PDA

View Full Version : மனைவி என்பவள்.......shreemurali
09-03-2015, 08:41 AM
“பாட்டி நான் காலேஜ் போயிட்டு வரேன்” என ஐஸ்வர்யாவும் கிளம்ப, வீடே வெரிச்சோடி இருந்தது அலமு என்கிற அலமேலு பாட்டிக்கு. இரண்டு மாதத்திற்கு முன்தான் அலமு பாட்டியின் கணவர் பரமேஸ்வர ஐய்யர் காலமானார் வயது எழுபத்தி நாலு. இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் குழந்தைகள். மாப்பிள்ளைகள் மருமகள்கள் பேரன் பேத்தி என எப்பொழுதுமே வீடு திருவிழா போல் ஜே ஜேவெனக் இருக்கும் குடும்பம். ஆனால் எப்பொழுதும் உறவுகள் நம் கூடவே இருப்பதில்லை. மூத்த மகன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு இடத்தில் வேலைக்காரணமாக வாசம்.

பரமேஸ்வர ஐய்யர் மறைவுக்கு அனைவரும் வந்தனர் காரியம் முடிந்ததும் சென்றுவிட்டனர். முதல் முறையாக அலமு பாட்டி வீட்டில் தனிமையின் கொடுமையை உணர்ந்தார். எல்லா வேலைகளையும் மருமகளே செய்துவிட்டாள். மகனும் மருமகளும் வேலைக்கு சென்றுவிட்டனர் மூத்த பேத்திக்கு திருமணமாகி தஞ்சாவூரில் இருக்கிறாள் இளையவள் கல்லூரி சென்றுவிட்டாள். மனது கணவரை நினைத்து வாடியது சாப்பிட்டு தூங்க வேண்டிய வேலை மட்டுமே இருந்தது.

தன் அறைக்கு வந்த பாட்டிக்கு கணவரின் பிரிவை நினைத்துப் பார்க்க நெஞ்சமே வெடித்துவிடும் போல் இருந்தது. புதியதாக மாட்டிய கணவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுவிட்டார் அலமு பாட்டி. “ஏன்னா என்னையும் அழைச்சிண்டு போயிருக்க்க் கூடாதா … இங்க எல்லாரும் பாசமாத்தான் இருக்கா ஆனா நீங்க இல்லாம என்னால இருக்க முடியலனா” என கதறிவிட்டார். தாத்தா பதிலேதும் கூறாமல் மலர்மாலை வழியாக பாட்டியை பார்த்து சிரித்த வண்ணம் இருந்தார்.

தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டார் பாட்டி அப்பொழுது அவர் கண்ணில் பரமேஸ்வர ஐய்யரின் பச்சை நிற டிரங்கு பெட்டி கண்ணில் பட்டது. ஐய்யர் ஒருபோதும் அதை மற்றவர்கள் தொட அனுமதித்ததே இல்லை. பாட்டியும் கணவர் சொல்லை என்றுமே மீறியது இல்லை.
பாட்டி அலமாரியில் இருந்து துருபிடித்த பெட்டியை இறக்கினார். தூசித்தட்டி துடைத்தார். அதற்கு ஒரு பூட்டுகூட இல்லை. பெட்டியை திறந்தார் பாட்டி அதனுள் தாத்தாவின் பெற்றோரின் பழைய புகைப்படங்கள் சில கடிதங்கள் மற்றும் ப்ரோநோட்டுகள் இருந்தது. மற்றும் கொஞ்சம் சில்லறை காசு. இவற்றுக்கெல்லாம் கீழே 1960ஆம் வருட டைரி.

மூக்கு கண்ணாடியை சரி செய்தவாரு அதைப் பிரித்து பார்த்தார் பாட்டி பூச்சிகள் அரித்து பழுப்பு நிறத்தில் இருந்த காகிதங்களை சிரமப்பட்டு படித்தார். அதில் முதலில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் இருந்தது பிறகு பொங்கள் வாழத்துகள். மேலும் மளிகை சாமான் பாக்கி ரூபாய்14.25காசு பால் கணக்கு 3ரூபாய் என எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. பாட்டி ஒவ்வொரு பக்கமாக திருப்பிக் கொண்டிருந்தார் வெற்று காகிதத்தை திருப்ப பிடிக்காமல் மூட இருந்த சமயத்தில் அந்த பக்கம் கண்ணில் பட்டது.

