PDA

View Full Version : கோடிப்பூக்கள் உனக்காக ...



vasikaran.g
13-07-2014, 02:38 PM
கண்ணே ! அழகுப் பெண்ணே !
கோடிப் பூக்களுடன்
தெருக்கோடியில் நான் !
நாடி வரும்போதேல்லாம்
ஓடி ஒளிகிறாய்
பேடி போல !

தேடி வரும் போதெல்லாம் ,
நாடி நரம்புகள் அதில் ஓடும்
உதிர அரும்புகள் உறைவதுபோல்
சாடி சபிக்கிறாய் ! வாட்டி வதைக்கிறாய் !
சேவிக்க வேண்டியவர்களை கோபிக்கிறாய் !
கோபிக்க வேண்டியவர்களை சேவிக்கிறாய் !

என்மனக் கண்ணாடியை உடைக்கிறாய் ,
பின்னர் கண்ணாடி முன் உடைக்கிறாய் !
அது ஏன் கண்ணாட்டியே !

தாயே ! உன்தாயே சொன்னாலும்
ஒருமுறை கேள் மனசாட்சியை !
பாசம் கண் மறைப்பதால்
தெரியாது சூழ்ச்சியே !
வேஷம் கலையும் வேளையில்
வெளுத்துவிடும் பொய்ப் பேச்சியே !

நேரம் பிறழ்ந்ததால்
நிகழ்ந்தது சில காட்சிகள் !
வேண்டா விருந்தாளியாய்
வந்தது வீண் ஏச்சுகள் !
சோரம் போனது
உன்னவனின் பேச்சுகள் !


கண்கள் சிந்தும் உப்புநீரே !
நீயாவது கொஞ்சம்
அறிவுரை செப்பிப் பாரேன் !
தற்காலம் உண்மைக்கு வீழ்ச்சியே !


காலம் மாறும் ! காட்சி மாறும் !
ஆச்சியே ! நாச்சியே ! என் மூச்சியே !
இங்கு என்றென்றும் நடப்பது
உனதாட்சியே ! மீனாட்சியே !
மனசாட்சியே மறக்காமல்
எடுத்தியம்பு ஒருமுறை
உண்மை மாட்சியை !

கீதம்
21-07-2014, 11:34 PM
கவிதை நன்று. வார்த்தைச்சடுகுடு ஆட்டம் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

நயத்துக்காக என்றாலும் மூச்சியே என்பது மட்டும் இடிக்கிறது. மூச்சே என்றிருப்பதே சரி அல்லவா?

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 04:14 AM
கவிதை உவமையில் பேடி போன்ற கடின வார்த்தைகளை பயன்படுத்தாது இருப்பது நலம்..பேச்சியே =பேசியே மூச்சியே =மூச்சே என்றிருத்தல் நலம் ...மேம்படட்டும் கவிதை..

vasikaran.g
31-07-2014, 10:29 AM
நன்றி கீதம் .. உங்கள் கருத்து சரியானதே .

நன்றி திரு ஜெய் . ஒரு சந்தேகம் . ஏன் பேடி என்ற பதத்தைப் பயன்படுத்தக்கூடாது ? சற்று விளக்குங்களேன் ..

Sabeekshana
31-07-2014, 02:59 PM
நான் தமது வினாவுக்கு விடை கூற தகுதி உடையவளா என்பதை அறியேன்.

எனினும் என் கருத்து வருமாறு:

கட்டிளம் காளை தன் வீரத்தை தியாகம் செய்தால் அவனை "பேடி" என்று இழிவாக உரைப்பர்.

ஆனால் ஒரு மங்கை இயல்பாகவே ஒரு மலரை ஒத்த மென்மை பொருந்தியவள்.

பெண் ஆடவரை கண்டு ஓடி ஒழிந்தால் அது அவளது பெண்மையின் குணமான நாணத்தை வெளிப்படுத்துகிறது.

அதனை பேடித்தனத்துக்கு ஒப்பிடுவது சற்றே சஞ்சலத்தை தருகிறது.

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 10:20 AM
பேடி யெண்பது 'தைரியமில்லாமை' , 'பயம்' என்பதற்கான ஒப்புமையுடைய சொல்லாகத்தான் அறிந்திருக்கிறேன். ஆண் பெண் இருபாலருக்கும் உறித்தானதாகவே இருப்பதாகவே நினைக்கிறேன். (வீரத்தை தியாகம் செய்வது என்பது இச்சொல்லிற்க்கு பொருந்தாது அதுவும் கட்டிளம் காளை?!:confused:)

பேடித்தல், ஏன் பேடிக்கிறாய் போன்ற பயன்பாடுகள் இருபாலருக்கும் பொருத்தமெனவே நினைக்கிறேன்

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2014, 03:50 PM
பேடி எனும் சொல் மூன்றாம் தர சொல் .இச்சொல் ஒரு பிரிவினரை குறிப்பால் (பேடி பயல்) உணர்த்தி திட்டுவதற்கு பயன்படுத்த படும் சொல் பொட்டை என்று கொச்சையாக கூறுவதை மாற்றி இவ்வாறு அழைப்பர்.இருப்பினும் இது போன்ற வார்த்தைகள் கவிதைக்கு அழகல்ல என்பது என் கருத்து.

