PDA

View Full Version : முதல் பெண் நாடகத் தயாரிப்பாளராக



tnkesaven
08-12-2013, 05:02 AM
100 ஆண்டுகளுக்கு முன்பு துணிப்பந்தங்களில் இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய்களை ஊற்றி நீண்ட நேரம் எரியும் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு ""கூத்துக்கலை'' நடந்து வந்த காலத்தில் ""பாலாமணி அம்மாள்'' சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனி ஒன்றைத் திறம்பட நடத்தி வந்தவர். அற்புதமான குரல், "என்றும் பதினாறு வயது' போன்ற இளமையான வாளிப்பான உடல், முறையாகப் பயின்ற பரத நாட்டியம் - இந்தக் கலைப் பொக்கிஷத்தின் தாளத்திலும், உடல் வளத்திலும் மதுவுண்ட வண்டுகள் போல மயங்கிய பெருஞ் செல்வந்தர்கள் கை நிறையப் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கை சோர்ந்து போகுமளவு அவள் காலடியில் கொட்டியிருக்கிறார்கள்!

கும்பகோணத்தில் அந்தக் காலத்திலேயே அரண்மனைபோல பங்களா, எடுபிடி வேலை செய்ய ஐம்பது, அறுபது வேலையாட்கள், கல்யாண வீடு போல் தினசரி எல்லாருக்கும் சாப்பாடு. நாட்டிய நடிகையான பாலாமணி அம்மையார் தான் இந்தியாவிலேயே முதல் பெண் நாடகத் தயாரிப்பாளராக விளங்கியவர். இவர் குழுவில் நடித்தவர்கள் அனைவருமே பெண்கள் தாம். ஆண் வேடங்களையும் பெண்களே ஏற்று நடித்தார்கள்.

இவரது நாடகக் காட்சி நேரத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் புறப்படும் ரயிலுக்குப் ""பாலாமணி ஸ்பெஷல்'' என்றே பெயரிட்டிருந்தார்கள். அந்த அளவு கூட்டம் நாடகம் பார்க்க தஞ்சையிலிருந்து தினம் இரவு அந்த வண்டியில் வருமாம்! மின்சாரம் வந்திராத அந்தக் காலத்தில் அப்போது பிரசித்தமான "பெட்ரோமாக்ஸ்' விளக்கு வெளிச்சத்தில் நாடகம் நடத்திய முதல் பெண்மணியும் அவரே. இவை எல்லாவற்றையும் விட நாடகத்தின் மூலம், தான் சம்பாதித்த ஏராளமான பொருளை தான, தர்மமாக வழங்கி பல பேர்களை வாழ வைத்தவர் பாலாமணி.

நாடக அரங்கிற்கும் வேறு இடங்களுக்கும் செல்லும்போது முன்னும் பின்னும் காவலாளிகள் செல்ல, வெல்வெட் துணியில் திரைபோட்டு, நான்கு குதிரைகள் பூட்டிய அலங்கார "சாரெட்டில்'தான் செல்வார். அவர் அப்படிச் சாரெட்டில் செல்லும் காட்சியை சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்று தேவதையைக் காண்பது போலக் கண்டு மெய்சிலிர்த்துப் போவார்களாம்! அழகு என்றால் அப்படி ஓர் அழகாம். கடைசிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை இவர்.

இப்படி போக போக்கியங்களுடன் வாழ்ந்த இவரின் இறுதிக்காலம் சோக மயமானது. தான தர்மம் என்று எல்லோருக்கும் வாரி வழங்கியவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாததே அதற்குக் காரணம்.

ஒரு காலகட்டத்தில் புகழ் மங்கியது. வரவு சுருங்கியது. வறுமை தலை காட்டியது. இவரால் உதவி பெற்றவர்கள் எவரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை. வறுமையோடு வியாதியும் வந்தது இவருக்கு.

கொடிகட்டிப் பறந்த கும்பகோணத்தை விட்டு பிழைப்பை நாடி மதுரை சென்றார். வறுமை இவரது அழகையும் சூறையாடி விட்டது. கண்ணகி எரித்த மதுரையில் ஒரு குடிசைப் பகுதியில் அடங்கி ஒடுங்கி சுருண்டு மடங்கிவிட்டது அந்த அழகுத் தேவதை. அந்தக் கலை அரசியின் இறுதிச் சடங்கிற்கு ஒவ்வொருவரிடமும் நாலணா, எட்டணா என்று கையேந்தி வாங்கி நடத்தி முடித்தவர் நகைச்சுவை நடிகர் சி.எஸ். சாமண்ணா. அந்தக் கலை அரசியின் உடலுக்குக் கொள்ளி போட்டவரும் அவரேதான் என்று சொல்லப்பட்டது.

"நாடக மேடையும் திரை உலகமும்' என்ற நூலில் ஏ.எல்.எஸ். வீரய்யா
courtesy;oncemore/kadhir

மும்பை நாதன்
17-12-2013, 03:59 PM
இப்படியும் சிலர் இருந்திருக்கிறார்கள் !