30 PM
நெஞ்சம் மறப்பதில்லை..

நம் நெஞ்சங்கள் இன்றளவும் மறக்காத காவியம் இந்த
திரைப்படம்

அப்பொழுதே வித்தியாசமான கோனத்தில் கதையை
சிந்திருத்திருக்கிறார் ஸ்ரீதர். மூன்று ஜென்மத்திலும் தொடரும் காதலும் அதன் விளைவுகளும் அற்புதமாக சொல்லப்பட்ட படம்.


துவக்கத்தில் மாலியின் வீட்டிற்கு அவரது நண்பரான கல்யாண்குமார் வருகிறார்

அந்த வீட்டில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக அவருக்கு படுகிறது. ஒரு பெண்ணின் குரலும் கேட்கிறது.. இரவில் அதை பற்றி துப்பு துலக்க அவர் செல்ல அங்கே பாழடைந்த வீட்டினுள் நுழைகிறார்
அவருக்கு மயக்கம் வந்து நினைவுகள் பின்னோக்கி செல்கிறது.

ஜமீன் தார் நம்பியார் அவரது மகன் கல்யாண்குமார். நம்பியார் அந்த ஜமீந்தார் தோரணையில் இருப்பவர். ஏழைகளை மிதிப்பவர்.
கல்யாண் குமாரோ பண்ணையில் வேலை செய்யும் சகஸ்ர நாமத்தின் மகளான தேவிகாவை காதலிக்கிறார்.
காதல் பாடலாகவும் அதில் ஊடே சோகமும் நிறைந்த
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
சுசீலாவின் சாரீரத்திலும் பிபிஸ்ரீனிவாஸ் சாரீரத்திலும் நம் சரீரத்தை சிலிர்க்க வைக்கும்.

கண்ணதாசனின் வரிகள் அபாரம். மெல்லிசை மன்னர்களின் இசை அற்புதம்
"தாமரை மலரில் ஒரு மலர் எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு சூதுமில்லை ..உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை" ஆஹா!!

கல்யாண் குமாரும், தேவிகாவும் குதிரை வண்டியில் ஓட நம்பியாரின் ஆட்கள் அவர்களை துரத்த பின் அவர்கள் இறக்கிறார்கள்
ஒரு ஜென்மம் முடிந்தது.

இதெல்லாம் ஞாபகம் வர கல்யாண்குமாருக்கு தேவிகாவின் முகமும் ஞாபகம் வர மாலியின் தங்கையான தேவிகாவை பார்க்க மீண்டும் காதல் அரும்புகிறது.

நம்பியார் உயிருடன் இருக்க, தள்ளாடும் வயதிலும் இவர்களை
பிரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்.

அந்த தள்ளாடும் கிழவானாக நம்பியாரின் நடிப்பு அபாரம்.

போராட்டத்திற்கு பின் காதலர்கள் இணைகிறார்கள்

புதிய கோணத்தில் கதை சொன்ன விதமும் பாடல் காட்சியும் மக்களை மீண்டும் மீண்டும் படம் பார்க்க தூண்டியது.

மிடுக்கான வேடத்தில் நம்பியாரும்
பாந்தமான தோற்றத்தில் கல்யாண்குமாரும், தேவிகாவும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்

விஸ்வ நாதன் - ராமமூர்த்தியின் இசையில் நெஞ்சம் மறப்பதில்லை பாடலும், அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை பாடலும் அருமை.

நெஞ்சம் மறப்பதில்லை பாடல் ஒலிப்பதிவின் போது அருகே ஹிந்தி பாடல் ஒலிப்பதிவில் இருந்த திருமதி - லதா மங்கேஷ்கர் அவர்கள் தனக்கு இது போன்ற அருமையான பாடல்கள் கிடைப்பதில்லையே என ஏக்கத்தோடு கூறினார் என்பது செய்தி.

ஸ்ரீதரின் படங்களில் இந்த படத்திற்கு தனி இடம் உண்டு

நாளை நெஞ்சில் ஓர் ஆலயம் எழுப்புவோம்

ராஜ்

இளசு
07-04-2004, 12:10 AM
மும்பை தினசரியில் வந்த சிறு பெட்டிச் செய்தியை
தம் கற்பனையால் அற்புத திரைக்கதையாக்கி
ஸ்ரீதர் படைத்த இந்த கருப்பு வெள்ளைக்காவியம்

காலத்தால் வெளுக்காத வண்ண மன ஓவியம்..


இதிலும், நெஞ்சில் ஓர் ஆலயத்திலும் சிவாஜி இல்லாததே கூடுதல் சிறப்பு..

அவர் தனிநடிப்பின் சிறப்பில் ஒட்டு மொத்த படத்தின் தாக்கம் திசைமாறி இருக்கலாம்.

கல்யாண்குமாரால் நம் கவனம் சிதறாமல்...
உள்ளம் கொள்ளை கொண்ட படம்..


நன்றி குருகுருவே...

aren
08-04-2004, 03:57 AM
அருமையான படம் நெஞ்சம் மறப்பதில்லை. ராஜ் அவர்களின் வரிகளைப் படித்த பொழுது அந்தப் படத்தின் கதைகளும் காட்சிகளும் கண்முன்னே தெரிகிறது.

நெஞ்சில் ஓர் ஆலயம் மற்றொரு அருமையான படம். தொடருங்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

rajeshkrv
08-04-2004, 05:55 AM
நெஞ்சில் ஓர் ஆலயம்:

உண்மையிலேயே நம் நெஞ்சில் ஓர் ஆலயம் தான் எழுப்பினார் ஸ்ரீதர்.
40 நாட்களில் ஒரே இடத்தில் அதாவது ஆஸ்பத்திரியில் படப்படிப்பை முடித்தார். இதில் இன்னொரு சிறப்பம்சம் ஒளிப்பதிவு. திரு. சுந்தரம் அவர்கள். கன கச்சிதமான ஒளிப்பதிவு.

கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலிக்க பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரால் முத்துராமனை மணக்கிறார் தேவிகா.

முத்துராமன் நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட
அங்கே டாக்டராக பணி புரிபவர் கல்யாண்குமார்.

தேவிகாவிற்கோ அதிர்ச்சி.. அதை காட்டிக்கொள்ளாமல் கணவன் நிலையை நினைத்து அழுகிறாள்.

அவள் கணவனோ அவளை அருகே அழைத்து தனக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் மறு மணம் செய்து கொள்ளச்சொல்கிறான்

உடனே பாடல் "சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே" சுசீலாவின் தேனிலும் இனிய குரலில் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வரத்தானே செய்யும்.

அதுவும் "தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா" என்ற வரி சாட்டையடி.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை- முத்துராமனுக்கு ஸ்ரீனிவாஸின் குரலில் தேவ கானம்
என்ன பொருள் ..

அடுத்த நாள் அறுவை சிகிச்சை முதல் நாள் இரவில் அவளை அலங்காரம் செய்து கொண்டு வரச்சொல்லி கண் குளிர பார்த்து ரசிக்கிறான் அவளோ துயரத்தை பாடலில் சொல்கிறாள்
"என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ"

ஆஹா மீண்டும் சுசீலாவின் ராஜாங்கம்
சமமாக தேவிகாவின் நடிப்பு..

தன் கணவனை காப்பாற்ற டாக்டரிடம் கெஞ்சுகிறாள்
அவனும் சரி என்று கூறுகிறான்

சிகிச்சை நடக்கிறது.இவள் அறையில் இறைவன் முன்
உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்..

கதவு தட்டப்படுகிறது. இவளுக்கோ பயம்..
திறக்க சிரமப்பட்டு திறக்கிறாள்
டாக்டர் நிறக் அதிர்ச்சியடைகிறாள்
டாக்டர் சிரித்து கொண்டே சிகிச்சை வெற்றி பெற்றதாக கூறுகிறார்
பின் தன் அறைக்கு சென்றி தாழிட்டு கொள்கிறார்.
அங்கேயே உயிரை விடுகிறார்

தன்னுயிர் தந்து தன் காதலியின் கணவனை மீட்டார் டாக்டர்..

இறுதி காட்சியில் தேவிகா - கல்யாண்குமாரின் நடிப்பு அபாரம்
முத்துராமனும் தன் பங்குணர்ந்து நடித்திருப்பார்

நடுவே நாகேஷ்-ராமாராவ்-மனோரமா தமாஷ்
ஆனால் முத்திரை என்பது குட்டிபத்மினி வரும் காட்சிகள் தான்

அந்த அழகு முகமும் உருண்டை கண்களும் கொழு கொழு கன்னங்களும் ஆஹா..
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
என சுசீலாவின் குரலும் சதனின் முத்த சத்தமும் பாடலுக்கு மெருகேற்றும்..

இதே பாடல் சோகமாக ஒலிப்பது குட்டி பத்மினியின் மறைவில்..
அதே போல் துள்ளி ஓடும் மான் குட்டி என்ற பாடலும் அருமை

கதை - எவ்வளவு இயல்பான ஒன்று
அதை சொன்னவிதம் அதை விட இயல்பு

ஆஸ்பத்திரியிலேயே கதையை முடித்து
அதனுள்ளே அழகான கருத்தையும் வைத்த ஸ்ரீதர் எங்கே
ஒரு பாடலுக்கு(அதுவும் கனவில் புகுத்தி) வெளி நாடு செல்லும் இன்றைய இயக்குனர்கள் எங்கே..

மெல்லிசை மன்னர்களின் இசை படத்தின் சூழலுக்கேற்றவாரு அமைந்திருப்பது ஸ்ரீதரின் ரசிப்புத்திறனின் எடுத்துக்காட்டு

இந்த மாமனிதனுக்கு சிறம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறான் இந்த ஸ்ரீதர் ரசிகன்

ராஜ்

தஞ்சை தமிழன்
08-04-2004, 07:51 AM
படத்தில் மறக்கமுடியாத பாடல்,

ராகவனின் குரலில்,,,
எங்கிருந்தாலும் வாழ்க,,,,,,,

இந்த பாடலுக்கு அடிமையாகாதோர் உண்டோ????

novalia
08-04-2004, 08:51 AM
ராஜ்,

உங்கள் பதிவு பிரமிக்க வைக்கின்றது. எவ்வளவு அருமையான
விமர்சனங்கள் பாடல்களுக்கும், படங்களுக்கும்....கொடுத்திருக்கின்றீர்கள்.
திரும்பவும் இப்படங்களை எல்லாம் எடுத்தும் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்...

நன்றி.. தொடருங்கள் நண்பரே...

அன்புடன்
நோவாலியா.

rajeshkrv
16-04-2004, 05:47 AM
காதலிக்க நேரமில்லை..(1964)

இந்த மாதிரி ஒரு படம் இதன் பிறகு வந்ததுமில்லை
வரப்போவதுமில்லை.

நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் ஒவ்வொருவரின் பங்கும் அளவாக அதே சமயம் அழகாக அமைந்திருந்தது.

முத்துராமன் தொடர்ந்து ஸ்ரீதரின் படங்களில் நடித்துவந்தார்.
அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வை பார்த்த ஸ்ரீதர் இந்த படத்தில் அவரை அழகாக பயண் படுத்திக்கொண்டார்.

பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் அறிமுகம்..ரவிச்சந்திரன், காஞ்சனா,ராஜஸ்ரீ இவர்கள் மூவருமே அடைந்த புகழ் பற்றி நான் சொல்ல தேவை இல்லை.

குறிப்பாக ரவிச்சந்திரன், காஞ்சனா ..

படத்தின் துவக்கமே " என்ன பார்வை உந்தன் பார்வை " என்று மெரீனா கடற்கரையில் காஞ்சனாவும் முத்துராமனும்(வாசு பாத்திரம்) பாடும் காதல் பாடல்
யேசுதாஸின் முதல் தமிழ் டூயட் இது தான் - சுசீலாவுடன்
அழகான பாடல்

தேர்வு முடிந்து சகோதரிகள்(காஞ்சனா- ராஜஸ்ரீ) சென்னையிலிருந்து கோவைக்கு திரும்புகின்றனர்.
அவர்களின் தந்தை பெரிய எஸ்டேட் முதலாளி ஆம்
டி.எஸ். பாலைய்யா இந்த பாத்திரத்தில் இவரைவிட பொருத்தமானவர் வேறு யாரும் இல்லை என்பது போல வெளுத்துக்கட்டியிருப்பார்.

செல்லப்பாவாக நாகேஷ் - புகழ்பெற்ற ஆங்கில நடிகர் பாணியில் இருக்கும் அவரது நடை உடை பாவனை ..ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் என்ற சினிமா கம்பெனி நடத்துபவராக அவர் அடிக்கும் லூட்டி அபாரம்.

ரவிச்சந்திரன்(அசோக் பாத்திரம்) அந்த எஸ்டேட்டில் வேலை செய்கிறார். இந்த இரு சகோதரிகளிடம் வம்பு செய்வதால் அவருக்கு வேலை போகிறது.

விஸ்வநாதன்(பாலய்யா) வீட்டின் முன் கூடாரம் அமைத்து
போராட்டம் நடத்துகிறார்.

போராட்டப்பாடலாக "விஸ்வ நாதன் வேலை வேண்டும்" என்ற பாடல் இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம் மெல்லிசை மன்னர்களின் இசை பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல் , நடனம் .
புதுவிதமாக அமைந்த இந்த நடனம் அந்த கால கட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது.

தன் நண்பனான முத்துராமனை தன் தந்தையாக நடிக்க ரவி அழைக்க வந்த இடத்தில் தன் காதலியின் தங்கையை ரவி காதலிப்பது தெரிய அங்கேயே ரவியின் அப்பாவாக முத்து தங்கி விடுகிறார்

முத்துராமனுக்கும் பாலய்யாவிற்கும் நடக்கும் உரையாடல்கள்
அபாரம்.

ரவிச்சந்திரன் - ராஜஸ்ரீ(நிர்மலா பாத்திரம்) காதல் அரும்புவது அருமை தொடரும் பாடலோ இனிமை.. அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன், நாளாம் நாளாம் திருநாளாம் ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரல்களில் இசைத் தோரணம்.

பிக்னிக் செல்லும் இடத்தில் கிழவன் வேடத்தில் உள்ள முத்து கான்ஞசனாவிடம் அடிக்கும் கூத்து ஆஹா - காதலிக்க நேரமில்லை என சீர்காழியார் பாட அருமை

நடுவில் நாகேஷ் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று சச்சுவுடன் அடிக்கும் லூட்டி அபாரம்..
படத்தின் பாடல் என்று கூறி முத்துராமனுக்கு சச்சுவின் நடனத்தை காட்டுவது கூத்து - எல்.ஆர்.ஈஸ்வரியின் மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் அழகு.

நால்வரும் சேர்ந்து பாடும் நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா .. யேசுதாஸ் - சுசீலா- ஈஸ்வரி பாடுவது நம் நெஞ்சங்களை அள்ளும்.

நாகேஷ் பாலய்யாவிற்கு கதை சொல்லும் அந்த காட்சி இன்றும்
நகைச்சுவை காட்சிகள் வரிசையில் முதல் இடம் பெறும்..
பாலய்யாவின் முக பாவங்களும் நாகேஷ் கதையை விவரிக்கும் பாங்கும் அலாதி..

பாலய்யா, முத்துராமன், நாகேஷ் மூவரும் தூள்
கிளப்பியிருப்பார்கள்

கடைசியாக வாசுவின் தந்தை ரூபத்தில் திருப்பம் ஏற்படுகிறது.
வாசுவின் தந்தையாக வி.எஸ்.ராகவன் - பாலய்யாவின் நண்பரும் கூட. அவர் தன் மகனை பற்றி கூற, அசோக்கின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் என்று கூற கதையில் முக்கிய திருப்பம்..

ஸ்ரீதர்-விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் பாடல்கள் அருமை

படத்தின் ஒளிப்பதிவும் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போல் தோன்றும்
மொத்தத்தில் ஒரு முழு நீள நகைச்சுவைப்படம்

ஸ்ரீதரின் முயற்ச்சி சோடை போகுமா?

வெண்ணிறாடை பற்றி நாளை பார்ப்போம்

ராஜ்

பரஞ்சோதி
16-04-2004, 10:58 AM
ராஜேஷ் அவர்களே! அருமையான கட்டுரை. காதலிக்க நேரமில்லை படத்தை நான் குறைந்தது 200 தடவையாவது பார்த்திருப்பேன். அவ்வளவு இனிமையான படம். பாட்டி வீட்டில் விளையாடி விட்டு, நேரம் போகவில்லை என்றால் போட்டு பார்க்கும் படம் காதலிக்க நேரமில்லை தான்.

மன்மதன்
17-04-2004, 08:59 AM
கையை கொடுங்க ராஜேஷ்.. உங்க அளவுக்கு யாரும் இப்படி புட்டு புட்டு வைக்க முடியாது.. என்றும் இனிக்கும் இனிய காவியம் காதலிக்க நேரமில்லை.. பரம்ஸ் 200 தடவை பார்த்திருக்கிறார் என்றால் பார்த்துக்கோங்க.. நான் 15 தடவைதான்..

இளசு
18-04-2004, 10:21 PM
குருகுருவுக்கு இனி என்ன சொல்லி பாராட்ட...
வார்த்தைக்கு இனி வேலையில்லை..

நான் ஒரு 40 முறை பார்த்ததை சொல்ல கூச்சம்..
பரம்ஸ் கணக்கை பார்த்ததும் கூச்சம் போயே போச்.!

தஞ்சை தமிழன்
19-04-2004, 06:38 AM
இந்த தலைப்பே ராஜேஷ் அவர்களுடைய பிரமிக்கதக்க எழுத்துகளால் பொலிவுடன் விளங்குகிறது.

அவருக்கு பாராட்டு மழையை பொழியும் இளசு, மன்மதன், பரஞ்சோதி இவர்களின் பங்கும் அருமை.

காத்திருக்கிறேன் அடுத்த ஒன்றுக்கு,

rajeshkrv
19-04-2004, 01:24 PM
வெண்ணிறாடை -
இந்த தலைப்பே ஒரு கதை சொல்லும்..இதை தேர்ந்தெடுத்த ஸ்ரீதருக்கு சபாஷ்.

பெருமக்குரிய அறிமுகங்களாக இதிலே அறிமுகமான முகங்கள் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த, நிர்மலா, மூர்த்தி..

ஜெயலலிதா புகழேணியில் ஏறிய கதை நமக்கு தெரியும்.
ஸ்ரீகாந்த் பல கதாப்பத்திரங்களில் நடித்து நம் மனதில் நின்றார்.

மூர்த்தி தனியாக/தனித்து தன் அங்க சேஷ்டைகள் மூலம் காமெடி செய்து நல்ல பெயரெடுத்துக்கொண்டார்
நிர்மலா பாத்திரங்களை தேர்வு செய்வது என்பது தேர்வெழுதுவது போல.. இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார் பாவம்.

இந்த படத்திற்கு முதலில் ஸ்ரீதர் தேர்வு செய்தவர் ஹேமமாலினி.
என்ன காரணத்தினாலோ அவர் நீக்கப்பட்டார்

படத்தில் ஸ்ரீகாந்த் ஒரு டாக்டர். அவரும் நிர்மலாவும் காதலர்கள்.

