PDA

View Full Version : அனுபவத் துளிகள்



ரமணி
07-10-2015, 01:23 PM
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****

ரமணி
08-10-2015, 03:48 PM
02. வானம்
(ஆசிரியத் தாழிசை)

வானம் பார்த்தேன் வரப்பில் நின்றே
தானே எல்லாம் தாங்குவ தாகி
ஊனம் நீங்க உயரும் உளமே.

வானம் பார்த்தேன் சாலை நின்றே
மானிட வண்ண மாளிகை பிரிக்க
ஈனம் தன்னில் இழியும் உளமே.

கானம் போற்றும் கடவுள் முன்னே
ஞானம் சற்றே ஞாபகம் ஏற
வானம் என்னுள் வதியும் உளமே!

--ரமணி, 29/09/2015

*****

ரமணி
09-10-2015, 12:34 PM
03. ஆன்மா
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா)

கண்முனே தோன்றும் யாவும்
. காட்சியே உண்மை யல்ல
உண்ணுதல் உறங்கல் யாவும்
. உடலிதன் பொருட்டே ஆகும்
மண்ணிலே நீரைப் போல
. மறைந்தசீ வான்மா விற்கோ
எண்ணமே பகையென் றாகும்
. இம்மையே சிறையென் றாமே!

--ரமணி, 05/10/2015

*****

ரமணி
10-10-2015, 04:38 AM
04. மழைத்துளி
(அளவியல் நேரிசை வெண்பா)

ஈரமாய்க் காற்றில் இழைய இலைகளின்
ஓரம் மழைத்துளி ஒண்டுமே - தூரத்தில்
தேன்சிட்டு முள்மரத்தில் தேடுவது என்னவோ?
வான்பட்டு நெஞ்சினில் வால்.

--ரமணி, 07/10/2015

*****

ரமணி
11-10-2015, 01:20 PM
05. காலாற...
(அளவியல் நேரிசை வெண்பா)

காற்றில் தடுமாறும் கட்டெறும்பு; சூரியன்
மேற்கில் சிவந்து மெருகிடும் - போற்றியே
மாலையில் காலாற மாடி உலவுகையில்
காலில் நடமாடும் கண்.

--ரமணி, 07/10/2015

*****

ரமணி
11-10-2015, 02:04 PM
06. வாழை
(அளவியல் நேரிசை வெண்பா)

வாழைமரக் கன்றின் வனப்பிலென் னுள்ளத்தில்
ஏழையாய் நிற்கும் எளிமையே! - சூழும்
இலைக்குழல் மெல்ல விரியும் எழிலில்
அலையற்றுப் போமென் அகம்.

--ரமணி, 07/10/2015

*****

ரமணி
12-10-2015, 02:49 PM
07. ஒன்பது வாசல்
(அளவியல் நேரிசை வெண்பா)

ஒன்பதில் ஏழெனும் ஓயாத வாசல்கள்!
தின்பதில் ஏதுமிலை தேர்வென! - என்றே
அறிந்தும் உணர்ந்தும் அறியா நிலைநான்!
இறந்த பொழுதில் இறை.

--ரமணி, 09/10/2015

*****

ரமணி
14-10-2015, 12:37 PM
08. தலையைக் கண்டு கல்!
(அளவியல் நேரிசை வெண்பா)

அலுவல் முடித்தே அகம்நான் திரும்பத்
தலைகண்டு கல்போட்டாள் தாரம்! - இலையில்
மொறுமொறு தோசை மொளகாய்ப் பொடியும்!
பெறுவதற் கேதினி பேறு!

--ரமணி, 09/10/2015

*****

ரமணி
15-10-2015, 03:05 AM
09. சட்டுவம் தந்த நுதற்கண்!
(அளவியல் நேரிசை வெண்பா)

சாம்பும் மலர்ச்செடிக்குப் பாத்தியிட்ட சட்டுவத்தின்
காம்பினால் கண்ணுதற் காயமெழத் - தாம்கண்டே
தந்தையார் டிங்சர் தடவியொற் றும்பஞ்சு
தந்தகு ணத்தில் தழும்பு.

--ரமணி, 10/10/2015

*****

ரமணி
15-10-2015, 12:19 PM
10. அன்னை தந்த காப்பி!
(அளவியல் நேரிசை வெண்பா)

குமுட்டி அடுப்பில் கொதித்திடும் தண்ணீர்
குமிழ்க்கக் கஷாயத்தில் கூட்டி - அமுதமாய்க்
காலையில் அன்னையார் காப்பி அளித்திடும்
கோலமின்றென் எண்ணக் குமிழ்!

--ரமணி, 10/10/2015

*****

ரமணி
16-10-2015, 03:00 PM
11. எல்லாம் எதற்குள்ளும்!
(அளவியல் நேரிசை வெண்பா)

இழைவண்ணம் எங்கும் இயற்கையில்; நல்ல
மழைபெய்தே ஓய்ந்தது வானம் - குழைந்த
மழைத்துளியில் மெய்மறந்தேன் மாவிலை யோரம்
மழைத்துளியில் சிக்கும் மலை!

--ரமணி, 11/10/2015

*****

ரமணி
17-10-2015, 12:41 PM
12. பானுமதியின் தூளி!
(அளவியல் நேரிசை வெண்பா)

காலத்தாய் கீழ்மேலாய்க் கார்வானத் தூளியிலே
தாலாட்டக் கண்வளர் பானுமதி - கோலரங்க
ராட்டினமாய் பூமியே ராப்பகல் சுற்றியவள்
ஆட்டும் கிலுகிலுப்பை யாம்.

--ரமணி, 12/10/2015

*****

ரமணி
18-10-2015, 02:15 PM
13. குளியலறை சலதரங்கம்!
(அளவியல் நேரிசை வெண்பா)

குளித்து முடித்துக் குளியல் அறையில்
துளித்துளிநீர் சல்லடையில் சொட்டி - அளிக்கும்
சலதரங்க ஓசையின் சன்னம் ஒலிக்க
நலிவில் விளையும் நலம்.

--ரமணி, 14/10/2015

*****

ரமணி
19-10-2015, 12:18 PM
14. தென்னை மரம்
(அளவியல் நேரிசை வெண்பா)

ஓலைகள் ஒவ்வொன்றும் ஓர்பாளை தாங்கிட
கோலத்தில் பின்னலாய்க் கொள்பூக்கள் - காலத்தில்
சின்னப்பூ வொன்றே சிதறாது காயாகும்
தென்னையென வாழ்வதென்றோ தேர்ந்து?

--ரமணி, 14/10/2015

*****

ரமணி
20-10-2015, 02:30 AM
15. புளிய மரம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் . மா மா காய்)

இலையதன் புளிப்புத் தொண்டையிலே
. இனிதே இறங்க நான்சுவைத்தேன்
இலைமறை காயின் புளிப்பதுவோ
. என்றன் பல்கூ சச்செய்யும்
வலியதாம் ஓட்டின் உள்ளாடும்
. மதுரக் கனியில் நாவினிக்கத்
தலைமிசைக் கல்தான் விழுந்ததுவே
. தரையில் பழத்தைப் பொறுக்கிடவே!

