PDA

View Full Version : விவேகம்



dellas
01-06-2014, 05:47 AM
மழை ஓயாமல் பெய்துகொண்டிருக்கிறது. பூமியில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் பூமித்ததகடு சூடாகிவிட்டது . எனவே இனிமேல் மழையே பெய்யாது என்று அப்படியே பெய்தாலும் அது அழவில் குறைந்ததாகவே இருக்கும் என்று நேற்று ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டியில் பேட்டி தந்தது நினைவில் வருகிறது.

இரண்டு நாட்களுக்கு மழைபெய்துவிட்டால், சாலைகளும் மூழ்கிவிடும். அப்புறம் போக்குவரத்து சிக்கல். தேங்கி நிற்கும் தண்ணீரில் அதீத கொசு உற்பத்தியால் அழையா விருந்தாளியாக வந்துவிடும் கொள்ளை நோய்கள். முறைப்படுத்தப்படாத நீர் வடிகால்களால் வீணாகும் மழை நீர், என என்மனதின் சிந்தனைகள் விரிந்துகொண்டு போனதில் நேரத்தை கவனிக்க தவறிவிட்டேன். மூன்று மணி ஆகிவிட்டது. நண்பர்கள் பட்டாளம் இந்நேரம் அந்த குட்டிச்சுவரின் அருகில் வந்திருப்பார்கள்.

வீட்டில் இருப்பது ஒரே குடை. அதையும் நான் எடுத்து போனால் அவசரத்திற்கு மாற்று இல்லாமல் போகும். கல்லூரிக்கு சென்றிருக்கும் தங்கையிடம் ஒரு குடை உண்டு. அவள் வரும்வரை காத்திருந்தால் இன்னும் அரை மணி நேரமாகும். இரண்டு நாளாக அம்மாவும் இருமிக்கொண்டே இருக்கிறார்கள். காய்ச்சலோடு வந்த இருமல். மருந்து கொடுத்தபின் சற்று குறைந்திருப்பதாகவே படுகிறது.

நேரம் நான்கு மணியை கடந்து விட்டது. என்னாவாயிற்று இவளுக்கு, ஒருநாளும் இவ்வளவு நேரமாகாதே. மழை பெய்துகொண்டிருப்பதால் ஒருவேளை போக்குவரத்து நெரிசலாக இருக்குமோ? எதற்கும் பேருந்து நிறுத்தம் வரைக்கும் சென்று பார்த்து வரலாம் அப்படியே நண்பர்களையும், என்று எண்ணியவாறு, அம்மாவிடம் சொல்லிவிட்டு தெருவில் இறங்கி ஓடிவரும் தற்காலிக கால்வாய்களை கவனமாக கடந்து நடந்தேன்.

பிரதான சாலையில் உள்ள அந்த பேருந்து நிறுத்தத்தில் யாருமில்லை. சற்றுநேரம் காத்திருந்தேன். தண்ணீரை சிதறடித்தபடி செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதும் அந்த தண்ணீர் என்மீது படாமல் தற்காப்பு செய்வதிலும் நேரம் கடந்தது.

அப்போது முப்பது வயது மதிக்கத்தக்க சராசரி உடை உடுத்திய ஒரு வாலிபன் மூச்சிரைக்க நான் நின்றுகொண்டிருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்தான். என்னை கண்டதும் என்னருகே வந்து நின்றான்.மொத்தமாக மழையில் நனைந்து, உடல் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது. 'மறைந்து கொள்ள ஏதாவது இடம் இருக்கிறதா ' எனக்கேட்டான்.

நான் புரியவில்லை என்பதுபோல் அவனைப் பார்த்தேன். அவன் தன் இடக்கையில் சின்ன விரலை மட்டும் காண்பித்து 'அவசரம்' என்று சொன்னான். உடனே பின்பக்கமிருந்த சுற்றுச்சுவரின் இடைவெளியை காண்பித்தேன்.வேகமாக, அந்த வழியே ஓடி மறைந்தான். நான் குழம்பிக்கொண்டு நின்றேன். இதற்காகவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தான். வேறு என்னமோ இருக்க வேண்டும்.

