PDA

View Full Version : ஜென் கவிதைகள்..rambal
12-02-2004, 01:34 PM
ஜென் கவிதைகள்..

எதிர்பாரா சந்தர்ப்பத்தில் ஜென் கவிதைகள் என் கையில் கிடைத்தது.
அதைப் படிக்கப் படிக்க ஏதோ ஒன்று நிதர்சண தரிசணம் போன்று கிடைத்தது. அதன் பின் அதை
அனுபவிக்க ஆரம்பித்தேன்.. இறுதியில் அந்தப் பித்து தெளிந்த பொழுது இந்தத் தொகுப்பு என் கையில்..
இனி உங்கள் பார்வைக்கு.. எனக்கு இருக்கும் மொழி அறிவை வைத்து மொழி பெயர்த்திருக்கிறேன்..
பிழைகள் இருக்க வாய்ப்புண்டு.. அதனால் தான் அதன் ஆங்கிலப் பதிப்பையும் கொடுத்துள்ளேன்..
தேவைப்படும் கவிதைகளுக்கு விளக்கமும் கொடுத்துள்ளேன்.. ஜென் மட்டும் இல்லாது அதன் தலைப்புகளுக்கு
பொருந்தி வரும் நமது சங்கக் கவிதையையும் கொடுத்துள்ளேன்..

rambal
12-02-2004, 01:36 PM
தனிமை..


எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினம் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.

----கங்குல் வெள்ளத்தூர், குறுந்தொகை - திணை முல்லை..

என் பார்வை:

பகலின் எல்லை முடிய
முல்லை விரிய
கதிரவன் சினம் தணிந்த
தனிமை நிரம்பிய மாலையில்
உயிரை எல்லையாகக் கொண்டு
நீந்தினேன் எனினும்
என்ன பயன் தோழி,
இரவெனும் வெள்ளம்
கடலினும் பெரிது.

தனிமையில் ஒருவன் பாடிய பாடலாக குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள சங்கப் பாடல் இது.
ஜென் கவிதைகளும் ஏகத்திற்கு தனிமையின் ஏகாந்தத்தை தன் வசம் கொண்டுள்ளது..

அந்தக் கவிதைகள்...

rambal
12-02-2004, 01:36 PM
பூக்கள் இல்லை,
நிலவும் இல்லை. அவன்
ஸாக்கே அருந்துகிறான்
தான் மட்டும் அமர்ந்து!


எழுதியவர்: மட்ஸ¥வோ பாஷோ (ஜப்பான். 1644 - 1694)

ஆங்கிலத்தில்:

No blossoms and no moon, / and he is drinking sake / al alone

rambal
12-02-2004, 01:36 PM
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரம்மாண்டமான வரவேற்பறையில்.

எழுதியவர்: கொபயாஷி இஸ்ஸா (ஜப்பான். 1762 - 1827)

ஆங்கிலத்தில்:

A man, just one - / also a fly, just one - / in the huge drawing room.

rambal
12-02-2004, 01:37 PM
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக?
யாருக்காக?


எழுதியவர்: யாரோ..

ஆங்கிலத்தில்:

Over the river, the shining moon; in the pine trees, sighing wind;/
All night so tranquil - why? And for whom?

பரஞ்சோதி
12-02-2004, 03:43 PM
நண்பர்/கவிஞர் ராம்பால் உங்களது தொகுப்பு மிகவும் அருமை, ஒவ்வொன்றும் மனிதனின் மனதை அளக்கும் கவிதைகள். பாராட்டுக்கள்.

பரஞ்சோதி
12-02-2004, 03:45 PM
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரம்மாண்டமான வரவேற்பறையில்.

எழுதியவர்: கொபயாஷி இஸ்ஸா (ஜப்பான். 1762 - 1827)

ஆங்கிலத்தில்:

A man, just one - / also a fly, just one - / in the huge drawing room.

பணம் தான் தேவை, மனங்கள் தேவையில்லை என்று எண்ணும் மனிதனின் கடைசி நிமிடங்கள்.

sara
12-02-2004, 05:13 PM
பூக்கள் இல்லை,
நிலவும் இல்லை. அவன்
ஸாக்கே அருந்துகிறான்
தான் மட்டும் அமர்ந்து!


'இனிது இனிது ஏஏகாந்தமினிது' என்ற வாக்குக்கு எதிர்மறை இக்கவிதை.

பூக்கள் இல்லை, நிலவும் இல்லை. இங்கு அந்தகாரத்தில், வசந்தம் தொலைந்து போன ஒருவன், துணைக்கு மது மட்டும். எனவே மற்றோரைப் பற்றிய நினைப்பும் இல்லை. எவ்வளவு சோகத்தை இந்த வரிகள் பிரதிபலிக்கின்றன. 'ஐயோ..என் தனிமையே.. நீ ஏன் இத்தனை கொடுமை?' என்ற அலறல் எனக்கு கேட்கிறது. இங்கு எப்படி 'இனிது இனிது...' என்று பாட?

ராம்பால் அவர்களுக்கு நன்றிகள். நல்ல கவிதைகளை ரசித்துக் கொடுப்பதற்கு.

இளசு
12-02-2004, 09:31 PM
அருமையான சங்க ஒப்பீடு
பாராட்டுகள் ராம்பால்

மனம் தனிமையில் இருப்பதில்லை
என்ற திருமூலரிடமே எனக்கு உடன்பாடு

நெருப்பில் படுப்பேன்
புலியுடன் இருப்பேன்
மனமே உன்னோடு வாழ்தல் அரிது
இது அவர் சொன்னது..

கல்லும் மட்டியும் செம்மண்ணும் கலந்த
பொங்கும் பிரவாகமாய்
நல்லவையும் கெட்டவையும்
தக்கவையும் தகாதவையுமாய்
எந்நேரமும் எந்த இடத்திலும்
உடன் இருக்கும் நினைவுகள்..சிந்தனைகள்..
உறக்கமெனும் மரண ஒத்திகை நேரம் தவிர
என்னை கணநேரமும் ஒத்திப்போகாத மித்ர -சத்ருக்கள்..

