PDA

View Full Version : விளிம்பின் நுனியில்...



rambal
20-01-2004, 03:42 PM
விளிம்பின் நுனியில்...

விளிம்பின் நுனியில்
தவழும்
மயான அமைதியின்
இறுக்கத்தில்
என் மனம் உழலட்டும்..

கோடித்துணியாய்
அணிவகுத்துச் செல்லும்
மேகங்களின் வெறுமையில்
என்னைத் திளைக்கச் செய்..

கண் முன் விரியும்
பாதாளப் பள்ளத்தாக்கில்
நெஞ்சுக் கூடு
நடுங்குவதை எனக்கு
உணரச் செய்..

ஒரு கணம்
என்னை சிறகில்லாமல்
அங்கிருந்து பறக்கச் செய்..

விளிம்பின் நுனியில்
இருந்து காணுமிடமெங்கும்
சிதறிக் கிடக்கின்றன
சொற்கள்..

ஒரு கிருமியாய் இருந்து
என்னை தின்று சுவைத்து
ருசி பார்க்கும் சொற்கள்
முழுமையாய்
தின்று தீர்த்து முடிப்பதற்குள்
புவி ஈர்ப்பு விசைகள் அற்று
பறக்கும் அந்த ஒரு கணத்தில்
என்னைக் கொன்று கொண்டிருக்கும்
சொற்களை மரித்துப் போகச் செய்..

விளிம்பின் நுனியில்
ஒரு புல்லாய்,
சருகாய், சவ மேகமாய்,
பள்ளத்தாக்கை
நிரப்பியிருக்கும் மயான அமைதியாய்..
ஏதோவொன்றாய்
என் இருப்பு இருக்கட்டும்..
சொற்களால் தின்னப்படும்
ஜடமாய் மாத்திரம் வேண்டாம்..

rambal
20-01-2004, 03:43 PM
முடிவிலியில் முகட்டின் விளிம்பில்.. எனும் பாகத்தில் வரும் கவிதை இது..

முத்து
20-01-2004, 05:22 PM
கடைசிவரி மிக அருமை ..
நன்றிகள் ராம்பால் அவர்களே ....

Mano.G.
20-01-2004, 11:18 PM
அருமை நண்பரே
மீண்டும் உங்கள் காண்பதில் மகிழ்ச்சி
வரவேற்கிரோம்.

மனோ.ஜி

இளசு
21-01-2004, 12:26 AM
பாராட்டுகள் ராம்..
முடிவிலி நூல் வெளிவந்து பெருவெற்றி பெற என் வாழ்த்துகள்

காரைக்குடியான்
21-01-2004, 05:12 AM
ஏதோவொன்றாய்
என் இருப்பு இருக்கட்டும்..
சொற்களால் தின்னப்படும்
ஜடமாய் மாத்திரம் வேண்டாம்..

அருமை ராம். சொல்லில்லா ஏகாந்தத்தை விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன்.

natchatran
21-01-2004, 06:14 AM
ராம்பால், இப்போதுதான் உங்க கவிதையைப்படித்தேன்.பத்து ஆண்டுகளாய் நவீனகவிதைகள் எழுதிவரும் எனக்குக் கொஞ்சம் உங்கள்மீது பொறாமையாகிவிட்டது.உங்கள் கவிதை சொல், நடை,பொருள் எல்லாவற்றிலும் மிகுந்த ஆழங்கொண்டதாக உள்ளது.தொடரட்டும் உங்கள் புதிய எழுத்து.ரசிக்க நானும் சேர்ந்துகொள்கிறேன்.தொகுப்பு வந்தால் அனுப்பிவைக்கவும்.
முகவரி:
-நட்சத்ரன்
56,செவ்வந்தி தெரு,
திருநகர்,
சீனிவாசபுரம்,
தஞ்சாவூர்-613009

rambal
23-01-2004, 01:38 PM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி..

முடிவிலியைக் கண்டிப்பாக மன்றத்தில் பதிந்துவிட்டுத்தான்
புத்தகமாக வெளியிடுவேன்..
இன்னும் சில பாகங்களும் இறுதிப் பகுதியும் பாக்கி இருக்கிறது..
அது முடிந்ததும் மன்றத்தில்..

karikaalan
23-01-2004, 05:44 PM
சொற்களை இந்த அளவுக்குச் சாடும் ராம்பால்ஜி
அவைதானே கவிதையாகி தங்கள் கையில் விளையாடுகிறது.

வாழ்த்துக்கள்.

===கரிகாலன்