--ரமணி, 15/10/2015

*****

ரமணி
23-10-2015, 02:24 AM
16. மூக்கில் வடையுடன் விமானம்!
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)

காக்கை வடையொன்றைக் கவ்வியே வானில்நான்
பார்க்கச் சிறகிரண்டைப் பக்கம் விரித்தேதன்
போக்கிலே போவது போலோர் விமானம்தன்
மூக்கில் விளக்குடன்கண் முன்பு.

--ரமணி, 15/10/2015

*****

ரமணி
27-10-2015, 03:02 AM
17. நித்யமல்லிப் பூநிரை
(அறுசீர் விருத்தம்: தேமா மா மா மா மா காய்)

சின்னச் சின்ன இதழாய் ஏழில்
. செல்லும் விழிகாண
என்னை மயங்கச் செய்யும் மணமே
. ஏறும் நாசியிலே
சன்னப் பூவாம் நித்ய மல்லி
. சேரும் அர்ச்சனையில்
பொன்னன் சடையன் பித்தன் பாதம்
. போற்றி மகிழ்ந்தேனே.

--ரமணி, 15/10/2015

*****

ரமணி
27-10-2015, 03:03 AM
18. வாத்துகளின் கவாத்து!
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)

சாலிக் கதிர்தலை சாய்க்கும்தென் காற்றினில்
மாலைப் பொழுதாக வாத்துகள் - கோலவெண்
தீற்றாய்ப் பயிலும் சிறுநடை; கோலுடன்சேய்
ஆற்றுப் படுத்தும் அழகு!

--ரமணி, 18/10/2015

*****

ரமணி
27-10-2015, 12:31 PM
19. மழைத்துளி மழலைகள்!
(அளவியல் நேரிசை வெண்பா)

கருக்கொளும் வானம் கடிபொழு தில்தன்
உருவெதும் அற்ற உதரம் - பருக்க
மழைத்துளி வீழ்ந்தே மழலைக ளாகத்
தழைத்தே விரையும் தவழ்ந்து.

--ரமணி, 19/10/2015

*****

ரமணி
28-10-2015, 03:41 AM
20. முழுவெண்ணிலவு!
(அறுசீர் விருத்தம்: புளிமா மா காய் . புளிமா மா காய்)

முழுவெண் நிலவைக் குளத்தினிலே
. முழுக வைத்தே சிற்றலைகள்
கழுத்தை நெரித்துத் துண்டாக்கிக்
. கடித்துத் தின்ன முயன்றதுவே!
முழுவெண் நிலவோ துண்டுகளில்
. முழுதாய் நின்று சிரித்ததுவே!
முழவாய் எண்ணம் அதிர்த்தாலும்
. முழுதாய் நிற்கும் என்மனதே!

--ரமணி, 19/10/2015

*****

ரமணி
29-10-2015, 12:01 PM
21. பல்லாங்குழிப் பயிர்கள்
(இருவிகற்ப அளவியல் இன்னிசை வெண்பா)

பல்லாங் குழிபோன்ற பாத்திக் குழித்தட்டில்
மெல்லிய பைங்கூழ் விதைபல தென்னையின்
நார்கழிவில் மேலெழும் நாற்றுக்கைப் பிள்ளைக்கு
நீர்புகட்ட நெஞ்சில் நெகிழ்வு.

--ரமணி, 20/10/2015

*****

ரமணி
30-10-2015, 04:28 AM
22. காகிதமும் கணினியும்
(எழுசீர் விருத்தம்: கூவிளம் விளம் மா விளம் . விளம் விளம் காய்)

ஏகமாய் அடித்ததைத் திருத்தி மறுபடி
. இன்னொரு வரைவென எழுதியுமே
காகித நாட்களில் கதையும் கவிதையும்
. கலகலப் பாகநான் எழுதினனே
வேகமாய்க் கணினியின் விசைகள் தட்டியே
. விழைவது திருத்துதல் எளிதாகக்
காகமாய்க் கணினியில் விரல்கள் கொத்தியும்
. கதைகளும் கவிதையும் வந்திலையே!

--ரமணி, 22/10/2015

*****

ரமணி
31-10-2015, 12:37 PM
23. கண்ணிமைக்குள் ஒரு திரைப்படம்
(அளவியல் நேரிசை வெண்பா)

கண்ணிமை மூடநான் காண்நாவல் வண்ணத்தில்
எண்ண அணுக்கள் எழுதிடவே - வண்ணத்
திரைப்படம் என்னுள் திகில்நிறைவாய் ஓட
ஒருமித்துக் காணும் உளம்.

--ரமணி, 23/10/2015

*****

ரமணி
03-11-2015, 01:02 PM
24. ஆட்டுக்கல் அறிவுரை!
(அளவியல் இன்னிசை வெண்பா)

இருக்கும் வரையில்தான் இன்பம் துயரம்
மரணமேற் பட்டால் மனிதன் சடலந்தான்
ஆட்டுக்கல் மாவரைத்தே அன்னை - குழந்தைநான்
கேட்க மனதில் கிலி.

--ரமணி, 24/10/2015

*****

ரமணி
04-11-2015, 12:23 PM
25. அசலும் நகலும்
(கலித்துறை: எல்லாம் காய்ச்சீர்)

’அறம்செயவி ரும்பென்றும் ஆறுவது சினமென்றும் அப்பாதன்
முறம்போலும் எழுத்துகளில் முத்தாக ஏடெழுதி முன்வைக்கத்
திறமையுடன் நான்முயன்றே தவறுபல செய்ததெலாம் திருத்தியவர்
பொறுமையுடன் போதித்த பொழுதெல்லாம் என்மனதில் பொக்கிஷமே!

--ரமணி, 25/10/2015

*****

ரமணி
05-11-2015, 11:09 AM
26. மின்ரயில் மரவட்டை!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஒளிரும் மரவட்டை ஊறுவது போல
உளமகிழ் தூரத்தில் ஓசையின்றி மின்ரயில்!
மையிருளில் என்கண் மகிழுந்தின் சன்னலில்
பொய்யாய்க் கரைக்கும் பொழுது.

[மகிழுந்து = கார் ]

--ரமணி, 25/10/2015

*****

ரமணி
06-11-2015, 01:34 AM
27. கானலின் தும்பு!
(அளவியல் நேரிசை வெண்பா)

சுட்டெரிக்கும் வெய்யிலில் சோர்ந்த பயணத்தில்
கட்டவி ழும்மரங்கள் கார்நிழல் - வெட்டியே
சாலை விரைந்துசெலும் சக்கரம் தூரத்தில்
தூலமாய்க் கானல்நீர்த் தும்பு.

--ரமணி, 26/10/2015

*****

ரமணி
06-11-2015, 11:41 AM
28. முகிலும் நிழலும்
(அளவியல் இன்னிசை வெண்பா)

முகிலொன்று சூரியனை மூடிடக் கண்டேன்
முகிலின் நிழலோட முன்னோடும் சாலை
நிழலும் வெயிலுமாய் நின்றுசெலும் ஆட்டம்
விழலே விழுமத்தின் வித்து.

