PDA

View Full Version : என் கணவன்



M.Jagadeesan
03-08-2014, 09:05 AM
என்னை மணம்பேச அன்றொருநாள் மாலையிலே
மன்னவனும் வந்தானே ! உற்றார் உறவோடு !

வந்தவனை நான்பார்க்க ; என்னை அவன்பார்க்க
சிந்தனைப் பறவையோ சிறகடித்துப் பறந்ததுவே !


வந்தவன்


கோவலனாய் இருப்பானோ ; கொடுமைபல செய்வானோ
பூவுக்குப் பூ தாவும் வண்டுமனம் கொண்டவனோ ?
குடிப்பழக்கம் உடையவனோ ? குடித்துவிட்டு வந்தென்னை
அடித்துத் துன்புறுத்தி ஆனந்தம் கொள்பவனோ ?
வரவுக்கு மீறியே செலவுகள் செய்பவனோ ?
இரவில் தாமதமாய் இல்லம் வருபவனோ ?
மாமன் மாமிக்கு மரியாதை தருபவனோ!
சாமியே இல்லையெனச் சத்தியம் செய்பவனோ !

என்றெல்லாம் எண்ணி அலமரும் வேளையிலே



தந்தைஎன் முகம்நோக்கித் தாயே ! மணமகனைச்
சிந்தை களிகூரப் பார்த்தேஉன் சம்மதத்தை
இச்சபையில் தெரிவித்தால் இவ்வூர் மக்களெல்லாம்
மெச்சும் வகையினிலே திருமணத்தை நடத்திடுவேன்


என்றலும்


நாணித் தலைகுனிந்தேன்! நகத்தால் நிலம்கீறி
தூணின் பின்சென்று முகம்புதைத்து சிரித்திடவும்
" மகளே ! சம்மதத்தை மறைவாகத் தெரிவித்தாய் !
புகழே ! நானுன்னை புதல்வியாய்ப் பெற்றதற்கு !"

என்றுரைத்தார்.


மத்தளம் கொட்ட , மங்களஇசை முழங்க
கொத்தலர் பூங்குழலி கோதை என்கழுத்திலே
இந்திரன் முதலாய தேவரும் வாழ்த்திடவே
மந்திரத் தாலியை மன்னவனும் கட்டினனே



சிங்கநிகர்த் தோற்றம்; சிரித்தமுகம் கொண்டான்
குங்குமப் பொட்டழகன் ; குனித்த புருவத்தன்
தங்கநிற மேனி; தருவதிலோ கர்ணன்
அங்கமெலாம் வர்ணிக்க ஆயிரம் நா வேண்டும்.
இந்தப் பிறவிக்கு இருவேறு மாதரை
சிந்தையிலும் நினையாத சீரிய பண்பாளன்
முன்னைசெய் தவமோ ! மூண்டெழுந்த காதலால்
என்னைக் கைப்பிடித்தே துணையாய் ஏற்றிடவே
எங்கிருந்தோ வந்தான்; என்னுயிரே நீ என்றான்!
இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்தேனோ ?

நாஞ்சில் த.க.ஜெய்
03-08-2014, 01:35 PM
மாறுபட்ட வடிவில் ஒரு உரையுடன் கூடிய பாட்டுடை செய்யுள் இந்த கணவன்..தொடரட்டும் ...
அலமரும் மற்றும் கொத்தலர் இவ்விரண்டின் விளக்கம் தான் என்ன? தெரிந்தால் நன்றாய் இருக்கும்

Sabeekshana
03-08-2014, 01:39 PM
"பூவுக்குப் பூ தாவும் வண்டுமனம் கொண்டவனோ?"

அருமையான உவமை!! தொடரட்டும் ஐயா தங்களது கவிகள்!!

கும்பகோணத்துப்பிள்ளை
04-08-2014, 11:19 AM
கோவலனாய் இருப்பானோ ; கொடுமைபல செய்வானோ
பூவுக்குப் பூ தாவும் வண்டுமனம் கொண்டவனோ ?
குடிப்பழக்கம் உடையவனோ ? குடித்துவிட்டு வந்தென்னை
அடித்துத் துன்புறுத்தி ஆனந்தம் கொள்பவனோ ?
வரவுக்கு மீறியே செலவுகள் செய்பவனோ ?
இரவில் தாமதமாய் இல்லம் வருபவனோ ?
மாமன் மாமிக்கு மரியாதை தருபவனோ!
சாமியே இல்லையெனச் சத்தியம் செய்பவனோ !

இதில் சொல்லப்பட்ட மற்ற குணங்கலுக்கெல்லாம் எதிர்மறையான ஒன்றை "மாமன் மாமிக்கு மரியாதை தருபவனோ?" என இருக்கிருறதே? விளக்கம் கிடைக்குமா?

M.Jagadeesan
04-08-2014, 03:37 PM
பிள்ளை அவர்களே ! உங்கள் கருத்து சரிதான் .

"மாமன் ,மாமியை நிந்தனை செய்பனோ ?" என்று இருக்கவேண்டும் .