PDA

View Full Version : சாய் பாபாவும் ஷங்கரும்



vc43497
27-01-2016, 07:26 AM
ஷங்கர் என் நண்பன். கூடப் படித்தவன். நீங்கள் ஏன் குறைவாகப் படித்தீர்கள் என்று காமெடியெல்லாம் இந்தக் கதையில் கிடையாது.

முதலில்,இது கதை அல்ல நிஜம் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது.

கொஞ்சம் கதையும், நிறைய நிஜமும்.

அன்று பாருங்கள் ஷங்கரை தேடி போலீஸ் வரும் என்று நாங்கள் எதிர் பார்க்க வில்லை.

நாங்கள் என்றால் நான், மணி, ஷங்கர். தில்லை நகர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. சேலத்திலிருந்து ஆத்தூர் சாலையில், இரண்டாவது கேட் என்று சொல்கிறார்களே, உள்ளே நுழைந்தால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சந்துகளில், மூன்றாவது சந்தில், தெருவில் ஒரு மூலையில் நின்றவாறே கேரம் விளையாடிக் கொண்டிருந்தோம்.

பொதுவாக போலிசை நாங்கள் அவ்வளவு அருகில் பார்த்ததில்லை. சினிமா போலீஸ் வேறு.

இங்க ஷங்கர் யாரு?

ஜீப்பிலிருந்து ஒரு அல்லக்கை கான்ஸ்டபிள் இறங்கி எங்களை அணுகினார்.

ஷங்கர் அவ்வளவு நேரம், சாயந்திரம் எந்த சினிமா போகலாம் என்று பேசிக் கொண்டிருந்தவன்....ஒரே நிமிடத்தில், மாறிப் போனான்.

"நான்தான் சார்.....என்ன வேணும்..." என்றான்..கை நடுக்கம் தெரிந்தது.

"கொஞ்சம் அம்மாபேட்டை ஸ்டேஷன் முடிக்கும் வந்துட்டு போகணும்....ஒரு சின்ன என்குயரி..."

"இருங்க சார்...அப்பாகிட்ட சொல்லிடறேன்..."

ஷங்கரின் அப்பா, நிதானமாக வாரமலரில் குறுக்கெழுத்து போட்டுக் கொண்டிருந்தவர்.....ஈஸி சேரில் இருந்து விடுபட்டு வெளியே வந்தார்...........

"யாரு சார்..என்ன வேணும்...."

"உங்க சன்ன அம்மாபேட்டை ஈ த்ரீ ஸ்டேஷன் முடிக்கும் கூட்டிட்டு போணும் ...சின்ன என்குயரி..."

நீங்க......எங்களைப் பார்த்து கேட்டார்...

பிரண்ட்ஸ்...

நீங்க கிளம்புங்க....

நாங்கள் கிளம்பினோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
மன்னிக்கவும். இந்த கதையில் வேறு பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.

நானும், ஷங்கரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஆனால், ஒரே கம்பெனியில் வேலைக் கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை..

நண்பருடன் வேலைக்கு செல்வதில், பல நல்ல விஷயங்களும், சில கெட்ட விஷயங்களும் உள்ளன. நல்ல விஷயம், எப்போதும் நண்பனுடன் ஜாலியாக இருப்பது. கெட்ட விஷயம் வீட்டுக்கு வந்தாலும் ஆபிஸ் விஷயங்களைப் பற்றியே பேசுவது.

இதில் இரண்டாவது விஷயம்தான் எங்களை இப்படி பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று அப்போது தெரியவில்லை.

எங்கள் கம்பெனியில் புதுசாக சிவராமன் என்பவர்(ன்) வேலைக்கு சேர்ந்தார்.

ஷங்கருக்கு என்னமோ சிவராமனைப் பிடித்து விட்டது. எனக்கு என்னமோ, பிடிக்கவில்லை..

நாங்கள் வேலைப் பார்ப்பது அக்கவுண்ட்ஸ் செக்ஷன். தினமும் வரும் பெட்டி கேஷை, பேங்க் அக்கவுன்ட்சை, காஷ் ஆன் ஹேண்டை பார்க்கும் வரவு செலவு டிபார்ட்மெண்ட்.

இதற்கும் சிவராமன் வேலைப் பார்க்கும் லோன் செக்ஷனுக்கும் சம்பந்தமே கிடையாது.

இருப்பினும், சிவரமானிடம் இருந்த கவர்ச்சி, ஷங்கருக்கு பிடித்து விட்டது. சிவராமன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே, எல்லாருக்கும் சாய் பாபா படம் போட்ட பேனா கிப்ட் கொடுத்தார்.

அவரின் தோற்றம் கொஞ்சம் வித்யாசமாக இருந்தது. பெரிய உதடுகள். எதிர் ஆளை ஊடுருவும் கண்கள். சம்பந்தம் இல்லாமல், ஒரு கலரில் பேன்ட், சர்ட்...(மஞ்ச கலரில் பேன்ட் முதல் முதலாய் பார்த்தேன்)

பெரிய பெல்ட்கள். ஷூ. கிருதா. கிட்டத்தட்ட கல்கத்தா விஸ்வநாதன் மாதிரி இருந்தார்.

