Log in

View Full Version : ஆண் பெண் நட்பு



M.Jagadeesan
09-08-2014, 04:31 AM
பெண்ணுடன் பெண்ணும் ஆணுடன் ஆணும்
...பேசிக் கொள்வதை ஏற்கும் உலகம்
பெண்ணும் ஆணும் பேசிக் கொண்டால்
..." பிறந்தது காதல் " என்பது சரியா ?
மண்ணுல காண்ட வள்ளல் அதியனும்
...மாண்புறு கிழவி ஒளவைப் பாட்டியும்
கொண்ட நட்பு ஆண் பெண் பேதம்
...கடந்த நட்பின் சாட்சி அன்றோ ?

துரியனும் கர்ணனும் கொண்ட நட்பு
...தூய நட்பின் இலக்கணம் ஆகும்
ஒருநாள் கர்ணனும் துரியனின் மனைவியும்
...பெருகிய நட்பில் தாயம் ஆடிட
அருகினில் கணவனின் வருகையைக் கண்டு
...அம்மட மாது சற்றே எழுந்திட
" இரு இரு " என்றே அவள் கைபற்றி
...இழுத்த கர்ணனின் செயலைக் கண்டு



சிரித்தனன் துரியன் தரையில் ஆங்கே
...சிதறிக் கிடந்த முத்தைக் குனிந்து
பொறுக்கி எடுத்தவன் கர்ணனை நோக்கி
...எடுக்கவோ அன்றிக் கோக்கவோ என்ற
அரிய மாண்பினைக் கவியில் வடித்திட
...ஆயிரம் பக்கம் போதா தன்றோ !
தெரியச் செய்வோம் உண்மை நட்பு
...ஆண்பெண் பேதம் கடந்தது என்றே !

தாமரை
09-08-2014, 08:50 AM
எதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்து எல்லாம் அமையும். ஆண் பெண் வித்தியாசத்தில் கவனம் செலுத்தினால் அதுவாகத்தான் முடியும். நட்பில் கவனம் செலுத்தினால் நட்பாய் முடியும்.

M.Jagadeesan
09-08-2014, 09:18 AM
ஓர் ஆணும் , பெண்ணும் நட்புடன் பழகினாலும் , உலகத்தின் பார்வை வேறு விதமாகத்தானே இருக்கிறது . துறவிகளாலும் வெல்ல முடியாத காமத்தை , சில மனிதர்கள் வென்று இருக்கிறார்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும் .


தாமரை அவர்களின் பின்னுரைக்கு நன்றி .

தாமரை
09-08-2014, 11:48 AM
காமத்தை வெல்ல முன்றவனுக்கும்
காமத்தைச் சொல்ல முயன்றவளுக்குமான போட்டியில்
காமத்திற்கு இரட்டை பலம்.!!!

Sabeekshana
09-08-2014, 11:55 AM
ஆணும் பெண்ணும் மனதில் எத்துணை தூய்மையுடன் பழகினும் இம்மண்ணின் கண்ணோட்டம் "காதல்" குறித்ததாகவே அமையும்.

நாம் இதற்காக முழுமையாக சமுதாயத்தை பிழை கூறுவதும் தவறு.

"நட்பு" என்ற சொல்லை பிரயோகித்து பெண்களை கூறு போடும் நய வஞ்சகருக்கு குறைவில்லை இவ்வையகத்தில்.

நன்றி ஐயா தங்களது கவிக்கு!!

M.Jagadeesan
10-08-2014, 07:36 AM
தாமரை மற்றும் சபீக்ஷனா ஆகியோரின் பின்னுரைக்கு நன்றி .

நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2014, 02:25 PM
ஆணும் பெண்ணும் பார்க்கும் பார்வையில் நடந்து கொள்ளும் விதத்தில் துவங்குகிறது இந்த மாறுபாடு....தொடரட்டும் ஐயா..

அனுராகவன்
11-08-2014, 02:45 PM
அழகிய கருத்து மிக்க கவி ....பாராட்டுக்கள் ஐயா...

