PDA

View Full Version : இளைஞர் புராணம்ரமணி
10-12-2013, 01:31 AM
அன்புடையீர்!

இன்றைய இளைஞர்கள் நம் புராண இதிகாசக் கதைகளை வெறும் கற்பனையென ஒதுக்கி
அவற்றில் உறையும் தத்துவங்களை அறியாது இருக்கின்றனர். இந்த நிலை கொஞ்சம் மாற
ஒரு சிறு முயற்சியாக வாரியார் சுவாமிகள் விளக்கிய ’விநாயக மூர்த்தி கனி பெற்ற’ கதையைக்
கவிதையில் தரலாம் என்று தோன்றியதில் எழுந்ததே இந்தப் படைப்பு. இதுபற்றிய அன்பர்களின்
நிறை-குறை கருத்துகளை வரவேற்கிறேன்.

அன்புடன்,
ரமணி

ரமணி
10-12-2013, 01:34 AM
இளைஞர் புராணம்
1. ஞானமே கனியாக
ரமணி

பாயிரம்

ஆனைமுகன் ஆறுமுகன் ஆன்மவொளி தந்தருள்வீர்
தானெனுமென் பற்றைத் தணிவித்தே - நானுமிந்த
நானிலத்தில் நாடுகின்ற நன்மையெலாம் தந்தேயென்
ஈனங்கள் குன்றச்செய் வீர். ... 1

கரிமுகன் கந்தன் கனியது வேண்டும்
அரிய கதையினில் ஆர்த்திடும் அர்த்தம்
அருமுனி வாரியார் தந்ததைப் பாட்டில்
உருசெயக் கொண்டேன் உளம். ... 2

முன்னாளில் ஏதும் ஒழுங்கில் முயலாமல்
சின்னாட்க ளாகவே செய்யுளியல் கற்கும்நான்
என்னாலே ஆவதெனச் செய்திடும் பாக்களின்
வின்னம் பொறுத்தருள் வீர். ... 3

விநாயக மூர்த்தி கனிபெற்ற வரலாறு
அறுசீர் விருத்தம்
(கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. கூவிளம் கருவிளம் கூவிளங்காய்)

கனியது எனக்கே!

முன்னொரு யுகமதில் ஆயிரம் நரம்புகள்
. முன்னுறும் மகதியாம் யாழிசைத்தே
இன்னருங் கனியென மாதுளங் கனியினை
. தேவரின் முனிவராம் நாரதரும்
பன்மையில் ஒருமையாய் உள்ளுறை சிவபிரான்
. பன்னகம் அணியடி வைத்துநின்றே
இன்னருள் புரிசிவன் என்றுமே மகிழ்வளித்
. தீங்கனி புசித்திட வேண்டிநின்றார். ... 1

அண்ணனாம் கணபதி தம்பியாம் முருகனும்
. கண்ணுதற் கடவுளை வேண்டினரே
பண்ணிசை அருமுனி பக்தியில் படைத்திடும்
. நண்ணருங் கனியது தான்தனியே
உண்ணுதற் களித்திடத் தந்தையும் உவகையில்
. ஒப்பியே தமக்கது தந்திடவே
அண்ணலும் கனியினை விண்டிலர் அதற்கொரு
. காரணம் நினைவினில் வந்திடவே. ... 2

ஓர்கனி யிருவரும் கேட்டபின் உதவிட
. ஒல்லுதல் எவணெனச் செப்பிடுவோம்
ஓர்கணப் பொழுதினில் பல்வகை யுலகமும்
. சுற்றியே வருபவர் யார்முதலோ
ஆரமு தெனவுள இக்கனி அவர்வசம்
. ஆகுமே மனங்களித் துண்டிடவே
நீரிரு வருமிதைச் செய்திடக் கிளம்புவீர்
. இக்கணம் முடிந்ததும் மீள்வரவே. ... 3

தந்தைசொல் முடிந்திடு முன்னரே சரவணர்
. தன்னுடை மரகத மாமயிலில்
முந்தியி வர்ந்தவர் காற்றினும் மனதினும்
. ஓங்கிய விரைவினில் செல்பயணம்
விந்தையாம் உலகுகள் ஏழிரண் டுடன்வரும்
. இன்னமும் பலப்பல மண்டலமும்
அந்தமில் கடவுளர் மூவரின் உலகமும்
. அந்தவோர் கணமதில் சுற்றிவந்தார். ... 4

இங்ஙனம் முருகனும் ஏழிரண் டுலகையும்
. சென்றவக் கணமது தீருமுன்னே
அங்கணன் எதிரிலே நந்தனன் கணபதி
. வந்துநின் றொருமொழி கூறலுற்றார்
பங்கயன் ஒளியினில் வெம்மைபோல் பரவியும் ... (பங்கயன்=சூரியன்)
. பாலொடு சலமன விண்ணொடு வளியென
அங்கமாம் உடலொடு ஆவியாய்க் கலந்துளே
. அந்தமில் லுறவதே சங்கரனாம். ... 5

பூவுடன் மணமென ரத்தின வொளியென
. ஒன்றிடும் பரம்பொருள் தந்தையன்றோ?
நாவினில் பெயர்வர நானுமென் தகப்பனை
. ஆடியே வலம்வரும் செய்கையிலே
மூவரின் உலகுடன் ஏழிரண் டுலகமும்
. ஒன்றிடும் பலப்பல மண்டலமும்
ஆவியோ டுடலுடன் உள்ளமும் பொருந்திட
. நான்வலம் வரக்கனி தந்திடுவீர்! ... 6

தந்தையும் மகிழ்வுடன் தந்தனர் கனியதை
. தன்னைநன் கறிந்தவன் சர்வமென
கந்தனும் மறுகணம் வந்தவன் திகைத்திட
. கந்தனே பழமதே நீயென்றார்!
தந்தைசொல் செவிவிழக் கந்தனும் பழனியில்
. தானுமோர் நடனமே ஆடினனே
இந்தவோர் கதைதனில் நின்றநுண் பொருளினை
. இனிவரும் அடிகளில் நோக்குவமே. ... 7

