PDA

View Full Version : சடுதியில் யாப்பு



ரமணி
04-05-2015, 01:49 AM
செல்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மரபுக் கவிதை எழுத முயலும் அன்பர்களுக்காக இந்தத் திரியைத் தொடங்குகிறேன். அன்பர்கள் பங்கேற்றுப் படித்துப் பயிற்சிகளை முயன்றுபார்த்துப் பின்னூட்டமிடுவது என்னை ஊக்குவிக்கும். -- ரமணி

சடுதியில் யாப்பு

முன்னுரை

யாப்பிலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை விரைவில் அறிந்துகொண்டு மரபுக் கவிதை ஆர்வலர்கள்
தாம் சொந்தமாகக் கவிதை முயல்வதற்கு உதவுவது இந்தச் சிறுநூலின் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை ஒரு மேல்-கீழ் (top-down) நோக்கில் பார்த்தால் அதன் கூறுகள் இப்படித் தெரியும்:
பாடல்/செய்யுள் -> அளவு -> அடி -> தொடை -> ஓசை -> தளை -> சீர் -> அசை -> எழுத்து -> மாத்திரை

இந்தக் கூறுகளை எளிதில் நினைவிற் கொள்ள ஒரு அகவற் செய்யுள்:

பாடல் என்பது செய்யுள் ஆகும்;
பாடல் அளவுடன் பயின்றே அமையும்;
அடிகள் கணக்கில் அமையும் அளவே;
அடியின் அளவு சீர்கள் கணக்கே;
அசைகள் கணக்காய் அமையும் சீரே;
அசையில் எழுத்துகள் அசையும் ஒருங்கே;
எழுதப் படுவன எழுத்துக ளாகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகும்;
சீர்கள் தளைக்கச் செவ்விதின் ஓசையின்
வேர்கள் அமைய விளங்கும் பொருளே;
ஒலிக்கும் எழுத்தை ஒருங்கில் அமைத்தே
பலவகை தொடுப்பதில் பயிலும் தொடையே.

யாப்பின் மேலுள்ள கூறுகள் ஒரு புகழ்பெற்ற ஔவையார் செய்யுளில் எவ்விதம் அமைந்துள்ளன என்று பார்ப்போம்.
கூறுகளின் விவரங்களை அவற்றைப் பற்றிப் படிக்கும்போது அலசுவோம். இப்போது நாம் அறியவேண்டியது
ஒரு செய்யுளில் உள்ள கூறுகளை இனங்கண்டு கொள்வது மட்டுமே.

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

பாடல்/செய்யுள்
இந்தப் பாடல் அல்லது செய்யுள் வெண்பா (அதிலும் நேரிசை வெண்பா) என்னும் பாவகையைச் சேர்ந்தது.

அளவு
வெண்பாவின் அளவு நான்கு அடிகள்.

அடி
வெண்பாவின் நான்கு அடிகளில் முதல் மூன்றும் நான்கு சீர்களைக் கொண்ட அளவடி யாகவும்,
ஈற்றடி மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடி யாகவும் அமையும்.

சீர்
இந்த வெண்பாவில் ஈரசைச் சீர்களும் (உதாரணம்: ஆற்-றங், கரை-யின்), மூவசைச் சீர்களும்
(உதாரணம்: விழு-மன்-றே, பழு-துண்-டு) கொண்ட சீர்கள் பயில்கின்றன.

அசை
மேற்சொன்ன மூவசை/ஈரசைச் சீர்களின் அசைகள் அமைந்த வகைகளுக்கு உதாரணங்கள்:
ஆற்-றங் -> ஆற்-றங் -> நேரசை-நேரசை
கரையின் -> கரை-யின் -> நிரையசை-நேரசை
வாழ்வதற் -> வாழ்-வதற் -> நேர்-நிரை
கொப்பில்லை -> கொப்-பில்-லை -> நேர்-நேர்-நேர்
உழுதுண்டு -> உழு-துண்-டு -> நிரை-நேர்-நேர்

ஈரசையாக மொத்தம் எட்டு வகைகளும், மூவசையாக மொத்தம் பதினாறு வகைகளும் உள்ளன.
அவற்றில் சில வகைகளே மேலுள்ள செய்யுளில் பயில்கின்றன.