காதலர்கள் என்றால் காதல் பாடல் இல்லாமல
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி என்று
பி.பி.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களில் கேட்க கேட்க கான மழை.

இவர்கள் இருவருக்கும் இன்னுமொரு பாடல்
ஆம் சித்திரமே நில்லடி என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் - ஜானகியின் குரலில் அழகுப்பாடல்

இந்த சமயத்தில் டாக்டரான ஸ்ரீகாந்த் ஒரு விளம்பரத்தை பார்த்து அங்கே வேலைக்கு செல்கிறார்.

ஆம் ஒரு மனநிலை குன்றிய பெண்ணை குணப்படுத்த அவர் அங்கே போகிறார்.

பெண்ணின் தந்தையான மேஜர் சுந்தரராஜன் அவருக்கு பெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் கொடுத்து பெண் இருக்கும் அறைக்கு அழைத்து செல்கிறார்.

என்ன ஒரு அறிமுகம்.. நீ என்பது என்ன என்று
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒரு துள்ளல் பாடல்.

முதலில் வெறித்தனமாக கத்த பின் டாக்டரின்
அன்பான கவனிப்பால் நிதானமாக தேறுகிறாள்.

மெல்ல மெல்ல டாக்டரின் பால் ஈர்க்கப்படுகிறாள்

வீட்டிலேயே இருந்தால் நன்றாயிராது என்று டாக்டர் அவளை வெளியே அழைத்து செல்கிறார்
அங்கே இயற்கை காட்சியில் தன்னையே மறக்கிறாள்
பாடல் பாடுகிறாள்
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு என்று சுசீலாவின் சாரீரத்தில் தான் எத்தனை துள்ளல்

அதே போல் கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல என்ற பாடலும் அதனூடே அவள் அவன் பால் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதும் ஸ்ரீகாந்த் அதற்கு காட்டும் முக பாவமும், இந்த பாடலில் சுசீலாவும்- விஸ்வநாதனும் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்கள்
கண்ணதாசனின் வரிகள் அபாரம்.

இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது பார்த்தாலும் ஒளிப்பதிவு என்ன அழகு/குளிர்ச்சி


முழுமையாக குணமடைந்தவுடன் அவளது தந்தை டாக்டருக்கு ஒரு விருந்து வைக்கிறார்
அங்கே இவள் தன் மனதை பாடலின் மூலம் திறக்கிறாள் டாக்
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே ..என சுசீலாவின் குரல் கொஞ்சுவது இசையழகு இசைக்கு அழகு.

நடுவில் எங்காவது கல்யாண ஊர்வலத்தை கண்டாலோ, மேள சத்தம் கேட்டாலோ அவள் நிலை குலைந்து வெறி வந்தவள் போல் ஆகி விடுவாள்
டாக்டர் அவள் தந்தையிடம் எத்தனையோ முறை கேட்டும் காரணத்தை கூற மறுத்துவிடுகிறார்

தான் டாக்டரை மணக்க வேண்டும் என்று அவள் தன் எண்ணத்தை
வெளியிடுகையில் அவள் தந்தையால் பொறுக்க முடியாமல் அவள் ஒரு விதவை என்ற உண்மையை ஸ்ரீகாந்த்திடம் கூறுகிறார்
அதற்கேற்றார்போல் அவளும் அறைக்குள் சென்று வெண்ணிற ஆடை
அணிந்து வருகிறாள்.
ஸ்ரீகாந்த்திற்கு அதிர்ச்சி ஆனாலும் அவள் சிரித்து தன் ஆசையை புதைத்துக் கொள்கிறாள்

ஸ்ரீகாந்த்- நிர்மலா ஜோடி இணைகிறது

ஜெயலலிதாவிற்கு முதல் படமென்றால் நம்பவா முடிகிறது.
என்ன அருமையான நடிப்பு, எத்தனை முக பாவங்கள் .. அபாரம். இதற்கு பின் குறும்பான வேடம் என்றால் ஜெயலலிதா என்றானது ஆச்சர்யம் ஒன்றுமில்லை

அதே போல் ஸ்ரீகாந்த், மூர்த்தி, மேஜர், ருக்மணி என அனைவரும் தங்கள் கதாப்பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பர்.

விஸ்வநாதன் - ஸ்ரீதர் என்றும் சோடை போனதே இல்லை

இன்றும் பழைய பாடல்கள் நிகழ்ச்சியில் என்ன என்ன வார்த்தைகளோ, கண்ணன் என்னும் மன்னன் பாடல்கள் இல்லாமல் இருக்காது.

நாளை எல்லோரையும் கலக்கிய சுமை தாங்கி பற்றி பார்ப்போம்

ராஜ்

இளசு
20-04-2004, 10:48 PM
நன்றி குரு குரு

படங்கள், பாடல்கள் பலவகை..

1) உடனடி ஹிட், காலம் சென்றால் டெட்

பல மோகன் படங்கள்
பல தேவா பாடல்கள்..

2) உடனடி வெற்றி, காலம் கடந்தும் நிற்கும்

காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள்- இந்த வகை

3) அப்போது டப்பா.. இப்பக்கி பாத்தா அடே அப்பா

கப்பலோட்டிய தமிழன்....

4) அன்று காவியம்.. இன்று.... மங்கிய ஓவியம்..

வெண்ணிற ஆடை - இறுதிவகை..

இப்போது பார்த்தால் என்னவோ ஜீவன் மிஸ்ஸிங்!
பல காட்சிகள் (அதிலும் மேஜர் சுந்தர்ராஜன்)..... செயற்கையாய்...


ஆனால் பாட்டுகள் அத்தனையும்....

ஸ்ரீகாந்த்தின் சின்ன கண்களை வியக்கும் என்ன என்ன வார்த்தைகளோ
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு..
அகத்திணை உச்சம் சித்திரமே சொல்லடி...

இவை இரண்டாம் ரகம்..

rajeshkrv
26-04-2004, 07:19 AM
சுமை தாங்கி..(1961)
விசாலாக்ஷி பிலிம்ஸ் சுமைதாங்கி
ரா.கி.ரங்கராஜனின் கதையை படமாக்கினார் ஸ்ரீதர்
படம் படுதோல்வியடைந்தது
ஆயினும் பாடல்கள் அனைத்தும் தேன்

கண்ணீர் வர வழைக்கும் கதை..

அண்ணன் சம்பாதியத்தில் நடக்கும் குடும்பம்
அண்ணனுக்கு வேலை போக குடும்ப சுமை தம்பியின் தலையில் விழுகிறது
அதனால் படிப்பும் பாதியிலேயே நிற்க , காதலும் தோல்வியடைய ..
படம் ஒரே அழுகை...

முத்துராமன் அண்ணனாக, எல்.விஜயலக்ஷ்மி தங்கையாக
ஜெமினி ஏற்றதோ அந்த பரிதாபத்திற்குரிய பாத்திரம்..

குடும்பத்தோடு உட்கார்ந்து சீட்டு விளையாடும் இடமாகட்டும்
தன் பொருப்புணர்ந்து படிப்பை நிறுத்துவதாகட்டும், காதலை கைவிடும் இடமாகட்டும்
ஆஹா ஜெமினி நடிப்பில் மிளிர்கிறார்

அதே போல் தேவிகாவும்..
மற்ற படி முத்துராமன், எல்.விஜயலக்ஷ்மி, சஹஸ்ர நாமம், வி.எஸ்.ராகவன் என அனைவரும் தங்கள் பங்கை செவ்வனே செய்திருப்பர்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் முத்து..

படத்தில் இரண்டே குரல்கள் தான் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி
மெரினா கடற்கரையில்(ஸ்ரீதரின் விருப்பமான இடம்)
ஜெமினி பாடுவதாக வரும் " மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" பாடல் கருத்துள்ள பாடல்

ஆனாலும் பலரையும் சிந்திக்க வைத்த பாடல்
"மயக்கமா கலக்கமா " என்ற பாடல்
கவிஞர் வாலி வாய்ப்பில்லாமல் இருந்த போது இந்த பாடல் தான் அவரை
சிந்திக்க வைத்த்து பின் அவர் அடைந்த புகழ் சொல்லவேண்டியதில்லை.

தேவிகா - ஜெமினி காதல் பாட்டு.
ராதா -- ராஜா (ஸ்ரீனிவாஸ்- ஜானகி)
எந்த பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி - ரெக்கார்டில் இப்படி இருந்தாலும் சென்சாரின் பிரச்சனையால் பருவத்தின் கேள்வி பார்வையின் கேள்வி ஆனது..

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ - ஜானகி

எல்.விஜயலக்ஷ்மிக்கு காதல் இல்லாமலா..
ஓ ஓ ஓ மாம்பழத்து வண்டு - ஸ்ரீனிவாஸ் - ஜானகி
என் அன்னை செய்த பாவம் - ஜானகி

நடுத்தர குடும்பத்தின் துன்பத்தை பிரதிபலித்த படம்
ஆனாலும் வெற்றியடையவில்லை..

நாளை ஸ்ரீதரின் சில விடுபட்ட படைப்புகளை பற்றி அலசலும்
80'களில் ஸ்ரீதர் இயக்கிய படங்களை பற்றி பார்ப்போம்


ராஜ்

இளசு
26-04-2004, 08:43 PM
அருமை அருமை குருகுரு அவர்களே

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
வாலியை பீனிக்ஸ் ஆக்கிய வரி...


க்ளைமாக்ஸ் என்றால்
என்னைப்பொறுத்தவரை ஸ்ரீதர்..

ஸ்ரீதர் என்றால்
1) சுமைதாங்கி
2) கல்யாணப் பரிசு


படம் எடுப்பவர்களுக்குப் பாடங்கள்...


ராகிரவின் கதை.. தோல்வி ஆனால் என்ன?
ஜீவன் அப்படியே செல்லுலாய்டில்...

ராகியின் கையில்லாத பொம்மையை
கொன்ற "கைராசிக்காரன்" --- இதன் நேரெதிர் உதாரணம்...

rajeshkrv
27-04-2004, 01:16 PM
இளசு அவர்களே நீங்கள் கொடுக்கும் ஊக்கத்தில் தான் நான் எழுத முயல்கிறேன்

நன்றி

பாரதி
27-04-2004, 11:46 PM
ஒவ்வொரு படமாக அலசும் உங்கள் பாணியே தனி ராஜேஷ். பராட்டுக்கள்.

rajeshkrv
28-04-2004, 01:22 PM
விஸ்வ நாதனும் ஸ்ரீதரும் சேர்ந்து கலைக்கு கோயில் கட்ட நினைத்தனர் ஆம் கலைக்கோயில் என்ற படத்தை தயாரித்தனர்
பாடல்கள் அனைத்தும் உண்மையிலேயே முத்துக்கள்
ஆனால் படமோ படு தோல்வி..

தேவியர் இருவர் முருகனுக்கு
தங்க ரதம் வந்தது என பாலமுரளியும்,சுசீலாவும் பாடினால் தங்க ரதம் வராமல் போகுமா..

காதலிக்க நேரமில்லையை தொடர்ந்து
முழுக்க முழுக்க நகைச்சுவைப்படமாக வந்த ஊட்டி வரை உறவு படத்தை பற்றி சொல்லவும் வேண்டுமோ?

விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்தவுடன்
விஸ்வநாதன் தனித்து இசையமைத்த படம் இது தான்

பூ மாலையில், தேடினேன் வந்தது, ராஜ ராஜஸ்ரீ, ஹாப்பி, புது நாடகத்தில், அங்கே மாலை மயக்கம் என அனைத்துப் பாடல்களும் தேன் சரம்

முத்துராமன், சிவாஜி,கே.ஆர்.விஜயா, எல்.விஜயலக்ஷ்மி, வி.கே.ஆர் மற்றும் டி.எஸ்.பாலய்யா என கலக்கல் பட்டாளம்

பின் சரோஜாதேவியின் பிம்பமாக விளங்கும் பாரதி முக்கியவேடமேற்ற அவளுக்கென்று ஒரு மனம்
பாரதி சிறப்பாக நடித்த ஒரே படம் இது தான்
சுசீலாவின் " மலர் எது என் கண்கள் " என்ற பாடலுக்கு கிடார் வாசித்தவர் இசைஞானி
இளையராஜா.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என ஜானகி பாடுவதும் அழகே.

மங்கையரில் மகராணி சுசீலா, பாலு குரல்களில் நல்ல பாடல்

படம் ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் பாராட்டும்படி அமைந்தது.
80'களில் ஸ்ரீதரும் மசாலாவிற்கு தள்ளப்பட்டார் என்றால் நம்பமுடியவில்லை ஆனாலும் உண்மை
தென்றலே என்னை தொடு, இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்ற படங்களில் தேவை இல்லாமல் சில ஆபாச தினிப்புகள் - யார் காரணமோ ஸ்ரீதரின் படத்தில் எதிர்பாராதது...
இருந்தும் இளையராஜாவிடம் பாடல்கள் வாங்கிய விதம் அருமை


நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா ,
கின்னத்தில் தேன் வடித்து
ஒரே நாள் உனை நான்(வாலியின் வரிகளை யார் தான் மறப்பர்)
தென்றல் வந்து என்னை
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
கவிதை பாடு குயிலே குயிலே என பாடல்கள் அனைத்தும் தேன்
இந்த வரிசையில் வந்த ஒரு முத்திரைப்படம்
அழகே உன்னை ஆராதிக்கிறேன் ..
படத்தின் தலைப்பே பாடலாக ஜெயசந்திரனின் குரலில் இளமை இனிமை

லதா - நீண்ட நாட்களுக்கு பிறகு திறமையான நடிப்பை வெளிப்படுத்திய படம்

முழுக்க முழுக்க வாணிஜெயராம் பாடிய படம் இது
நானே நானா
என் கல்யாண வைபோகம் என அழகான பாடல்கள்
குறிஞ்சி மலரில் ..
என தேன் சொட்டும் பாடல்கள் வாலியின் வரிகள் அற்புதம்.

ஒரு ஓடை நதியாகிறது
தலையை குனியும் தாமரையே என பாலுவும்
ராஜேஸ்வரியும் பாடும் பாடல் அழகு..

தென்றல் என்னை முத்தமிட்டது - சசிரேகாவும் கிருஷ்ணசந்தரும் பாடிய பாடல் வானொலியில் ஒலிக்காத நாளில்லை

இன்றைய முன்னனி நாயகன் விக்ரமை அறிமுகம் செய்த பெருமையும் ஸ்ரீதரையே சாரும்..
ஆம் தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலம் விக்ரம் அறிமுகம்..

இந்த படத்திலும் இளையராஜாவின் இசை இனிமை
படம் படு தோல்வி..

இது தான் ஸ்ரீதரின் கடைசி படம்

இந்த மாமேதைக்கு உரிய விருது இன்னும்
கிடைக்காதது வருத்தமே

நாளை வேறு இயக்குனரைப்பற்றி பார்ப்போம்

ராஜ்

இக்பால்
28-04-2004, 01:48 PM
அப்பா....எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமை.
அழகான நடையில் சீராக கொடுத்து இருக்கிறீர். விறுவிறுப்பு குறையாமல்
போகிறது. தொடருங்கள் இராஜேஷ். நன்றியுடன் பாராட்டுக்கள்.

சாகரன்
30-04-2004, 04:52 PM
நீங்கள் சொன்னபடங்களில் நான் பார்த்தது... காதலிக்க நேரமில்லை மட்டுமே... ஆனால் சுமைதாங்கி யாருமே பார்க்க விட வில்லை .. அழுகை படம் என்று சொல்லி தவிர்க்க வைத்து விட்டார்கள்.. வாய்ப்பு வந்தால் நீங்கள் சொன்ன மற்ற படங்களையும் பார்க்க வேண்டும்...

சுவையாக இருக்கிறது ராஜ் , தொடருங்கள்..

poo
30-04-2004, 05:01 PM
நடமாடும் திரை நூலகமே வியந்து பாராட்டுகிறேன் நண்பரே!!!

இளசு
01-05-2004, 09:49 PM
எப்போதும் வெள்ளை பேண்ட், வெள்ளை அரைக்கைச் சட்டை, கருப்புக்கண்ணாடி என ஸ்மார்ட்டாய் காட்சி தரும்
என் அபிமான ஸ்ரீதர் அவர்கள்
இங்கே கருப்பு சூட்டில்.. அபூர்வ புகைப்படம் இது குருகுருவே..


உங்கள் படைப்புகளைப் பாராட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு
நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்..

அலைகள்... புதிய பாணி சித்திரம்..
விஷ்ணுவர்த்தன் -சந்திரகலா
பொன்னென்ன பூவென்ன கண்ணே
(இப்பாடலை சினிமா பாடல்கள் பகுதியில் தந்திருக்கிறேன்)

உரிமைக்குரல், மீனவ நண்பன்
வர்த்தக ரீதியில் மக்கள் திலகத்துடன் இணைந்து ஈட்டிய வெற்றிகள்..

சௌந்தர்யமே வருக வருக..
சிவச்சந்திரன் -ஸ்ரீப்ரியா
"அழகிய செந்நிற வானம்"
என் "எப்போதும் பிடித்தவை" பட்டியல் பாட்டு
இசை விஜயபாஸ்கர் என நினைவு

தென்றலே என்னைத் தொடு
இளமைக்காவியம்
அத்தனை பாட்டும் தேன்..
தென்றல் வந்து என்னைத் தொடும்..
புதிய பூவிது பூத்தது..


சிவந்த மண்...
வரலாற்றுச் சமூகப்படம்.
விறுவிறுப்பும், சுவாரசியமும் படம் நெடுக
முதல் வெளிநாட்டுப் படப்பிடிப்பு நடத்திய படம்..
செலவைக் குறைக்க மேக்கப் இல்லா சிவாஜி
காமிராவை தூக்கி அலைந்த சிவாஜி
ஸ்ரீதரின் நெருங்கிய நண்பன் சிவாஜி
அழகுச் சிற்பம் காஞ்சனா
நாயகனை விட நேர்த்தியாய் உடுத்திய நம்பியார்
கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்..
டான்ஸில்லைட்டிஸோடு "பட்டத்து ராணி " பாடிய ஈஸ்வரி
சொல்லவோ.... சுகமான கதை சொல்லவோ
மெக்ஸிக்கன் இசையில் சுசீலா
முத்தமிடும் நேரமிப்போ
பார்வை யுவராணி கண்ணோவியம்
ஒரு ராஜா ராணியிடம்...

இத்தனை கதலிகளை மீறி என்னை மிகவும் ஈர்த்த இசைக்கனி..
ஒரு நாளிலே (என்னவாம்)..உறவானதே ( தெரியுமே)


இன்னும் வைரநெஞ்சம், இளமை ஊஞ்சலாடுகிறது
என என்னென்னவோ படங்கள், பாடல்கள் அலைமோத...


