PDA

View Full Version : நீரடிச்சா நீர் விலகும்?



Keelai Naadaan
21-05-2015, 03:03 PM
நண்பர்களுக்கு வணக்கம்.
சிறிது கால இடைவெளிக்கு பிறகு, சமீப காலமாக மனதில் நெருடிக்கொண்டிருந்த ஒரு சம்பவத்துக்கு சிறிது கற்பனையும் கலந்து கதை வடிவமாக்கியிருக்கிறேன்.
அன்பர்கள் படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
.......................................................................................................................................................


நீரடிச்சா நீர் விலகும்?
-----------------------------

மத்தியானம் கல்யான பத்திரிக்கை கட்டுகள் வீட்டுக்கு வந்ததிலிருந்தே ஆத்தியம்மாள் பாட்டி அதை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தார். எண்பது வயதிலும் கண் பார்வை தெளிவாக இருந்தாலும் படிக்க தெரியாததால் எடுத்து பத்திர படுத்தி வைத்தார். அதை படிக்க சொல்லி கேட்க மனசுக்குள் தவிப்பு. அவருடைய இரண்டாவது பேரன் குமரேசனுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது.

அருகிலிருக்கும் அரசு பள்ளியில் படிக்கும் கடைசி பேரன் பள்ளிகூடம் விட்டு வந்தான். "ஏலெ ராசா, இந்த கலியாண பத்திரிக்கய படிச்சு காட்டு... "என்றவாறு. ஒரு கையில் மூங்கில் குச்சியை
இறுகப் பிடித்து தரையில் ஊன்றி இன்னொரு கையில் இருந்த திருமண பத்திரிக்கையை மூர்த்தியிடம் கொடுத்தார் ஆத்தியம்மாள். சமீபத்தில் மொட்டையடித்த தலையில் வெண் பஞ்சாய் முடி வளர்ந்திருந்தது.

காமாட்சி துனையில் ஆரம்பித்து முழு பத்திரிக்கயையும் படித்தான் மூர்த்தி. பாட்டி. காதை கூர்மையாக்கி கொண்டு முழுவதையும் கேட்டார். தாத்தா பாட்டி வரிசையில் முப்புடாதி ஆத்தியம்மாள் என தன் பெயரையும் கணவனார் பெயரையும் படிக்க கேட்ட போது முகத்தில் சிறு புன்முறுவல். என்றாலும் மாப்பிள்ளைக்குரியோர் பெயரை படிக்கும் போது தன் மூத்த மகனின் பெயர் இல்லாதது அவருக்கு விசனமாயிருந்தது. முழுவதையும் படிக்க கேட்ட பிறகு,
ஏண்டா உங்க பெரிய தாத்தா பேர போடலயா? என கேட்டாள்.
யாரு..வெள்ளச்சாமி தாத்தா பேரா..?
ம்...ம்...
"போடலயே.. என்ற மூர்த்தி பத்திரிக்கையை மறுபடியும் நோட்டமிட்டான். ம்..ஹூம்..இல்ல பாட்டி" என்றான்.
"ம்...க்கும்.. ஒங்க அப்பனுக்கு இந்த ரோச மயிருக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல". என்றவர் ஏளனமாய் சிரித்தவாறு "இவன் பத்திரிக்கயில போடலைன்னா அவன் அண்ணன் இல்லன்னு ஆயிடுமா..இவன் தம்பி இல்லன்னு ஆயிடுமா? என முனகிக்கொண்டு முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார் ஆத்தியம்மாள்.

சில வருசத்துக்கு முன்பு ஆத்தியம்மாளின் மகன்கள் வெள்ளைச்சாமிக்கும் கருப்பசாமிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். திருமணமான பிறகு சகோதரர்கள் பிரிவது இயல்பு தான் என்றாலும் இங்கே பேச்சு வார்த்தை கூட நின்று போனது.

பெரியவன் கதிரு இருக்கானா?, என்றார் ஆத்தியம்மாள்.
மூர்த்தி ஆம் என்பது போல் தலையசைத்தான்.
அவன கூப்பிடு.