கனிந்துள தத்துவம்

தந்தையேன் கனியினை விள்ளுதல் விழைந்திலர்?
. தானொரு கனியுரு வாக்கிலரேன்?
முந்தியோர் அடியவர் வேண்டிய இருகனி
. உண்டென வழங்கிய வள்ளலன்றோ? [*1]
கந்தனும் தமையனும் ஒற்றுமை யுறுதலில்
. அக்கனி ஒருவருக் காகுமன்றோ?
அந்தவோர் கனிக்கென அத்தனை யுலகமும்
. வந்தது தகவுறும் ஊதியமோ? ... 8

வல்லப கணபதி சர்வமும் வலம்வரும்
. வண்மைகொண் டிலரென ஆகிடுமோ?
அல்லது முருகனும் சர்வமும் சிவமதே
. ஆவதென் றுளமறி யாதவனா?
பல்வகை வினவிடும் ஐயமும் எழுப்பியே
. பல்வகை யுறைந்திடும் நுண்பொருளைச்
சொல்லுவார் அருமுனி வாரியார் சுவாமிகள் [*2]
. தொன்மதக் கதைகளில் தத்துவமே. ... 9

முன்னொரு யுகமதில் தேவரும் கணங்களும்
. பூமியை முதற்கொள ஓம்வரையில்
துன்னிடும் அளவிலா லோகமோர் தினமதில்
. சுற்றியே பயணமாய் வந்தவர்தாம்
உன்னிடும் பரம்பொருள் யாரினும் பெரியவர்
. முன்மொழிந் தவைதனில் ஏற்றனரே.
முன்னவர் முழுமுதல் என்றொரு கடவுளை
. உன்னுதல் முக்தியைத் தந்திடுமே! ... 10

நான்முகன் அரியுடன் இந்திரன் முதலிய
. வானவர் அனைவரும் இச்செயலில்
தான்முதல் வருவதோ வான்முதல் உறுவதோ
. தன்னால் இயன்றிடும் செய்கையல
ஏனிதை முயல்வதும் ஏற்றமே விழைவதும்
. வீண்செயல் எனவிருப் பற்றிருக்க
வானவர் அனைவரும் யார்முதல் எனவுளம்
. ஆவலில் திளைத்திட நின்றனரே. ... 11

கண்ணுதற் கடவுளும் வானவர் சமுசயம்
. ஆற்றவோர் வழியினை மேற்கொளவே
மண்டலம் சருவமும் மாத்திரைப் பொழுதினில் ... [சருவம்=சர்வம்=அனைத்தும்]
. வான்வலம் வருவதும் வேலவனே
கண்ணுறும் உலகெலாம் ஆக்கியும் அழித்தும்
. காத்தருள் புரிவதும் வேலவனே
நண்ணரும் முழுமுதல் தெய்வமும் அவனென
. நாட்டிடக் கனிநடம் ஆடினரே. ... 12

ஒன்றெனும் சிவத்தினுள் யாவையும் அடங்குதல்
. ஓர்ந்திடும் குணமதே ஆனைமுகன்
நன்றெனும் சிவமதே யாவுமாய் வருவதை
. நாடிடும் குணமதே ஆறுமுகன்
ஒன்றெனும் தகப்பனே யெங்கணும் எனச்சொலக்
. குன்றெறி குமரரும் ஓடினரே
ஒன்றெனும் தகப்பனை நின்றுமே அறியலாம்
. என்பதை கணபதி காட்டினரே. ... 13

பூவது அரும்பெனில் பூசையின் சரியையாம்
. பூவெனில் கிரியையாய் ஆகுமென்பர்
பூவதே முதிர்வதில் காயெனும் உருவினில்
. ஓர்நிலை வழிப்படும் யோகமென்பர்
பூவரும் முதிர்கனி ஞானமென் றுரைப்பரே
. சூலியின் கரக்கனி ஞானமயம் ... [சூலி=சூலம் தாங்கும் சிவன்]
நாவரும் கிரியையும் யோகமும் சரியையும்
. ஞானமே உணர்ந்திட முற்படியே. ... 14

நாதனும் கனியினை விள்ளுதல் இலையெனில்
. ஞானமும் சிதைக்கவொண் ணாததன்றோ?
நாதனின் எதுவுமே வேறல வெனச்சொல
. ஐங்கரன் தகப்பனைச் சுற்றிவந்தார்
நாதனே அனைத்துமாய் நிற்பவன் எனச்சொல
. ஞாலமும் அறுமுகன் சுற்றிவந்தார்
நாதனின் கழலிணை நாடியே உருகுவோர்
. ஞானமே அகம்வர உய்வரன்றோ? ... 15

ஐங்கரன் அறுமுகன் ஒன்றென உணர்வதால்
. ஐம்புலன் கவிமனம் ஒன்றிடுமே
ஐங்கரன் அறுமுகன் பாலொடு சுவையென
. ஐயமின் றுணர்வதே ஐக்கியமாம்
ஐங்கரன் கனியெனும் ஞானமே சுமப்பவன்
. பாலது சுவையினைத் தாங்குதலாய்
ஐங்கரன் தம்பியே ஞானபண் டிதனென
. பாலது தாங்கிடும் சுவையவனே. ... 16

நூற்பயன்

அன்றைய உலகினில் பாமர சனங்களின்
. ஆன்மிக வழிமேம் படுத்தினவே
தொன்மத தருமமாம் நம்மதக் கதைகளில்
. உள்ளுறை பலப்பல தத்துவமே
இன்றைய இளைஞரும் இத்தகு கதையெலாம்
. ஏற்புடைத் தலவெறும் கற்பனையே
என்பதை விடுத்ததன் தத்துவம் மனம்கொளத்
. தென்றிசைச் செலாதவர் வாழ்தினமே. ... 1 [*3]

