PDA

View Full Version : மரம்சிவா.ஜி
27-04-2015, 02:25 PM
தனது அலுவலக மேலாளரை சந்திக்க அவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டு வந்திருந்தான் சுகுமார். வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தவனுக்கு ஏதோ வித்தியாசமாய் பட்டது. அங்கிருந்த அனைத்து மேசை நாற்காலி, அலமாரி எல்லாமே ஏதோ ஒரு உலோகத்தாலேயே செய்யப்பட்டிருந்தது. சுகுமார் ஆச்சர்யப்பட்டான். மேலாளர் வந்து அவனை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்னார். அவன் இன்னமும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்து விட்டு,


“என்னங்க சுகுமார் ஆச்சர்யமா பாக்கறீங்க...என்னடா எல்லாம் ஏதோ உலோகத்துல செஞ்சதாவே இருக்கேன்னுதானே?”


“ ஆமாங்க சார். இன்னைக்கு எல்லா வீட்லயும் தேக்குல செஞ்சது, ரப்பர் மரத்துல செஞ்சது அது இதுன்னு எல்லாம் மரத்துலதான் இருக்கும் நீங்க வித்தியாசமா உலோகத்துல செஞ்சியிருக்கீங்க...ஏதாவது பிரத்தியேக காரணமா?”


“ம்...காரணம்ன்னா....முதலாவது மரங்களை வெட்டிப் பாழாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அது மட்டுமில்லாம உயிருள்ள அந்த மரங்களை வெட்டி சாகடிச்சிட்டு அதால செஞ்ச நாற்காலியில உக்காந்தா பிணத்து மேல உட்காருற மாதிரியிருக்கு. அதனலத்தான் பிளாஸ்டிக் மரம் இதையெல்லாம் தவிர்க்கிறேன். ஆனா இந்த வீட்லயும் மரம் இருக்கு எங்க இருக்கனுமோ அங்க. என் தோட்டத்துல செழிப்பா வளர்ந்து உயிரோட இருக்கு”


சொல்லிவிட்டு சிரித்தவரை ஆச்சர்யமாகவும் மரியாதையோடும் பார்த்தான் சுகுமார்.

ஆதவா
27-04-2015, 03:13 PM
மரத்தாலான பொருள் அல்லாமல் ஒருவரால் வாழமுடியுமா என்பது சாத்தியமல்லாதது.. கதைக்காக ஓகே, வாழ்க்கையில் அப்படி இருக்க முடியாது.
ஆனால் நானொரு pantheist ஆக இருந்துகொண்டு சொல்கிறேன். மரங்கள் இயற்கை நமக்கு அளித்த கொடை. ஒரு மரம் வெட்டினால் பத்து மரம் வளர்க்க வேண்டும். தேக்கு போன்ற மரங்கள் கமர்ஷியல் உபயோகத்திற்காக வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ப்ராய்லர் கோழியைப் போல. நாம் ப்ராய்லரை உண்பது தவறல்ல, காட்டு மானை அடித்து உண்பதுதான் மிகவும் தவறானது. அந்த வகையில் மரத்தை நாம் உபயோகிப்பதில் தவறில்லை, இயற்கை நம்மிடம் என்ன சொல்கிறது என்றால், என்னை வெட்டி உன் உபயோகத்திற்கு வைத்துக்கொள், ஆனால் நாளை வெட்டுவதற்கு இன்னொரு மரத்தை தயாராக வைத்திரு என்கிறது. நாம் வெட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோம், அதான் பிரச்சனை.

மீச்சிறு கதை,
சுவாரசிய முடிவாக இருக்கிறது,

தொடர்ந்து உங்கள் எழுத்தை வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.

தாமரை
27-04-2015, 03:31 PM
ஒரு சின்ன பொறி. அதுக்கு ஒரு சின்ன சம்பவத்தை துணையாக்கி அதை ஒரு மைக்ரோ கதையாக்கி இருக்கிறீர்கள். பால்ராசைய்யா அவர்கள் இப்படி மீச்சிறு கதைகள் எழுதியதாக ஞாபகம். குறுந்தகவல்கள் காலத்தில் மீச்சிறு கதைகள் வடிக்கப்பட்டன. வாட்ஸப் காலத்தில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒரு பொறியை மனதில் தூவலாம்.

மரங்களின் உயிர்ப்பு உலோகங்களில் இருப்பதில்லை. சில உலோகங்கள் ஒவ்வாமையைத் தரும். உலோகங்களை உருவாக்கவும் வடிவமைக்கவும் இயற்கையை பாடுபடுத்தத்தான் செய்கிறோம்.

ஏன் மனித எலும்புகளால் இருக்கைகள் அமைத்துக் கொள்ளக் கூடாது? மனிதத் தோலிலேயே தேவையான காலணிகள், இருக்கைகள், பெல்டுகள் செய்து கொண்டால், முன்னோர் ஞாபகார்த்தமாகவும் வைத்துக் கொள்ளலாமே!!!