எழுத்து
அவலோகிதம் என்னும் யாப்பாய்வு மென்பொருள் இந்த வெண்பாவை ஆய்ந்து தரும் எழுத்துகள் இப்படி:
உயிரெழுத்துகள்: 4
மெய்யெழுத்துகள்: 21
உயிர்மெய்யெழுதுகள்: 42

உயிர்/மெய்/உயிர்மெய் எழுத்துகள் பாலபாடமாதலால் இவற்றைச் செய்யுளில் இனம் கண்டுகொள்க.

மாத்திரை (குறில்: 1, நெடில்: 2, மெய்/ஆய்தம்: 1/2)
ஆற் -> 1 1/2 மாத்திரை
கரை -> 3 மாத்திரை
அரசறிய -> 6 மாத்திரை
வேறோர் -> 4 மாத்திரை
உழுதுண்டு -> 4 1/2

தளை
வெண்பாவின் அனைத்துச் சீர்களுக்கு இடையிலும் வெண்டளை மட்டுமே பயிலும்.
வெண்டளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்று இருவகைப்படும்.
விவரங்களைத் தளை இயலில் பார்ப்போம்.

ஓசை
வெண்டளை மட்டுமே பயில்வதால் வெண்பாவில் அமைவது செப்பலோசை யாகும்.
செப்பல் ஓசை என்பது ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லுவது போல அமைவதாகும்.

தொடை (எதுகை: இரண்டாம் எழுத்து ஒன்றுதல், மோனை: முதல் எழுத்து ஒன்றுதல்)
முதல் இரண்டு அடிகளிலும், அடுத்த இரண்டு அடிகளிலும் முதற்சீரின் இரண்டாம் எழுத்துகள் ஒன்றி வருவது காண்க.
ஆற்-வீற், உழு-பழு
இவை தவிர முதலிரண்டு அடிகளில் வரும் எதுகை இரண்டாம் அடியின் இறுதிச் சீரிலும் அமைவது காண்க.
ஆற்-வீற்-ஏற்

முதலடி தவிர மற்ற அடிகளில் முதலாம்-மூன்றாம் சீர்களின் முதல் எழுத்துகள் ஒன்றி மோனையாக வருவது காண்க.
வீற்-விழு, உழு-ஒப், பழு-பணிக்

எதுகை மோனைகளின் எழுத்தொலிகள் எங்ஙனம் செய்யுளை எளிதில் நம் நினைவில் இருத்துகின்றன என்பதையும் காண்க.

யாப்பிலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளான மாத்திரை -> எழுத்து -> அசை -> சீர் -> தளை -> அடி -> தொடை -> அளவு -> பா -> பாவினம்
இவற்றை இனிவரும் இயல்களில் விவரமாகப் பார்ப்போம்.

*** *** ***

செல்வா
04-05-2015, 01:18 PM
நன்றி ரமணி ஐயா. ஒரு சிறிய வேண்டுகோள். பலரும் இலக்கணம் பற்றிப் பேசும்போது அவர்களறியாமலே சங்ககாலத் தமிழைப் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இதுவும் கூட ஒரு காரணம், தற்கால இளைஞர்கள் தமிழை விலக்கி வைத்திருப்பது. எனவே முடிந்தவரை நாம் சாதாரணமாகப் பேசும் அல்லது எழுதும் தற்கால தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி விளக்கங்கள் கொடுக்க முடிந்தால் இன்னும் மகிழ்ச்சி.

ரமணி
05-05-2015, 04:28 AM
சடுதியில் யாப்பு
இயல் 1. எழுத்து, மாத்திரை

எழுதப் படுவது எழுத்து. நாம் பேசும் ஒலியின் வரிவடிவம் எழுத்து. எழு = வினை வேர்; எழுத்து = அதிலிருந்து எழுந்த பெயர்ச்சொல்.

தமிழ் எழுத்துகள் மொத்தம் மூணு வகை:
உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், சார்பெழுத்துகள்.

உயிரும் மெய்யும் முதலெழுத்துகள்.
முதலெழுத்துகளை ஒட்டி எழுவன சார்பெழுத்துகள்.

உயிரெழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு:
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

மெய்யெழுத்துகள் மொத்தம் பதினெட்டு:
க் ஞ் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

உயிர் + மெய் = மொத்தம் முப்பது முதலெழுத்துகள்.