போதை, இசை, கலவி என பலவிதங்களில்
சொற்பநேரம் அவற்றை விரட்ட வீண்பிரயத்தனங்கள்..

கல் மூழ்கிய மறு நொடியே
குளப்பரப்பை மூடும்
பாசியாக மீண்டும் மீண்டும்..

தனிமை உண்மையில் ஏது..
நடந்தவையும் நினைப்பவையும்
இருட்டிலும் நிழலாய்
எப்பவுமே என் உடன்வரும்போது..!

rambal
13-02-2004, 02:13 PM
பல நாட்கள் கழித்து மன்றத்திற்கு வந்தால்
இங்கு ஏகத்திற்கு பல மாறுதல்கள்..
தயங்கித் தயங்கித்தான் இந்தத் தொகுப்பை ஆரம்பித்தேன்..
கலை ரசனை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது
கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
வழக்கம் போல் அண்ணனின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி..
சராவின் ரசனைக்கும் பரஞ்சோதியின் சிலாகிப்பிற்கும் நன்றிகள்..
இந்தத் தொகுப்பின் இறுதியில் ஜென் பற்றி விளக்கம் தருகிறேன்..
தொகுப்பு தொடர்கிறது..

rambal
13-02-2004, 02:22 PM
கோடைகால இரவில்
மாலைப்பொழுது
இன்னும் இருப்பது போலத்
தோன்றுகிறது. ஆனால்,
விடிந்துவிட்டது.
எந்தப் பிராந்திய மேகங்களுக்குள்
வீடு திரும்பியிருக்கும்
அந்த நாடோடி நிலா?

எழுதியவர்: கியோஹாரா நோ ·புக்காயு (ஜப்பான். பத்தாம் நூற்றாண்டு)

ஆங்கிலத்தில்:
In the summer night / The evening still seems present, / But the down
is here. / To what region of the clouds / Has the wandering moon come home?

இதற்கு யாராவது விளக்கம் கொடுத்தால் மகிழ்வேன்...
அல்லது விளக்கங்களுடன் விரைவில்..

rambal
13-02-2004, 02:22 PM
திராட்சைக் கொடிகளின்
கனத்த இலைக் கொடிகள் அடர்ந்து மூடிய
மங்கலான குடிலுக்கு
அதன் தனிமைக்கு
வந்து சேர்கிறது
மந்தமான இலையுதிர்காலம்.
ஆனால்,
ஜனங்கள் யாரும் வருவதில்லை.

எழுதியவர்: துறவி எக்யோ (ஜப்பான். 10ஆம் நூற்றாண்டு)

ஆங்கிலத்தில்:

To the dim cottage / Overgrown with thick - leaved vines / In its
loneliness / Comes the dreary autumn time: / But there no people
come.

karikaalan
13-02-2004, 05:40 PM
ராம்பால்ஜி!

நெடுநாட்களுக்குப்பின் தங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி.

"தனிமையிலே இனிமை காண முடியுமா", என்று கேட்டானே கவிஞன், அதன் பிரதிபலிப்பு இந்த ஜென்கவிதைகளில் காணமுடிகிறது. ஒவ்வொரு கவிதையும் படித்துப் படித்து ரசிக்கும்படியாக இருக்கிறது. மொழியாக்கம் அருமை. ஒப்பீடும் ஒப்பில்லாதது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

===கரிகாலன்

lavanya
13-02-2004, 10:41 PM
எல்லாமே அருமையான கவிதைகள்..நன்றி...

மீண்டு(ம்) வந்த என் இனிய படைப்பாள நண்பனுக்கு வாழ்த்துக்கள்

rambal
14-02-2004, 01:25 PM
பாராடிய அண்ணனுக்கும் தோழி லாவண்யாவிற்கும் நன்றி...

rambal
14-02-2004, 01:27 PM
தலைப்பு: தர்க்கம்


யாதனின் யாதனின் நீங்கின் நோதல்
அதனின் அதனின் இலதே.

திருவள்ளுவர், திருக்குறள்.

என் பார்வை:

எல்லாவற்றையும் நீக்கி
நீக்கிப் பார்க்க
ஒன்றும் இல்லாது போதல்.

rambal
14-02-2004, 01:27 PM
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை.
நீரில் இறங்குகையில்
சிற்றலையும்
எழுவதில்லை.

எழுதியவர்: இக்யு ஸோஜன் (ஜப்பான். 1394 - 1481)

rambal
14-02-2004, 01:27 PM
காற்று ஓய்ந்த பின்னும்
உதிர்கின்றன
மலர்கள்;
பறவையின் அலறலில்
ஆழமுறுகிறது
மலையின் மௌனம்.

எழுதியவர்: ஷியாக்கு ஷோஅன் (ஜப்பான்)

rambal
14-02-2004, 01:28 PM
வாழ்வு பறிபோனதற்குத்
துக்கித்திருப்பேன்,
ஏற்கனவே
நான் இறந்துவிட்டேனென
அறியாமலிருந்தால்.

எழுதியவர்: ஒட்டா டோக்கன். (ஜப்பான். 1432 - 1486)

முத்து
14-02-2004, 01:36 PM
அருமை .. ராம்பால் அவர்களே ..
நன்றிகள் ...

கையிலெடுத்து அதை உரிக்கிறான்
கடைசிவரை எதுவுமே இல்லை ..
அந்த வெங்காயத்திலும் அவன் வாழ்விலும் ..

sara
14-02-2004, 09:41 PM
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை.
நீரில் இறங்குகையில்
சிற்றலையும்
எழுவதில்லை.