மூர்த்தி தெருவில் நின்று கொண்டிருந்த கதிரேசனை, எண்ணே, பாட்டி வரச்சொன்னாங்க" என்றான்.
"ஏ, என்ன" என்றவாறே வந்தான் கதிரேசன்.
ஆத்தியம்மாள் மெதுவான குரலில் மூத்த பேரனிடம் கெஞ்சலாய் சொன்னார், அடேய், பெரியப்பனுக்கு பத்திரிக்க வைங்கடா, அவனுக்கும் ஒங்கள விட்டா ஆம்பிள பிள்ளைங்க யார்ரா இருக்கா...?
கதிரேசன் சரி என்பது போல் தலையசைத்துக் கொண்டான். ஆனாலும் "அய்யா விட மாட்டாரே.." என மனசுக்குள் ஒரு கலக்கம்.


கதிரேசன் கலக்கமடைந்தது போல் தான் நடந்தது. பொன்னியம்மன் நகரில் வெள்ளைச்சாமி வசிக்கும் அந்த பகுதிக்கு வந்த போது கருப்பசாமி பிரதான சாலையில் இருந்த ஒரு தேநீர் கடையில் நுழைந்தபடியே, "சீக்கிரம் ராமசாமி வீட்டில மட்டும் பத்திரிக்க வச்சுட்டு வெரசலா வாங்க" என்றார் கதிரேசனிடம். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையும் தோளில் ஒரு துண்டும் அணிந்திருந்தார்.
அப்பா, பெரியப்பா வீட்டுக்கும் வச்சிருவோமே, வந்தா வர்றாங்க இல்லாட்டி இருக்காங்க" என்றான் கதிரேசன்
செருப்பு பிஞ்சு போகுன்டா..போயிட்டு ராமசாமி வீட்டில மட்டும் பத்திரிக்க வைக்கிறதுன்னா வையி, இல்லாட்டி அதுவும் வேண்டாம், வா போலாம். என்றார் அதட்டலான குரலில்.
இல்ல.... பாட்டி சொல்லி விட்டுச்சு,.. பெரியப்பாவுக்கும் பத்திரிக்க வைக்க சொல்லி...
அதெல்லாம் ஒன்னும் வேணாம், வயசாச்சுன்ன அதுக்கு புத்தி கூடயா மங்கிடும்... இதுக்குத்தான் நா வரமாட்டேன்னு சொன்னேன்.. என கோபத்தில் சொல்லிக் கொண்டார் கருப்பசாமி.


கதிரேசன் பிரதான சாலையிலிருந்து திரும்பி தெருவில் நடந்தான். வெள்ளைசாமியின் வீட்டை கடக்கும் போது தலையை குனிந்த படியே சென்றான். வெள்ளைசாமியின் இரண்டு பெண்களும் அடுத்தடுத்த வீடுகளில் குடியேறியிருந்தனர். பெரியப்பா வீட்டார் யாரும் தன்னை பார்த்து விட கூடாது என்று நினைத்தான் கதிரேசன். அவனுடைய மனைவிக்கு அந்த அளவுக்கு சங்கோஜம் இல்லையென்றாலும் அவளுக்கும் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. வாசலுக்கு நேரே அமர்ந்திருந்த காளியம்மா பெரியம்மா பார்த்தாள். ஒரு சமயத்தில் தான் தூக்கி வளர்த்த பிள்ளை தன்னை பார்த்தும் பாராததை போல் போவதை கண்டு மனம் வருந்தி மனதுக்குள் குமைந்து கொண்டாள். கதிரேசனின் கால்கள் நடக்க தயங்கினாலும் அப்பாவின் கோபத்தை நினைத்தபடி வேகமாக சென்று சற்று தொலைவில் இருந்த ராமசாமி வீட்டுக்கு பத்திரிக்கை கொடுத்து விட்டு வந்தார்கள்.

அவர்கள் திரும்பி வரும் போது வெள்ளைச்சாமியின் மூத்த மகள் கமலா வாசலில் நின்றிருந்தாள். அவளுடய கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. அவள் பிள்ளைகளுக்கு மணமாகி விட்டது. கதிரேசன் குனிந்த தலை நிமிராமல் நடந்தான். அவனை பார்ப்பது தனக்கும் சங்கடமாக இருப்பதால் கமலா தன் வீட்டின் உள்ளே போனாள். கதிரேசன் குழந்தையாயிருக்கும் போது அவனை இடுப்பில் வைத்துக்கொண்டு திரிந்த காலங்கள் கனவில் கண்டது போல் மனதை நிழலாடியது. சில வருடங்களுக்கு முன்பு வரை அக்கா, அக்கா என்று கூப்பிட்ட ஓசை அவளின் செவி நினைவுகளில் கேட்டபடியிருந்தது. அவளோடு சுற்றி விளையாடிய நினைவுகளும் மனதை என்னவோ செய்தது.