மொத்த ஆபிசும் அவரைப் பார்த்து, ஏனோ ஒதுங்கியது. கேண்டீனில் எல்லாரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பார்கள்..இவர் வந்ததும், உடனே அந்த இடமே அமைதியாகி விடும்.

அவரிடம் இருந்த ஏதோ ஒன்று அனைவரையும் விலக வைத்தது. ஷங்கரைத் தவிர.

ஷங்கர் அவருடன் லஞ்ச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

என்னிடம் நிறைய சொன்னான்.....

அவர் ஒரு ஞானி. அவர் மனைவி பேச முடியாத, காது கேளாத நோயாளி. இவர் சாய் பாபாவின் பக்தர். இவருக்கு பூர்விகம் ஆந்திரா. சாய் பாபாவின் உத்தரவுக்கு பிறகே,அவர் திருமணம் நடந்தது. அவரால் எதிர் காலத்தை கணிக்க முடியும்.

நான் விலகியே இருந்தேன்.

முதல் மாத சம்பளம் வந்ததும், எங்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.....

எனக்கு இஷ்டமில்லை. ஷங்கர் கட்டாயப் படுத்தி, அழைத்து சென்றான்.

ஹோட்டலில் என்னையே ஊடுருவிப் பார்த்தார்.

"நீங்க புனர்பூச நட்சத்திரமா?"

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஆமாம்.." என்றேன் தயக்கமாக....

"நீங்க இப்ப ஒரு பொண்ண விரும்பறீங்க இல்லையா?"

இவருக்கு எப்படி தெரிந்தது?

"என்னால எதிர் காலத்த கணிக்க முடியும்..சாய் ராம் எனக்கு அந்த சக்திய குடுத்து இருக்காரு.."

ஷங்கருக்கு அவர் மேல் உண்டான கவர்ச்சிக்கான காரணம் புரிந்தது..

"ரோஜா அழகா?"

"ஆமாம்..."

"இல்லை.... ரோஜா அழகுன்னு நினைக்கிற மனதுதான் அழகு"

அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எங்களை வேறு உலகத்துக்கு அழைத்து சென்றது.

அந்த சாயந்திரம் எங்களுக்கு வித்யாசமாக இருந்தது....

மீண்டும் மன்னிக்கவும் பிளாஷ் பேக் முடிந்து விட்டது.

சாயந்திரம் ஷங்கர் வீட்டிற்கு வந்து விட்டான்.

போலீசில் பெரிய தொல்லை எதுவும் இல்லையாம். ஆனால், சில அதிர்ச்சிகள் எங்களுக்கு காத்திருந்தது.

முதலில், சிவராமன் எங்கேயோ ஓடி போய் விட்டார். அவன் ஒரு ஞானி இல்லை. பிராடு. ஆந்த்ராவில், எங்கேயோ, பிராடு செய்து, மேட்ரிமோனியலில் வலை வீசி, இங்கே சேலத்தில் கொஞ்ச கால, தற்காலிக பத்திரம். அவன் மேல் நிறைய கேஸ் உள்ளது.

அவன் குளிக்கவே மாட்டானாம். அந்த வாய் பேச முடியாத பெண்ணை நிறைய கொடுமை செய்திருக்கிறான். நிறைய பணம் வாங்கி, ஏமாற்றி இருக்கிறான்.

அவன் மனைவி வாய் பேச முடியாமல், காது கேளாமல், அவனை தேடி ஸ்டேஷனுக்கு வந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சிவராமன் அதிகமாக பழகியது ஷங்கரிடம் என்பதால், கொஞ்சம் விசாரணைக்காக கூட்டி சென்றிருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கதையின் கடைசி கட்டத்திற்கு வந்து விட்டோம்.

இப்போதெல்லாம் எங்களைப் பற்றி, நிறைய பேப்பரில் வருகிறது.
ஜூனியர் விகடன் கழுகாரில், அவ்வபோது, எங்களைப் பற்றி நிறைய செய்திகள். எவையும் நல்ல செய்திகள் அல்ல. உண்மையான செய்திகளும் அல்ல.


சிவராமன் எங்கள் கூடத்தான் இருக்கிறார். மிகவும் பாதுகாப்பாக.

ஒரே ஒரு மாற்றம். போலீஸ் இப்போது எங்களையும் தேடுகிறதாம்.

dellas
27-01-2016, 08:26 AM
அடடா ...அசர வைத்துவிட்டீர்கள்.

மிகவும் நன்று. தொடருங்கள்..

vc43497
27-01-2016, 08:56 AM
அடடா ...அசர வைத்துவிட்டீர்கள்.

மிகவும் நன்று. தொடருங்கள்..

நன்றி சார்.