PDA

View Full Version : அற்புதங்கள் எப்பொழுதும் நடக்கலாம்



KARTHIKEYAN.ns
30-08-2016, 01:35 AM
அருகிலிருந்த சுவற்றை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் உள்ளங்கைகளும் கால்களும் சொதசொதவென வேர்த்திருந்தது அருகில் மருத்துவமனை நாற்காலியில் அம்மா பதட்டத்துடன் அமர்ந்திருந்தார். அன்றிலிருந்து சரியாக பத்து மாதங்களுக்கு முன் அப்பா சில நாட்களாக பசியில்லை என்று கூறி வந்ததால் அவரை சாதரணமாக மருத்துவமனையில் காண்பிக்க மருத்துவர் அப்பாவுக்கு கல்லீரல் அழற்சி என்ற குணப்படுத்த முடியாத கொடிய நோய் உள்ளது என்ற பேரிடியை தலையில் போட்டிருந்தார். அதிகமாக குடிப்பவர்களுக்கு வரும் ஒரு நோய் அப்பாவுக்கு வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை , இருந்தாலும் நோய்கள் நம்முள் நுழைய எந்த காரணமும் தேடிக்கொண்டிருப்பதில்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு மெதுவாக அப்பாவுடன் வீடு திரும்பினேன்.
ஆயிற்று பத்து மாதங்கள் , இந்த பத்து மாதங்களில் அப்பா உருத்தெரியாமல் மாறியிருந்தார் , உடலில் சதைகள் தொய்வுற்று சுருக்கங்கள் அதிகரித்திருந்தன சாதரணமாகவே பெரிதாக தெரியும் கண்கள் அவர் மிகவும் இளைத்துவிட்டதனால் இப்பொழுது மிகவும் பெரிதாக தெரிந்தன. இந்த நாட்களில் நான் வீட்டில் இருந்ததை விட மருத்துவமனையில் செலவழித்ததே அதிகம். சென்னையில் உள்ள அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் காண்பித்தாகிவிட்டது , இந்த நோய்க்கு பெரிதாக வைத்தியங்கள் எதுவும் சாத்தியம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள இத்தனை மாதங்கள் செலவழித்தாகிவிட்டது. தொடர் சிகிச்சையின் பயனாலும் இணையத்திலிருந்து கிடைத்த தகவல்களினாலும் அறிவியல் முன்னேற்றங்களின் மேலிருந்த பிரமிப்பு விலகி அதன் இயலாமையை உணர முடிந்தது. கண் முன்னால் அப்பாவை உருக்கி கொண்டிருந்த நோயின் வலிமையை ஒடுக்க வழி தெரியாமல் கைகட்டி வேடிக்கைப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது. அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் பாதியாக இளைத்துப் போனார் அப்பாவை கவனித்துக் கொள்வதை மட்டுமே கடமையாக கொண்டிருந்தார்.
கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்களுக்கு கல்லீரல் கழிவுகளை சரிவர வெளியேற்றாததால் வயிற்றிற்குள் ஒரு திரவம் சேர ஆரம்பித்து வயிறு பெரிதாகிக்கொண்டே வரும் ஒரு கட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் அப்பொழுது வயிற்றில் துளையிட்டு அந்த திரவத்தை வெளியேற்றுவார்கள். அப்பாவிற்க்கு இதுபோல் ஐந்து முறை செய்தாயிற்று, சில நாட்களுக்குள் அப்பாவின் நிலை மிகவும் மோசமானது மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையின் அறையில் அமர்ந்து அவரையே இமைக்காமல் பார்த்த்க்கொண்டிருந்தேன், மருத்துவர் உள்ளே நுழைந்து அவரை பரிசோதித்து விட்டு என்னை தனியே அழைத்துப் போனார். இப்போ எப்படி இருக்கு என்று என்று வழக்கமாக கேட்கும் கேள்வியைக் கூட கேட்க மனமில்லாமல் அவரை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தேன். எனது தோளில் ஆதரவாக கைவைத்தபடி “He is Sinking” என்றார். அவரது இரத்தத்தில் பிலிருபீன் அளவு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது மேலும் வயிற்றில் அசைட்டீஸ் அளவும் அதிகமாகிவிட்டது ஆனால் அவர் தற்பொழுது இருக்கும் நிலையில் அதை வெளியேற்ற இயலாது என்றார் , ஆமோதிப்பதற்காக கூட தலையாட்டாமல் நின்றிருந்தேன் அவரே தொடர்ந்தார் உங்கள் தந்தை இவ்வளவு சீக்கிரம் இந்த நிலையை அடைந்தது பற்றி வருந்துகிறேன் அவரது கல்லீரல் அழற்சிக்கான காரணத்தை என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை அதற்கு வழக்கமாக நாங்கள் லிவர் பையாப்சி என்ற முறையை பயன்படுத்துவோம் ஒரு நீளமான ஊசியை கல்லீரலின் உள்ளே செலுத்தி ஒரு சிறு பகுதியை எடுத்து ஆய்வு செய்தால் அழற்சிக்கான காரணத்தை கண்டறியலாம் ஆனால் உங்கள் தந்தையின் இரத்தத்தில் உறையும் தன்மை மிகவும் குறைவாக உள்ளது ஊசியை செலுத்தினால் உட்காயம் ஏற்பட்டு இரத்தக் கசிவு தொடங்கிவிடும் அதனால் என்னால் அதை செய்ய இயலவில்லை மேலும் அதைப் பற்றி யோசிக்கும் காலத்தையும் நாம் இப்பொழுது கடந்து விட்டோம், எனினும் என்னால் முடிந்த வரை அவருக்கான சிகிச்சையை தொடர்ந்துகொண்டேயிருப்பேன் என்றார். அவர் கண்களை நன்றியுடன் நோக்கினேன் என் கண்களில் தெரிந்த நன்றியை அவர் கவனித்திருக்க வேண்டும் மறுபடியும் எனது தோளில் ஆதரவாக தட்டியபடி அது எனது கடமை என்று கூறிவிட்டு நர்சுகள் பின் தொடர அடுத்த அறையை நோக்கி நடந்தார். அறையினுள் மீண்டும் நுழைந்து அப்பாவை பார்த்தபடி அமர்ந்தேன் ,அப்படியே சுவற்றில் சாய்ந்து கண்களை மூடி என் இளமையான அப்பாவை கண்முன் கொண்டு வந்தேன் அகன்ற முகம், அழகான பெரிய கண்கள், சுருட்டை முடியுடன் கூடிய ஏறு நெற்றி, புஷ்டியான தேகம், முகத்தில் எப்பொழுதும் ஒட்டியிருக்கும் வசீகரமான புன்னகை மற்றும் எப்பொழுதும் அவரை விட்டு அகலாத குழந்தைத்தனம் இது தான் என் இள வயது அப்பா.
அப்பா தனது வெள்ளந்தி குணத்துக்கு பெயர் போனவர் , அம்மாவுக்கு தெரியாமல் தேனீர்கடைகளில் வடை சாப்பிடுவதிலாகட்டும் , குளிர்சாதனபெட்டியின் உள்ளே சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து சாப்பிடுவதிலாகட்டும் என்னுடன் கீரீம் பிஸ்கெட்டுகளுக்காக தீவிரமாக சண்டை போடுவதிலாகட்டும் இவை எல்லாவற்றிலும் அவர் தனக்குள் இருந்த குழந்தையை மிக பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார். அவர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற அதே வருடம் சென்னையில் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை சொல்லாமல் கொள்ளாமல் விட்டுவிட்டு போய் அவர் முன் நின்ற போது ஏன் என்றார் பிடிக்கல நான் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயார் செய்ய போகிறேன் என்றதும் சரி என்று மட்டும் சொன்னார் அன்று மாலை எனது வங்கிக் கணக்கில் 50000 போட்டிருந்தார் அது பணி ஒய்வு பெற்ற போது அவருக்கு கிடைத்த பணத்தில் ஒரு பெரிய பகுதி. கண்களில் இருந்து சூடாக இறங்குவது கண்ணீராகத்தான் இருக்க வேண்டும் துடைக்க கையெடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.
