PDA

View Full Version : காக்கையும் செத்த எலியும்.



M.Jagadeesan
25-06-2013, 08:01 AM
காக்கையொன்று இரைதேடி கானகத்தின் மரத்திலே
யாக்கையெங்கும் வாடியே எதிலும் நாட்டமின்றியே
உண்பதற்கு ஏற்றதோர் உறுபொருள் தேடியே
நண்பகல் வேளையில் நாப்புலற அக்காக்கை
கத்திகத்தி ஓய்ந்தது கானகத்தின் நடுவிலே
செத்தஎலி பார்த்தது;ஜென்மம் கடைத்தேறிய
மகிழ்ச்சியினால் துள்ளியே மரத்தினின்று இறங்கியே
பகிர்ந்துண்ணும் எண்ணத்தில் பக்கத்தில் சென்றதே !
அழுகிவிட்ட எலியதனை அலகினால் கவ்வியே
நழுவாமல் அக்காக்கை நடுவானில் பறக்கையிலே

கழுகுஒன்று கண்டதே! கண்டவுடன் அதன்வாயில்
ஒழுகுகின்ற எச்சிலும் ஓயாமல் வந்ததே!
காக்கைவாய் எலியதனைக் கவர்ந்துண்ணும் எண்ணத்தில்
தூக்கியஇரு காலுடனே துரத்தியே சென்றதே!
தாக்கவரும் கழுகதனைத் தன்னுடைய கண்களால்
காக்கையும் கண்டதே கண்ணில்பயம் கொண்டதே!
மூச்சுமுட்டப் பறந்ததே முடியவில்லை காக்கையால்
"போச்சுஇன்று என்னுயிர் போதுமிந்த வாழ்க்கை " என
நலிவுற்ற உடலிலே நடுக்கமும் தோன்றவே
எலியைவிட்ட காக்கை ஏமாற்றம் கொண்டதே!

விழுந்துவிட்ட எலியினை விரைவாகக் கால்களால்
கழுகுகொத்திச் சென்றதால் காக்கையும் தப்பியதே!

ஆசையென்னும் எலியினை அக்காக்கை நாடியதால்
துன்பமென்னும் கழுகு துரத்தியே வந்ததுவே!
எலியைவிட்டக் காக்கைக்கு ஏமாற்றம் வந்தாலும்
பலியினின்று தப்பியதே!பதட்டமும் குறைந்ததே!

ஆசையென்னும் பேயினுக்கு அடிமையாகும் போதிலே
மாசுவந்து சேருமே மனதுதடு மாறுமே!
ஐயன்திரு வள்ளுவனும் போதிமரப் புத்தனும்
அன்றுசொன்ன வார்த்தையை நெஞ்சிலே நிறுத்தினால்
குன்றைஒத்த துன்பமும் உன்னைவிட்டு நீங்குமே!

கீதம்
27-06-2013, 10:07 PM
அழுகிய எலியை ஆசைக்கு உவமையாக்கி அழகான கவிபடைத்துவிட்டீர்கள். பாராட்டுகள் ஐயா.

ஒவ்வொரு படைப்பையும் சுவையாகவும், சிந்தனைத் தூண்டும் வண்ணமும் தரும் தங்கள் பாங்கை வியந்து பாராட்டுகிறேன்.

M.Jagadeesan
28-06-2013, 02:30 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.