PDA

View Full Version : வனஜா என் தோழி! - by முரளி



முரளி
27-01-2014, 01:05 PM
சின்ன வயது முதலே வனஜா என்னோட பெஸ்ட் பிரண்டு.

நாங்க ரெண்டு பெரும் ரொம்ப அன்னியோன்னியம். என் வீட்டுக்கு பக்கத்திலேதான் வனஜாவின் வீடும். என்னோட ஒன்று விட்ட அத்தை பெண் தான் அவள். ரெண்டு பேரும் ஒண்ணாதான் ஸ்கூல் போவோம். சாப்பிடுவோம். விளையாடுவோம். படிப்போம். அரட்டை அடிப்போம்.

இத்தனைக்கும், குணத்திலே நானும் அவளும் இரு துருவங்கள்.
நான் எப்பவுமே தைரியசாலி. ஆனால், அவள் எனக்கு நேரெதிர்.

வனஜாவிற்கு எதுக்கெடுத்தாலும், ஒரு பயம், வேண்டாத கவலை. அனாவசிய கற்பனையை வளர்த்துக் கொண்டு திகிலில் டென்ஷன் ஆகி விடுவாள். பதற்றத்திற்கு ஒரு ஸ்டாப் லாஸ் போடத்தெரியாது அவளுக்கு.


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcS3v2Ps6OHRnYQk3qDxEJacD3r7v8-ZNYvDz0SAm6ZX_5v-6h21



பஸ் ஸ்டான்டில் நின்று கொண்டிருப்போம். காலில் வெந்நீர் கொட்டிக் கொண்டது போல் தவிப்பாள். “ஏன் ராதா, பஸ் இன்னும் வரல்லியே, நாம ஸ்கூலுக்கு லேட் ஆயிடுவோமோ? மிஸ் முட்டி போடச்சொல்வாங்களோ? என்னப்பா பண்றது? என் அப்பாவை அழைச்சிகிட்டு வான்னு சொல்லிட்டா வீட்டிலே கொன்னுடுவாங்களே ?” .

சொல்லும்போதே வனஜாவுக்கு கண்களில் குளம் கட்டி விடும். தொண்டை அடைக்கும்.

நான் அவளை முறைப்பேன். “சும்மா வாடி . ஒண்ணும் ஆகாது! ருப்பாதே. பஸ் வரலேன்னா என்ன? வேகமா நட. நேரத்துக்கு ஸ்கூலுக்கு போயிடலாம். நான் இருக்கேன். கவலைப் படாதே”. நான் சொல்வதை கேட்டுக் கொண்டு ஆட்டு குட்டி மாதிரி என் பின்னால் வருவாள். கூடவே அவள் முனகலும் தொடரும். "என்ன ஆகுமோ தெரியலியே? என்ன பண்ணுவேன்?" . "உஷ்! கம்முன்னு வா!" நான் அதட்டுவேன். கப்சிப் என்று வருவாள். ரெண்டு நிமிஷத்திற்கு பிறகு திரும்ப அதே பல்லவி, வனஜா பாட ஆரம்பித்து விடுவாள்.

இது போல் நிறைய சம்பவங்கள். தெனாலி படத்தில் வரும் கமல் மாதிரி, வனஜாவுக்கு, எல்லாமே பயம். எதுக்கெடுத்தாலும் பயம்.

கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுசா மூடின கதவும் பயம். காடு பயம், நாடு பயம்,கூடு பயம் , குளம் பயம் , குளத்துக்குள் இருக்கும் நண்டு பயம், பூச்செண்டு கண்டாலும் பயம், சன கூட்டம் பயம் , தனிமை பயம், தொங்க பயம், தாவ பயம்., காசு பயம், மாசு பயம், தூசு பயம். அழுக்கு பயம், குளிக்க,பயம், ஆடை பயம், கடிக்கிற நாயும், பூனையும், பூனை திங்கிற எலியும் பயம். பயந்து பயந்து சாகிற சாதி.