தலைப்பு 'தர்க்கம்' என்று கொடுத்திருக்கிறீர்கள். அதனோடு இந்தக் கவிதையை தொடர்பு படுத்திப் பார்க்கிறேன். என்னுள் எழுந்த நினைவுகள் கீழே.

விவாதத்தில் அவன் நுழைந்து, அவனின் கருத்து சொல்லும் போது, எவரும் புண்படுவதில்லை. அடர்ந்த வனம் போலும் ஒரு விவாதம், அவன் வழி அதில் ஏற்படுத்தும் போது, புற்கள் கூட நசுங்குவதில்லை. மாறாக விலக்கப்படுகிறதோ? இரண்டாவது வரிதான் கொஞ்சம் இடிக்கிறது. நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை. அப்படியென்றால், அவனுடைய கருத்து எவருக்கும் ஒரு பொருட்டில்லையோ? விழலுக்கு இறைத்த நீராய் போகிறதோ அவனது பேச்சு? நீரில் இறங்கினால் அலை எழும்பவேண்டும், ஒப்புமை அல்லது வேற்றுமை, அதுவே நீர் அவனை உணர்ந்து கொண்டதற்கு அறிகுறி. இதுயில்லையெனில் நீர் அவனை அலட்சியப்படுத்துகிறது, அவன் ஒரு பொருட்டில்லை என்றல்லவா அர்த்தம்?

இளசு
14-02-2004, 11:15 PM
பல நாட்கள் கழித்து மன்றத்திற்கு வந்தால்
இங்கு ஏகத்திற்கு பல மாறுதல்கள்..
கலை ரசனை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது
கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
.

ராம்

இந்தக்கருத்து எனக்கு ஏற்புடயதன்று.
ரசனைகள் பலவிதம். உங்களுக்குப் பிடித்த
ஒன்றை ரசிப்பவர் மட்டுமே கலாரசனை உள்ளவர்;
அதை ரசிக்காதவர் ரசனை அற்றவர் என்ற கருத்து
ரசிக்கத்தக்கதாய் இல்லை.

முடிவிலிக்கு நான் கருத்து தெரிவிக்கவில்லை.
சில மாதங்களில் என் ரசனை முன்னேறிவிட்டதாய்
நான் நினைக்கவில்லை.

அண்மையில் அடிக்கடி மன்றம் வந்துபோகும் தாங்கள்
இங்கு குவியும் தரமான படைப்புகளில்
எத்தனைக்கு கருத்து தெரிவித்தீர்கள் எனத் தெரியவில்லை.

உங்கள் உயர்ந்த ரசனை புரியாமல் ஒதுங்கும்
என் போன்றவர்கள் உங்கள் பார்வையில்
"அறிவிலி" எனச் சொல்லுங்கள்..ஏற்கலாம்.
ரசனை அற்றவர்கள் என்பதை ஏற்க இயலாது.
எங்கள் குறைந்த அறிவுக்கேற்ற ரசனையோடு
மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் ரசனையோடு ஒத்தவரை வாழ்த்துவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஒத்துவராதவரை மறைமுகமாய் வசை பாடாதீர்கள்.

எத்தனை அறிவாளியாய் ஒருவன் இருந்தாலும்
சகமனிதரை அவர் தன்மானத்தை மதிக்காதவனை
நான் மதிப்பதில்லை.

இணையவியல் பற்றி ஒரு வரி:

பாராட்டும் படைப்பும் இருவழிப்பாதை இங்கு

வாழ்வியல் பற்றி ஒரு வரி:
மரியாதை என்பது பண்டமாற்றுக்கு மட்டுமே.

rambal
15-02-2004, 05:54 AM
இளசு அண்ணன் அவர்களுக்கு,
நான் எந்தத் தவறான அர்த்தத்திலும் அந்த வார்த்தைகளை
எழுதவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும்விதமாயும் எழுதவேண்டும்
என்றும் எழுதவில்லை.
சமீபகாலமாக பல நல்ல படைப்புகள் மன்றத்தில் பதியப்பட்டு வருகிறது.
அத்தகையப் படைப்புகளுக்கு வரும் ஆரோக்யமான விமர்சனம்
நல்ல ரசனையில் இருந்துதான் வருகிறது.
அப்படி நான் குறிப்பிட்டது சமீபத்தில் மன்றத்தில் சேர்ந்த சரா, பரஞ்சோதி, அலை, நட்சத்ரன் மற்றும் பலரையும்தான்.
நான் சமீப காலமாக பதிக்கப்பட்ட எந்தப் பதிப்பிற்கும் கருத்து
தெரிவிக்கவில்லை. உண்மைதான். ஆனால், அவைகளைப் படிக்கவில்லை
என்று ஆகுமா?
என்னுடைய பதிவிற்கு கருத்து பதிந்துவிட்டால் உடனே அவர்களின் ரசனை
உயர்ந்துவிட்டது என்றா சொன்னேன்?

ஒட்டு மொத்தமாக நிகழ்ந்த மாற்றத்தைச் சொல்ல வேண்டும்.
அதற்குண்டான சந்தர்ப்பமாக என்னுடையத் தொகுப்பைப் பயன்படுத்தினேன்.

இதில் யாரையும் மறைமுகமாக சாடவில்லை.
நான் சாதாரணமாக எழுதும் விஷயங்களைக் கூட
ஊதிப் பெரிதாக்குவதின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.
இதையும் மீறி நான் செய்தது தவறென்று நினைத்தால்
தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்....

அப்போதும் தங்கள் மனது ஆறாது என்றால்
இந்தத் தொகுப்பை அழித்துவிடுங்கள்...

இக்பால்
15-02-2004, 06:10 AM
ராம்பால் தம்பி அருமையான முயற்சி. இதை கவிதைகள் பகுதிக்கு
கொடுத்திருக்கலாமே.

ராம்பால் தம்பி உங்களுக்கு நல்ல அறிவு. அதை ஆக்கத்திற்கு உபயோகப்
படுத்த என் கோரிக்கை. அழிவுக்குப் பயன்படுத்த வேண்டாம்.