இதயத்தின் மூலையில் விண் விண் என இன்னும் தெறிக்கும் வலி தரும்
அற்புதக் காவியம் ஒன்று..
படுதோல்வியில் பெயர் தெரியாமல் முடங்கினாலும்...
அவரின் காவியங்களில் முதல் வரிசையில் நான் வைக்கும் படம்
"மோகனப்புன்னகை"தொடருங்கள் குருகுருவே

தஞ்சை தமிழன்
02-05-2004, 08:02 AM
இளசுவின் ஞாபகசக்தி வியக்க வைக்கும் ஒன்று.

அவரது ரசனை மிகவும் ரசிக்கதக்கது. எனக்கு பிடித்த பல பாடல்களை கோடிட்டு காட்டியது என் மனதில் மீண்டும் அவற்றை மீண்டும் ரீங்காரமிட காரணாமானது.

நன்றிகள் பல.

aren
02-05-2004, 03:27 PM
விஸ்வ நாதனும் ஸ்ரீதரும் சேர்ந்து கலைக்கு கோயில் கட்ட நினைத்தனர் ஆம் கலைக்கோயில் என்ற படத்தை தயாரித்தனர்
பாடல்கள் அனைத்தும் உண்மையிலேயே முத்துக்கள்
ஆனால் படமோ படு தோல்வி..


விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்தவுடன்
விஸ்வநாதன் தனித்து இசையமைத்த படம் இது தான்


ராஜ்

ராஜ் அவர்களே,

விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்தவுடன் விஸ்வநாதன் அவர்கள் தனியாக இசையமைத்தபடம் மக்கள்திலகம் அவர்களின் "கலங்கரை விளக்கம்" என்று நினைக்கிறேன். அதுபோல் ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்தபடம் கலைஞரின் "மறக்கமுடியுமா" என்று நினைக்கிறேன்.

poo
02-05-2004, 03:53 PM
அண்ணன் இளசு எதைத்தான் அறியாமல்.. படிக்காமல்.. தெரியாமல் விடுத்தாரோவென மனதுக்குள் சந்தேகம் எழாமல் இல்லை..

மடைதிறந்த வெள்ளமாய் வந்துவிழுவதையெண்ணி வியக்கிறேன்...

நண்பர் ராஜேஷின் வயதை பார்க்கும்போது மனதுக்குள் பெரிய்ய ஆச்சர்யம் வருகிறது!!

உங்களால் மிகச்சிறப்பாக நடைபோடுகிறது இந்த பதிவு.. வாழ்த்துக்களும் நன்றிகளும்!

rajeshkrv
03-05-2004, 12:29 PM
பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல பல.

ஆரென் அவர்களே எம்.எஸ்.வி தனித்து இசையமைத்த முதல் படம்
ஊட்டி வரை உறவே..

இதில் 100% உறுதி எனக்குண்டு..

விடுபட்ட சில நல்ல படங்களையும் பாடல்களையும்
பட்டியலிட்டு தோரணம்கட்டிய இளசுவிற்கும் என் நன்றி..அடுத்து நாம் அலசப்போவது திரு.ஏ.பி. நாகராஜன் அவர்களைப் பற்றித்தான்.

பெயரைக் கேட்டவுடன் கந்தன் கருணை நினைவுக்கு வருகிறதா
வரவேண்டும் - அதற்கு காரணம் இந்த மனிதர் தான்.

ஆம் புராணப்படங்கள்/பக்தி படங்கள் என்றால் இவர் பெயர் தானே
நினைவில் வரும்

இருந்தாலும் நல்ல கருத்தாழமிக்க படங்களையும் நமக்கு
கொடுத்துள்ளார்

1954'ல் நால்வர் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகில்
பிரவேசித்தவர். அதில் இவர் நடிக்கவும் செய்திருந்தார்
பின் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து நல்ல இடத்து சம்பந்தம் என்ற படத்தை தயாரித்தார்.

பல படங்களை இயக்கிய இவர் திருவிளையாடலில் அந்த நக்கீரர் வேடத்தில் சிவாஜிக்கு விடும் சவால் அருமை..

இவர் இயக்கிய படங்களில் குறிப்பிடத்தக்கவை
சரஸ்வதி சபதம்
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள்
குலமகள் ராதை
வடிவுக்கு வளைகாப்பு
குமாஸ்தாவின் மகள்
நவராத்திரி
கந்தன் கருணை
வா ராஜா வா

இவர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மீது கொண்ட அன்பும்
நம்பிக்கையும் தான் இவரது படங்களில் கே.வி.மகாதேவன் இசையமைப்பாளராக ஆஸ்தான இசையமைப்பாளாராக இருந்தது.

திரையிசைத்திலகம் என்ற அந்த அடைமொழியை வழங்கியவரும் இவரே.

வரும் நாட்களில் இவரது படங்கள் பற்றி ஆராய்வோம்

ராஜ்

தஞ்சை தமிழன்
03-05-2004, 01:15 PM
இத்தனை நாளும் தமிழ் திரையுலகத்திற்கு புதுமை இயக்குணராக வந்த ஸ்ரீதர் படங்களை அலசிய ராஜ் அவர்கள்

தன்க்கு சமூக படங்கள் மட்டுமல்ல புராணப்படங்கள் பற்றியும் அலச முடியும் என கிளம்பிவிட்டார். அவரது தகவல் திறன் என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

இந்த தலைப்பே ராஜ் அவர்களின் பதிவுகளால் உயர்ந்து நிற்கிறது.

நன்றிகள்.

rajeshkrv
04-05-2004, 01:22 PM
சரஸ்வதி சபதம்..(1966)

கல்வியா செல்வமா வீரமா என்ற போட்டிக்கு விடை சொன்ன படம்.

ஆம் கல்வி பெரிதா , வீரம் பெரிதா, செல்வம் பெரிதா என்ற கேள்வியை நம்மிடம் கேட்டால் பதில் பலவாறு இருக்கும் தானே?

படத்தின் துவக்கமே சங்கீதமயம் ஆம் <span style='color:green'>"கோமாதா எங்கள் குலமாதா" </span>என்று சரஸ்வதி வேடம் ஏற்ற சாவித்திரி பாடுவதாக அமைந்த காட்சி
சுசீலாவின் சாரீரத்தில் தேனமுது.
சுசீலாவிடம் ரேடியோ மிர்ச்சி தொகுப்பாளர் இந்த பாடலை பற்றி கேட்டபோது .. "சாவித்திரி குறித்து பெருமையாக பேசினார்" சுசீலா பாடும்போது எங்கெல்லாம் ஏற்றம் இறக்கம் கொடுத்து கமகம் செய்தாரோ காட்சியில் துளி கூட பிசகாமல் அதை அப்படியே சாவித்திரி
கொண்டுவந்ததை எண்ணி வியந்ததாக சொன்னார்
ஆம் சாவித்திரி ஒரு அற்புத நடிகையே..

பாடல் முடியவும் நாரதர் வரவும் சரியாக இருக்கும்.
நாரதர் வடிவில் இருக்கும் சிவாஜியோ உலகில் எது சிறந்தது என்று
கேள்வி எழுப்ப சரஸ்வதியோ இதிலென்ன சந்தேகம்
கல்வியே உலகில் சிறந்தது என்று கூற.. நாரதரும் தலையை ஆட்டிவிட்டு
கைலாயம் செல்கிறார்
அங்கே சக்தியான பத்மினியிடம் சரஸ்வதி சொன்னதை கூற
கோபம் கொண்ட சக்தியோ உலகில் வீரம் தான் சிறந்தது என்று கூற
அங்கிருந்து நாரதர் வைகுந்தம் செல்கிறார்
அங்கே லக்ஷ்மியோ (தேவிகா) செல்வமே உயர்ந்தது என்று கூற
மூவரும் ஒரு சேர ஒரே இடத்தில் நாரதரை போட்டு வாட்டி எடுக்க கதை சூடு பிடிக்கிறது.

மூவரும் தங்கள் பலத்தை நிரூபிக்க
சரஸ்வதி ஒரு ஊமைக்கு பேசும் திறனை கொடுக்கிறாள்
அவனோ அரசவைப்புலவரின் மகன் - வித்யாபதி
தனக்கு பேசும் திறன் கொடுத்த அன்னையின் முன் பாடுகிறான்
<span style='color:darkred'>"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி" </span>என்று கம்பீரமாக பாட டி.எம்.எஸ்ஸை தவிர வேறு யார் உண்டு..

லக்ஷ்மியோ - பிச்சை எடுக்கும் ஒரு பெண்னை நாட்டின் ராணி ஆக்குகிறாள்
(கே.ஆர்.விஜயா)
பிச்சைக்கு ஒரு பாட்டு - குரல் சுசீலா
ஆம் தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா -- துயரத்தின் வெளிப்பாடு குரலிலும் நடிப்பிலும்..

பாடலின் முடிவில் பட்டத்து யாணை இவள் கழுத்தில் மாலை இட
இவள் ராணியாகிறாள்

சக்தி மட்டும் சும்மா இருப்பாரா என்ன?
கோழையான ஜெமினியை வீரனாக மாற்ற அவன் ராணியை ஒரு சந்தர்பத்தில் காப்பாற்ற நாட்டின் தலமை சேனாபதியாகிறான்.

கோயிலில் வித்யாபதியின் குரலில் இன்புற்ற தன்னை பற்றி ஒரு பாடல் பாட வேண்டும் என்று ராணி கோரிக்கை விடுக்க தெய்வத்தையன்றி வேறொன்றையும் தன் நா பாடாது என்று வித்யாபதி மறுக்க
அவனை சிறையில் அடைக்கும் படி உத்தரவிடுகிறாள் ராணி..

ஆக மூவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள்.

ராணிக்கு கர்வம், சேனாபதியோ சூழ்ச்சி, வித்யாபதிக்கோ வித்யா கர்வம்..

ராணி பாடுவதாக அமைந்த இன்னொரு பாடல்
உருவத்தை காட்டிடும் கண்ணாடி.. என சுசீலா பாடுவது அழகு..

ராணியின் பேச்சை மீறி அவரையே சிறையெடுக்கிறான் சேனாபதி.

எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் வித்யாபதியை யாணையில் காலால் மிதிக்க ஆணையிடுகிறான் சேனாபதி.
ஆனால் வித்யாபதியின் கல்விப்பலனாம் யாணை மாலையிட

மூன்று தேவியரும் தோன்றி அவர்களுக்கு ஆசி கூறி
ராணி நல்லட்சி புரிய அருள் பெற
புலவனோ நல்ல கல்வியை வளர்க்கவும்
சேனாபதியோ வீரத்தின் சின்னமாக விளங்கவும் வாழ்த்துகின்றனர்

நடுவில் மனோரமா - நாகேஷ் நகைச்சுவையும் ரசிக்கும்படியானதே..

ஒரு வரிக்கதையை அழகாக படமெடுத்த இந்த மனிதரை என்னவென்று பாராட்டுவது..

குறிப்பாக சிறையில் இருக்கும் வித்யாபதியை பார்க்க வரும் ராணி
கடைசி சந்தர்ப்பம் தருகிறேன் என்னைப் பற்றி பாடு என கூற

கூட்டத்தை சேர்த்துக் கொண்டு பாடும் "<span style='color:blue'>ராணி மகாராணி " </span>
ரசிக்கும்படியான காட்சி

படத்தின் கருத்தோ கல்வி,செல்வம்,வீரம் மூன்றும் சேர்ந்து இருப்பதே சிறப்பு என்பது தான்

நாளை மற்றொரு திரைப்படத்தை பற்றி அலசுவோம்


ராஜ்

இக்பால்
04-05-2004, 01:30 PM
வாங்க ராஜேஷ் தம்பி. அருமையான வரணனையுடன் அழகான அலசல்.

நல்ல தெளிவான படங்கள் இணைப்பு. நன்றி. தொடருங்கள்.

தஞ்சை தமிழன்
05-05-2004, 05:16 AM
படத்தில் சிவாஜியின் கம்பீரமான நடிப்பு அருமையாக இருக்கும்.

இப்போது எடுக்கப்படும் ஆக்சன் படங்களை விட மிகவும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

ராஜின் பார்வையில் சரஸ்வதிசபதம் அருமை.

இக்பால்
05-05-2004, 05:21 AM
இப்போது எடுக்கப்படும் ஆக்சன் படங்களை விட மிகவும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.


அருமையான விமர்சனம்.

rajeshkrv
06-05-2004, 10:55 AM
கே.வி.மகாதேவனைப் பற்றி சொல்லியிருந்தாலும்
சரஸ்வதி சபதத்தில அவர் பங்கு சிறப்பானது.
பக்தி படம் என்றாலே கூப்பிடுங்கள் மகாதேவனை என்ற அளவிற்கு இருந்தது அவரது இசை.
அவரது உதவியாளர் புகழேந்தியை மறக்கமுடியுமா

பக்தி படத்தோடு துவங்கினோம் சற்றே விலகி ஒரு சமூகப்படத்திற்கு வருவோம்

ஆம் குலமகள்ராதை (1963)

அகிலனின் கதையை படமாக்கினார் ஏ.பி.நாகராஜன்

சிவாஜி, சரோஜாதேவி, தேவிகா பிரதான
வேடமேற்றிருந்தார்கள்.

சிவாஜி சரோஜாதேவி - காதலர்கள்
பாடல் இல்லாமலா
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சுசீலா, டி.எம்.எஸ் குரல்களில் அருமை..

பின் சில காரணங்களால் அவர்கள் பிரிய
சிவாஜி சென்னைக்கு வர அங்கே சர்க்கஸ் நடத்தும் எஸ்.வி.ரங்காராவிடம் வேலைக்கு சேர அங்கே அவரது மகளான தேவிகா சிவாஜியிடம் தன் மனதை பறிகொடுக்கிறார்.
பாடல் ஆரம்பம் - இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று சுசீலாவின் குரலில் இதம்..

சிவாஜி தன் ஊருக்கே சர்க்கஸ் கம்பெனியுடன் வர அவரைத் தேடி வருகிறார் சரோஜாதேவி
சிவாஜியோ அவரைத் தவறாக நினைத்து பார்க்க மறுக்க
தேவிகாவிற்கு சரோ யார் என தெரியவருகிறது..

இந்த குழப்பத்திலேயே சர்க்கஸ் செய்ய தவறி விழுந்துவிடுகிறார் சிவாஜி
அவரை ஆஸ்பத்திரியில் கவனித்துக்கொள்கிறார் தேவிகா
பார்க்க வரும் சரோஜாதேவியை விரட்டி அடிக்கிறார் ரங்காராவ்..

"பகலிலே சந்திரனை பார்க்கபோனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்" இதில் சிவாஜியின் பெயர் சந்திரன் கண்ணதாசனின் பேனாவிற்கு மதிப்பேது..

கடைசியில் உண்மைகள் வெளிவர தேவிகா ஒதுங்கி கொள்ள காதலர்கள் இணைகிறார்கள்

தஞ்சை தமிழன்
06-05-2004, 12:34 PM
ஆம் ராஜ்,
குலமகள் ராதை படம் நான் பார்த்துள்ளேன்.

மிகவும் அருமையான பாடல்கள்.

இளசு
08-05-2004, 09:52 PM
என் குருகுருவுக்கு...

என்ன ஒரு பதிவு இது..

உங்கள் கரங்களை என் கண்ணில் ஒற்றியபடி நான்...

சரஸ்வதி சபதத்தில்
(தெய்வம் இருப்பது எங்கே)

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை...


(புதுப்புடவை பகட்டவே கோயில் போகும் பக்தி வேஷங்கள்..)


குலமகள் ராதையில்..
கொட்டும் மழையில்...

அக்கால "உன் குத்தமா என் குத்தமா"

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி...

ஒரு மனதை உறங்கவைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்....(சமூகப்படங்கள் - மேல்நாட்டு மருமகள், வா ராஜா வா போல் எடுத்திருந்தாலும் அருட்செல்வரின் தனிச்சிறப்பு புராண/வரலாற்றுப்படங்களே..
"உலகம் இதிலே அடங்குது" என்ற அச்சு இதழியல் களத்தோடு அகிலனின் நாவல் முடிந்துவிடும். வர்த்தகரீதிக்காக சர்க்கஸ் படத்தில் வரும்..
நாவலின் ஜீவனை மெருகூட்டி இவர் படைத்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்தான்... இவரின் மாஸ்டர்பீஸ்..
தமிழ்த்திரையுலகின் கிளாசிக்...
உங்கள் வரிகளில் அதைப் படிக்க மிக்க ஆவலுடன் நான்..)

gans5001
09-05-2004, 12:29 PM
அக்கால "உன் குத்தமா என் குத்தமா"

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி...


அழகி பாடலைக் கேட்டதும் கருத்து திருடர்களைப் பற்றி நான் நினைத்தை நீங்களும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்

gans5001
09-05-2004, 12:35 PM
இத்தனை கதலிகளை மீறி என்னை மிகவும் ஈர்த்த இசைக்கனி..
ஒரு நாளிலே (என்னவாம்)..உறவானதே ( தெரியுமே)


இன்னமும் மாலை நேரத்து மயக்கத்தில் நான் முணுமுணுக்கும் பாடல் இது...
ஒரு ராஜா ராணியிடம் நான் வியந்தது ஒரே பாடலில் பல மெட்டுகளை புகுத்தி பரவசப் படுத்திய இனிய இசை.

இளசு
12-05-2004, 10:24 PM
முன்பு அழகன் (ஹேண்ட்ஸம்..)
பின்னர் மனிதன்..
என்றும் கண்ஸ்...

நண்பனே..
உன் விமர்சனங்களால் என் பதிவுகள் முழுமை பெறுகின்றன...

நன்றியும் நெகிழ்ச்சியும் --- வடிக்க வார்த்தைகள் போதா...

rajeshkrv
14-05-2004, 04:47 AM
இளசுவின் வேண்டுகோளுக்கேற்ப நாம் அடுத்து அலசப்போவது
தில்லாணா மோகனாம்பாள்

தேசிய விருது பெற்ற படம்

தில்லாணா மோகனாம்பாள் (1968)
கொத்தமங்கலம் சுப்புவின் கதையை படமாக்கினார் ஏ.பி. நாகராஜன்.

விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் தயரித்த இந்த படத்தில்
சிக்கல் சண்முகசுந்தரமாக வேடமேற்றவர் நடிகர் திலகம்
மோகனா வேடமேற்றவர் நாட்டிய பேரொளி பத்மினி

இன்றளவும் நிலைத்து நிற்கும் படங்களில் இதுவும் ஒன்று.

பத்மினியின் நவரச நடனம், சிவாஜியின் நடிப்பு, கே.வி.மகாதேவனின் இசை என படத்தின் பலம் பல..

கோயிலில் சண்முகசுந்தரத்தின் வாசிப்பு ஏற்பாடு செய்யப்பட
அதை தொடர்ந்து மோகனாவின் நாட்டியம்

அதை பார்க்கும் ஆவலில் எல்லோரும் செல்ல
சிவாஜியும் வர
இருவரின் கண்களும் கலக்க
பாடல் ஆரம்பம்
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன "
கண்ணதாசனின் வரிகளும் சுசீலாவின் குரலும்
மகாதேவனின் இசையும் பத்மினியின் நடனமும்
இன்றளவும் இந்த பாடல் நிலைத்திருக்க காரணம்

" உன் பாட்டிற்கு நான் ஆட வேண்டாமா
என்னை உன்னையல்லால் வேறு யாரறிவார் "
என அர்த்தங்கள் பல

இருவரும் காதலிக்க
மோகனாவின் தாயாரோ மைனருக்கு மோகனாவை முடிக்க நினைக்கிறாள்..