அதனால் தானோ, என்னவோ, அவளுக்கு எப்போதும் என் துணை வேண்டும். என் ஆறுதல் பேச்சு அவளுக்கு தேவையாக இருந்தது. நாம் சொல்லும் சொல் சுடும், மற்றவர் மனதை புண்ணாக்கும் என்பார்கள். ஆனால், என் சொல், அவளது புண்ணான மனதுக்கு மருந்தானது. என்னோட இருப்பது அவளுக்கு பிடிக்கும். எனக்கும் அவளுக்கு துணையாக இருப்பது பிடித்திருந்தது.

பள்ளி இறுதி பரீட்சையின் போது, “ஏன் ராதா! நான் பிளஸ் டூலே நல்ல மார்க் வாங்குவேனா? இல்லே எனக்கு புட்டுக்குமா? என்ன ஆகுமோ தெரியலியே ? 98% கீழே வாங்கினா, அப்பா முகத்திலே எப்படி முழிக்கிறது? எங்க அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே? ஐயோ ! நினைச்சாலே மயக்கம் வரது ?” பயத்தில், வனஜா புத்தகத்தை மூடி வைத்து விடுவாள். ஊத்து மாதிரி கவலை அவளை அரிக்கும்.

”சும்மா டர் ஆகாதே வனஜா. நீ கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவே,உனக்கு பிடிச்ச படிப்பிலே சேருவே! பேசாம, கவலைய விட்டு இப்போ படி”.

நல்ல மார்க் ரெண்டு பேருமே வாங்கினோம். கேட்ட காலேஜ் ரெண்டு பேருக்குமே கிடைத்தது. நான் பொறியியல் துறை. அவள் பீ காம்.

அடிக்கடி அவள் கேட்கும் கேள்வி இது “ஏன் ராதா, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு! நிஜமா சொல்லு, எனக்கு கல்யாணமாகுமா? நான் ஒன்னும் கலர் இல்லியே. என் தல முடி வேறே கம்மி. என்னை எவன் பண்ணிக்குவான்? இல்லே இப்படியே தனியாவே நின்னுடுவேனோ? எல்லாரும் என்னை கேலி பண்ணுவாங்களே? எப்படி ராதா, என் பிரண்ட்ஸ் முகத்திலே விழிப்பேன்?”

“தோடா, வனஜா, சும்மா சீன் போடாதே! உனக்கென்ன குறைச்சல், கல்யாணம் கட்டாயம் ஆகும். மம்முட்டி மாதிரி அழகா ஒருத்தன் உன்னை கொத்தி கிட்டு போக வருவான் பார். அப்போ என்னை மறந்துடாதே தாயே!”

அவள் மெல்லியதாக சிரிப்பாள். “சும்மா கோட்டா பண்ணாதே ராதா! உன்னை எப்படி மறப்பேன் ? ”

வழக்கம் போல, அவளது தேவையற்ற பயம் பொய்த்து விட்டது. அவளுக்கு அவளது இருபதாவது வயதிலேயே திருமணமாகி விட்டது. வீட்டில் பார்த்து பார்த்து கல்யாணம் செய்து விட்டார்கள். அவள் படிப்புக்கு ஒரு புல் ஸ்டாப். அவள் திருமணத்தின் போது நான் இந்தியாவிலேயே இல்லை. கானடாவில் படிக்கப் போய்விட்டேன்.

அவளது திருமணத்திற்கு முன்பாவது அடிக்கடி போனில் பேசுவோம். அவள் புகுந்த வீடு போனவுடன், கேட்கவே வேண்டாம், அவளுக்கும் எனக்கும் சுத்தமாக தொடர்பு இல்லாமலே போய்விட்டது.

ஆனால், அவள் நினைவு மட்டும் என்னை விட்டு அகலவில்லை. அவளது பிரிவு என்னை ரொம்ப நாள் வாட்டியது. அவளுக்காக, அவளது அருகாமைக்காக, எனது மனம் ஏங்கியது. இரவில் தனிமையில் இருக்கையில், அவளை நினைக்காத நாள் இல்லை

இருந்தாலும், அவளது புகுந்த வீட்டில், அவளைத் தொடர்பு கொள்ள எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. என்ன நினைத்துக் கொள்வார்களோ? புகுந்த வீடு கொஞ்சம் கட்டுப்பெட்டி குடும்பம் எனக் கேள்விப் பட்டேன்.

