PDA

View Full Version : காதலிக்கும் காளையர்க்கு காதலர்தின வாழ்த்துக்கள்(ஆக்கம்: அருட்கவி)



Arudkavi Ganesh
11-02-2014, 12:48 AM
இன்னிசை வெண்பா)

சக்தியளே! வித்தகியே! சாந்த சொரூபிணியே!
சர்க்கரையும் சாரவலும் சாதமும்- முக்கனியும்
முன்னே படைத்தேன்யான் முத்தமிழில் நற்கவிதை
பின்னிடவே ஈவாய் அருள்!

கண்ணே கருத்தில் கலந்தவென் தேனமுதே
பெண்ணே பெரும்பூவே பேரழகே- மண்ணிலே
இல்லறம் நல்லதாய் ஈய வருவயோ
பல்லோரும் போற்றுவர் பார்!

சின்ன இடையும் சிரித்த முகமும்
கன்னக் குழியும் கலக்குதே!- உன்பாதம்
மண்ணில் படாது மலரெனக் காப்பேனே
எண்ணமே நீயடி ஏற்பு!

கண்ணைத் திறந்தால் களிப்பாயே தோற்றுமென்
எண்ணம் நிறைந்த இனியவளே-பண்புடைய
மங்கையே! உன்னை மனைக்கரசி ஆக்கிடச்
சிங்கனே யான்தருவேன் சீர்!

ஊனு மிழந்தேன் உறக்க மிழந்தேன்
தேனே சுகந்தரு தென்றலே-நானுந்தன்
கன்னக் குழியினைக் கண்டு மயங்கியே
பின்னே தொடர்கிறேன் பார்!


கனியே கரும்பே கருங்குழல் கள்ளி
பனிபோல மேனிப் பளிங்கே -உனது
குணநடை கண்டு களித்திடும் என்னை
மணந்திடுவாய் வாழ்வில் மகிழ்ந்து?


அம்மன் உருவினளோ! அன்பழகி உன்மேனி
செம்மண் நிறமோ? சிரிப்பழகி - அம்சமோ
அம்சமடி ஆருயிரே அள்ளி அணைத்துமே
செம்மையுற வாழ்வேன் சிறந்து.

நேரிசை வெண்பா
சந்தனமும் குங்குமமும் சங்கமிக்கும் உன்முகத்தால்
எந்தனையே ஈர்க்கும் எழிலழகி- வந்தாலே
சந்ததமும் சார்ந்த பதிவிரதை உன்னாலே
எந்தனுள்ளம் பொங்கும் இனிது

ஆசிரியப்பா
பல்நிறச் சேலையும் பார்புகழ் பவுணொடு
நெல்மணி வீட்டில் நிறையவே கூட்டுவன்
நல்லாளே நுண்ணிடைப் பெண்மையே
வல்லாளே வந்திடு வாழ்வின் துணையே!

கருமேனிச் சிலையே கிளியின் குரலே
இருவாழைத் தண்டின் இடையே உள்ளம்
உரசியே செல்லும் உயிரே கடைக்கண்
பிரியமாய்ப் பார்த்திடு பரிந்து?

அறுசீர் நெடிலடி ஆசிரிய விருத்தம்

இன்பமே பெண்ணே வாழ்வில்
இணைந்திடில் என்னுள் நீயும்
அன்றிலாய் வாழ்வோம் என்றும்
அன்பொடு கூடி மகிழ்ந்தே
சென்றிடும் அவைகள் எல்லாம்
சிறப்பொடு பேரும் ஓங்கி
குன்றென உயர்ந்தே வாழ்வோம்
குவலயம் போற்ற மாதே!