உயிரெழுத்து இரண்டு வகை:
குறில்: அ இ உ எ ஒ
நெடில்: ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ

மெய்யெழுத்து மூணு வகை. மெய்யெழுத்துகளை ஒற்று என்றும் சொல்லுவோம்.
வல்லினம்: க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

பின்னாள் வழக்கில் தோன்றி இன்று பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகள்:
ஶ் ஷ் ஸ் ஹ் ஜ் க்ஷ் ஶ்ரீ

மெய்யெழுத்துகளை உச்சரிப்பது கடினம் அல்லவா? அதனால் அவற்றுடன் உயிரெழுத்து அ-வைச் சேர்த்து உச்சரித்து நினைவில் வைப்போம்.
க, ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
ஶ ஷ ஸ ஹ

மூன்று மெய்யினங்கள்:
கசடதபற: வல்லினம்
ஙஞணநமன: மெல்லினம்
யரலவழள: இடையினம்
(’அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டு ஞாபகம் வருமே!)

முதலெழுத்துகளைச் சார்ந்து வருவது சார்பெழுத்துகள். இவை பத்து வகை.
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம்.

உயிர்மெய் வகை எல்லார்க்கும் தெரியும். மற்றவற்றை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்து பழகிவிட்டொம். இனி தப்பமுடியாது!

சார்பெழுத்துகள் விவரம்
01. உயிர்மெய் எழுத்துகள்

பதினெட்டு மெய் x பன்னிரண்டு உயிர் தனித்தனியே = மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகள். அதாவது,
க முதல் கௌவரை முதல் வரிசை
ங முதல் ஙௌ வரை இரண்டாம் வரிசை
...
ன முதல் னௌ வரை இறுதி வரிசை

பயிற்சிகள்
பயிற்சி 1.00.

மரபுக் கவிதை முயலும் அன்பர்களுக்கு அவசியமான உதவி-வலைதளங்கள் கீழே. அன்பர்கள் இவற்றைத் தங்கள் பிரௌசரில் தனித்தனி பக்கங்களில் திறந்துவைத்துக் கொள்ளவும்.

தமிழ் ஒருங்குறி எழுத்துகளில் தட்டெழுத
http://kandupidi.com/editor/

தமிழ் அகராதி, ஒரு சொல் பார்க்க
http://agarathi.com

தமிழ் அகராதி, பல சொல் தேட
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

தட்டெழுத்து வலைதளத்தில் ’தமி’ என்று எழுதி, அதை நகலெடுத்து ஒட்டி,
மூன்றாம் வலைதளமான சென்னைத் தமிழகராதியில் ’தமி’ என்று தொடங்கும் சொற்களைத் தேடிப்பார்க்கவும்.
பின்னர் ’தமி’ என்பது இடையில் வரும் சொற்களைத் தேடிப்பார்க்கவும்.
’தமி’ என்று முடியும் சொற்கள் உள்ளனவா?
’தமி’ என்ற இரண்டு எழுத்துகள் மட்டும் உள்ள சொல் உள்ளதா?

பயிற்சி 1.01. எழுத்துகள் இனம் கலந்த சொற்கள்

வல்லினம்-மெல்லினம்-இடையினம், மெல்-இடை-வல், இடை-வல்-மெல் -- இந்த வகையில் வரும் மூன்றெழுத்துச் சொற்கள் குறைந்தது மூன்று கண்டெழுதவும். ஒற்றுகள் வந்தால் அதே இன ஒற்றுகளாக இருக்கவேண்டும். உதாரணம்: கனவு, மளிகை, வாகனம்

பயிற்சி 1.02. ஒரே இன எழுத்துச் சொற்கள்

வல்லினம் மட்டும், மெல்லினம் மட்டும், இடையினம் மட்டும் பயிலும் சொற்கள் குறைந்தது மூன்று கண்டெழுதவும். ஒற்றுகள் வந்தால் அதே இன ஒற்றுகளாக இருக்கவேண்டும். அதே எழுத்து திரும்பவும் வரலாம். உதாரணம்: குடகு, மனனம், வாழ்விலே

பயிற்சி 1.03. குறில்-நெடில் மாறி மாறி...

முதல்வரும் சொல் குறிலில் தொடங்கிப் பின்வருவன நெடில்-குறில்-நெடில் என்று மாறிமாறி முதலெழுத்தாய் வர, நான்கு சொல் கொண்டு பொருளுடன் அமையும் ஒரு வரி எழுதவும்.

உதாரணங்கள்:
அன்னை ஆசான் என்பதை ஏற்பாய்.
மழையின் தாக்கம் மகிழ்வைக் கூட்டும்.

