PDA

View Full Version : வீடு வாங்க கடன் தேவை ...



karthivel07
17-08-2014, 02:34 AM
நான் சவுதியில் எஞ்சினியர் ஆக பணிபுரிகிறேன் . எனது சம்பளம் மாதம் 2 லட்சம் வாங்குகிறேன் . எனக்கு மாத சம்பளமாக கையிலேயே கொடுத்து விடுகிறார்கள் ."NRE" போன்ற சம்பள கணக்கு கிடையாது .சேமிப்பு கணக்கு மட்டுமே உள்ளது . இதனால் அரசு துறை வங்கிகள் கடன் தர மறுக்கின்றனர் . இந்த சூழலில் நான் "HDFC" வங்கியை அணுகியபோது எனக்கு கடன் தர முன் வந்துள்ளது. ஆனால், எனக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வாங்கவே விருப்பம் ..இதற்கு நல்ல முடிவை சொல்லுங்கள்.

அனுராகவன்
17-08-2014, 03:51 AM
எங்கள் தமிழ்மன்றத்திற்கு உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்..


அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட ஓரிரு பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன் வழங்குவதில் மிக தீவிரமாக இருக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி பெரும்பாலும் சிறிது குறைவாக இருக்கும். காரணம், அவற்றுக்கு நிதித் திரட்டும் செலவு (காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) குறைவு. அதனால் வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளால் தர முடிகிறது.
இப்படி வட்டி குறைவாக இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு தனியார் வங்கிகள் அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் பலரும் வீட்டுக் கடன் வாங்குவது ஏன்? பொதுத்துறை வங்கிகளில் அப்படி என்னதான் பிரச்னை? என முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றின் அதிகாரியிடம் கேட்டோம்.''பல பொதுத்துறை வங்கிகளில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. வீட்டுக் கடன் வழங்குவதற்கு என தனிப்பிரிவு சில பொதுத் துறை வங்கிகளில்தான் இருக்கிறது. யாராவது வீட்டுக் கடன் கேட்டு வந்தால், ஏதாவது ஒரு பிரிவில் இருக்கும் வங்கிப் பணியாளர்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இதுதான் மிகப் பெரிய பிரச்னை'' என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.
''வீட்டுக் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் மும்முரமாகச் செயல்படுவதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கவே செய்கிறது. அதாவது, அந்த நிறுவனங்கள் ஒரு மாதத்தில் இவ்வளவு தொகையை வீட்டுக் கடனாக தரவேண்டும் என இலக்கு இருக்கிறது. மேலும், தருகிற கடனுக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் தந்துவிடுகிறார்கள். இந்த ஊக்கத்தொகை என்பது வீட்டு வசதி நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஏஜென்ட்கள் வரை பிரித்துத் தரப்படுகிறது. இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வேகமாக வீட்டுக் கடனைத் தந்துவிடுவார்கள்.
இதுமாதிரியான இலக்கும் ஊக்கத் தொகையும் பொதுத்துறை வங்கிப் பணியாளர் களுக்கு கிடையாது. எனவேதான், இதில் அவர்கள் பெரியளவில் ஆர்வம் ஏதும் காட்டுவதில்லை'' என்றார்.
தனியார் வங்கிகளை வீட்டுக் கடனுக்கு பலரும் ஆர்வமுடன் அணுகுவது ஏன் என்று முன்னணி தனியார் வங்கி ஒன்றின் உயர் அதிகாரியிடம் பேசினோம்.
''அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவை பொதுத்துறை வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படு வதால் மிகக் குறைந்த செலவில் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றால் அரசு வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைவான வட்டியில் கடன் தர முடிவதில்லை. ஆனால், தனியார் வங்கிகள் தரும் சிறப்பான சேவையைப் பார்த்து பலரும் தேடி வரத்தான் செய்கிறார்கள்'' என்றார்.
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தனியார் நிறுவனங்களை விரும்புவது ஏன் என்பது குறித்து வீட்டுக் கடன் துறையில் பத்தாண்டுகள் அனுபவம் கொண்டவரும், வீட்டுக் கடன் ஆலோசகருமான எஸ்.சிவக்குமார் விளக்கிச் சொன்னார்.'அரசு வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகள் மற்றும் வீட்டுக் கடனுக்கு என்று இருக்கும் வீட்டு வசதி நிறுவனங் களில் கடன் நடைமுறைகள் வேகமாக நடக்கும். இதற்கென இருக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை அவர்களின் அலுவலகம் அல்லது வீடு தேடி சென்று கடனுக்கான ஆவணங்களைச் சேகரிப்பது, வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவது என்பது போன்ற வேலைகளைச் செய்து தந்துவிடுவார்கள். ஆனால், பொதுத் துறை ஊழியர்கள் அலுவலக நேரத்தில் மட்டுமே வீட்டுக் கடன் தொடர்பான வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள். கடன் வாங்குபவர்கள் அலுவலக ஊழியராக இருக்கும்பட்சத்தில் வங்கிப் பணியாளர் சொல்லும் நாள் அல்லது நேரத்துக்கு கஷ்டப்பட்டுதான் வரவேண்டியிருக்கிறது. தனியார் வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள், வீட்டுக்