வெள்ளைசாமிக்கு இரண்டுமே பெண் பிள்ளைகள். முன்பு வெள்ளை சாமிக்கும் கருப்பசாமிக்கும் பங்கு பாகம் பிரிக்காத காலத்தில். அவர்கள் கூட்டுக்குடும்பமாய் இருந்த சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் கதிரேசன் தான் முதல் ஆண் பிள்ளை. அதனால் அவன் மேல் அதீத பிரியம் கொண்டிருந்தனர். இப்போது படுக்கையில் இருக்கும் வெள்ளைசாமிக்கு எழுந்து நடமாட இயலாவிட்டாலும் ஆட்களை பார்த்து அறிந்து கொள்ளும் அளவுக்கு நினைவு சக்தியும் கண் பார்வையும் இருக்கிறது. தனக்கு பெண் பிள்ளைகளாய் இருப்பதால் தான் இறந்தபிறகு கதிரேசன் தான் கொள்ளி போடுவான் என நம்பியிருந்தார் அவன் தான் கொள்ளி போடவேண்டும் என்றும் விரும்பியும் இருந்தார்.. அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருந்தது. இப்போது முழுவதும் பொய்த்து விட்டதை எண்ணி மனதில் வருத்தம் கொண்டார்.

கருப்பசாமியின் இரண்டாவது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது காளியம்மாவுக்கு தெரிந்திருந்தது. கதிரேசன் தலை குனிந்தவாறே தன் வீட்டை கடந்து போவதை பார்த்தவள், படுக்கையில் கிடக்கும் தன் கணவன் காதில் விழும் படியாக தனக்குள் பேசிக்கொண்டாள். "நீ ஒம் தம்பி கல்யாணத்துக்கு பத்திரிக்க குடுக்கத்தான் வரவேணாம். இப்பவோ பெறகோன்னு படுத்த படுக்கையா கெடக்கிற பெரியப்பாவ ஒரு தடவ வந்து பாத்தா என்ன ஒங் கீர்த்தி கொறஞ்சிடுமா, கிரீடம் விழுந்திடுமா.." கோபத்திலும் ஆற்றாமையிலும் கண்களில் நீர் கோர்த்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு புடவை தலைப்பால் கண்களை துடைத்துக்கொண்டாள்

அருகில் இருந்த மூத்த மகள் கமலா, நீ எதுக்கும்மா கண்ண கசக்கிகிட்டிருக்க, அழைக்காட்டி போறான்ங்க, என்னைக்கும் இப்பிடியேவா இருந்திருவாங்க...கருப்பசாமி சித்தப்பா காலம் வரைக்கும் தான் இப்பிடி இருக்கும். அப்புறம் சேந்துக்க போறான்ங்க..
ம்..க்கும்.. தாகத்துக்கு கெடைக்காத தண்ணி அப்புறம் கெடச்சா என்ன, கெடைக்காட்டி என்ன..என்றவாறு கையிலிருந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்ல தொடங்கினாள் காளியம்மாள்.
கமலா மெதுவான குரலில்.சொன்னாள். இவன்ங்க வந்து கொள்ளி வைக்காட்ட என்ன எங்க அய்யாவுக்கு பொம்பள மக்க நாங்களே கொள்ளி வைக்கிறோம், அப்பிடி இல்லாட்டி ஆண்டவன் புண்ணியத்தில எங்க பாட்டி ஆத்தியம்மாள் இன்னும் உயிரோடதான் இருக்கா அவ கொள்ளி வைக்கிறா..

அப்போது பேச்சு துனைக்காக வந்து பேசிக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு தாயம்மா கிழவி காளியம்மாளிடம் கேட்டார் ,
ஏன் காளி ஒங்க வீட்டுக்கு வரமாட்டுக்காங்க, எதும் சண்டை சத்தமா..?
காளியம்மாள் பழைய நினைவுகளை கோர்த்து சொன்னார், இந்தா போறானே அது எங் கொழுந்தன் மகன். எங்கொழுந்தன் இருக்கே, அதுக்கு நாலு ஆம்பிள பிள்ள நாலு பொம்பள பிள்ள. எங்க மாமனார் சாகிறதுக்கு முந்தி அவருக்கிருந்த எடத்த அதுக்கும் எங்க வீட்டுகாரருக்கும் ரெண்டு பங்கா பிரிச்சு குடுத்திருந்தாரு. தன் கணவனை முக ஜாடையால் காட்டி, இவரு சொன்னாரு, எப்பா தம்பி... பிள்ள குட்டிகளோட கஷ்டபடுறான், நீங்களும்.. அம்மாவும் சம்பாதிக்கிறத அவங்கிட்டயே குடுத்துகிட்டு...அவன் பிள்ள குட்டிய பாத்துகிட்டு ...அவன் கூடயே இருங்க, என் பிள்ளை குட்டிகளை .... நான் பாத்துக்கிறேன்னு. என்றவர் சற்று நிறுத்தினார்.