உங்களை ஒரு அணுச்சக்தியாக நான் பார்க்கிறேன். அணுக்குண்டாகி
விடாதீர்கள். மின்சாரமாகி எங்களுக்கு உபயோகப் படுங்களேன்.

-அன்புடன் அண்ணா.

இக்பால்
15-02-2004, 07:12 AM
குழந்தை சிந்திக்க தெரிந்தவுடன் தவறு செய்யும்பொழுது கண்டிக்கும்
தன் அப்பாவை எதிரியாக நினைத்து இவர் எதற்கு எல்லாவற்றிற்கும்
குறுக்கே வருகிறார் என நினைக்கும். அப்பா செய்வது தனது நல்ல
வாழ்க்கைக்குத்தான் எனப் புரிந்துகொண்டாலும் சில சமயம் தர்க்கம்
செய்யும். அதைத்தான் நான் இங்கே பார்க்கிறேன்.

தாயின் கண்டிப்புக்கும், மாற்றாந்தாயின் கொடுமைக்கும் வித்தியாசம்
உண்டு. இளசு அண்ணாவின் கண்டிப்பு தாயின் அன்பு கண்டிப்பாக
நான் பார்க்கிறேன். அது மாற்றாந்தாயின் கொடுமையாக மாறி விட
வேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்புடன் ஆதரவுடன்
இருங்களேன்.

தயவு செய்து என்னைத் தவறாக பார்க்க வேண்டாம். என் மனதில்
எந்த உள் நோக்கம் இல்லை. ஆனால் ஒன்று உண்டு. எல்லோரும்
என் அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள்.

-அன்புடன் இக்பால்.

இளசு
15-02-2004, 08:36 PM
இளவல் ராமுக்கு

பழையனவற்றை மறக்க முடியாதது என் பலவீனம்!

இம்மன்றம் சென்ற ஏப்ரலில் தலைவர் தொடங்க
முதன்மையான உந்து சக்தி தாங்கள்தான்.
அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

அற்புதமான படைப்பாளி
சிறந்த அறிவாளி
நல்ல திறமைசாலி தாங்கள்
இது என் அசைக்கமுடியாத கருத்து.

உங்கள் படைப்புகளில் எனக்கு புரிபட்ட
அளவுக்கு அவற்றை ரசித்து மகிழ்ந்தவன் நான்.

எனக்குப்புரிகிறதோ இல்லையோ
மன்றத்தின் உயர்ரசனை உறுப்பினர்களின்
பின்நவீனத்துவம், இருண்மை வகைப் படைப்புகளை
ஆச்சரியமாய் மலங்க மலங்க பார்த்து
கூச்சமாய் ஒதுங்கியதுண்டு..முயற்சித்து புரிந்தவரை, இல்லை வித்தகர்கள்
பொழிப்புரை தந்தபின்னர்
லஜ்ஜையின்றி வந்து நான் கருத்துகள் தந்ததுண்டு.

நண்பர் நண்பன் அவர்கள் அதுபோல் ஒருமுறை பொழிப்புரை தந்தார்.
நீங்கள் சொன்னீர்கள் : " நண்பன், அதை நீக்கிவிடுங்கள். நாளை வரை
பார்ப்போம். யாருக்காவது புரிகிறதா என்று..! அதுவரை மண்டை காயட்டுமே"

உங்கள் பேச்சைக்கேட்டு நண்பன் பொழிப்புரை நீக்கிவிட்டார்!
கடைசிவரை என் குறை அறிவுக்கு, கீழ் ரசனைக்கு அந்தப்படைப்பு
விளங்கவே இல்லை.

ஆனாலும் நான் அசூயை அடைந்ததில்லை.

இது பலரும் உலவும் தளம்.
பல ரசனைகளின் தொகுப்புக் களம்.
அதி புத்திசாலிகளுக்காக cryptic clue கொடுக்கும்
குறுக்கெழுத்து போட்டிகளும்
ஒரு ஊடகத்தின் அம்சம்தானே!

எனக்கு விளங்காவிட்டால் என்ன
என் மன்றத்தோழர்கள் எத்தனை புத்திசாலிகள்
இவர்களுடன் பழகுவதே பெருமை என்பதே
இன்னும் என் மனவோட்டம்.

இன்று ஒரு முக்கியமான குற்றச்சாட்டை
மறைமுகமாய் சுமத்தி இருக்கிறீர்கள்.அப்போதும் தங்கள் மனது ஆறாது என்றால்
இந்தத் தொகுப்பை அழித்துவிடுங்கள்...

உங்கள் கருத்துக்கு மாற்றாய் என் கருத்தைச் சொல்வதில்
அருமையான இந்தத் தொகுப்பை அழிப்பது பற்றிய
கருத்து ஏன்?

பதிவுகளை அழிப்பது கண்காணிப்பாளரின் தனிப்பட்ட வெறுப்பால்
என தொனி இதைப்படிப்பவர்களுக்கு தோணவைக்கும்
விஷ(ம)ப் பிரச்சாரமா? பொது மடலிலா?

அழித்தல்..
உங்களின் எந்த படைப்பு அழிக்கப்பட்டது எனச் சொல்ல முடியுமா?

ஒரு பதிவை பப்பி அவர்கள் விமர்சித்தார்கள்,
நீங்களே அதை தணிக்கை செய்து மாற்றினீர்கள்
படைப்பின் உள்ளடக்கம் கருதி அது பண்பட்டவர் பகுதிக்கு
மாற்றப்பட்டது.

உங்களின் உயர்ந்த ரசனை, பின் நவீனத்துவ படைப்புகள்
எதுவும் நிர்வாகத்தால் அழிக்கப்படவில்லை ஏன் சிதைக்கப்படவில்லை
இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டன
என்பதே உண்மை.

