PDA

View Full Version : காலத்தின் கண்ணீர்!



M.Jagadeesan
26-11-2013, 05:55 AM
காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி!

நாட்டிலே
களவு கொள்ளை கற்பழிப்பு
கடத்தல், கொலைகள் நடந்தாலும்
காலம் கெட்டுப் போச்சென்பார்.

பொருளும் முயற்சியும் இல்லாமல்
திருமணம் உலகில் நடந்திடுமா?
துளியும் முயற்சி செய்யாமல்
பழியை என்மேல் போடுகிறார்.
காலமும் நேரமும் வந்தால்தான்
கைவரும் திருமணம் என்கின்றார்.

தீதும் நன்றும் இவ்வுலகில்
பிறர்தர வாரா ஆதலினால்
சூதும் வாதும் செய்வோருக்கு
சூழ்ந்திடும் துன்பம் நிச்சயமே!
ஆறாத துன்பம் அடைகையிலே
போறாத காலம் என்கின்றார்.

மாறும் மனித மனங்களினால்
மாறும் உலக நாகரிகம்
ஞால மாந்தர் மாறுகையில்
காலம் மாறிப் போச்சென்பார்.

காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி !

ஜானகி
26-11-2013, 08:01 AM
உனக்கும் ஒரு காலம் வரும்....கலங்காதே காலதேவா !

M.Jagadeesan
27-11-2013, 03:40 AM
ஜானகி அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

தங்களின் மீள்வரவுக்கு நன்றி!

கீதம்
28-11-2013, 01:50 AM
காயமாற்றும் வல்லமை காலத்துக்கு உண்டாம். காயப்பட்ட காலத்துக்கும் அதுவே மருந்தாகட்டும்.

காலத்தின் மேல் பழியைப் போட்டு காரியத்தில் சுணங்கி நிற்கும் மனங்களைச் சாடும் வகையில் நல்லதோர் கவிதை.

பாராட்டுகள் ஐயா.

கீதம்
28-11-2013, 01:50 AM
உனக்கும் ஒரு காலம் வரும்....கலங்காதே காலதேவா !

தங்கள் கடுகுப் பின்னூட்டம் வழக்கம்போல் காரத்துடன்! ரசித்தேன். :)

ஜானகி
28-11-2013, 06:19 AM
காரம் இல்லை....திருநெல்வேலிக்கே [ காலதேவனுக்கே] அல்வா [ அவகாசம்] கொடுக்க விழைந்ததே இதன் சாரம் !

நம் வாழ்க்கைப் பாதையில் இறைந்து கிடக்கும் முட்களும் கற்களும்...[துன்பங்கள்] நம்மைக் காயப்படுத்தவிடாமல், நம்பிக்கை, பொறுமை எனும் காலணிகளால் அவைகளை மிதித்து, ஏறிச் சென்று,

எதிர்பாராமல் புயல் போன்று வரும் துயரங்களை தைரியத்துடன் எதிர்கொண்டு, நாணல் போல வளந்துகொடுத்து,

மழையாகப் பொழியும் கஷ்ட நஷ்டங்களை இறை அன்பு எனும் குடையில் அடைக்கலம் புகுந்து விடாமுயற்சியுடன் போராடினால்.....

விடாக்கண்டனை எதிர்கொள்ளமுடியாமல் கொடாக்கண்டன், புறமுதுகிடுவான்....!

வெற்றி நமதே...

M.Jagadeesan
28-11-2013, 06:51 AM
கீதம் அவர்களின் செறிவான பின்னூட்டத்திற்கு நன்றி!