--ரமணி, 27/10/2015

*****

ravisekar
06-11-2015, 12:08 PM
வாசிக்க வாசிக்க பிரமிக்க வைக்கிறது உங்கள் ஆற்றல், வணங்குகிறேன் ரமணி !

ரமணி
08-11-2015, 12:59 PM
29. வாயால் ஒரு வானவில்!
(அறுசீர் விருத்தம்: தேமா மா காய் மா மா காய்)

வாயில் கொஞ்சம் நீர்வைத்தே
. வாயை நெகிழிப் பந்தாக்கிப்
பாயும் காற்றால் கொப்பளிக்கப்
. படலம் போல நீர்த்துளிகள்
மாயக் கதிரின் பிரிகையென
. வான வில்லாய் விழநாங்கள்
சேயாய்க் கண்டு மகிழ்ந்ததெலாம்
. சிந்தை நிற்கும் விலகாதே!

[நெகிழிப் பந்து = பலூன்]

--ரமணி, 28/10/2015

*****

ரமணி
10-11-2015, 03:09 AM
30. கல்லுரிக்கும் வானவில்!
(அறுசீர் விருத்தம்: கூவிளம் மா காய் விளம் மா காய்)

கல்லணை மதகின் நெடுஞ்சுவர்கள்
. காவிரி அலைகள் மோதுவதைச்
சல்லடை யாகக் காற்றினிலே
. சலித்திடப் பிரியும் நீர்த்துளிவான்
வில்லெனக் காற்றில் சிதறுவதை
. விழிகளில் மலைத்தே ரசித்தகணம்
சொல்லெது மில்லாச் சித்திரமாய்ச்
. செய்திட வந்தேன் சொற்களிலே!

--ரமணி, 28/10/2015

*****

ரமணி
10-11-2015, 11:01 AM
31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1

[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]

கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2

சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3

--ரமணி, 31/10/2015

*****

ரமணி
11-11-2015, 12:23 PM
32. மழைக்கால மாலை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1

தரையில் சுவரில் சலனம் இன்றிக்
கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2

தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3

[கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]

விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4

தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5

--ரமணி, 01/11/2015

*****

ravisekar
12-11-2015, 04:24 PM
தமிழும் நீங்களும் சேர்ந்து தரும் விருந்து. வாயால் வானவில்... மழைக்காலக் காட்சிகள் அத்தனையும் ஓவியம்போல் அசத்தல் ரமணி.

ரமணி
13-11-2015, 01:00 PM
பின்னூட்டம் பலே! மிக்க நன்றி, ரவிசேகர்.


தமிழும் நீங்களும் சேர்ந்து தரும் விருந்து. வாயால் வானவில்... மழைக்காலக் காட்சிகள் அத்தனையும் ஓவியம்போல் அசத்தல் ரமணி.

ரமணி
13-11-2015, 01:26 PM
33. பசுவின் பாய்ச்சல்!
(பஃறொடை வெண்பா)

கல்லணை பார்த்தபின் கல்லூரித் தோழனுடன்
வில்லம்பாய்க் கால்மிதி வண்டியில் செல்கையில்
பின்னால் பசுவொன்று பேயாய் விரட்டியது!
இன்னும் விரைவோம் எனநாங்கள் முன்செல
தானும் விரைந்தெமைத் தாக்கத் துரத்தியது
நானென் நிலையில் நலிந்தே விழுந்தேன்!
வலுவுடன் முட்டிட வந்த பசுவென்
நலிவினைக் கண்டே நறுக்கென நிற்கக்
கணுக்கால் இணைப்பினில் காயத் துடன்நான்
துணுக்கில் மகிழ்ந்தேன் துவண்டு.

--ரமணி, 02/11/2015

*****

ரமணி
14-11-2015, 12:12 PM
34. கண்முன்னே ஓர் கொலை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!

--ரமணி, 03/11/2015

*****

ravisekar
14-11-2015, 12:44 PM
அனுபவங்கள்
அத்தனையும்
அசலான
அமுதப்பாக்களாய்..

நாங்கள் பருகும் ஈக்களாய்.

ரமணிக்குப் பாராட்டுக்கள்.

ரமணி
17-11-2015, 02:13 PM
45. சிறகைக் களைந்தால் சிறை?!
(அளவியல் இன்னிசை/நேரிசை வெண்பா)

பிரளயத்தின் ஓர்துளி பேய்மழை ஆட்டம்
இரணியன் நெஞ்சென இற்றது பூமி
தனதாம் பொருட்களின் தாக்கம் தகர்த்தே
மனதை அரித்த மழை. ... 1

தினமும் மழையில் திரண்டுருள் வெள்ளம்
வனப்பில் பயத்தினை வார்த்தது நெஞ்சில்
கனவுகள் பொய்யாய்க் கவலைகள் மெய்யாய்
மனத்தை அரித்த மழை. ... 2

வெள்ளம் நலத்தை விசாரிக்க வீடுபுக
உள்ளம் பயத்தில் உறையவே - உள்ள
உடைமையில் உண்ண உறங்கவெனத் தேவை
எடுத்தேறி னோம்மாடி மேல். ... 3

அணைந்தமின் சாரசக்தி ஆற்றுப் படுத்த
இணையம் இலாத இருளில் - பிணையெலாம்
அற்றவுளம் நிம்மதியில் ஆறாதோ? மாறாகக்
குற்றுயி ரான குலை. ... 4

கடமை குறையக் கவலை குறைய
உடைமை குறைப்பதில் உள்ளங்கள் ஒன்றக்
குடும்பத்தின் கூட்டுறவைக் கொண்டாடி னாலும்
விடுத்ததைப் பற்றும் விழைவு. ... 5

மூன்று தினமாக முக்கி முனகியே
ஊன்றுகோல் இன்றி உளைந்து தவிக்க
விடியலின் கீற்றுவர விட்டது மாரி
ஒடிந்த மனத்தில் உவப்பு. ... 6

இணையம் இலக்கியம் கேளிக்கை என்றே
துணைகளைப் பற்றித் தொடர்ந்திடும் வாழ்வில்
சிறகை விரும்பும் சிறுமனம் எண்ணும்
சிறகைக் களைந்தால் சிறை. ... 7

--ரமணி, 17/11/2015

*****

ரமணி
19-11-2015, 11:31 AM
46. சாலையில் மீன்கள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

இந்தமழை வெள்ளத்தில் துன்பம் எதற்கெனில்
சொந்தமென ஏரியின் சூழலில் வாழ்மீன்கள்
ஏரி உடைய எறிவெள்ளம் பாயவே
மூரி இழந்த முடை. ... 1

[மூரி = வலிமை, பெருமை, பழமை; முடை = நெருக்கடி]

சாலைவழி வெள்ளத்தில் சஞ்சரித்த மீனெலாம்
ஓலமிட்ட மௌன ஒலியுடன் வீட்டுவெளிப்
பாதையில் கேணியில் பற்பல குஞ்சுடன்
சேதமுறும் சேற்றுடன் சேர்ந்து. ... 2

