PDA

View Full Version : நான் இராப்பொழுதின் ரசிகை !!Sabeekshana
31-07-2014, 05:47 PM
http://pixdaus.com/files/items/pics/7/82/527782_cabf14e9dc7f8a3ac0c93e33b4e3c86b_large.jpg


அன்னை மடியில் அன்பு வழிய
என்னை நான் தொலைத்து
விண்ணை விழிகள் வட்டமிட
சென்னையில் உண்ட நிலா சோறு நினைவில் என்றும்
ஆதலால் நான் இரவின் ரசிகை!!

நிறத்தினில் வேற்றுமை காட்டிய பகல்- மானிடர்
தரத்தினில் வேற்றுமை காட்டியதுண்டோ?
கரத்தினில் அவர் சுமக்கும் பாவத்தின் கனத்தினை
மரத்தினில் வாசம் செய்த வௌவாலே காட்டிற்று
ஆதலால் நான் இரவின் ரசிகை!!

தாயின் கருவறை காட்டியதும்
தீயின் பிரகாசம் கூட்டியதும்
பாயின் கண் இல்லான் பெண்மை மீட்டியதும்
பேயின் பீதிகள் வாட்டியதும்- இரவில்
ஆதலால் நான் இரவின் ரசிகை!!

நிர்மலமானது பகலா? அது மனிதர்
நிஜங்களை அல்லவா நிர்மூலமாக்கியது?
நிலவின் ஒளியில் நிதம் நிதம் நான்
அவர்தம் நிதர்சனம் காண்கிறேன்
ஆதலால் நான் இரவின் ரசிகை!!

பொய்மை கொண்ட மானிடர் காணேன் - வண்ண
பொய்கை தனிலே ஆம்பலை கண்டேன் - மனித
அவலங்கள் ஏதும் அறவே காணேன்
பவளங்கள் போன்ற விண்மீன்கள் கண்டேன்
ஆதலால் நான் இரவின் ரசிகை !!

ஆரவாரம் ஏதுமற்ற ஒரு
அமைதியின் பிரதிபலிப்பு!!
உறக்கத்தில் சமரசம் வேண்டி நிற்கும்
ஒரு சமாதான பிரதிநிதி..
ஆதலால் நான் இரவின் ரசிகை!!

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 11:03 AM
பகலுக்கு பாறை மறைவுகூட விலக்குதான்
இரவு அப்படியில்லை பாரபட்ச்சமின்றி எங்கும் படரும் எல்லாவுயிருக்கும் இதம்!
அனுபவித்து வடித்திருக்கிறியள்! பாராட்டுகள்!

M.Jagadeesan
01-08-2014, 01:30 PM
இரவின் அழகை வடித்த தோழியே !
இனிமை ! இனிமை ! உந்தன் கவிதை !
இரவின் இரசிகை ஆனாய் நீயே !
உந்தன் இரசிகன் ஆனேன் நானே !

ஆனால்

பகலை விரும்பும் இரசிகன் என்று
பகர்வதில் பெருமை கொள்வேன் நானே !


விழித்திருக்கும் நேரமே வாழ்கின்ற நேரம் !
விழிமூடித் துயில்கின்ற நேரத்தில் என்செய்ய ?


தூக்கத்தில் பாதிநாள் போக்கும் மானிடனே !
ஊக்கமுடன் செயலாற்ற உகந்தது பகற்போழுதே !


ஆயிரம் கண்கள் இரவுக்கு இருந்தாலும்
தூயநல் ஆதவன் ஒளிமுன்னே நின்றிடுமா ?


ஆவிகளும் பேய்களும் அர்த்த இராத்திரியில்
தாவி விளையாடும் சுடுகாட்டுத் தருக்களிலே !


கரவுள்ளம் கொண்டோரும் கயவரும் திருடரும்
இரவின் வருகைக்காய் ஏங்கியே காத்திருப்பர்!


இரவின் இனிமைக்கு காத்திருக்கும் காதலரே !
இரவிலே நடந்த பிரிவை அறியீரோ ?
காதலியைக் கானகத்தில் நளன் விட்டதுவும்
போதி மரத்துப் புத்தன் துறந்ததுவும்
உறவுகள் துடிக்க உற்றார் பரிதவிக்க
இரவு வேளையிலே நடந்த கொடுமையன்றோ ?


இந்தியா சுதந்திம் அடைந்தது இரவினிலே
இன்னும் விடியாமல் தவிக்கின்றோம் இருட்டினிலே !


ஆதலினால்


பகலை விரும்பும் இரசிகன் நான் !
பகலே எனது ஆசான் ஆகும் .

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2014, 05:16 PM
இரவின் இரசிகையின் கவித்துவமான் கருத்துக்கள் ...அருமை யான கவிதை எனது இனிய வாழ்த்துக்கள் ...எனது சிறிய அன்பளிப்பு ..50 இ பணம் ..

Sabeekshana
02-08-2014, 06:47 AM
மிக்க நன்றி தோழமையே!!

ஜெகதீசன் ஐயா தங்கள் கவியை படித்த பின் பகலின் பால் உள்ளமது வெகுவாக ஈர்க்கப்படுகிறது!! நன்றிகள்!! :icon_b:

ஜெய் அவர்களே தங்கள் வெகுமதிக்காய் காத்திருக்கிறேன்!!;)

நாஞ்சில் த.க.ஜெய்
02-08-2014, 07:02 AM
உங்கள் வரவில் வந்திருக்குமே...

Sabeekshana
02-08-2014, 08:03 AM
ஆகா அது நேற்றே வந்து சேர்ந்து விட்டது ஜெய் அவர்களே !! :lachen001: