PDA

View Full Version : அர்த்தம்



lenram80
01-06-2017, 01:11 PM
இதோ இந்த ஏரிக் கரையில் தான் நானும் என் அகல்யாவும் கவலையின்றி திரிந்து பறந்து வாழ்ந்து வந்தோம். எங்களின் ஒரே செல்ல மகள் செல்லம்மா.பிறந்து 4 வாரம் ஆகிறது. போய் கட்டிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றால் "ஆ..ஆ..." என்பாள். பாவம் பசியோடு இருப்பாள் போலிருக்கிறது.

அகல்யாவின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த ஏரியை நம்பித் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒருபோதும் கோடை காலத்தில் கூட வற்றியது கிடையாதாம். யார் செய்த பாவமோ? கடந்த 5 வருடங்களாக கோடை மற்றுமன்றி வருடத்தில் பாதி நாட்கள் தண்ணீர் இன்றி வற்றிக் கிடக்கிறது. எங்களையும் சேர்த்து பல குடும்பங்கள் இந்த இடத்தை விட்டு காலி செய்து கொண்டு வேறொரு இடத்திற்கு சென்று விட்டோம்.

நான் என் வீட்டில் என் கூத்தும் கும்மாளமுமாய் என் அண்ணனுடன் வளர்ந்தேன். நாங்கள் பெரியவனாய் ஆனதும் வீட்டை விட்டு வெளியேறி அம்மா, அப்பாவை விட்டு விட்டு தனியாக வாழ வேண்டும் என்பது எங்களின் மரபாம். என்ன முட்டாள் தனமான மரபு? யார் இதை மரபாக கடைபிடித்தது என எனக்குப் புரியவில்லை. என் அப்பா தான் என்னை சமாதானப் படுத்துவார். நாளை நாங்கள் இந்த உலகை தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மரபை கடை பிடிக்கிறோமாம். எந்த நாள் வரக் கூடாது என வேண்டிக் கொண்டிருந்தேனோ அந்த நாள் வந்தது... நானும் என் அண்ணனும் ஆளுக்கு ஒரு திசை நோக்கி வீட்டை விட்டு பிரிந்து சென்றோம். அப்படி வரும் போது தான்.. நான் இந்த ஏரிக்கு வந்தேன். ஏரி நீர் நிரம்பி சிலு சிலுவென இருந்தது. நீண்ட நேரம் பறந்து வந்ததில் பசி வயிற்றைக் கிள்ளியது.

தண்ணிருக்கு ஒரு அடி ஆழத்தில் ஒரு மீன் போவதை பார்த்தவுடன் அதை நோக்கி பறந்து வந்தேன். நீரின் உள்ளே சென்றதும் எதன் மீதோ 'தொம்' என்று மோதுவது மாதிரி இருந்தது. எதன் மீது மோதுகிறோம் என்று நிதானிப்பதற்குள் ஒரு நீள அம்பு ஒன்று என் மேல் பட்டது. நான் பார்த்த அதே மீனைத் தான் அகல்யாவும் பார்த்து இருக்கிறாள். அவளும் அதை கவ்வ என்னை விட ஒரு கனப் பொழுது முன்னதாக பறந்து வந்திருக்கிறாள். நான் உள்ளே சென்றதும் மீனை கவ்வாமல் அவளைத்தான் நான் முட்டி இருக்கிறேன். இதை பார்த்துக் கொண்டிருந்த அவளின் அப்பா நான் அவளை என்னவோ செய்யப் போகிறேன் என்று என்னை தன் அம்பு போன்ற அலகால் குத்தியுள்ளார் என்பதை நீரை விட்டு வெளியே வந்து ஆற அமர நடந்ததை ஒன்று சேர்த்த போது தான் எனக்கு முழுதும் புரிந்தது. அப்படித் தொடங்கிய எங்களின் முதல் ஸ்பரிசம் பின் செல்லம்மாவில் வந்து முடிந்தது.

நான் மட்டும் நீர் நிரம்பும் காலங்களில் இந்த ஏரிக்கு வந்து விட்டு போவேன். அது போல தான் இன்றும். கடந்த 2 வாரங்களுக்கு முன் நானும் அகல்யாவும் இதே மரக்கிளையில் அமர்ந்து கொண்டு ஊஞ்சல் ஆடிய அதே மரக்கிளையில் வந்து அமர்ந்தேன். அப்படி அமர்ந்து இருந்த போது.. எங்கிருந்து வந்ததோ அந்த எம பாதகப் பருந்து? ஒரே தாவலில் என் அகல்யாவை தன் கால்களில் பிடித்து கொண்டு விர்ரெனப் பறந்தது. அவளுக்கு அப்போதே தெரிந்து விட்டது போல.. என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று. " என்னைக் காப்பாற்று" என்று கத்தாமல், "செல்லம்மாவை எப்படியாவது வளர்த்து விடு" என்று பருந்தின் காலின் நடுவே இருந்து அவள் பதறியதை என்றும் மறக்க முடியாது. கண் எதிரே நடந்த கொடுமையைத் தட்டிக் கேட்க வக்கு இல்லாமல் இருந்த என் கையிலாகாதனத்தை நினைத்தால் செத்து விடலாம் போல இருக்கும்.

இன்று அதோ.. ஒரு அடி ஆழத்தில் ஒரு மீன் போகிறது.. அதை கவ்வ நான் பறந்து போய் நீரின் உள்ளே சென்று அதை கவ்வி விட்டேன்... அட... நான் கவ்விய மீனை சுற்றிலும் சின்ன சின்ன குட்டி மீன்கள். புரிந்து விட்டது. அவைகள் எல்லாம் நீரின செல்லம்மாக்கள் . நான் கவ்வி இருப்பது நீரின அகல்யா. அலகை திறந்தேன். வெடுக்கென்று தாவியது அந்த தாய் மீன்.

வயிற்றில் பசித்தாலும் என் மனம் நிரம்பிய சந்தோஷத்தில் செல்லம்மாவை பார்க்க போய்கொண்டிருக்கிறேன்....

Keelai Naadaan
02-06-2017, 05:09 PM
கதையின் நோக்கம் உயர்வானது. அழகான காட்சி படுத்தும் வரிகள். பாராட்டுக்கள்

ஓன்றுக்குள் ஒன்று
ஒன்றிலிருந்து ஒன்று
ஒன்றுக்காக ஒன்று
ஓன்றை தின்று ஒன்று

என்றோ எப்போதோ படித்த ஞாபகம். இது உயிரின சுழற்சி.

மனிதனை தவிர பிற உயிரினங்களுக்கு இந்த கதை பொருந்துமா என்பது கேள்விக்குறி

dellas
13-06-2017, 08:17 AM
அருமை . வாழ்த்துக்கள்

hypergraph
20-06-2017, 06:13 AM
கதை அருமை... முடிவு துயரமானது... ஆனால் இந்த முடிவுதான் கதையை மறக்காமல் இருக்க வைக்கும்.
பாராட்டுக்கள் நண்பரே... வாழ்த்துக்கள்.
இப்படிக்கு ஆர். தர்மராஜன்