PDA

View Full Version : ஞானி பாகம் 5 - சிறுகதை 3 - தானம்



leomohan
24-02-2015, 02:51 PM
குறிப்பு
ஞானி தத்துவ சிறுகதைகளை ஏற்கனவே மன்றத்தில் படித்திருப்பீர்கள். அவர்கள் இந்த பாகம் 5ல் என்னுடன் சேர்ந்து பயணம் செய்யலாம். அவ்வாறு அதனை படிக்க வாய்ப்பு கிட்டாதவர்கள் முதல் நான்கு பாகங்களை மன்றத்திலோ அல்லது என்னுடைய வலைப்பூவிலோ படித்துவிட்டு இதை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த 5 பாகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை எனினும் இந்த சிறுகதைகளில் வரும் பாத்திரங்களின் குணாதிசயங்கள் ஏற்கனவே வந்த கதைகளில் மூலம் அறிந்துக் கொண்டு தொடர உதவும். நன்றி.

தினசரி


சமீபத்தில் ஒரு மேற்கத்திய உணவகத்தில் ஏழை சிறுவனை உள்ளே விடவில்லை என்ற செய்தி கேட்டுக் கொதித்துப் போனேன். நானும் அதை முயன்றால் என்ன என்று நினைத்து சோனியை ஒரு நாள் அழைத்துப் போனேன்.

ஊடகங்களில் கூக்குரல்களை அசட்டை செய்துவிட்டு அந்த உணவகத்தின் பணியாள் என்னுடன் வந்த சோனியை தடுத்து நிறுத்தினான்.
நான் ஏன் என்று கேட்டேன்.

அவர் சுகாதாரமாக இல்லை. சரியான உடை உடுத்தவில்லை. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவன் விளக்கமளித்தான்.

நான் அவ்வாறு விளக்கி எந்தப் பலகையும் உணவகத்தின் முன் வைக்கவில்லையே என்று விவாதித்தேன்.

சோனி சாவகாசமாக என் கையில் இருந்த செல்பேசியை என்னிடமிருந்து கேட்டு வாங்கினான். பிறகு யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த உணவகத்தின் பணியாளைப் பார்த்து அந்தப் பெரிய நாளிதழின் பேரை சொல்லி அதன் நிருபர் அவனிடம் பேச விரும்புவதாகக் கூறினான்.

அதைக் கேட்டது அவன் நடுங்கிப் போய், "உள்ளே போங்க, உள்ளே போங்க" என்று பதறிப்போய் வழிவிட்டான். நான் ஆச்சர்யப்பட்டேன்.

"என்ன சோனி, அப்படி யாருக்கு போன் போட்டே நீ" என்று ஆர்வமாகக் கேட்டேன்.

"அதுவா, ஒரு பிரபலமான பேப்பருக்கு" என்றான் வெற்றிக் களிப்பில்லாமல் அமைதியாக.

"ஓ நீ பேப்பரெல்லாம் படிப்பியா?".

"ஏன் படிக்கக்கூடாதா?" என்று சொல்லிக் கொண்டே தன் ஜோல்னா பையிலிருந்து அந்தத் தினசரி செய்தித் தாளை மேசையின் மீது எடுத்துப் போட்டான்.

"படிக்கலாம், ஆனால் பிச்சைத் தொழிலுக்கும் பேப்பருக்கும் என்ன சம்பந்தம்?" என்று தயக்கமாகக் கேட்டேன்.

"ஏன் சம்பந்தம் இருந்தா தான் படிக்கனுமா?".

"சரி அதை விடு. அப்படி என்ன விஷயமெல்லாம் தெரிஞ்சிகிட்டே, சொல்லு" என்றேன் சமாதானமாய்ப் போய்விடுவதற்காக.
கச்சா எண்ணெய் வீழ்ச்சி, தங்க விலை, தேர்தல் நிலவரங்கள் மற்றும் சமீபத்திய கணினி துறையில் ஒரு பெரிய நிறுவனம் பல பேரை வேலைவிட்டு எடுத்தது வரையில் மூச்சுவிடாமல் சொன்னான். நான் அசந்துப் போனேன்.

"யப்பா. அசத்திட்டே சோனி. ஆனால் இதெல்லாம் படிச்சு உனக்கு என்ன பிரயோசனம்".

"ஏன் வெள்ளத்துல போகும் போது தான் நீச்சல் கத்துப்பியா?"

எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கேட்டேன், "இதெல்லாம் படிச்சு உனக்கு என்ன பிரயோசனம் அதைச் சொல்லு".

"எனக்குப் பிரயோசனம் இல்லாட்டாலும் நாலு பேருக்குப் பிரயோசனம் இருக்கும்லே".

"உன்னைச் சுத்தி இருக்கற அந்த நாலு பேரும் உன்னை மாதிரி பிச்சைக்காரங்க தானே".

"ஏன் நீ இல்லையா" என்றான். எனக்கு மடரேன்று அடி விழுந்தது.

leomohan
25-02-2015, 10:01 AM
2. வாக்கு


வழக்கம் போலக் கோவில் வாசலில் சோனி. இரண்டு ரூபாய் எடுத்துப் போட்டேன்.

"விலைவாசி ஏறிடுச்சு இன்னும் இரண்டு ரூபாயே போடறே".

