PDA

View Full Version : நதிகளின் நடுவே பாயும் நிலம் -2



ஆதி
10-12-2013, 02:16 AM
கடவுளி(ள்களி)ன் ஆதியை தேடி - Mesopotamia

வணக்கம் உறவுகளே,

உலகளாவி பரவி வியாபித்திருக்கும் பெரும் மதங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் குறிப்பிட்டவர்களால் பின்பற்றப்படும் மதங்களான பாஹாய், ஜூதியம் மற்றும் பொது உடமை கொள்கையாய் சிவந்திருக்கிற மார்க்ஸியம் அனைத்தின் ஆதியும் மெசபதோமியாவில் புதைந்து கிடப்பதாய் எனக்கொரு நம்பிக்கை. எனது நம்பிக்கை சரியானதா தவறானதா என்பதை அறிந்து கொள்ள ஒரு தேடலை துவங்கி இருக்கிறேன். அந்த தேடலில் கண்டெடுப்பதை எல்லாம் இந்த திரியில் உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த தேடலில் பல நம்பிக்கைகளின் பின் புலத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளி கொண்டு வர வாய்ப்பிருக்கிறது, அது யாரையும் புண்படுத்த அல்ல, உண்மையான வரலாற்றை திரிக்காமல் உள்ளபடி பதிய விரும்புகிறேன்.

இதுவரை தேடியதில் சில ஆட்சர்யமான விடயங்களையும் உண்மைகளையும் அறிந்து கொண்டேன், அவை வியப்பை மட்டுமல்ல அதிர்ச்சியையும் தந்தன. அனைத்தையும் வரும் நாட்களில் இந்த திரியில் பதிவிடுவேன் என்றாலும் போக வேண்டிய தூரம் நெடியது என்பதால் ஆமையை காட்டிலும் குறைவான வேகத்திலேயே இந்த திரியில் பதிவுகள் இடம் பெரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி.

ஆதி
10-12-2013, 04:27 AM
நதிகளின் நடுவே பாயும் நிலம் -1

திகிரிஸ் மற்றும் யூஃப்ரத்தீஸ் நதிகளின் பெரும்பள்ளத்தாக்குகள் அங்கே முகிழ்ந்த தொல்நாகரிகத்தை பற்றிய சாட்சியங்களாக உறைந்திருக்கின்றன. அந்த தொல்நாகரிகத்தவர் தான் இந்த பூவுலகின் முதல் விவசாயிகளாக சரித்திரத்தால் கருதப்படுக்கின்றனர். அந்த தொல்நாகரீகத்தவர் தான் இந்த பூவுலகின் முதல் மாநகரம் மற்றும் பேரரசின் குடிகளாக கருதப்படுகின்றனர். அவர்களின் கலைகளின், கைவிணைகளின், அரசியலின், இராணுவத்தின், சமயத்தின் தாக்கங்கள் நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட பின்னரும், இன்றும் நம் வாழ்வில் பெருவாறியாக படிந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்புக்களுக்குரிய அந்த தொல்நாகரிகத்தவர் மெசபதோனியர்.

இந்த பூவிலகின் நிலப்பரப்பில் எக்காலத்திலும் மெசபதோமியா என்றொரு தேசம் இருந்திருக்கவில்லை, என்றாலும் மத்திய கிழக்கின் நடுவில் மிக பெரும்நிலப் பரப்பொன்று விரிந்து கிடந்தது, அதுதான் மெசபதோமியா என்று அழைக்கப்பட்டது. மெசபதோமியா என்பது கிரேக்க சொல்லின் பொருள் "நதிகளுக்கு நடுவில் இருக்கும் நிலம்"(இந்தியாவிலும் இப்படி பொருள்பட பெயர் கொண்ட ஒரு பகுதி இருந்தது, அது பற்றி வேறொருநாள் விவரிக்கிறேன்) . திகிரிஸ் மற்றும் யூஃப்ரத்திஸ் நதிகளின் இடையில் அந்த பரப்பு படர்ந்து விரிந்திருந்ததால் கிரேக்க அறிஞர் பொலிஸியஸ் அதனை மெசபதோமியா என்று அழைத்தார். இந்த இரு பெருநதிகளும் துருக்கியின் தென்பகுதியில் இருந்து பாய்கின்றன. இந்த நதிகள் ஏதேன் தோட்டத்தில் இருந்து பாய்ந்ததாக விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