இந்தமழை வெள்ளத்தில் இன்பம் எதற்கெனில்
வந்துவந்து வெள்ளம் வரும்மீன் பிடிக்கத்
தடியால் அடித்துத் தவளையாய்ப் பாய்ந்தே
விடுவலை கொண்ட விழி. ... 3

மீன்விலை யேற்ற மிதப்பில் சிலமக்கள்
வான்வழி நீரினால் வந்ததைப் பற்றி
நெகிழ்பையில் சேர்த்த நிகழ்வினைக் கண்டோர்
நெகிழ்ந்தே வருந்தும் நிலை. ... 4

உயிர்கள் வதைதடுக்க உள்ளசட் டம்தான்
அயலாகிப் போக அரிதாமோ மீன்கள்?
கயல்விழி கண்ணில் கவிதையில் தானோ?
உயிர்க்கும் உரிமையிலை யோ? ... 5

--ரமணி, 17/11/2015

*****

ரமணி
19-11-2015, 11:32 AM
மிக்க நன்றி, ரவிசேகர்.
ரமணி



அனுபவங்கள்
அத்தனையும்
அசலான
அமுதப்பாக்களாய்..

நாங்கள் பருகும் ஈக்களாய்.

ரமணிக்குப் பாராட்டுக்கள்.

ரமணி
20-11-2015, 12:46 PM
35. காலம் கடந்த ரயில்!
(நேரிசை ஆசிரியப்பா)

’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
காலம் கடந்தும் ரயிலின்
ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.

அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
அணுகில் ஆடும் அசைபடம் என்றே
வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?

--ரமணி, 04/11/2015

*****

ரமணி
21-11-2015, 01:12 PM
36. ஆறும் ஆஞ்சநேயரும்!
(நேரிசை ஆசிரியப்பா)

ஆற்றங் கரைப்பள்ளி. ஆசையுடன் நாங்கள்
சேற்றில் நிற்போம். சிறுமீன்கள் கொட்டும்.
அலைகள் வருடும். ஆனந்தம் பொங்கும்.
சிலபை யன்கள் சிறுமீன்கள் புட்டியில்
நீருடன் அடைத்தே நிறைவெய்தச்
சீரிழந் தேயவை சின்னாளில் சிலையாமே!

அருகில் கோவிலில் ஆஞ்சநேயர் கும்பிட்டே
அருமைச் சுற்றம் அவள்தோழி யுடன்நான்
சில்லெனும் உணர்வையெம் சிறுதொடை விரும்பக்
கல்மேடை அமர்ந்தே சொல்லுரை யாடுவோம்.
கள்ளமிலா நாட்கள் கனவாக
உள்ளம் இன்றும் உவகையில் ஒன்றுமே!

--ரமணி, 05/11/2015

*****

ரமணி
22-11-2015, 11:33 AM
37. கற்சட்டி மகிமை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கற்சட்டி நிறையக் கட்டித் தயிர்சாதம்
சுற்றியரை வட்டமாய்ச் சொகுசாய்த் தரையமர்ந்தே
உருவினிற் பெரியதாய் உருண்டை உள்ளங்கைக்
கரம்நீட்டி வாங்கிக் கட்டை விரல்மடித்தே
சின்னதாய்க் குழியைச் செய்தபின் சாம்பாரால்
அன்னையின் அன்னை அற்பக் குளமாக்க
பருக்கை சிதறாமல் பல்லால் கவ்வியதன்
உருவம் சிதைத்தே உட்கொளும் குழந்தைகளாய்ப்
பொன்மாலை மறைந்த பொழுதை இரவுண்ணச்
சின்னக்கை நக்குவோம் சீர்த்தெழும் ஏப்பமே!

கற்சட்டி உடையமாக் கல்லென் றாகியே
பற்பல வாயெழுதப் பயன்தரும் கோலாகும்
மகளிர் புள்ளி வைத்தே கோலமிட
மகன்மை வாரிசாம் வால்கள் நாங்களோ
தரையில் கிறுக்கித் தத்தம் பாடங்கள்
உருவேற்றும் வேலையில் உள்ளம் களைத்தே
வரைவோம் சித்திரம் வாய்மூக்கு வைத்தே
ஒருவரை ஒருவர் புகழ்ந்தே பழித்தே!
கற்சட்டி மாக்கல் கண்படா இன்னாளில்
வெற்றுக் காகிதமும் வீணென மறையுமே!

--ரமணி, 07/11/2015

*****

ரமணி
23-11-2015, 01:00 PM
38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)

ஆரோவோர் பையன்... (கொஞ்சம்நான் நிதானித்தே)
. அடிவாங்கப் போறான்!
தாராள மெனினும் தந்தையன்றோ? என்பொறுமை
. தளைமீற இரைவேன்
பேரோசை விளைத்தே பித்தாக்கும் பிள்ளைதொலை
. பேசியைக்கை விடுக்கும்!
வாரிக்குள் மணியாய் வந்ததன்றோ? குறும்பெல்லாம்
. மனதுக்குள் மகிழ்வே!

ஆரோவோர் பையன்... மீண்டொலிக்கும் என்குரலே!
. ஆசையிலே பிள்ளை
பேரோசை வைத்தே பக்கத்தில் நின்றுகொண்டே
. பிடித்ததெலாம் பார்க்கத்
சோராமல் நானும் மறுபடியும் குரலேற்றத்
. தொலைக்காட்சி யடக்கி
ஆரோவோர் பையன்... பிள்ளையது எதிரொலிக்கும்
. அடிவாங்க மாட்டான்!

--ரமணி, 07/11/2015

*****

ரமணி
24-11-2015, 12:02 PM
39. மழையின் மற்றொரு பக்கம்
(பஃறொடை வெண்பா)

கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்! முழங்கால்
அணைத்தே சுழலுடன் ஆறென நீரோடும்
மின்வெட்டின் காவல் வினைசெய்ய ஏதுமில்லை
சன்னமாய்ச் சூழ்ந்தே தளைத்த இருளில்
நுழைவதற் கேதுமின்றி நொந்து தவித்தே
மழைப்பொழிவில் மூழ்கும் மனம்.