அம்மா அப்பா படுத்திருந்த கட்டிலின் அருகே தரையில் அமர்ந்து ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்தார்,கோவிலின் கருவரையைக் காட்டிலும் உண்மையான பிரார்த்தனைகளை மருத்துவமனை சுவர்கள் கேட்டிருக்கின்றன என்ற வாசகம் நினைவுக்கு வந்தது. எந்த அற்புதமும் நிகழப் போவதில்லை என்று தெரிந்தும் எதற்காக இவ்வளவு உருகி பிரார்த்திக்கிறாள் அம்மா என்று கோபம் வந்தது அதே சமயத்தில் உண்மையாகவே ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து விடாதா என்று மனம் கிடந்து தவித்தது. மறு நாள் காலை அப்பாவுக்கு மூச்சு திணறல் அதிகமாயிற்று அவரின் அருகில் நின்று அப்பா என்று மெதுவாக அழைத்தேன் மெதுவாக கண்களைத் திறந்தார் ரொம்ப வலிக்குதாப்பா என்றேன் உடைந்த குரலில் இல்லை என்று தலையாட்டினார் அவரது கண்கள் சிறிது நேரம் என் முகத்தில் நிலைத்து நின்றது பின் மெல்ல மேல் நோக்கி செருக ஆரம்பித்தது அருகில் இருந்த அழைப்பு மணியை அவசரமாக பல முறை அழுத்தினேன் நர்சுகள் அவசரமாக ஓடி வந்தனர் சிஸ்டர் ஏதோ ஆகிவிட்டது பாருங்கள் என்று பதறினேன் அவள் அருகில் இருந்த மானிட்டரைப் பார்க்க அதில் 79 என்று காண்பித்தது . ஹார்ட் பீட் இருக்கிறது பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறும்போதே 79 என்ற எண் படிப்படியாக குறைந்து 0 வந்து நின்றது அதைப் பார்த்ததும் அய்யோ என்று பதறியவள் அண்ணா ஸ்டெரச்சர் என்று அலறினாள் அவசரமாக அப்பாவை அள்ளி எடுத்துக்கொண்டு ஐ.சி.யுவை நோக்கி ஒடினோம் அம்மாவும்,பெரியம்மாவும் எங்களைத் தொடர்ந்து ஒடி வந்தார்கள் நாங்கள் வாசலில் நிறுத்தப்பட்டோம் .
அம்மாவை சமாதனப்படுத்தி அருகில் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் உட்கார செய்தேன். நான் மட்டும் I.C.U வின் வாசலில் நின்று கொண்டிருந்தேன், அருகிலிருந்த சுவற்றை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் உள்ளங்கைகளும் கால்களும் சொதசொதவென வேர்த்திருந்தது அருகில் மருத்துவமனை நாற்காலியில் அம்மா பதட்டத்துடன் அமர்ந்திருந்தார். மனம் அப்பா அப்பா என்று அரற்றிக்கொண்டிருந்தது மருத்துவர் அவசரமாக உள்ளே நுழைந்தார் கண்ணாடி துவாரத்தின் வழியே அப்பாவை படுக்க வைத்திருந்த படுக்கையைப் பார்த்தேன் அவரை சுற்றிலும் பலர் அவசரகதியில் இயங்கி கொண்டிருந்தனர் சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்து இருதய துடிப்பு நின்று விட்டது சி.பி.ஆர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ஒருவேளை வெண்டிலேட்டரில் வைத்தால் அவரது மரணத்தை ஒரிரு நாள் தள்ளி போடலாம் ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை அவரை நாம் வேதனைக்கு உள்ளாக்குகிறோம் என்றே அர்த்தம் ஆகையால் அது தேவையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று என் முகத்தைப் பார்த்தார் அதற்குள் ஒரு நர்சு ஒடி வந்து அவரிடம் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல இனி என் முடிவு தேவை இல்லை என்று மனம் உணர்ந்தது. மருத்துவர் என்னைப் பார்த்து சாரி முடிந்து விட்டது என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.