அழித்துவிடுங்கள் என்று சொன்னதன் மூலம் மன்ற நிர்வாகத்தின் மேல் இருக்கும்
உங்கள் ஆழ்மன துவேஷத்தைக் காட்டிவிட்டீர்கள்.நன்றி.

தம்பி பூ முன்பு உங்கள் படைப்பின் தவறைச் சுட்டிக்காட்டிய உடனே
உங்கள் படைப்பை முற்றிலும் (கண்காணிப்பாளராய்) அழித்துக்கொண்டது தாங்கள்.

(அதன்பின் தலைவர் கண்காணிப்பாளருக்கு இடம் மாற்றும் அதிகாரம் மட்டும் வைத்து
படைப்பை அழிக்கும் வசதியை திரும்பப் பெற்றுக்கொண்டார்.)

தம்பி பூ உங்கள் படைப்பை விமர்சனம் செய்ததற்காக அவரை சாம்பல் தூசி என்றும்
நீங்கள் சிவன் உங்கள் சினம் ருத்ர தாண்டவம் என்றும்
"குறியீடுகளில்" உங்கள் சிறுமதி காட்டியதை மறந்துவிடவில்லை.
அதன்பின் பல மாதங்கள் கவிதைப்பக்கமே நான் வரவில்லை.

இதுதான் ராம்பால் என்ற சிறந்த படைப்பாளியின் உள்ளிருக்கும்
பக்குவப்படாத இன்னொரு பக்கத்தின் பின்னணிக்கதை!
வார்த்தைகள்....
இடம் பொருள் பின்புலம்
இவற்றைக் கொண்டே அவற்றின் அர்த்தங்கள்..

ரசனைகள் பற்றி இதுவரை நீங்கள் வெளியிட்ட
கருத்துகள் என் நினைவில் இருப்பதால்
இதையும் அப்படி புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்.

மன்ற உறுப்பினர்களின் ரசனையை
ஒட்டுமொத்த தமிழ்மக்களின் ரசனையை
வேதரத்தினம் முதல் சுஜாதா வரையிலான
அத்தனை தமிழரையும் கேவலப்படுத்தி
கருத்து பதித்த உங்களின் இந்தப்பதிவை
தவறாக புரிந்து கொண்ட என்னை மன்னிக்க!

தமிழில் நாவலே இதுவரை எவராலும் எழுதப்படவில்லை
என்ற கர்வ சிகரத்தில் இருப்பவரான தங்கள் கருத்துகளை
நான் இங்கே புரிந்துகொண்டது தவறென நிரூபித்துவிட்டீர்கள்..
மீண்டும் மன்னிக்க!

தமிழ் மன்றம் உயர் ரசனையாளர்கள் உலவும் இடமன்று
சினிமா,அரட்டை மட்டும் சிலாகிக்கப்படும் வெகுஜன ,மட்டமான
ரசனைகளின் இருப்பிடம் என எங்களை இளக்காரமாய் பேசும்
தங்களின்
இந்த பெருந்தன்மையான
மன்ற ரசனையை உயர்த்திப்பேசும் கருத்தை மாறாகப் புரிந்த
இந்த மடையனை மன்னிக்க!
ஒட்டு மொத்தமாக நிகழ்ந்த மாற்றத்தைச் சொல்ல வேண்டும்.
..

மாற்றம்
இது முந்திய மன்ற உறுப்பினர்களின் ரசனை
உங்கள் மதிப்பீட்டில் குறைவானதென்று குறிப்பதாய் இன்னமும் நினைக்கிறேன்.
எம் மன்ற நெஞ்சங்களின் மனம் புண்படுத்தும் இந்த சுய கர்வ அணுகுமுறையை
வன்மையாய் இன்னமும் கண்டிக்கிறேன்.

வளர்ச்சி என்பதே சரியான சொல். காழ்ப்புணர்ச்சி இல்லாத நெஞ்சம் சொல்லும் சொல்!
அதை சொல்லாததில்
உங்கள் அடிமனக் கசப்பு வெளிப்பட்டுவிட்டதாய் நம்புகிறேன்.

அலை, பரஞ்சோதி,சரா..கைவலிக்க இவர்கள் தட்டச்சிய
பதிவுகளைப் படித்துவிட்டு, ஒன்றுமே சொல்லாமல் போவோரைவிட
ஒருவரி "நல்லா இருக்கு" எனப் பதிப்பவர்கள் மேல்!

எங்களுக்கு என்ன ஞான திருஷ்டியா இருக்கிறது
நீங்கள் இப்படி எல்லாம் நினைக்கிறீர்கள் என அறிந்துகொள்ள?

இவர்களால் மன்ற ரசனையாளர், கருத்தாளர், படைப்பாளர் எண்ணிக்கை
உயர்ந்தது என்பதில் இரு கருத்து இல்லை.

உங்கள் பதிவில் உங்களைப்பாராட்டி வந்த பதிவில்
"பெரிய மாற்றம், கலை ரசனை அதிகரித்துவிட்டது" என நீங்கள்
புளகாங்கித்தால் அது பரஞ்சோதி, அலை,சரா இவர்களைக்
குறிக்கும் என்பதை உங்கள் விளக்கத்தால் அறிந்துகொண்டேன்.

சராவின் கதைகளில், அலையின் விவாதங்களில், பரஞ்சோதியின்
படைப்புகளில் "ஒரு வரி" இப்படி எழுதியிருந்தால்
நான் இப்படி மடையனாகி இருக்க மாட்டேன்.


நண்பன் ஒருநாளில் பலப்பல கவிதைகள் படைத்தார்.
"அய்யோ என் கணினி பழுது, என் பிணம் அழுதது, என் குருதி உறைந்தது
பதில் பதிக்க முடியவில்லையே" என தனித்தலைப்பு தந்தீர்கள்.
கணினி சரியானதும் என்ன நிவர்த்தி செய்தீர்கள்?