பயிற்சி 1.04. எல்லாம் குறிலாக...

எல்லாச் சொற்களும் குறிலில் தொடங்கிப் பொருளுடன் அமைந்த நாலு சொல் வரியொன்று எழுதவும்.
உதாரணம்: கண்ணன் இன்று சினிமா சென்றான்.

பயிற்சி 1.05. எல்லாம் நெடிலாக...

எல்லாச் சொற்களும் நெடிலில் தொடங்கிப் பொருளுடன் அமைந்த நாலு சொல் வரியொன்று எழுதவும்.
உதாரணம்: காற்றாய்க் கானல் நீராய்க் காதல்.

குறிப்பு: மேலுள்ள பயிற்சிகளின் நோக்கம் உங்கள் கற்பனையையும் முயற்சியையும் தூண்டிவிட்டு, அவை ஒன்றாக இயங்கிச் செயல்பட வைப்பதே. எனவே, அன்பர்கள் ஒவ்வொருவரும் எல்லாப் பயிற்சியையும் அக்கறையாக முயன்று பார்க்கவும். குறைந்தது இருவர் பதில்கள் இட்டபின் அடுத்த பகுதியைத் தொடர்வேன்.

*****

அமரன்
05-05-2015, 01:02 PM
எப்போதும் இந்த மாதிரி திரிகளுக்கு முதலில் வருபவன் நான். ஆனால் இன்னும் இந்தப் பா இலக்கணம் என்னைக் காதலிக்க இல்லை. இந்த்ஹ முறையாவது பார்ப்போம்.

செல்வா
08-05-2015, 01:44 AM
ஆகா... பயிற்சியே ஆரம்பிச்சிட்டீங்களா. அருமை அருமை.

இதென்ன பெரிய காரியமானு எழுத ஆரம்பிச்சப்பதான் தெரிஞ்சுது தமிழை மறந்து எவ்ளோ தொலைவில இருக்கோம்னு.

ஒண்ணு ஒண்ணா நீங்க கொடுத்த சுட்டிகளின் உதவியோட தேடி தேடி எழுதுறேன். அதனால கொஞ்சம் மெதுவாத்தான் வருவேன் கோச்சுக்காதீங்க.

வல்லினம்-மெல்லினம்-இடையினம்,
தினவு, தனியா, தணியா, சணல்,பணிவு,கனிவு

மெல்-இடை-வல்
நாழிகை, நலிபு (ஆய்தவெழுத்திற்குச் செய்யுளில்வழங்குமொரு பெயர்.), மரிசி, மரிசு

இடை-வல்-மெல்
வடம், வசம், வாசம், வீசம், விசம், ரசம், ரதம்,லாபம்.

செல்வா
08-05-2015, 02:51 AM
இது கொஞ்சம் எளிதாயிருந்தது.

வல்லினம் மட்டும்
கசடு, படகு, தட்டை, பட்டை, பத்தி, பற்றி, பற்றுக, படித்த , பாட்டு, பதறி, பதறை (மலை)

மெல்லினம் மட்டும்
மணி, மண், முனி, நனி, நாணி, நாமம்

இடையினம் மட்டும்
வாழை, வாலை, வாரி, யாழி, யாழ், வள்ளம், யாவர், வளி, வழி


பயிற்சி 1.03. குறில்-நெடில் மாறி மாறி...

இந்தியாவின் நீதி இன்று பீதியில்.
கடலைக் காண குழுவாய் போனோம்.
தண்ணீர் தேடி தவிக்கும் தாமரைகள்.

ravisekar
09-08-2015, 06:46 PM
மிக் அருமையான பாடங்கள் ரமணி அவர்களே.

நானும் வருகிறேன். தொடருங்கள்.

ரமணி
14-05-2017, 04:49 AM
அன்புடையீர்!

இங்குத் தொடரவியலாத நிலையில் அடியேன் 'சடுதியில் யாப்பு' என்னும் முகநூல் குழுமம் தொடங்குவதாக இருக்கிறேன். முகநூல் கணக்குள்ள 'தமிழ் மன்றம்' அன்பர்கள் எனக்கு நட்பு வேண்டுகோள் அனுப்பி, இந்த புதிய குழுமம் பற்றிய பதிவுகண்டு பெயர் கொடுத்துச் சேரலாம். என் முகநூல் முகவரி:
https://www.facebook.com/profile.php?id=100009339137497

அன்புடன்,
ரமணி