PDA

View Full Version : கைக்கிளைM.Jagadeesan
16-07-2013, 06:22 AM
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலையென்பார்
சொன்னாலும் புரியாத பெண்ணா யிருக்கின்றாய்!
பதினாறு வயதினிலே பெண்கள் உடலினிலே
சதிராடும் இளமைக்கு வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில் தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்; வெந்துநிதம் சாகின்றேன்!
போதிமரப் புத்தனல்ல போகம் துறப்பதற்கு
பாதிஉயிர் போனதடி! பாவியே உன்னினைவில்!
வாராது போல்வந்த மாமணியே! என்மடியில்
கோராது வீழ்ந்திட்ட மாங்கனியே! எனநினைத்தேன்.
பாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் !
வேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் உன்பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக ஆனதடி என்மனது!

என்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது
தன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்
செய்து களித்திட்டார்! சேய்தனையும் பெற்றிட்டார்!
பெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.

உய்யும் வழியின்றி உன்மத்தம் பிடித்தவன்போல்
வெய்யில் மழையென்று ஏதும் பாராமல்
தெருவில் அலைகின்றேன்; தேறாத காதலினால்
உருவம் மாறியதால் உற்றாரும் உறவினரும்
அடையாளம் கண்டெனக்கு ஆறுதல் சொல்லிடவும்
முடியாமல் போனதடி! மூதேவி என்றுன்னைக்
கடிந்து பேசிடவும் உன்னிடம் நான்கொண்ட
காதலிடம் தரவில்லை; காரிகையே ஆதலினால்
சோதனைக்கு உட்படவும் சொந்தமே! சம்மதமே!

ஏறுதனைத் தழுவிடவா? என்வீரம் காட்டிடவே?
சீறுகின்ற சிங்கத்தின் சினத்தை அடக்கிடவா?
ஈரேழு மலைதாண்டி இருக்கின்ற குகைநடுவே
தீராத விடம்கொண்டு தீண்டினால் சாவுதரும்
கருநாகப் பாம்பொன்றின் காவலிலே இருக்கின்ற
அருமைமிகு ரத்தினத்தை அப்படியே அள்ளிவந்து
பெருமைமிகு மாலையாய்ப் பேரழகே! உன்கழுத்தில்
சூட்டி மகிழ்ந்திடவா! சுடர்க்கொடியே சொல்லிடுவாய்!

மீட்டினாய் என்இதய வீணையை ஆதலினால்
காட்டுவேன் என்னுடையை காதலை நானுக்கு
இந்திரன் வாகனமாம் ஐராவதம் ஏறி
சந்திர மண்டலத்தை நானுக்குக் காட்டிடுவேன்
வானத்தை வில்லாக வளைத்தே மன்மதனின்
பாணமாம் மலரம்பை உன்மீது நான்தொடுப்பேன்.
மணலைக் கயிறாகத் திரித்தே அதன்நடுவில்
தணலைக் கொட்டுகிற சூரியனைத் தான்வைத்து
மங்கலமாம் நாண்செய்து மணமகளே ! அந்நாணை
திங்கள் முதலாக வானத்தில் சுற்றுகின்ற
கோள்களே சாட்சியமாய் இடிமேகம் மறையோத
வாள்கொண்ட கண்ணாளே! வடிவழகே! உன்கழுத்தில்
தாலியாய்க் கட்டிடுவேன்; தருமத்தின் தேவதையே!
வேலிபோல் உன்னருகே நானிருந்து காத்திடுவேன்.
என்ன செய்வதென்று ஏந்திழையே கூறிடுவாய் !
கண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை

நேற்று
இங்கிலாந்து இளவரசன் காதலுக்காய் முடிதுறந்தான்
இன்று
இங்கிருக்கும் இளவரசன் காதலுக்காய் உயிர்துறந்தான்
நாளை
???????????????????????????????????????????????????

பென்ஸ்
19-07-2013, 04:32 PM
வாராது போல்வந்த மாமணியே! என்மடியில்
கோராது வீழ்ந்திட்ட மாங்கனியே! எனநினைத்தேன்.
பாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் !
வேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன்

ரசித்தேன் ஜகதீசன்...


காதலில் கொடிநாட்டினோரை விட , அழிந்து போனோர் ஏனயர்... கவிதை அழகு...


ஆமாம் உம் கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது..??

M.Jagadeesan
20-07-2013, 09:31 AM
பென்ஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி! என் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

lenram80
01-10-2013, 07:52 PM
உன்னை என்னை நோக்கி இழுக்கிறேன்!
பதிலுக்கு
என்னை உன்னை நோக்கி இழுத்து விடு!
இது மூன்றாம் விதியடி!
இதை என்றைக்கு தான் உணரும் உன் மதியடி?

மும்பை நாதன்
02-10-2013, 06:24 AM
உன்னை என்னை நோக்கி இழுக்கிறேன்!
பதிலுக்கு
என்னை உன்னை நோக்கி இழுத்து விடு!
இது மூன்றாம் விதியடி!
இதை என்றைக்கு தான் உணரும் உன் மதியடி!
ஆகா, உங்களது அறிவியல் பூர்வமான காதல்தான் போங்கள் !

மும்பை நாதன்
02-10-2013, 07:05 AM
பென்ஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி! என் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இதுக்கும் மேல இன்னும் என்னதான் வேண்டுமாம் ?
இன்னுமா பதில் தர வில்லை ?
இருந்தாலும் ரொம்ப மோசம் உங்களவள்.

M.Jagadeesan
27-11-2014, 01:12 PM
lenraam 80, மும்பை நாதன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.