மோகனா அதை மறுக்கிறாள், இருவரும் சந்திக்க தடை போடப்படுகிறது.

இருந்தாலும் ஓரிடத்தில் இருவரும் சந்திக்க நேரிடுகிறது. கையில் அடிபட்டு குணமடைந்த சண்முகசுந்தரத்தின் நலம் விசாரிப்பதாக அமைந்த பாடல்
"நலந்தானா நலந்தானா"
இந்த பாடல் அண்ணாவிற்கான பாடலாகவும் அமைந்தது.
சுசீலாவின் குரலும், என்.பி.என்.சேதுராமனின் நாஹஸ்வரமும் நம்மை மயக்கும்

இந்நிலையில் மோகனா சமஸ்தானத்தில் நடனமாட செல்கிறாள்
அங்கே சண்முகசுந்தரமும் நாயனம் வாசிக்க வருகிறார்.

மோகனாவிடன் திவான் தவறாக நடக்க முயல அவரது மனைவி தடுத்து காப்பற்றுகிறார்

விவரம் அறிந்து சண்முகசுந்தரம் மோகனாவை சந்தேகிக்க பின் சந்தேகம் தீர்ந்து காதலர்கள் இணைகிறார்கள்..

இந்த கதையை காட்சிகளுடன் பார்க்க பார்க்க திகட்டாத ஒன்று

வைத்தி வேடத்தில் நாகேஷ் பேசுவது ஆஹா ... அந்த அலட்டல் என்ன நக்கல் என ...மனிதர் பின்னி எடுத்துவிடுவார்

வடிவாம்பா வேடத்தில் சி.கே.சரஸ்வதி - இந்த மாதிரி பாத்திரத்தில் நடிக்க இவரை விட்டால் ஆளில்லை..

டி.எஸ்.பாலய்யா.. அந்த ரயில் பயணத்தின் போது
ஆட்டம் பலமாருக்கே .. விளக்க அணைக்கலாமே என அவர் அடிக்கும் கூத்து ..

இந்த படம் நடிக்கும் போது சிவாஜிக்கு 40 வயது பத்மினிக்கு 38
இருவரும் இதற்காக உடல் இளைத்து சிறியவர்களாக காட்டிக்கொண்டார்கள்..

ஜில் ஜில் ரமாமணியை மறக்க முடியுமா.. ஆம் மனோரமா தான் . தனி முத்திரை பதித்தார் இந்த படத்தில்
ஆத்தி என அவர் பேசும் அழகே தனி..

மற்றும் சஹஸ்ர நாமம்


மொத்ததில் இது ஒரு காவியம் என்றால் மிகையில்லை

sasi
14-05-2004, 05:52 AM
ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.செவாலியே அவர்களின் கண்கள் அசைவே பல கருத்துக்களைச் சொன்னதே அப்படத்தில்!யார் நடிப்பில் சோடை இப்படத்தில்?சிவாஜி, பத்மினி, மனோரமா, நாகேஷ் நடிப்பு மட்டுமல்ல சேதுராமனின் நாதஸ்வரமும் அல்லவா இப்படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது!மிகவும் நன்றாக இருந்தது உங்கள் அலசல்.

rajeshkrv
25-05-2004, 09:39 AM
தாமதத்திற்கு மன்னிக்கவும்

அடுத்து
கந்தன் கருணை:(1967)

இதுவும் மறக்க முடியாத படம்
திரு.கே.வி.மகாதேவனுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம்.

முக்கிய வேடமேற்றிருந்தனர்
சாவித்திரி, ஜெமினி, சிவாஜி, சிவகுமார், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா மற்றும் பலர்.

சாந்த சொரூபியாக முருகனாக நடித்திருந்த சிவகுமார் தான் எவ்வளவு அழகு..

கந்தன் கருணை தொடங்குவது இந்திராணியை சூரனின் தங்கை தேடுதலோடு ...

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா என
எஸ்.வரலக்ஷ்மியின் குரலில் நல்ல கானம்.

சூரனின் தங்கை இந்திராணியை நெருங்க அவள் மீது கைவைக்கும் தருனத்தில் அவளாது கையை பாதுகாவலர் துண்டிக்க அவள் அண்ணன் சூரபத்மனிடம் முறையிட
அவன் அனைத்து தேவர்களையும் சிறைப்பிடிக்கிறான்.

அவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிடுகிறார்கள்

அவர்களை அழிக்க ஆறு முகனை படைக்கிறார் சிவன்.
ஆறு முகமான பொருள் வாய் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்
என கார்த்திகைப் பெண்கள் பாட (சூலமங்கலம்-ஜானகி)
இனிமை..

அவன் அறிவிலும் ஆற்றிலிலும் சிறந்தவனாக வளர
பிரம்மாவிடமே கேள்வி கேட்க அவர் பதில் அளிக்க முடியாமல் போக அவரை சிறையில் அடைக்கிறான்
பின் தந்தைக்கு உபதேசம் செய்கிறான்..

இந்த தருணத்தில் அவனது பிறப்பின் நோக்கத்தை தாய் சக்தி எடுத்துரைக்கிறாள்

தந்தைக்கு மந்திரத்தின் ..

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
என சுசீலாவின் குரலும் சாவித்திரியின் முகபாவமும் போட்டி போடும் பாடல்.

வீரபாகு உடன் வர சூரனை வதைக்க முருகன் செல்கிறார்.
வீரபாகு வேடத்தில் சிவாஜி - முருகனை விட இவர் தான் பெரியவர் போல படைக்கப்பட்ட பாத்திரம் ஆதலால் நம்மை கவர மறுக்கிறார்.

சூரனை வதைத்தற்கு பரிசாக இந்திரன் மகள் தேவயாணையை முருகனுக்கு மணமுடிக்கிறார்கள்..

பள்ளியறையில் தேவயாணை காத்திருக்க முருகன் அவள் கையைப்பற்ற
பாடல் ஆரம்பம்
" மனம் படைத்தேன் உன்னை மணப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை நினைப்பதற்கு "

பாடலில் வரியும் சுசீலாவின் சாரீரமும்
கே.ஆர்.விஜயாவின் பாவமும்
மகாதேவனின் இசையும் நம்மை மெய் மறக்க செய்யும்
"மத்தள மேளம் முரசொலிக்க"
இன்னும் அந்த மத்தள மேளம் நம் காதுகளில் ஒலித்துக்
கொண்டிருக்கிறது.

போர் செய்த களைப்பு நீங்க மலையில் ஓஉவெடுப்பதாக சொல்லி முருகன் செல்கிறார்.

அங்கே வேடர் தலைவன் மகள் வள்ளி மீது மையல் கொள்கிறார். இங்கே இருபாடல்கள்
வெள்ளி மலை வேடர் மலை என குறி சொல்லும் பெண் பாடுவதாகவும்
குறுஞ்சியிலே பூ மலர்ந்து என வள்ளி பாடுவதாகவும் அமைந்தவை. இரண்டும் சுசீலாவின் குரலில் கேட்க கேட்க
திகட்டாத கானம்.

வள்ளியை மணமுடித்து அழைத்துவர
தேவயாணை கோபம் கொள்ள
இருவருக்கும் இடையே வீரபாகு மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.
முருகன் வந்து சமாதானம் செய்ய
இருவரும் முருகன் புகழ் பாடுகின்றனர்
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்"
என சுசீலாவும் சூலமங்கலம் ராஜலெட்சுமியும் பாடும் பாடல் இன்றும் பக்திப்பாடல் வரிசையில் முதலிடம் பிடிக்கும் பாடலாக இருக்கின்றது என்றால்
முதலில் எழுதிய பூவை செங்குட்டுவனும் அதை கதைக்கேற்ப மாற்றிய கண்ணதாசனும் சரி
பாடிய இருவரும் சரி
அனைவரும் காரணம்.

கடைசியில் திருமுருகாற்றுப்படை இயற்ற கந்தன் கருணை இனிதே நிறைவு பெறுகிறது.

சூரனாக அசோகனும் அவனது தங்கையாக ஜி.சகுந்தலாவும் நடித்திருந்தனர்.

வள்ளி மலையில் மனோரமா, நாகேஷ் காமெடி காட்சிகளும் அற்புதம்.

ஏ.பி. நாகராஜன் - மகாதேவன் கூட்டணியின் வெற்றி இதிலும் தொடர்ந்தது

ராஜ்

இளசு
25-05-2004, 11:53 PM
cliche இல்லாமல் உங்களைப் பாராட்ட புதிய வரிகள் தேடிக்கொண்டிருக்கிறேன்
குருகுருவே..

விகடனில் அண்மையில் படித்த பேட்டியில் இயக்குநர் சரண் சொன்னதுபோல்
ஒரு கல்லில் (பதிவில்) ஒரு மாந்தோப்பையே அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்..

பிரமிப்பில் நான்..

தி.மோ. பற்றி 1000 பக்க நூல் எழுதலாம்..

1) முதல் படத்தில் ஷண்முகன் மீது ப்ரியம் கொண்ட மோகனா ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த "மறைந்திருந்தே"

அந்தப் பாடலில் சூழலே மிக ரம்மியம்..

மேடையை ஆக்கிரமிக்கும் பேரழகு ஆடிக்கொண்டே
அழகர் மலை அழகா, இந்தச் சிலை அழகா...

உயர்வு நவிற்சி தேவைப்படாத நாயகி அவள்..

2) என்ன கொழுப்பா?
ஆமாம்!
தில்லானா வாசிச்சு உன் முட்டிக்காலை ஒடிக்கலே.. பார்டி.. ஏய்......உன் மக.. ம்ம்ம்.

உக்கிரத்தில் வார்த்தை முட்டும் கணேசன்..
சிவாஜி மனிதப்பிறவியைத் தாண்டி ஏதோ வரம் வாங்கிவந்த அபூர்வன்!

பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கலையல்லவா!


3) வாய்வார்த்தை வருமுன்னே அவளின் நீள்(ர்)விழிகள் அவன் நலம் விசாரிக்க
அவன் நலமே என புன்னகையுடன் முகமசைத்துப் பின் குறும்பாய்க் கண்ணடிக்க...

இப்பூமியில் மழையில்லாமல்
வானவில்லின் வர்ணஜாலம் தருவிப்பது
காதல் மட்டுமே...

rajeshkrv
26-05-2004, 12:14 PM
ஆம் இளசு நாவலே எழுதலாம்
ஆனால் மற்ற படங்கள் மற்றும் இயக்குனர்களைப்பற்றி அலச வேண்டியிருப்பதால் தான் குறைத்துக்கொண்டேன்.

அடுத்து அவரது விடுபட்ட படங்களின் தொகுப்பை பார்த்துவிட்டு வேறொரு இயக்குனர் பற்றி பார்ப்போம்

rajeshkrv
27-05-2004, 08:10 AM
1953- நால்வர்

1955 - டவுன்பஸ் - சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா பாடல் ஞாபகம் வர வேண்டுமே

1956- நான் பெற்ற செல்வம்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்ற கவி. கா.மு.ஷரிப்பின் பாடல் நமக்கு ஞாபகம் வரும்

1957- மக்களை பெற்ற மகராசி - மணப்பாறை மாடு கட்டி பாடலை மறக்க முடியுமா

1958- சம்பூர்ண ராமாயணம் - வீணை கொடியுடைய வேந்தனே..

1960- பாவை விளக்கு - காவியமா நெஞ்சின் ஓவியமா ஜீவிதமா தெய்வீக காதல் சின்னமா சுசீலா- சிதம்பரம் ஜெயராமனின் குரலில் இன்றும்
காவியப்பாடல்

1962- வடிவுக்கு வளைகாப்பு - இந்த படத்தின் மூலம் தான் கே.வி.மகாதேவன் திரையிசைத்திலகம் என்று அழைக்கப்பட்டார்
சீருலாவும் இன்ப நாதம் தெய்வ சங்கீதம் - டி.எம்.எஸ் - சுசீலா குரல்களில் இன்ப நாதம்

1963- குலமகள் ராதை

1964- நவராத்திரி - சிவாஜி 9 வித்தியாசமான வேடமேற்று அற்புத நடிகர் என நிரூபித்த படம்
நடிகையர் திலகம் மட்டும் சளைத்தவரா என்ன
ஒவ்வொரு சிவாஜிக்கேற்ப தன் பாவங்களை மாற்றி நடித்து கைதட்டல் பெற்றார்.
நவராத்திரி சுபராத்திரி, இரவினில் ஆட்டம் , வந்தேனே என பாடல்கள் அனைத்தும் அற்புதம் காரணம் மாமாவின் கைவண்ணம்

1965- திருவிளையாடல்
நக்கீரர் - சிவன் சவாலை நம் கண் முன் நிறுத்திய படம்
சாவித்திரி,சிவாஜி , நாகேஷ் நடிப்பு அபாரம்
ஒரு நாள் போதுமா, நீலச்சேலை, பாட்டும் நானே என பாடல்கள் அருமை

1966- சரஸ்வதி சபதம்

1967- சீதா

1967- கந்தன் கருணை

1968- தில்லானா மோகனாம்பாள்

1968- திருமால் பெருமை-
திருமால் பெருமைக்கு நிகரேது, கரையேறி மீன்
விளையாட, மார்கழித்திங்கள் என இசை அபாரம்.

1969-குரு தட்சணை

1969- வா ராஜா வா-
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் மாஸ்டர் பிரபாகர் நடித்த படம். இசை குன்னக்குடி வைத்தியநாதன்
மகாபலிபுரத்தில் கைடாக வேலை செய்யும் சிறுவனின் கதை

1970- விளையாட்டுப்பிள்ளை

1972 - திருமலை தென்குமரி

1973- காரைக்கால் அம்மையார்

1973- ராஜராஜ சோழன் - ஏடு தந்தானடி தில்லையிலே
ராஜ ராஜ சோழன் வரலாற்றை அழகாக படம் பிடித்துக்காட்டிய படம்
நாதனை கண்டேனடி பாடலும் அருமை

1973- திருமலை தெய்வம்

1974- குமாஸ்தாவின் மகள்
கன்னட நடிகை ஆர்த்தி நடித்த தமிழ்ப்படம்
எழுதி எழுதி பழகி வந்தேன் பாடல் பூவை செங்குட்டுவன் வரிகளுக்கும் குன்னக்குடியின் இசையும் அருமை

1975- மேல் நாட்டு மருமகள்
முத்தமிழில் பாட வந்தேன் என அயல் நாட்டு பெண் பாடுவதாக அமைந்த பாடல்

1977- நவரத்தினம் - எம்.ஜி.ஆர் படத்தை ஏ.பி.
நாகராஜன் இயக்கியது இதுதான்.

1977- ஸ்ரீ கிருஷ்ண லீலா
பாமா ருக்மணி சண்டை மற்றும் கண்ணன் லீலைகளை சொன்ன படம்

தமிழ் திரைப்பட உலகில் பக்தி படங்கள் என்றால் ஏ.பி.என். என்று சொல்லும் அளவிற்கு பல படங்களை தந்தவர்.

நாளை திரு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களை பற்றி பார்ப்போம்

ராஜ்

kavitha
27-05-2004, 09:48 AM
யப்பா...பல்கலைக்கழகமே இருக்கு... நிதானமா ஒரு நாள் பார்க்கனும்!

செந்தில்
27-05-2004, 10:32 AM
அருமையான பதிவுகள். ஆழமான தெளிவான விளக்கங்கள்..
நன்றி

அறிஞர்
27-05-2004, 10:45 AM
அருமையான பதிவுகள். ஆழமான தெளிவான விளக்கங்கள்..
நன்றி

வாருங்கள்... senrs

உங்களை.... அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்......

இளசு
28-05-2004, 10:51 PM
தொடர்ந்து அசத்தும் [b]குருகுருவுக்கு நன்றியும் பாராட்டும்..


ஏபிஎன் என்ற அருட்செல்வரை அலச ஒரு நாள் போதுமா?

திருப்பரங்குன்றத்தில் பாடல் - குன்னக்குடி இசையா?

திருவிளையாடல் - வசூலில் ராட்சசப்படம்... வெள்ளிவிழா சூப்பர் ஹிட்..
மார்கழி காலையில் கோயில்களில் இதன் வசனம் ஒலிபரப்புவது அப்போதெல்லாம் சர்வநிச்சய நிகழ்வு..

இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டே போகலாம்..

படைப்பழகில் தில்லானாவுக்குப்பின் நவராத்திரி, திருவிளையாடல்..

ஒரு துள்ளலான படம் : விளையாட்டுப்பிள்ளை. ஜெமினி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் கதையும் கொத்தமங்கலம் சுப்பு என்பதாய் நினைவு..

சொல்லாமல் தெரியவேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண்ஜாடை புரியவேண்டுமே - யாரும்
காணாமல் சிரிக்க வேண்டுமே..
காஞ்சனா பாட, கணேசன் ரசிக்கும் காட்சி அப்படியே கண்ணில் நிற்கிறது..

பரஞ்சோதி
29-05-2004, 02:31 PM
பக்தி படத்திற்கு என்று பெயர் பெற்ற ஏபிஎன் அவர்களின் அற்புத காவியங்களை அருமையாக சொன்ன ராஜேஷ் அண்ணன், மேதை கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் அருமையான குடும்ப காவியங்களை சொல்ல கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

thamarai
29-05-2004, 09:02 PM
ஒரு திரைப்படத்தை எடுத்து விமர்சிப்பது.. மிக மிக நன்றாக இருக்கின்றது.
தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...

தஞ்சை தமிழன்
30-05-2004, 04:52 AM
கே.எஸ்.கோபாலகிருஷ்ணணின் சமூகசித்தனையுடன் கூடிய அருமையான வசனங்களையும் கொண்ட படங்களை பற்றி ராஜின் வரிகளில் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

rajeshkrv
04-06-2004, 07:23 AM
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்னுக்கு வர மிகவும் சிரமப்பட்டார்
பாடலாசிரியராகவும் பணி புரிந்தார்

சக்ரதாரியில் தொடங்கி பல படங்களை இயக்கினார்

அதில் சில
தெய்வத்தின் தெய்வம்
கற்பகம்
குலவிளக்கு
கை கொடுத்த தெய்வம்
ஆயிரம் ரூபாய்
சித்தி
செல்வம்
பேசும் தெய்வம்
மாலதி
குலமா குணமா
உயிரா மானமா
பணமா பாசமா
ஆதிபராசக்தி
காஞ்சி காமாட்சி
அடுக்குமல்லி

சில படங்களுக்கு கதாசிரியராகவும் திரைக்கதையும் அமைத்திருக்கிறார்
வாழ்க்கை வாழ்வதற்கே
காக்கும் கரங்கள்
காத்திருந்த கண்கள்
பெண்ணின் பெருமை
தெய்வப்பிறவி

முதலில் தெய்வத்தின் தெய்வம்(1962)

ஜி.ராமனாதனின் கடைசிப்படம் இது தான்
கதை கண்ணீரை வரவழைக்கும் கதையே..

