PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதைகள்...



Nanban
01-02-2004, 09:33 AM
நான்
அழாமல் இருப்பேன் அப்பா
அழுது கொண்டே
சொன்ன மகளின்
கண்ணீரைக் கண்ட
காதுகளுக்கு
கசிந்துருகி நன்றி சொன்னது
கண்கள்....

Nanban
01-02-2004, 01:52 PM
பெரிய அளவில் சாதனைகள்
எதுவுமில்லை -
என் பெயருடன்
ஒட்டிக் கொண்டு......

சுயசரிதை எழுத
என்ன இருக்கிறது என்னிடம்........?

இல்லாத பொழுது
இருக்கிறதைக் கொண்டு வாழ்ந்ததும்
இருக்கிற பொழுது
இல்லாதவருக்குக் கொடுத்து
வாழ்ந்ததையும் தவிர
வேறென்ன இருக்கிறது.....

சுயசரிதை எழுத......?

Nanban
01-02-2004, 02:03 PM
புத்தகத்தின் முதல்
பக்கம் போல
மனம் காலியாகக் கிடக்கிறது.....

சிலருக்கு பெயர் எழுதி
உரிமை கொண்டாட....

சிலருக்கு தங்கள்
அன்பை நிலைநிறுத்தி
நினைவில் நீங்கா இடம்பெற....

சிலர் புத்தகங்களில்
அது என்றுமே காலியாக...

என் கவிதைகள்
எப்பொழுதும் போல்
இரண்டாம் பக்கட்திலிருந்து
ஆரம்பிக்கின்றன....

முதல் பக்கத்தைக் கடந்து
நீ
வந்துவிடும் பொழுது..........

முத்து
01-02-2004, 03:30 PM
அருமை .. நண்பன் அவர்களே ..
தொடருங்கள் ...

puppy
01-02-2004, 06:09 PM
வேலைக்கு சேர்ந்துட்டீங்க போல நண்பனே......கொடுங்க நிறைய

இளசு
01-02-2004, 11:05 PM
நல்ல கவிதைகள் நண்பன்.

முதல் கவிதையும் அண்மை பயணமும்...
மனம் கனக்கிறது..

Nanban
03-02-2004, 05:09 PM
நன்றி முத்து, இளசு, பப்பி.

எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் செட்டிலாகி விடும். பின்னர் நிறைய எழுத முடியும் என்றே நினைக்கிறேன்....

நிலா
03-02-2004, 05:11 PM
அருமையான கவிதைகள் நண்பன்!
நலமா?தொடர்ந்து கொடுங்கள்!
நன்றி!எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

Nanban
03-02-2004, 05:25 PM
உங்களை மாதிரி அன்பு மிக்க நண்பர்களின் பிரார்த்தனை இருக்கும் பொழுது, அனைத்தும் நலமாகவே இருக்கும், நிலா..... நன்றிகள்..........

Nanban
05-02-2004, 03:21 PM
வானம்
காலியாகக் கிடக்கிறது

சிறகுகள் விரிக்கும்
பறவைகள்
பறக்காததினால்
அப்படிட் தோன்றலாம்....

முதுகில் அடிக்கும்
அனலின் வீச்சில்
ஓடிவிட்ட மேகங்கள்
தந்த வெறுமையால் இருக்கலாம்....

முடிவில்லாது நீளும்
நாட்களைக் கொண்ட
பூமத்திய ரேகை
நாடானாதாலும் இருக்கலாம்

இயற்கையே அஞ்சி
ஒளிந்து கொண்ட நாளில்
வானம் காலியாகக் கிடக்கிறது -
கீழே நிகழும்
மனிதர்களின் வாழ்க்கையைப்
பாத்துக் கொண்டு.....

Nanban
05-02-2004, 03:28 PM
உன் தேவைகளை
உணர்ந்து கொள்ள
எந்த ஒரு முயற்சியும்
செய்ததில்லை நான்...

உன்னைப் பாராட்டவும்
முயற்சிகள் ஏதும்
செய்ததில்லை நான்.....

உன் தேவையை
என்றாவது
உணர்ந்திருப்பேன் என்றால்
அது, எனது
சில நிமிட நேர
இயற்கைட் தேவைகளின்
உந்துதலினால் மட்டுமே
இருந்திருக்கக் கூடும்.....

உன் தேவையை
உணராத நான்
உனக்கு
நன்றி சொல்ல மட்டும்
எப்படி முயற்சித்திருக்கக் கூடும்.....?

எல்லா தேவைகளையும்
காசு கொடுத்தே
வாங்க வேண்டும் என்ற
இன்றைய வாழ்வின்
நிதர்சனத்தில்
மனம் முழுக்க நிரம்பி வழிகிறது -
உனக்கான,
உன்னிடம் சொல்லப்படாத நன்றிகள்......