அறிவு உங்களுக்கு ஏராளம்
படைப்புத்திறன் எக்கச்சக்கம்
சுயமாய்க் கற்பித்துக்கொண்ட கர்வம்,
விமர்சனம் செய்யுங்கள் எனச் சொல்லிக்கொண்டே
அப்படி செய்தால் சீறுவது
இல்லை அழியுங்கள் எனப் புலம்புவது..
இவை நீக்குங்கள்..
இன்னும் பக்குவப்படுங்கள்.
ரசனைகளின் பரிமாணம் பெரியது
அவற்றின் நிர்ணயிப்பாளர் பதவிக்கு உங்களை யாரும் நியமிக்கவில்லை என உணருங்கள்..
இன்னும் உயர்வீர்கள்

மற்றவரை மதியுங்கள் மனதார (சொல்லால் அல்ல)
மதிக்கப்படுவீர்கள்!


முதலில் வெள்ளை நிலா விமர்சன வெப்பம் தாளாமல்
படைப்பதை நிறுத்துவதாய்ச் சொன்னீர்கள்.
நாங்கள் கெஞ்சியதால் மனமிரங்கி வந்தீர்கள்.

இங்கே மன்றத்தில் பல பதிவுகள் அதிக பதில் இல்லாமல்
போவது தற்செயலான ஒன்று.
அதுபோல் உங்கள் பதிவுகள் பதிலில்லாமல் இருந்த நிலையில்
"எல்லாரும் என்னை திட்டமிட்டு ஓரங்கட்டுகிறார்கள்"
என delusion of persecution கற்பித்துக்கொண்டவர் நீங்கள்.

"இளசு எழுதுவது வணிக எழுத்து, நான் எழுதுவது உயர்ந்த
இலக்கிய எழுத்து" என வாயாரப் புகழ்ந்தவர் தாங்கள்.
அதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். உண்மைதான்.
ஆனாலும் இரண்டு வகை எழுத்தும் இருந்தால்
நல்லதுதானே..முட்டாள்கள், வெகுஜனங்களுக்கும் வேடிக்கை காட்ட
என் போல் கோமாளி இருப்பது நல்லதுதானே என்றபடி
என் வியாபாரத்தை தொடர்ந்தேன்.

பின் கண்காணிப்பாளர் பதவியை நீங்களாக உதறி
நீங்களாக மன்றம் விட்டு போனீர்கள்...வருந்தினோம்.
உங்கள் சைக்கிள் ஓட்டத்தை நாங்கள் கிட்டிப்புல்லால்
குத்திவிட்டோம், தள்ளிவிட்டோம் என்றீர்கள்.
காயப்பட்டோம்.

மீண்டும் நீங்களாக வந்தீர்கள்.
"என் கோபதாபங்களை வேறு எங்கும் காட்டமுடியாமல்
மன்றத்தில் காட்டிவிட்டேன்" என்றீர்கள்.
(அதைக்காட்ட மக்கள் மனம் மகிழ வரும் இந்த பொதுமன்றம்தானா கிடைத்தது?)


உங்கள் மனக்குழப்பங்களை, மனச் சிதைவை,வீண் சந்தேகச் சேற்றை
சற்றும் தொடர்பில்லாத எங்கள் மீது பூசாதீர்கள்.

உங்களை ஊக்கப்படுத்தி நல்ல படைப்புகள்
மன்றத்துக்காக பெறவே விரும்புகிறேன்..
அது உங்கள் பலம். அதை இங்கே பயன்படுத்துங்கள்..

மற்ற உங்கள் அணுகுமுறைகள் உங்கள் பலவீனம்.
அவற்றை மன்றத்தில் காட்டாமல் கட்டுப்படுத்துங்கள்.

உங்களின், நட்சத்ரன், நண்பன் போன்றோரின் உயர்தர படைப்புகள்
லாவண்யா, பிஜிகே போன்றோரின் அறிவார்ந்த "வெகுஜன" ரசனைப் படைப்புகள்
என் போன்றோரின் ஊக்க சுண்டல் படைப்புகள்
எல்லாமே இங்கே வேண்டும்.

ஒரு சாரார் மட்டுமே மன்றம் இல்லை!
பல ரசனைகளும் வேண்டும்.

யாரையும் எதையும் அழிப்பது நிர்வாகத்தின் நோக்கமல்ல...
அதற்கா தளம் நடத்துவார்கள்?
ஆனால் மன்றத்தின் வளர்ச்சியைக் குலைக்கும் வண்ணம்
குதர்க்கம், கோள் சொல்லுதல்
தேவையின்றி மற்றவரை மட்டம் தட்டி புண்படுத்தல்
நிர்வாகத்தின் மேல் தேவையற்ற பொய் பிரச்சாரம்
இவற்றை களையாவிட்டால் அது நிர்வாகமும் அல்ல..

தமிழ் மன்றம்
தலைவர் இதன் இயந்திரம்
பப்பி இதன் ஓட்டுநர்
மற்ற படைப்பாளிகள் அனைவரும் எரிபொருள்!
பயனாளிகள் பயணிகள்!!

நல்ல நிலக்கரிகள் வேண்டும்..

தொடர் வண்டிக்காகவே நிலக்கரிகள்..
எவரையும் விட பயணம் பெரிது..

எந்த தனிமனிதனை விடவும் இயக்கம் பெரிது

இதை எனக்கும் சேர்த்தே சொல்லி முடிக்கிறேன்..

இக்பால்
16-02-2004, 03:49 AM
நானே நிறைய உள்ளர்த்தம் பார்ப்பேன். புரியவில்லை என்றால் அது கடவுள்
என்றாலும் என்ன என்று கேட்பேன். இளசு அண்ணாவின் விளக்கம் கேட்கும்
பொழுது நான் எல்லாம் ஒன்றும் இல்லை எனத் தோன்றுகிறது. இந்த மாதிரி
இந்த அளவு சிந்தித்தால் உடல் நலம் , மன நலம் பாதிக்குமே! உங்கள்
நலம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் அண்ணா.