விஜயகுமாரியின் அண்ணனும் எஸ்.எஸ்.ஆரின் தங்கையும் காதலர்கள்
திருமணம் முடிந்து தேனிலவு செல்கையில் மணமகன் இறக்க
இளம் விதவையாகிறாள் அந்த பெண்

வி.குமாரி,எஸ்.எஸ்.ஆர் திருமணம் முடிக்க தன் கணவனின் தங்கை இப்படியிருக்க தான் மட்டும் சுகமாக இருப்பதா என நினைத்து கணவனை வெறுப்பது போல் நடிக்கிறாள்

அவன் இல்லாத நேரத்தில் அவனுடைய புகைப்படத்தை வைத்துக்கொண்டு பாடுகிறாள்
<span style='color:red'>" நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை "</span>என சுசீலாவின் குரலில் கேட்பது இனிமை .. கண்ணதாசனின் வார்த்தை ஜாலத்திற்கு
இந்த பாடல் நல்ல உதாரணம் (இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே)

பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்

பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ - சுசீலாவின் குரலில் சோக கீதம்
கண்ணன் மன நிலையை தங்கமே - ஜானகியின் குரலில் இதம்
அன்னமே சொர்ணமே - சுசீலா, ஜானகி குரல்களில் மதுரம்
கண்ணுக்குள் புது வெள்ளமே - டி.எம்.எஸ்
என்னாருயிரே - பி.பி.எஸ்,ஜானகி
படம் முழுக்க முழுக்க விஜயகுமாரியினுடையது.

நாளை கற்பகம் பற்றி பார்ப்போம்

ராஜ்

rajeshkrv
09-06-2004, 10:15 AM
கற்பகம்:
பெருமைக்குரிய அறிமுகமாக அறிமுகமானார் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா, ரங்காராவ், நாகய்ய, முத்துராமன், ஷீலா, எம்.ஆர்.ராதா என பெரும் படையே
நடித்த படம்.

ஜமீன்தாரான ரங்காராவ் , தன் மகளுக்கு பண்ணையில் வேலை செய்யும் ஜெமினியை மணமுடித்து வைக்கிறார்

தன் மகன் வெளியூரிலிருந்து வரும் பெண்ணை காதலிக்க மகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவர்களுக்கும் மணமுடித்து வைக்கிறார்.

மகன் தந்தையின் சொத்தை கேட்க ஒரே ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் ஷீலா கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்க அதை கே.ஆர்.விஜயாவிடம் வளர்கிறது.

தன் தாய் தந்தை விஜயா - ஜெமினி என்றே நினைக்கிறது

ஒரு சந்தர்ப்பத்தில் காளையிடமிருந்து குழந்தையை காப்பற்றும் முயற்ச்சியில் கற்பகம் இறந்துவிடுகிறாள்

மாமனாரின் வற்புறுத்தலின் பேரில் சாவித்திரியை மணக்கிறார் ஜெமினி. குழந்தையிடம் அன்பாய் தான் இருக்கிறார் சாவித்திரி ஆனாலும் குழந்தையும் ஜெமினியும் ஒட்டாமல் இருக்கின்றனர்

கடைசியில் இருவரிடமும் நல்ல மாற்றம்

முழுக்க முழுக்க சுசீலாவின் குரல் மட்டும் தான்
வாலியின் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. அவரது புகழுக்கு காரணமாகிய படங்களில் இதுவும் ஒன்று..

அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

மன்னவனே அழலாமா

பக்கத்து விட்டு பருவ மச்சான்

அன்னை மடி மெத்தையடி
என வாலியின் வரிகளுக்கு தேன் குரலால் உயிரூட்டியிருப்பார்
சுசீலா

பாத்திரப்படைப்பும் வசனங்களும் அருமை
மெல்லிசை மன்னரின் இசை அபாரம்

கே.எஸ்.ஜிக்கு கை கொடுத்தாள் இந்த கற்பக(ம்பாள்)ம்

ராஜ்

இளசு
09-06-2004, 10:20 PM
அருமை அசத்தல் குருகுருவே...
எனக்குப் பிடிச்ச ஆயிரம் பாட்டு பட்டியலில்...
http://www.tamilmantram.com/board/viewtopi...ighlight=#73566

நீயில்லாத உலகத்திலே.... இருக்கு..
அங்கே பதிக்கிறேன் முழுப்பாட்டையும் விரைவில்..

இன்று 300க்கும் மேற்பட்ட பதிவுகள் படிக்கவே நேரமில்லை...


கற்பகம்..

ஒரு ஸ்டுடீயோ, ஒரு தயாரிப்பு நிறுவனம்.. ஒரு ஸ்டார்.. ஒரு நல்ல நட்பு..

கற்பகம்... -கற்பகவிருட்சமேதான்..
பெயர் சூட்சுமம்?


தொடரும் உங்கள் அரும்பணிக்கு வந்தனங்கள் குருகுருவே...

rajeshkrv
11-06-2004, 08:42 AM
சித்தி (1966)

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற பெண்ணின் பல நிலைகளை சொல்லும் பாடல்
பாடலுக்கு உயிரூட்டியவர்கள் நால்வர்
வரிகளுக்கு சொந்தக்காரரான கவியரசர்
குரலால் மெருக்கேற்றிய சுசீலா
இசையால் நம்மை மயக்கிய விஸ்வநாதன்
நடிப்பால் அசத்திய பத்மினி..

வறுமையில் வாடும் குடும்பத்தை காக்கவும் மருத்துவ கல்லூரியில் சேரத் துடிக்கும் தம்பிக்காகவும் தான் காதலித்த ஜெமினியை விட்டு ஒரு பெரியவரான எம்.ஆர்.ராதாவை மணக்கிறார் பத்மினி.

அங்கே எம்.ஆர்.ராதாவிற்கு மூத்த மகள் விஜய நிர்மலா, மற்றும் சில சின்னக்குழந்தைகள்.. அவர்கள் பாட்டி சுந்தரிபாய். சித்தி என்றாலே கொடுமை செய்வாள் என்பதை மாற்றி அந்த குழந்தைகளின் அன்பை பெறுகிறார் பத்மினி.

விஜய நிர்மலா பத்மினியின் தம்பியான முத்துராமனை காதலிக்க எம்.ஆர்.ராதா எதிர்க்க பின் பத்மினி சமாதானம் செய்து கடைசியில் சுபம்.

நறுக்குத் தெறித்தார்போல் வசனங்களும் , பெண்களின் சார்பில் அவர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும் அமைந்த படம்..

காலமிது காலமிது பாடல் என்றும் நிலைக்கும் பாடல்

தாலாட்டு பாடல்களின் முன்னோடி..

பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கமில்லை
என் அரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரீ ராரீரோ ஆரீரீ ராரோ ஆரீ ராரீராரோ
ஆரீ ராரீரோ ஆரீரீ ராரோ ஆரீ ராரீராரோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே, தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத் தமிழ் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி, தீராத தொல்லையடி
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே, தூக்கமில்லை மகளே

மாறும், கன்னி மனம் மாறும், கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தந்தையதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது, கண்ணுறக்கம் ஏது
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன்நிலவில் கண்ணுறக்கம் ஏது, கண்ணுறக்கம் ஏது
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே, தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்து விட்டால் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மயங்கும் காலம் வந்து சேரும்
காணாத தூக்கம் எல்லாம் தானாக சேரும்
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே, தூக்கமில்லை மகளே

இதே படத்தில் இன்னொரு தாலாட்டுப்பாடல்
சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவார்கள் உங்கள் அய்யா

இது எம்.ஆர்.ராதா பத்மினியை மாடிக்கு அழைக்க அவரோ பிள்ளையை தூங்கவைப்பதில் இருக்க இந்த பாடல் வருகிறது.

ராதா அவசரப்படுத்த
அதை பாடலில் பத்மினி சாடுகிறார்
தங்கமகள் தூங்கலியே என் தாலாட்டும் முடியலையே
அங்கிருக்கும் அவசரத்தில் இந்த அமுத முகம் தெரியலையா
சுசீலாவின் சாரரீததில் அமுத கானம்

சந்திப்போமா எனற பி.பி.ஸ்ரீனிவாஸ் - ஈஸ்வரி பாடலும்
ரசிக்கும்படியானதே.

சித்தி கே.எஸ்.ஜியின் மறக்க முடியாத படம்

ராஜ்

தஞ்சை தமிழன்
11-06-2004, 09:21 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆ

இப்படி வியப்பதை தவிர வேறொன்றும் செய்ய தெரியவில்லை.

ராஜேஷ் பதிப்பிகள் அனைத்தும் பொக்கிஷங்கள்.

பாராட்டுக்கள் ,
நன்றிகள்.

thempavani
11-06-2004, 09:31 AM
அருமை ராஜேஷ்.. இன்றுதான் மெதுவாகப்படித்தேன்.. அருமையிலும் அருமை.. பாராட்டுக்கள்

இளசு
13-06-2004, 11:32 PM
சித்தி...

ராதா -பத்மினி... கேஎஸ்ஜி... படைத்த காவியம்..

வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் அவசியம் காணவேண்டிய படம்..


காலமிது..காலமிது..

பெண்மையை வணங்கத் தூண்டும் பாட்டு..
கல்லும் கரையும் அம்மா சுசீலா குரல் கேட்டு..


குருகுருவே....
தொடருங்கள்... உற்சாகமாய்..

rajeshkrv
17-06-2004, 12:22 PM
குல விளக்கு:

சரோஜாதேவியின் நடிப்பிற்கு எடுத்துக்காட்டு இந்த படம்.
குடும்ப பொறுப்புக்காரணமாக காதலையும் துறந்து குடும்பத்திற்காக உழைத்து தனக்க்ய் டி.பி. நோயை வரவழைத்துக்கொள்கிறாள் குடும்பத்தின் மூத்த மகள்.
அவள் அப்பாவோ அவளுக்கு திருமணம் செய்தால் வருமானம் குறைந்துவிடுமே என நினைத்து அதை பற்றி யோசிப்பதே இல்லை

டீச்சர் வேலை பார்க்கும் சரோஜாதேவி, அதை தவிர வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு பாடல் சொல்லிக்க்கொடுத்து சம்பாதிக்க
அப்பா, தம்பி, தங்கை என எல்லோரும் பணம் கேட்டுக்கொண்டே போக இவளது நிலைமை ... ??

குழந்தைகளுக்கு பாடத்தை பாடலின் மூலம் சொல்லிக்கொடுக்கிறார்
பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்
பூவிலே சிறந்த பூ என்னப்பூ என சுசீலாவின் குரலில் பாடல் அவ்வளவு அழகு.

ஜெமினி ராஜசுலோசனாவை மணக்க, அதே வீட்டிற்கு பாடல் சொல்லிக்கொடுக்க சரோ வர ராஜசுலோசனா அவரை
உதாசீனப்படுத்த .. ஒரே ரகளை..

நல்ல நடிப்பு, நல்ல படம்
குலவிளக்கு கே.எஸ்.ஜி, சரோஜாதேவி கூட்டணியில் உருவான எளிமையான படம்

இளசு
18-06-2004, 02:33 AM
குருகுரு ,
சரோஜாதேவி மிகச்சிறப்பாய் நடித்த படங்களில் இதுக்கே முதலிடம்..

துலாபாரம், குலவிளக்கு திரையிட்ட அரங்குகளை
பராமரிப்பது மிகச்சிரமமாம் அக்காலங்களில்...

அழுது சிந்திய கண்ணீர், சளியால்
தரையில் பார்த்து பார்த்து நடக்கவேண்டி இருக்குமாம்...


இதில் வரும் பூப்பூவா பூத்திருக்கு பாடல் காண...

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2089

பரஞ்சோதி
18-06-2004, 06:12 PM
கே.எஸ்.ஜி அவர்களின் படங்களை இன்னமும் பார்த்து ரசிக்க ஆசையாக இருக்கிறது. நன்றி ராஜேஷ் அண்ணா.

தஞ்சை தமிழன்
19-06-2004, 07:25 AM
அரிய விஷயங்களை சிறப்பாக வழங்கி கொண்டிருக்கும்
ராஜ் க்கு மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள்.

rajeshkrv
30-06-2004, 09:19 AM
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின் இயக்கிய பணமா பாசமா, உயிரா மானமா, குலமா குணமா
என்று எல்லா படங்களுமே நல்ல கருத்துள்ள படங்கள்

கை கொடுத்த தெய்வம்

பொன்னி புரொடக்ஷன்ஸ் கை கொடுத்த தெய்வம் திரையில் சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்,சாவித்திரி, கே.ஆர்.விஜயா,ரங்காராவ் நடித்திருந்தனர்.

வெகுளிப்பெண்ணாக சாவித்திரி மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.

அதை பயன் படுத்தி எம்.ஆர்.ராத கட்டுக்கதை கட்டிவிட
அவளது சொந்த அண்ணனே அவளை நம்ப மறுக்க..

சிவாஜி அந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க படம் ஒரே சோக மயம்

பாரதி வேடத்தில் சிவாஜி பாடும் "சிந்து நதியின் மிசை நிலவினிலே " பாடலை யாரும் மறந்திருக்க முடியாது.

சிவாஜி, சாவித்திரி நடிப்பு அபாரம்.

ஆஹா மங்கல மேளம் கொட்டி முழங்கிட என சுசீலா பாடுவது அழகு.

குலுங்கி குலுங்கி சிரிக்கும் என சுசீலா ஈஸ்வரி பாடும் பாடலும் துள்ளல் நிறைந்ததே..

நல்ல படம்
நல்ல நடிப்பு

நாளை மற்றொரு படத்துடன் சந்திக்கிறேன்

ராஜ்

aren
30-06-2004, 02:02 PM
ராஜ் அவர்களுடைய விஷயஞானம் பிரமிக்கவைக்கிறது. கேஎஸ்ஜியின் படங்களைப் பற்றிய அலசம் அருமை.

இளசு
30-06-2004, 06:53 PM
கைகொடுத்த தெய்வம்..

கதாநாயகிக்கென்றே ஒரு படம்..

சாவித்திரி போல் வேறு யாரிங்கு?


குருகுருவுக்கு என் பாராட்டும் நன்றியும்..

தஞ்சை தமிழன்
01-07-2004, 06:28 AM
தகவல் களஞ்சியதுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

Narathar
01-07-2004, 10:19 AM
ஆஹா! இது தலைப்பல்ல தமிழ் திரை பெட்டகம்!

rajeshkrv
07-07-2004, 08:35 AM
பேசும் தெய்வம்(1967)

கே.எஸ்.ஜியிடம் இணை இயக்குனராக திரு.கோமல் சுவாமிநாதன் அவர்கள் பணிபுரிந்த படங்களில் இதுவும் ஒன்று.

குழந்தை பாக்கியமே இல்லாத பத்மினிக்கு நீண்ட நாட்களுக்குப் பின் குழந்தை பிறக்கிறது.
அதற்கு உடம்பு முடியாமல் போக ஒரே அமர்க்களம்
எடைக்கு எடை பொன் ,கொடுப்பதாக ரங்காராவ் வேண்டி கொள்ள
பத்மினி தன் தாலியை கழற்றி வைத்தவுடன் தான் தராசு சரி சமமான நிலைக்கு வருகிறது.

பத்மினி, சிவாஜி,சுந்தரிபாய், ரங்காராவ், சஹஸ்ர நாமம், செளகார் ஜானகி என அனைவரின் நடிப்பும் அபாரம்.

பாடல்கள் அனைத்தும் அருமை
கே.வி.மகாதேவன் இசையில் வாலியின் வரிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்

நான் அனுப்புவது கடிதம் அல்ல - டி.எம்.எஸ்
அழகு தெய்வம் மெல்ல மெல்ல - சுசீலா, டி.எம்.எஸ்
பத்து மாதம் சுமக்கவில்லை - சுசீலா,டி.எம்.எஸ்
இதய ஊஞ்சல்,
ஜோரா ஜொலிக்குது,
நூறாண்டு காலம் என எல்லா பாடல்களும் இனிமை


ஜி.சகுந்தலா பத்மினியை கவனித்துக்கொள்ளும் விதமாகட்டும் , ஒரு கட்டத்தில் ஜி.சகுந்தலாவை பத்மினி கவனித்துக்கொள்வதாகட்டும் கே.எஸ்.ஜி முத்திரை நன்கு தெரியும் கட்டங்கள்

நாளை மற்றொரு படத்துடன் சந்திக்கிறேன்

ராஜ்

aren
08-07-2004, 06:29 AM
பேசும் தெய்வம் படத்தை நேரில் பார்த்ததுமாதிரி இருக்கிறது உங்களுடைய வர்ணனை. சினிமா சம்பந்தமான விஷயங்களை இப்படி விரல்நுனியில் வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

rajeshkrv
22-07-2004, 12:17 PM
கே.எஸ்.ஜியை தொடர்ந்து நாம் பார்க்கவிருப்பது
திரு.கே.சங்கர்.

பக்தி படங்களில் ஏ.பி. நாகராஜனுக்கு வாரிசாக திரையுலகில் உலா வந்தவர் இவர்.

இனி வரும் தினங்களில் இவரது பங்களிப்பு குறித்து அலசுவோம்

ராஜ்

rajeshkrv
23-07-2004, 11:35 AM
நாக தேவதை -1956
பெயர் சொல்லும் படமாக
சிவகங்கை சீமை(1959) அமைந்தது.
பின் பல படங்களை இயக்கினார்.
கைராசி,
பூகைலாஸ்,
ஆடிப்பெருக்கு,
ஆலயமணி,
பாத காணிக்கை,
இது சத்தியம்,
பணத்தோட்டம்,
ஆண்டவன் கட்டளை,
கலங்கரை விளக்கம்,
அன்புக்கரங்கள்,
சந்திரோதயம்,
கெளரி கல்யாணம்,
குடியிருந்த கோயில்,
தங்கமலர்,
அடிமைப்பெண்,
பல்லாண்டு வாழ்க,
உழைக்கும் கரங்கள்,
குங்குமம் கதை சொல்கிறது,
வருவான் வடிவேலம்,
தாய் மூகாம்பிகை,
ரிஷிமூலம்,
அமரகாவியம்,
மிருதங்க சக்ரவர்த்தி,
சிரஞ்சீவி,
ராஜரிஷி,
நவக்கிரக நாயகி,
வேலுண்டு வினையில்லை,
ஆயிரம் கண்ணுடையாள்,
மீனாக்ஷி திருவிளையாடல்,
முப்பெரும் தேவியர்,
வெற்றி விநாயகர்

என பல சமூக, பக்தி படங்களை கொடுத்தவர்

இதில் சில படங்களையும் அதில் இவரது பங்கு பற்றியும் அலசுவோம்.
முதலில்
சிவகங்கை சீமை(1959)கண்ணதாசனின் சொந்த தயாரிப்பு.
முந்தைய ஆண்டு தயாரித்த மாலையிட்ட மங்கை தந்த வெற்றியால் அடுத்த வருடம் சிவகங்கை சீமையை தயாரித்தார்.
கதை மற்றும் பாடல்கள் பொறுப்பை கண்ணதாசன் ஏற்க
இயக்குனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கே.சங்கர்.

