PDA

View Full Version : திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்



M.Jagadeesan
26-04-2015, 03:58 AM
திருக்குறள் :
==========
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் .( புணர்ச்சி மகிழ்தல் -1104 )

ஹைக்கூ ;
=========
நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
-காதல்.

M.Jagadeesan
26-04-2015, 04:06 AM
திருக்குறள் :
===========
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ( குறிப்பறிதல்- 1091 )

ஹைக்கூ :
=========
நோயும் தந்து அதற்குரிய
மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
- காதலி

M.Jagadeesan
26-04-2015, 04:13 AM
திருக்குறள் :
===========
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். ( வெகுளாமை- 305 )

ஹைக்கூ :
=========
உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
உன்னையும் வளர்த்ததால் , உயிர் இழந்தேனே !
- சினம்

M.Jagadeesan
26-04-2015, 04:41 AM
திருக்குறள் :
===========
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( ஈகை-226 )

ஹைக்கூ :
==========
சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
சேமித்து வைக்க சிறந்த வங்கி
- பசித்தவன் வயிறு.

M.Jagadeesan
26-04-2015, 04:47 AM
திருக்குறள் :
===========
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. ( வாய்மை- 299 )

ஹைக்கூ :
=========
ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
அதிக ஒளியைத் தருவது
-உண்மை.

முரளி
26-04-2015, 04:53 AM
எனக்கு பிடித்த குறள் இது . நேரம் கிடைக்கியில் இதற்கேற்ற ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் !

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

(ஒருவன் செய்யத்தக்க அல்லாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
திருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>தெரிந்துசெயல்வகை )

M.Jagadeesan
26-04-2015, 06:07 AM
முயற்சிக்கிறேன் முரளி !

M.Jagadeesan
26-04-2015, 06:17 AM
திருக்குறள் :
===========
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( அடக்கமுடைமை -127 )

ஹைக்கூ :
==========
அணுகுண்டைக் காட்டிலும்
ஆபத்தான ஆயுதம்
- நாக்கு.

M.Jagadeesan
26-04-2015, 06:30 AM
திருக்குறள் :
===========
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. ( பொறையுடைமை- 151 )

ஹைக்கூ ;
==========
வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
- நிலம்.

M.Jagadeesan
26-04-2015, 06:55 AM
திருக்குறள் :
============
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. ( நிலையாமை-332 )

ஹைக்கூ :
==========
வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போகும்போது சேர்ந்தே போகும் !
-செல்வம்.

ஆதவா
26-04-2015, 07:01 AM
எல்லாம் படித்தேன்... அபாரம்.
திருக்குறளே இரண்டு அடிகள் தான் என்றாலும் பலருக்கும் பல குறள்கள் புரிவதில்லை (என்னையும் சேர்த்துதான்), தவிர ஒவ்வொரு குறளுக்கும் மாற்று கண்ணோட்டம் உண்டு. அதனால்தான் வருடாவருடம் புதுப்புது திருக்குறள் உரைகள் வருகின்றன. ஒரு சில உரைகளைப் பார்த்து படிக்கும்பொழுது அதற்கு திருக்குறளே பெட்டர், படித்தால் புரிந்துவிடும் என்று தோணும். உங்கள் மூன்று வரி விளக்கங்கள் மிக எளிமையாக அருமையாக இருக்கின்றன... இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகமே வெளியிடலாம்.!!

M.Jagadeesan
26-04-2015, 07:19 AM
தங்கள் பாராட்டுரைக்கு நன்றி ஆதவா.

முரளி
26-04-2015, 07:26 AM
மிக அழகாக உள்ளது. ஜெகதீசன் ! எளிமையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. ...

M.Jagadeesan
26-04-2015, 08:22 AM
திருக்குறள் :
===========
புறந்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையாற் காணப் படும். ( வாய்மை- 298 )

ஹைக்கூ :
==========
கங்கையிற் குளித்தாலும் தொலையாத கருமத்தைக்
காசேதும் செலவின்றித் தொலைப்பதற்கு வழியுண்டு.
- உண்மை பேசு.

