PDA

View Full Version : பொய்யும் மெய்யும் (சிறுகதை)



gnanam51
05-10-2018, 03:04 PM
மாரி மழை நேரகாலத்தோடு, மேளதாளத்துடன் வந்து விட்டதோ என்று அவனுக்குள் நினைக்கத் தோன்றியது. தமிழுக்கு இன்னும் ஐப்பசி பிறக்கவில்லை. ஆனால் ஆங்கில மாதம் ஒக்டோபர் பிறந்து மூன்றாம் நாள் வானம் பொத்துக் கொண்டாற்போல மழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது. “ஐப்பசி பிறந்தால் அடைமழை” என்று யாழ் மண்ணில் சொல்லப்படுவதுண்டு. ஆனால் தமிழுக்கு ஐப்பசியே பிறக்காமல், அடைமழை பெய்ய ஆரம்பித்து விட்டது வசீகரனுக்கு வித்தியாசமாக இருந்தது. சிஙகப்பூரில் 8 வருடங்கள் வேலை செய்துவிட்டு, கடந்த ஒன்றரை வருடங்களாக அவன் ஊரோடுதான் இருக்கிறான். கடந்த வருடம் மழை நொண்டி நொண்டி மார்கழி பிறக்கும்போதுதான் முற்றத்தை மிதித்தது. அதற்கு முன்னைய வருடமும் அப்படித்தான்.!..
மழை முகத்தில் பலமாக அடித்து நனைத்தது. மிக நிதானமாக தனது ஸ்கூட்டியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, தெருவில் தனியனாக அவன் நண்பன் சாந்தன் பஸ்ஸூக்காக காத்து நிற்பது தெரிந்தது. சட்டென அவன் அருகே ஸ்கூட்டியைக் கொண்டு சென்று நிறுத்தினான்.கீழேஇறங்கி, தன்னிடம் கைவசமிருந்த இரண்டாவது ஹெல்மெட்டைக் கொடுத்து அணிவித்துவிட்டு, மீண்டும் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான்.
“ரவுணுக்குத்தானே சாந்தன்?”
“ ஓம் ஓம்.. உனக்கு வீணாக் கஷ்டம் குடுத்துப் போட்டன்”
“ நோ நோ சாந்தன்..”
மழையின் வேகம் அதிகமாக இருக்க, பேச்சை நிறுத்தி , அதி கவனத்தோடு ஸ்கூட்டரை ஓட்ட ஆரம்பித்தான் வசீகரன்.
---------------------------------------------
வசீகரனும் சாந்தனும் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு உணவகத்தில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் எதற்காக யாழ்ப்பாணம் வந்தார்களோ அந்த வேலை முடிந்துவிட்டது. வேலையை முடித்துக் கொண்டு உணவகத்தில் சந்தித்துக் கொண்டால், இருவரும் ஒன்றாக வீட்டுக் போய்விடலாம் என்று முன்பே வசீகரன் சாந்தனுக்குச் சொல்லியிருந்தான். வசீகரனின் சொந்த இடம் சுண்ணாகம். சாந்தனுக்கோ இணுவில் இருவரும் முன்பு ஒன்றாகப் படித்தவர்கள். நல்ல நண்பர்கள்.
வெளியே இன்னும் மழை பெய்து கொண்டுதான் இருந்தது. துாறல் தணிந்ததும் போகலாமென்று வசீகரன் சொல்லியிருந்தான்..
“லாவண்யா பாடு எப்படி?” என்று மெல்லிய சிரிப்போடு வசீகரனைக் கேட்டான் சாந்தன்.
வாய்க்குள் மென்று கொண்டிருந்த வடையை விழுங்கி விட்டு, ஒரு மெல்லிய புன்முறுவலோடு, வசீகரனும் பதிலளிக்கத் தொடங்கினான்.
“சாந்தன் எங்கிட காதல் வன் சைட் கோல் போல இழுபடுது.. நம்ம வீட்டில பிரச்சினை இல்லை. லாவண்யா பக்கம்தான் இழுபறி. லாவண்யாயாட அப்பாவுக்கு இன்ரெஸ்ட் இல்லை. வாத்தி இழுத்தடிக்குது. நான் என்ர அம்மாவோட நேரில போய்க் காணலாம் எண்டிருக்கிறன்?”
“ அட உனக்கென்ன குறைச்சல்? மாப்பிள்ளை நீ எதுக்குப் போய் பொம்பிளையை இரக்க வேணும்? நீயென்ன நொண்டியா குருடா?”
வசீகரன் ஒரு பெமூச்செறிந்தான்.