திறமை வாய்ந்த கலைஞர்கள் நடித்திருந்தனர்.
டி.கே.பகவதி,எஸ்.எஸ்.ஆர்,பி.எஸ்.வீரப்பா, ஒ.ஏ.கே.தேவர்,எஸ்.வரலக்ஷ்மி,எம்.என்.ராஜம்,குமாரி கமலா மற்றும் பி.எஸ்.வீரப்பா.
சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சவாலாக வெளிவந்த படம் இது.
இதன் காரணமாக சிவாஜிக்கும் - கண்ணதாசனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்தது.
விதி யாரை விட்டது.
கண்ணதாசனின் சிவகங்கை சீமை வந்த சில நாட்களிலேயே
காணாமல் போனது ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனோ அமோக வெற்றி பெற்றது. கண்ணதாசன் பெருத்த
நஷ்டமடைந்தார்.

சிவகங்கை சீமை தோல்வி என்றாலும் இன்று வரை வந்த புராணப்படங்களில் சிறந்த படமாக விளங்குகிறது.
குறிப்பாக பாடல்கள்
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிநய வரிகளில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை.

படத்தில் மொத்தம் 16 பாடல்கள்

அதில் சில
வைகை பெருகி வர - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா
கன்னங்கருத்த கிளி - லீலா,
தென்றம் வந்து வீசாதோ - எஸ்.வரலக்ஷ்மி,டி.எஸ்.பகவதி,
மேகம் குவிந்ததம்மா - பி.சுசீலா
சாந்து பொட்டு தளதளங்க - லீலா, ஜமுனாராணி,
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் - டி.எம்.எஸ், டி.எஸ்.பகவதி
சிவகங்கை சீமை - டி.எம்.எஸ்,சீர்காழி,ஏ.பி.கோமளா

கதை இது தான்
ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து மருது சகோதரர்களிடம் தஞ்சம் புகுகிறான்.
மருது சகோதரர்களாக நடித்தவர்கள்
டி.கே.பகவதி, முஸ்தபா

மருது சகோதரர்கள் சிவகங்கையை ஆண்டு வந்தனர்.
ஊமைத்துரையை கைது செய்ய மேஜர் வெல்ஷ் உத்தரவிட அதனால் மருது சகோதரர்களில் இளையவரான எஸ்.எஸ்.ஆர் ஆத்திரமடைய மருது சகோதரர்களையும் கைது செய்ய உத்தரவாகிறது.
இதனால் கலவரம் மூண்டு போர் உருவாகிறது.

வாளுக்கு துப்பாக்கிக்கும் இடையே நடக்கும் போரில் யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என சொல்லத் தேவையில்லை.

சங்கரின் நேர்த்தியான இயக்கம், கண்ணதாசனின் கதையும் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்தன.

நாளை வேறு ஒரு திரைப்படத்துடன் சந்திக்கிறேன்

ராஜ்

இளசு
24-07-2004, 10:29 AM
பேசும் தெய்வம்..

இன்றும் நம்மைக்கட்டிப்போடும் ஜனரஞ்சக -சகல அம்சங்கள் நிறைந்த படம்..

அதில் சிவாஜி -பத்மினியின் சில நடன அசைவுகள்
இன்றைய ராஜூ -சுந்தரங்களுக்கு சவால்!


கே.சங்கர்...
பல திறமைகள் உள்ள நல்ல இயக்குநர்.
ஆனால் ஒரே அச்சு எம்ஜியார் படங்களில் அதிகம் சிக்கிக்கொண்டவர்..

இவரின் ஆலயமணி, ஆண்டவன் கட்டளை..
எந்த தரமான வெளிநாட்டு, வேற்றுமொழி படங்களுக்கும் இணையானவை..

மிகமிக நல்ல முறையில் இக்கட்டுரையை வழங்கிக்கொண்டிருக்கும்
குருகுருவுக்கு என் வந்தனம்..நன்றி..

தஞ்சை தமிழன்
24-07-2004, 12:46 PM
ராஜின் அருமையான தகவல்கள்.

சங்கரின் படங்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்தவை.

உங்கள் தகவலில் உள்ளது போல பாத காணிக்கை சங்கர் படமா?

அருமையான படம்.

rajeshkrv
26-07-2004, 12:13 PM
கைராசி (1960)ஜாவர் சீதாராமன் கதை வசனமேற்க , சங்கர் இயக்கிய படம்.
ஜெமினிகணேஷ், சரோஜாதேவி முக்கியவேடமேற்றிருந்தனர்.

சகஸ்ரநாமம் - எம்.வி.ராஜம்மா தம்பதியர்.
சகஸ்ரநாமம் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.
ராஜம்மா ஒரு கட்டத்தில் கணவனை விட்டு பிரிய தன் குழந்தையை கே.டி.சந்தானம் - மாலதி தம்பதியரிடம் தத்து கொடுத்துவிடுகிறாள்
எம்.ஆர்.ராதாவின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு எம்.வி.ராஜம்மாவிற்கு கிடைக்க அதை வளர்க்கிறார்.
அந்த பெண் சரோஜாதேவி.

ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை பார்த்து பெண்ணை வளர்க்கிறார்.
ஜெமினியும்,தங்கவேலுவும் படித்து டாக்டராகிறார்கள்.

ஜெமினி வேலைக்கு சேரும் ஆஸ்பத்திரியிலேயே ராஜம்மாவும் அவரது பெண்ணும் வேலை பார்க்க
ஜெமினி சரோஜாதேவியை பார்க்க காதல் ஆரம்பம்

காதலெனும் ஆற்றினிலே டி.எம்.எஸ் -சுசீலா
அன்புள்ள அத்தான் வணக்கம் சுசீலா என பாடல்கள் ஆரம்பம்.

ஜெமினியின் அம்மா அப்பாவிற்கு சரோஜாதேவி ராஜம்மாவின் பெண் என தெரிய வர அண்ணன் தங்கை என தவறாக நினைத்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ என
டி.எம்.எஸ் -சுசீலாவின் குரலில் பாடல் அருமையான சோக ரசம்.

கடைசியில் எம்.ஆர்.ராதாவின் மகள் என தெரியவர கல்யாண ஏற்பாடுகள் ஜோராக நடைபெறுகிறது.
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன் என சுசீலாவின் குரலில் பாடல் அருமை.

படத்திற்கு இசை ஆர்.கோவர்த்தனம்
(ஆர்.சுதர்ஸனத்தின் சகோதரர்)
பாடல்கள் : கவியரசர்

அதுவும் அன்புள்ள அத்தான் வணக்கம் பாடலில்
ஆயிழை என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பார்

டி.எஸ்.பகவதியும் லீலாவும் பாடிய பாலிலும் தேனிலும் சுவை ஏது பாடலும் அருமை.

சகஸ்ர நாமம் தன் தவறை உணர்ந்து ராஜம்மாவுடன்
இணைகிறார்.
கதை இனிதே முடிகிறது.

ஜாவர் சீதாரமனின் கதையும், சங்கரின் இயக்கமும்
படத்தை சீராக கொண்டு சென்றன என்று சொல்லலாம்.

நாளை வேறு ஒரு படத்துடன் சந்திக்கிறேன்

ராஜ்

தஞ்சை தமிழன்
26-07-2004, 12:38 PM
பழைய பட தகவல்களை கூட அருமையாக தரும் ராஜ்வுடைய
பதிவுக்கு எனது மேலான பாராட்டு.

மேலும் தொடரட்டும் இந்த பதிவு அழகுற.

இளசு
26-07-2004, 11:15 PM
கைராசி படத்தகவல் அருமை..

கண்ணும் கண்ணும் பேசியது - பாடுபவரையும் கேட்பவரையும் ஒருசேரக் கரையவைக்கும்...


அருமை குருகுருவே.. பாராட்டுகள்..


அன்பின் தஞ்சை தமிழன் கேட்ட சந்தேகம் எனக்கும்..

பாதகாணிக்கை பீம்சிங் படமா? சங்கர் படமா?

rajeshkrv
30-07-2004, 12:26 PM
ஆடிப்பெருக்கு:

ஜாவர் சீதாரமனின் கதை வசனத்தில்
சங்கர் இயக்கிய மற்றொரு படம்

சரோஜாதேவியின் நடிப்பிற்கு பெயர் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று.

கல்லூரியில் படிக்கும் சரோஜாதேவியும், ஜெமினியும் காதலர்கள்

கல்லூரியில் நடக்கும் போட்டியில்
பெண்களின் பெருமையை சரோ பாட
ஆண்களின் பெருமையை ஜெமினி பாட

ஆண்கள் இல்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்
பெண்கள் இல்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன்
(இதை பார்த்து தான் செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் பாடல் வந்ததோ என்னவோ)

ஜெமினி சரோவின் வீட்டு மாடியிலேயே குடியேற
காதலர்களுக்கு கொண்டாட்டமே

தனிமையிலே இனிமை காண முடியுமா
சுசீலா ஏ.எம்.ராஜா குரல்களின் இனிமையான கானம்
" மலர் இருந்தால் மனம் இருக்கும் தனிமையில்லை "

சூழ் நிலை காரணமாக இருவரும் பிரிய
சரோவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது.
ஆனால் அந்த ஆடவனோ திடீரென இறக்க
சரோ விதவையாகிறார்

ஜெமினிக்கு தேவிகாவை நிச்சயம் செய்ய
அங்கே சரோ வர
"காவேரி ஓரம் கவி சொன்ன பாடல்"
பாடலில் சோகத்தை சொல்ல
ஜெமினிக்கு சரோ மீது இருக்கும் காதல் குறையாமல் இருப்பதை கண்டு தேவிகா கோபம் கொள்கிறார்


தன் மீது வெறுப்பு வர சரோ
பலர் முன் நடனமிடுகிறார்
ஆனால் சந்திரபாபு உண்மையை ஜெமினியிடம் சொல்ல
இருவரும் சரோவை தேடி செல்கின்றனர்

கொஞ்சம் சோகம் கலந்த படமே
பாடல்கள் ஒவ்வொன்றும் முத்தாய் அமைந்தன
ஏ.எம்.ராஜா - கண்ணதாசன் - சுசீலா கூட்டணி
மூன்று முத்துக்களாக அமைந்தன.

நாளை வேறொரு படத்துடன் சந்திக்கிறேன்

ராஜ்

இளசு
02-08-2004, 05:12 AM
பல கனமான கதைகளுக்குச் சொந்தக்காரார் ஜாவர்.
இவரின் உடல் பொருள் ஆனந்தியை பலமுறை வாசித்ததால்
தம் தமிழறிவு வளர்ந்ததாய் சூப்பர் ஸ்டார் சொல்வார்.

ஆடிப்பெருக்கு கதையும் அழுத்தமான முடிச்சுடன்.
(ஏனோ ஜெமினி "நடித்தாலே" கதை சொதப்பலாகிவிடுவது போல் எனக்கு ஓர் உணர்வு)

காவேரி ஓரம், தனிமையிலே..-- ஆஹா எத்தனை இனிமை..


நினைவாட விட்ட குருகுருவுக்கு வந்தனம்..

rajeshkrv
13-08-2004, 12:52 PM
சொல்ல மறந்த சந்திரபாபுவின் நகைச்சுவை பற்றி

சந்திரபாபு தேவிகாவின் மாமாவாக வருவார்.

நடனம் சொல்லித்தர பெண் வேடமேற்று செல்வார்.அவரது பெயர்
கிளாக்ஸோ ..
அவர் அடிக்கும் கூத்து அப்பப்பா பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அதுவும் எப்படி பாடினரோ பாடலை மேற்கத்திய பாணியில் இவர் பாடுவது அழகு..

இளசு
16-08-2004, 11:03 PM
சுவையாய் எழுதுவது எப்படி..
இதையும் சொல்லித்தரவேண்டுகிறேன் என் குருகுருவை..

rajeshkrv
20-08-2004, 12:05 PM
ஆலயமணி

மனிதனின் பொறாமை குணம் அவனை மிருகமாக்கும்
அதே தான் இங்கேயும்
சிறிய வயதில் தான் நேசித்த மீனா பொம்மையை நண்பன் அபகரிக்க அதனால் நண்பனையே தள்ளி விட்டு கொன்றுவிடுகிறான் நாயகன்.
அந்த குற்ற உணர்ச்சியால் தன் கோபத்தையும் பொறாமை குணத்தையும் அடக்கி நல்ல காரியங்கள் செய்து வருகிறான்

நாயகன் பெரும் பணக்காரன். அவனது எஸ்டேட்டிற்கு வருகிறான்
வரும் வழியில் இனிய கானம் காதில் விழுகிறது
ஆம் "மானாட்டம் தங்க மயிலாட்டம்" என சுசீலாவின் குரலில்
அபிநய சரஸ்வதி பாடிக்கொண்டே வர பார்த்த மாத்திரத்திலேயே
நாயகன் அவள் அழகில் மயங்கி விடுகிறான்

அவள் தன் எஸ்டேட்டில் வேலை செய்யும் ஒருவரின் மகள் என தெரிய வர
அவளை பெண் கேட்டு வருகிறான். அந்த ஏழை இன்னொருவரிடம் பட்டிருக்கும் கடனை தான் அடைப்பதாகவும் வாக்களிக்கிறான்

அந்த பெண்ணோ இன்னொருவரை காதலிக்கிறாள். அவனுக்கு இவளது பெயர் தெரியாது ஏனென்றால் அவன் அவளை வானம்பாடி என அழைப்பான்.
வானம்பாடி .........
கண்ணான கண்ணனுக்கு அவசரமா என சீர்காழி கோவிந்தராஜன் , சுசீலா குரலில்
நல்ல பாடல்


தன் நண்பன் தான் காதலிக்கும் பெண்ணை மணக்க போகிறான் என்று தெரிந்ததும் துடிக்கிறான் பின் அவளை மறக்க முயல்கிறான்
அவளும் இவனை மறக்க முயல்கிறாள்.

ஒரு விபத்தில் சிவாஜி காலில் அடி பட்டுக்கொள்ள சரோ அவரை கூட இருந்து கவனித்துக்கொள்கிறார்.

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே என உருகி உருகி டி.எம்.எஸ் பாடும் பாடல் ஆஹா
கவியரசரின் வரிகளும் மெல்லிசை மன்னர்களின் இசையும் அற்புதம்.

நடுவில் லேசாக சந்தேகம் எழ உள்ளே இருந்த அந்த பொறாமை என்னும் மிருகம் தலை தூக்க ஆரம்பிக்கிறது.
அது நண்பனை கொலை செய்யும் எண்ணம் வரை செல்ல
அப்பொழுது நண்பன் தான் அவளை இப்பொழுது காதலிக்கவில்லை
என கூற மனம் அதை ஏற்க மறுக்க அவனை தள்ளிவிட முயற்ச்சிக்க
பின் அவனை காப்பாற்ற ஒரே ரகளை தான்

நடுவில் சிவாஜி சரோவை ஓவியமாக தீட்ட அந்த தருணத்தில்
மெல்லிசை மன்னர்கள் இசை மீட்ட
உருவானது கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
டி.எம்.எஸ் குரலும் ஈஸ்வரியின் ஹம்மிங்கும் தென்றல் வருடுவது போல் இருப்பது உண்மை தானே..

சிவாஜி, நண்பனாக எஸ்.எஸ்.ஆர், காதலியாக சரோஜாதேவி.
எஸ்.எஸ்.ஆரை ஒருதலையாக காதலிக்கும் விஜயகுமாரி

தயாரிப்பு: பி.எஸ்.வீரப்பா
சங்கரின் நேர்த்தியான இயக்கத்தில் நல்ல படம்

மேலே கூறிய பாடலகள் தவிர

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே - ஜானகியின் குரலில் நம்மை தூங்க வைக்கும் பாடல்

சட்டி சுட்டதடா கை விட்டதடா - தத்துவ பாடல்
சிவாஜிக்கே உரிய நடிப்பு குரல் உபயம் - டி.எம்.எஸ்

மொத்தத்தில் ஆலயமணி நல்லதொரு திரைப்படம்

ராஜ்

gragavan
03-09-2004, 08:45 AM
ஆலயமணியை யார் மறக்க முடியும்? இனிய பாடல்கள். அழகான கதை. உத்தமனாக மட்டுமே நடிக்கும் கதாயகர்களுக்கு மத்தியில் இப்படியொரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கும் துணிவு நடிகர் திலகத்துக்கு மட்டுமே இருந்தது என்றால் மிகையாகாது. சற்றே மூளை பிசகிய கதாபாத்திரம் அது. சிறு வயது வளர்ப்பு முறையாக இல்லாததால் வந்த வினை அது.
அதே போல கற்புக்கரசி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் காட்டப்படும் ஒருவனை மட்டுமே நினைத்து வாழும் கதாநாயகி அல்ல இந்தப் படத்தின் நாயகி. ஒருவனைக் காதலித்தாலும் மற்றொருவனை மணந்து வாழ முடியும் என்று நிரூபிக்கும் சராசரி பாத்திரம். அந்தக் காலத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்களுமே புதுமையானவை. சிக்கலான கதையை திறம்படக் கையாண்டிருக்கிறார் சங்கர்.
நினைவு படுத்தியதற்கு நன்றிகள் ராஜேஷ்.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
06-09-2004, 07:25 AM
ஆண்டவன் கட்டளை:(1962)

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் இந்த இதமான பாடலை மறந்திருக்க முடியாது

பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் வந்த படம்
சிவாஜி கல்லூரி ஆசிரியராகவும்
தேவிகா வகுப்பு மாணவியாகவும் நடித்திருந்தனர்.

ஆலயமணி தந்த வெற்றியில் மீண்டும் இணைந்த கூட்டணி ஆனால் படம் அவ்வளவு பெரிதாக வெற்றியடையவில்லை.

பிரம்மாச்சாரியான சிவாஜியை விரும்புகிறார் தேவிகா
சிவாஜி மறுக்க பின் தேவிகாவின்பால் ஈர்க்கப்பட காதல்
வீட்டில் எதிர்ப்பு.
தேவிகாவை பாலாஜிக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்கிறார்கள்
தேவிகா தற்கொலை முயற்ச்சி முறியடிக்கப்பட ஆனாலும் சுய நினைவின்றி இருக்கிறார்.
இதற்கிடையில் சிவாஜியும் உலக வாழ்வை வெறுத்து ஊர் ஊராக அலைகிறார்.

காதலர்கள் கடைசியில் இணைகிறார்கள்

படத்தின் கதை என்னவொ நன்றாக இருந்தாலும் சொன்ன விதத்தில் கொஞ்சம் சொதப்பல் ஆனாலும் இயக்கத்தில் சங்கர் கெட்டி .. பாத்திரப் படைப்பாகட்டும் பாடல்கள் தேர்வாகட்டும் ....

