PDA

View Full Version : உன்னுள் உறைந்த இறைவனைத் தேடு! (ஆக்கம் அருட்கவி)



Arudkavi Ganesh
10-02-2014, 05:56 PM
வெண்பா
இறைவனைத் தேடி இகமெலாம் ஓடி
உறைவிடம் காணா உறவே- புறத்தே
அலைந்துமே புண்ணியம் இல்லையே ஆறி
அகத்திலே காண்பாய் அருள்!

ஆயிரம் பூசைகள் அர்ச்சனை ஏதற்கு
பாயிரமும் பண்ணும் எதற்கப்பா?- நீயிருந்து
அங்கமும் சிந்தையும் ஆழ்ந்து உருகிட
பொங்கும் இறையுரு பார்!

வேண்டுத லாயிரம் வேள்வி களாயிரம்
மாண்டுமே செய்தென்ன மானிடா-ஆண்டவன்
உன்னுள் இருப்பதைத் ஊன்றி உணரிடேல்
என்னதான் புண்ணியம் எண்?

யாத்திரை செய்தென்ன யாகமும் செய்தென்ன
நேத்திகள் வைத்தும் நெருங்குவையோ?- கூத்தன்தான்
நாத்திகன் நெஞ்சிலும் நன்றே உறைகிறான்
ஆத்மிக உண்மையே ஆம்.

தேடிப்பார் தேவனை தேகத்துள் ஒன்றான
ஆடித் துடிக்கும் இதயத்துள்- மாடி
மனையிலோ மற்றெவ் இடத்திலோ காணா
தனியின்பம் காண்பாய் தணிந்து.

கும்மி

அப்பனும் ஆத்தாளும் ஆக்கிய ஆக்கைக்குள்
ஆண்டவன் தானையா மூச்சுவைச்சான்
எப்போது வந்ததோ எப்போது போகுமோ
எத்தனை கூத்துகள் ஆடுகிறாய்!

என்றும் துடிக்குது என்பு மசையுது
என்றது நிற்குமோ யாரறிவான்
குன்றென ஓங்கும் கணித விழைவினால்
கூற்றுவன் செய்தொழில் காத்தனரோ?

உன்னுள் இருக்கிறான் உன்னை அசைக்கிறான்
உண்மைப் பரம்பொருள் உன்னுள்ளேதான்
பன்றியு மன்னமும் பாரெங்கும் தேடியும்
பார்த்தனரோ அந்தப் பரம்பொருளை?

பூத மடக்கியே பொய்யுடல் தன்னிலே
பூத்த இறைவனைத் தேடிடுவாய்
வாதமும் பேதமும் வேண்டாம் எமக்கையா
வாயாரப் பாடியே வென்றிடுவாய்!

அனுராகவன்
10-02-2014, 06:03 PM
அருமை நண்பா...