PDA

View Full Version : சிகரட்vc43497
05-11-2015, 05:47 AM
கொஞ்ச நாள் வடக்கே இருந்து விட்டு, சப்பாத்தியும், ஹிந்தியும், குளிரும் ஒத்துக் கொள்ளாத நாட்களில் தமிழகம் திரும்பும்பொழுது சென்னை என்னை போடா வெண்ணை என்று சொல்லாமல் ஏற்று கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட அந்த தனியார் கல்லூரி என்னை வேலைக்கு எடுத்து கொண்டது. ஒரே ஒரு கண்டிஷனின் பேரில். அதன் விடுதிக்கும் காப்பாளராக இருக்க வேண்டும். சென்னை புதிது என்பதால் உடனே ஒத்து கொண்டேன்.
மொத்தம் ஐம்பது மாணவர்கள். ஒவ்வொரு அறையிலும், நான்கு பேராக, மொத்தம் பத்து பதினைந்து அறைகள். வராண்டாவில் நடக்கும்பொழுது, கலவையாக, எல்லா மொழி சத்தமும் கேட்கும். (தெலுங்கு, தமிழ் , மலையாளம்). அதில் தான், ஒரு முறை மகேஷ் சிகரட் குடிக்கும்பொழுது மாட்டிக் கொண்டான்.
மகேஷ் தமிழனும் அல்ல. தெலுங்கனும் அல்ல. இடையில் ஒரு பாஷையில் பேசுவான். சொந்த ஊர் சித்தூர். "நாளைக்கு வருவியா?" என்றால், "மாமூல வந்துடுவேன் சார்...." என்பான். பஸ் காஞ்சிபுரம் மேல வந்தது என்பான். அவன் அப்பா வேலூரில் தெலுங்கு வாத்தியார். வீட்டுக்கு ஒரே பையன். அவ்வளவாக படிப்பு ஏறாது.
விடுதி பொறுப்பாளர் வேலை அப்படி ஒன்றும் சிரமம் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தேன். மகேஷ் மாட்டும் வரை.
முதல் நாள், மகேஷின் அறை தோழர்கள், இரவு சாப்பாட்டுக்கு பின் என்னை சந்தித்தார்கள்.
"சார்....மகேஷ் திருடிறான் சார்...என் பர்ஸ்ல இருந்து முன்னூறு ரூபா காணோம்..."
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி அணுக வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி கொடுத்திருந்தது.
"அவன் எடுக்கும் பொழுது யாரவது பார்த்தீங்களா?"
"இல்ல சார்.....ஆனா, அவன்தான் எடுத்திருக்கணும்"
"எடுத்திருக்கணும்....வேற....எடுத்தான் வேற"
"இல்ல சார்...அடிக்கடி ரூமில இப்படி பணம் காணாம போகுது சார்....அவன் அடிக்கடி மொட்டை மாடியில நின்னு சிகரட் குடிக்கிறான் சார்.."
நான் அவர்களை அப்போதைக்கு சமாதானம் செய்து அனுப்பினேன். மகேஷ் மேல் ஒரு கண் வைத்து கொண்டேன். பிரின்சிபாலிடம் சொல்லலாமா என்று முடிவு எடுப்பதற்குள், அவர் பெங்களூர் சென்று விட்டார்.
ஊருக்கு செல்லாத ஞாயிற்று கிழமை சாயந்திரம் மகேஷை தனியாக அழைத்து, மொட்டை மாடிக்கு சென்றேன்.
"மகேஷ்.....உன்னை பற்றி நிறைய கம்ப்ளேயின்ட்ஸ் வருது தெரியுமா...."
" தெரியாது சார்.....யார் என்னை பற்றி சொன்னாங்க...."
" அது இப்ப பிரச்சனை இல்லை.....நீ சிகரட் குடிப்பியா..."
"இல்ல சார்..."
"பொய் சொல்ற....இப்ப நீ சிகரட் பிடிச்சிருக்க..வாசம் வருது"
கொஞ்சம் தயங்கி, "ஆமாம்...சார்....ஆனா, நீங்க அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க சார்..."
"சொல்லல...ஆனா, இனிமே நீ சிகரட் பிடிக்க கூடாது....அப்புறம், பணம் திருட கூடாது "
"கண்டிப்பா சார்...இனிமே சிகரட் குடிக்க மாட்டேன்......ஆனா, சத்தியமா, இது வரை யார் கிட்ட இருந்தும் பணம் திருடினது இல்ல சார்....என்ன நம்புங்க..."
அவன் கெஞ்சியது மனதை உருக்கியது. கொஞ்ச நேரம், நான் படித்த எல்லா புத்தகங்களில் இருந்தும் மேற்கோள் காட்டி விட்டு, இரவு ஒன்பதரைக்கு மேல் அறைக்கு திரும்பினேன்.
இனி இந்த பிரச்சனை வராது என்ற நிம்மதியில் உறங்க போனேன். அதற்கு இடம் கொடாமல், அடுத்த வாரமே ஒரு சம்பவம் எங்களுக்காக காத்திருந்தது.
