PDA

View Full Version : எழுத்தாளன் ஆவது எப்படி?vc43497
28-06-2016, 05:26 AM
மோகனசுந்தரம் (புனைப் பெயர் எழிலரசன்) அந்த வீட்டின் எண்ணை ஒரு முறை சரி பார்த்து விட்டு, காலிங் பெல்லில் கை வைத்தான்.
மோகனசுந்தரம் ஒரு வளரும் எழுத்தாளன். இது வரை மூன்று இதழ்களில் அவன் எழுத்து அச்சுக்கு வந்திருக்கிறது.
மாலைமுரசில் ஒரு ஹைகூ, மாம்பலம் டைம்ஸில்
(மொத்தம் ஐம்பது பிரதிகள்) ஒரு சிறுகதை, அல்லி பதில்களில் ஒரு கேள்வி (நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலியில் அதிக சம்பளம் வாங்குவது யார்?)
கதவைத் திறந்ததும், பனியனோடு எழுத்துப் புயல் மதியை எதிர்பார்க்கவில்லை.
மதி போட்டோவில் பார்ப்பதை விட இளமையாக இருந்தார். காதோரம் மட்டும் விட்டு, மற்ற இடங்களில் கோத்ரெஜ் டை தெரிந்தது.
எஸ்......
அய்யா....என் பெயர் மோகனசுந்தரம்....உங்க வாசகன்.....போன்ல கூட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தேன்.
மதி யோசிப்பதாக தெரிந்தது.
போன வெள்ளி கால் பண்ணி இருந்தீங்களா? வாங்க.....
உள்ளே நுழைந்ததும், அந்த சிறிய ஹாலில் முக்கால்வாசிக்கு புத்தகங்களே தெரிந்தது. டேபிளில் அபிதான சிந்தாமணி.
இங்க மனிதர்களுக்கு இடம் இல்லை..எல்லாம் புத்தங்களுக்குத்தான்....தரையிலதான் உட்கார்ந்தாகணும்....
கீழே உட்காரும் போது, அலமாரியிலிருந்து விழ இருந்த, புத்தகத்தை கேட்ச் பிடித்து நிற்கவைக்க வேண்டியதாக இருந்தது.
சொல்லுங்க...என்ன விஷயமா வந்திருக்கீங்க...ரொம்ப நேரம் என்னால பேச முடியாது...நிறைய எழுத வேண்டி இருக்கு...
மோகனசுந்தரம் ஒரு முறை மென்று விழுங்கினான்.
அய்யா...நான் உங்களுடைய தீவிர வாசகன்...
இதெல்லாம் எல்லாரும் சொல்றது....ஒரே எழுத்தாளனை படிச்சிட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா, நீங்க முன்னேறலன்னு அர்த்தம். இதை சொல்றதுக்கு நேர்ல வரணும்கறது இல்ல. ஒரு சின்ன கடிதம் போதும்..
அது இல்லைங்கயா...நானும் உங்களை மாதிரி ஒரு எழுத்தாளன் ஆகணும்னு நினைக்கிறேன்...
சரி....அதுக்கு நான் என்ன செய்யணும்..
உங்க கதைகள் ஒவ்வொண்ணையும் அணு அணுவா ரசிச்சிருக்கேன்....உதாரணத்துக்கு கோதையின் கனவு....அதன் முடிவு, யாருமே எதிர்பார்க்காதது....உங்களால எப்படி அந்த மாதிரி யோசிக்க முடியுது...
மதியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
திடீர்னு ஒரு பக்கம் க்ரைம் கதை, இன்னொரு பக்கம் ஆன்மீக கதை...குறு நாவல், சிறுகதை...உங்களுடைய படைப்புகள் எல்லாமே ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.....
மதி இப்போது வாயில் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்தார்.
அய்யா, ஒரு கதையின் ஆரம்பம்தான் எனக்கு ரொம்ப சவால். ஆனா , உங்க கதைகள்ல ஆரம்பமே ஒரு கிக்கா இருக்கு...அந்த மாதிரி உங்களால் எப்படி முடிகிறது......ஏதாவது டிப்ஸ் கொடுங்களேன்...
மதி பல்லிடுக்கிற்குள் மாட்டி இருந்த பாக்குத் துகளை முயற்சி செய்து எடுத்துக் கொண்டிருந்தார்.
"சில கதைகள்ல நிறைய அறிவியல் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்திருக்கீங்க..."
மதி முயற்சியில் வெற்றி பெற்று, பாக்கை வெளியே எடுத்து முடித்திருந்தார்.
தம்பி....
அவர் சொல்ல ஆரம்பிக்கும் போது, செல்போன் அழைக்கும் சத்தம் கேட்டது.
ஹலோ? நீங்களா? பாதி எழுதி முடிச்சிட்டேன்...இந்த வாரத்துக்குள்ள அனுப்பிடறேன்....ஓ...தாராளமா விளம்பரம் கொடுத்துடுங்க...
போனை வைத்து விட்டு, பார்த்தீங்களா? ஒரு நிமிஷம் கூட, என்னால் வீண் பண்ண முடியாது....இந்த வாரத்துக்குள்ள கதை கேட்குறாங்க....உடனே அனுப்பி ஆகணும்.....பொதுவா நான் எந்த வாசகர்களையும் சந்திக்க விரும்புவது இல்லை...அவங்க உலகம் வேற...என் உலகம் வேற...இருந்தாலும், உங்களை சந்திக்க அனுமதிச்சதுக்கு காரணம், நீங்க ஒரு வளரும் எழுத்தாளர் அப்படிங்கற தகுதியில....ஒரு நிமிஷம்.....
உள்ளே போய்விட்டு, பாத்ரூமில் வெற்றிலை சாற்றை துப்பி விட்டு வந்தார்....
"இனிமே, எந்த எழுத்தாளரையும் பார்த்து, எப்படி எழுதறீங்கன்னு மட்டும் கேட்காதீங்க...உங்களுக்கு, ரெகுயம் பார் ட்ரீம் தெரியுமா?"
தெரியாது
அன்ட் தேர் வேர் நன்
தெரியாது
மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்
தெரியாது
உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு நிச்சயமா தெரியும். உங்க லட்சியம் என்ன?
உங்களை மாதிரி ஒரு பெரிய எழுத்தாளன் ஆகணும்.
அதுக்கு ஒரு வழி இருக்கு தம்பி.
மோகனசுந்தரம் உடம்பு முழுவதும் காதாகி கேட்டான்.
சிம்பிள்.....சுயமா எந்த கதையையும் நீங்களா புதுசா யோசிக்காதீங்க...மற்ற கதைகளிலிருந்து சுட்டுடுங்க...
சார்....அது தப்பு இல்லையா?
இல்லப்பா...இலக்கியம்னா சும்மாவா? அவ்வளவு ஈஸி கிடையாது
உங்க கதைகள் எல்லாம்?
நிறைய சுட்ட பழம்தான் சொல்ல மறந்துட்டேன்...
சொல்லுங்க சார்....
எழுத்தாளர் ஆவதற்கு ஒரு சின்ன ரூல் இருக்கு
என்ன சார்
நீ எங்கேயிருந்து காபி அடிக்கறேன்னு யாருக்கும் கடைசி வரைக்கும் தெரியக்கூடாது...
நன்றி சார்

dellas
29-08-2016, 06:04 AM
அட ..கொஞ்சம் சரி.

எல்லாரும் கதைகளை சுடுவதில்லை. எழுத்து நடைகள் பின்பற்றப் படலாம்.

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.