PDA

View Full Version : படித்தவை : ஆதலினால் காதலுமாகி....



lavanya
18-01-2004, 09:01 PM
காதல் என்பது இந்த தேசத்தின் அரிதான விஷயம்.அரிதானது என்பதாலேயே காதல் கர்வம் கொள்ளத்தக்கதாகவும் மாறிவிட்டது.கர்வம் அன்பை கொடுக்கும்.காதலை நசுக்கும்...

காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர்
காதலினால் மானிடர்க்கு கலவி உண்டோம் கவலைபோம்

என்று கரும்பாய் பாடிய மகாகவி பாட்டை பாட நூலில் நுழைய விடவில்லை.'அது கவிதை,
நடைமுறைக்கு வராது' என்று சொல்லி விட்டார்கள்.கவிஞர்கள் அப்படித்தான் பாடுவார்கள்
எழுதுபவர்கள் இதை உசத்தியாகத்தான் எழுதுவார்கள்.அன்னபட்சி மாதிரி நல்லதை
எடுத்துக்கணுமே தவிர எல்லாத்தையும் தலையில் வச்சி ஆடக்கூடாது.

இந்த தமிழ் என்ற அன்னம் பாடலை துப்பி விட்டு தண்ணீரை உறிஞ்சியது.சாறை ஒதுக்கி
விட்டு சக்கையை விழுங்கி ,விக்க விட்டது.விக்கலுக்கு கவலைப்பட்டது...கலவியை காமம் என்றது.இயற்கையை எதிர்த்து நின்றது.இயல்பை புரிந்து கொள்ள மறுத்தது.

இந்த தேசத்து பெண்கள் காதலெனில் முகம் பொத்தி கொண்டார்கள்.பையன்கள் தொப்பி
சிறகாய் சூட்டிக் கொண்டார்கள்.எண்ணிப் பார்த்துக்கோ என்று கர்வப்பட்டார்கள்.

காதல் அன்பை குலைக்கும்..காதலை நசுக்கும்.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்கள் கலந்தன கருத்தொருமித்தனர்
என்பது கடின பதமாகி விட்டது.எல்லா நோட்ஸிலும் சிந்தனையில் ஒன்றுபட்டார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தது.என்ன சிந்தனை என்று கேள்வி வந்தது..பதில் தெரியவில்லை.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் என்று சொல்லித்தர ஆளில்லாமல் புரியாமலே
போனது.

வாத்தி சொல்லி தர வில்லை."இதுக்கு மேல் கேட்டே எலும்பை உடைச்சிடுவேன்.அல்ஜீப்ரா
பாடத்துல சந்தேகம் கேட்பியா நீ ...நாறப்பொணமே..கணக்கு கிளாஸ்ல உட்கார்ந்து தூங்கற முண்டம் கம்பராமாயாணம்னா ஈ'ன்னு கேட்கிறே...இங்க வா...தமிழ் மேலே உனக்கு
அவ்வளவு பிடிப்பு வந்திருச்சா ..?கிட்டே வா...

'செய்வினை செயப்பாட்டு வினை ..இரண்டுக்கும் அர்த்தம் சொல்லு...

'செய்வினைன்னா மந்திரிச்சு எலுமிச்சைம்பழம் வைக்கிறது...சார்'

'அப்படி சொல்லு நாயே...உனக்கு கருத்தொருமித்தல்னா அர்த்தம் வேணுமா..வா முட்டி
காட்டு..இந்தா வாங்கிக்க...லொட்..லொட்...

பிறகு காதல் எனில் முட்டியும் வலியும்தான் நினைவுக்கு வருமே தவிர கருத்தொருமித்தனர்.என்பதற்கு வாழ்வின் கடைசி வரை அர்த்தமே தெரியாது போய்விடும்...தமிழர்கள் எல்லோரும் காதல் காமம் கல்யாணம் என்பது பற்றி ஒரு அசெப்டி உலகத்திலேயே இருந்தார்கள்.செப்டிக் ஆகிவிடக்கூடாது என்று மதம் மரபு போன்ற ஆண்டி-செப்டிக் தடவி
கொண்டார்கள்.

செப்டிக் என்றால் அழுகல் என முகம் சுளித்தார்கள்..கனிதல் என்று புரிந்து கொள்ளவே இல்லை.புரிந்து கொள்ள முயற்சி செய்யவும் இல்லை. மாறுதல் என்பது அங்கீகரிக்கப்பட
வேயில்லை..இயல்பு என்று புரியவே இல்லை.