--ரமணி, 01-09/12/2013, கலி.15-23/08/5114

குறிப்பு:
1. ’முந்தியோர் அடிவயவர் வேண்டிய இருகனி’
காரைக்கால் அம்மையார்க்கு சிவன் இரண்டு மாங்கனிகளை அவர் கையில்
தோன்றச்செய்து அளித்த வரலாறு இங்கே:
http://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்

2. ’செல்லுவார் அருமுனி வாரியார் சுவாமிகள்’
விநாயக மூர்த்தி கனி பெற்ற வரலாற்றின் நுண்பொருளை வாரியார் சுவாமிகள்
தம் ’திருப்புகழ் விருவுரை’யில் விளக்குகிறார்:
http://www.tamilvu.org/slet/l41F0/l41F0pd1.jsp?bookid=259&pno=4&brno=1

3. ’தென்றிசைச் செலாதவர் வாழ்தினமே’
’going south' என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் என்பதன் தமிழாக்கம்.
’going south' என்றால் ’to fall, to slide’=’வீழ்தல், வழுக்குதல்’ என்று பொருள்.

*****

M.Jagadeesan
10-12-2013, 03:35 AM
அன்றொரு நாளினில் அழகிய உமையுடன்
...அவிர்சடைக் கடவுள் கயிலை மலையினில்
நன்னி இருந்தே குலவிடும் வேளையில்
...நாரத மாமுனி அவ்விடம் தோன்றி
தின்னுக என்றே மாங்கனி ஒன்றைத்
...தந்தனன் என்பது கதையாய் இருக்க
அந்நிலை மாற்றி மாங்கனி அதனை
...மாதுளங் கனியென மாற்றிய தேனோ?

ரமணி
10-12-2013, 04:03 AM
வாரியார் கதையில் மாதுளங் கனியே
ஆரமு துக்கனி யாமெனக் காண்க.


அன்றொரு நாளினில் அழகிய உமையுடன்
...அவிர்சடைக் கடவுள் கயிலை மலையினில்
நன்னி இருந்தே குலவிடும் வேளையில்
...நாரத மாமுனி அவ்விடம் தோன்றி
தின்னுக என்றே மாங்கனி ஒன்றைத்
...தந்தனன் என்பது கதையாய் இருக்க
அந்நிலை மாற்றி மாங்கனி அதனை
...மாதுளங் கனியென மாற்றிய தேனோ?

ரமணி
12-12-2013, 02:06 AM
இளைஞர் புராணம்
2. வேதத்தின் பூதக் கண்ணாடி: காஞ்சி முனிவர்

பாயிரம்
துய்யமுனிக் காஞ்சிமகான் சொன்னதெலாம் ஓரடியார்*
தெய்வக் குரலெனப் பெற்றிதரும் நூலாய்ப்
பொழிந்ததில் அன்னார் புராணங்கள் பற்றி
மொழிந்தவை செய்யுளா யிங்கு.

[*அமரர் கணபதி அவர்களின் ’தெய்வத்தின் குரல்’ நூற்றொகுப்பு]

வேதத்தின் பூதக் கண்ணாடி
(அறுசீர் விருத்தம் கருவிளம் விளம் காய் அரையடி)

புராணமாய்ச் சொல்கிற பதமதுவே
. புராஅபி நவவெனும் சொற்கூட்டே
புராவெனில் தொன்மையாம் நவமென்றால்
. புதுமையாம் அபியெனில் என்றாலும்;
புராதன நாட்களின் நிகழ்வுகளே
. புதுமையாய் இன்றுநாம் நுகர்வதுவே;
புராணமே இங்ஙனம் பழமையெலாம்
. புதுமையாய் விளங்கிடும் தொன்நிகழ்வே... 1

இதியெனில் இங்ஙனம் எனும்பொருளாம்
. நிழந்தது என்பதே ஆசமென
இதியுடன் வந்துறும் ஹவெனும்சொல்
. நிகழ்ந்தது நிச்சயம் என்றாகும்
இதுவெலாம் நிச்சயம் நிகழ்ந்ததென
. இதுவெலாம் நேர்ந்ததன் காலமதில்
கதையெனப் பின்னிய நிகழ்வுகளாம்
. அதன்பெயர் ஆகுமே இதிஹாசம். ... 2

சுருக்கமாய் வேதமும் சொல்நெறியைப்
. பொருட்களை பூதமாய் வில்லையதே
பெருக்கியே பன்முகம் காட்டுதல்போல்
. பெருக்கியே காட்டிடும் புராணங்கள்
நெருக்கிடும் சம்பவக் கோவைகளில்
. நெறிமுறை நாட்டிடும் சரித்திரமாய்ப்
பெருவகை மானிடர் வாழ்வினிலே
. இறைநெறி யோங்கிடச் செய்திடுமே. ... 3

உண்மையே பேசெனும் வேதச்சொல்*
. உருவெடுத் ததுஅரிச் சந்திரனாய்
மண்ணிதில் கொள்ளுக அறமொன்றே
. மறைமொழி பாரதம் நிலைநாட்டும்
விண்ணுள தெய்வமாம் தாய்தந்தை
. இராமனின் சரித்திரம் நிலைநாட்டும்
வண்மையும் அடக்கமும் கற்பெனவும்
. மறைசொலப் புராணமும் விரித்திடுமே. ... 4

அறநெறி ஒழுகிடும் மாந்தரெலாம்
. பலவகை யின்னலும் அனுபவித்தே
உறுபொருள் உடமையும் உறவுகளும்
. உடன்விட் டேகிய போதினிலும்
உறுதியாய் அறவழிச் சென்றதுவே
. உளம்வர நமக்கது படிப்பினையாய்
விறலவர் இறுதியில் பெறுவதில்நம்
. வாழ்வினில் ஆகுமே பிடிப்பெனவே. ... 5

நூற்பயன்
(அறுசீர் விருத்தம்: புளிமா கூவிளம் காய் அரையடி)

புராணம் பற்றிய சரியான
. புரிதல் வாழ்வினை மேம்படுத்தும்
புராணம் என்பது கதையெனவே
. ஒதுக்கல் தப்பென அறிந்திடுவோம்
புராணம் சொல்கிற அற்புதங்கள்
. புத்தியை விஞ்சிடும் கற்பனைகள்
பெரிதும் முந்தையின் நிகழ்வெனவே
. தெரிந்தே ஆய்வது நம்கடனே.