"அது சரி விலைவாசி ஏற நானா காரணம். அதை அரசாங்கத்திடம் கேட்கனும்" என்று சிரித்துக் கொண்டே பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தேன்.

"அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கற பொறுப்பு மக்கள் கிட்டே தானே இருக்கு" என்றான்.

"அட, நாம எங்க தேர்ந்தெடுக்கறோம். அவங்களா ஜெயிச்சு வந்திடறாங்க".

"அதெப்படி நீ ஓட்டு போடறதில்லையா".

"இல்லப்பா. நான் ஓட்டு போட்டா மாத்திரம் நிலைமை மாறப் போவுதா".

"ஏன் மாறாது".

"அப்ப நீ ஓட்டு போடறியா".

"ஆமாம்".

"அட" என்று என் ஆச்சர்யம் நீடிக்கும் முன் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை என்று எடுத்து நீட்டினான்.

"அடே இதெல்லாம் வைச்சிருக்கியா எப்படிக் கிடைச்சுது".

"கோவில் அட்ரெஸ் தான்" என்றான்.

"யாருக்கு ஓட்டுப் போட்டே" என்ற வெகுளியாகக் கேட்டேன்.

சட்டென்று முறைத்தான்.

"அது சரி நீ ஏன் ஓட்டுப் போடலே" என்றான்.

என்னிடம் பதில் இல்லை.

"உன்னை மாதிரி படிச்சு விவரம் தெரிஞ்சவங்க ஓட்டுப் போடலைன்னா படிக்காத மக்கள் இலவசங்களைப் பார்த்து தான் ஓட்டுப் போடுவாங்க. அப்புறம் விலைவாசி ஏறினதுக்கு நீ அரசாங்கத்தைக் குறை சொல்றே. உங்களமாதிரி ஆளுங்களாலே தான் என் மாதிரி பிச்சைக்காரங்க உருவாகறாங்க. அப்புறம் எங்களுக்குப் பிச்சை போட்டா புன்னியம் வந்துடுமா. போ, போ, அடுத்தத் தேர்தல்லையாவது ஓட்டுப் போடு. முடிஞ்சா எங்க தலைவிதியை மாத்து. உன் தலைவிதியும் மாறும்" என்றான்.

கன்னம் வீங்குவது போல் இருந்தது. அவசரமாக அங்கிருந்து நழுவினேன். "இந்தத் தேர்தலுக்காவது வீட்டில் தூங்காமல் ஓட்டுப் போடுவேன்" என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.

leomohan
08-03-2015, 04:46 PM
3. தானம்

தேர்தல் முடிந்திருந்தது. தவறாமல் நானும் என் மனைவியும் வாக்களித்து வந்தோம். என்னால் முடிந்தவரை என் சோம்பேறி நண்பர்களைத் தொலைப்பேசியில் அழைத்து அவர்களையும் வாக்கிட வைத்திருந்தேன். ஒரு பெரிய மகிழ்ச்சி.

சோனியை சந்தித்தேன்.

"சந்தோஷம்" என்றான். ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை அவன் ஏற்படுத்தியதை அறியாமல். அல்லது எனக்கு அப்படித் தோன்றியது.

"சரி சோனி, உன்கிட்டேயும் ஞானி மாதிரி பல விஷயங்கள் கத்துக்க வேண்டியதிருக்கு. ஆனா எனக்கு என்ன கேட்கனும்னு தெரியலை. எனக்குத் தோனும்போது கேட்கறேன், சரியா" என்று சொன்னேன்.

"சரி, சரி" என்றான். அவனுக்குப் பிச்சையிடும் வழக்கமானவர்களை மறைப்பதாக நினைத்தான் போலும்.

"சோனி, பிச்சைக்காரங்களை நாங்க தான் உருவாக்கறோம்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்களுக்கு எப்படி உதவி பண்றது. பொது நல சேவை நிறுவனங்களை நம்ப முடியறது இல்லை. நான்-ஃபிராஃபிட் அப்படின்னு சொல்லிகிட்டு வெளிநாட்டிலேர்ந்து நன்கொடை வசூலிக்கிறாங்க. அது நிஜமாவே தேவையானவங்களுக்குப் போய்ச் சேருதான்னா இல்லை தான். என்ன பண்றது" என்று பணிவாக வினவினேன்.

"கடைக்கு போற இல்லை. பிஸ்கெட்டு வாங்கற இல்லை. பத்து ரூபாய் இருக்குமா ஒரு பாக்கெட்டு. வீட்டுக்கு இரண்டு வாங்கற இல்லை. இன்னொரு அஞ்சு பாக்கெட்டு வாங்கி உன் கார்ல வைச்சிக்கோ. வழியில யாரையாவது பார்த்தீன்னா ஒரு பாக்கெட்டு கொடு. அது செய் முதல்லே. காசு கொடுத்து அது அவங்களுக்குத் தான் போய்ச் சேருதான்னு தெரியலையே" என்றான்.

"அடே, இந்த யோசனை நல்லா இருக்கு. நாளையிலேர்ந்து அப்படியே செய்யறேன்".

அவன் முறைத்தான். முறைப்புக்கு பொருள் புரிந்தது.

"இல்லப்பா இல்லே. இன்னிக்கே செய்யறேன்" என்று புன்னகைத்துவிட்டு நகர்ந்தேன். அவன் ஜோலிக்குத் திரும்பினான்.