அடுத்த வாரம், மீண்டும் பணம் காணமல் போனது. இம்முறை, மகேஷ் அறையிலேயே சிகரட் பிடிப்பதாக, அறை தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.
நான் அந்த அறையை அலசும் பொழுது சிகரட் வாசம் மிச்சம் இருந்தது.
"அவன் எங்கே?"....என்று கேட்டதற்கு மொட்டை மாடியை கை காண்பித்தார்கள்
மொட்டை மாடியில் மகேஷ் தனியாக நின்று கொண்டு, பீட்டர்ஸ் ரோடை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
"மகேஷ்...உன்னைய சோதனை செய்யணும்..."
சட்டை பாக்கெட்டில் கிங்க்ஸ் லைட்சும், முன்னூறு ரூபாயும் இருந்தது.
நான் அடுத்த நாள் விடிவதற்காக காத்திருந்து, பிரின்சிபாலிடம் சொன்னேன். அவர் மகேஷை கூப்பிட்டு, கொஞ்சம் அர்ச்சித்து விட்டு, அவன் அப்பாவிற்கு போன் செய்தார். தயங்கி நின்ற அவனை, இங்க வாசலிலே நிற்கணும் அப்பா வரும் வரைக்கும் என்று சொல்லி விட்டு, தன் வேலையில் மூழ்கி போனார்.
இந்த கதை இங்கேயே முடிந்து , மகேஷ் அன்றே திருந்தி விட்டான் என்று முடிந்திருந்தால், சுபம் போட்டிருக்கலாம்.
ஆனால், யதார்த்தம் வேறு மாதிரி இருந்தது. மகேஷ் ஓடி விட்டான்.
அவன் அப்பா வரும் பொழுது வாசலில் அவன் இல்லை. ஹாஸ்டலுக்கு சென்று விசாரித்ததில், மதியம் மூன்று மணிக்கே வந்து தன் உடமைகளை எடுத்து சென்றதாக செக்யூரிட்டி சொன்னான்.
அவன் அப்பா பெரிய மீசையோடு வந்தார். சட்டையின் முதல் பட்டன் திறந்து, உள்ளே புலி நகம் தெரிந்தது.
வாடு எக்கட போய்னாறு .....என்று பெல்டை தடவிக் கொண்டார். கையில் கிடைத்திருந்தால், தோலை உரித்திருப்பார் என்று தோன்றியது.
ஆபிஸ் ரூமில் இருந்து, சித்தூர் வீட்டுக்கு போன் செய்தார்....
இன்கா ரா லேது.....என்று எனக்கே தெலுங்கு புரிவது போல் இருந்தது. எங்கே போயிடுவான்......அங்க வரட்டும் நான் பார்த்துக்கறேன்...என்று முறைத்து விட்டு, ஊருக்கு திரும்பினார்.
அடுத்த வந்த கிறிஸ்துமஸ் விடுமுறைகளில் மகேஷை முற்றிலுமாய் மறந்து போனோம்.
பேப்பர் கரக்ஷனுக்கு பெங்களூர் குளிரில், வாடிக் கொண்டிருந்த பொழுது, பிரின்சிபால் லைனுக்கு வந்தார்.
"வெங்கட்..எங்கே இருக்கீங்க"
"பெங்களுர்ல..."
"உடனே சித்தூர் போங்க"
"ஏன் சார்"
"அந்த மகேஷ் கேஸ் கொஞ்சம் சீரியஸ் ஆயிடிச்சி..அவன் காணாம போயிட்டான்...இன்னும் கிடைக்கல...அவன் காணாம போன இடம் நம்ம காலேஜ்...அதனால, அவங்க அப்பா சென்னையில நம்ம காலேஜ் மேல கேஸ் கொடுக்க போறாரு நாளைக்கு காலைல...இப்ப வகேஷன்ல காலேஜ்ல யாருமே இல்ல....கொஞ்சம் சித்தூர் போய் , அவங்க அப்பாவ கூட்டிகிட்டு, ரெண்டு பெரும் சேர்ந்து கேஸ் கொடுங்க...."
"சார்....இப்ப மணி பன்னிரண்டு.."
"இட்ஸ் ஓகே....காலையிலே பத்து மணிக்கு சென்னையில் இருந்தா .போதும்..."
நான் என்ன பதில் சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் போனை வைத்து விட்டார்.
பன்னிரண்டு மணிக்கு பெங்களூர் சாலைகளில் எந்த நடமாட்டமும் இல்லை. தெரு நாய்கள் மட்டும் சாஸ்திரத்திற்கு குரைத்து விட்டு, ஒதுங்கின.
காய்கறி வேனில் மெஜஸ்டிக் சென்றதும், அங்கிருந்து பலமனேர் வழியாக சித்தூர் சென்றாதகவும் நினைவு.
இடையில், பலமனரில் இருந்து, மகேஷ் அப்பாவிற்கு போன் செய்தேன். அம்மாதான் எடுத்தார்கள்.