12 பிப்ரவரி என்ற தேதியில் ஐய்யரின் குண்டு குண்டு கையெழுத்தில் “இன்று என் இருபதாவது பிறந்தநாள். காலையில் குளித்து பட்டு வேஷ்டி அங்கவஸ்த்திரம் அணிந்து சந்தியாவந்தனம் செய்த பிறகு அம்மா அப்பாவை நமஸ்கரித்தேன். எனக்கு பத்து ரூபாய் தாளை பரிசாக அப்பா கொடுத்தார். எங்கள் வீட்டில் இருந்து பத்துநிமிட நடையில் இருக்கும் ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்தோடு சென்றோம். அப்பாவும் அண்ணனும் முன்னே செல்ல நானும் என் இரண்டு தங்கைகள் மற்றும் தம்பி பின் தொடர்ந்தோம் பின்னால் மன்னியும் அம்மாவும் வந்தார். அன்று நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். பாட்டியும் அண்ணாவின் ஐந்து மாதக் குழந்தை பிச்சுவும் வரவில்லை.

கோயிலில் என் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. அங்கிருந்த குளத்தருகில் நாங்கள் அமர்ந்தோம் அங்கே எங்கள் பக்கத்து வீட்டு சுவாமிநாத ஐய்யர் குடும்பமும் இருந்த்தை பார்த்தவுடன் அப்பா பேச சென்றுவிட்டார். நாங்களும் பின் தொடர்ந்தோம். அவரும் என்னை ஆசிர்வதித்தார். அப்பொழுதுதான் நான் முதன்முறையாக புதிய அவதாரமாக யமுனாவை பார்த்தேன். அவள் புடவை கட்டியிருந்தாள் அவரின் இரண்டாவது மகள். பதினைந்து வயது இருக்கலாம். இத்தனை நாள் பாவாடை சட்டையில் சிறு பிள்ளையாக இருந்தவள் இன்று பெரிய பெண்ணாக காட்சியளித்தாள்.
காதில் ஜிமிக்கி, எட்டுகல் வைர பேசரி, ராக்கோடி மற்றும் பட்டு குஞ்சலம் போட்ட ஜடை, சேலையில் புரூச் என பார்க்க டி.ஆர். ராஜகுமாரி போல் இருந்தாள்”. இதை படித்ததும் அலமு பாட்டி தாத்தவை புகைப் படத்தின் மூலமாக ஒரு முறைமுறைத்தார்.

பாட்டி மேலும் படித்தார் ”யமுனா பத்தாவதுவரை படித்திருக்கிறாள். ஆங்கிலம்கூட கொஞ்சம் கொஞ்சம் தெரியுமென அவள் அப்பாகூற கேட்டு இருக்கிறேன். அழகாய் பாடுவாள் நடனமாடுவாள். யமுனா அலங்கார பிரியை. என் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள் இன்றுதான் முதன்முதலில் பிறந்ததுபோல் உணர்ந்தேன்” இதை படிக்கையில் அலமு பாட்டியின் கண்ணீர் டைரியில் உருண்டு தாத்தாவின் கையெழுத்தை நனைத்தது.

15 பிப்ரவரி “யமுனா எங்கள் வீட்டுக்கு இன்று வந்தாள். அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் என அவள் வீட்டு பக்ஷனத்தை அம்மாவிடம் கொடுத்தாள். என் தங்கைகள் மற்றும் மன்னியிடமும் பேசினாள். எனக்கு அவளிடம் பேச ஆசைதான் ஆனால் ஏனோ கூச்சமாக இருந்தது அதனால் நான் என் அறையில் இருந்தபடியே அவளை பார்த்தேன். “திலகா உன்கிட்ட சிவகாமியின் சபதம் கடைசி பாகம் இருக்கா?” என என் பெரிய தங்கையிடம் வினவி கொண்டிருந்தாள் யமுனா
எனக்கு உடனே அவள் கேட்ட புஸ்தகத்தை வாங்கி தர வேண்டும் என மனம் துடித்தது. அடுத்த இரண்டு நாட்கள் அலைந்து திரிந்து என் சிநேகிதன் சங்கர ராமனிடம் இருந்து சிவகாமியின் சபதம் கடைசி பாகத்தை இரவலாக பெற்றேன்”

18 பிப்ரவரி “என் வீட்டில் யாருமில்லை …. யமுனாவின் வீட்டில் அவளும் அவள் தம்பியும் மட்டுமே. புருஷா வெட்கப்படக் கூடாது என மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்றேன். யமுனாவின் தம்பி திண்ணையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் என்னைப் பார்த்ததும் “என்ன அண்ணா இந்த பக்கம?” எனக் கேட்டான். அவனுடைய அண்ணா என்ற வார்த்தை சுருக் கென்றது
“யமுனா இல்லயா?“ எனக் கேட்டேன்
“எதுக்கு?”
“இல்ல இந்த புஸ்தகத்தை கொடுக்கணும்….”
“யாரு?” எனக் கெட்டுக் கொண்டே வெளியே வந்தாள் யமுனா என்னை பார்த்த்தும் புன்னகைத்தாள் “வாங்கோ உட்காருங்கோ … அப்பா வெளிய போயிருக்கா வர நாழியாகும்,,, ”
“இதை கொடுக்கதான் வந்தேன்” என அவளிடம் கொடுத்தேன் புஸ்தகத்தை
யமுனாவின் மருதாணி பூசிய கைகள் அதை வாங்கின வாங்கியவள் முகத்தில் பிரகாசம் “உங்களுக்கு எதுக்கு சிரமம் … ரொம்ப நன்றி … சீக்கிரம் படிச்சிட்டு தந்துடறேன் ……… ”
“சிரமமெல்லாம் இல்ல…அவசரமில்ல மெதுவா படி நான் வரேன்” என கிளம்பினேன் அதற்கு மேல் அங்கிருக்க எனக்கு தைரியமில்லை.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளானது அன்று.