அவரே தொடர்ந்து, எங்க மாமனார் அதுக்கு பிரிச்சு குடுத்த எடத்தில பேர்வாதி எடத்த அது (கருப்பசாமி) வித்திடுச்சு. அத்தன புள்ள குட்டிகளை வச்சிருக்கிற மனுசன் அந்த எடத்த விக்கலாமாம்மா..? வட்டிக்கு வாங்கின கடத்த அடைக்க முடியல. சரியான வருமானமில்ல, குடி பழக்கம் வேற, என்ன செய்ய முடியும்?. அண்ணனுக்கு ரெண்டும் பொண்ணுங்க தான, அதுக வாக்கப்பட்டு வேற வீட்டுக்கு போறதுக தானெ, நமக்கு தான் ஆணும் பொண்ணுமா இத்தன இருக்குதே அந்த வீட்டயும் நமக்கு குடுத்தா என்னன்னு. அதுகளுக்கு யோசன,.... நா சடங்கான ரெண்டு பொட்ட பிள்ளைகள வச்சிருக்கேன் நாளைக்கு அதுகளுக்கு கல்யாணங் காட்சி நல்லது கெட்டது பாக்கனும். எங்களுக்கும் ஒன்னும் பெரிய வருமானமில்ல. அன்னாடம் ஒழச்சா தான் நாங்க கஞ்சி தண்ணி குடிக்க முடியும். ஏழெட்டு புள்ளைகளோடஇருக்கிற நீ, இப்ப நாங்க இருக்கிற எடத்தயும் நீ விக்கிறதுக்கு திட்டம் போட மாட்டேன்னு என்ன நிச்சயம்... அங்கிட்டு என் மாமியாரு எம் பொட்ட பிள்ளைகள கண்ணுல காண விடாம பேசுறது, அவுகளுக்கு பேரன்ங்கன்னா வெல்லக்கட்டி பேத்திங்கன்னா வேப்பங்காயி, என் கொளுந்தன் பொண்டாட்டி இருக்காளே எதுக்காவது எங்கூட சண்டை போடலைன்னா அவளுக்கு தூக்கம் வராது. இவரு வாயில்லா பூச்சி. உருண்டு பொரண்டு அந்த வீட்ட வித்து ரெண்டு பிள்ளைகளுக்கும் கல்யாணத்த செஞ்சு வச்சோம் இங்கன எடத்த வாங்கி குடுத்தோம்.. இந்தா இருக்கோம். எங்களோட பேச்சு வார்த்தய அவுக விட்டுட்டாக நாங்களும் விட்டுட்டோம்" என்றார்

ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டது. கருப்பசாமியின் மூன்று மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது.

இடையில் வெள்ளைசாமி காலமாகி விட்டார். அப்போதும் கூட கருப்பசாமியோ அவருடைய பிள்ளைகளோ வந்து கலந்து கொள்ளவில்லை. ஆனால், கருப்பசாமி மனதில் குமுறிக்கொண்டார்,
அன்னைக்கே சொன்னேன், ஒன் வீட்டை விக்காத, ஒனக்கு ஆம்பிள பிள்ளைக இல்ல என் பிள்ளைகள அண்டி வாழ்ந்துக்கோன்னு.. கேட்டியா...அப்படியா நா ஒன்ன ஏமாத்தி நடுத்தெருவில விட்டிருவேன்.?. அன்னைக்கே என் சொல்படி கேட்டிருந்தா, இன்னைக்கு இப்படி அனாதையா எங்கயோ ஒரு மூலையில் கெடக்க விட்டிருப்பனா? இப்ப ஒனக்கு கொள்ளி போட நாதியிருக்கா..இன்னைக்கு ஒன் பொட்ட பிள்ளைகளுக்கு அண்ணன் தம்பிங்க இருக்கான்களா..? என ரோசத்தாலும் சகோதர பாசத்தாலும் நினைத்துக்கொண்டார்.