--ரமணி, 11-12/2013, கலி.25/08/5114

குறிப்பு
1. ’சத்யம் வத தர்மம் சர’
’உண்மையே பேசு, தருமமே கைக்கொள்’--தைத்தீரிய உபநிடதம்

2. ’மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ’
’அன்னையும் தந்தையும் குருவும் முன்னறி தெய்வமாம்’
--தைத்தீரிய உபநிடதம்

*****

ரமணி
24-12-2013, 12:55 AM
இளைஞர் புராணம்
3. புராணமும் சரித்திரமும்
(காஞ்சி மகாசுவாமிகள் உரைகளிலிருந்து)

பாயிரம்
உண்மைக் கதையே புராணம் பெரிதுரைத்து
பண்டை நெறிகாத்துப் பண்படுத்தும் - திண்ணம்
அவற்றைப் பயில்வதால் நற்கதி கிட்டும்
தவவுரு காஞ்சிமுனி தீர்ப்பு.

புராணமும் சரித்திரமும்
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கூவிளம் கருவிளம் கருவிளம்
. கூவிளம் விளம் கருவிளங்காய்)

பாரத நாட்டிலே சரித்திரம் இலையெனப்
. பண்டித றாய்வெனச் சிலர்கருத்தே
யாரிதைச் சொல்வரோ அவர்களில் பலருமே
. தானிதை ஆய்ந்திடும் வகைதெரியார்
ஆரமு தாயறம் செழித்திடத் துணைசெயும்
. பாரதத் தொல்கதை சரித்திரமே
வேரினில் கண்படா மனிதரே இவையெலாம்
. வீண்கதை என்பதாய் ஒதுக்குவரே. ... 1

வெள்ளையர் கொள்கையில் எழுதிய சரித்திரம்
. இந்தியத் தொன்மையை மறைப்பதற்கே
பள்ளியில் கற்றிடும் குழந்தைகள் இதனுடன்
. பாரதத் தொல்கதை முறைபயின்றால்
உள்ளமும் நல்லற வழியினில் உருப்பட
. உன்னத வாழ்வினை யடைந்திடவே
தள்ளுதல் கொள்ளுதல் திறம்வரப் பெறுவரே
. தம்மனம் தம்முயிர் தழைத்திடவே. ... 2

பன்மையாய்க் காரணம் சரித்திரம் படித்திடப்
. பண்டிதர் யாவரும் உரைத்திடுவர்
முன்நிகழ் போக்குகள் திருப்புமாம் சரித்திரம்
. முன்னுறு காரணம் இதுவெனவாம்
சென்றவை மீள்வரும் படிப்பினை கிடைப்பதால்
. இன்றவை நேர்வதைத் தடுத்திடலாம்
நன்னெறி யூட்டிய புராணமாம் கதைகளாய்
. நம்பனு வல்களும் உரைத்ததிதே. ... 3

யாரெலாம் இப்படி நடைமுறைச் சரித்திரம்
. கற்றதில் பெற்றனர் பயனென்றால்
யாருமே இப்படி சரித்திரப் படிப்பினை
. கண்டிலர் என்பதே உண்மைநிலை!
பாரினை வென்றிடப் படையெடுத் தராஜகம்
. பற்பல செய்தவல் லரசரைப்போல்
ஊரினில் பற்பலர் எழுந்திட உலகமே
. போர்களில் வேரொடு அழிந்ததன்றோ? ... 4

இன்றுமே மோசடி அரசியல் தொழில்துறை
. யெங்குமே தன்நலத் தலைவிரிப்பே
முன்நிகழ் போக்குகள் தெரிந்துமே படிப்பினை
. உன்னுதல் என்றென நிகழ்ந்திலையே?
ஒன்றதன் காரணம் சரித்திரம் திரும்பியும்
. உத்தரிக் கும்திறன் அதிலிலையே
நன்னெறி யூட்டிடும் புராணமாம் கதைகளே
. நல்வழி உய்திறன் உடையனவே. ... 5

வன்முறை நன்முறை அரசரின் வருடமே
. வல்லிதின் சொல்லிடும் சரித்திரமே
அன்னவர் செய்ததன் வினைப்பயன் மறுமையில்
. ஆனது சொல்திறன் பெறுவதிலை
இன்னது இப்படி இருந்தது விளைந்தது
. என்றுசொல் சக்தியைப் படைத்தவரே
நன்னெறி யூட்டிய புராணமாம் கதைகளால்
. நல்வழிப் படுத்திய முனிவர்களே. ... 6

தொல்வர லாற்றிலே வினைப்பயன் உறுவதை
. ஓர்ந்தறம் சேர்த்திடும் கதைகளையே
நல்வித மாகவே தொகுத்தவை தருவதால்
. நல்லவர் இம்மையில் பயன்பெறவும்
அல்லவை செய்தவர் பிறவியில் மறுமையில்
. அல்லலே உற்றதை எடுத்துரைத்தும்
தொல்வர லாறுதான் சரித்திரப் படிப்பினை
. உன்னிடச் செய்திடும் திறன்பெறுமே. ... 7

சந்திர சூரிய அரசர்கள் பெயர்களைத்
. தந்திடும் புராணமும் அவர்களிலே
வந்தவர் நன்னெறி நடந்திலர் கதைகளை
. அற்பமாய்க் கொஞ்சமே உரைத்திடுமே
நிந்தையில் வாழ்ந்தபின் துருவனும் தவத்தினால்
. நிர்மலன் ஆனதன் நெடுங்கதையைத்
தந்திடும் தொல்கதை தகப்பனின் சரிதையை
. அற்பமாய்க் கொஞ்சமே கொடுத்திடுமே. ... 8

