PDA

View Full Version : தமிழன் என்று சொல்லடா.....Jaga53
07-08-2016, 06:33 AM
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…. என்று நாமக்கல் கவிஞர் சொல்லியது காதில் விழும் போது பெருமையாக தான் இருக்கிறது. ஆனால் இன்றைய உண்மை நிலையை பார்த்தால் மிகவும் வெட்கமாக அல்லவா இருக்கிறது. கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழன் சீரிய குணாதிசயங்களோடு மிகச்சிறந்த பண்பாளனாக வாழ்ந்தான் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை பண்டை தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம் மற்றும் எட்டுத்தொகை நமக்கு தெளிவாக எடுத்துச்சொல்கின்றன.
தற்போதுள்ள தமிழனனின் எந்த அம்சத்தை எண்ணி பெருமைப்பட? ஒரு தனி மனிதனாக, ஒரு குடும்பமாக, தமிழ் சமுதாயத்தின் ஒருவராக என்று எந்த வகையில் பார்த்தாலும் தரம் தாழ்த்தல்லவா போய்விட்டோம். இறை வளிபாட்டு இடங்களில் எல்லாம் பெருங்கூட்டம்; ஆனால் பிறர் நலம் மறந்து சுயநலமொன்றே பிரதானம் என்று வாழும் வாழ்க்கை. சாதிகள் இல்லையென கூவிய தமிழறிஞர்களை மறந்து சாதி வெறி பிடித்தாடும் தமிழன்; சாதி அடையாளத்தை அழிக்க முயலாத அரசு. அநியாயத்தை எதிர் கொள்ள துணிவின்றி போய்விட்ட அவலம். தன்மானமிழந்து லஞ்சமென்ற பெயரில் பிச்சையெடுக்கும் கும்பல். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை பொருட்படுத்தாமல் திரியும் கூட்டம். மதுவிலே மதியிழந்து போய் நிற்கும் நாளைய சமுதாய சிற்பிகள். சினிமா விளம்பரத்திற்கு பாலபிஷேகம் செய்து மகிழும் இளைஞர் படை. கண்ட இடத்தில் குப்பையை போடும் சமூக சிந்தனையற்ற மக்கள். ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமராலஜி என்று அலையும் தன்னம்பிக்கையை தொலைத்துவிட்டு திரியும் ஒரு சாரார். தொலைகாட்சி தொடரில் தொலைந்து போய்விட்ட பெண்கள். சாலை விபத்து எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறான் தமிழன். இன்னும் பல வகையில் தரம் தாழ்ந்து போய்விட்டான் இன்றைய தமிழன்.
உலகுக்கே நாகரிகம் கற்றுக்கொடுத்தவர்கள், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் குடி என்று பழம் பெருமையை எவ்வளவு காலத்துக்குதான் சொல்லிக்கொண்டிருப்பது. நமது இன்றைய தரம் இப்படி பெருமை பேசும்படியா இருக்கிறது?
பண்டை தமிழனின் உயரிய பண்புகள் எத்தகைய சூழலில் சீரழிய தொடங்கியது? தமிழனின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க முடியுமா?

Mano60
22-11-2016, 09:38 AM
தனி மனிதன் திருந்தி வாழ்ந்தால் தரணியே திருந்தி வாழும். நாம் நம்மை திருத்திக்கொண்டால் தரணி தானாக திருந்தும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து அறிவியலில் நோபல் பரிசு வென்ற இந்தியர் சர்.சி.வி. ராமன் தமிழர் தானே. வேறு சிந்தனை இன்றி "தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம்" என்று பாரதியாரின் சொல்லை செவிமடுத்து செயல்படுவோம். நன்மையே நடக்கும்.

Senior
24-12-2016, 05:22 AM
தமிழனின் இழந்த பெருமைகளை மீட்டெடுப்போம்
சீனியர்