PDA

View Full Version : தமிழும் மரபும் தமிழரின் கண்களே? (ஆக்கம் அருட்கவி ஞானகணேசன் தம்பிஐயா



Arudkavi Ganesh
06-02-2014, 01:21 PM
வெண்பா

செந்தமிழ்ப் பேரறிஞர் சேர்தமிழ் மன்றினில்
எந்தனைப் பாடவைத்த ஈசனே- வந்தருள்வாய்
வானோங்க வண்தமிழ்ப்பா வாயார நான்பாட
தேனாம் தமிழினைத் தா!

ஆசிரியப்பா
தமிழையும் மரபையும் தாங்குதா தமிழினம்
இமிகடல் கடந்த எனதினம் எண்ணுவாய்!
அமுதெனப் பாடினோம் அன்னையாய் ஏற்றினோம்
எமதினம் இங்கு எல்லாம் மறந்ததே?

சிங்களர் கொல்கிறார் சிதைக்கிறார் மரபினை
எங்களின் இனத்தினை ஏழ்மையில் ஆழ்த்துறார்
பொங்கி எழுந்தரைப் பொசுக்கிறார் தீயினில்
அங்கு இனிமேல் அன்னைத் தமிழினம்
தங்கி வாழத் தகாத மண்ணென
இங்கு வந்து அகதி ஆனமே!

அந்த நினைவினை அறவே மறந்தா
சொந்த மொழிதனைச், சேர்ந்த மரபினை
வந்த இடந்தனில் வண்தமிழ் இனத்தவர்
பந்தம் இன்றிப் பாழாக விடுகிறார்?

தனதினத் திடையே தமிழில் பேசிலார்
எனதின மரபினை ஏற்றிட மறக்கிறார்
தனது மழலையே தாய்மொழி பேசிட
உணர்வொடு ஊட்டா(து) ஊரெலாம் ஓடுறான்!

எம்மொழி செம்மொழி ஏற்றம் மிகுந்தது
அம்மொழி மறப்பதும் அடுத்த தலைமுறை
இம்மொழிப் பண்புகள் இலக்கியம் தொலைப்பதும்
எம்மின அழிவே எண்ணிடு தமிழனே!

கும்மி

பண்டை அரசரை எண்ணிடுவோம் எங்கள்
பண்பு மரபெலாம் காத்திடுவோம்
என்று திரும்புமோ எங்கள் அரசென
ஏற்ற வழிவகை செய்திடுவோம்?

அன்று அனுராதக் கோட்டையில் நின்றுமே
ஆட்சி புரிந்தாரெம் செந்தமிழர்
சேனனும் குப்தனும் திசையனும் ஆண்டதை
செந்தமிழ்ச் சாதனம் காட்டுதுவே!

வெள்ளையர் கப்பத்தை வேண்டிடப் பண்டார
வன்னியன் வெகுண்டே போர்தொடுத்தான்
கிள்ளி அவர்தலை கீறி எறிந்துமே
வெள்ளையர் கொட்டம் அடக்கினனே!

வீரர் வழிவந்த வேங்கைத் தலைவனும்
பாரம் பரியத்தைக் காத்தவனே
ஆரும் தமிழ்மண் அணுகிடா வண்ணமாய்
ஆட்சி புரிந்தனன் ஈழத்திலே

அன்னைத் தமிழ்மக்கள் அத்தனை கோடியும்
அன்பொடு ஒன்றாய் இணைந்திடிலே
மண்ணும் மொழியும் மரபெலாம் காக்கலாம்
எண்ணித் திரளுக தோழர்களே!

மங்கல குங்குமம் மனையெலாம் நிறைந்து
திங்கள் முகத்துடன் தீந்தமிழ் பேசி
எங்கள் மரபொடும் எளிலாம் பண்பொடும்
பொங்கி மகிழுக புதுயுகம் காண்பமே!