அன்றைய வெள்ளையர் புராணமும் புனைவெனத்
. தள்ளியே சரித்திரம் எழுதிடுங்கால்
வென்றவர் நோக்கினில் எழுதிய பலப்பல
. ஏற்பதற் கிலையெனப் புதிதாக
இன்றைய பண்டிதர் சரித்திரம் எழுதினும்
. எத்தனை நடுநிலை எவருரைப்பர்?
தொன்மத ஆலய அடியவர் கதைகளைத்
. தொட்டவர் நடுநிலை பிறழ்ந்திலரே. ... 9

நூற்பயன்
சண்டையும் ஆட்சியும் தொகுத்திடும் அரசியல்
. சரித்திரம் மட்டுமே சரியலவே
பண்டைய நன்னெறி நடந்தோர் எவருமே
. அன்றைய கதைகளில் இடம்பெறுவர்
பண்படும் வாழ்க்கையும் கலைகளும் கதைகளும்
. அன்றைய அறிவியல் எனப்பலவும்
கொண்டபு ராணமும் படிப்பதே உயிர்நலம்
. போற்றிட ஏதுவாய் நிற்பனவே.

--ரமணி, 13-23/12/2013, கலி.08/09/5114

*****

தாமரை
26-12-2013, 10:51 AM
எண்ணமும் எழுந்திடும் வண்ணமும் மிளிர்ந்திடும்
பண்ணிலும் சிறந்திடும் சீர்படைத்தே
திண்ணிய கருத்தினை தேனுடன் சுளையென
இன்சுவை கலந்திசை சேர்ந்திடவே
மண்மிசை மறைந்திடும் மாபெரும் கதைகளை
இன்னொரு வடிவினில் ஈன்றெடுத்தே
பண்ணிய சரித்திரம் பாவலர் பெருந்திறம்
இன்னொரு யுகம்வரை வாழியவே!

ரமணி
26-12-2013, 02:50 PM
மிகவும் மகிழ்ந்தேன், தாமரைச் செல்வன் அவர்களே!
அரியதோர் கவித்திறன், உங்கள் வண்ணக விருத்தம்!

--ரமணி

ரமணி
10-01-2014, 01:32 PM
இளைஞர் புராணம்
4. புராணங்கள் பொய்யா, உருவகமா?-முதற் பகுதி
(காஞ்சி மகாசுவாமிகள் உரைகளிலிருந்து)

பாயிரம்
புராணம னைத்தும் புரளியென் பாரும்
புரளியென் றல்ல உருவகமென் பாரும்
சரியான கண்ணோட்டம் ஏற்பதிலை யென்பார்
அருமுனி காஞ்சி மகான்.

புராணங்கள் பொய்யா, உருவகமா?-முதற் பகுதி
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கூவிளம் கருவிளம் கருவிளம்
. கூவிளம் விளம் விளங்காய்)

நம்புதற் கில்லையே புராணமென் பனவெலாம்
. அண்டரும் வருவதோ வரந்தரவோ?
வம்பினில் மாட்டிய அருந்தவர் மனையளின்
. வடிவினி கல்லெனச் சபிப்பதுவோ?
அம்புயம் பூத்திட எழுந்திடும் கதிரவன்
. வைகறை உதித்தலைத் தடுப்பதுவோ?
நம்புதற் கில்லையே புராணமும் புரளியே
. அன்றைய நிகழ்வெலாம் புனைந்துரையே! ... 1

இன்றைய சூழலில் முடிவது இலையெனில்
. என்றுமே நடந்திலை எனல்சரியோ?
அன்றைய சூழலில் உயர்தவம் மறையொலி
. மந்திர சக்தியின் நிறைவினையே
பன்னரும் நூல்களில் விளக்கமும் இருப்பதைப்
. பார்த்திதை எளிதினில் அறிந்திடலாம்
இன்னரும் சக்தியால் மனிதரில் பலருமே
. விண்ணுறும் சூக்குமம் கண்டனரே. ... 2

வெய்யிலாய் நீழலாய் அமரரும் அசுரரும்
. எய்திய சக்திகள் கண்படவே
செய்தனர் போர்களை மனிதரில் தவவலி
. பெற்றவர் பலருமே நோக்கிடவே
செய்வரே போர்களை அமரரும் அசுரரும்
. இன்றுநம் கண்படல் இலையெனவே
பொய்மையும் மெய்மையும் வடிவுகள் உருத்தவை
. போரிடும் நிகழ்வினுக் கோய்விலையே. ... 3

மானிடர் கண்செவி ஒளியொலி அலைகளின்
. அத்தனை அதிர்வையும் உணர்வதில்லை
நானிலம் வந்துறும் மறைகதிர் அலைபல
. நன்மையும் தீமையும் விளைப்பனவே
வானமும் பூமியும் மனிதரும் மிருகமும்
. ஆய்ந்திடும் அறிவியல் இதைச்சொலுமே
தானவர் வானவர் குறித்துமே அறிஞரில்
. ஆய்ந்தவை சிலரதை நம்புவரே. ... 4

சித்தரும் யோகியும் உலகினில் இருப்பதை
. இன்றுமே காண்பது அரிதலவே!
குத்திடும் வெண்பனி தகித்திடும் நெருப்பினில்
. உள்ளிருந் தும்முடல் நலிவுறாரும்
வித்தக யோகிதன் இருதயம் நிறுத்தியே
. இன்றுமே சாதகம் புரிவதுவும்
எத்தனை காணிலும் எளிதிலே நமதுளம்
. இத்தகு நிகழ்வுகள் ஏற்பதிலை. ... 5

அற்புதம் வந்தது சரித்திரம் இலையெனக்
. கற்றவர் பலருமே தள்ளிடுவார்
தற்பரன் மந்திர விபூதியின் மகிமையால்
. ஆளுடைப் பிள்ளையும் கூன்நிமிர்த்த (1*)
உற்றவெப் பப்பிணி யகலவே செழியனும்
. உய்ந்தனன் என்றது புனைகதையாம்
கற்றறி பூட்டிநா வரசரை அரசனும் (2*)
. ஆழ்த்தியும் மிதந்தது கற்பனையாம்! ... 6