--ரமணி, 10/11/2015

*****

ரமணி
25-11-2015, 03:12 PM
40. வாலறி(ரி)வர் தந்தை!
(பஃறொடை வெண்பா)

குழந்தை யிரண்டு குறும்போ பலவே
வழிவழி யாய்வரும் வாடகை வீட்டறையில்
தொங்கியொளிர் மின்குமிழ்த் தொப்பி இடுக்கினில்
டிங்கென்று விக்ஸ்சிமிழ் டிங்கி யடிக்கவே
தாழ்கரத்தால் மேலெறிந்து சப்தம் ரசிக்கவே
மூழ்போட்டி தன்னிலே முட்டைக் குமிழ்தெறிக்க
ஓடிக் குளியலறைப் பக்கம் ஒளியவே
நாடிவந்த அன்னை நலம்விசா ரித்தபின்
மாலையவள் தந்தையிடம் வக்கணையாய்ச் சொல்லப்போம்
ஓலை விசிறி உடைந்து. ... 1

[மின்குமிழ்த் தொப்பி = light bulb dome;
டிங்கி = குட்டிக்கரணம்]

அதன்பின்னர் தந்தை அணைப்பில் குளித்தோம்
பதிந்த தழும்பைப் பதமாய்த் தடவியவர்
சீனிக்கா ராசேவில் சிற்சில தந்திடத்
தீனியில் உள்ளம் திளைத்தே இருவரும்மண்
ணெண்ணெய் விளக்கினில் ஏறும் நிழல்பார்த்தே
உண்ணும் உணவிலே உள்ளம் களித்தோம்
கனிவுடன் அன்னை கதைசொலக் கேட்டே
தனிமை தழுவினோம் தாழ்விழித் தூக்கத்தில்!
போன பொழுதைப் புதுப்பிக்கும் உள்ளத்தில்
வானவில் வண்ண வளம். ... 2

--ரமணி, 10/11/2015

*****

ரமணி
26-11-2015, 01:11 PM
41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)

மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1

மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2

கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3

--ரமணி, 11/11/2015

*****

ரமணி
27-11-2015, 12:20 PM
42. வற்றல் குழம்பு விருந்து!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1

இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2

முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3

இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4

--ரமணி, 12/11/2015

*****

ரமணி
28-11-2015, 11:24 AM
56. இங்கிதம் இயற்கையில் வருக!
(பன்னிரு சீர் விருத்தம்: கூவிளம் விளம் விளம் மா
. கூவிளம் மா மா மா
. கூவிளம் விளம் விளம் மா)

இத்தனை நீலமாய் நீளமாய் நெடுக
. எல்லையில் லாமல் பரந்த வானை
. எப்படி மறைத்தது கார்முகிற் காட்டம்!
இத்தனை நாட்களாய் நாணியே பரிதி
. எப்படிக் மூட்டப் போர்வை யுள்ளே
. எத்தனம் குறையுறக் கழித்ததோ பொழுதை!
இத்தனை நாட்களும் கலையென வளர்ந்த
. இந்துவும் தனது முகத்தை மறைத்தே
. எப்படிக் கார்முகிற் கோட்டையிற் சிறையோ?
இத்தனை நாட்களும் இல்லமே சிறையாய்
. எண்ணுதல் எதுவும் இயலா மடிமை
. என்னுளம் ஏறவே தூங்கிய விழிப்பே!

இன்றைய நாள்முதல் வானிலை மாற்றம்
. எத்தனை வண்ணம் என்ன அழகு!
. எத்தனை பறவைகள் எத்தனை ஒலிகள்!
இன்றைய கதிரவன் எழுச்சியில் செம்மை
. இன்முக ஒளியில் கிரணம் வெம்மை
. என்னுளே உணர்வினில் சிந்தையில் விரவும்!
இன்றைய தேய்மதி நேற்றைய இரவில்
. எத்தனை அழகாய் விண்மீன் பலவும்
. எங்கணும் மினுக்கவே ஒளிர்ந்தது நிறைவாய்!
இன்றுபோல் இனிவரும் தினங்களில் இயற்கை
. இங்கிதம் எளிதாய் மிதமாய் விளங்கும்
. இந்திரம் இறைவனை வேண்டிடு வேனே!

[இந்திரம் = மேன்மையானது]

--ரமணி, 28/11/2015

*****

ரமணி
29-11-2015, 01:21 PM
43. விரல் நுனியில் நட்சத்திரம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

மாடித் தரைபடுத்தே வான்பார்த்தேன் தந்தையுடன்
நாடும் விரல்நுனியில் நட்சத் திரம்வர
ஓடும் வினாக்களை உற்சாக மாய்க்கேட்டே
தேடும் விடையறிந் தேன். ... 1

எவ்வளவு தூரம்நாம் இந்தவான் போகலாம்
இவ்வளவு தானென்று எட்டாதோ நம்தலை?
வானமோர் போர்வையென வஸ்துகளை மூடவில்லை
வானம் அகண்ட வெளி. ... 2

விண்வெளி திக்கில்லா வெற்றுப் பெருவெளி
அண்டங்கள் தொங்கும் அகண்டமிது - உண்டுநம்
சூரியக்கு டும்பம்போல் சுற்றும் பலகுடும்பம்
வேரென ஈர்ப்பு விசை. ... 3

இந்தவுல கங்கள் இடைதூரம் கோடிமைல்
சந்திரன் ரெண்டரை லட்சம்-அதன் - முந்தானை
பற்றிய விண்மீன் பலகோடி மைலாகும்
கற்றறிய நான்தருவேன் நூல். ... 4

தந்தைநூல் தந்தநனி தாக்கத்தில் தேடியதில்
வந்ததே பற்பல வான்கதை ஆர்வியின்
காலக்கப் பல்வெல்ஸின் காலயந்தி ரம்மற்றும்
கோலமாய்ப்ப றக்கும்பாச் சா! ... 5

[ஆர்வியின் ’காலக்கபல்’ மற்றும் ’பறக்கும் பாச்சா’ போன்ற குழந்தைகளுக்கான
விஞ்ஞானக் கதைகள் அறுபதுகளில் ’கண்ணன்’ போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில்
வெளிவந்தன.]

விண்வெளி விஞ்ஞானி யாகும் கனவுகள்
மண்வெளிக் கட்டில் மடிந்தன - விஞ்ஞானக்
காதை மரபுக் கவிதை கதைபண்ணும்
பாதையில்நான் என்று பவிசு. ... 6

--ரமணி, 13/11/2015

*****

ரமணி
30-11-2015, 01:14 PM
44. தைலதாரை!
(அளவியல் இன்னிசை வெண்பா)

குழாய்வரும் நீரைக் குறைத்தால் கலத்தில்
குமிழிகள் இன்றிக் குறித்தவோர் புள்ளியில்
எண்ணெய்ப் பெருக்காய் இழிவதைக் காணுவாய்
எண்ணம் அறுந்த இருப்பு. ... 1

இவ்வாறே உள்ளத்தில் எண்தொடர் வெட்டியே
செவ்வனே சொற்குறைத்துத் தேயென்றார் ஆசான்
நடந்த முரணிலின்று நானோர்சொற் செல்வன்
உடந்தையாய் நிற்கும் உலகு!... 2

--ரமணி, 14/11/2015

*****

ரமணி
09-12-2015, 11:11 AM
47. உத்தியோக பருவம்: தினவாழ்வு
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒருரூ பாய்க்கு முழுச்சாப் பாடு
திருச்சி மற்றும் சேலம் நகரில்
வரமென் றெழுபதில் வாய்த்த விருந்தை
வரித்தே கொள்ள வயிறெனை வாழ்த்துமே! ... 1

அறுபதுபை சாவில் அறுசுவைச்சிற் றுண்டி
இறுதியில் காப்பியும் இத்துடன் சேரும்!
மாசமிரு நூறாய் வாய்த்தசம் பளத்தினில்
ஆசைகள் யாவும் அடங்கும் நூறிலே. ... 2