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 04:16 PM
தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

என பொய்யாமொழிப்புலவரும் கூறியிருக்கிறார் எனின் அவ்வார்தையை கவிதையில் உபயோகிப்பது எங்கனம் தவறாகும்?

மேலும் ஒளவையார்

அரிது அரிது மானிடராதல் அரிது
அதனிலும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது


பேடு என்ற வார்தையை உபயோகப்படுத்தியுள்ளார் அது எங்கனம் தவறாகும்?

மேலும் இக்கவிதையில் காதலியின் பயத்தை விளக்குவதன் பொருட்டும்
கோடி, பேடி என்ற சந்தம் கருதியும் உபயோகப்படுத்தியிருக்கலாம்
அங்கனமாயின் அதை தவறென்று கருதலாகாது என்பதே என் கருத்து

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2014, 04:48 PM
இந்த குறளில் தன்னிகரற்ற ஆசான் கூறிய வார்த்தைகளை தவிர்த்து வேறேதேனும் சொற்கள் பயன்படுமா ? ஆனால் இக்கவிதையில் இச்சொல்லிற்கு பதில் வேறு சொல்லினை இட்டு வாசித்தல் கூட கவிதை முழுமையுறும் இது அறிவுரை கூறும் நூலுக்கும் காணும் நிகழ்வுகளை தொகுக்கும் கவிதை நூலுக்கும் இருக்கும் மாறுபாடு.இருப்பினும் என்னை பொறுத்த வரையில் இவ்வாறு ஒப்புமை கூறிய குறளினை கூட ஏற்று கொள்ள முடியாது ..காரணம் இக்குறளிலேயே தெரிகிறது பயன்படுத்தியிருக்கும் ஒப்புமை அவர்கள் வாள் பிடிக்க வக்கற்றவர்கள் என்று கூறிய பதம்.நான் கூறவருவது வேண்டாம் இந்த ஒப்புமை என்பது தான் இதனை தவிர்த்து வேறு சொல் பயன்படுத்தலாமே?..

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 05:22 PM
பயந்தவன் கையில் வாளிருப்பினும் பயனில்லை என்பதே அவர் கூறிய உவமை
கொடுந்தமிழாம் மலையாலத்தில் 'பேடிக்கண்டா' என பயம் பற்றியே கூறும் வழக்கமுண்டு
எனவே இவ்வார்த்தை பற்றிய வெறுபபைத்தவிர்த்து கவிஞனின் வார்த்தை சுதந்திரத்தில் பாதிப்பிலலையெனில் தலையிடாதிருப்பதே உகந்தது.

நாஞ்சில் த.க.ஜெய்
02-08-2014, 06:00 AM
அச்சொல்லிற்கு எனது பார்வையில் நான் கொண்ட அர்த்தம் வேறு அந்த விளக்கத்தினை கூறிவிட்டேன் மேலும் அதனை ஏற்றுகொள்வது என்பது அவரவர் சிந்தைகுட்பட்ட முடிவு ..மற்றொன்று ஒரு கவிஞனின் சுதந்திரம் கவிதை அச்சேறும் வரை அதன் பின்னர் விமர்சகரின் விமர்சனத்திற்கு உட்படுகிறது .இது போன்று கருத்துக்கள் கூறுவது என்பது வார்த்தை திணிப்பல்ல விமர்சகரின் கருத்து இவ்விடத்தில்



கவிஞனின் வார்த்தை சுதந்திரத்தில் பாதிப்பிலலையெனில் தலையிடாதிருப்பதே உகந்தது


இப்படி கூறுவதனால் இதன் விளக்கம் தடம் மாறி செல்கிறது .இதுபோன்ற கருத்தினை கூறுவது தவறு ..

ravisekar
30-07-2015, 05:15 PM
என்ன ஒரு அல்சல் வசீகரனின் வார்த்தைச் சடுகுடு கவிதை பற்றி. இதுபோல் பலரும் அலசினால் கவிஞர்களுக்கு எழுத்தாளர்களுக்கு நல்ல உற்சாக்ம் ஊக்கம் வரும் இல்லீங்களா?