வெள்ளைச்சாமி தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கு கமலா, விமலா என பெயரிட்டிருந்ததால், கருப்பசாமியின் மூத்த மகளுக்கு ஒரே குடும்பத்து பிள்ளைகள் என்ற எண்ணத்தில் நிர்மலா என பெயரிட்டிருந்தார். கருப்பசாமிக்கு திருமணம் ஆகாத காலத்தில் தன் அண்ணனின் மகள்கள் கமலா விமலாவை தன் பிள்ளைகளை போல் பாவித்து அன்பு பாராட்டியதை பாச உணர்ச்சியோடு எண்ணினார். இன்றைக்கு தகப்பன் இறந்த நிலையில் அவர்கள் அருகில் தான் நிற்க முடியாமல் ஆனதற்காக வருந்தினார். ஆனாலும் தன் அண்ணனின் சாவுக்கு செல்ல அவரது மனம் அல்லது சுயகெளரவம் இடம் கொடுக்கவில்லை. காலதேவன் கை பட்டு மரத்தில் உள்ள காய்களின் துவர்ப்பு புளிப்பாகி, புளிப்பு இனிப்பாகிறது. ஏன் கசப்பும் கூட இனிப்பாகிறது. ஆனால் பிரிந்த சகோதரர்களை சேர்க்கும் சக்தி காலதேவனுக்கும் இல்லையோ?.

ஆத்தியம்மாள் தன்னால் ஆன மட்டும் கருப்பசாமியை வரச்சொல்லி கண்ணீர் விட்டு கெஞ்சி பார்த்தார். பிள்ளைகளையாவது அனுப்பி வைக்கும்படியும் கேட்டுப்பார்த்தார். கருப்பசாமி மறுத்துவிட்டார். கருப்பசாமியின் பெண்பிள்ளைகள் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்றவர்கள் மட்டும் சாவுக்கு வந்திருந்தார்கள். உடலை எடுக்க போவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக ஆத்தியம்மாளை இளைய பேரன் ட்டி வந்து வெள்ளைசாமி வீட்டில் விட்டுவிட்டு போனான். ஆத்தியம்மாள் கொள்ளி போடும் கடமைகளை சடங்குகளை செய்தார். ஒரிரு மாதம் அங்கேயே தங்கியிருந்து விட்டு பிறகு கருப்பசாமி வீட்டுக்கு திரும்பினார். தன் இளைய மகன் கருப்பசாமியின் பிள்ளைகள் யாரும் கலந்து கொள்ளாததால் அவருக்கு மிகுந்த மன வேதனை. ஆத்தியம்மாள் அவர்டைய ஐம்பது வயதுகளில் பேரன்களின் மேல் அதிக பாசம், பற்று கொண்டிருந்தார். இப்போதெல்லாம் அவருடைய அதிக பாசமெல்லாம் தன் பேத்திகளின் மீதுதான். அவருக்கு முடியாத காலங்களில் பேத்திகள் தானே அவரை கவனித்து கொள்கிறார்கள்....

கருப்பசாமியுடைய பெண் பிள்ளைகள் பெரியப்பா சாவுக்கு வராமல் இருந்தது சரியில்லை என அப்பாவிடம் பேசினார்கள். பொதுவாக அவரை எதிர்த்து பேசும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் திருமணமாகி கணவன் வீட்டுக்கு போனதிலிருந்து தன்னுடன் சண்டை போட அவர்கள் தைரியமடைந்து விட்டதாக கருப்பசாமி நினைத்துக்கொண்டார். ஆனாலும் தன் அண்ணனின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளாதது குறித்து அவர் மிகவும் வருந்தினார். அவருடைய மனைவி சுப்பம்மாள் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவோ அல்லது மனக்குறையின் காரணமாகவோ "அதான் தம்பியும் வேணாம் தம்பி புள்ளைகளும் வேண்டாம்னு தான் போயிட்டாங்களே, அதுக்கு அப்பா மட்டும் ஏன் போகனும். எங்க, இங்க இருந்தா நம்ம புள்ளைகளுக்கு சொத்தில பங்கு கேப்பாங்கன்னு தான அன்னைக்கு நம்மல வேண்டான்னு முறிச்சுக்கிட்டு மண்ண வாரி தூத்திட்டு போனாங்க. இன்னைக்கு இவரு எதுக்கு போகனும்" என்று தன் தரப்பு நியாயத்தை மகள்களிடம் சொன்னார். ஒங்க தாத்தா படுத்த படுக்கையா வருச கணக்கா கெடந்தார். நம்ம வீட்டில தான் வச்சு பாத்தோம். ஏன் மூத்தவரு அவரு தான,... வச்சு பாத்திருக்ககுடாது..?. ஒங்க அப்பாதான் குடும்ப கஷ்டத்தில நம்ம பாதி எடத்த வித்தாரு. அவுங்களுக்கு ரெண்டும் பொட்ட பிள்ளைங்க தான, புள்ளைகள கட்டி குடுத்துட்டு கஞ்சியோ தண்ணியோ குடிச்சிட்டு நம்ம கூடயே இருந்திருக்கலாமில்ல. அவுங்க எடத்தயும் விக்க வேண்டியிருக்காதில்ல. என்றார்.