ஏதேன் வனத்திற்குப் பாய ஒரு நதி அவ்வனத்திலிருந்தே புறப்பட்டு, அங்கிருந்து நான்கு தலையான ஆறுகளாகப் பிரிந்து போகிறது.
அவைகளில் ஒன்று பீசோன் என்பதாம். அது பொன் விளையும் பூமியாகிய எவிலாத் நாட்டையெல்லாம் சுற்றி ஓடுகிறது.
அந்நாட்டில் விளையும் பொன் மிகச் சுத்தமானது. அதுவுமின்றிக் குங்கிலியமும் ஒருவிதக் கோமேதக் கல்லும் அங்குக் கிடைக்கின்றன. இரண்டாம் ஆற்றின் பெயர் யெகோன். இதுவே எத்தியோப்பிய நாடு முழுவதையும் சுற்றிச் செல்கிறது. திகிரிஸ் என்பது மூன்றாம் ஆற்றின் பெயர். இது அசீரிய நாட்டை நோக்கிச் செல்கிறது. நான்காம் ஆற்றின் பெயர் யூஃப்ரத்தீஸ்

தொடக்கநூல் (2:10_14)

இன்று நீங்கள் மெசபதோமியாவை காண விரும்பினால், ஈராக், சிரியா, பெர்ஸியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளுக்கு நீங்கள் பயணிக்க வேண்டும். இன்றும் ஈராக்கில் சுமேரியகளின், பாபிலோனியர்களின், ஆசிரியர்களின் மற்றும் பாரசீகர்களின் மாநகரங்கள் மெசபதோமியாவின் மௌன சாட்சியங்களாக நிற்கின்றன.

மெசபத்தோமியாவின் செழிப்பான தாழ்வு நிலப்பகுதி சுமேர் என்று தொல்காலத்தில் அழைக்கப்பட்டது. இது பெரும்நாகரிகத்தை தோற்றுவித்த முதல் மக்களான சுமேரியர்களின் வாழ்நிலமாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, இந்த பகுதி பாபிலோனியா என்று அழைக்கப்பட்டது. பாபிலோனியா என்ற பெயர் மெசபதோமியாவின் தென்பகுதியில் முகிழ்ந்த பெரும் மாநகரான பாபிலோன் என்பதில் இருந்து வந்தது.

மெசபதோமியாவின் வடமேற்கு பகுதிகள் மேட்டுநிலங்களாக இருந்ததன, அதனை முதலில் அகாட் என்று அழைத்தார்கள். அந்த பகுதி அசிரியர்கள் எனும் போர் விரும்பி மக்களால் பல நூற்றாண்டுகள் ஆளப்பட்ட பிறகு அசிரியா என்று பெயர் பெற்றது. அதன் பிறகு வந்த காலத்தில் மெசபதோனியாவின் தாழ்பகுதியும் மற்றும் மேட்டுபகுததியும் ஒருங்கே இணைத்து பாரசீக பேரரசால் ஆளப்பட்டது. பொதுமை பேரூழிக்கு முன் 4000(பொ.பே.மு) முதல் 300(பொ.மே.மு) வரை சுமேரியர், பாபிலோனியர், அசிரியர், பாரசீகர் மற்றும் இன்னும் பலர் வாழ்ந்த நிலமாக திகழ்கிறது மெசபதோனியா.

தொடரும்..