சந்திரபாபுவின் நகைச்சுவை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்தது.
சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலும் இன்றும் நம்மை சிந்திக்க வைக்கும் பாடல்

அழகே வா அருகே வா - சுசீலாவின் குரலில் கவியரசரின் வரிகளில் பிரம்மச்சாரியை தன்னிடம் இழுக்கும் பாடல்

ஆறு மனமே ஆறு - தத்துவ முத்து டி.எம்.எஸ் குரலில் முத்தான பாடல்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் - சுகம் சோகம் என இரண்டு வடிவங்களில் உள்ள இந்த பாடலை பிடித்த பத்து டூயட்டுகளில் சேர்க்காமல் இருக்க முடியுமா என்ன

அதுவும் சுசீலா பாடும் நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது ஆஹா
கடைசியில் வரும் ஹம்மிங் பாடலுக்கு மேலும் மெருகேற்றியது என்றால் மிகையில்லை

ஆண்டவன் கட்டளைராஜ்

gragavan
06-09-2004, 08:26 AM
ஆண்டவன் கட்டளை ஒரு வெற்றிப் படமல்ல என்பதை நம்பவே முடியவில்லை ராஜேஷ். அருமையான பாடல்கள். நிறைவான நடிப்பு என்று எல்லா வகையிலும் சிறந்த படம் அது. ஆசிரியர் ஒருவரை மாணவி ஒருத்தி காதலிப்பது என்கின்ற கருத்து அன்றைய நிலையில் புதுமையானது மட்டுமல்ல. ஏற்றுக்கொள்ளப்பாடாததும் கூட. ஆறு மனமே ஆறு என்ற பாடலும் சிறப்பானதே. பிரம்மச்சாரியின் மனதில் காதல் ஆசைகள் தோன்றும் காட்சிகளில் பின்னனி இசை மிகச் சிறப்ப்பாக இருக்கும்.
சந்திரபாபுவின் காமெடி இந்தப் படத்தில்தான் சோபிக்கவில்லை என்பது எனது கருத்து. ஆனால் சிரிப்பு வருது பாடல் மிக அருமையாக இருக்கும். மொத்தத்தில் நான் ரசித்த படம் ஆண்டவன் கட்டளை.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
06-09-2004, 08:31 AM
ஆண்டவன் கட்டளையின் அனைத்து பாடலும் அருமையானவை.

தத்துவப்பாடல்களை அடிக்கடி முணுமுணுப்பதுண்டு.

இளசு
08-09-2004, 06:33 AM
அன்புள்ள குருகுருவுக்கு

ஆலயமணி , ஆண்டவன் கட்டளை
கே.சங்கர் -வீரப்பா- நடிகர்திலகம் கூட்டணியில் வந்த இந்த 2 படங்களைப்பற்றி..
பல ஆண்டுகளில் பல நண்பர்களிடம் பலப்பல முறை அலசி,ஆராய்ந்து, வியந்து
அசந்திருக்கிறேன்..

மிகச்சிக்கலான மனோவியல் அணுகுறை இரு கதைகளிலுமே..
ஆலயமணி ஜாவர் சீதாராமன் கதை என்பதாய் நினைவு..

நுண்ணிய ரசனைக்கும், ஆழ்ந்த அறிவுத்தேடலுக்கும் தீனி போடும் படங்கள்..

நச்சென நீங்கள் இங்கே பதித்த விதம் மிக அருமை..

பாராட்டுகள்.. தொடருங்கள்.. (தேனிலா முடிந்த பின்னர்தான்...)

rajeshkrv
07-10-2004, 03:25 AM
பின் வருவான் வடிவேலன், கை கொடுப்பாள் கற்பகாம்பாள் என பல படங்களை இயக்கினார்.
திரையுலகில் ஏ.பி. நாகராஜனுக்குப் பின் சங்கர் என்றால் மிகையில்லை

அடுத்து நாம் அலசப் போவது திரு. ஏ.சி.திருலோகசந்தர் பற்றி..

gragavan
07-10-2004, 05:50 AM
ஏ.சி.திருலோகச் சந்தர் என்றதுமே பலபடங்கள் நினைவிற்கு வரும். ஆனாலும் அன்பே வா, அதே கண்கள் ஆகிய இரண்டு படங்களும் முன்னிற்கும். இவரைப்பற்றிய ராஜேஷின் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
13-10-2004, 08:32 AM
ஏ.சி.திருலோகசந்தர்

ஏ.வி.எம்மின் ஆஸ்தான இயக்குனராக இருந்தவர்
கதாசிரியராக இருந்து பின் முழு நேர இயக்குனராக ஆனவர்

இவரது படங்கள் நல்ல குடும்ப பாங்கான அதே சமயம் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்கள் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை.


இவர் இயக்கிய சில படங்கள்

நானும் ஒரு பெண்
காக்கும் கரங்கள்
அன்பே வா
ராமு
அதே கண்கள்
தங்கை
பஞ்சவர்ணக்கிளி
தெய்வமகன்
அன்பளிப்பு
எங்க மாமா
எங்கிருந்தோ வந்தாள்
பாபு
தர்மம் எங்கே
இதோ எந்தன் தெய்வம்
பாரதவிலாஸ்
தீர்க்கசுமங்கலி
டாக்டர் சிவா
பத்ரகாளி
அன்புள்ள அப்பா

இதில் சில படங்களை வரும் நாட்களில் அலசலாம்

ராஜ்

தஞ்சை தமிழன்
13-10-2004, 09:32 AM
மேலே சொன்ன படங்களில் உள்ள சில பாடல்கள் இமயத்தை தொட்டவை.

rajeshkrv
18-10-2004, 10:48 AM
நானும் ஒரு பெண்(1963)

ஏ.சி.திருலோகசந்தரின் அருமையான இயக்கத்தில் வந்த படம்
ஏ.வி.எம் தயாரிப்பில்
எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜன், புஷ்பலதா,ரங்காராவ்,சுப்பைய்யா,எம்.ஆர்.ராதா,சி.கே.சரஸ்வதி, நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.

கருப்பான விஜயகுமாரியை எஸ்.எஸ்.ஆருக்கு மணமுடித்து வைக்கிறார் எம்.ஆர்.ராதா
முதலிரவில் விஜயகுமாரியின் முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், அவரது பண்பையும், குணத்தையும் பார்த்து அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்.

தனக்கு வந்த மருமகள் அழகற்றவள் என்பதை ரங்காராவால் ஏற்றுக்கொள்ள முடியாமல்
மருமகள் மீது கோபத்தை காட்டுகிறார்
ஆனால் மருமகளோ அவரது தேவைகளை வேலைக்காரனைக் கொண்டு சமயத்திற்கு தீர்த்து வைக்கிறாள்

மெல்ல மெல்ல அவளின் மீது அன்பு கூடுகிறது.

இந்த வேளையில் ஓவியப்போட்டியில் கலந்து கொள்ள வெளியூருக்கு எஸ்.எஸ்.ஆர் செல்ல
இங்கே அவரின் தம்பி விஜயகுமாரிக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை தவறாக புரிந்து கொண்டு அவளை வீட்டைவிட்டு வெளியேற்ற பின் எஸ்.எஸ்.ஆர் மனைவியை நம்பி அவரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

பின் படுத்த படுக்கையாக இருக்கும் ரங்காராவிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்க முயற்ச்சிக்கும்
ராதாவை விஜயகுமாரி தடுத்து அந்த பத்திரத்தை படிக்க அனைவரும் ஆச்சரியப்பட
இரவுகளில் வேலைமுடித்தவுடன் தனக்கு ஏ.வி.எம். ராஜன் படிக்க சொல்லிக்கொடுத்ததாக
உண்மையை சொல்ல ரங்காராவ் ஆனந்த கண்ணீர் விடுகிறார்.

இசை ஏ.வி.எம்மின் ஆஸ்தானமாக இருந்த திரு.ஆர்.சுதர்ஸனம்
பாடல்கள் கண்ணதாசன்.

கண்ணா கருமை நிற கண்ணா - சுசீலாவின் குரலில் இந்த பாடலுக்கு இணையாக இன்னொரு பாடல் வந்ததா என்றால் ...................

இதை ஹிந்தியில் மைன் பி லட்கி ஹன் என்று எடுத்த போது
இந்த பாடலை லதாமங்கேஷ்கர் பாடினார்
ரெக்கார்டிங் போது இது சுசீலா பாடியது போல் உள்ளதா என்று கேட்டாராம்
இல்லையென்றால் இன்னொரு முறை பாடுவதாக சொன்னாராம்

கண்ணதாசனின் வரிகள் மட்டும் என்ன குறைச்சலா

இதோ பாருங்கள்

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து இனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா

எவ்வளவு அற்புதமான வரிகள் ...

விஜயகுமாரியின் நடிப்பும், சுசீலாவின் குரலும் ,கவியரசரின் வரிகளும்
சுதர்ஸனத்தின் இசையும் இப்பாடலை காலத்தால் அழியாப்பாடலாக்கியது


பூப்போல பூப்போல பிறக்கும் - டி.எம்.எஸ்,சுசீலா குரலில் இனிமை

ஏமாறச் சொன்னது நானா - சுசீலா குரலில் ஒரு முறை, டி.எம்.எஸ் குரலில் ஒரு முறை என துள்ள வைக்கும் பாடல்

அருமையான படம்

தெலுங்கின் நாதி ஆட ஜென்மமே - நடித்தவர் சாவித்திரி

நாளை மற்றொரு படம்

ராஜ்

gragavan
19-10-2004, 06:43 AM
கண்ணா கருமை நிற கண்ணா - சுசீலாவின் குரலில் இந்த பாடலுக்கு இணையாக இன்னொரு பாடல் வந்ததா என்றால் ...................

இதை ஹிந்தியில் மைன் பி லட்கி ஹன் என்று எடுத்த போது
இந்த பாடலை லதாமங்கேஷ்கர் பாடினார்
ரெக்கார்டிங் போது இது சுசீலா பாடியது போல் உள்ளதா என்று கேட்டாராம்
இல்லையென்றால் இன்னொரு முறை பாடுவதாக சொன்னாராம்ராஜ் ராஜேஷ், மறக்கக் கூடிய பாடலா அது? உணர்ச்சிகளை உத்தமமாய் உதடுகளுக்குள்ளிருந்து உச்சாடனமாய்ச் செய்த பாடலல்லவா! பி.சுசீலாவைத் தவிர வேறு யார் பாடியிருக்க முடியும் இப்படி? தமிழைத் தமிழாய். வரவேண்டிய உணர்ச்சியைக் தளர்ச்சியாய். (தளர்ந்த மனம் பாடும் பாட்டல்லவா!) தமிழ்த் திரையுலகின் இசையரசி பி.சுசீலா என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை. இந்த ஒரு பாட்டு பானைச் சோற்று பதம். கேட்க மனதிற்கு மிகவும் இதம். நமக்காக பி.சுசீலாவின் தீங்குரல் அடிக்க வேண்டும் சதம்.

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
24-10-2004, 07:18 PM
மென்மையான இயக்குநர் -- பஞ்சு
ஜில்லென்ற இயக்குநர் - ஏ.சி. திருலோகச்சந்தர்
என கடி ஜோக்கில் அடிபட்ட இயக்குநர்..

இரட்டைநாடி தேகம்., எம் ஏ பட்டதாரி..
கதைமாந்தரை காலப்போக்கில் (காமெடியன் உட்பட)
நம்பும்படி வயசானவராய்க்காட்டி
அழகாய், ஆழமாய் கதை சொல்லத் தெரிந்தவர்.

கலகலப்புக்கு அன்பே வா..
உருக்கத்துக்கு பாபு
குடும்ப செண்ட்டிமென்டுக்கு தீர்க்கசுமங்கலி
அப்பா மகள் நேசம் சொல்ல அன்புள்ள அப்பா

ஏசிடியை எனக்கு மிகவும் பிடிக்கும்..
அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா என ஆங்காங்கே சறுக்கியதுண்டு..

ஆனாலும் மொத்தமாய் எண்ணிப்பார்க்கையில்
திறமையான தமிழ் உணர்வுநாடி தெரிந்த வெற்றி இயக்குநர் என்ற
எண்ணமே அவரைப் பற்றி..


தொடருங்கள் குருகுருவே..

rajeshkrv
27-10-2004, 08:30 AM
காக்கும் கரங்கள்(1964)
ஆம் மருத்துவரின் கரங்கள் தான் காக்கும் கரங்கள்
ஒரு மருத்துவரின் வாழ்வின் நிகழ்வுகளை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருப்பார் திருலோகசந்தர்

எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி, எல்.விஜயலக்ஷ்மி,எஸ்.என்.லக்ஷ்மி, நாகேஷ், சுப்பைய்யா மற்றும் பலர்

ஊனமான தங்கைக்காக திருமணம் வேண்டாம் என்றிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர்
ஆனால் தங்கை வற்புருத்த விஜயகுமாரியை மணக்கிறார்

தனக்கு மட்டுமே கிடைத்து வந்த அன்பு இப்பொழுது அண்ணிக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த தங்கை அண்ணி மீது வெறுப்பை காட்ட
அதே சமயன் உடன் பணிபுரியும் நர்ஸ் மணிமாலாவிற்கு எஸ்.எஸ்.ஆர் உதவ அது கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்த பின் சுமுகமாக முடிகிறது.

இசை: திரையிசைத்திலகம் கே.வீ.மகாதேவன்
ஏ.வி.எம் தயாரிப்பிற்கு மாமா இசையமைத்தது இந்த ஒரு படத்திற்கு தான்
பாடல்கள் : வாலி..

ஒவ்வொரு பாடலும் முத்து

ஞாயிறு என்பது கண்ணாக - சுசீலா, செளந்தரராஜன் குரல்களில் தெள்ளமுது..

வாலியின் வார்த்தை ஜாலத்தை பாருங்கள்

பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

உள்ளத்தின் கோயிலில் விளக்கேற்ற
மைவிழிக் கின்னத்தில் நெய் வார்த்தேன்


அடுத்து

அல்லித்தண்டு காலெடுத்து அடி மேல் அடி எடுத்து .. சுசீலா, டி.எம்.எஸ்

மழலையின் குறும்பில் மனம் மகிழ்ந்து தாயும் தந்தையும் பாடுவது..

ஆஹா அருமையான பாடல்

அடுத்து திருநாள் வந்தது - சுசீலாவின் குரலில் சோகமும் வாலியின் வரிகளில் சோகமும்
நம்மை துயரத்தில் ஆழ்த்தும்

அக்கா அக்கா என்று எல்.விஜயல்க்ஷ்மி பாடும் பாடலும் அழகு

நேர்த்தியான இயக்கம்,
நல்ல இசை, பாடல்கள்
அருமையான நடிப்பு இவை தான் காக்கும் கரங்களை காத்தன

ராஜ்

Narathar
27-10-2004, 10:23 AM
அந்தக்காலத்தில் தூரதர்ஷனில் பார்த்த காக்கும் கரங்களை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி

rajeshkrv
05-11-2004, 09:29 AM
அன்பேவா (1966)

இது ராக்ஹட்சன் நடித்த கம் செபடம்பர் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, நாகேஷ், மனோரமா, முத்துலட்சுமி, டி.ஆர்.ராமசந்திரன் மற்றும் அசோகன்
நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க சிம்லாவில் படமாக்கப்பட்ட படம்

ஜே.பி என்ற அந்த பெயருக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு பொருத்தம் .

சரோஜாதேவியோ - ஆஹா ஜொலிக்கும் அழகு அதுவும் இந்த படத்தில் துடுக்கு நிறைந்த பெண்ணாக கலக்கியிருப்பார் ..


தொழிலதிபர் ஜே.பி. ஓய்வெடுக்க சிம்லா செல்கிறார்
அங்கே அவரது பங்களாவில் வேறு ஒரு குடும்பர் இருப்பதை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும்
பின் அங்கே வாடகைக்கு தங்குகிறார்.

பங்களாவின் காவலாளி காசிக்கு போக அவரது மைத்துனன் நாகேஷ் (ராம்ய்யா) தான் இந்த அருமையான யோசனையை சொல்லி பணம் சம்பாதிக்கும் வழியையும் சொன்னது.

வந்த இடத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோவுக்கும் முதல் சந்திப்பிலேயே மோதல் ....

பருவப்பெண் என்றால் இளமைக்கும் துள்ளலுக்கும் சொல்லவா வேண்டும்..
இரவு வேளை, நீல வானம், வெள்ளி நிலா,
காதல் பறவைகள் இவற்றுக்கு நடுவில் இந்த கன்னிப்பெண்

பாடல் பிறக்கிறது இப்படி

லவ் பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் தக்கத்திமி தா... (இதற்கே கொட்டி கொடுக்கலாம் சுசீலாவிற்கும், சரோஜாதேவிக்கும்)
வாலியின் பேனா வித்தை காட்டியிருக்கிறது எழுத்துக்களின் வடிவில்
ஆம்
கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணை தொட்டது ஆசை
ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை...
காதல் பறவைகளே ஒன்றாக கூடும் நேரத்தில்

ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

இதில் சரோவின் நடனத்தை அவருக்கு பின்னால் நின்றுகொண்டு எம்.ஜி.ஆர் அதே போல் பாவம் பிடிப்பது அழகு..

பின்னால் திரும்பும் சரோ எம்.ஜி.ஆரை பார்க்க கோபம் கொள்ள பின் எம்.ஜி.ஆர் அழ
பின் அவருக்கு பணம் தந்து அனுப்புகிறார் சரோ ..

அடுத்த நாள் ராமய்யாவிடமிருந்து விஷயம் தெரியவர சரோ கோபம் பொங்க ஊர் சுற்றிப்பார்க்க கிளம்புகிறார்
அங்கே காதலிப்பது போல் நடித்து ஏரியில் எம்.ஜி.ஆரை தள்ளி விடுகிறார்..

பாடலோ - நான் பார்த்ததிலே உன் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன்..
சுசீலாவும் டி.எம்.எஸ்ஸம் உருகியிருப்பார்கள்

வாலியின் வரிகள் அபாரம்..
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்...

ஜுரம் வந்தது போல் எம்.ஜி.ஆர் நடிக்க
நாகேஷ் யாரோ ஒரு பெண் அவரைத் தள்ளி விட்டதாக சொல்ல
சரோ அவருக்கு தைலம் தடவ.. கனவுப்பாடல்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் டியூனும் மெய் மறக்க செய்யும்
காதல் பாடலின் இலக்கணம் சொன்ன பாடல் இது..
இதை மாதிரி அதற்கு பின் பாடல்கள் வந்ததா என்றால் ...........

பாடல் வரிகளை இணைத்துள்ளேன்..

எம்.ஜி.ஆரை விரட்ட சரோவும் அவரது சக மாணாவியரும் பாடும் பாடல்
ஏ நாடோடி - சுசீலா, டி.எம்.எஸ்,ஏ.எல்.ராகவன்,ஈஸ்வரி என அனவரும் கலக்கும் பாடல்


உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...

காதலை பாடல் மூலம் சொல்கிறார் எம்.ஜி.ஆர்

இதற்கிடையில் சரோவின் அத்தான் அசோகன் வர
அவர் எம்.ஜி.ஆரின் நண்பர் என சரோவிற்கு தெரியவருகிறது..

