PDA

View Full Version : பாரதியின் கவிதைகளில் மிகவும் பிடித்தது...



perumald
18-12-2013, 01:03 PM
தங்களுக்கு பாரதியின் கவிதைகளில் மிகவும் பிடித்தவைகளை இங்கு பதிவிட வேண்டுகிறேன்...

எனக்கு பிடித்தவை:

தேடி சோறு நிதம் தின்று
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?


ஆசை முகம் மறந்து போச்சே

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ (ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் (ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி (ஆசை)

பாவூர் பாண்டி
18-12-2013, 07:02 PM
தமிழ்மொழி வாழ்த்து

தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே
1. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

2.
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

3.
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

4.
எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!

5.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

6.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

7.
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

8.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

பாவூர் பாண்டி
18-12-2013, 07:08 PM
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினது பே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

perumald
19-12-2013, 03:33 AM
நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி!
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

perumald
19-12-2013, 03:36 AM
நெஞ்சில் உரமுமின்றி

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

veruppuvijay
19-12-2013, 12:11 PM
அள்ளிப் பருகிய நதி நீரின் எப்பகுதி சுவையெனக் கூற?
பருகிய அனைத்துமே சுவையெனக் கண்டேன்..

பாவூர் பாண்டி
19-12-2013, 09:38 PM
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.