[தற்பரன்=சிவன்; கற்றறி=கற்றூண்]

பல்லவர் பாண்டியர் அரசுறு பொழுதினில்
. பல்வகை யோங்கிய சமணமதம்
இல்லெனச் சொல்லிடு மளவினில் குறைந்ததை
. இன்றைய சரித்திடும் ஒப்புவதில்
நல்விதம் இப்படித் திடுமென நிகழ்ந்ததில்
. நம்முனி ஆற்றிய அற்புதங்கள்
இல்லையென் றெப்படி மறுத்திடும் சரித்திரம்?
. கல்லுறாச் செய்திகள் நிகழ்ந்திலவோ? ... 7

கன்னட மன்னனின் மகளினைப் பிடித்தபேய்
. கண்பட குருரா மானுசரும்
இன்னலை நீக்கிய நிகழ்வினை மறுப்பதும்
. விஷ்ணுவர்த் தன்னெனப் பெயர்மாறி
மன்னனும் வைணவம் தழுவிடச் சமணமும்
. மாய்ந்ததை மட்டுமேற் பதுமென்றே
தன்னியல் பாகவே சரித்திரம் எழுதினால்
. அன்னது கபடெனல் சரியன்றோ? ... 8

இன்றுமே சிற்சில இடங்களில் பெரியதாய்
. என்புகள் மனிதனும் விலங்குமென
அன்றையத் தொல்கதை உரைத்திடும் விலங்கின
. மானிட இனத்ததன் வகையெனவே
இன்றைய பூவியல் அகழ்வியல் வெளிக்கொணர்
. வின்னமாம் பொருட்களின் உரைகாலம்
தொன்மதம் தந்திடும் பொழுதுடன் பொருந்தவே
. தொல்கதை நிஜமென அறிந்திடுவீர். ... 9

[வின்னம்=சிதைவு, பின்னம்]

முன்னைய ஆளெலாம் பனைமர உயர்வெனில்
. இன்றவர் ஆறடி உயர்வானார்
பின்னொரு போதினில் விரலள வுயர்வுள
. இன்னொரு வகையிலும் உருவெனவே
என்றுநம் தொல்கதை நிகழ்வுகள் வருவதை
. இன்றுநாம் செய்தியில் படித்தறிவோம் (3*)
என்றுமே ஏதுமே இயற்கையில் நிகழ்வதைச்
. செப்பிடும் உண்மைநம் புராணமதே! ... 10

நிந்தனை செய்திட விழைந்திலாப் பலபேர்
. இவ்வகை நிகழ்வுகள் உருவகமே
சிந்தையில் மற்றோரு கருத்தினை விதைக்கவே
. இவ்வகைக் கற்பனை யெனச்சொல்வர்
உந்திடும் தத்துவப் படிமமும் உறைந்திடல்
. உண்மையே ஆயினும் புராணத்தில்
விந்தையாய் வந்திடும் கதைபல புனைவுரை
. என்பது பிழையுறும் விமர்சனமே. ... 11

நூற்பயன்
வானர மாந்தரும் விலங்குரு மனிதரும்
. ஆனகை தலையெனப் பலவெனிலே
ஏனெனத் தள்ளியே இகழ்வதென் றிருப்பதில்
. இன்றுமே இவ்வகை நிகழ்வுகளும்
தானதைக் காண்பதை வசதியாய் மறந்துமே
. தர்க்கமும் பேசிடும் மனிதர்களின்
ஈனமும் தள்ளியே இளைஞரும் யுவதியும்
. இன்னவை ஆய்வது சிறந்ததுவே.

--ரமணி, 01-10/01/2014, கலி.26/09/5114

குறிப்புகள்:
1. திருஞானசம்பந்தர் திருநீற்றைத் தடவியும் ’மந்திரமாவது நிறு’ பதிகம் பாடியும்
மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் கூனை நிமிர்த்தி வெப்பு நோயையும் குணப்படுத்தவே, அவன் ’நின்றசீர் நெடுமாறன்’
என்று புகழ்பெற்றான்.

சம்பந்தர் பாடிய பதிகம்:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
--சம்பந்தர் தேவாரம், 2.66.1.

2. திருநாவுக்கரசர் சமண மதத்திலிருந்து சைவ மத்திற்கு மாறியபோது பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
சமணர்களின் தூண்டுதலால் அவரைக் கற்றூணில் கட்டிக் கடலிலே வீழ்த்த, அவர் ’நற்றுணை யாவது நமச்சிவாயமே’
என்று பாடக் கற்றூணும் அவரும் கடலில் மிதந்தனர்!

அப்பர் பாடிய பதிகம்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
--அப்பர் தேவாரம், 4.11.1.

3. அதிசய உருவங்கள்
குள்ளமான பெண்:
http://arinjar.blogspot.in/2012/09/68.html

குட்டி மனிதர்கள்:
http://www.tamilkathir.com/news/4893/58//d,view.aspx

சுட்டு விரல் உயரக் குரங்குகள்:
http://www.viduthalai.in/page-1/19587.html

இருதலைக் குழந்தைகள்:
http://madawalanews.com/news/miscnews/6259
http://www.manithan.com/news/20120218101399
https://ta-in.facebook.com/ttwars/posts/188580231318281
http://www.dinaithal.com/tamilnadu/india/tag/இரண்டு தலை.html

இருதலைப் பாம்பு:
http://thamilamazing.blogspot.in/2011/07/blog-post_695.html

*****

ரமணி
01-02-2014, 09:05 AM
இளைஞர் புராணம்
5. புராணங்கள் பொய்யா, உருவகமா?-இரண்டாம் பகுதி
(காஞ்சி மகாசுவாமிகள் உரைகளிலிருந்து)

பாயிரம்
தொல்கதை கற்பனை யோவென்றே எண்ணுவார்க்குச்
சொல்லுவார் காஞ்சிமுனி யோருண்மை நேர்வினை;
தண்முனி தன்மையில் ஆற்றியது கேட்டுநாம்
உண்மை அறிந்துகொள் வோம்.