“ சாந்தன் அதுவல்ல பிரச்சினை? எனக்காக இவ்வளவு காலமும் காத்திருந்தவள் லாவண்யா. முடிச்சால் அவர்தான் என்று ஒற்றைக் காலில நிற்கிறாள். நானும் அவள்தான் என்ர மனுசியெண்டு எப்பவோ முடிவெடுத்திட்டன்.. லாவண்யா கேட்டுக் கொண்ட மாதிரி நேரில அம்மாவோட போய் பெண் கேட்கிறதை விட வேற வழியில்லை சாந்தன்”
வெளியே இலேசான துாறல்.. இருவரும் எழுந்தார்கள்...
----------------------------------
இவர்கள் காதல் பற்றி கொஞ்சம் விரிவாகக் சொல்வது வாசகர்களுக்கு தெளிவான கதையைத் தரலாம்.
வசீகரனும் லாவண்யாவும் நீண்ட காலக் காதலர்கள். ஒரு ரியூசன் சென்ரரில் ஆங்கிலம் கற்கப் போய் , ஏற்பட்ட நட்பு பின்பு காதலாகியது. இனக் கலவரத்தில், ஒரு விமானக் குண்டு வீச்சின் போது, அப்பாவை அநியாயமாகப் பறிகொடுத்தவன் வசீகரன் தனது 22வது வயதில் ஒரு சிங்கப்பூர் நிறுவனத்தில் வசீகரனுக்கு ஒப்பந்த அடிப்படையில் நல்ல வேலை, நல்ல சம்பளத்தோடு கிடைத்தபோது, லபக்கென சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொண்டான் அவன். லாவண்யாவின் தந்தை தொழிலால் பாடசாலைப் பிரின்ஸிப்பல். கொஞ்சம் கண்டிப்பானவர். தன் செல்வாக்கால் எப்படியோ மகளை ஓரு ஆசிரியையாக அரசாங்க பாடசாலையொன்றில் சேர்த்து விட்டார். அவளுக்கு உயர்தர வகுப்பில் கிடைத்த நல்ல ரிசல்டும் இந்த வாய்ப்புக்குக் கைகொடுத்தது. கணிதத்தில் புலியாக இருந்த அவளுக்கு கணித ஆசிரியை பதவி மிகவும் பிடித்திருந்தது. அவள் அம்மாவைச் சிறுவயதில் இழந்தவள். ஏதோ பெயர் தெரியாத வியாதியொன்று, அவள் அம்மாவை அள்ளிக் கொண்டு போய்விட்டது. அவள் காதல் அப்பாவுக்கு தெரியும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் எதற்காக வசீகரனை இவருக்குப் பிடிக்கவில்லை என்று எப்பொழுதுமே அவள் குழம்புவதுண்டு. பெயருக்கேற்ற வசீகரன் அவள் காதலன். சிங்கப்பூரில் கைநிறைய உழைத்தவன். இனியும் உழைக்கப் போகின்றவன். நல்ல குணசாலி. சிகரெட் மதுப் பழக்கம் அடியோடு இல்லை.ஏன் அப்பா இன்றுவரையில் விட்டுக்கொடுக்காமல் பேசிவருகிறார் என்பது லாவண்யாவை வருத்திய விடயம். அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக தன்னை ஆசையோடும், அறிவோடும் வளர்த்த தன் தந்தைக்கு எதிராகப் பேசும் துணிவு அவளுக்கு இல்லை. அதே சமயம் நல்ல குணசாலியான வசீகரனை அவளுக்கு நன்றாகப் பிடித்திருந்தது. ஒருமுறை வீட்டுக்கு அம்மாவோடு வாருங்கள் என்று அவள்தான் ஒரு தடவை வசீகரனிடம் சொல்லியிருந்தாள். மீண்டும் சிங்கப்பூர் பயணமாகும் திட்டம் வசீகரனிடமிருந்தது. ஆனால் லாவண்யாவின் அரச வேலையை துாக்கியெறிய அவனுக்கு விருப்பமில்லை. எனவே திருமணத்தை முடித்து விட்டு தனியனாகப் போய்வருவது என்று லாவண்யாவுக்கு சொல்லியிருந்தான்....................
ஒரு நல்ல நாள் பார்த்து, தாயும் மகனும் லாவண்யா வீட்டுக்குப் போவது என்று தீர்மானமாயிற்று. லாவண்யா தன் அ்ப்பாவிடம் இதற்கான அனுமதியையும் கேட்டு வாங்கியிருந்தாள். தனக்கு எந்தவிதக் குறையும் வைக்காத தன் அப்பாவின் மனதை எந்தக் காரணம் கொண்டும் நோகடிக்கக் கூடாது என்பதில் லாவண்யா குறியாக இருந்தாள். இன்றைய வாழ்க்கை அவர் போட்ட பிச்சைதானே?