சிவா.ஜி
27-04-2015, 03:41 PM
அருமையான கருத்துக்கள் ஆதவா. நானும் உடன்படுகிறேன். ஆதிவாசியினரில் சில பிரிவினர் மரங்களை எரித்து விளைநிலங்களுக்கு எருவாக்கி விவசாயம் செய்தார்கள். (இந்த முறையை “போடுசாஸ்” என்றழைப்பார்கள்) இருப்பினும் அந்தக் காடுகள் அடர்த்தியாகவே இருந்தன. காரணம் நீங்கள் சொன்ன ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை உருவாக்க வேண்டும் அதனை மிகச் சரியாக பொறுப்போடு அவர்கள் செய்ததினால்தான் இன்றளவும் சில காடுகள் நலமாக வளமாக இருக்கின்றன.

நன்றி ஆதவா.

சிவா.ஜி
27-04-2015, 03:44 PM
ஆஹா....தாமரையின் ஐடியாவைப் பயன்படுத்தினால்...சுடுகாடும், இடுகாடும் தேவையின்றி போய்விடும். ஆனா மனிதனின் தோலில் எதுவுமே செய்ய முடியாது என்றல்லவா சொல்கிறார்கள்.

ஆதவா
27-04-2015, 03:45 PM
ஏன் மனித எலும்புகளால் இருக்கைகள் அமைத்துக் கொள்ளக் கூடாது? மனிதத் தோலிலேயே தேவையான காலணிகள், இருக்கைகள், பெல்டுகள் செய்து கொண்டால், முன்னோர் ஞாபகார்த்தமாகவும் வைத்துக் கொள்ளலாமே!!!

இதெயெல்லாம் ஆட்சியிலிருப்பவர்கள் கேட்டுவிடப் போகிறார்கள்...

மனித தோல் காலணிகள், இருக்கைகள் பயன்பாட்டுக்கு வந்தால் ரோட்டில் கிடப்பவர்கள் தோலை உரித்து விடுவார்கள்... தோலுக்காக கொலைகள் விழும்... ஆகவே தான் மனித தோலை பயன்பாட்டுக்கு அற்றதாக படைத்துவிட்டது இயற்கை. மாட்டுத் தோல்கள் கடினமானவை.

தாமரை
27-04-2015, 05:11 PM
மனிதத் தோலை சரியாக பதப்படுத்தினால் முடியும். நம்மை வென்று ஆண்டவர்கள், தாங்கள் வென்றவர்களை கொன்று, அவர்களின் தோலை உரித்து, அதில் வைக்கோல் நிரப்பி தொங்க விட்டுவிட்டு, கறியைச் சமைத்து இறந்தவனின் குடும்பத்திற்கே பரிமாறியும் இருக்கிறார்கள்.

அதனால் முடியாது என்பது இல்லை.

மனித எலும்பும் தோலும் மரணத்தின் நித்தியத்தை உணர்த்தும். அதனால் மக்கள் உபயோகப்படுத்த பயப்படுகிறார்கள். பஞ்ச காலங்களில் எலும்புகள் பொடிகளாக அரைக்கப்பட்டு மாவுடன் கலப்படம் செய்து விற்கப்பட்டன.

ஓவியன்
28-04-2015, 11:24 AM
நான் இருந்த ஒரு வெளிக்கள அலுவலகத்தில் ஒவ்வொரு கோப்புகளையும் பிரதி செய்து என் மேசைக்கு கொண்டு வருவார்கள், அது எனக்கு வேண்டப்படாத பிரதியாக இருந்தாலும் கூட....

ஏம்பா இப்படிப் பண்ணுறீங்க, மென்பிரதியாக அனுப்பலாம்ல, வீணாக மரத்தைனை வீணடிக்கிறீங்களே தெரியாதா என்றேன்....!! (அலுவலக ஊழியர் ஒருவர், சார் பேப்பர் மரத்திலிருந்தா செய்யுறாங்கனு கேட்டது, வேறு கதை..!!)

இல்லை சார்,

நாம உபயோகிப்பது டபுள் a பேப்பர் சார், அவங்க தாங்க நடுகை செய்த மரங்களைத்தான் உபயோகிப்பாங்க (Double a's manufacturing process is founded on the use of raw materials we can cultivate, conserve and generate without interfering with nature and our neighboring communities.) - பிரச்சினை கிடையாது என பதில் வந்தது.

பிரச்சினையே இதுதான், நமா அறிவுபூர்வமாக புத்திசாலித்தனமாக செய்கிறோம்னு நினைக்கும் இடத்தில் கூட நாம் தவறு செய்கிறோம்னு நான் அறியாமல் போவதுதான் பிரச்சினையே...!!

அழகான கருவினை சொல்லிய கதைக்கு என் வாழ்த்துகளும் சிவா. ஜி..!!