வனஜாவும் என்னை தொடர்பு கொள்ள வில்லை. கணவனுடன் ஒன்றி விட்டாள் போலும். என்னை மறந்து விட்டாள் எனவே தோன்றியது. எனது நினைவே அவளுக்கு அகன்று விட்டதோ என்னவோ? கொஞ்சம் கொஞ்சமாக எனது இதயத்தையும் கல்லாக்கி கொண்டேன்., கால ஓட்டத்தில், புதிய நட்பு, அனுபவங்கள், நானும் அவளை மெதுவாக மறந்து விட்டேன்.

***

முப்பது வருடம் போனதே தெரியாமல் போய்விட்டது. உத்தியோகம், வேலை, கனடா வாழ்க்கை ஓட்டமாக ஓடி விட்டது. சொல்ல மறந்து விட்டேன், நான் திருமணம் செய்து கொள்ள வில்லை. விருப்பம் இல்லை.

திடீரென, எனக்கு அலுவலக வேலையாக, சென்னை வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னை வந்த வுடனே, வனஜாவை பார்க்க ஆவல் ஏற்பட்டது. எப்படி இருக்கிறாளோ? என்னை நினைவு வைத்திருப்பாளோ? விலாசத்தை கண்டு பிடித்து, அவளை பார்க்க முடிவு செய்தேன். அவளை பார்க்க ஒரு வாய்ப்பு தேடி மனம் பரபரத்தது.

***

சென்னையில், பார்க் ஹோட்டலில் என் செமினார் முடிந்தவுடன், அவளை பார்க்க நேராக மயிலாப்பூர் போனேன். அவளது வீட்டின் முன் காரிலிருந்து இறங்கினேன்.

வாசலில், ஒரு தலை நரைத்த குண்டு மாமி என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்த உடனே எனக்கு அடையாளம் தெரிந்து விட்டது. அது என் வனஜாதான்.

“ஹலோ வனஜா! எப்படி இருக்கே? நான் யார் சொல்லு பார்க்கலாம்?”

“யாருன்னு தெரியலியே, நீங்க,.. நீ, ராதா தானே? அடேடே, அடையாளமே தெரியலே? அட்டகாசமா இருக்கே! வா, வா! உள்ளே வா. உக்காரு, காபி போடட்டுமா? ”. என்னை மீண்டும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.

“அப்புறம் சாப்பிடறேன். நீ முதல்லே இங்கே வந்து உட்காரு ! நீ மட்டும் என்ன? ரொம்ப தான் மாறியிருக்கே! போய் நிலைக் கண்ணாடிய பார். ஆமா, ஏன் வனஜா இப்படி வெயிட் போட்டுட்டே?”

‘அதை ஏன் கேக்கிறே ராதா ? என்ன பண்ணினாலும் வெயிட் குறையலே. இதிலே மூட்டு வலி, ரத்த அழுத்தம், போதாக் கொறைக்கு இப்போ அல்சர் வேறே! நோய்க்கு குறையே இல்லே ! எவ்வளவு நாள் இந்த ஆண்டவன் எனக்கு போட்டு வச்சிருக்கானோ? ஆமா, நீ என்ன காய கல்பம் சாப்பிடறியா என்ன? பாத்தா இவ்வளவு ஸ்மார்ட்டா தெரியரே? ஒல்லியா, அன்னிக்கு பார்த்தா மாதிரியே ! எப்படி? ”

நான் இடை மறித்தேன். “அதெல்லாம் விடு, என் கதை அப்புறம் ! நீ என்ன பண்றே? அதை சொல்லு முதல்லே. எத்தனை பசங்க உனக்கு? என்ன பண்றாங்க?உன் வீட்டுகாரர் என்ன பண்றார்?”

“ என்னத்தை சொல்றதுப்பா ? ரெண்டு பசங்க. ஆனால், ஒரே பிரச்னை . என் பையன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறான், வீட்டிலே ஒரே சண்டை. என் பொண்ணுக்கு இன்னும் குழந்தை பிறக்க வில்லை ! போகாத கோயில் இல்லை. என் பசங்க ரெண்டு பெரும் இப்படியே இருந்துடுவாங்களோன்னு ஒரே கவலையா இருக்கு ராதா !. வம்சமே இல்லாம போயிடும்னு நினைச்சா பயமா இருக்கு. யார் கிட்டே சொல்லி அழறது ? என் வீட்டுக்காரரா எதையும் காதிலே போட்டுகறதே இல்லை ! என்ன பன்னரதுன்னே தெரியலே! ”. விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது. ஒன்று மட்டும் தெரிந்தது. அவள் மாறவேயில்லை.