கீதம்
14-08-2014, 10:44 AM
ஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது பெண்ணும் பெண்ணும் கைப்பிடித்து சிநேகமாய்ப் பேசினாலும் ஆணும் ஆணும் தோளில் கைபோட்டு தோழமையோடு நடந்தாலும் அதையும் மாற்றுக்கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை வந்துவிட்டது. நட்பின் இலக்கணம் நடைமுறையில் மாறிக்கொண்டே போவது வருத்தம் தரும் விஷயம்.

ஆனால் தங்கள் கவிதை வரிகள் தமிழின் இனிமையோடு கருத்தினிமையும் கலந்து காதில் இனிக்கிறது. பாராட்டுகள்.

M.Jagadeesan
14-08-2014, 12:57 PM
ஜெயி , அச்சலா , கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !

arun karthik
23-08-2014, 09:08 AM
அழகு கவிதை ஐயா...

கும்பகோணத்துப்பிள்ளை
23-08-2014, 11:46 PM
நட்பென்பது பால் எல்லைகளுக்கு உட்பட்டதும் உட்படாததுமாயிருக்கிறது.
தாம்பத்தியத்தில்கூட இழையோடும் நட்பிருந்தால் அதன் சுவை கூடுகிறது.

ஜயா தங்கள் கவிதையில் தமிழ் பற்றினுடே இழையோடிய நட்பை சுவைபடக்கூறியுள்ளீர்கள்!

தாமரை ஜயாவின் ஆன்மீக விவாத அலசலுக்கும் ஒரு விதை உங்கள் கவிதையிலிருக்கிறது!
" தெய்வீக சம்பந்தத்தால் (அம்சங்களுடன்) பிறந்த இருவர்களின் நட்பை (தெய்வமாகப்பிறந்தவன் - கிருட்டினன், இந்திரனின் தெய்வாம்சத்தில் பிறந்தவன் அர்சுனன்) காட்டிலும் துரியன் (படைக்கப்பட்டவன்) கர்ணனிடம் (சூரியனின் தெய்வாம்சத்தில் பிறந்தவன்) காட்டிய நட்பு மேம்பட்தா இல்லையா?"

கும்பகோணத்துப்பிள்ளை
23-08-2014, 11:56 PM
காமத்தை வெல்ல முன்றவனுக்கும்
காமத்தைச் சொல்ல முயன்றவளுக்குமான போட்டியில்
காமத்திற்கு இரட்டை பலம்.!!!

"காமத்தால் கனலும் வெம் தீச்
சீலத்தால் அவிவது அன்றிச்
செய்யத்தான் ஆவது உண்டோ?" - கம்பர்

M.Jagadeesan
22-04-2015, 08:54 AM
அருண்கார்த்திக் மற்றும் கு.பிள்ளை அவர்களின் பின்னுரைக்கு நன்றி !

பென்ஸ்
22-04-2015, 05:57 PM
நட்பு..
காதல்..
காமம்...
இதில் ஒன்றை வலியாதாகவும்
மற்றொன்றை முறையற்றதாகவும்
பிரித்து பார்க்கும் சமுதாய கண்ணாடி
வழியாக பார்த்தால் எல்லாம் பிழைதான்...

தாமரை கூறியது போல்
ஒரு உறவு எதற்காக துவங்க படுகிறதோ
அல்லது தன் தேவைகளை அமைத்து கொள்கிறதோ
அதுவாகவே அது மாறும்...

அது நட்போ, காதலோ, காமமோ...
அதில் ஒன்று உயர்ந்ததும் இல்லை,
தாழ்ந்ததும் இல்லை...

அமரன்
22-04-2015, 09:29 PM
நண்பன் ஆண்பால்.. நண்பி பெண்பால். நட்பு காமத்துப்பால்..
நடப்பு உலகம் இந்த வழியில் போகத் துவங்கிவிட்டது.
சமுதாயக் கண்ணாடி நிறம் மாற்றப்பட்டு விட்டது..
கவிதையும் தருவித்த கருத்துகளும் அருமை.

ஆதவா
23-04-2015, 12:04 PM
நாம் அப்படித்தான் வளர்க்கப் பட்டோம்..
அப்படியே வளர்வது தவறு.

கவிதை உணர்த்தும் கரு, மிகவும் தேவையானது.
வாழ்த்துக்கள்!!