இளசு
05-02-2004, 11:13 PM
சில நன்றிகள் உய்த்துணர மட்டுமே
சொல்லாத சொல்லுக்கு விலையேதுமிலை நண்பன்..

பாராட்டுகள் உணர்ந்து வடித்த கவிதைகளுக்கு

kavitha
06-02-2004, 03:43 AM
1. பாசம்
2. என்ன இருக்கிறது என்னிடம்?
3. கடந்து போனாய்
4. வெறுமை
5. சொல்லாத நன்றிகள்

தலைப்புகள் சரியா?
(அதிகப்பிரசன்கி தனம் என்றால் மன்னிக்கவும்)
இன்னும் நிறைய பக்கங்கள் எதிர் நோக்குகிறோம் நண்பரே!
படையுங்கள்

karikaalan
06-02-2004, 05:05 PM
நண்பன்ஜி

சிறப்பான வரிகள்; கோர்வைகள்; கவிதைகள். புண்கள் ஆறும் நாள் தொலைவில் இல்லை.

===கரிகாலன்

நிலா
06-02-2004, 05:14 PM
எல்லா தேவைகளையும்
காசு கொடுத்தே
வாங்க வேண்டும் என்ற
இன்றைய வாழ்வின்
நிதர்சனத்தில்
மனம் முழுக்க நிரம்பி வழிகிறது -
உனக்கான,
உன்னிடம் சொல்லப்படாத நன்றிகள்......


அருமை நண்பரே!
எளிதாகக்கிடைத்தால் அதன் அருமை,அர்த்தம் புரிவதில்லை!வாழ்த்துகள் எல்லாம் நல்லபடியாக நடக்க!

Nanban
07-02-2004, 05:28 PM
இளசு, kavitha, karikaalan, நிலா - அனைவருக்கும் நன்றிகள்...

கவிதா கொடுத்த தலைப்புகள் நன்றாகத் தான் இருக்கின்றன...

வாழ்க்கை இங்கு நன்றாகத் தான் போய்க்கொண்டு இருக்கிறது - சில தமிழ் மன்ற நண்பர்களின் அன்பினால்.....

பாரதி
07-02-2004, 05:48 PM
அன்பு நண்பரே....
புதிய வாழ்க்கை புதிய பரிமாணங்களையும், புதுக்கவிதைகளையும் கொடுத்திருக்கிறது போல... பாராட்டுக்கள்... எண்ணம் எல்லாம் ஈடேற வாழ்த்துக்கள்.

Nanban
07-02-2004, 05:50 PM
நன்றி பாரதி, வந்து விட்டீர்களா.... உங்களை சந்திக்கக் காத்திருக்கிறேன்...

பாரதி
07-02-2004, 05:57 PM
வரும் 10ம் தேதி பணியில் சேர வேண்டும். வந்ததும் உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன். சுகம்தானே..?

Nanban
07-02-2004, 06:04 PM
நலமே....

இசாக்கும், அசனும் உங்களைப் பற்றிய ஏராளத் தகவல்களைக் கொடுத்து பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டனர். வந்ததும் தகவல் கொடுங்கள்...

பாரதி
07-02-2004, 06:07 PM
:D :D :D

Nanban
07-02-2004, 06:23 PM
சில சமயங்களில் பல காலம் பழகி விட்ட உணர்வு தோன்றி விடுவது உண்டு. அப்படி தான் நீங்களே உங்களைப் பற்றிச் சொன்னதாக சொல்லி விட்டேன் போலிருக்கிறது....

Nanban
06-04-2004, 06:24 PM
கண்மூடிக்
கிடக்கும் சுகம் -
தனிமையின்
இனிமையால்
மட்டுமல்ல -
இமைகளின் மீது
தடவப்பட்டிருக்கும்
உன் நினைவாலும் தான்....

சுகந்தப்ரீதன்
19-02-2008, 09:51 AM
எல்லா தேவைகளையும்
காசு கொடுத்தே
வாங்க வேண்டும் என்ற
இன்றைய வாழ்வின்
நிதர்சனத்தில்
மனம் முழுக்க நிரம்பி வழிகிறது -
உனக்கான,
உன்னிடம் சொல்லப்படாத நன்றிகள்......

அப்பட்டமான உண்மை...!
அதை அப்படியே கவிதையில் வடியவிட்ட உங்கள் திறமை..!!
நான் சொல்லாமல் போன நன்றிகள் எத்தனையோ...? இப்போதே சொல்லிவிடுகிறேன் என் நன்றியை உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்..!
நன்றி நண்பரே...!!


கண்மூடிக்
கிடக்கும் சுகம் -
தனிமையின்
இனிமையால்
மட்டுமல்ல -
இமைகளின் மீது
தடவப்பட்டிருக்கும்
உன் நினைவாலும் தான்....

தனிமையிலே இனிமை காணுவது என்பது இதுதானோ..?!
வாழ்த்துக்கள்...மென்மையான நினைவுகளை நீவியமைக்கு..!!