ராம்பால் தம்பி... ஆதரவான சுருக்கமான பதில் கொடுத்து தொடர்ந்து
பங்களியுங்கள். கோபப்பட்டு வார்த்தைகளைத் தெளித்து விட்டு மன்றத்தை
விட்டு விலகி விட நினைக்க வேண்டாம்.

நீங்கள் மறுபடியும் மன்றம் பிரவேசித்ததில் மகிழ்ச்சியான உயிர்களில்
நானும் ஒருவன்.

-அன்புடன் இக்பால்.

rambal
16-02-2004, 03:41 PM
நான் எந்த உள்ளர்த்தமும் இல்லாது எழுதியது
ஒரே ஒரு வரிதான்..
கலைரசனை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது
கண்டு மகிழ்ச்சி..
இந்த வரியையைப் பிடித்துக் கொண்டு
உள் அர்த்தம் வெளி அர்த்தம் என்று சொல்லி ஏதேதோ காரணங்கள்
சொல்லி முதல் பதிவை பதிந்து ஆரம்பித்து வைத்தது அண்ணன் அவர்கள்தான்.
இதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
அதற்கு பதில் எழுதிய பொழுது நான் செய்த ஒரே ஒரு தவறு
இந்தப் பதிவை நீக்கிவிடுங்கள் என்று சொன்னதுதான். இது கோபத்தில்
வந்ததுதான். ஒத்துக் கொள்கிறேன். எந்த அர்த்தமும் இல்லாது எழுதியதை
அர்த்தம் கண்டுபிடித்து சொன்னதால் வந்த கோபத்தில் எழுதியது.

இதற்கு மீண்டும் பழைய கதைகள்
எல்லாம் சொல்லி மீண்டும் ஒரு பெரிய பதிவு..

சரி எல்லாம் சொன்னீர்கள்...
இதுவரை எப்போதும் என்னுடையப் படைப்பை மட்டும்தான்
பிரச்சினையானதாக கருதினீர்கள்..

இப்போது எனக்கு மனச்சிதைவு, மனக் குழப்பம் என்றெல்லாம் தனி நபர்
வசை பாடியது எந்த வகை நாகரீகம் என்று எனக்குத் தெரியவில்லை.
இளசு அண்ணன் என்பதை மீறி இதுவரை வேறு எதையும் நான் சொன்னதில்லை. ஒரே ஒரு முறை மட்டும் தான் திரு இளசு அவர்களுக்கு என்று
தனிமடல் எழுதினேன்.

உங்கள் எழுத்து வணிக எழுத்து என்று சொன்னது உங்களை
மட்டம் தட்டுவதற்காக சொன்னது அல்ல..
அந்த இடத்தில் உங்களைப் பெருமைப்படுத்துவதற்காகச் சொன்னதே..
அதையும் நீங்கள் இங்கு கொச்சைப்படுத்திவிட்டீர்கள்..

நண்பன் எழுதிய கவிதைகளுக்கு பதில் எழுத முடியாவிட்டாலும்
அதற்குப் பின் அவருக்காகத்தான் நண்பனின் ராஜபார்வையும் செங்கோலும் என்று எழுதினேன். அதில் அவரது அனைத்து நல்ல கவிதைகளையும்தான்
குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

சரி நடந்தவைகளை மறந்துவிட நான் தயார்.
இதுவரை நடந்தவைகளுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்...
உங்கள் பதில் என்ன?

இக்பால்
16-02-2004, 04:13 PM
ராம்பால் தம்பி...

1.சிலபேர் வெளியிலும் நல்லவர்கள். உள்ளுக்குள்ளேயும் நல்லவர்கள்.
இவர்கள் உன்னத மனிதர்கள். மனிதர்களுள் மாணிக்கம்.

2.சிலபேர் வெளியில் மோசமானவர்களோ என சந்தேகம் வரும் வகையில்
நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் உண்மையில் மிக நல்லவர்கள்.
இறைவன் படைப்பில் பெரும்பாலானோர் இந்த வகையில் அமைகிறார்கள்.
இயல்பான மனிதர்கள் எனச் சொல்லலாம்.

3.சிலபேர் வெளியில் நல்லவர்கள். உள்ளுக்குள் கெட்டவர்கள்.
இவர்கள்தான் உண்மையில் மோசமானவர்கள். நம்பிக்கை துரோகம்
என்ற வார்த்தைக்குரியவர்கள். ஆபத்தானவர்கள். இந்த மாதிரி மனிதர்களை
இனங்கண்டு எச்சரிக்கையுடன் தப்பித்து வாழ்வதுதான் வாழ்க்கையில்
நமக்கு ஒதுக்கப் பட்ட பந்தயம்.

4.சிலபேர் வெளியிலும் கெட்டவர்கள். உள்ளுக்குள்ளும் கெட்டவர்கள்.
இவர்கள் அதிகம் ஆபத்தில்லாதவர்கள். ஏனெனில் நாம் வெளியிலேயே
இனங்கண்டு விலகிக் கொள்ளலாம்.

இதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து பங்களியுங்கள். உங்களை நேசிக்கக்
கூடியவர்கள்தான் எல்லோரும் என்பதை (இளசு அண்ணா உட்பட)
உணர்ந்து இந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறி
புகழ் அடைவீர்கள். உங்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது இல்லை.
உங்களுக்கும் இளசு அண்ணாவுக்கும் உள்ள அறிவுக்கு முன் என் அறிவு
சிறியதாகத்தான் நான் உணர்கிறேன். தொடருங்கள்.

-அன்புடன் அண்ணா.

இக்பால்
16-02-2004, 04:20 PM
இளசு அண்ணா... நீங்கள் பெரும்பான்மையான நேரங்களில் ஒன்றிலும்,
சில நேரங்களில் இரண்டிலும் வருகிறீர்கள்.