இப்போது மூன்று முரட்டு ஆட்கள் கையில் கத்தியோடும் உருட்டுக் கட்டைகளோடும் அதே வேகத்தில் ஓடி வந்தார்கள். நேராக என்னிடம் வந்த அவர்கள், சுற்றுச்சுவரின் இடைவெளியை பார்த்தவாறே,

"இந்த வழியாகத்தான் அவன் ஓடி இருக்கவேண்டும். வேறு வழி இல்லை. இவனைக் கேட்டால் தெரியும்"

" இப்போது ஒருத்தன் ஓடி வந்தானா?" என்று என்னிடம் கேட்டனர்.
நான் அவர்களை வெறித்துப் பார்த்தபடி மெளனமாக நின்றேன்.

"ஏன்டா உன்னைத்தான். காது கேட்கவில்லையா" என்றான்.

நான் எதுவும் பேசவில்லை. மெதுவாக அவர்களிடமிருந்து நகர்ந்து நின்றேன்.

" என்னடா நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நீ மரியாதை இல்லாமல் அந்தப்பக்கம் போகிறாய்" என்றபடி எட்டி வந்து என் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.

வலக்கையில் கத்தி இருந்ததால் இடக்கையால்தான் என்னை அடித்தான். எதிர்பாராத அடி. என்தலை ஒருமுறை சுழன்று வந்தது போலிருந்தது. கண்களில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தன. வலக்காதில் எதோ சூடான திரவம் பாய்ந்தது. கடைவாயில் பற்களுக்கிடையில் ரத்தம் கசிந்தது. ஒரே வினாடிக்குள் இவ்வளவும் நடந்தேறிவிட்டது. மெல்ல நிதானத்திற்கு வந்த நான்,

" எதற்காகவடா என்னை அடித்தாய் " என்று கோபத்தோடு கேட்டேன்.

" அடிக்காமல், கேள்விக்கு பதில் சொல்லடா"

" உன் கேள்விக்கு நான் எதற்குடா பதில் சொல்லணும்"

" அப்படியானால் இதையும் வாங்கு." என்றபடி மற்றொருவன் கையில் இருந்த உருட்டுக்கட்டையால் என் பின்னந்தலையில் அடித்தான்.

இதை எதிர்பார்த்த நான் சற்றே குனிந்தேன். ஆனாலும் முழுவதுமாக தப்ப முடியவில்லை. அது சற்றே என்னை பதம் பார்த்துவிட்டு சென்றது. விழப்போன நான் ஒருகையை தரையில் ஊன்றியவாறு சமாளித்து எழுந்தேன்.அப்போது ஒருவன் என் கையை இடறிவிட்டான். வேறுமார்க்கமில்லை முற்றிலுமாக கீழே விழுந்தேன். மற்றொரு கையிலிருந்த குடை சற்று தள்ளிப்போய் விழுந்தது. எல்லாமே நனைந்து விட்டது. எனக்கு மிகக்கடுமையான கோபம் வந்தது.

"டேய் நீங்க தைரியமான ஆட்களா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?"

உடனே கையில் கத்தி வைத்திருந்தவன் என்முன்னே வந்தான்.

"எந்திரிடா மேல. வா ..நான் ஒத்தைக்கு வர்றேன்"

"ஒத்தைக்கு வரச்சொன்னா கத்தியோட வர்ற? ஒண்ணில் எனக்கும் ஒரு கத்தி கொடு. இல்லை, கத்தியை தூர எறிந்துவிட்டு வாடா." என்றேன்.

உடனே அவன் கையிலிருந்த கத்தியை தூரமாக இருந்த புதரை நோக்கி வீசிவிட்டு என்னை நோக்கி பாய்ந்தான்.

லாவகமாக அவன் குறிவைத்து பாய்ந்த இடத்திலிருந்து நான் துள்ளி விலகினேன்.

பாய்ந்த வேகத்தில், தண்ணீரின் மீது குப்புற விழுந்தான் அவன். நாலாபுறமும் தண்ணீர் சிதறியது. ஆனாலும் உடனே எழுந்தான்.என்ன இருந்தாலும் முரட்டு உடம்பல்லவா! அவன் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வடிந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. நான் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தேன். இது அவனுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.அவன் கண்கள் சிவந்தன.