"வாடு திருப்பதி போயாறு..."
எதற்கும் இருக்கட்டும் என்று சித்தூர் சென்ற பொழுது, அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் அப்பா திருப்பதி போகாமல் சமத்காரமாக உட்கார்ந்து ஹாலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
"வாங்கோ.....இன்னிக்கு உடம்பு சரி கிடையாது....நாளைக்கு நான் வரேன்...நீங்க சென்னை போங்க...."
அவன் அம்மா எந்த கவலையும் இல்லாமல், தெலுங்கு சீரியல் பார்த்து கொண்டிருந்தார். இதில் ஏதோ சதி இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
அடுத்த நாள் காலை, அவருக்காக நான் சென்னையில் காத்திருந்து, மகேஷின் அப்பா கடைசி வரை வராமல் போக...இடையில் பிரின்சிபால் மாற்றலாகி போக, மகேஷ் கொஞ்சம் கொஞ்சமாய் என் நினைவுகளில் இருந்து மறைந்து போனான்....
சமீபத்திய ஹைதராபாத் விஜயத்தில், ஜப்பானிய டெலிகேட்சுடன், ராமோஜி ராவில் சுற்றி கொண்டிருந்த பொழுது, தெலுங்கு பட ஷூட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
"நூவே காவாலி......நூவே காவாலி" என்று மத்யான வெய்யிலில் ஆடி கொண்டிருந்த பொழுது, ப்ரொடக்ஷன் மேனேஜர் மாதிரி இருந்தவர், என் தோளை தொட்டார்.
"டைரக்டர் பிலிசாரு"
எனக்கு தெரிந்த ஒரே தெலுங்கு வார்த்தையான, "எக்கடிக்கி" என்றதும், மரத்தடியில் மகேஷை மீண்டும் சந்திப்போம் என்று நினைக்கவில்லை.
பத்து வருடத்திற்கு குண்டாகி இருந்தான். கலர், கலராக பனியன். பெர்முடாஸ். மானிட்டரில் ரீ டேக் எடுத்து கொண்டிருந்தான்.
"சார்..." என்று என் காலில் விழுந்தான்.
கூட இருந்த, தெலுங்கு ஹீரோவிடம், "மை டீச்சர்..." என்றதும், அவன் ஒரு முறை என்னை பார்த்து விட்டு, தூரத்தில் இருந்த நடிகையை சைட் அடிப்பதை தொடர்ந்தான்.
"இவ்வளவு நாள் எங்கே போய் இருந்த மகேஷ்....உன்னை தேடி போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கொடுத்தோம்"
"எல்லாம் எங்க அப்பாவோட செட் அப் சார்.....எனக்கு ஆரம்பத்தில் இருந்து, படிக்க விருப்பம் இல்ல..என் ஆசை, கனவு எல்லாமே, செல்லுலாய்ட்தான்....ஆனா, எங்க அப்பா ஊரில வாத்தியார்.....அவர் பையன் சினிமா போறது, அவருக்கு பிடிக்கல....எனக்கு எவ்வளவோ சொல்லி பார்த்தார்...எனக்கு படிப்பில நாட்டம் இல்லை... அதனால, நான் காலேஜ விட்டு ஓடின உடனே, சித்தூர்தான் போனேன்...அப்பாதான், எக்கேடோ கேட்டு ஒழி,ஆனா ஊருக்குள வராதான்னு சொல்லி, கையில காசு கொடுத்து ஹைதராபாத் அனுப்பினாரு..."
"அப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன் சொன்னது ..."
"அது சொந்தகாரங்கள நம்ப வைக்கிறதுக்கு..."
"இப்ப, அவங்க எல்லாம் ஏத்து கிட்டாங்க...அப்பாவும் சமாதானம் ஆயிட்டார்....இது என்னுடைய ரெண்டாவது பிக்சர்...முதல் படம் ஹண்ட்ரட் டேஸ்..."
"ரொம்ப சந்தோஷம்பா....நீ பெரிய டைரக்டர் ஆனது எனக்கு தெரியாது...நான் தெலுங்கு படம் எல்லாம் பார்க்கிறது இல்ல"
"நெக்ஸ்ட் டைம், கண்டிப்பா வீட்டுக்கு வாங்க..." என்று சொல்லி, மெகா சைசில் விசிடிங் கார்டு கொடுத்தான். பஞ்சாரா ஹில்ஸ் என்றது.
கிளம்பும் பொழுது, என்னை ஒரு முறை கட்டி அனைத்து கொண்டே, காதில் மெலிதாக, "சார்....நான் அப்பவே சிகரட் குடிக்கிறத விட்டுட்டேன் சார் " என்றான்.

dellas
08-11-2015, 07:22 AM
நல்ல கதை. நீங்க நல்லா எழுதுறீங்க VC ..

தொடர்ந்து எழுதுங்க

vc43497
09-11-2015, 06:12 AM
மிக நன்றி