கடன் கேட்டவர்களின் வீடு அல்லது அலுவலகத்துக்கே போய் கடன் நடைமுறைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகூட வேலை பார்ப்பார்கள். இதனால் வீட்டுக் கடனை சீக்கிரமாக தர முடிகிறது.
ஆனால், பொதுத்துறை வங்கி எனில், வாடிக்கையாளர்தான் நேரடியாக தேடிப் போய் அத்தனை விஷயங்களையும் செய்து முடிக்க வேண்டும். இந்த அலைச்சலுக்கு பயந்தே பலரும் வட்டி அதிகம் என்றாலும் தனியார் வங்கி அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்கிறார்கள்'' என்றார்.
இது எந்த அளவுக்கு உண்மை என பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி பொது மேலாளர் (சென்னை) கணேசனிடம் கேட்டோம்.
''வீட்டுக் கடன் சந்தையில் அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகளும் இப்போது வேகம் காட்டத் தொடங்கி இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன் கிடைக்க அதிக நாட்களாகிறது என்கிறார்கள். நாங்கள் நிதானமாக ஆராய்ந்து, சரியான நபர்களுக்கும் சரியான சொத்துகளுக்கும் மட்டுமே கடன் தருவோம். வீட்டுக் கடன் வழங்க ரீடெய்ல் அசெட் பிராஞ்சுகள் நிறைய வந்துவிட்டதால், பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க முன்பு போல அதிக காலம் ஆவதில்லை.
மேலும், வீட்டுக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை சொத்தின் உரிமையாளர் நேரில் சென்று வாங்கி வருவதுதான் நல்லது. அதாவது, நமக்கான ஆவணங்களை நாம்தான் தேடிப்போக வேண்டும். வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள் வாங்கி வருவது நல்லதல்ல. இதன்மூலம் பிற்காலத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து, சொத்துக்கான கட்டட அப்ரூவல் ப்ளான் விஷயத்தில் அரசு வங்கி கறாராக நடந்துகொள்ளும். இதனை பெற்றுத்தர கடன் பெறுபவருக்கு சற்று அதிக காலம் ஆகத்தான் செய்யும். அதேநேரத்தில், எந்த ஒரு சொத்தும் உடனே விற்பதற்கு ஏற்றதாக, எந்த வங்கிக்கு சென்றாலும் மீண்டும் கடன் வாங்கக்கூடியதாக அப்ரூவலுடன் இருப்பதுதான் சொத்தின் உரிமையாளருக்கும் வங்கிக்கும் நல்லதாக அமையும்.
அந்த வகையில், சரியான அப்ரூவல் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதில்லை. இதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை காலதாமதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடன் வாங்குபவர் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால் ஒரு வார காலத்துக்குள் பொதுத்துறை வங்கிகளில் கடன் கிடைத்துவிடும்'' என்றார்.
பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன் விரைவில் கிடைக்கும். ஆனால், கடனுக்கான வட்டி சுமார் 1% அதிகமாக இருக்கும். இப்படி கூடுதலாக கட்டப்படும் 1% வட்டியானது ஒருவர் 20 ஆண்டுகளுக்கு கட்டினால், அவர் எவ்வளவு பணத்தை அதிகமாக கட்டியிருப்பார் என்பதை ஒரு சின்ன கணக்கு மூலம் பார்ப்போம்

அனுராகவன்
17-08-2014, 03:53 AM
ஒருவர் 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.5 சதவிகிதத்தில் பொதுத்துறை வங்கியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். ஆனால், அவரது நண்பர் இதே தொகையை தனியார் வங்கியில் 11.5% வட்டியில் கடன் வாங்கி 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். இந்த 1 சதவிகித வட்டி வித்தியாசத்தைக் கணக்கிட்டால், தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர் பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவரைவிட சுமார் 4 லட்சம் ரூபாய் அதிகமாக கட்டி இருப்பார். 0.5% வித்தியாசம் என்றால்கூட 2 லட்சம் ரூபாய் அதிகமாக கட்ட வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்குவதில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிலுள்ள சாதக, பாதகங்களைப் பட்டியலிட்டு சொல்லிவிட்டோம். நல்ல லாபகரமான முடிவு எடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.