ஆதி
11-12-2013, 06:26 AM
நதிகளின் நடுவே பாயும் நிலம் - 2




புரளும் நதிகளுக்கு மத்தியில் விரிந்த நிலத்தில் சுமேரியர், பாபிலோனியர், அசிரியர் மற்றும் பாரசீகர்களுக்கு, முன்பே மூத்தக்குடிகள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பெயரோ அவர்கள் எங்கே பெயர்ந்தார்கள், அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று அவர்களைப் பற்றிய மற்ற பிற தகவல்களோ வேறெதுவும் கண்டறியப்படவில்லை. அந்த முந்தையர்கள் வாழ்ந்த பரப்பை வரலாற்று ஆசிரியர்கள் செழிப்பான பிறையுரு நிலம் என்று வர்ணிக்கிறார்கள்.அந்த பிறைவுரு நிலம் காடுகள் செறிந்த மலைகளோடும், நீராதாரம் மிக்க பள்ளத்தாக்குகளோடும் மற்றும் வளமான மண் கொண்டதாகவும் இருந்ததால், இந்த பூவுலகின் மூத்த விவசாயிகள் அந்த நிலப்பகுதியில் குடியேறி வாசித்திருக்கிறார்கள். என்றாலும் வரலாற்று ஆய்வாளர்களால் இந்த தொல்லோர்கள் எந்த காலக்கட்டத்தில் வேட்குவ திரட்டி வாழ்க்கை முறையிலிருந்து விலகி வேளாண் வாழ்க்கை முறைக்குள் நுழைந்தார்கள் என்பதை இதுவரை அறுதியிட்டு கூற இயலவில்லை. அவர்கள் பொதுமை பேரூழிக்கு முன் 12000(பொ.பே.மு) முதல் 11000(பொ.பே.மு)வரையிலான காலப்பகுதிகளுக்குள் வேளாண் வாழ்க்கை முறைக்கு பெயர்ந்திருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கிறார்கள்.

கற்காலப்பகுதியை வரலாற்று ஆய்வாளர்கள், பழங்கற்காலப்பகுதி மற்றும் புதுக்கற்காலப்பகுதி என்று இரண்டாக பிரிக்கிறார்கள். பழங்கற்காலப்பகுதியில் ஆதிமனிதர்கள் ஒரு நிலை வாழ்விடத்தில் இருப்பு கொள்ளாமல், பெயர்வு வாழ்க்கை முறையை கொண்டிருந்தார்கள். உணவுக்கான அவர்களின் தொழில் வேட்டையாடுவதும், பழங்களை சேகரிப்பதுமாகவே இருந்தது. இதனை பழங்கற்காலம் என்று வரலாற்றாளர்கள் அழைக்கிறாகர்கள். பழங்கற்காலப்பகுதி பொதுமை பேரூழிக்கு முன் 25 லட்சம் முதல் 11000 காலப்பகுதி வரை இருக்க கூடும் என்கிறார்கள். வேட்டை தொழில் இருக்கும் ஆபத்துக்களையும், பெயர்வு வாழ்க்கையில் இருக்கும் பாதுக்காப்பற்ற நிலையையும் கருத்தில் கொண்டு, ஒரு நிலையான இடத்தில் குடியேறி வேளாண்மை தொழிலை மேற்கொண்டார்கள். இதனைத்தான் புதுக்கற்காலம் என்று கூறுகிறார்கள் வரலாற்றாளர்கள். புதுக்கற்காலம், பொதுமை பேரூழிக்கு முன் 11000 முதல் 4000 வரையிலான காலப்பகுதி என்கிறார்கள். பொதுமை பேருக்கு முன் 4000 வருடத்தில் இருந்துத்தான் நாகரிகங்கள் தோன்ற ஆரம்பித்தன என்பது வரலாற்றாளர்களின் நம்பிக்கை. மெசபதோமியவின் நாகரிகமும் இந்த காலப்பகுதியில் தான் ஆரம்பித்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியது பொதுமை பேரூழிக்கு முன் 2700 வருடக் காலப்பகுதியாக கணிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