22 பிப்ரவரி இன்று நாங்கள் கும்பகோணம் பயணமானோம் என் திருமணத்திற்கு பெண் பார்க்க. அப்பாவிடம் வேண்டாம் என்று கூறும்அளவு தைரியம் எனக்கு இல்லை. பெண்ணின் பெயர் அலமேலுவாம் பார்க்க சுமாராக இருந்தாள் யமுனா மாதிரி அழகு இல்லை. படிப்பு பாட்டு நடனம் ஆங்கில புலமை எதுவும் யமுனா அளவு இல்லை. எனக்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் என்னை ஒருவரும் கேட்கவில்லை அப்பவே எல்லாம் பேசி முடித்துவிட்டார். அம்மா மன்னி எல்லோருக்கும் பரம திருப்தி. என்னை தவிர அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். “என்னடா இஞ்சிதின்ன குரங்கு மாதிரி முகத்த வெச்சிண்டு … நன்னா சிரிச்சி சமந்தி ஆத்துகாராளோட பேசு” என அம்மா என்னை அதட்டினார்.

“எங்க ஆத்து பொண்ணுக்கு தமிழ் நன்னா தெரியும். வீணை அமர்களமா வாசிப்பா ….“ என ஏதோ கூறினார் என் காதில் எதுவும் விழவில்லை. அப்பா குறித்த நாளில் எனக்கும் அலமுவுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் என்னால் அலமுவிடம் சகஜமாக நடந்துக் கொள்ள முடியவில்லை.

“இரண்டொரு மாதத்தில் யமுனாவுக்கும் திருமணம் நடந்தது. அவள் பூரண மகிழ்ச்சியோடு திருமணம் செய்துக் கொண்டாள் அது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் அலமுவிடம் காட்டினேன். என் கோபத்தை தாங்கி பதில் கூறாமல் மௌனமாகவே இருப்பாள். நான் தான் பித்துக்குளிப் போல் மனைவி என்பவள் யமுனாவைப் போல் இருக்க வேண்டும் என கற்பனைக் கோட்டை கட்டி இருந்தேன். எல்லாம் தரைமட்டமாகிவிட்டது”.

“இதற்கு மேல் இந்த டைரியில் எனக்கு வேலையில்லை”…

மனைவி என்பவள் …. நம் இஷ்டபடி அமையமாட்டா” அதற்கு மேல் டைரியில் வெற்று காகிதங்கள் மட்டுமே புலப்பட்டது.

கண் கலங்கிய அலமு பாட்டிக்கு இப்பொழுதுதான் அனைத்தும் கொஞ்சம் கொஞசமாக புரிந்தது. திருமணமாகி கிட்டதட்ட ஒரு வருடக் காலம் தன் கணவர் தன்னை “சரியான ஜடத்தை என தலையில கட்டிட்டா” என எரிந்து விழுந்தது பற்றும் பாசமும் இல்லாமல் இருந்ததின் காரணம்.
அதற்குப் பிறகு டைரியில் ஒன்றுமே இல்லை என நினைத்த அலமு பாட்டிக்கு கடைசி பக்கம் கண்ணில் பட்டது.

31 டிசம்பர் 2008 என்று தேதி போட்டு அதே டைரியில் இருந்தது ”இந்த டைரியில் இன்னும் சொல்ல வேண்டியது உள்ளது. அலமு நான் உனக்கு நிறைய கொடுமை செஞசிட்டேன்டி.. பகவான் அதுக்கு எனக்கு தண்டனை தரணும் உன் பொறுமையும் பொருப்பும் என்னை மாத்திடுச்சு… நம்ம ஆறு குழந்தைகள என்னமா நீ வளர்த்து ஆளாக்கி இருக்க. என் மனசுல இருந்த யமுனா போயிட்டா இப்போ நீ மட்டும் தான் என் மனசுல இருக்க. யமுனா ஒரு மாயை … எப்படி மனுஷா இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசை படராளோ அப்படி நான் செஞ்சிட்டேன். உன்கிட்ட இதையெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிற அளவு நான் பக்குவ படல திராணியும் இல்ல … இதை நீ படிக்கும்போது நான் உயிரோட இருக்க மாட்டேன் ஏன்னா உன் முகத்துல விழிக்கிற தகுதி எனக்கில்ல …. என்னை மன்னிச்சிடுடி அலமு … எத்தனை ஜென்ம எடுத்தாலும் நீதான் என ஆத்துகாரியா வரணும்.
மனைவி என்பவள் என்னைக்குமே எனக்கு என் அலமுதான். இதை தவிர எனக்கு வேற ஒண்ணும் சொல்ல தெரியல”