கருப்பசாமியின் ஆண் மக்களும், காளியம்மா பெரியம்மாவின் மகள்களும் பேரன் பேத்திகளும் எங்கு பார்த்தாலும் நலம் விசாரித்து பேசிக்கொண்டனர். ஆனால் தங்கள் வீடுகளில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஒருவரையொருவர் அழைப்பதில்லை. ஆனாலும், அவர்களின் மனதின் ஆழத்தில் வெளிக்காட்ட முடியாத அன்பு படிந்திருந்தது. இரத்த பந்தம் என்பது இது தானோ என்னவோ?

அவருடைய பெண் மக்கள் பெரியப்பா குடும்பத்தோடு நல்லபடியாக உறவாடிக்கொண்டனர். ஒருநாள் நிர்மலா கமலாவை சந்தித்த போது சொன்னாள்,
என்னமோ போக்கா, பெரிப்பா செத்ததுக்கு அப்புறம் அங்க அம்மா வீட்டுக்கு போகவே மனசு என்னமோ போல இருக்கு. நா அப்பாவ நல்லா சத்தம் போட்டுட்டேன். ஏன் பெரிப்பா சாவுக்கு வரலன்னு,
அதுக்கு அவுரு என்ன சொன்னாரு, என கேட்டாள் கமலா.
அவரென்னா சொல்வாரு? வழக்கம் போல, "நா வர முடியலைன்னு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமான்னு அழுதாரு,"
அவரு மொதல கண்ணீர வேற யாரயாச்சும் நம்ப சொல்லு. உயிரோட இருக்கயில ஒரு எட்டு வந்து பாக்கல, செத்த பெற்கு இழுவுனாராம், கமலா வார்த்தையை இழுத்தவாறு சொன்னாள் பிறகு அவளே கேட்டாள், அவன் கதிரேசன் என்ன சொன்னான்,
அண்ணனுக்கெல்லம் வர ரொம்ப ஆசதான், அப்பா திட்டுவாருன்னு தான் அது வரலயாம்.
என்னமோ...! வராட்டி போட்டும் நாம என்ன செய்ய.,? இன்னொரு முற நாம இப்படி அண்னன், தம்பி, அக்கா, தங்கச்சியோட பொறக்கவா போறோம்..? இருக்கிற வரைக்கும் பாத்து பேசிக்க வேண்டியதுதான் என சொல்லிக்கொண்டார் கமலா.


அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆத்தியம்மாள் காலமானார். வெள்ளைச்சாமி வீட்டுக்கு யாரும் சொல்லி அழைக்காவிட்டாலும், கமலாவும், விமலாவும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.
மற்றபடி எந்த சடங்குகளிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களை யாரும் அழைக்கவுமில்லை. தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் நெய்ப்பந்தம் பிடிக்க விட வில்லையே என்ற வருத்தமும் கோபமும் அவர்களுக்கு வெகுநாட்கள் இருந்தது.

போன வாரத்தில் ஒருநாள் நிர்மலா பொன்னியம்மன் நகருக்கு சென்றிருந்த போது கமலாவிடம் சொன்னாள்,
எக்கா, ஒருநாள் நம்ம வீட்டில நடக்கிறாப்பில ஒரு நல்ல கனவு கண்டேன், பெரிப்பா, பெரிம்மா, அப்பா அம்மா நாம எல்லாரும் மாரியம்மன் கோயிலுக்கு போறாப்பில, அப்டியே ரொம்ப நேரம் பாத்தேன். விடிஞ்சு பிறகு எல்லாத்தையும் மறந்துட்டேன். திரும்ப ஞாபகபடுத்தி பாக்கிறேன், ம்...ஹூம்..வர மாட்டுக்கு. எப்பவுமே நா கனவ மறக்கவே மாட்டேன். என்னமோ தெரியல இந்த கனவ மறந்திட்டேன்.

