PDA

View Full Version : எப்பொழுதும் பெண்vc43497
04-06-2016, 12:29 PM
பதினேழு வருடங்கள் கழித்து திடீரென்று அகல்யாவைப் பார்ப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு கான்பரன்சில்.
அகல்யாவின் பழைய தோற்றத்தையும், இப்போதைய தோற்றத்தையும் பொருத்திப் பார்க்கையில், அடையாளம் காண்பது சுலபமாக இல்லை.
கான்பரன்சின் இடைவெளியில், திடீர் என்று யாரோ தோளைத் தொட்ட உணர்வு.
"நீ பிரபாகர்தானே?"
நாற்பது வயது வெள்ளை எழுத்து கண்ணாடியின் மேல் பாகத்தின் வழியாக, அவள் முகத்தை நியூரான்களில் தேடும் பொழுது, கொஞ்சம் சித்தி ராதிகா மாதிரி தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை.
"அகல் நீயா?" என்று கேட்க நினைத்து, அருகில் இருந்த டை கட்டிய ஆசாமியைப் பார்க்கும் பொழுது, "அகல்யா நீங்களா? சர்ப்ரைஸ்" என்றேன்.
நான் பார்க்கும் ஐ டி தொழிலில், மணிரத்தினம் படம் மாதிரி சொற்ப வார்த்தைகளில், மனத்தில் உள்ளதை சொல்ல வேண்டும்.
"எக்ஸ்க்யுஸ்" ,கேட்டு விட்டு காப்டரயாவின் மூலைக்கு தனிமையின் செல்லும் பொழுது, அவளிடம் வரும் பிரத்யேக வாசனை நிறைய வருடங்கள் கழித்து உணர முடிந்தது. பதினேழு வருடம் இருக்குமா? கடைசியில் பார்த்தது திருச்சி ஆண்டாள் ஸ்ட்ரீட்டில். அதுவும் ஸ்ரீராமிற்காக.
"மச்சான் அவ என்னடா சொன்னா?"
"ப்ச் "
"பிரபா.....எதுவா இருந்தாலும், பரவா இல்லை.....சொல்லுடா "
"ஒண்ணும் இல்லடா..."
"இல்லை...பரவா இல்லை...என்னை பிடிக்கலேன்னு சொன்னாளா "
"சே சே "
"சரி, வேற என்னதான் சொன்னா?"
ஸ்ரீராமின் கவலையான முகம் ஞாபகத்திற்கு வந்தது. இப்போது எங்கே இருக்கிறான்? கலிபோர்னியாவிலா? அவன் கல்யாணத்திற்கு கூட சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை ரயிலில் டிக்கெட் கிடைக்காமல், நின்று போனது...
என்ன சாப்பிடற? காபி?
காபி வரும் வரை....அவளை முழுவதுமாய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நிச்சயம் கல்யாணம் ஆயிருக்கும்....ஒரு வேளை, குழந்தைகள் இருக்கலாம்
அப்புறம் பிரபா? எப்படி இருக்க? கல்யாணம் ஆயிடிச்சா? எவ்வளவு குழந்தைகள்?
சொன்னேன்.
வாவ்...எப்படி இருக்கார் உங்க ப்ரண்ட்....இப்ப எங்க இருக்கார்..
யு எஸ்ல....கலிபோர்னியான்னு நினைக்கிறேன்....கல்யாணம் ஆயிடிச்சி....ரெண்டு பசங்க....
அவர்களின் அமரக் காதல், பாதியிலியே அறுந்து விழுந்தது எனக்கு நன்றாக தெரியும். அந்த காதலுக்கு நிறைய தூது போனதால்.
அன்றைய தினங்களில், திருச்சி இப்போது மாதிரி பெரிய ஊராக இல்லை. எங்களின் சங்கமம் சத்திரம் பஸ் ஸ்டேண்டில் ஆரம்பிக்கும்.
ஸ்ரீராம் ஸ்ரீரங்கத்திலிருந்து வருபவன். வடகலை அய்யங்கார். நேஷனில் பி காம் படிப்பதோடு, சாயந்திர வேளைகளில் அகல்யாவை எக்கச்சக்கமாய் காதலிக்கவும் ஆரம்பித்தான்.
அகல்யா எஸ் ஆர் சீயில் பிசிக்சோ, என்னமோ படித்துக் கொண்டிருந்தாள். யாதவர் குலம். அவர்கள் அப்பாவிற்கு, ஸ்ரீனிவாச நல்லூர் தாண்டி ரங்கராஜபுரத்தில் குடிசை வீடு. புதுக்கோட்டை ரோடில், ஏர்போர்ட் அருகே இருந்த, லேத் பட்டறையில் வேலை. சொற்ப சம்பளம். ட்ராயரோடுதான் வேலைக்கு செல்வார். சாயந்திரம் வேலை விட்டு வரும் பொழுது, கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டு விட்டுதான் வருவார்.