அத்தானுக்கும் சரோவிற்கும் கல்யாணம் என்று டி.ஆர்.ராமசந்திரன் பேச

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சரோ படும் பாடு ஆஹா... நல்ல நடிப்பு

பின் இருவரும் தன்னை ஏலம் போடுவதை கண்டு சகிக்க முடியாமக் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு போக என்.ஜி.ஆர் வந்து காப்பாற்றுகிறார்..

நல்ல பொழுதுபோக்கு சித்திரமாக இதை இயக்கிய திருலோகசந்தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ராஜ்

பரஞ்சோதி
06-11-2004, 06:06 AM
அன்பே வா.

ஆகா என்ன அற்புதமான படம். 300 அல்லது 400 தடவைக்கு மேல் பார்த்தப்படம்.

சின்ன வயதில் ஆச்சி வீட்டில் விளையாடி விட்டு தினமும் பார்க்கும் படங்களில் அன்பே வா, அப்புறம் காதலிக்க நேரமில்லை.

எம்.ஜி.ஆர் கலக்கியிருப்பார், சிட்டிங்புல் கூட சண்டையாகட்டும், சரோஜாதேவியை கலாய்க்கிறதாகட்டும், நாகேஷை போட்டு வாங்குவதாகட்டும், புதிய வானம் புதிய பூமி பாடல் என்னமா ஆடி, ஓடியிருப்பார். என்னை எம்.ஜி.ஆர் ரசிகனாக்கியப் படம்.

ஏ நாடோடி பாடலில் வெஸ்டன் ஸ்டையில் கிட்டார் வாசித்து, தரையில் படுத்து ஆடுவாரே! வாவ்.

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.

நன்றி ராஜேஷ்..

rajeshkrv
24-11-2004, 10:21 AM
பத்ரகாளி ..(1976)

ஜனரஞ்சக படங்களை இயக்கி வந்த திருலோகசந்தர்
இந்த சிக்கலான கதையை இயக்கினார் ..

என்னை கவர்ந்த திருலோகசந்தரின் படங்களில் பத்ரகாளிக்கு முதலிடம்.

இது தான் திருலோகசந்தர் - இளையராஜா கூட்டணியின் முதல் படம்
இது தான் இளையராஜா - வாலி இணைந்த முதல் படம்

சிவகுமார், ராணிசந்திரா,சுகுமாரி,மேஜர் சுந்தர்ராஜன்,எஸ்.ஆர்.சிவகாமி,தேங்காய் ஸ்ரீனிவாசன்
நடித்திருந்தனர்.

ராணிசந்திரா - அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருப்பார்.பாவம் விதி அவரை சீக்கிரம் அழைத்துக் கொண்டது.

ராணிசந்திரா(காயத்ரி)- சிவகுமார் ஆதர்ஸ தம்பதிகளாக வாழ்கின்றனர்.
கணவன் மனைவி - இனிய இல்லறம்
பாடல் இதோ - கண்ணன் ஒரு கைக்குழந்தை ஆஹா ஆரம்ப கால ராஜா இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். வாலியின் வரிகளோ அற்புதம் .
குரல்கள்: சுசீலா, ஜேசுதாஸ்

அதுவும் இந்த வரி நாயகியின் பேர் சொல்லும் வரி. வாலி என்றால் இது கூட இல்லாமாலா?

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா


சிவகுமார் ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க ஆசைப்பட
காயத்ரி கோபப்பட
வீட்டிற்கு வந்தவுடன் அங்கே கேட்டேளே அதை இங்கேயே பாருங்கோ என்பது போல்

கேட்டேளே அங்கே அத பார்தேளா இங்கே என்ற நாட்டுப்புற சாயலில் அமைந்த அருமையான பாடல்
வாலியின் வரிகளும், சுசீலாவின் குரலும் நம்மை ஈர்க்கும்

ஒரு நாள் காயத்ரி எதையோ கண்டு மிரண்டு பயந்த நிலையில் வருகிறாள்
காயத்ரியின் வினோத நடவடிக்கையால் சிவகுமார் கவலையுற தாயின் சொல்லால்
காயத்ரியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார் சிவகுமார்.

ஆனாலும் அவர் காயத்ரி நினைவாகவே இருக்கிறார்
காயத்ரியும் பைத்தியம் போல் இருந்தாலும் சிவகுமாரை பார்த்தால் பேசினால் சாதாரணமாகிவிடுவாள்
இதனாலேயே அடிக்கடி சிவகுமார் வீட்டிற்கு ஓடி வந்து விடுவார்.
சிவகுமாரின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறக்கிறது.

காயத்ரி வீட்டிற்கு வந்து குழந்தையை தூக்கி கொண்டு சேட்டை செய்ய
இதை பார்த்த காயத்ரியின் அப்பா(மேஜர்) ஊரை விட்டு வேறு ஊருக்கு காயத்ரியை அழைத்து செல்கிறார்.

காயத்ரி குணமடைந்து ஒரு வேலையில் இருக்க சிவகுமாரும் அவளும் மீண்டும் பார்த்துகொள்ள
மனம்விட்டு பேசுகின்றனர்.

காயத்ரியை பின் தொடர்ந்து வந்த உருவம், சிவகுமாரின் இரண்டாவது மனைவியை கடத்தி போவதை காயத்ரி பார்த்து அங்கே சென்று அவனை அழித்து, தன் உயிர் தந்து குழந்தையையும்,தாயையும் காப்பாற்றுகிறாள்.

காப்பாற்ற அவள் புறப்படும் தருவாயில் கோயிலில் கச்சேரி - எம்.ஆர்.விஜயாவின் குரலில்
பத்ரகாளி புறப்பட்டாள் என்ற பாடல் அம்மனின் ஆங்காரத்தை பிரதிபலிக்கும் பாடல்.

கொஞ்சம் சிக்கலான கதை, அதை அழகாக கையாண்டிருப்பார் திருலோகசந்தர்.

ஒவ்வொரு பாத்திரமும் நன்கு படைக்கப்பட்டவை.

அம்மாவை மீற முடியாமல், காயத்ரியை மறக்கவும் முடியாமல் சிவகுமார்
சிவகுமாரே உலகம் என்ற பெண்மை பாங்காகட்டும், அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்கும் துணிச்சல்
ராணி சந்திரா அபாரம்
தினமும் சிவகுமார் வீட்டிற்கு சென்று லூட்டி அடிப்பதால் மகளை அடித்து ஒரு அறையில் அடைத்து பின் அழும் மேஜராகட்டும் அனைத்தும் ஜோர்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பலம்.

மொத்தத்தில் பத்ரகாளி ஒரு நல்ல திரைப்படம்

ராஜ்

pradeepkt
24-11-2004, 10:31 AM
நானும் இந்தப் படத்தை சமீபத்தில் ராஜ் (அட என்ன ஒற்றுமை) டிஜிடல் ப்ளஸில் பார்த்தேன்... ரசித்தேன்!
படத்தில் பங்குபெற்ற அனைவருமே ரசித்துச் செய்திருந்தார்கள்.
அதிலும் இசைஞானியின் இசையும், வாலிபக் கவியின் வரிகளும், சுசீலா, ஜேசுதாஸ் என அனைவரின் குரல்களும் படத்தில் ஒரு fruit salad போல இயைந்திருந்தது.

தொடருங்கள் ராஜேஷ்.
அன்புடன்,
பிரதீப்

இளசு
12-12-2004, 05:43 AM
பத்ரகாளி. நாவலாய் வந்த கதை என நினைவு.
நல்ல படம்.வெள்ளிவிழாப் படம்.


தொடர் மிக அருமை. தொடருங்கள் ராஜ்.

aren
13-12-2004, 05:17 AM
பதரகாளி - அருமையான படம். சிவகுமார் அவர்களின் வெள்ளிவிழா படங்களில் இதுவும் ஒன்று.

இதில் அறிமுகமாகிய மலையாள நடிகை ராணிசந்திராவும் மற்றும் மலையாள திரையுலக நட்சத்திரங்களும் ஒன்றாக பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் பம்பாயிலிருந்து கிளம்பிய சில நொடிகளிலேயே வாணத்தில் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டனர் ராணிசந்திரா உட்பட. பதரகாளி ராணிசந்திரா அவர்கள் இறந்த பிறகுதான் வெளிவந்தது. படம் பாதிக்குமேல் எடுத்தாகிவிட்டது, கடைசி சில காட்சிகளின் இன்னும் ராணிசந்திரா அவர்கள் நடிக்கவேண்டியிருந்தது. ஆனால் விதியில் சதியால் அவர் இல்லாமல் போய்விட்டார். அதனால் திருலாகச்சந்தர் அவர்கள் பவாணி என்ற நடிகையைக் கொண்டு மிச்சமிருந்த காட்சிகளை எடுத்து படத்தை வெளியிட்டார். அந்தப்படம் அமோக வெற்றி பெற்றது.

திருலோகச்சந்தர் அவர்களின் படங்களின் எனக்கு மிகவும் பிடித்தபடம் "அதே கண்கள்". ரவிச்சந்திரன், காஞ்சனா அசோகன் ஆகியோர் நடித்து அமோக வெற்றி பெற்ற சஸ்பென்ஸ் படம்.

manitha
13-12-2004, 06:24 AM
அப்பாடியோ!!!!!!!!!
இப்படி ஒரு செய்தித்தொகுப்பை இதுவரை பார்த்ததே இல்லை.
சினிமாவில் கலைச்சேவை புரியும் கலைஞர்களுக்குக்கூட
இவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்க சாத்தியமில்லை.

ராஜீவ் அவர்களுக்கு மிகவும் நன்றி......
உங்கள் சேவை தொடர எமது வாழ்த்துக்கள்.

rajeshkrv
28-12-2004, 08:46 AM
அதே கண்கள் (1967)

ஏ.வி.எம். தயாரிப்பில் திருலோகசந்தர் இயக்கிய ஒரு த்ரில்லர்.
வேதாவின் இசை இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

ஜாவர் சீதாரமனின் கதை,திரைக்கதையில் வந்த இந்த படம் இன்றளவும் பேசப்படுவதன் காரணம்
சஸ்பென்ஸ் கெடாமல் கொண்டு சென்ற இயக்கமே.

காஞ்சனா,ரவிச்சந்திரன், நாகேஷ், அசோகன்,பாலாஜி, மேஜர்,பி.டி.சம்மந்தம்,ராம்தாஸ்,ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.


காஞ்சனா படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறார். தன் தோழியருடன் பொதுச் சேவை செய்கிறார்.
ஒரே பாட்டும் ஆட்டமும் தான் . பும் பும் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி என சுசீலாவும் குழுவினரும் பாடுவது அழகு. வாலியின் தமாஷான வரிகளும், வேதாவின் இசையும் அருமை.

பாடலின் முடிவில் வீட்டிற்கு அடிக்கும் வர்ணததை ஒரு இளைஞனின் முகத்தில் காஞ்சனா அடித்துவிடுகிறார்.
அந்த இளைஞன் தான் கதா நாயகன் - ரவிச்சந்திரன்
பார்த்த உடன் காதல் மலர்கிறது..

காஞ்சனா பெரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா, அம்மா இருவரும் இல்லை
சித்தப்பாக்கள் அசோகன், ராமதாஸ், மற்றும் சித்தி ஜி.சகுந்தலா மட்டுமே உண்டு..

காஞ்சனாவின் அப்பா - அம்மா சென்ற கார் லாரி மீது மோதியதால் இருவரும் இறந்ததாக தகவல்

ரவிச்சந்திரன் ஒரு ஹோட்டலில் நடனமாடும் வேலை பார்க்கிறார்.
அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள காஞ்சனாவும் அவரது தோழிகளும் வருகிறார்கள்.

ஒரு பக்கம் காதல் தொடர மறுபக்கம் ஜி.சகுந்தலாவை யாரோ கொலை செய்ய முயற்ச்சிக்க
வீடே அதிர்ச்சிக்குள்ளாகிறது. காஞ்சனா கதவை உடைத்து உள்ளே சென்றதால் ஜி.சகுந்தலா பிழைத்தார்.
உள்ளே ஒரு சுருட்டு துண்டு ...

போலீஸ் அவரிடம் விசாரிக்க அவரோ எதுவும் சொல்ல முடியாதபடி பயத்தில் உள்ளார். அவரது டாக்டரான பாலாஜியிடமும் விசாரணை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி பற்றி காஞ்சனா ரவியிடம் சொல்ல ரவி தான் துப்பு துலக்குவதாக சொல்கிறார்.

காஞ்சனாவின் வீட்டை ரவி கண்காணிக்க , சுமார் 10 மணிக்கு கார் ஒன்று வெளியே வர அதை பின் தொடர்கிறார் ரவி.
ஊருக்கு ஒதுக்குப்புரத்தில் உள்ள ஒரு வீட்டை கார் நெருங்க பாடல் ஒலிக்கிறது

வா அருகில் வா
தா உயிரை தா என சுசீலாவின் குரலில் ஒரு திகில் பாடல்..ஆம் கீதாஞ்சலி அசோகனின் காதலி

கார் டிரைவர் ரவியை தாக்க , ரவி அவரை தாக்க சண்டை ஓய்ந்ததும்
ரவி கீழே பார்க்க அங்கே ஒரு சுருட்டு துண்டு...

இதை ரவி காஞ்சனாவிடம் சொல்ல காஞ்சனா மேலும் திகிலடைகிறார்..

இந்த திகிலுடன் நாகேஷின் காமெடி ஒரு நகைச்சுவை கலாட்ட
கல்யாணமானவர்களுக்கே வீடு வாடகைக்கு விடப்படும் என்று ரமாபாய் - பி.டி.சம்மந்தம் கூற
ரவியும் நாகேஷம் கணவன் மனைவி வேடமேற்று செல்கின்றனர்.
நாகேஷ் அங்கே மாலினியின் மீது காதல் கொள்ள ஒரு தமாஷ் தான்.

காஞ்சனா பெங்களூர் பயனம் செல்ல அங்கே வழியில் ரவி நாகேஷடன் வர
பிருந்தாவனத்தில் இந்த காதல் பாட்டு..
இந்த பாட்டில் சபாஷ் பெறுவது வாலி..
ஆம் ஹோ ஹோ எத்தனை அழகு 20 வயதினிலே
என டி.எம்.எஸ்-சுசீலா பாட அருமையான பாடல்
அருமையான நடனம் ..

நடுவில் ராம்தாஸம் கொலை செய்யப்பட கொலையின் தீவிரம் எல்லாரிடமும் தெரிகிறது.
எல்லோரும் பயத்தில் உறைந்திருக்கின்றனர்.

கவலையை மறக்க அசோகன் கீதாஞ்சலியுடன் இருக்க
கீதாஞ்சலி பாட என் என்னவோ நான் நினைத்தேன் என சுசீலா பாட
பாடல் முடிந்து உடைமாற்றும் போது கீதாஞ்சலியையும் கொலை செய்ய முயல்கிறான் கொலைகாரன்

ரவி தானே தங்கி கொலைகாரனை கையும் களவுமாக பிடிக்கிறேன் என கூறுகிறார்
ரவி தங்கியிருக்க சுற்றிலும் போலீஸ் காவலிருக்க கொலைகாரன் வருகிறான்
ரவி அவனுடன் சண்டையிட்டாலும் கண்களை மட்டுமே பார்க்க முடிகிறது..
தப்பி சென்று விடுகிறான் அவன்..

இவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒரு வயதானவரை தாக்கிவிட்டு சென்றுவிடுகிறான்..

எல்லோரும் நிற்க ரவி அந்த கண்கள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது என்று கூறி ஒவ்வொருவராக சோதிக்கையில் அந்த வயதானவரின் கண்ணை பார்த்து திகைக்க அதற்குள் அவன் தலையில் இருக்கும் வெள்ளை முடியை கழற்றிவிட்டு தான் அசோகனின் அப்பவின் இரண்டாவது மனைவியின் மகன் என்றும்
இந்த குடும்பத்தை வஞ்சம் தீர்க்கவே தன் வந்ததாக கூறுகிறான்

போலீஸ் அவனை சுட்டுவிட .. இனிதே சுபம்..

படம் பார்த்தவர்கள் கதை சொல்ல வேண்டாம் என வேண்டுகோளோடு வெளிவந்த படம்

அந்த புதுவருட நடனம் ரவி-காஞ்சனா ஆடுவது அபாரம்.. இன்றைய நடனங்கள் எல்லாம் இதற்கு
முன்னால் மிகவும் எளியவை.எல்லோரையும் ஈர்த்த படம் அதே கண்கள்

ராஜ்

gragavan
28-12-2004, 10:59 AM
அதே கண்கள். மிகவும் அருமையான படம். இளமை, துள்ளல், விறுவிறுப்பு என்று எல்லாம் கலந்து அமைந்த சிறப்பான படம். பாடல்கள் அனைத்தும் இனிமை. பார்த்தவர்கள் யாரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

பாதிமதி எது?
http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=93824&

rajeshkrv
19-01-2005, 09:26 AM
இதுவரை இயக்குனர் அலசலுக்கு ஆதரவு தந்த மன்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

திருலோகசந்தரை தொடர்ந்து நாம் பார்க்க போகும் இயக்குனர் பி.மாதவன்.

ஜெயலலிதா இவரை திரைப்பட நகரத்தின் தலைவராக நியமித்து மகிழ்ந்தார்

எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை இயக்கிய பெருமை உண்டு இவருக்கு.


இவர் இயக்கிய சில படங்கள் இதோ ..

மணியோசை
தெய்வத்தாய்
தங்கப்பதக்கம்
தேனும் பாலும்
சபதம்

ஒவ்வொன்றாக வரும் நாட்களில் அலசுவோம்

ராஜ்

gragavan
20-01-2005, 11:51 AM
சூரியகாந்தி படத்தை இயக்கியவர் மாதவன்தான? பாட்டும் பரதமும் அவரது இயக்கத்தில் வந்தது அல்லவா? பொதுவாக மாதவன் படங்களில் பாடல்கள் சிறப்பாக இருக்கும். அவரைப் பற்றி இன்னமும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
03-02-2005, 10:49 AM
மணியோசை -

கலயாண்குமாரின் சிறந்த நடிப்பை கொண்ட படம்

விஜயகுமாரி,புஷ்பலதா, நாகய்யா, முத்துராமன் என பலர் நடித்திருந்தனர்.

கூண் உடம்பில் தான் மனதில் இல்லை என நிரூபித்த படம் .

தேவன் கோவில் மணி ஓசை பாடல் மறக்ககூடிய பாடலா. சீர்காழியார் பாடுவது நம் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வருஷம் தேதி மாசம் பார்த்து - சுசீலாவின் குரலில் இனிய பாடல்.

ஒரு நல்ல படம் ஆனால் சோக மயம்.

மாதவனின் இயக்கம் நேர்த்தி..


ராஜ்

gragavan
08-02-2005, 05:05 AM
மணியோசை மிகச்சிறந்த படங்களில் ஒன்று. அந்தப் படத்திற்காக சீர்காழி கோவிந்தராஜன் சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார்.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்கையர் கொங்கையிலே தான் தங்கையிலே அருணகிரி சொன்னதென்ன?
http://www.tamilmantram.com/new/index.php?...st=120&p=95377&