“ ஒண்ணும் ஆகாது, அது அவங்க பிரச்சனை. அவங்க பார்த்துப்பாங்க . சின்ன பிள்ளைங்க தானே ! நேரம் வரும்போது எல்லாம் கூடி வரும். நீ இப்போ கவலைப் பட்டு என்ன பிரயோசனம்? பேசாம விடு. எல்லாம் நல்லாவே நடக்கும்” - நான் தைரியம் சொன்னேன்.

“என்னமோ, நீ சொல்றே, நடக்குமான்னு தான் தெரியலை. போகட்டும், நீ எப்படி இருக்கே உனக்கு எத்தனை பசங்க ? தனியாவா சென்னை வந்தே? வேறே யாரும் வரலே ? ”

“எனக்கு ஏது குழந்தை ? எனக்குதான் இன்னும் கல்யாணமே ஆகலியே!” சிரித்தேன்.

“ஐயையோ ! என்ன , கூத்து இது ! நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? எனக்கு தெரியாதே? ”

“வேண்டாம்னு தோணித்து. எதுவும் சரியா அமையலை . அதனாலே பண்ணிக்கலை”

“அட பாவமே! என்ன அநியாயம் ராதா இது! உன் வாழ்க்கையை இப்படி வீனாக்கிட்டியே! அந்த ஆண்டவன் உன் வாழ்க்கையிலே இப்படி விளயாடிட்டானே ! இப்போ என்னப்பா பண்றது ? பெருமாளே! ” – கப்பலே கவிழ்ந்தது போல, வனஜா தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

“ஏய், வனஜா! ஸ்டாப் ஸ்டாப்! , நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். நீ என்னை பத்தி கவலைப் படறதை முதல்லே நிறுத்து”

“அதெப்படி ராதா முடியும்?உன் வாழ்க்கையே இப்படி சூனியமாயிடுத்தே! எனக்கு தாங்கலையே! இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே ! ஐயோ! “ சொல்லும்போதே வனஜாவின் குரல் கரகரத்தது. கொஞ்சம் விட்டால், திரும்பவும் மூக்கை சிந்துவாள் போல இருந்தது.

“வனஜா! கொஞ்சம் ஓட்டறதை நிப்பாட்டரயா? ப்ளீஸ். நான் கானடாவிலே இப்போ ஒரு ப்ரொபசர். நிறைய வெளி நாடு போக வேண்டியிருக்கும். வீட்டை பார்த்துக்க முடியாது. எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் கொஞ்சமும் இல்ல. இப்படியே இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. போதுமா!”

“அப்படி சொல்லாதே ராதா, இப்படி தனி மரமா நிக்கறியே? நான் வேணா உனக்கு இங்கே நல்ல இடமா பாக்கட்டுமா?“

எனக்கு சிரிப்பு தான் வந்தது. இவளது அல்சருக்கு காரணம் இவளே. இவளை திருத்தவே முடியாது. கவலைப் பட இவளுக்கு ஏதாவது காரணம் வேண்டும். இன்னிக்கு நான் கிடைத்தேன் ! இப்போ வனஜா, எனக்கு , இந்த 49 வயது அரைக்கிழவிக்கு மாப்பிள்ளை தேடப் போகிறாள்.


****முற்றும்


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS0vIC2f_d3vWuvBQ3KRXVIrLgHH5QgfD8MCiNWH6dvWDm21nx1

dellas
28-01-2014, 10:18 AM
வாழ்த்துக்கள்.

பயந்தது நன்றாகவே இருக்கிறது.

முரளி
02-02-2014, 08:55 AM
நன்றி டல்லஸ்.