அலுவல் முடிந்த அஞ்சுமணிக் கெல்லாம்
பலவிளை யாட்டில் பகிர்வோம் பொழுதை
கேரம் பலகையில் கேவும் காய்கள்
ஓரம் ஓடியே ஒருகுழி விழுமே. ... 3

சதுரங் கந்தனில் சாதுவென் றாகி
மெதுவாய் விரோதம் விளைத்திடு வோமே
மேசை டென்னிஸ் மேவும் பந்தை
வீசியே வெட்ட விளையும் புள்ளியே! ... 4

மோதிரத் திகிரி மோகன மாய்ப்பல
சோதனை செய்வதில் சுருளாய் எழுந்தே
வலைமேல் செல்லப் பிடிவிரல் வலிக்க
நிலைகொள் ளாதே நிலத்தில் விழுமே. ... 5

[மோதிரத் திரிகை = tennikoit, ring tennis]

அறையில் வெளியில் ஆடுவிளை யாட்டில்
இறைசந் தோஷம் இழையும் நேசம்
நேற்றோ இன்றோ நேர்ந்தது போல
ஏற்றிப் பார்த்தே இன்புறும் மனமே! ... 6

--ரமணி, 19/11/2015

*****

ரமணி
16-12-2015, 12:07 PM
48. உத்தியோக பருவம்: முதல் நண்பர்கள்
(அளவியல் நேரிசை வெண்பா)

முதல்வேலை யாண்டில் முகம்பல நட்பில்
மெதுவாக முன்வந்து மேவ - இதமான
நண்பர் பலராகி நாளும் அரட்டையாய்ப்
பண்ணியகச் சேரி பல. ... 1

எத்தனை நண்பர்கள் என்ன தனிப்போக்கே!
அத்தனையும் எண்ணவே ஆனந்தம் - பத்துமயிர்
மீசை முளைக்க விழிக்கோல் கருப்பாக்கும்
ஆசைகொள் தோழன் அழகு! ... 2

[தனிப்போக்கு = personal manner, idiosyncracy;
விழிக்கோல் = eyebrow pencil]

பச்சையாய் முட்டையைப் பற்றி நுனிசுண்டி
இச்சையாய் வாயில் இடுவானே - மெச்சும்
மகளிர் விழியில் வடிவும் உடலும்
வகையாய் வளர்த்திடு வான். ... 3

நீச்சல் நிபுணனாய் நின்றவோர் தோழனோ
கூச்சலாய்ப் பேசாத குள்ளனாம் - ஆச்சரிய
நீளநகம் வெள்ளையாய் நின்றவன் வாழ்குறிக்
கோளாம்: முடிவதெலாம் கொள். ... 4

இந்திய சேனை இருந்தவர் தம்வாயை
எந்திரமாய் மெல்லுவார் எப்போதும் - வந்தகுளிர்
ஆடவைத்த சூழல் அலுவலில் பாசறையில்
தாடைப் பயிற்சிக்காம் கோந்து. ... 5

[கோந்து = chewing gum]

இன்னும் பலதோழர் எண்ணும் மனத்திலே
மின்னுவர் காட்சிகள் மேல்வரும் - இன்றவர்
எல்லோரும் எங்குள்ளார் எப்படி என்றறியும்
எல்லை கடந்த இசைவு. ... 6

--ரமணி, 20/11/2015

*****

ரமணி
18-12-2015, 02:28 PM
67. இந்நாள் மறைந்த என் தம்பியின் நினைவாக...
(அளவியல் நேரிசை வெண்பா)

இந்நிலை யில்நீர் இருப்பதே விந்தையென்று
முன்னின்ற வைத்திய மூத்தோர்கள் - சொன்னதெலாம்
தன்னுளம் கொள்ளாது சாதனையாய் நீநின்றாய்
உன்னுயிர் நீங்கும் வரை.

விரல்நுனி நீலம் விளையப் பிறந்தும்
அரியதோர் ஆற்றல் அறிவோ(டு) - உரம்கொண்டே
உன்னிதயம் உள்ளடக்கி வாழ்ந்ததை உள்ளுகையில்
என்னிதயம் விம்முதே இன்று!

[விரல்நுனி நீலம் = clubbed finger tips with blue tinge,
typical of congenital heart patients]

பள்ளி முதலாய்ப் பதினொன்றில் நின்றுசிராப்
பள்ளியில் கல்லூரிப் பாடத்தில் - அள்ளி
மதிப்பெண் குவித்தே மதிப்புடன் தேறி
இதழியலும் கற்றாய் இனிது.

[இதழியல் = journalism]

தொலைத்தொடர்பு சேவைத் துறையின் பணியில்
நிலைத்தே உயர்பதவி பெற்றாய் - தலையில்
வணிகமே லாண்மையின் பட்டமும் சூடித்
துணிந்தாய்நீ ஆசான் பணி.

[வணிக மேலாண்மைப் பட்டம் = MBA]

கலையாய்க் கதைகள் கவிதை எழுதப்
பலவிதழ்கள் உன்பேர் பரப்ப - மலைத்தேன்
நிலையாத வாழ்விலே நின்ற(து) அலுத்தோ
சிலையானாய் உன்னாயுள் தீர்ந்து.

ஐம்பதே ஆயுளென் றாயினும் உன்வாழ்வில்
மொய்ம்புடன் வாழ்ந்துநீ முன்னின்றாய் - சம்புவின்
பக்தனாய் வாழ்வில் பரிமளித்தாய் நற்கதியில்
சக்தனாய் ஆக்குமவன் தாள்.

[மொய்ம்பு = வலிமை]

--ரமணி, 18/12/2015

*****

ரமணி
24-12-2015, 02:23 PM
49. பேனாவும் கைவிளக்கும்
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஒருபொத்தான் தள்ள ஒளிசெந் நிறம்-இன்
னொருபொத்தான் தள்ள ஒளிபச்சை யாய்-மற்
றொருபொத்தான் தள்ள ஒளிமஞ்சள் என்றே
விரிந்ததே அப்பா விளக்கு!

இதுபோல் இருந்த இளுகுமைப் பேனா
அதுவுமென் சட்டை அணியென - இந்நாளில்
பேனாவில் மின்தகவல் பேழையாம் - கைவிளக்கில்
நானா விதமின் நலம்.

[இளகுமைப் பேனா = ballpoint pen
மின்தகவல் பேழை = pen drive
நானாவித நலம் = smaller batteries, chargeable, digital, solar]

--ரமணி, 20/11/2015

*****

ரமணி
02-02-2016, 12:34 PM
50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)
(அளவியல் இன்னிசை வெண்பா)

மழைவெள்ளம் மாடி துரத்தவே - இன்னும்
இழையாத வாழ்தினம் இத்தளத்தில் - மின்னும்
மழைநீரில் ஆதவன் வண்ணம் - எதுவும்
நுழையாத உள்ளத்தில் நொப்பு.

[நொப்பு = வெள்ளப் பெருக்கில் வரும் செத்தை, அழுக்கு முதலியன]

உணவு உறங்கல் உழைப்பிலே - உள்ளம்
சுணங்கவே றேதும் சுமையாய் - வெறுமை
கவிந்திடச் செல்லுமே காலம் - இதனைத்
தவிர்த்திட ஏலாத் தவிப்பு.