மூன்றும் நான்கும் உங்களால் முடியாது...உங்கள் குணம் ஒத்து வராது
என எனக்கு நன்றாகப் புரிகிறது.

ராம்பாலுக்கு அழகான, ஆறுதலான பதில் தருவீர்கள் என என் வேண்டுகோள்.
நம்பிக்கை. இது எனது 3000வது பதிவு. உங்களுக்காகப் பதிந்ததில்
ஒரு பெரிய சந்தோசம்.

-அன்புடன் இளவல்.

இளசு
16-02-2004, 06:35 PM
நன்றி இளவல் இக்பாலுக்கு

இளவல் ராம்பாலுக்கு
இங்கு நாம் அனைவரும் இன்னும் ஒற்றுமையுடன் இன்னும் அன்புடன் கலந்துறவாட வேண்டுமென்பதே என் ஆசை. இதை இதை தவிர்ப்பது பரஸ்பர
மதிப்பை வளர்க்கும் என நான் கூறிய முறை கூரிய முறையாய் கீறியிருப்பின்
மன்னிக்க வேண்டுகிறேன்.

யார் மனதையும் உங்களை அறியாமல் கூட புண்படுத்தாதீர்கள் எனச் சொல்லவந்ததில், உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இந்த விவாதத்தைப் பொருத்தவரை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

இக்பால்
17-02-2004, 03:31 AM
இளசு அண்ணாவுக்கு முதலில் அன்பு கலந்த நன்றி கூறி, மேலும் அண்ணா
மற்ற இளையவர்களிடம்( நான் மற்றும் ராம்பால் உட்பட) மன்னிப்பு கேட்பதை
எதிர்பார்ப்பதற்கும் அப்பாற்பட்டவர், கண்டிக்கும் உரிமை உள்ளவர் என்பதை
கூறி நானும் இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

-அன்புடன் இக்பால்.

பாரதி
17-02-2004, 01:12 PM
தமிழ்மன்றக் குடும்பத்தில் ஏற்பட்ட மிகச்சிறிய இந்த மனக்கசப்பும் இத்துடன் மறைந்து விடட்டும். என்றைக்கும் ஆரோக்கியமான பதிவுகளாலும், பதில்களாலும் இம்மன்றம் சிறந்து விளங்கட்டும். அன்பு மிகுதியால் வந்த கோபத்தை மனதில் கொள்ளாமல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் விளங்கும் உங்கள் அனைவரையும் என் மனதார பாராட்டுகிறேன்.

natchatran
19-03-2004, 09:34 AM
ராம்பாலின் இந்தப்பணி அளப்பரியது...யாரும் எளிதில் செய்ய இயலாதது எனக்கு மிகவும் பிடித்தவை ஜென் கவிதைகளும்,கதைகளும்...இரண்டு ஜென் கதைத்தொகுப்புகள் வாசித்திருக்கிறேன்.கொஞ்சமாய் கவிதைகளும்...ஓஷோ வழியாகவே நான் ஜென்னை அறிந்துகொண்டேன்.தாவோவையும்,கிருஷ்ணரையும்,புத்தரையும்கூட ஓஷோதான் எனக்கு அடையாளம் காட்டினார்...
வாழ்க்கையைக் கலையாக,மகிழ்வுப்பெருக்காக,கொண்டாட்டமாக வாழமுடியும் என்பதை எனக்கு ஜென் கற்றுக்கொடுத்திருக்கிறது.ஜே.கே.,ரமண மஹரிஷி ஆகியோரும் என்னுள்புகுந்து என்னை ஆகர்ஷித்து ஆட்டிவைக்கிறார்கள் இன்றுவரை.இதையெல்லாம் நாமாகவேதான் கற்கவேண்டும்:
புல் தானாகவே வளர்கிறது....

ராம்பால் தனக்குக்கிடைத்துள்ள ஆங்கிலத் தொகுப்பை தயவுசெய்து செராக்ஸ் எடுத்து எனக்கு அனுப்பிவைக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.இல்லையேல், இ-மெயில் வழியாக அனுப்பவும்...உங்களுக்கு நன்றாய் வருகிறது மொழியாக்கம்...தொடருங்கள்...நானும் மொழியாக்கத்தில் ஆர்வம் உள்ளவன் தான்...இப்போது போர்ஹே கவிதைகளை ஆங்கிலம் வழியாக மொழியாக்கம்செய்ய முயன்றுவருகிறேன்...என் முகவரி:ப்ளாட் எண் 56,செவ்வந்தி தெரு,திருநகர்,சீனிவாசபுரம்,தஞ்சாவூர்-613009 email: natchatran@yahoo.com
அப்புறம்....என் சில கவிதைகளில் கொஞ்சம் ஜென் நெடி உண்டு என்பது என் அபிப்பிராயம்.
வேறென்ன ராம்பால்?
தொடருங்கள் மனம் தளராமல்....ரசிக்க நாங்கள் இருக்கிறோம்,இக்பால்,இளசு அண்ணாக்களும்.

natchatran
19-03-2004, 09:36 AM
இளசு அண்ணா,
உங்கள் பதிவுகளால், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடிகிறது...புதியவனான நான்,ராம்பாலுக்கும் உங்களுக்கும் நடக்கும் சண்டையை ஒரு ரசிக்கிறேன்...நாமெல்லாம் நல்லா சண்டைபோடுவோம்,பிறகு....நல்லா உறவுகொண்டாடுவோம்...
வாழ்வின் நியதி அதுதானே?சரிதானே இக்பால் அண்ணா?என்ன ராம்பால்?சரிதானே?

kavitha
15-04-2004, 09:24 AM
ராம்பால் அவர்களின் இன்னொரு முத்தான பதிப்பாகவே இதை கருதுகிறேன்.
மீண்டும் இதை தொடர வேண்டுகிறேன்.