PDA

View Full Version : குறள் + குறள் = வெண்பா



M.Jagadeesan
23-12-2013, 03:34 PM
பா வகைகளில் வெண்பா புனைவது கடினம் என்று சொல்வார்கள். புகழேந்திப் புலவரின் நளவெண்பா, ஒளவையாரின் நல்வழி, மூதுரை ஆகிய நூல்கள் , வெண்பா புனைய முற்படுவோர்க்குப் பெருந்துணையாக அமையும். வெண்பா இலக்கணத்தைக் கற்பதற்கு முன்பாக , இந்நூல்களைப் படிப்பதன் வாயிலாக , வெண்பாவின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். அடுத்து திருக்குறளைப் படிக்கவேண்டும். திருக்குறள் என்பது குறள் வெண்பாக்களினால் ஆன நூல் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வெண்பா புனையும் கலையை , ஒரு விளையாட்டாகவே எண்ணி, அதை எளிதில் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம். திருக்குறளில் ஏதேனும் ஒரு அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒத்த கருத்துடைய இரு குறட்பாக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்விரண்டு குறட்பாக்களையும் தனிச்சொல் சேர்த்து , ஒரு வெண்பாவை உருவாக்குங்கள். இந்த விளையாட்டின் வாயிலாக வெண்பாவின் இலக்கணத்தைக் கற்பது மட்டுமன்றி, திருக்குறளையும் பொருளுணர்ந்து கற்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

கீழ்வரும் காட்டுகள் இரண்டு குறட்பாக்களை எவ்வாறு இணைப்பது என்பதைத் தெளிவாக்கும்.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது- பசும்பொன்னே!
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு-அருநிதியே!
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.


அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலினூங் கில்லை கேடு- மறவாதே!
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று- பனிமலரே!
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

அனுராகவன்
17-08-2014, 02:48 AM
அருமை ஐயா...தொடருங்கள்.....