PDA

View Full Version : பெண் என்றால் என்ன??



Sabeekshana
22-08-2014, 05:28 PM
http://s1.reutersmedia.net/resources/r/?m=02&d=20071212&t=2&i=2459512&w=&fh=&fw=&ll=580&pl=378&r=2007-12-12T022147Z_01_DEL206083_RTRUKOP_0_PICTURE0



அன்று நான் அன்பு கொண்டே
உன்னில் அடைக்கலம் புகுந்தேன்- வாழ்வில்
வென்று காட்டும் இலக்குடன்
வந்துன் கரம் பிடித்தேன்!!

பெற்றார் எனை தடுக்க
உற்றார் உதவி மறுக்க
மற்றார் மடத்தனம் என்ன
பற்றினேன் என் பதி உன்னை!!

தேவதை என் வாசல் வந்து
சேர்வதை கண்ணுற்றால்
தேவர்கள் உவந்து செல்வம்
இறைத்திடுவர் என்றுரைத்தாய்!!

காசு எம்மிடம்
கடுகளவும் இருக்கவில்லை - ஆனால்
ஆசு கண்டு - நாம்
அடுத்தவரை கடியவில்லை!!

கூலி வேலை நீ செய்யினும்
குற்றம் ஒன்று கண்டிலேன்
தாலி பூண் உன் தவக்கொடி நான்
தவிப்பு என்றும் கொண்டிலேன்!!

சூது பற்றி அறியாய் - பிற
மாது பற்றியும் தெரியாய்
ஏது உன் வாழ்வில் சிறப்பென்றால்
என் பெயர் சொல்லும் குழந்தை நீ!!

என்றாவது ஒரு நாள்
எல்லோரும் வாயில் விரல் வைக்க
வாழ்ந்திங்கு காட்டுவோம் என்று
வைராக்கியமாய் இருந்தேன்!!

பலர் எள்ளி நகையாடினர்
என் வாழ்வின் நிலை கண்டு
எள்ளளவும் கலங்கவில்லை - ஏனென்றால்
என் இரு கண்களாய் நீயிருந்தாய்!!

யார் அறிவர் கண்ணிழந்த பறவை ஒன்றை
கானகத்தில் விட்டது போல்
என்னையும் இறைவன் உன் கால்கள்
பறித்து பதற வைப்பார் என்று!!

உண்ண வழி தேடி
என் உதிரத்தை தானம் செய்தேன்
ஊரார் பேச்சை எல்லாம்
உதறியே தள்ளி வைத்தேன்!!

உலகின் மிகப்பழம் தொழிலிற்கு
பாதை சிலர் காட்டினர்
விலைகள் குறித்து என்னிடம்
விடுதிகளை வினவினர்!!

பட்டும் படாமலும்
பலர் என்னை பரிகசித்தார்
தொட்டும் தொடாமலும் - கயவர்
தொல்லைகள் பல செய்தார்!!

துவண்டு விடவில்லை நான்
அதீத துணிவு கொண்டேன்
பெண் என்றால் என்ன
நான் பேதை ஒன்றும் அல்லவே!!

பிச்சை ஏந்தும் நிலை வந்தும்
பிரிவு ஒன்று இல்லை எமக்கு- உன்னிடம்
தீட்சை பெற்ற சீடர் யான்
உன்னை சுமப்பதால் என்றும் சுகமே எனக்கு!!

எம் புனிதமான காதல் பற்றி
புத்தகங்கள் தேவை இல்லை
மனிதம் கொண்டு எம்மை - இவர்
மதித்தாலே அது போதும்!!

M.Jagadeesan
24-08-2014, 01:10 PM
பெண்ணின் பெருமை பேசுகிற
...பெருங்கவி என்றே இதைச்சொல்வேன்
மண்ணில் ஆண்மகன் ஒருவனுக்கு
...மாண்புறு மனைவி அமைந்திட்டால்
விண்னும் அவனது வசமாகும்
...விதியும் அவனது சொற்கேட்கும்
நண்ணும் துன்பம் விலகிடுமே
...நமனும் அஞ்சி ஓடிடுவான்.

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 11:46 AM
அருமையான பெண் பெருமை பேசும் வரிகள் ..தொடரட்டும்...