விதை அழுகித்தான் முளை விடுகிறது.பூ அழுகித்தான் காய்விடுகிறது.காய் அழுகித்தான் கனியாகிறது.ஒவ்வொரு நாளும் உடம்பு அழுகிவிடுகிறது.கிழத்தனம் அழுகலா...?கனிதலா..?
காய் கனிந்து பழம் என்பது போல இளமை கனிந்து முதுமை என்று சொல்ல கூடாதா..?

எதற்கு அசெப்டிக்..? ஏன் ஆண்டி செப்டிக்..இயல்புக்கு எதிரே யார் போர் தொடுக்க
முடியும்..?இயற்கை உந்துதலை எவர் மாற்ற முடியும்..மாற்ற நினைத்தால் அது வெம்பல்தான்
காய் கனிய மறுபடி வெம்பல்தான்...இது வெம்பல் தேசம்...

முதல்படி தாண்டாதவனா முப்பது படி தாண்டுவான்...சம்சாரத்தைப்புரிந்து கொள்ளாதவனா
சாமியை புரிந்து கொள்வான்..? தாய்ப்பாலை குமட்டுகிற குழந்தையா தயிர்சாதம் சாப்பிடும்?
இது உண்டு வளர என்றிருக்கும் தாய்ப்பாலே - மனித இயல்பே குமட்டியது எனில் எங்கும்
இருப்பவனை எப்படி தேட..?

நீயெனதின்னுயிர் கண்ணம்மா...
எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்

விடிவெள்ளி மாதிரி ஒருவன் தோன்றினான்.தன் கரும்பு மனசை பிழிந்து கவிதையாக்கினான்.
மனைவி செல்லம்மாளே மகாகவிக்கு கண்ணம்மாவானாள் ..அந்த கரும்பையும்
திருவல்லிக்கேணி யானை தின்று போட்டது.உண்மை சொன்னவனை தூக்கி போடும்போது
ஆளே இல்லை.காதல் சொன்னவன் கடைசி யாத்திரைக்கு கூட கூட்டம் வரவில்லை...
இதுதான் உலகம் கருத்தொருமித்தல் பற்றி பாடியவனுக்கு தந்த மரியாதை.</span>
----------
[color=#ff00da]ரொம்ப நாள் இதை எழுதுவதா வேண்டாமா என யோசித்து இப்போது இதை இங்கு எழுதி இருக்கிறேன்...நான் மிக நேசிக்கும் எழுத்தாளர் ஒருவரின் பிரபல கதையில் படித்து
வைத்த விஷயங்கள் இவை....கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருந்ததை மட்டும் எழுதியதால் சற்று கோர்வை இல்லாதது போல் தெரிகிறது...இங்கு பதிக்க அல்ல எங்கும் பதிக்க தகுதி இருக்கிறதா என படித்து மாற்றுவதா இல்லை எடுத்துவிடுவதா என்ற கருத்தை மன்றத்தின்
நிர்வாகிகளுக்கே விட்டு விடுகிறேன்....தொடர சொன்னால் வெவ்வேறு பார்வையில் வெவ்வேறு விஷயங்களும் எழுதுவேன்...இல்லை எனில் விட்டு விடுகிறேன்..மன்றத்தின் மரபுதான்
முக்கியம்.

sara
18-01-2004, 09:12 PM
நான் முன்னமே படித்து ரதித்த வரிகளை மீண்டும் தந்து, அந்த அருவிக்குளியல் சுகத்தை நினைவூட்டியதற்கு, பாராட்டுக்கள் லாவண்யா. எத்தனை தடவை படித்தாலும் எனக்கு அலுக்காது இந்த எழுத்தாளரின் எழுத்துக்கள். 'அவன் அவளை விரும்பினான். அதற்கு பின் இன்ன இன்ன நடந்தது' என்று கதை மட்டும் சொல்லாமல், இதுபோல் படிப்பனுக்குள் கேள்வி எழுப்பும் சுய சிந்தனை விமர்சனங்கள் (Self Analysis ??) இவரின் எழுத்துக்கள் என்னை ஈர்க்க காரணம்.

இந்த வகைப்பதிவு மன்றத்தில் அனுமதிக்கப்பட்டால், முதலில் மகிழ்ச்சியுறுபவன் நானாகத்தான் இருக்க முடியும்.

இளசு
18-01-2004, 11:56 PM
விரிவான விமர்சனம் பின்னர் தருகிறேன் லாவ்.
இந்தப்பதிவில் மன்ற நெறிமுறைகள் எதுவும் மீறப்பட்டவில்லை.
மேலும் எழுதும்போது இங்கேயேவோ அல்லது
உங்களுக்கு சரியென்று பட்டால் பண்பட்டவர் பகுதியில் நேரடியாக பதியுங்கள். நன்றி.