நல்ல கனவுங்க கலைஞ்ச பெறகு அது ஞாபகத்துக்கு வரலைன்னா அதுக்காக கவலை படாதே, அது ஞாபகத்தில இருந்து பெறகு அது நடக்க முடியாத காரியமாயிருந்தா மனசு கஷ்டப்படும். என்றாள் கமலா எதையோ நினைத்தபடி.

அருகே இருந்த காளியம்மா பெரியம்மா சொன்னார்.
அடியே நிர்மலா பெரிம்மா இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ, நா என்னைக்கு செத்தாலும் நீ வந்து எனக்கு தண்ணி எடுக்கனும். என்ன...?
அந்திம கால நினைவும் பாச உனர்ச்சியும் குரலில் இழைந்திருந்தது.
ச..ரி.. எக்கா அம்மா சொல்றத கேட்டியா..? என மேலோட்டமாக சிரித்தாள் நிர்மலா.

தன் அம்மாவின் பாச உணர்வை மனதில் மெச்சிக்கொண்ட கமலா, "ஆமா ஒங்க அய்யா எப்படி இருக்காரு....தம்பி மாருங்க எப்புடி இருக்கானுங்க "என சித்தப்பா வீட்டாரின் நலத்தை விசாரித்தாள். சற்று நிறுத்தி "நிம்மி, அவரு (கருப்பசாமி) நூறு வருசத்துக்கு நல்லபடியா இருக்கட்டும். அப்படியே அவருக்கு ஏதும் ஆச்சுன்னு வச்சுக்கோ, சித்தப்பாவுக்கு செய்ற மொறய நா வந்து செய்வேன். என்ன சண்ட வந்தாலும் சரி." என்றாள்.
அதெல்லாம் ஒன்ன யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்கம்மா, நீ தாரளமா வாம்மா" என்றாள் நிர்மலா.
................................................................................................................................................................................................................................................................................................................................

ravisekar
22-05-2015, 05:24 AM
கீர்த்தி கொறஞ்சிடுமா கிரீடம் விழுந்திடுமா

தாகத்துக்கிடைக்காத தண்ணி

ரோச மயிருக்கு
செருப்பு பிஞ்சிடும்..

நெய்ப்பந்தம்

தண்ணி எடுப்பேன்.
---------------------------------

என்ன ஒரு கலாச்சாரப் பதிவு..

ஒரு நல்ல கலை... காலத்தின் கண்ணாடி.

இது ஒரு மிக நல்ல கலைப்படைப்பு...

கையைக் கொடுங்கள் கீழைநாடான். மனம் பூரிக்க குலுக்கி வாழ்த்துகிறேன்..

ravisekar
22-05-2015, 05:25 AM
சில் கதைகள் அழ் வைக்கும்...

இது அழகாய் நெகிழ வைத்தது....................

Mano.G.
22-05-2015, 10:57 AM
தம்பி கீழைநாடான்

நாம சந்திச்சு 7 வருஷம் ஆச்சு
இன்னைக்கு இந்த கதை வாசிச்சோன
நீரடிச்சு நீ விலகாதுன்னு தெரியுது


நீண்ட நாளைக்கு பிறகு வாசிச்ச ஒரு சிறுகதை
வாழ்த்துக்கள் தம்பி கீழைநாடான்

Mano.G.
22-05-2015, 10:57 AM
தம்பி கீழைநாடான்

நாம சந்திச்சு 7 வருஷம் ஆச்சு
இன்னைக்கு இந்த கதை வாசிச்சோன
நீரடிச்சு நீ விலகாதுன்னு தெரியுது


நீண்ட நாளைக்கு பிறகு வாசிச்ச ஒரு சிறுகதை
வாழ்த்துக்கள் தம்பி கீழைநாடான்

Keelai Naadaan
22-05-2015, 05:27 PM
நண்பர் ரவிசேகரின் கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.

உங்களுடன் கை குலுக்குவதில் மிகவும் மகிழ்ச்சி.

