PDA

View Full Version : ஆன்மீகச் செய்திக் கவிதைகள்



ரமணி
15-04-2017, 01:29 PM
03. கடவுள் வாழ்த்து
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)

சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.

ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]

15/04/2017

*****

0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)

சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்

விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.

15/04/2017

*****

0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)

சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்

வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1

வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2

15/04/2017

*****

ரமணி
16-04-2017, 05:21 AM
0005. தோணியப்பர் காப்பு
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)

சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு

புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1

[தனு = உடல்]

தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017

*****

ரமணி
04-05-2017, 06:05 AM
0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)

சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்

நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.

[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]

(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.

15/04/2017

*****