M.Jagadeesan
26-04-2015, 05:55 PM
திருக்குறள் :
============
செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க
செய்யாமை யானும் கெடும். ( தெரிந்து செயல்வகை -466 )

ஹைக்கூ :
=========
செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
- நிம்மதி.

M.Jagadeesan
27-04-2015, 02:33 AM
திருக்குறள் :
===========
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு-341 )

ஹைக்கூ :
==========
விட்டுவிட விட்டுவிட இன்பம்
விலகிடும் பனிபோல் துன்பம்.
- துறவு.

M.Jagadeesan
27-04-2015, 03:46 AM
திருக்குறள் :
============
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( வரைவின் மகளிர்-920 )

ஹைக்கூ :
==========
கள்ளிலும் கவறிலும் ( சூது ) விட்டது பாதி
கணிகையைத் தொட்டதில் போனது மீதி
- பொருள்.

தாமரை
27-04-2015, 04:24 PM
அருமையான "நச்சென்ற" எளிய வரிகள். அபாரம்

அமரன்
27-04-2015, 06:28 PM
குறட்கடலில் முத்துக்குளிக்க பேராசை.
நீச்சல் தெரியாத எனக்கு அது வீணாசை..
உங்கள் அலைத்தமிழ் கரை ஒதுக்கும் கருத்துரை
என்னையும் குறட்பொருளால் நனைத்தது..

நன்றி ஐயா

இடர் வரினும் தொடர வேண்டுகிறேன்

M.Jagadeesan
28-04-2015, 03:29 AM
தாமரை மற்றும் அமரன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி !

M.Jagadeesan
28-04-2015, 12:09 PM
திருக்குறள் :
============
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழைச்சொல் கேளா தவர். ( மக்கட்பேறு-66 )

ஹைக்கூ :
==========
குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
கண்ணே ! உன் மழலையிலே காதுகள் இனித்ததடா !

M.Jagadeesan
03-05-2015, 04:31 PM
திருக்குறள் :
===========
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் .( இரவச்சம்- 1066 )

ஹைக்கூ :
==========
அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது
தேவர்கள் உண்ணுகின்ற அமுதத்தைவிட உயர்ந்தது
சொந்த உழைப்பிலே வந்த கூழ். !

M.Jagadeesan
04-05-2015, 08:39 AM
திருக்குறள் :
===========
அரிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை - 43 )

ஹைக்கூ :
===========
பீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது !
கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
அதுவே அறிவு என்னும் அற்புதப் பொருளாகும் !

பிரசன்னா
27-05-2015, 05:11 AM
மிக அருமை

Keelai Naadaan
02-06-2015, 05:13 PM
அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது
தேவர்கள் உண்ணுகின்ற அமுதத்தைவிட உயர்ந்தது
சொந்த உழைப்பிலே வந்த கூழ். !

குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
கண்ணே ! உன் மழலையிலே காதுகள் இனித்ததடா !

பீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது !
கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
அதுவே அறிவு என்னும் அற்புதப் பொருளாகும் !

கங்கையிற் குளித்தாலும் தொலையாத கருமத்தைக்
காசேதும் செலவின்றித் தொலைப்பதற்கு வழியுண்டு.
- உண்மை பேசு.

நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
-காதல்

நோயும் தந்து அதற்குரிய
மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
- காதலி

ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
அதிக ஒளியைத் தருவது
-உண்மை.

வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போகும்போது சேர்ந்தே போகும் !
-செல்வம்.
.

மிகவும் ரசித்த வரிகள்.

இளைய தலைமுறைக்கும் திருக்குறளின் சாரம் எளிதில் புரியும் படி, மனதில் பதியும் படி அருமையான விளக்கங்கள்.

மிகவும் நன்றி.

ravisekar
02-06-2015, 05:15 PM
மிக நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.