[ஏலா = இயலா]

கருத்தேறும் ஆயின் கனியா - கனிந்தும்
உருவற்று மீண்டும் உருவாம் - எதையும்
பழுதென்று தள்ளாதே பாழ்மனமே - என்றும்
எழுத்தில் வெறுமை இயல்பு.

--ரமணி, 21/11/2015

*****

ரமணி
15-02-2016, 01:00 PM
51. விழிமுன்னே ஓர் விபத்து!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெளியூர்ச் சுற்றில் விடுமுறைப் பயணம்
வளமாய் வயல்கள் மாலை நேரம்
இருப்புப் பாதை இணைசந் திப்பில்
வரிசையாய் நின்ற வாகன அணிபின்
நின்றோம் வலப்புறம் நிழல்கள் நீள
பொன்னிற வெய்யில் பூச்சொரிந் திடவே.

இரும்புக் கிராதி யின்கீழ் குனிந்தே
இருப்புப் பாதை இணைகடந் தேசிலர்
இருசக் கரத்தாம் இயந்திர வண்டியை
இருகரம் பற்றியே தள்ளிச் சென்றனர்
இவரைத் தவிர நடந்தே சிலரும்
தவறினர் முறைமை தனைமுன் நிறுத்தியே.

எங்களைக் கடந்திரு சக்கர வண்டி
இங்ஙனம் சென்றதை இயல்பெனக் கொண்டோம்
தொலைவில் நீளொலி துணையாய் இரும்பில்
அலைசக் கரங்கள் ஆர்த்தபே ரொலியில்
தெறித்து விழுந்தது தெரிந்தது தலையாய்
வெறித்து பார்க்கும் விழியிணை உறைந்தே!

--ரமணி, 22/11/2015

*****

ரமணி
28-02-2016, 04:44 AM
52. ஆவினத்தின் அவதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)

அனுதினமும் மாலையில் ஆவினம் மூன்று
கனமாக வாசலில் காட்சிதர வல்லவி
காய்கனித்தோல் தந்தே கனிவோ டவைமூன்றும்
ஆய்ந்துண்ணல் காணும் அழகு. ... 1

[வல்லவி = மனைவி]

நானுமென் பங்கிற்கு நாலைந்து மாங்கொப்பு
கூனியே கம்பிவழிக் கொட்டுவேன் - காவிநுதல்
மெல்லத் தடவியவை மேனி சிலிர்ப்பதில்
சொல்லத் தெரியாச் சுகம். ... 2

போக்கிடம் இன்றிப் பொழிந்தநீர் வெள்ளத்தில்
சாக்கடை மூடிவழிச் சாய்ந்தவை சென்றே
பழைய கருவோலைப் பந்தல் பிரிப்பைத்
தழையெனக் கொள்ளும் தவிப்பு. ... 3

--ரமணி, 23/11/2015

*****

முரளி
05-03-2016, 03:40 AM
அருமை ரமணி : உங்கள் கவிதைகள் அனைத்துமே !

உண்மையில் எனக்கு தான் உங்கள் கவிதை பொருந்தும் ! உங்களுக்கு அல்ல ! அல்லவே அல்ல !

முரளி
05-03-2016, 03:42 AM
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல இதோ என் கிறுக்கல் !
" 50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)"


பக்கம் எல்லாம் வெற்றாகவே
பார்க்கையில் நெஞ்சில் வெட்கம்
பேனாவில் மசி இலா குறையா?
பணந்தேடி அலைவதின் விலையா?

பகிற அகப் பையில் எதுமிலா நிலையா?
பந்தமதில் வந்த சிக்கல் வலையா? அல்ல
பசியா ? பிணியா ? படிக்காத குறையா ?
பகர்வீர் ரமணி - என் துக்கம் தீர !

முரளி
05-03-2016, 03:51 AM
உங்கள் கவிதைகள் அனைத்துமே ! அருமை ரமணி ! வாழ்த்துக்கள் !

ரமணி
15-03-2016, 02:52 PM
53. சின்ன வயதில் சேமிப்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஓட்டையாய்க் காலணா ஒவ்வோர் விரலிலும்
பாட்டுடன் தாளம் தகரடப் பாவிலே
மெட்டியாய்க் கால்விரல் போட்டேன் - தலையிலே
குட்டுவாங் கிக்கண் குளம். ... 1

நயாபைசாச் சட்டை அணிந்தே நடந்தோம்
தயாராய்க்கை பற்றியே தந்தையார் தந்ததைக்
கண்ணிலே ஒற்றிக் கரத்தால் வருடிமண்
உண்டியலில் சேர்த்தோம் உடன். ... 2

உண்டியல்வாய் முட்ட உடைத்தே தகப்பனார்
கண்படும் காசுகள் கட்டித் தொகுப்பார்
வகைக்கொரு பத்தாய் வளர்ந்துநிற்கும் தூணாய்த்
தகைத்திடுவார் காகிதத் தால். ... 3

தூண்களாய் நாணயம் தூங்குமோர் பெட்டியில்
நீண்டநாள் ஆக நெகிழ்த்தியே தந்தை
பலவகை யான பரிசுகள் ஆக்கக்
குலவும் மனத்திலே கூத்து. ... 4

--ரமணி, 24/11/2015

*****

ரமணி
26-03-2016, 02:44 PM
54. வற்றாத உற்சாகம் சிற்றப்பா!
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)

ஒவ்வொரு நாளும் ஒருரூபாய் என்றவர்
செவ்விதின் சேர்த்தேயென் சிற்றப்பா - அவ்விதம்
பார்த்த பணத்தில் பலவூர்ப் பயணமாம்
சேர்ந்தே குடும்பத் துடன். ... 1

கோடையில் கானலோ கூனூரோ ஊட்டியோ
வாடையில் சென்னைபோல் வாரிக் கரையூர்
வருடம் ஒருமுறை வாகாய் அமைத்தார்
திருத்தல யாத்திரை யோடு. ... 2

உலகியல் ஆன்ம ஒழுக்கம் இரண்டின்
கலவையாய் வாழ்ந்தார் கனிவுடன் வாழ்ந்தார்
இனியவர் பார்க்கப் பழகவென வாழ்ந்தார்
இனியவர் நெஞ்சில் என. ... 3

--ரமணி, 25/11/2015

*****

ரமணி
28-04-2016, 01:53 PM
55. சின்ன வயதுச் சேட்டைகள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஆதாரப் பள்ளி அறிமுகம்; ஆசிரியர்
தோதாக ஜிப்பாவில் தொங்குகை விட்டே
புகையிலை பிய்த்தவர் பொக்கைவாய் இட்டால்
வகையாய்ப்பா டம்வாய் வரும். ... 1

மூக்குப் பொடியினை மூன்றாம் வகுப்பாசான்
தூக்கி உதறித் துளித்துளியாய் மூக்கில்
நுழைத்தே விரல்கள் நொடித்ததுகண் டேநான்
விழைந்ததில் கண்ணீர் விடை! ... 2

