PDA

View Full Version : தாயே என் உயிர் தீயே.....



Sabeekshana
29-07-2014, 02:37 PM
என் உயிரினும் மேலான என் பெரிய தாயார் (பூவின்பராணி) ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டு என்னை விட்டு பிரிந்து சென்ற போது என் சொல்லொணா துயரம் பின்வரும் கவியாக....


http://blindgossip.com/wp-content/uploads/2012/02/girl-crying-2.gif


பாவையவளை நான் என் உள்ளத்தில்- ஓர் சித்திரமாய்
பத்திரமாகவே புதைத்தது கண்டு- பாவியாம்
பரமனும் தன் காலன் துணை கொண்டு
பாசவுறவுகளை விட்டிங்கு பிரித்தனன்!!

பிஞ்சென எனை நீ அள்ளியெடுத்து அணைத்து
கொஞ்சும் வேளையில் அம்மா
விஞ்சும் பாசக்குமுறல்கள் எல்லாமின்று
நெஞ்செங்கும் நிறைந்து நிற்குதம்மா!!

துஞ்சும் வேளையிலும் கூட
துல்லியமாய் துலங்குவது உன் முகமே
கெஞ்சுகிறேன் இன்றும் இறைவனை- ஏனோ
கேலியாகவே பார்க்கிறான் என்னை!!

எண்ணி எண்ணி நான் கண்ணீர் சொரிகிறேன்
மின்னி மின்னி உன் சகாப்தங்கள் மிளிரட்டும்
பின்னிப்பின்னி நீ புனைந்த அன்புக்கதைகளை
வெளிர் வெண்ணிலவும் வெளித்துகாட்டுதம்மா!!

உன் மதுர மொழி கேட்டு- ஒரு
மலரென பூப்பவள்
உன் மூடிய விழி கண்டு- சட்டென
மடிந்தே வீழ்கிறேன்!!

கடலை விட்டு அலைகள் கணநேரம் பிரிவதில்லை
பாடலை விட்டு பண்ணும் பிரிதல் நியாயம் இல்லை
படலை விட்டு பத்தினி ஏகல் நீதி இல்லை- என்
உடலை விட்டு உன் உயிர் பிரிதல் மட்டும் தகுமோ!!

மூண்ட நெருப்பினில் மூழ்கி
மீண்டெழும் நினைவும் இழந்தேன்
தீண்ட யாரும் அற்ற ஒரு பறவையாய்- உனதன்பு
கூண்டில் அடைபட்டு கிடக்கிறேன் தாயே!!

பூவினத்தின் நறுமணம் முழுமையாய் கொண்ட
என் தாயே பூவின்ப ராணி
ஆவினம் கூட உன் வருகை காணாது இன்று
அழுது ஆர்ப்பரிக்குதம்மா!!

அரிச்சந்திரன் வழி வந்த அழகிய ராணி- எனக்கு
அரிச்சுவடி எடுத்துரைத்த இளகிய தாய் நீ- தேவ
பரி தனில் ஏறி ஊர்வலம் நீ சென்றாய்
பரிதவிக்கும் எனதுள்ளம் இனி யார் தான் அறிவார்!!

சிப்பிக்குள் முத்தாக
சிலிர்த்த நான் இன்று
சிறகினை இழந்திட்ட- ஒரு
சிட்டாக உணர்கிறேன்!!

தித்திக்கும் நீ மொழிந்த வார்த்தைகள்
என்றும் திகட்டாது ஒலிக்கட்டும்
புத்திக்கும் நீ சொன்ன அறிவுரை- இனிய
புது பாதை தனை அளிக்கட்டும்!!

கைபேசி ஒலி தனை கேட்டால்
கைக்குட்டை தேடுகிறேன்- தினம் தினம்
கைமீறி போன உன் விதியை எண்ணி- ஒரு சிறை
கைதியை போல் நோகிறேன்

உருண்டோடும் இன்னும் மூவாண்டில்
உருவெடுப்பேன் ஓர் வைத்தியராய்
இருண்ட என் தாயின் சுவாசப்பையை ஒளியேற்றி
உருக்கொடுப்பேன் என காத்திருந்த நாட்கள்!!