மனதினுள் அழுகை வெடித்து கிளம்பியது மடையா இப்பொழுது அழாதே அம்மாவுக்கு தெரிந்தால் அவளைக் கட்டுப்படுத்த இயலாது என்று எனக்குள் கூறிக்கொண்டேன் அம்மா அப்பாவியாய் அருகே வந்து என்னப்பா சொல்றாங்க என்றாள். ஒன்றுமில்லை கொஞ்சம் மோசமாக இருக்கிறதாம் ஆகையால் உடனே சென்னைக்கு கொண்டு செல்ல சொல்லுகிறார்கள் மாமாவை வர சொல்லுகிறேன் நீங்கள் வீட்டிற்கு சென்று சீக்கிரம் கிளம்புங்கள் என்றேன். அம்மாவை மாமாவுடன் அனுப்பி விட்டு மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தேன். என்னை அழைத்து ஏதோ ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கினார்கள் மேலே படித்துப் பார்த்தேன் “Declaration of Death” என்று போட்டிருந்தது. . முடிந்து விட்டது, உலகமே என்னை எதிர்த்தாலும் அதை அலட்சியப் படுத்திவிட்டு என் பக்கம் நின்ற ஒரு ஜீவன் இனிமேல் இல்லை, அப்பா உங்கள் விழிகள் இந்த உலகில் கடைசியாக பார்த்தது என் முகத்தைத்தானே இனி உங்களுடனான எனது தொடர்பு வெறும் ஞாபகங்கள் மட்டும் தானா, பொங்கி வந்த அழுகையை அடக்கியதில் கண்கள் குளமாகி இரண்டு சொட்டுகள் படிவத்தில் விழுந்தது ஈரம் பரவியது. அப்பாவின் இறுதி சடங்குகள் முடிந்த சில நாட்களில் அந்த மருத்துவமனைக்கு திரும்ப சென்று அவரது இறுதி நாட்களில் அவரைக் கஷ்டபடாமல் பார்த்துக்கொண்ட நர்சுகள்,வார்டு பாய்கள் அனைவருக்கும் நன்றி கூறினேன். கடைசியாக மருத்துவரிடம் சென்றேன் நீங்கள் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது மிகவும் நன்றி என்றேன் , எல்லா காரியங்களும் முடிந்ததா என்றார் “ம்” என்றேன் , சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் அமைதியாக இருந்தோம் என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் என்னுடைய இறுதி நாட்களில் எனது மகன் உங்களைப் போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் “such a good son you are” என்றார். நன்றி ஆனால் எனது தந்தையைப் போல் ஒரு தந்தை நாளை என் மகனுக்கு கூட கிடைப்பது கடினம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர் என்று கூறி அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.
எல்லா காயங்களையும் ஆற்றும் வலிமை காலத்துக்கு மட்டுமே உண்டு , அப்பா இறந்து சரியாக ஒன்பது மாதங்களில் எனக்கு திருமணமானது. சில மாதங்களில் என் மனைவி கருவுற்றாள் எட்டாவது மாதத்தில் திடீரென பனிக்குடம் உடைந்து என் அப்பாவின் நோயை முதன்முதலில் கண்டறிந்த அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டாள். பிரசவ அறையின் வெளியே காத்திருந்தோம் அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதும் மனம் மகிழ்சியில் துள்ளியது சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது ஆனால் இது ஒரு pre term delivery ஆதலால் குழந்தையை நேராக NICUவிற்கு கொண்டு செல்வோம் அங்கு குழந்தை மருத்துவர் பார்த்துவிட்டு உங்களிடம் பேசுவார் என்றார். சிறிது நேரத்தில் NICUவில் இருந்து கூப்பிட்டனுப்பினார்கள் , விரைந்து சென்று குழந்தை மருத்துவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு குழந்தை நன்றாக இருக்கிறான் தானே என்றேன். அவர் குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகமாக இருக்கிறது அவனது நுரையீரல் முதிர்ச்சி அடைய இன்னும் ஒரு வாரம் தேவைப்படும் தற்பொழுது குழந்தைக்கு சுவாசம் சீராகும் வரை அவனை வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றார். வெண்டிலேட்டர் என்றா கூறினீர்கள் என்றேன் சற்றே அதிர்ந்து ஆம் ஏன் கேட்கிறீர்கள் என்றார் ஒன்றுமில்லை மற்றபடி ஒன்றும் பயமில்லை அல்லவா என்றேன் , ஆம் அவனுக்கு இரத்தத்தில் பிலிருபீன் அளவு சற்று கூடுதலாக இருக்கிறது ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த விதமான மஞ்சள் காமாலை சகஜம் தான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை மேலும் உங்கள் மகனுக்கு இரத்தத்தில் உறையும் தன்மை சற்று குறைவாக உள்ளது இதுவும் புதிதாக பிறக்கும் குழந்தகளுக்கு சகஜம் தான் நாளடைவில் சரியாகிவிடும் நாம் இப்பொழுது கவலைப் பட வேண்டிய விஷயம் அவன் வெண்டிலேட்டரில் இருந்து மீண்டு வர வேண்டும் அது தான் முக்கியம் என்றார்.
