PDA

View Full Version : நதிநேசன் - தென்பாண்டி தூறல்- நதிகாசம்nathinesan
26-11-2014, 11:47 AM
நதிகாசம்
========

விதியே,
எத்தனை முறை தான் என்னை தோற்கடிக்க முயல்வாய் ? விழ விழ எழுவேன் ..நான் நதி !

மலையிலே தோன்றி,
மாட்சி தரும் காட்சி தந்து,
புனித நீராய்
பல மனித குலம் காத்து
மூலிகை வாசத்துடன்
பல நாளிகைகள் நடந்து
சிகரங்கள் தொட்டு,
சிலகாத தூரம் சிறப்போடு வாழ்ந்திருந்தேன் !

விதியே,
திடுமென என்னை திடுக்கிட வைக்கும்
கிடுகிடு பள்ளத்தில் இரைச்சலோடு விழவைத்தாய்
நடுவெது, இடமேது, வலமெது புரியாமல்
படுதுயர் தந்து என்னை பலமாய் அழவைத்தாய்

விதியே,
முயற்சி செய்து பார், முடிந்து போக மாட்டேன் - இதோ
அருவியாய் மாறி அருங்காட்சி ஆனேன் நான்
பயிற்சி கொண்டு, பெருமுயன்று *-மின்சாரக்
கருவியாய் எனை உருமாற்றி உயர்த்திக் கொண்டேன் !

விதியே,
அருவியாய் என்னை அடித் துவைத்தாலும்
உருமாற்றி என்னை உருக் குலைத்தாலும்
அருவாய் அழிந்து * அலைக் கழித்தாலும்
தருவேன் தண்ணிரை தாரை தாரையாய் !

விதியே,
மனிதனோடு கைகோர்த்து என் சக்தியை
அணை போட்டு அடக்கினாலும்
வனித வளப்போடு கவின்மிகு தேக்கமாய் -உயர்
திணையாய் திகழ்ந்தேன் பார் !

விதியே,
அடங்கினாலும் அணையாய் ஆளுவேன்
முடங்கினாலும் நீர்த்தேக்கமாய் தேங்குவேன்
ஏங்கி நிற்க மாட்டேன், ஏற்றத்தின் ஏணி கேட்பேன்
அழ அழ உழுவேன், விழ விழ எழுவேன் !!

விதியே,
போலி விடுதலை தந்து அணை திறந்தாய் ...
வெள்ளமாய் பெருக வைத்து வெளியேற்றினாய் ..இருந்தும்
காலி இடங்களை கழனியாக்கினேன்
பள்ளங்களில் பயிராய் கரு ஏற்றினேன் ...

ஆறு என்று பெயரிட்டு அலைக்கழித்தாய்
ஊர் ஊராய் சுற்ற வைத்து சுளுக்கெடுத்தாய் - இருந்தும்
பேறு தந்து நிலங்களுக்கு பயிர் *கொடுத்தேன்
பேர் சொல்லும் பிள்ளையாய் உயிர் கொடுத்தேன்

விதியே,
போகும் இடமெல்லாம் பாறைகள் என் பாதம் பெயர்த்தன
சாகச்சொல்லி வானம் பார்த்த பூமிகள் பதம் பார்த்தன- நான்
வரண்டு போய் நா வற்றி வரட்சி கண்டாலும் - ஒரு மழையில்
திரண்டு வருவேன் ஊற்றாய், பதரே பதுங்கிக் கொள் !!

பழைய பெருமைகள் மலையென இருந்தாலும்
நெளிவேன், சுளிவேன், சுற்றுவேன் சுழலுவேன்
விழைவேன், நிகழிலும் திகழ !- ஓடையிலும்
ஒளிர்வேன், (மனம்) வாடையிலும் வளர்வேன் ...

விதியே,
ஆறு உள்ள ஊரே, நாட்டின் வளர்ச்சி வேர்
ஆண்டு பல நூறு தாண்டி பக்தி ஏறும் தேர்
அழகு ஆற்றங்கரைகள் அருங்கலையின் இடங்கள்
நதி போதித்த பதிகள்,நாகரீக் தடங்கள்

விதியே,

தடங்கலுக்கு வருந்த மாட்டேன், என் தடங்களை பதிவு செய்வேன்
இடர் வரும்போதெல்லாம் "இனி புதிதாய்" பிறந்திடுவேன்
ஆயிரம் காத தூரம் ஆடி ஓடி வாழ்ந்தாலும்
ஆழி சூழ் இவ்வுலகில் அடங்கித்தானே ஆக வேண்டும் !!

மாட்சி தரும் மலையே என் பிறப்பிடமே -எனக்கு


காட்சி தந்த கவினுலகே என் உறைவிடமே -நான்
கலை வளர்த்த காலடிச் சுவடுகளை கண நேரம் பார்த்து விட்டு
அலைகடலின் ஆழத்தில் அமைதியாய் உறங்குகிறேன் !

விதியே,
புரிந்து கொள், பிறப்பும் இறப்பும் தான் உன் வசம்
இடைப்பட்ட இவ்வுலகில் எப்போதும் என் வாசம் !

நண்பரே,

விதி வழி கண்டு விழி பிதுங்காது, நதி வழி கண்டு நடை பயின்றிடுவீர் !
நதியை படம் பிடி, நன்றாய் பாடம் படி...என்
பதி வளர்ந்த பாரதியை மாற்றி படிக்கின்றேன் ..
மதி உயர் மானிடரே, - நம் மனதில்

"இனி ஒரு நதி செய்வோம் , அதை என்னாளும் காப்போம், " !!-

**நதி நேசன்

ஜானகி
26-11-2014, 12:55 PM
அப்பப்பா.........தென்பாண்டித் தூறல், சாரலாய் உருமாறி, புயலெனச் சீறுகிறதே ! சிந்தனை நன்று !

ravisekar
30-07-2015, 05:43 PM
ப்டக்காட்சி போல் உம் க்விதை கண்டு பாடம் படித்தோம் அய்யா. வாழ்க்கைப் பாடம்.
அருமையான உருவேற்றம். உத்வேகம். நதிநேசன் பெயர்க்காரணம் சொல்லும் கவிதை, பாராட்டுக்கள் கவிஞரே.