[நேர்வு=நிகழ்ச்சி; தன்மையில் ஆற்றியது=நான் எனும் நிலையிற் சொன்னது]

புராணங்கள் பொய்யா, உருவகமா?
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. விளம் விளம் காய்)

காச்யப முனிக்கொரு பத்தினி இருந்தனள்
. கத்ருவாம் அவள்பெயர் கணவனிடம்
ஆச்சரி யமாகவள் கேட்டவோர் வரத்தினில்
. ஆயிரம் பெற்றனள் பாம்புகளை
பேச்சிது வகைத்தன கற்பனை புனைகதை
. என்றுநாம் எளிதிலே தள்ளுகிறோம்
வாச்சியம் உறுதியாய்ச் செய்தியும் வடித்ததே (1*)
. மார்வரிப் பெண்ணொரு பாம்புபெற்றாள்! ... 1

[வாச்சினை=வாசகத்தின் பொருள்]

நானொரு குலத்தினைப் பற்றியே சுவாமிகள்
. ஆனமுன் பொழுதினில் கேள்வியுற்றேன்
தானொரு புதல்வியும் புக்கவள் பிறந்தவள்
. தாழையின் மலரினை அணிவதிலை
ஆனபின் னொருதினம் நானுமோர் சுவாமியாய்
. அவர்களும் தரிசனம் பெறவந்தார்
ஏனென வினவினேன் சொன்னரே ஒருகதை
. இட்டவர் கட்டிய கதையலவே. ... 2

பற்பல தலைமுறை முந்தியெம் குலத்தினில்
. பாம்பினைப் பெண்ணொரு வள்பெற்றாள்
உற்றவின் நிகழ்வினை மற்றவர் அறிந்திடச்
. சொல்வதில் வெட்கமும் தயக்கமுமே
அற்புதக் குழந்தையைப் பாலினைப் புகட்டியே
. மானிடக் குழந்தையாய் வளர்த்தனரே
கற்சிலை யெனவது தீங்கிழைக் காமலே
. கவினுடன் பக்கமே வாழந்ததுவே. ... 3

அன்னையும் அகத்தினில் தங்கினாள் விசித்திர
. மகவுடன் வெளிச்செல முடியாதே
அன்றொரு தினத்தினில் உற்றவர் திருமணம்
. வந்தபோ தவள்செல நேர்ந்ததுவே
பன்னகக் குழந்தையைப் பேணவோர் கிழவியை
. வைத்தவர் சென்றனர் மணம்காண
அன்னவள் கிழவியோ கண்பழு தடைந்தவள்
. ஆயினும் வேறொரு வழியிலையே. ... 4

பாம்பினுக் கெதுசெயல் வேண்டிடும் தினப்படி?
. காலையிற் குளியலோ? உடையணியோ?
பாம்பினை யிடையிலே தாங்கிடல் விழையுமோ?
. அல்லது அதன்தலை வாரிடவோ?
நாமெலாம் இதுவிதம் பேணுவோம் குழந்தையை
. பாம்பெனும் பிள்ளையின் தேவையெனில்
நாமதை மறத்தலும் இன்றியே பொழுதினில்
. பாலது வைத்தலே வேறென்ன? ... 5

கல்லுரற் குழியிலே காய்ச்சிய அமுதினைக்
. காரிகை முதியவள் இட்டுவைத்தால்
நல்லதாய்க் குழந்தையும் உட்கொளல் எளிதென
. அன்னையும் சொல்லியே சென்றனளே
கல்லுரல் தடவியே பாலினை இடுதலும்
. கண்ணிலா முதியவர்க் கெளிதன்றோ?
சொல்லிய மொழிப்படி செய்தனள் கிழவியும்
. ஓசையில் லாதது பருகியதே. ... 6

பின்னொரு பொழுதினில் மூத்தவள் மறந்திடப்
. பன்னகம் பாலினைக் காணாதே
தன்னுடல் தளரவே கல்லுரற் குழியினில்
. சாதுவாய்ச் சுருண்டது உறங்கியதே.
தன்விழி தெரிந்திலாப் பாட்டியும் அரவது
. தானுளே இருப்பதைக் கண்டிலயே
பன்னகக் குழந்தையின் மீதவள் அடுப்பினில்
. காய்ச்சிய பாலினை யூற்றினளே! ... 7

பன்னகக் குட்டியும் மாண்டது அழலிலே
. அன்னையின் கனவினில் வந்ததுவே
தன்னுடல் தகனமாய்த் தாழையின் வனத்திலே
. காரியம் செய்யவே சொன்னதுவே
பின்னது பகர்ந்ததோர் வேண்டுதல் உருவிலே
. பெண்ணெனப் பிறப்பரும் புகுவோரும்
என்நினை வதுவெனத் தாழையின் மலரினை
. இக்குலம் அணிதலை வேண்டிலனே. ... 8

நூற்பயன்
பெண்ணவள் பகர்ந்தது என்நிலை யிலுமது
. இன்னது நிகழுமோ இப்படியும்
எண்ணியே வியப்பினில் ஆழ்ந்தனன் பலதினம்
. பின்னரே செய்தியில் கண்டனனே
கண்ணெதிர்ப் படுவது போலவே அவர்களும்
. கட்செவிக் குழந்தையின் கதைசொலினும்
நண்ணிய வருமெனை நாடிய தெதுவெனில்
. அக்குலத் திருந்தவோர் செப்பேடே! (2*)

--ரமணி, 20-30/01/2014, கலி.17/10/5114

குறிப்புகள்:
1. மகாபெரியவர் குறிப்பிட்ட, ’ஒரு மார்வாரிப் பெண்ணுக்குப் பாம்பு பிறந்தது’
என்ற செய்தி நிகழந்த வருடம் 1958.

இதுபோல இந்நாள் செய்தி யொன்று:
மட்டக்கிளப்பில் பாம்பைப் பிரசவித்த மனிதப் பெண் (http://saanthai.blogspot.in/2012/12/blog-post_5781.html)
மட்டக்கிளப்பில் பாம்பைப் பிரசவித்த மனிதப் பெண் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=113656)

2. அந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு பழைய செப்பேடு
பற்றிய செய்தியைப் பெரியவர் சொல்வது அடுத்த பகுதியில்.