வசீகரன் வீட்டுக்கு வரும்போது, அவனது ஜாதகக் குறிப்பையும் கூடவே கொண்டுவரும்படி தன் மகளைக் கேட்டிருந்தார் தந்தை. இது நல்லதற்கா அல்லது பொல்லாததுக்கா என்று தெரியாமல் குழம்பத் தொடங்கியிருந்தாள் லாவண்யா. மாப்பிள்ளையில் பிடிப்பு இல்லையென்கிறார். பின் எதற்காக வசீகரனின் ஜாதகக் குறிப்பைக் கேட்கிறார்?
இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். லாவண்யாவின் தந்தை பிரின்ஸிப்பல் மாணிக்கவாசகத்தை பலர் “சாத்திரி வாத்தி” என்றுகூட சொல்லிக் கொள்வதுண்டு. நேரில் அப்படிச் சொல்லாவிட்டாலும், முதுகுப் பக்கமாக அவரை இப்படி விளிப்பவர்களும் இருக்கிறார்கள்.. பதவி ஓய்வு பெற்ற பின் முழுநேரப் பணியாக இதைத் தொடரப் போகின்றார் என்றும் அரசல்புரசலாகப் பேசிக் கொள்கிறார்கள். இவருக்கு குறிப்புகள் பார்த்து ஜாதக பலன்களைச் சொல்லும் சாதுர்யம் உண்மையாகவே இருக்கின்றது. பல நெருங்கிய நண்பர்களுக்கு இவர் இந்த விடயத்தில் உதவியும் செய்திருக்கிறார்....
எதுக்குமே பிடிகொடுக்காத மனிஷன் எதுக்கு குறிப்புக் கேட்குது என்று வசீகரனின் தாய் குழம்பினாலும், எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிக் கொண்டு, அந்த ஞாயிறன்று மகனோடு கோண்டாவிலுக்குப் புறப்பட்டாள்.வழியில் வசீகரன் இணுவில் பிள்ளையார் கோவிலடியில், ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, தாயையும் அழைத்துக் கொண்டு சாமி கும்பிடச் சென்றான்..
“வருங்கால மாமனாரின் கல்மனம் இளகட்டும்” என்று வசீரன் பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டான். “பிள்ளையாரப்பா நல்ல வழியைக் காட்டு” என்றது அவன் தாயின் பிரார்த்தனையாக இருந்தது.
முதற் தடவையாக தன் வீட்டுக்கு வந்தவர்களை , வாசலுக்கு வந்து அன்போடு வரவேற்றாள் லாவண்யா. இன்றுதான் லாவண்யாவை முழுதாகப் பார்க்கும் வாய்ப்பு வசீகரனின் தாய்க்குக் கிடைத்திருக்கின்றது. தழையத் தழைய அழகாகச் சேலையுடுத்தி, தங்க விக்கிரகம் போல் நின்ற மருமகளின் அழகு, வசீகரின் தாயை வசீகரிக்கத் தவறவில்லை. தன் மகனுக்குப் பொருத்தமானவள்தான் என்று அவள் நினைத்துக் கொண்டாள். அழகுச் சிலையாக தங்களை இன்முகத்தோடு வரவேற்ற தன் காதலியைப் பார்க்க, வசீகரனுக்குப் பெருமையாக இருந்தது. இந்த அழகி என்னுடையவள் என்று இறுமாப்புடன் அவன் மனம் சொந்தம் கொண்டாடவும் ஆரம்பித்தது.
மிக நேர்த்தியாக இருந்த முன் ஹாலில் வைக்கப்பட்டிருந்த சோபாவில் தாயும் மகனும் உட்கார்ந்தார்கள். ஒரு பெண்ணிருக்கும் வீடு என்பது, அந்த ஹாலில் பொருட்கள் இருந்த நேர்ததியைக் கொண்டு கணிக்க முடிந்தது.
அவர்களுக்கு எதிரே புன்முறுவலோடு லாவண்யா உட்கார்ந்தாள். கம்பீரமான தோற்றத்தோடு, முகத்தில் குறுநகையுடன் உட்கார்ந்திருந்த வசீகரன் பக்கம் ஒரு கணம் அவள் பார்வை ஓடிற்று. கரும்பு தின்னக் கூலியா என்பதுபோல, இந்த ஆணழகனை ஏன் அப்பாவுக்கு இன்னமும் பிடிக்கவில்லை என்று தன்னைத்தானே ஒரு தடவை கேட்டுக் கொண்டாள்.