காகித அம்பு களிப்பில் ஒருவன்மேல்
ஏகமாய் எய்ததில் ஒன்று முதல்வர்
அறைசன்னல் உட்புக ஆடிப்போ னேனே
அறைவாங்கா இன்ப அதிர்வு! ... 3

ஐந்தாம் வகுப்பிலே ஆசிரியர் பாடமாய்ப்
பைந்தமிழ்ப் பாவெழுதிப் பக்கம்போய் நின்றவர்
போண்டாவைத் தின்ற பொழுதுகள் இப்போது
தீண்டும் மனத்தில்தித் திப்பு. ... 4

சின்ன வயதிலே செய்தபல சேட்டைகள்
தின்னும் மனத்தில் திகைப்புடன் தித்திப்பும்!
இன்றைய பிள்ளைகள் இத்தகு இன்பமின்றிக்
கன்றிலே ஆவர் கனி. ... 5

--ரமணி, 26/11/2015

*****

ரமணி
18-05-2016, 05:02 AM
57. அகத்தில் குடிவந்த பள்ளி!
(பஃறொடை வெண்பா)

தாத்தாவோர் நாள்பார்த்துத் தக்கசகு னம்பாட்டி
பார்த்துத்தம் பேரனைப் பள்ளிக் கனுப்பப்
புதிய சிலேட்டைப் புதுப்பையில் வைத்தே
புதுப்பையைத் தோளிலே தோகை விரித்தே
முகத்திலே புன்னகை முன்னிற்கப் பள்ளி
அகத்தில் குடிவந்த(து) அன்று. ... 1

முதல்வரவர் சேர்க்கைப் பதிவு முடிக்க
மிதக்குமோர் காகிதநா வாய்போல் கதிரொளி
முற்றத்தில் ஊர்ந்திடச் சுற்றி வகுப்பிலே
உற்றவா சானிடம் ஒப்படைத் தார்தாத்தா
கண்ணாடி ஆசான் கனிவில் பலவகைப்
பண்புடன் நண்பர் பலர். ... 2

பாரதி வாழ்த்திய பாரதம் காலையில்
சாரதி யாயொரு காரிகை பாடச்
சிறுவர் சிறுமியர் சேர்ந்தொலித்த கூத்துடன்
ஏறிப் பறக்கும் மணிக்கொடி ஏற்றியே
திங்கட் கிழமையதைச் சிந்தை நிறைத்தோமே!
தங்கத் தமிழுடன் தாய்நாட்டை மாலையில்
மீண்டுமோர் கூடலில் மீசைக் கவிநினைத்த
ஆண்டுகள் நாட்கள் அசையும் மனத்திலே
வண்ண மலர்கள் மணம்வீசும் பற்பலவாய்
எண்ணநெகிழ்ப் பந்தாய் எழும். ... 3

[நெகிழ்ப் பந்து = பலூன்]

[பள்ளிக் கூடலில் பாடிய பாரதி பாடல்கள்:
காலை: பாரத சமுதாயம் வாழ்கவே
மாலை: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
திங்கள் காலை: தாயின் மணிக்கொடி பாரீர்]

--ரமணி, 28/11/2015

*****

ரமணி
10-06-2016, 02:28 PM
58. முகிற் கள்வன்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

முதுகில் முகிலெனும் மூட்டை சுமந்தே
மெதுவாய் நகர்ந்திடும் மேல்வளிக் கள்வனை
எய்த கணையால் இரவி வெருட்டவே
வெய்யிலிற் கொட்டும் விசும்பு.

[மேல்வளி = மேல் காற்று; இரவி = சூரியன்]

--ரமணி, 29/11/2015

*****

ரமணி
15-07-2016, 01:47 PM
59. திரையில் வந்ததால் திரும்பினோம்!
(கலி வெண்பா)

வங்கியில் வேலை வெளிமா நிலத்திலே
அங்கே புதிய சகாக்கள் அறிமுகம்!
ஐதரா பாத்-அது ஆந்திர மாநிலச்
செய்திகள் மிக்க திருத்தலைப் பேரூராம்
நண்பர்கள் மூவருடன் நானாங் கிலப்படம்
கண்தேக்கிப் பார்க்கக் கடுஞ்சினம் கண்மறைக்க
நண்பனின் நானறியா நண்பன் திரையிலே
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தியிடப்
பாதிப் படத்தில் பதறிவெளி வந்ததிலே
ஏதென்னை விட்டீர்கள் என்றானே பார்க்கலாம்!
நண்பனை நானறியா நண்பனை விட்டின்னோர்
நண்பனுடன் மற்றைநாள் நான்படம் பார்த்தது
கண்களில் இன்றும் களிப்பு.

[பார்த்த ஆங்கிலப்படம்: Close Encounters of the Third Kind;
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தி = சினிமாத் திரையில்
காட்டும் ஸ்லைட் விளம்பரங்கள், செய்திகள்]

--ரமணி, 29/11/2015

*****

ரமணி
15-08-2016, 04:27 AM
61. முதல் தேதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)

மாதமுதல் தேதி மணக்குமே சம்பளக்கை!
காதலுடன் தந்தை கரன்சி ஒருரூபாய்க்
கட்டினைக் காட்டக் களிப்பில் முகர்ந்தேநான்
கட்டினேன் கோட்டை களை. ... 1

கட்டியல் வாவுடன் காராச்சே வும்கையில்
வெட்டியே உண்டோம் விழிகள் விரிந்திட
சம்பளம் தந்த சலுகை முதல்தேதி
கம்பளத்தில் ரத்தினக் கல்! ... 2

தினமுமொரு ரூபாயில் தீரும் செலவு
மனக்கணக் கில்பூபால் வாங்கும் செலவும்
மளிகைக் கணக்குமுதல் வாரத்தில் தீர்த்தே
தளிகை நடந்த தரம். ... 3

கையிலே சில்லறையாய் மிஞ்சிடும் காசுகள்
செய்யும் சிறப்பு தெரிந்தெம தன்னை
கடுகு மிளகு கடுக்காய்டப் பாவுள்
அடியில்சே மித்தாள் அவள். ... 4

சனிக்கிழமை மாலையில் சாதுவாய் நாங்கள்
பனகல்பூங் காவில் பரவி அமர்ந்து
கொறித்திடுவோம் வேர்க்கடலை கொஞ்சுமொழி பேசி
அறிந்துமறி யாநாள் அவை. ... 5

வீட்டுவா சல்முன்னே வீசிய காற்றிலே
கேட்டறிந்தோம் பேசினோம் கிள்ளையாய்க் காதைபல
பள்ளி அறியாப் பருவத்தின் பாடமின்றும்
பள்ளமும் மேடும் சொலும். ... 6

படுக்கை உதறித் தலையணை தட்டி
வெடிபோலச் சத்தம் விளைவித்தே தந்தை
கனிவுடன் எங்களைக் கண்மூடச் செய்யக்
கனவுலகில் எங்கள் கதி. ... 7

--ரமணி, 09/12/2015

*****