PDA

View Full Version : அன்னைக்கொரு விண்ணப்பம்!!Sabeekshana
27-08-2014, 05:43 PM
http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/article_node_view/public/Mother-Baby_0_0_1_0.jpgபண்பான மகவு ஒன்றை
பரிசாக ஈன்றிடவே
அன்பாக ஆண்டவனை
ஆராதனை செய்து

பிரபலம் ஒன்றின்
பிரமாண்ட வருகைக்காய்
காத்திருக்கும் ரசிகை போல்
கனவு ஏராளம் சுமந்து

மளிகை சாமான்களின்
மாஸ்டர் லிஸ்ட் போல
குழந்தையின் தேவைகளை
குறையற பட்டியல் இட்டு

பிறப்புரிமை குறைபாடு
பிறழ்வுகள் ஏதும் இன்றி
சிறப்பாக வாரிசை
சீருடன் ஈன்பதற்காய்

விரதங்கள் பல இருந்து
விக்கினங்கள் நீ அடைந்து
ஆலயம் தினம் ஏகி
அபிடேகமும் செய்து

செக்-அப் (Check-up ) தினங்களை
செவ்வனே குறித்து வைத்து
மறக்காதிருப்பதற்காய்- அதனை
மனப்பாடமும் செய்து

பூதக்கரு செனி விளைவு (Teratogenic effect)
புயலாக உருவெடுக்கும்
அபாயம் அறிந்தவளாய்
அடிக்கடி சுகர் (Sugar) அளவும் துணிந்து

வாந்தி தவறாமல்
வந்து வருத்தியும்
வாஞ்சயுடனே அதனை
வரம் என ஏற்று

உன் தோற்றங்கள் மாறி
தோலில் பல மாற்றம் வந்தும்
தொட்டில் சத்தம் கேட்கும்
காலம் தொலைவிலில்லை என்று

உறக்கமும் தொலைத்து
உள்ளத்தின் வலியெல்லாம்
மறக்கும் மார்க்கமாய்
எனை மனதில் நினைந்து

பத்து கிழமை
பத்தியமும் இருந்து
சித்தமாய் தினம்
எனை சிதைவின்றி காத்து

பொறுமையின் புகலிடமாம்
பூமா தேவியின்
வடிவாக வந்திங்கு
வலியெல்லாம் பொறுத்து

எட்டி உதைகையில்
ஏதோ பேறு பெற்றால் போல்
எல்லோரும் அறியும் வண்ணம்
பெரும் எக்காளமும் இட்டு

ஒரு நாள் வேதனையின்
வெளி எல்லை வரை சென்று
போராட்டத்தின் உச்சத்தில் உதித்த
ஒரு பொக்கிஷமாய் எனை பெற்று

சாதனை ஒன்றை செய்து
வேதனை எல்லாம் மறந்து
கேடயம் ஏந்த வந்த
கெட்டிக்கார வீராங்கனை போல்

கர்ப்பத்தில் நெளிந்த என்னை
கற்பகமே என தழுவி
சொர்க்கமே சேர்ந்தால் போல்- பட்ட
சோதனை எலாம் மறந்து

உதிரத்தை பாலாக்கி
உவகையுடன் எனக்கூட்டி
சதிராடிய என்னை- உன்
சாமர்த்தியத்தால் வென்று

பிணி ஏதும் தீண்டாது
பிள்ளை எனை காத்து
என் உறக்கத்தின் தூதுவராகி
உன் தூக்கம் துறந்து

என் மழலை பேச்சினிலே
என்றும் மதி மயங்கி
மதியினை நிதம் காட்டி
மகிழ்வுடன் சோறு ஊட்டி

களிறு சிந்திய கவளம்- பல
கட்டெறும்புக்கு இரையாவது போல்
நான் சொரிந்த உணவு எச்சத்தை
சொச்சமென உண்டு பசி மறந்து

நீ சோபிக்க மறந்தும்
என்னை சொல்லாளர் ஆக்கி
உன் சொந்தங்களில் எல்லாம்
சொர்ப்பணம் நானே என

சாணக்கியராய்
சமயோசிதராய்
சரித்திரத்தில் உன் பிள்ளை
சரியான ஓர் இடம் பிடிக்க

எம் நாகரிகத்தை எனக்கு
நாசுக்காய் கற்று தந்து
வரலாறு அறிந்த
வாரிசாய் எனை வளர்த்து

சமையலறையே உன்
வாழ்வின் சாராம்சமான போதும்
சங்கடம் அறியாமல்
சமத்தாக எனை வளர்த்தாய்!!