அதற்குள் அகல்யா காலேஜிலிருந்து வந்து, அந்த சிம்னி விளக்கு குடிசையில் அப்பாவிற்கு காத்திருப்பாள். அம்மா இல்லாத பெண் என்பதால் எக்கச்சக்க பாசத்தை வைத்து இருந்தார்.
கண்ணு......
உள்ளே நுழையும் போதே, சாராய வாசனை மூக்கைத் தொலைக்கும்.
சில நாட்களில் வெளியே நின்று சத்தம் போடுவார். வெட்ட வெளியில் யாரோ இருப்பதாக நினைத்துக் கொண்டு, சவால் விடுவார்.
"நீ இல்லன்ன என்னடி? என்னால வாழ முடியாதா? என் பொண்ண மஹாராணி மாதிரி வளர்த்துவேண்டி...."
அப்பா....என்று அவள் அழைத்துக் கொண்டே, அவரை உள்ளே இழுத்து, கதவை சாற்றுவாள்.
இந்த இடத்தில், அகல்யாவின் அம்மா, வேறு யாருடனோ சென்று விட்டார் என்பதனை சொல்லியாக வேண்டி இருக்கிறது.
இத்தனை விவரங்களையும் ஸ்ரீராமிடம் சொல்லிய பொழுது, அவன் அவளை மறப்பான் என்று நினைத்தேன். மாறாக, இன்னும் அதிகமாகவே காதலித்து தொலைத்தான். டைரியில் நிறைய கவிதைகள் எழுதினான். இரண்டொரு முறை, காதல் கடிதம் கொடுக்க சென்று, கடைசி நொடியில் கிழித்தெறிந்தான்.
"எப்படியாவது என் காதல அவ கிட்ட சொல்லிடுறா...அவ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பாக்க முடியல "
நான் சொன்ன பொழுது, அகல்யா ஒரு முறை மேலும் கீழும் பார்த்து விட்டு, ஒற்றை வார்த்தையில் நிராகரித்தாள்....
"சாரி"
அதற்க்கப்புறம் ஸ்ரீராம் கொஞ்ச நாள் தாடி வளர்த்தான். டைரியில் காதல் தோல்வி கவிதைகள் எழுதினான். பி காம் முடித்ததும், கம்ப்யுட்டர் படித்தான். சென்னையில் ஒரு சாப்ட்வர் கம்பெனியில் வேலைக்கு சென்றான். ஹிந்துவில் விளம்பரம் கொடுத்து, மாம்பலத்தில் இருந்த அலமேலுவை கல்யாணம் செய்து கொண்டான்.
அதற்கு பிறகு, பதினேழு வருடங்களில், வாழ்க்கை மிக மாறி விட்டது. சமீபத்தில்தான், பேஸ் புக்கில் பார்த்து, அவனுடைய இந்திய விஜயத்தில், நேரில் சந்தித்து.....
"ஸோ? ஹி இஸ் டூயிங் குட்.....அப்ப அவன் என் மேல ரொம்ப கிரேசியா இருந்தான்....பட், நான்தான் ரிஜக்ட் பண்ணிட்டேன்"
அப்பா?
"அவர் போயி பத்து வருஷம் இருக்கும்....என் லைப்ல எதுவுமே அவ்வளவு ஈசியா கிடைக்கல..சின்ன வயசில, அம்மா மூலமா ஒரு சோதனை வந்தது. அப்பா குடிச்சார்....விவரம் தெரிஞ்சு, தெரியாத வயசில, அவரையும் பார்த்துக்க வேண்டிய கட்டாயம்....நிறைய வேலைக்கு அலைந்தேன்...பார்ட் டைம்ல படிச்சிட்டே, வொர்க் பண்ணினேன்.....இந்த பதினைந்து வருஷம் வெறும் அட்வென்சர்ஸ்தான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வரதுக்கு, நான் பட்ட ரணங்கள் ஏராளம். பணம் சம்பாதிச்சேன்....எவ்வளவு முயற்சி செய்தும், அப்பாவ என்னால காப்பாத்த முடியல....நிறைய குடிச்சி, குடல் வெந்து செத்து போனார்.....எவ்வளவு நாள், தனிமையில இருக்கிறது..கிஷோரப் பார்த்தேன்..வி டிசைடட் டு மேரி...அழகா, இரண்டு பசங்க....."
எனக்கு இன்னும் கூட ஆச்சிரியமா இருக்கு அகல்...தப்பா நினைச்சுக்காதே...அன்னிக்கு அவன் எப்படி இருந்தான்....கிட்டத்தட்ட அரவிந்த் சாமி மாதிரி....அவ்வளவு அழகா.....அவன லவ் பண்ண, நிறைய பெண்கள் தயாரா இருந்தாங்க....அவன் என்னவோ, உன் மேல க்ரேசா இருந்தான்....அவன அந்த எமாற்றத்திலேர்ந்து வெளியே கொண்டு வருவதற்கு, கொஞ்ச நாள் ஆச்சு.....ஒரே ஒரு கேள்வி மட்டும் எனக்கு புரியல....அவன ஏன் ரிஜக்ட் பண்ணினே?
என்னைக் காதலித்திருந்தா, அவனும் என் கூட சேர்ந்து கஷ்டபட்டிருப்பான்....அத நான் விரும்பல...
ஏன்
அவன் மேல நான் உயிரையே வச்சிருந்தேன்