முதல் சம்பளத்தில் உனக்கு மட்டும்- ஒரு
முத்தான சேலை- உன்
இதழ் மகிழ்ந்து இன்பம் நீ கொள்ள
ஒரு முத்து மாலை!!

என் கற்பனை கோட்டைகள் எல்லாம்
கணப்பொழுதில் தகர்ந்தனவே
ஏனோ விற்பனை செய்திட்டான் அவ்விறைவன்- சட்டென
என் விலை உயர்ந்த காவியத்தை!!

உற்ற பொழுதினில் உனக்கு உதவிட
கற்ற கலைகளும் கை கொடுக்கவில்லையே
கொற்ற இறைவனை போற்றியதால்- நான்
பெற்ற பேறு தான் இதுவா!! நான் என் செய்வேன் தாயே!!

ஐயகோ!! முட்புதரில் முல்லை மலர்
முறிந்து விழுதல் கண்டேன்- மறுகணம்
பொற்றேரில் என் ராணி
போகம் எய்தலுக்காய் என கொண்டேன்!!

வேற்று கிரகத்தில் விடப்பட்டேன்- ஈற்றில் சுவாசிக்க
காற்றுக்கும் வழி ஒன்று கண்டிலேன் தாயே
தேற்றுவதற்கும் இங்கு நீயில்லை
ஆற்றுவதற்கும் ஒரு கருமம் இல்லை- என் அன்பு ஊற்றே
மாற்று வழி தான் இங்கு? என்ன நான் மாய்வது தானா?


இன்றும் அவள் பிரிவால் வேதனையின் விளிம்பில் வாடும்
சபீக்ஷனா

கீதம்
30-07-2014, 11:49 PM
பெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை கவிமலர்ச்சரமாகக் கட்டி அவருக்கு காணிக்கையாக்கியமை மனம் நெகிழ்த்துகிறது.

பெரியன்னையிடத்தில் நீங்கள் கொண்ட பாசமும் அவர் உங்கள் பால் கொண்ட பரிவும் கவிதைக்குள் பின்னிப்பிணைந்து காணக்கிடைக்கின்றன.

ஊடே கையாண்டிருக்கும் உவமைகளும் மனம் தொட்டு வலியின் வீரியத்தை உணர்த்திப்போகின்றன.

ஆற்றாமையால் துடிக்கும் மனத்துக்கு ஆறுதல் சொல்ல எவராலும் இயலாது என்றாலும் இக்கவிதையும் தமிழும் அக்காரியம் ஆற்றும்.

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 03:09 AM
பெரியம்மாவின் இழப்பின் வருத்தம் கூறும் கவிதையில் நினைத்த நிறைவேறாத எண்ணங்கள் தங்கள் வலியினை உணர்த்துகிறது .இழப்புகளின் வலியினை அடிபட்டவர்களால் மட்டுமே உணர முடியும் . வெறுமனே ஆறுதல் சொல்வதன் மூலம் அதன் வலி மிகுந்த நினைவுகளை அழித்து விட முடியாது .பசுமையான நினைவுகள் அதன் காயங்களை ஆற்றும்.. காலம் கடக்கும் போது நினைவுகளும் நம்முடனே தொடர்ந்து வரட்டும் . தங்கள் பெரியம்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் ..

ரமணி
31-07-2014, 03:35 AM
ஆற்றாமை உணர்வுகளின் கொந்தளிப்பை அழகுடன் விதிர்க்கும் கவிதை அருமை!
சோகத்தையும் அழகுறச் சொல்வது இலக்கியம் என்பதற்கு இலக்கணம் இது!
வாழ்த்துக்கள்.

ரமணி

Sabeekshana
31-07-2014, 02:46 PM
மிக்க நன்றி தோழர்களே!!


தங்களது வார்த்தைகள் மரத்து போன எனது மனிதின் காயங்களுக்கு ஒரு மருந்தாயின !!