PDA

View Full Version : நிழல் கவிதைகள் - 5



செல்வா
28-06-2013, 02:26 PM
கார்மேகக் குன்றுகளுக்கிடையே
கிடைத்த இடைவெளியில் -தன்
பொன்னிறக்கற்றைகளை வீசியபடி ஞாயிறு
மேற்றிசையில் சரிந்து கொண்டிருந்தான்

சற்றுமுன்னர் பெய்த மழையில் குளித்து
சூரியக் கதிர்களில் தலைதுவட்டிக் கொண்டிருந்தது
அந்த நெடிதுயர்ந்த தென்னைமரம்

சூரியனின் பொன்னிறக் கதிர்கள்
ஈரம்படிந்த இலைகளில்
பட்டுத் தெறித்து
இலைகளைப்
பொன்னாக்கின...

ஆட்டுக் கூட்டங்களிடையில் நிற்கும்
ஒட்டகச்சிவிங்கியென உயர்ந்து நின்றஅந்த
தென்னைமரம்
வானுக்கும் பூமிக்கும் பாலமோ என வியக்கவைத்தது

நேற்று என்னைப் பார்க்க வந்த
கால் ஊனமுற்ற நண்பனொருவன்
அந்த மரத்தின் உயரே நின்று பார்த்தால்
உலகமே தெரியுமோ? என வியந்தான்

காலையில் தேங்காய் வெட்ட வந்தவனொருவன்
கீழிருந்து காய்களின் விளைச்சல் தெரியாமல்
மேலேறிப் பார்த்துவிட்டு
வெறுங்கையோடு மரத்தைத்
திட்டிய படியே கடந்து போனான்

தீராப்பிணியால்
மருத்துவர் கொடுத்த கெடுவை
எண்ணிக் கொண்டிருக்கும் நான்
படுக்கையில் இருந்துகொண்டு
சன்னல் வழியாகப் பார்த்தபடி
இந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்...