கண்ணை இமை காப்பது போல்
என்னை தினம் காத்து
பெற்று வளர்த்து எல்லா
பெருமையும் சேர்த்தவளே!!

வேள்வி தீயில் வந்த
வேதவள்ளி த்ரௌபதையும்
கேள்வி கேட்க அஞ்சும்-
கீர்த்தி பொருந்தியவளே!!

விண்ணினின்று வந்துதித்த
விசித்திர தேவதையே
விண்ணப்பம் ஒன்று வைக்கிறேன்
விருப்புடன் நீயும் ஏற்பாயே!!

எத்தனை பிறவி நான்
எடுத்து வந்தும்
அடைத்தல் அரிதன்றோ- உன்னிடம்
நான் பட்ட கடனை!!

காலமெல்லாம் உன்னை
கை மேல் தாங்கி
காவலராய் வாழும் பேறு
எனக்கு நீ அருள்வாயே!!பிற்குறிப்பு- இங்கு "பூத கரு செனி விளைவு" என்பது தாய் கர்ப்பத்தின் போது உட்கொள்ளும் சில மருந்து வகைகள் மற்றும் தாயின் சக்கரை வியாதி போன்றவற்றால் குழந்தையின் அவயவங்கள் உருவாக்கத்தில் ஏற்படும் சில அசாதாரண விளைவுகளை குறிக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

M.Jagadeesan
02-09-2014, 08:52 AM
முன்னூறு நாள்சுமந்த அன்னையின் பெருமையினை
...மூச்சு முட்டவே கவிதையில் உரைத்திட்டாய் !
உன்னுடைய கவிதையில் கருத்துக்கள் ஏராளம் !
...உன்னுடைய கவிதையிலே புதுமைகள் புகுத்துகிறாய் !
என்னுடைய விருப்பத்தை எடுத்தியம்பக் கேட்டிடுவாய் !
...ஏற்றமிகு கவிதையினை யாப்பினிலே வைத்திட்டால்
பொன்மலர் ஒன்று நாற்றம் பெற்றதுபோல்
...போற்றிப் புகழ்ந்திடுமே நும்கவியை இவ்வுலகு !

அன்னையிடம் குழந்தை :
-----------------------------------------------
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்தனையே !
...ஆண்மகவோ பெண்மகவோ அள்ளி அணைத்தனையே !
கையிரண்டில் ஏந்திக் கனகமுலை தந்தாயே !
...கண்ணென்றும் மணியென்றும் கொஞ்சி மகிழ்ந்தாயே !
மையெழுதி மலர்சூடி மங்கலமாய்ப் பொட்டிட்டு
...மார்பினிலே நகையிட்டு என்னழகை ரசித்தவளே !
பொய்புகலேன்! யேழேழ் பிறவிக்கும் உன்னுடைய
...பொன்வயிற்றில் மகனாகப் பிறந்திடவே வேண்டுகிறேன் !

Sabeekshana
02-09-2014, 05:18 PM
நன்றி ஐயா தமது கவிக்கும் கருத்துக்கும்

பிரசன்னா
27-05-2015, 06:24 AM
எப்படி பாராட்டுவது என்றெ தெரியவில்லை

அருமை அருமை அருமை

பிரசன்னா
27-05-2015, 06:30 AM
எப்படி பாராட்டுவது என்றெ தெரியவில்லை

அருமை அருமை அருமை

Keelai Naadaan
31-05-2015, 06:24 PM
வாந்தி தவறாமல்
வந்து வருத்தியும்
வாஞ்சயுடனே அதனை
வரம் என ஏற்று

உன் தோற்றங்கள் மாறி
தோலில் பல மாற்றம் வந்தும்
தொட்டில் சத்தம் கேட்கும்
காலம் தொலைவிலில்லை எனமிகவும் ரசித்த வரிகள். பாராட்டுக்கள்