அவர் மேலே சொன்ன எதுவும் என் காதில் விழவில்லை என் மனம் அப்பா என்று கூவியது நான் குழந்தையை பார்க்கலாமா என்றேன் , கண்டிப்பாக குழந்தையின் தாயும், தந்தையும் எந்த நேரமும் சென்று பார்க்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது என்றார், உடனே NICUவுக்கு விரைந்தேன் அங்கு வார்டு முழுவதும் நிறைய குழந்தைகள் இருந்தன என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் என் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றேன் அதோ என்று கை காட்டினால் நர்ஸ்.
அவனை நெருங்கினேன் உடல் முழுவதும் டியூபுகள் செருகப்பட்டு பூக்குவியல் போல் படுத்திருந்தான் , பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் குழந்தைக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக மிக லேசான தூக்க மருந்து கொடுக்கபட்டிருக்கிறது ஆதலால் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்றாள். அவனிடம் மெதுவாக குனிந்தேன் அவன் காதோரம் மெல்லிய குரலில் தம்பி என்று அழைத்தேன் அவன் உடல் லேசாக அதிர்வுற்று விழி திறந்தான் நர்ஸ் இதைக்கண்டு ஆச்சரியமுற்றவளாக ஏய் குட்டி பையா இவ்வளவு தூக்கத்திலயும் அப்பா குரல் கேட்டு முழிக்கிறியா நீ என்று சிரித்தாள். அவனைச் சுற்றிலும் ஏதேதோ சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன பார்க்கும்பொழுதே மனம் கனத்தது மகனே உனக்கு பிறக்கும்போதே இத்தனை சோதனையா, மனதை விட்டுவிடாதே இத்தனை வருடங்களில் உன் அப்பாவிற்கு நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான் அப்பாவிடம் நல்லபடியாக வந்து விடு என்று மானசீகமாக கூறிக்கொண்டேன். இப்படியே மூன்று நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடனேயே சுவாசித்துக் கொண்டிருந்தான் மருத்துவரிடம் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று கேட்டேன் வெண்டிலேட்டரை எடுத்துப் பார்த்தோம் ஆனால் குட்டி சரியாக சுவாசிக்க மாட்டேன் என்கிறான் அவன் அறைக்காற்றில் நன்றாக சுவாசிக்க ஆரம்பித்தால் தான் ஆபத்தில்லை என்று கூற முடியும் என்றார்.
அறையில் அம்மாவிடமும் மனைவியிடமும் விவரம் கூறி சமாதனபடுத்திவிட்டு அருகில் இருந்த மெத்தையில் அப்படியே சாய்ந்து படுத்தேன், “வெண்டிலேட்டர் வைக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்…….இரத்தத்தில் உறையும் தன்மை குறைவாக இருக்கிறது…..இரத்தத்தில் பிலிருபீன் அளவு அதிகமாக உள்ளதால் மஞ்சள் காமாலை உள்ளது”…, அப்படியென்றால் என் அப்பாவின் முடிவும் இவனின் தொடக்கமும் ஒன்று தான் என்றது என் மனம் சடாரென துள்ளி எழுந்தேன் திடுக்கிட்ட என் மனைவி எங்க போறீங்க என்றாள் குட்டிப் பையனைப் பார்க்க என்று கூறிவிட்டு NICUவை நோக்கி விரைந்தேன்.