*****

ரமணி
22-03-2014, 02:36 PM
இளைஞர் புராணம்
6. புராணங்கள் பொய்யா, உருவகமா?-மூன்றாம் (இறுதிப்) பகுதி
(காஞ்சி மகாசுவாமிகள் உரைகளிலிருந்து)

பாயிரம்

குழந்தையாய்ப் பாம்பொன் றுதித்த குலத்தின்
பழந்தமிழ்ச் செப்பேடு பார்த்தே - விழுமுனியும்
செப்பேடும் பன்னகமும் ஏற்ற தொடர்பதன்
செப்பம் உரைத்திடுவ ரே.

புராணங்கள் பொய்யா, உருவகமா?
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. விளம் விளம் காய்)

அச்சுதன் அரசினை யாண்டதோர் பொழுதிலே
. தாமிரப் பொறிப்பது செய்ததுவாம்
இச்சையால் பிராமண வேதியர் பலர்பெற
. வேந்தனாம் ஒருவனும் செய்-தானம்
பிச்சையாய் மறைநெறி வேதியன் ஒருவனும்
. பெற்றுநூற் றெட்டவர்க் களிதானம்
அச்செனப் பொறித்ததை மன்னனும் பதிந்ததை
. அங்கையிற் கனியெனச் சொன்னதுவே. ... 1

[அச்சுதன் = கிருஶ்ணதேவராயருக்குப் பின் ஆண்ட அச்சுத தேவராயர்;
பொறிப்பு = எழுதுகை]

அந்தணர் அறுதொழில் செய்ததால் அவர்குலம்
. தழைத்திட மன்னரும் செய்-தானம்
சொந்தமாய்ச் சிறிதென ஏற்பதைப் பனுவலும்
. ஒப்புதல் செய்வதைக் கண்டிடலாம்
அந்தவோர் அரசனும் உத்தமப் பரம்பரை
. வந்தவன் எனிலதை ஏற்றிடுவர்
அந்தணர் எதுவுமே வேண்டிலர் எனவரின்
. மன்னனோர் யுக்தியைச் செய்வதுண்டே. ... 2

புண்ணியம் இதுவழிப் பெற்றிட அரசரும்
. ஒற்கமே யுற்றவோர் அந்தணனை ... [ஒற்கம் = வறுமை]
நண்ணியே அவன்வசம் தானமும் கொடுத்ததை
. மற்றவர்க் களித்திட வேண்டுவரே
புண்ணியம் பெறவென அந்தணன் அவனிதை
. ஒப்பியே மற்றவர்க் களித்ததனால்
தண்ணியல் அரசனும் நலிவுறு பார்ப்பரும்
. தம்வழிப் புண்ணியம் சேர்த்தனரே. ... 3

கொற்றவன் தருவதை யேற்பதே இகழ்வென
. உதறியே தியாகையர் போன்றோரும்
கொற்றவா நிதியது சாலசு கமாவென
. உரைத்தரே மன்-சர போஜியிடம் ... [மன் = மன்னன்]
உற்றிடம் உணவுவொடு சத்திரம் எழுப்பிய
. உன்னதச் செட்டியர் பலபேரும்
முற்குல மறையவர் பேரினில் எழுதியே
. ஒற்றினர் இத்தகு கட்டளையே. ... 4 [ஒற்றினர் = ஒருங்குற அமைத்தனர்]

முன்சொன பொறிப்பினில் அச்சுதன் கொடுத்ததாய்
. முப்புரி நூலனாய் ஒருபார்ப்பான்
இன்னலிற் கிடைத்தமாம் பாக்கமாம் நிலமதை ... [மாம்பாக்கம் என்னும் ஊர்]
. எத்தனை வேதியர்க் களித்தனென
அன்னவர் பெயருடன் வேதமும் விவரமும்
. மன்னிய ஏடெனக் கண்டனனே
மன்னவன் அறமதை வாங்கிய அந்தணன்
. பன்னகக் குலமதன் மூதறிஞன்! ... 5

பன்னகக் குலமதன் மூத்தவன் பெயரெனப்
. பட்டயம் சொல்வது நாகேச்வரன்!
அன்றைய தினமதில் என்னிடம் பொறிப்பினைத்
. தந்தவர் பெயருமே நாகேச்வரன்!
அன்னவர் குலமதில் ஒவ்வொரு தலைமுறை
. தாங்கினர் இந்தவோர் பெயரினையே!
மின்னலாய் மனதிலே பட்டது குழந்தையாய்
. விடதரம் விளைந்ததன் தொடர்பெனவே. ... 6 ... [விடதரம் = விடம் தரிக்கும் பாம்பு]

இப்படி நிகழுமா என்றுநான் நினைத்ததற்
. கேற்பவே அமைந்ததச் செப்பேடு
அப்புறம் உறுதியாய் ஊடகம் பகர்ந்ததில்
. ஐயமும் அகன்றது என்னுள்ளே
இப்படி மனதினில் ஐதிகம் நிலைபெற
. ஏட்டினில் வந்ததை நான்நம்பத்
தப்பல பொதுஜனம் தொல்கதை நிகழ்வுகள்
. கற்பனை யேவென நம்புவதும்! ... 7

நூற்பயன்

ஊடகம் வெளியிடும் செய்திகள் அனைத்துமே
. உறுதியாய் நம்புவோம் நாமின்று
ஏடவை பழையவை சொல்லிடும் நிகழ்வுகள்
. எதுவுமே கற்பனை என்றேநாம்
நீடென நிலைபெற நம்வசம் புராணமாய்
. நிறைந்திடும் தொல்கதை தள்ளுவமே
பாடது எவரதை ஆய்வது அனைத்துமே
. பயனில எனும்மடி மலிவுறவே! ... [மடி = சோம்பல்]

--ரமணி, 23/03/2014, கலி.08/12/5114

*****