கும்பகோணத்துப்பிள்ளை
05-02-2014, 12:34 AM
எதையும் தன்னில் ஆரம்பித்தே யோசிக்கும் குணம் போலிருக்கிறது வனஜாவிற்க்கு
ஆனால் தான் பெற்றதை தோழியும் பெறவேண்டுமென நினைப்பில் நல்ல மனது தெரிகிறது.

நம் கோபதாபங்கள் நம் உடலையும் கெடுக்கும் என்பதை உங்கள் கதை சொல்கிறது
தொட்டில் பழக்கம்! சுடுகாடுவரை! இதற்கு சம்பந்தமுள்ளதோ!

முரளி
06-02-2014, 11:47 AM
நன்றி கும்பகோணத்து பிள்ளை. நீங்கள் சொல்வது சரியே. டெங்கு ஜுரம், மலேரியா காய்ச்சல், புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு, ஏன் எய்ட்ஸ் பற்றி கூட தெரிந்து வைத்திருக்கிறோம், ஆனால் கவலை பற்றிய விழிப்புணர்வு நமக்கு கொஞ்சம் குறைவு என்றே தோன்றுகிறது.

'நம் கோபதாபங்கள் நம் உடலையும் கெடுக்கும்' என்று அழகாக சொன்னீர்கள்.

நானும் இந்த அர்த்தமற்ற பயம், கோபத்துக்கு அடிமை. நிறைய பட்டிருக்கிறேன்.

சொர்க்கத்தில் ரோஜாக் கூட்டத்தில் நடுவே இருக்க வேண்டும் என கனவு காணும் மனிதர், ஆனால், வீட்டு ஜன்னலுக்கு எதிரே பூத்துக் குலுங்கும் ரோஜாவைப் பார்க்க தவறுகிறோம் என்று ஒரு அறிஞர் சொன்னார். அது சரிதானே! வாழ்கையை வீணடிக்கிறோம் வேண்டாத கவலையினால்.

நம்மை அரிக்கும் கவலையே காரணம் வயிற்றில் புளியை கரைக்க. அதுவே காரணம் அல்சருக்கு. நமது சாப்பாடு, காரம் இதெல்லாம் முக்கிய காரணமில்லையாம். இது இன்னொரு ஆங்கில அறிஞர் சொன்னது.

NaanMadhu
10-02-2014, 08:25 AM
நல்ல கதை சரளமான நடை

பயம் என்பது அதீத ஆசையின் அடையாளம் என்பதும், அதுவே தன் குறிக்கோளை அடைய வைக்கும் பெரும் உந்து சக்தி என்பதும் புரிகிறது

NaanMadhu
10-02-2014, 08:26 AM
நல்ல கதை சரளமான நடை

பயம் என்பது அதீத ஆசையின் அடையாளம் என்பதும், அதுவே தன் குறிக்கோளை அடைய வைக்கும் பெரும் உந்து சக்தி என்பதும் புரிகிறது

முரளி
12-02-2014, 08:07 AM
நன்றி நான்மது

மும்பை நாதன்
31-03-2014, 05:20 PM
ஒரு நல்ல நட்பை, தைரியமூட்டி உற்சாகப்படுத்தும் நட்பை தக்க வைத்துக்கொள்ளும் உத்திகளுள் உள்மனது தரும் பயமும் ஒன்றோ ?
இதே வனஜா தன் குடும்பத்துக்குள்ளும் யாரோ ஒரு உறுப்பினரிடமிருந்து முன்பு ராதா தந்தது போன்ற தைரியத்தை பெற்றுக்கொண்டிருப்பாரோ ?
ஆனால் நான் வாழ்க்கையில் சந்தித்த சிலர் இத்தகைய பயங்களை சில அனுபவங்களுக்குப் பிறகு வெற்றி கண்டிருக்கின்றனர்.
அன்றாட வாழ்வில் சில சமயம் சந்திக்கும் ஒரு பாத்திரமாகவே வனஜாவின் நிலை இருக்கிறது.
படைப்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி, முரளி.

முரளி
09-04-2014, 02:04 PM
நன்றி மும்பை நாதன்...

பாவூர் பாண்டி
10-04-2014, 09:34 PM
கதை அருமை..
நடை நன்றாக உள்ளது...

முரளி
25-07-2014, 05:16 AM
நன்றி பாவூர் பாண்டி.