Keelai Naadaan
22-05-2015, 05:28 PM
மனோ அண்ணன் அவர்களுக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையிலேயே நீங்கள் கதையை படித்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

மிக நன்றி.

dellas
24-05-2015, 11:52 AM
அருமை. அழகு.
சித்தி, மாமா, அத்தை, பாட்டி தாத்தா. அவசர உலகில் மறந்துபோகும் உறவுகளாகி விட்டன.
'கல்யாணத்திற்கு ஒரு கிழமை முன்னே வந்து, வீடு நிறைந்து கலகலப்பாகி, கல்யாணத்திற்கு பின் ஒருகிழமை தங்கிப் போகும் உறவுகள்..எங்கே.?' என நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள்.

aren
26-05-2015, 02:43 AM
இந்த உரிமையான உறவு முறைகளை இனிமேல் காண்பது அரிது என்றே எனக்குத் தோன்றுகிறது. காரணம் இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரே குழந்தை என்ற முறையாகிவிட்டது. அப்படியென்றஅல் தம்பி தங்கை மாமா அத்தை போன்ற உறவு முறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

நல்ல கதையை படிக்கக் கொடுத்த உங்களுக்கு என் நன்றி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

aren
26-05-2015, 02:43 AM
இந்த உரிமையான உறவு முறைகளை இனிமேல் காண்பது அரிது என்றே எனக்குத் தோன்றுகிறது. காரணம் இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரே குழந்தை என்ற முறையாகிவிட்டது. அப்படியென்றஅல் தம்பி தங்கை மாமா அத்தை போன்ற உறவு முறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

நல்ல கதையை படிக்கக் கொடுத்த உங்களுக்கு என் நன்றி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

Keelai Naadaan
26-05-2015, 06:01 PM
'கல்யாணத்திற்கு ஒரு கிழமை முன்னே வந்து, வீடு நிறைந்து கலகலப்பாகி, கல்யாணத்திற்கு பின் ஒருகிழமை தங்கிப் போகும் உறவுகள்..எங்கே.?' என நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள்.


கருத்து பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி


உறவுகள் இல்லையென்றால் வாழ்வில் பிடிப்பு இல்லை என்பார் கவியரசு கண்ணதாசன்.

Keelai Naadaan
26-05-2015, 06:11 PM
இந்த உரிமையான உறவு முறைகளை இனிமேல் காண்பது அரிது என்றே எனக்குத் தோன்றுகிறது. காரணம் இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரே குழந்தை என்ற முறையாகிவிட்டது. அப்படியென்றஅல் தம்பி தங்கை மாமா அத்தை போன்ற உறவு முறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

நல்ல கதையை படிக்கக் கொடுத்த உங்களுக்கு என் நன்றி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

கருத்து பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி

எதிர்காலத்தில் நீங்கள் சொல்வது போல் ஒரு நிலை வந்தாலும் வரலாம். ஆனால் அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகலாம்.

அதுவும் கூட நம் தமிழ் கலாச்சாரத்தில் அவ்வளவு எளிதில் அந்த நிலை ஏற்படாது என நம்புகிறேன்.

Keelai Naadaan
26-05-2015, 06:13 PM
இந்த உரிமையான உறவு முறைகளை இனிமேல் காண்பது அரிது என்றே எனக்குத் தோன்றுகிறது. காரணம் இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரே குழந்தை என்ற முறையாகிவிட்டது. அப்படியென்றஅல் தம்பி தங்கை மாமா அத்தை போன்ற உறவு முறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

நல்ல கதையை படிக்கக் கொடுத்த உங்களுக்கு என் நன்றி. இன்னும் நிறைய எழுதுங்கள்.


கருத்து பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி

எதிர்காலத்தில் நீங்கள் சொல்வது போல் ஒரு நிலை வந்தாலும் வரலாம். ஆனால் அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகலாம்.

அதுவும் கூட நம் தமிழ் கலாச்சாரத்தில் அவ்வளவு எளிதில் அந்த நிலை ஏற்படாது என நம்புவோம்.

Keelai Naadaan
26-05-2015, 06:14 PM
இந்த உரிமையான உறவு முறைகளை இனிமேல் காண்பது அரிது என்றே எனக்குத் தோன்றுகிறது. காரணம் இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரே குழந்தை என்ற முறையாகிவிட்டது. அப்படியென்றஅல் தம்பி தங்கை மாமா அத்தை போன்ற உறவு முறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

நல்ல கதையை படிக்கக் கொடுத்த உங்களுக்கு என் நன்றி. இன்னும் நிறைய எழுதுங்கள்.


கருத்து பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி

எதிர்காலத்தில் நீங்கள் சொல்வது போல் ஒரு நிலை வந்தாலும் வரலாம். ஆனால் அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகலாம்.

அதுவும் கூட நம் தமிழ் கலாச்சாரத்தில் அவ்வளவு எளிதில் அந்த நிலை ஏற்படாது என நம்புவோம்.