செல்வா
28-04-2015, 01:03 PM
மரங்கள் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் உலோகங்கள் தீர்ந்துபோனால் மறுபடி உருவாக்கல் ஏலாது. மரங்கள் தயாரிக்கும் போது வரும் சுற்றுச்சூழல் கேடுக்கும் உலோகங்களால் வரும் சுற்றுச்சூழல் கேடுக்கும் ஒற்றுமைப் படுத்த முடியாது. இதற்கு அது மாற்றாகுமா? கதைசொல்ல வந்த கரு "மரம் வளர்ப்பு" ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் கதையில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா. வாழ்த்துக்கள்.

ஆதவா
28-04-2015, 01:17 PM
மரங்கள் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் உலோகங்கள் தீர்ந்துபோனால் மறுபடி உருவாக்கல் ஏலாது. மரங்கள் தயாரிக்கும் போது வரும் சுற்றுச்சூழல் கேடுக்கும் உலோகங்களால் வரும் சுற்றுச்சூழல் கேடுக்கும் ஒற்றுமைப் படுத்த முடியாது. இதற்கு அது மாற்றாகுமா? கதைசொல்ல வந்த கரு "மரம் வளர்ப்பு" ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் கதையில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா. வாழ்த்துக்கள்.

உண்மைதான், உலோகத்திற்காக வெட்டியெடுக்கப்படும் பூமியை கணக்கில் கொள்ளும்போது மரம் வளர்த்து அதன் பயன் பெறுவது மேலானதுதான். உங்களது கோணமும் சிறப்பானதே..

அமரன்
28-04-2015, 01:30 PM
மீண்டும் களம் கண்ட வேங்கைக்கு வாழ்த்துகள்.

மக்களின் தேர்ந்த அலசல் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஒன்றுக்குப் பத்து பொருத்தமான கணக்கு.

சிவா.ஜி
29-04-2015, 11:34 AM
நன்றி ஓவியன்.

சிவா.ஜி
29-04-2015, 11:36 AM
செல்வா...அந்த மேலாளரின் கோணத்தில், மரங்களை உயிருள்ளதாய் பார்க்கிறார். அதனால் அவற்றின் மீது அமர்வதை விட உயிரற்ற உலோகத்தின் மேல் அமர்வதை அவர் விரும்புகிறார். இருப்ப்ன்ம் உங்கள் கருத்தும் சரியானதே. கருத்துக்கு நன்றி.

சிவா.ஜி
29-04-2015, 11:38 AM
ரொம்ப நன்றி பாஸ்...நமது மன்றத்தின் மேன்மையே பல கருத்துக்களை பதிவிட்டு அலசுவதுதானே...தொடரட்டும் இந்த கருத்து அலசல்கள்.

aren
30-04-2015, 07:00 AM
நல்ல கருத்து சிவாஜி. ஆனால் நடைமுறையில் பல விஷயங்கள் சாத்தியமில்லை. நானும் மரம் வெட்டப்படுவதைப் பார்த்து கண் கலங்குபவன். என்னுடைய பல நாள் கனவு என்னவென்றால் ஒரு 100 ஏக்கர் நிலம் வாங்கி அது முழுவதும் மரங்களும் செடிகளும் வைத்து அதை பறவைகளுக்கும் சின்ன விலங்குகளுக்கும் காணிக்கையாக்கவேண்டும் என்ற கனவு இன்றும் இருக்கிறது. அது நிறைவேறும் என்றே நினைக்கிறேன்.

ஆதவா
30-04-2015, 09:16 AM
நல்ல கருத்து சிவாஜி. ஆனால் நடைமுறையில் பல விஷயங்கள் சாத்தியமில்லை. நானும் மரம் வெட்டப்படுவதைப் பார்த்து கண் கலங்குபவன். என்னுடைய பல நாள் கனவு என்னவென்றால் ஒரு 100 ஏக்கர் நிலம் வாங்கி அது முழுவதும் மரங்களும் செடிகளும் வைத்து அதை பறவைகளுக்கும் சின்ன விலங்குகளுக்கும் காணிக்கையாக்கவேண்டும் என்ற கனவு இன்றும் இருக்கிறது. அது நிறைவேறும் என்றே நினைக்கிறேன்.

சூப்பர் அண்ணா... ரொம்ப அருமையான முயற்சியாக இருக்கும்...
நான் இப்போது இயற்கையை மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன், சிலசமயம் பேசவும் ஆரம்பித்திருக்கிறேன். அதன் அடிமனதிற்குள் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் ஒரு கனவு இருக்கிறது, வாழ்நாளில் மொத்தமாக ஆயிரம் மரங்களாவது நடவேண்டும் என்பது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முப்பது வரைதான் முடித்திருக்கிறேன். (வயதுக்கு ஒன்று என்றாலும் ஆயிரம் வயது வேண்டுமே...) நீங்கள் எங்கே இந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் எனக்கு ஒரு நூறு கன்றுகளாவது நடுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்....

ravisekar
03-08-2015, 05:56 PM
மிக் நல்ல கரு. மிக மிக அழகான அலசல்.

சிவாஜிக்கும் கருத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.