PDA

View Full Version : அன்றொரு மாலை நேரம்...



பென்ஸ்
01-09-2013, 06:06 PM
அன்றொரு மாலை நேரம்
மீண்டுமொருமுறை
மாலை போட்டு விட்டிருந்தார்கள்


காலருகில் இருந்து இன்றுவரை சொல்லாத
இனியவைகளை புலம்பி
விம்மி கொண்டிருந்தாள் என்னவள்


புதிதாய் யாரும் வரவே
அடங்கியிருந்த ஒப்பாரியை
கிளப்பிவிட்டு கொண்டிருந்தாள்
நான் முகம் அறியாதோ யாரோ ஒருத்தி


லுங்கியை மடித்து கட்டி கொண்டு
"நல்லா தானே இருந்தான்.."
என்று வியந்து கொண்டிருந்தனர் சிலர்


கரை வேட்டியில்
என் முன் வாழ்க்கையை
அரசியலாக்கி கொண்டிருந்தார்கள் சிலர்...


மரத்தின் கீழ் நின்றபடி
"ச்சே ரொம்ப நல்லவன் , இப்படியா.." என்று சான்றிதள்
கொடுத்து கொண்டிருந்தார்கள் வேறு பலர்


கிடைத்த சாராயத்தின் வேகத்தில்,
பாடை எங்கே, பூ எங்கே என்று
அவசரமாய் இருந்தார்கள் இவர்கள்...


கண்டால் கொல்லுவேன் என்று
கதறி கொண்டிருந்தவன்,
வாசலின் பக்கத்தில் கை கட்டி கொண்டு
அமைதியாய் நின்று கொண்டிருந்தான்...


எங்கோ சிலர் தொலைப்பேசியிலும்,
முக புத்தகத்திலும் துக்கம் பரிமாறி கொண்டிருந்தார்கள்...
செய்தி கேட்டு தொண்டை வரை வந்த துக்கத்தை ,
"நல்லவேளை நான் பிழைத்தேன்" என்று
அமைதி படுத்தி கொண்டிருந்தாள் வேறொருத்தி...


நேரமாச்சு என்று யாரோ அலற,
கண்ணில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டு
அமைதியாய் நின்று கொன்டிருந்தன்
என் மகன்...


முதல் முறை மாலை இட்ட போது வந்தது போலவே
உண்டு உறவாடி கலைந்து சென்றது இந்த கூட்டம்...
துக்கங்கள் பரிமாறிய பக்கங்கள் அடியில் போனது,
கலங்கியவர்கள் கடந்து போனார்கள்


மகனின் காய்ந்த வயிறை நிரப்ப
கலயம் தேடி போனாள் என்னவள்
கலயம் நிரப்ப
கடை நோக்கி சென்றான் என் மகன்...

aren
02-09-2013, 03:08 AM
அருமையான கவிதை பென்ஸ். அழகாக வந்திருக்கிறது. ஒரு பக்கத்தில் வாழ்க்கையின் அவலத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள். இன்னும் நிறைய கொடுங்கள்.

கீதம்
02-09-2013, 06:27 AM
இக்கண்ணை மூடியபின்னும் எதற்கு அ(க)க்கண் வழியே அத்தனை நோட்டம்?

பாடையில் போனபின்னும் பெண்டாட்டி பிள்ளைகளை எண்ணி ஏனிந்த தவிப்பு?

கடைசிவரை யாரோ என்றானபோதும் கடைநோக்கிப் போகும் மகனின் நிலையெண்ணிக் கலங்குகிறது தந்தைமனம்.



துக்கங்கள் பரிமாறிய பக்கங்கள் அடியில் போனது,
கலங்கியவர்கள் கடந்து போனார்கள்

உலக நியதியை உரைத்திடும் வரிகள்!



மகனின் காய்ந்த வயிறை நிரப்ப
கலயம் தேடி போனாள் என்னவள்

கலயம் நிரப்ப
கடை நோக்கி சென்றான் என் மகன்...

பெற்ற மனங்களின் பரிதவிப்பு இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதான் என உணர்த்தும் வரிகள்!

மரணவீட்டின் நாயகனை மனக்கண்ணில் கொணர்ந்து அவன் உள்ளாடும் உணர்வுகளை வெளிப்படுத்திய ஆதங்கக்கவிதை மனம் தொட்டது.

dellas
02-09-2013, 07:51 AM
நன்று ...

சாவிலும் ,உறவுக்கு விடுதலை தர மனது ஒப்பவில்லை, அவர்கள் துன்பத்திலிருக்கும் வரை.

பென்ஸ்
02-09-2013, 12:06 PM
நன்றி ஆரன்...


வாழ்க்கையின் அவலைத்தை பக்க பக்கமாக சொல்லலாம்... அந்த அளவுக்கு எழுத்து வண்மை கிடையாது...
ஒரே வரியிலும் சொல்லலாம், அந்த அளவுக்கு சொல்ல வள்ளுவன் கிடையாது....


பக்கத்தில் மட்டுமே சொல்ல முடிந்தது...


இன்னும் தர முயற்சிக்கிறேன்...

பென்ஸ்
02-09-2013, 12:13 PM
பின்னூட்டத்திற்கு நன்றி கீதம்...


மரணம் என்றால், பிணமும் வாயை மூடிகொள்ளும்... அந்த அளவிற்க்கு பயம் நமக்கு...


இந்த நிலையை அனைவரும் அடந்தே தீருவோம் என்று தெரிந்தும் , இருப்பினும் பயம்...


சில எழுத்துகளை மன்றத்தில் முதலில் பதித்துவிட்டு முக பத்தகத்திலும் பதிப்பது வழக்கம்... ஆனால் இப்படிபட்ட கவிதைகள் மன்றத்தில் மட்டுமே பதிக்க முடிகின்றன...


இங்கு மட்டுமே கவிதைகள் கவிதையாக படிக்க படுகின்றன...