இதை படித்து முடித்த அலமு பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

dellas
15-03-2015, 02:57 PM
நல்ல கதை.
ஜமுனா என்பவள் மாயையா? அல்லது ஜமுனாவைப் பற்றிய அவர் எண்ணம் மாயையா ?..

அனுபவக்காதல் என்றுமே இனிக்கும்.

பாராட்டுக்கள்.

shreemurali
18-03-2015, 05:56 AM
மிக்க நன்றி
ஜமுனா பக்கத்து வீட்டு பெண்.

மதி
21-04-2015, 01:13 PM
இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு தான் என்னிக்குமே மனம் துடிக்கும். அதே தான் இக்கதையிலேயும். நல்லதொரு கதை..!!

shreemurali
27-04-2015, 07:25 AM
மிக்க நன்றி

aren
27-04-2015, 08:38 AM
இது பதின் காலத்தில் நடக்கும் விஷயம்தான். ஒரு பெண் நம்மிடம் முகம் கொடுத்து பேசியவுடன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் தனக்காகத்தான் வாழ்கிறாள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும் அது காலப்போக்கில் மாறிவிடும். இது பெண்ணிற்கும் பொருந்தும்.

வாழ்க்கை சக்கரத்தில் இது மாதிரி நடப்பதுதான். காலம் நம்மை மாற்றிவிடும்.

நல்ல கதை. அலமு பாட்டிக்கும் இது புரிந்திருக்கும். பரமேஸ்வர ஐய்யரை அவர் மன்னித்திருப்பார்.

aren
27-04-2015, 08:38 AM
இது பதின் காலத்தில் நடக்கும் விஷயம்தான். ஒரு பெண் நம்மிடம் முகம் கொடுத்து பேசியவுடன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் தனக்காகத்தான் வாழ்கிறாள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும் அது காலப்போக்கில் மாறிவிடும். இது பெண்ணிற்கும் பொருந்தும்.

வாழ்க்கை சக்கரத்தில் இது மாதிரி நடப்பதுதான். காலம் நம்மை மாற்றிவிடும்.

நல்ல கதை. அலமு பாட்டிக்கும் இது புரிந்திருக்கும். பரமேஸ்வர ஐய்யரை அவர் மன்னித்திருப்பார்.

சிவா.ஜி
27-04-2015, 02:05 PM
ஒரு டயரியின் கடைசி பக்கம்...கணவரை மனைவி மனதில் உயர்த்திவிட்டது. நல்ல கதை. வாழ்த்துகள்.

shreemurali
05-06-2015, 06:46 AM
இது பதின் காலத்தில் நடக்கும் விஷயம்தான். ஒரு பெண் நம்மிடம் முகம் கொடுத்து பேசியவுடன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் தனக்காகத்தான் வாழ்கிறாள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும் அது காலப்போக்கில் மாறிவிடும். இது பெண்ணிற்கும் பொருந்தும்.

வாழ்க்கை சக்கரத்தில் இது மாதிரி நடப்பதுதான். காலம் நம்மை மாற்றிவிடும்.

நல்ல கதை. அலமு பாட்டிக்கும் இது புரிந்திருக்கும். பரமேஸ்வர ஐய்யரை அவர் மன்னித்திருப்பார்.

மிக்க நன்றி...

shreemurali
05-06-2015, 06:47 AM
இது பதின் காலத்தில் நடக்கும் விஷயம்தான். ஒரு பெண் நம்மிடம் முகம் கொடுத்து பேசியவுடன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் தனக்காகத்தான் வாழ்கிறாள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும் அது காலப்போக்கில் மாறிவிடும். இது பெண்ணிற்கும் பொருந்தும்.

வாழ்க்கை சக்கரத்தில் இது மாதிரி நடப்பதுதான். காலம் நம்மை மாற்றிவிடும்.

நல்ல கதை. அலமு பாட்டிக்கும் இது புரிந்திருக்கும். பரமேஸ்வர ஐய்யரை அவர் மன்னித்திருப்பார்.

மிக்க நன்றி...

shreemurali
05-06-2015, 06:48 AM
ஒரு டயரியின் கடைசி பக்கம்...கணவரை மனைவி மனதில் உயர்த்திவிட்டது. நல்ல கதை. வாழ்த்துகள்.

மிக்க நன்றி..