இளசு
19-01-2004, 10:41 PM
அருமை உங்கள் பதிவு லாவ்.
அனுபவித்துப் பலமுறை படித்தேன்.
பாராட்டும் நன்றியும்.

உங்கள் அக்கறையான பார்வையை
சித்தர் எழுத்து துணையோடு தொடருங்கள்.

காதல் பற்றி நீங்கள் கரிசனம் காட்ட
படித்த என் மனதில் எழுந்த அடுத்த கட்ட எண்ணங்கள் இங்கே..

முதல் கோணல்தான் முற்றும் கோணலாய் ஆனதோ..

இயல்பாய் ஊறும் தாய்ப்பலாம் காதலை
மறுதலித்த தமிழன்
அந்த மகாகவி தந்த
சமத்துவ, தன்மான, மெய்ஞானப் பிரசாதங்களை
"முழுங்க"வும் திராணியத்து மோந்ததிலேயே
சோர்ந்து போனதில் ஆச்சரியமில்லை..

பாரதி..
பராசக்தியை உபாசித்தவன்..
அவன் பக்தி வெறும் தெய்வ மூட பக்தியல்ல
ஞான பக்தி..
காளியும் கண்ணனும்
முருகனும் அவன் அண்ணனும்
அல்லாவும் யேசுவும்
தாழ்த்தப்பட்ட இனத்துக்கென்று ஒதுக்கப்பட்ட தேசமுத்து மாரியும்..
எல்லாரையும் பாடியவன்..

எல்லாரும் ஓர்குலம்
எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்
எல்லாரும் ஓர் நிறை
எல்லாரும் ஓர்விலை.

இரட்டைக் கிளாஸ் தமிழன் இதை உண்டானா?


நாலு திசையும் ஸ்வதந்தர்ய நாதம் எழுகவே
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே

வீட்டில் பெண்ணை அடிமையாக்கி
கடையில் படிக்காச் சிறுவனையும் வேலைக்கமர்த்தி
காசு மிச்சம் பிடிக்கும்
தமிழன் இதை உண்டானா..?


காந்திக்கு முன்பே ஒரு சாதியினரை அழைத்து
ஆலயப்பிரவேசம் செய்தவன் அவன் என்பதை
தேர் ஓடாமல் நிலுவையில் இருக்கும் தமிழ்நாட்டுத்
தமிழன் அறிந்தானா?

கங்கையிலே வந்து சேரும் வாய்க்காலெல்லாம்
கங்கையாக மாறிவிடும்..

பாரதி சொன்ன இந்தப் புரட்சி சமத்துவத்தை
புரட்டு அரசியலில் மயங்கிய தமிழன் உண்டானா?

சவலைப்பிள்ளையாய் ஏன் ஆக மாட்டான்..
சள்ளைடா சள்ளை..

puppy
20-01-2004, 08:10 PM
நல்ல பதிவு லாவண்யா.......இங்கேயே கொடுக்கலாம்......கொஞ்சம் அப்படி இப்படி போகலாம்ன்னு முன்னமே தெரிஞ்சால் சொல்லிடுங்க..பண்பட்டவர்கள் பகுதிக்கு மாற்றிடலாம் சரியா...தொடரட்டும் உங்கள் பணி...

karikaalan
23-01-2004, 04:36 PM
மஹாகவியின் பாடல்களாகட்டும், அவற்றின் கருத்துகளாகட்டும், என்றுமே திகட்டாதவை.

ஏற்காதவர் அறிவிலிகள் என்றே ஒதுக்கப் படவேண்டும்.

லாவண்யாஜி, வாழ்த்துக்கள்; தொடருங்கள்.

===கரிகாலன்

நிரன்
10-01-2009, 12:00 PM
நல்லதொரு பதிவு லாவன்யா அக்கா!

பலதை மனதில் சல்லடைபோட வைக்கிறது... உங்கள் சிந்தனைக்கு
இளசு அண்ணாவின் பின்னுாட்டம் போன்ற விளக்கம் இன்னும் அருமையாக
இருக்கின்றது.. முன்பே தெரிந்த பலவற்றை மீண்டும் விளக்கங்களுடன்
விளங்கிக்கொண்டேன்

இளசு அண்ணா + லாவ் அக்கா இருவருக்கும் என் நன்றிகள்

anbukala
12-01-2009, 09:37 AM
காதலுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர் நமது எழுத்து சித்தர்தான். மனவியல் , சுய விசாரணை அவருக்கு கை வந்த கலையல்லவா. மன்றத்தில் நுழைந்து முதல் பதிப்பே எனது குருவின் வரிகளை படிக்க காரணமாயிருந்த தங்களுக்கு எனது வணக்கங்கள்