வேளாண்மை தொழிலை மேற்கொண்டதன் மூலம் நிலையான இருப்பிடத்தையும், போராட்டமில்லாமல் உணவையும் பெற முடிந்தது. பிறகு சிறு கிராமத்தை உருவாக்கி அதில் வாழ்ந்தார்கள், அங்கே கைவிணை பொருட்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளை செய்ய துவங்கினார்கள். அவர்களின் அந்த புது வாழ்க்கை முறை சிறப்பானதாக மாறியது, என்றாலும் மக்கள் தொகையும் அதிகரிக்க துவங்கியது, அதன் பொருட்டு உணவு பற்றாக்குறையும் உண்டானதின் காரணமாய், சிலர் செழிப்பான பிறையுரு நிலத்தில் இருந்து, மெசபத்தோமியாவின் சமவெளிப்பகுதிக்கு குடிப்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கிட்டத்தட்ட பொதுமை பேரூழிக்கு முன் 6000 முதல் 5000 வரையிலாக காலப்பகுதிகளுக்குள் அவர்கள் மெசபத்தோமியாவின் சமவெளிப்பகுதிக்கு பெயர்ந்திருக்க வேண்டும். அவர்கள் பிறையுரு நிலத்தின் மூதாதைகளை காட்டிலும் தங்கள் வாழ்க்கையை சமவெளிப்பகுதியில் சிறப்பானதாய் மேம்படுத்திக் கொண்டார்கள். புது தொழில்நுட்பங்களை உருவாக்கினார்கள்.


வாருங்கள், செங்கல் அறுத்துச் சூளையிலிட்டுச் சுடுவோம் என்று பேசிக்கொண்டு, கருங்கல்லுக்குப் பதிலாகச் செங்கற்களையும், சாந்துக்குப் பதிலாகத் தாரையும் பயன் படுத்தினர்.

தொடக்கநூல் (11:3) விவிலியம்

இன்றும் ஈராக்கில் வீட்டின் சுவர்களில் மெழுக தார் பயன்படுத்தப்படுகிறது. அவர்களின் மிக பெரும் வளர்ச்சிக்கு, திக்ரிஸ் மற்றும் யூஃப்ரத்தீஸ் நதிகள் அசைக்க முடியாத உறுதுணையாய் இருந்தது. அவர்கள் வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாய்ச்சும் முறையை கற்றுக் கொண்டார்கள். வேளாண் நிலங்களை விரிவு படுத்தி, நதிகளில் இருந்து கால்வாய்கள் வெட்டி நீரப்பாசன வசதியை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால அவர்களின் உணவு உற்பத்தி அதிகரித்தது, அதனோடு சேர்ந்து அவர்களின் மக்கள் தொகையும் அதிகரித்தது. இதன் காரணமாய் சில கிராமங்கள் ஆயிரம் மக்கள் கொண்ட நகரங்களாய் மாறியது. ஊர், எரிடூ மற்றும் ஊருக்கு போன்ற சில நகரங்களை பாரசீக வளைகுடாவிற்கு அருகே உருவாக்கினார்கள். "ஊர்" என்பது தான் ஆபிரகாமின் பிறந்த ஊர் என்கிறது விவிலியம்.

ஆரான்(ஆபிரகாமின் சகோதரன்ன்) தன் பிறப்பிடமாகிய ஊர் என்னும் கால்தேயர் நாட்டு நகரில் தன் தந்தையாகிய தாரே இறக்கு முன்பே இறந்தான். பின்னர் ஆபிராமும் நாக்கோரும் மணம் செய்து கொண்டார்கள். ஆபிராமின் மனைவியின் பெயர் சாறாயி. நாக்கோரின் மனைவிக்கு மெல்காள் என்பது பெயர். இவள் ஆரானின் மகள். இந்த ஆரான் மெல்காளுக்கும் எஸ்காளுக்கும் தந்தை.

தொடக்கநூல் (11:28_29)

மெசபதோமியாவின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம், இந்த தென்பகுதி நகரங்களில் இருந்துதான் எழுச்சி கொண்டது, என்றாலும் சுமேரியர்களின் ஆதிப்புள்ளி எது என்பதை அறிஞர்களால் தெளிவாக கூற இயலவில்லை.

தொடரும்..

முத்துக்குமார்
14-05-2014, 04:32 PM
அருமையான செய்திகள் ஆதி. தொடருங்கள்....

ஜான்
15-05-2014, 02:21 AM
தொடருங்கள் ஆதி

kochadaiyan
15-05-2014, 05:49 AM
தொடருங்கள் ஆதி

இராஜேஸ்வரன்
16-05-2014, 03:38 PM
அருமையான பதிவு. தொடருங்கள் நண்பரே.