தன கை விரல்களை மடக்கி என் வயிற்றை பார்த்து ஒரு குத்து விட்டான். விலகுவதற்கு அவகாசமில்லை. உடனே என் இடது கால் முட்டியை மேல்நோக்கி மடக்கி அதை தடுத்தேன். அது சரியாக என் கீழ் முட்டி எலும்பை பதம் பார்த்தது. கடுமையான வலியை மூளை பதிவு செய்தது. எனக்கே இப்படி என்றால் அவனுக்கு அது மிகப்பெரிய வலி என்பதை அவன் கைகளை பின்னிழுத்து உதறும் பாணியில் தெரிந்தது. இப்போது வெற்றி எனக்கு.

இப்போது என் அருகில் உருட்டுக்கட்டையோடு நின்றவன் அதை என் வலக்காலுக்கு குறிவைத்து அடித்தான். அடியின் பலத்தை குறைக்க வேகமாக அவன்திசையில் ஒரு அரைவட்டமடித்த நான் எனது வலக்கை பின் முட்டியை மேல்நோக்கி அவன் தாடைக்கு செலுத்தினேன். தூரம் குறைந்ததால் அவன் அடி பலமிழந்தது. அருகில் சென்றதால் என் அடியின் பலம் நன்றாக அவன் தாடைக்கு மாறியது. இதை எதிர்பார்க்காத அவன் மல்லாக்காக தண்ணீரோடு கலந்த தரையில் விழுந்தான்.

இன்னொருவன் உண்டே என்று உள்ளுணர்வு உணர்த்த வேகமாக திரும்பினேன். நடந்தே விட்டது. உருட்டுக்கட்டை என் உச்சந்தலையை பதம் பார்க்க வந்து கொண்டிருந்தது . மேல எழும்பிய என் இரண்டு கைகளும் பெருக்கல் குறி வடிவில் அந்த அடியை தாங்க, வலுவிழந்த அடி மெலிதாதாக தலையை தொட்டது. சமவேளையில் என் வலது கால் முட்டி அவன் கீழ் வயிற்றில் ஒரு இடி போன்ற விசையை செலுத்தியது. உருட்டுக்கட்டையை விட்ட அவன், தன் வயிற்றை பிடித்துக்கொண்டு முன்பக்கமாக குனிந்தான்.

இப்போது விவேகம் முக்கியம். அடிவாங்கிய மூன்றுபேரும் மிக குறைந்த நேரத்தில் மீண்டும் நிலைபெற்று தாக்கலாம். எனவே அடுத்தது, முடிந்த மட்டில் வேகமாக ஓடிவிட வேண்டும். அதோ குடை. அது முக்கியம். வேறு குடை இல்லை. குடையை எடுத்துக்கொண்டு பின்னங்கால் பிடரியிலடிக்கும் வேகத்தில் சாலையை கடந்தேன். இன்னும் சற்று தூரம் ஓடிவிட்டு லேசாகத் திரும்பி பார்த்தேன். அவர்கள் என்னைப் பின்தொடரவில்லை. மடக்கிய குடையோடு, நனைந்த கோலமாய் வீட்டில் நுழைந்த என்னிடம்,

" உனக்கு என்ன புத்தி கேட்டு போச்சா அண்ணா , குடையை கையில் வைத்துக்கொண்டு மழையில் நனைந்து வருகிறாயே?" என்று தங்கை கேட்டாள் .

'இவள் எந்த வழியாக வீட்டிற்கு வந்திருப்பாள்? என்று என் மனம் யோசிப்பதற்கு பதில், சண்டை நடந்த அந்த கொஞ்ச நேர அவகாசத்தில் எப்படியும் அந்த வழி கேட்டு வந்தவன் தப்பித்துப் போயிருப்பான்?' என்று சமாதானப்பட தொடங்கியது.

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 04:24 AM
திரைப்பட கதாநாயகனின் துவக்க பகுதி நன்று மற்ற பகுதிகள் தொடருமா?...

dellas
31-07-2014, 07:18 AM
ரொம்ப நாளாக சண்டைகாட்சி ஒன்றை எழுதவேண்டும் என்ற ஆவல். மற்றபடி நான், மிதவாதிதான். கதாநாயகன் அல்ல.

ravisekar
28-07-2015, 01:35 AM
மிக மிக மிக துல்லியமான விவரணை. ஸ்டண்ட் மாஸ்ட்ர்கள் கூட டைரக்டர், நடிகருக்கு இப்படி விலாவாரியாய் சொல்லியிருப்பார்களா என்ற எண்ணம் எழும்பியது.

பாராட்டுக்கள் டெல்லாஸ்.

dellas
03-08-2015, 12:47 PM
நன்றிகள்