ஓவியன்
04-06-2016, 06:02 PM
அழகான நடையில் அழுத்தமான கதை, ஒரு பக்க கோணத்திலேயே அகல்யா முடிவெடுத்திருக்க வேணாம், இருவரும் இணைந்து துன்பங்களை எதிர்கொண்டால் வாழ்க்கைச் சுமையும், மனச்சுமையும் இருவருக்குமே குறைந்திருக்கும்.

வாழ்த்துகள் நண்பரே, உங்கள் பெயரையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

vc43497
13-06-2016, 06:07 PM
அழகான நடையில் அழுத்தமான கதை, ஒரு பக்க கோணத்திலேயே அகல்யா முடிவெடுத்திருக்க வேணாம், இருவரும் இணைந்து துன்பங்களை எதிர்கொண்டால் வாழ்க்கைச் சுமையும், மனச்சுமையும் இருவருக்குமே குறைந்திருக்கும்.

வாழ்த்துகள் நண்பரே, உங்கள் பெயரையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி..என் பெயர் வெங்கட்.

dellas
29-08-2016, 06:29 AM
காலம் கடத்தி செல்லும் நிகழ்வுகள் யாவுமே விந்தைதான். இன்றைக்கு பிடித்த சம்பவங்கள் நாளைக்கு பிடிக்காமல் செய்வது, நேற்றைக்கு மறுத்த நபர்களைப் பார்த்து இன்று பெருமூச்சு விடுவது.

அகல்யா நிஜம் சொல்லியிருக்கலாம்..ஒரு தீர்வு கிடைத்திருக்கும். மனசும் லேசாகியிருக்கும்..

வாழ்த்துக்கள்..