PDA

View Full Version : ஒரு செய்யுளும் அதனை சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்



subhashini
05-08-2013, 10:21 AM
"நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்."

இப்படியாகத் தொடங்கி அச்சு மாறாமல் அதே வரிகளைக் கொண்ட பதிவுகளை வெவ்வேறு படங்களுடன் தினமும் முகப் புத்தகம், வலைப்பூ என ஆதாரமற்ற பல இணையத் தளங்களில் காண்கிறோம். அதில் சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள். அவை அனைத்தும் ஒரு செய்யுளின் கரு, அதைத் தான் கற்பனை சோடித்துத் தங்கள் மதியை மயக்குகின்றனர்.
அந்த செய்யுள் இடம் பெற்ற நூல் இறையனார் களவியல் / இறையனார் அகப்பொருள் நூல். உரை எழுதியவர் தான் நக்கீரர், இந்த நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய சங்க காலப் புலவர் நக்கீரரும் ஒருவர் அல்லர்.

அடுத்து. இந்த நூல் எழுதப்பட்டது 7-8 ஆம் நூற்றாண்டு.

ஆக 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு நூல் மட்டுமே நாம் 20,000 ஆண்டு பழமையானவர்கள் என்று கூறுவதற்கு உள்ள ஒரே ஆதாரம். பகிரும் முன் சற்று யோசியுங்கள். கல்வெட்டுக்களோ, இன்ன பிற சான்றுகளோ இல்லாத ஒரு செய்தியைப் பரப்பி, தமிழனை வெட்டிப் பெருமை பேசுபவன் என்று உலகம் ஏசச் செய்கிறார்கள். அந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்தியை சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த நூல் என்ன கூறுகிறதோ அந்த நூல் சொன்னதாக அதை அப்படியே இவர்கள் சொல்லலாம். கற்பனைகளையும் தவறான கருத்துக்களையும் உள் நுழைக்க வேண்டாம்.

ஜான்
06-08-2013, 01:24 AM
ஆம்!!
அதுவும் யு டியூபில் பார்த்தால் இது போல நிறையப் படங்கள்!!இந்து மகா சமுத்திரத்தைப் பெரும் நிலப்பரப்பாகக் காட்டி இதுதான் அன்றைய அழிந்த தமிழ்நாடு என்று போட்டிருப்பார்கள்!!
ஆனால் தமிழர்கள் மட்டும்தான் இப்படி என்று சொல்ல முடியாது....ஏறத்தாழ இந்தியாவில் எல்லா மாநிலத்தவருமே இப்படி சொல்வதில் ஆனந்தம் கொள்ளத்தான் செய்கிறார்கள்.
நிச்சயம் மிகைப்படுத்தல்தான் !!கொஞ்சம் விகற்பமாகத் தெரிவதற்க்குக் காரணம் இன்னொரு கோணத்தில் ஐரோப்பியர்கள் இப்படி சொல்லிக் கொள்வதில்லை!!ஏனெனில் அவர்களிடம் அதுவும் இல்லை!!

ஜான்
06-08-2013, 01:25 AM
சரி
அந்த செய்யுள் என்ன
அதையும் கொடுங்களேன்

subhashini
06-08-2013, 07:53 AM
சரி
அந்த செய்யுள் என்ன
அதையும் கொடுங்களேன்
முதன்முதலாகச் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பினை நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையில்தான் காண்கின்றோம். 'இறையனார் களவியல்' என்ற நூல் தொல்காப்பியத்திற்குப்பின் எழுந்த அகப்பொருள் இலக்கணநூலாகும். இதன் ஆசிரியர் இறையனார்; அதாவது, ஆலவாய் (மதுரையின் வேறுபெயர்) இறைவனாம் சிவபெருமான் என்பது மரபுவழி வந்த நம்பிக்கை ஆகும்.
இதுபற்றி நக்கீரர் தம் உரையுள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஆக்கியோன்பெயர் என்பது, நூல்செய்த ஆசிரியன் பெயர் என்றவாறு. 'இந்நூல் செய்தார் யாரோ? எனின், மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாக உடைய அழலவிர்சோதி அருமறைக்கடவுள் என்பது." எனக் குறிக்கின்றார்.
அதன்பின், தம் உரையுள் சங்கம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அப்பகுதி:
"தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவிஅரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழாய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவருக்கு நூல் அகத்தியம்.
இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக்கோனும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவையென்ப. அவர் மூவாயிரத்தெழு நூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார், வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார், ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப்போலும், பாண்டியனாட்டைக் கடல்கொண்டது.
இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்க்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை என்ப."
-இப்பகுதி, களவியல் என அழைக்கப்படும் இறையனார் களவியல் நூலின் முதற்சூத்திர உரையுள் உள்ளது. இந்தச்செய்தியைச் சிலப்பதிகாரத்திற்கு உரைவரைந்த அடியார்க்குநல்லாரும் தம் சிலப்பதிகார உரையினுள் குறிப்பிட்டுச் செல்கின்றார்.

subhashini
06-08-2013, 08:46 AM
இதை விக்கி, சென்னை நூலகம் போன்ற நம்பகத் தகுந்த தளங்களில் காணலாம். நம்மிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள நிறைய உண்மைகள் இருக்கும் போது ஏன் பொய் சொல்ல வேண்டும்??? சரி கற்பனை தான் செய்கிறார்கிறாள். தினம் ஒன்றாய், இலக்கிய தொல் பொருள் ஆராய்ச்சியில் இருந்து ஒன்றை எடுத்து சொன்னால் கூட பரவாயில்லை. ஒரு வருடமாக ஒரே மாவையே ஒரே மாதிரியே அரைப்பதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம் அது ஒரு செய்யுளின் கருத்து என்பது கூட தெரியாமல் மக்கள் அந்தப் பதிவை, காணொளியை இடுபவர்கள் தமிழ் அறிஞர்கள் என்று எண்ணி அப்படியே நம்புவது தான் வேதனை.

ஜான்
06-08-2013, 02:47 PM
நன்றி, subhashini

ஜான்
07-08-2013, 01:45 AM
அதாவது 4440+3700+1850=9900 என மூன்று சங்கங்களும் சேர்ந்து 9900 ஆண்டுகள் எனக் கொள்ளலாம்...அவ்வளவுதான்..இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்...அவ்வளவுதான் ......