என் மகனை நெருங்கி மெதுவாக அப்பா என்றேன் அவனிடம் எந்த சலனமும் இல்லை மறுபடியும் அவனிடம் குனிந்து நான் பேசுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் , நீங்கள் என்னை பிரிய மனமில்லாமல் என்னிடம் திரும்பியிருக்கிறீர்கள் என்பது உண்மையானால் உங்கள் பழைய நினைவுகளை விட்டொழியுங்கள் நீங்கள் சுவாசிக்க முயற்சி செய்யவில்லை என்கிறார்கள் எனக்குத் தெரியும் உங்களால் சுவாசிக்க முடியும் இது உங்களுடைய புது உடல் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டுமானால் சுவாசிக்க வேண்டும் அடுத்த முறை நான் உங்களைப் பார்க்கும்பொழுது நீங்கள் வெண்டிலேட்டர் இல்லாமல் சுவாசித்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினேன்.
மறுநாள் விடிகாலை நான்கு மணிக்கு NICUவில் இருந்து ஒரு நர்ஸ் ஒடி வந்து சார் உங்க குட்டிப்பையன் மூக்கிலிருந்த டியூபைத் தானாகவே பிடுங்கிவிட்டு சுவாசிக்க ஆரம்பித்து விட்டான் வந்து பாருங்கள் என்றாள், வேகமாக NICUவை நோக்கி ஒடினேன் அவனருகில் மருத்துவர் சிரித்தபடி நின்று கவனித்துக் கொண்டிருந்தார் என்னைப் பார்த்ததும் நாங்க டியூப எடுப்போம்னு காத்திருந்து பார்த்துவிட்டு பொறுமையில்லாமல் சார் தானாகவே பிடுங்கிவிட்டார் என்றார் முகமெல்லாம் மகிழ்ச்சியாக . நான் அவனைத் தூக்கலாமா என்றேன் தாரளமாக என்றார், அருகில் நின்ற நர்ஸ் அவனை என்னிடம் தூக்கி தந்தாள் அப்பொழுது தான் கவனித்தேன் அவனது தொடையில் என் அப்பாவிற்க்கு இருந்ததைப் போல பெரிய மச்சம் அதே வடிவில். இதுவரை பட்டுப்புழு மட்டுமே வண்ணதுப்பூச்சியாக மாறும் என்று நினைத்திருந்த நான், முதல் முறையாக ஒரு வண்ணத்துப்பூச்சி மீண்டும் பட்டுப்புழுவாக மாறிய அற்புதத்திற்கு சாட்சியாகி நிற்கிறேன்.அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன நாம் தான் புரிந்து கொள்வதில்லை உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் விடுங்கள், நான் நம்புகிறேன் எனது கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பது எனது அப்பா தான்.

dellas
30-08-2016, 01:52 PM
கார்த்திகேயன். மிகவும் அருமையான கதை.

நம் உணர்வுகளோடு ஒன்றிக்கும் அப்பா கிடைப்பது ஒரு வரம்.

அப்பாவை பிம்பமாக கொள்ளும் மகன்களும் வரம்தான்.

மெல்லிய மனவோட்டங்கள். அற்புதமாக கையாண்டிருக்கிறீர்கள். உங்கள் நம்பிககையை நான் நம்புகிறேன்.

வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.

KARTHIKEYAN.ns
30-08-2016, 03:59 PM
மிக்க நன்றி dellas

Mano60
18-11-2016, 09:48 AM
அற்புதங்கள் எப்பொழுதும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். கண்களில் நீர் வரவழைக்கும் அருமையான அப்பா செண்டிமெண்ட் கதை.வாழ்த்துக்கள்.