யாரோ செருமினார்கள்.
அவளுக்கு அப்பா வருவது தெரிந்தது. மெல்ல இருக்கையிலிருந்து எழுந்தாள் அவள் தோளில் கைவைத்து உட்காரும்படி அவள் தந்தை கண்களால் பணித்தார். அவளும் உடகார்ந்து கொண்டாள்.
“வணக்கம் சேர்” என்று எழுந்து , லாவண்யாவின் தந்தை முகம் பார்த்து கைகூப்பினான் வசீகரன். அவன் தாயும் புன்முறுவலோடு வணக்கம் தெரிவித்தார்.
முதலில் அவன் தாய்க்கு பதில் வணக்கம் சொல்லியவர், வசீகரன் பக்கம் திரும்பி வணக்கம் சொல்லிவிட்டு“ உட்காருங்க தம்பி” என்று கேட்டுக் கொண்டு, தானும் மகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இந்தச் சந்திப்பு எதில் போய் முடியப் போகிறதோ என்ற அங்கலாய்ப்பு, லாவண்யா முகத்தில் படர்ந்திருந்தது
ஆளுக்கு ஆள் சுகம் விசாரிக்கப்பட்டது. நாட்டு நடப்புகள் சிலவும் பரிமாறப்பட்டன. மெல்ல எழுந்து சென்ற லாவண்யா, சுடச்சுட தேநீருடன் திரும்ப வந்து எல்லோருக்கும் பரிமாறினாள்.
இந்த்த் தடவை ஜாதகக் குறிப்பு கைமாறியது. அதை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றவர் அரை மணி நேரம் கழித்து, மீண்டும் ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டார்.
“குறிப்பை நல்லாப் பார்த்தனான்” என்று அவர் பேச்சு தொடங்கியபோது, எல்லோரது பார்வைகளும் அவர்மீது நிலைத்தன.
“தம்பிக்கு இரண்டு இடத்தில கைகூடாது. மூணாவது இடத்திலதான் சரிவரும்”
மறுபேச்சுப் பேசாமல் அவர் முகத்தையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“என்ன சொல்ல வாறன் எண்டா, தம்பிக்கு இந்த முதல் காதல் சரிவராது எண்டு சொல்லுது குறிப்பு”
ஒருகணம் நிதானித்து, வசீகரனின் பக்கம் பார்வை ஓடிற்று.
“நான் கொஞ்சம் பேசலாமே சேர் ”? என்று கேட்டான் வசீகரன்.
“யேஸ் யேஸ் வை நொட்? ” என்றார் பிரின்ஸிபல் புன்முறுவலுடன்.
“ வருங்கால மாமாக்கு ஏன் ஒளிப்பு மறைப்பு? எனக்கு லாவண்யா “பெர்ஸ்ட் லவ்” இல்லை சேர். லாவண்யாவுக்குமுதல், ஒருத்தியை ஒருதலையா விரும்பினேன்.. சிங்கப்பூரிலயும் எனக்கு ஒரு“ ஃபிரெண்ட்ஷிப்” தவறிப் போச்சு. எண்ணுக் கணக்கில பார்த்தா வெற்றிகரமான மூணாவது காதல்! “யு ஆர் கரெக்ட் சேர்” என்று சொல்லிவிட்டு, தன் காதலி பக்கம் திரும்பி மெல்லக் கண்சிமிட்டவும் தவறவில்லை அந்தக் காதலன்! அறத்தின் காவலன் என்று போற்றப்படும் தர்மனே “அசுவத்தாமன் இறந்தான்” என்ற ஒரு யானை போர்க்களத்தில் இறந்த கதையை ஒரு சுத்த வீரனின் தலையில் போட மெய்யான ஒருபொய் சொல்ல அனுமதிக்கப்பட்டிருக்க, ஏன் வசீகரன் அவன் காதலியைக் கைப்பிடிக்க, ஒரு பொய் சொல்ல அனுமதிக்கக் கூடாது?
-நிறைவு-
03.10.18

ஏ.ஜே.ஞானேந்திரன்

dellas
06-11-2018, 11:52 AM
இங்கு கண்டிப்பாக பொய் சொல்லலாம், குறிக்கோள் நன்மை பயக்கும் எனில்.
அருமையான பேச்சுத்தமிழ். சரளமான நடை. கதை படிக்கையில் ஒருவித மகிழ்ச்சி மனதில் இழையோடுவதை உணர்கிறேன்.

வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள், ஞானேந்திரன்.